முந்தைய பகுதிகள் :
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21 பகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28 பகுதி-29 பகுதி-30 பகுதி-31
---------------------------------
31-வது பகுதியின் இறுதியில்...
"ஆமா... ஆமா... இங்கயே உக்காந்திருந்தாலும் அத்த நினைப்புல இருந்து யாரும் மீளாதுக... அங்கிட்டு அங்கிட்டு போனாத்தான் கொஞ்சம் மறந்து... தெளிவாகுங்க..." என்றான் ரமேஷ்.
"அத்தான்... அப்பாவை எங்க கூட கூட்டிப் போகலாம்ன்னு பாக்குறேன்... ஏன்னா அண்ணன் வீட்ல அவரை வச்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்... சின்ன வீடு வேற... எங்க வீடுன்னா கொஞ்சம் பிரியா இருப்பாருல்ல..." என்றான் குமரேசன்.
அதுவரை பேசாமல் இருந்த கந்தசாமி, "இல்ல... நா வரலைப்பா... எங்கயும் வரலை..." என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்ல எல்லோரும் அவரையே பார்த்தனர்.
இனி...
கந்தசாமி 'இல்லை நா வரலைப்பா... எங்கயும் வரலை...' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும் எல்லோரும் அவரையே பார்க்க, மணிதான் அவரிடம் "ஏன்...? எதுக்கு வரலைங்கிறீங்க...? தம்பி வீட்டுக்குப் போகலைன்னா எங்க வீட்டுக்கு வாங்க..." என்றான்.
"என்னப்பா நீ... நாங் குமரேசன் வீட்டுக்கு போகப் பிடிக்கலைன்னு சொல்லலையே... எங்கயும் வரலைன்னுதான் சொல்றேன்..."
"அதுதான் ஏன்னு கேக்குறோம்...?" குமரேசன் தளர்வாய்க் கேட்டான்.
"இல்லப்பா வேண்டாம்... இங்கே இருந்துடுறேன்..."
"என்ன மாமா நீங்க... அயித்த போயாச்சு... டவுன்ல போயி இருக்க சிரமமா இருக்கும்ன்னு நினைச்சா... நம்ம வீட்டுக்கு வந்திருங்க... நாங்க பாத்துக்கிறோம்... இங்க இருந்து எப்படி தனியா..." அழகப்பன் பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தார்.
"ஆமா மாமா... அண்ணன் சொல்றதுதான் சரி... எங்க வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிடலாம்... ஆனா அங்க எங்கம்மா இருக்கு... சும்மாவே எதாவது சொல்லும்... நீங்க வந்தா அது பாட்டுக்கு உங்கள குத்திகுத்திப் பேசி மனச நோகடிச்சிடும்... மச்சான்களோட போங்க... இல்லேன்னா அண்ணன் வீட்ல இருங்க... நாங்கள்லாம் வந்து பாத்துக்கிறோம்..." என்றான் ரமேஷ்.
"இல்லப்பா... இருக்கப் போறது கொஞ்ச நாள்தானே.... அவ பொயிட்டா... இனி நானும் நாளை எண்ண வேண்டியதுதானே... அதுவரைக்கும் அவளோட வாந்த இந்த வீட்லயே இருக்கேனே.... நா யாரு வீட்டுக்கும் வரலைன்னு சொல்லலை... எல்லாரு வீட்டுக்கும் வாறேன்... ஆனா இங்கயே இருந்துக்கிறேன்..." என்றார் நிதானமாக.
"இங்க உங்களை யார் பாத்துப்பா...? நாங்களும் அடிக்கடி ஓடியார நிலையிலயா இருக்கோம்..." மணி கொஞ்சம் வேகமானான்.
"இப்ப எதுக்கு கத்துறீங்க..? மெதுவாப் பேசுங்க... மாமா மனசு இன்னும் அயித்தையோட இழப்புல இருந்து மீளலை... கொஞ்ச நாள் இருக்கட்டும்... அப்புறம் யாராச்சும் ஒருத்த கூட்டிக்கிட்டுப் போகலாம்..." சித்ரா சொல்ல மணி அவளை முறைத்தான்.
"சரிண்ணி இங்க இருக்கட்டும்... ஒண்ணு கெடக்க ஒண்ணுன்னா யாரு பாப்பா..." குமரேசன் அவளைப் பார்த்துக் கேட்டான். இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு நாம எதாவது சொல்லி அதை தப்பா எடுத்துக்கிட்டா இருக்க சந்தோசம் போயிடுமேன்னு கவலையோட சித்தப்பாவைப் பார்த்தான்.
"எதுக்கு மாப்ள இப்ப கோபப்படுறே... இரு... " என்று மணியைப் பார்த்துச் சொல்லிவிட்டு "மாமா... ஒண்ணு அவனுக கூட போங்க... இல்ல எங்க கூட வாங்க... ஆடு மாடெல்லாம் கண்ண மச்சான் பாத்துக்கட்டும்... அப்புறம் வித்துக்கலாம்... தனியா விட்டுட்டுப் போறது நல்லாவா இருக்கும்... பெரியவுக உங்களுக்கு நாங்க புத்தி சொல்லக் கூடாது..." அழகப்பன் அமைதியாகப் பேசினார்.
"ஆமா சித்தப்பா... அத்தான் சொல்றதுதான் சரி... நீங்க கொஞ்சநாள் அங்கிட்டுப் போயி இருங்க... ஆடு மாட்டை நா பாத்துக்கிறேன்.... நல்ல வெலக்கி யாராவது கேட்டா கொடுத்துடலாம்... இப்ப அத்தானோட முடிவுதான் சரியின்னு படுது... இங்க இருந்து தனியா கஷ்டப்படணுமில்ல..." கண்ணதாசன் சித்தப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான். அப்படிச் சொல்லும் போது அவனின் கண்கள் கலங்கியதை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ கந்தசாமி கவனித்தார் என்பதை அவரின் கைகள் அழுந்தப் பிடித்ததில் அறிந்து கொண்டான்.
"என்ன மாமா... எதுக்கு யோசிக்கிறீங்க... நாங்களும் உங்க பிள்ளைங்கதான்... ஒரு குறையும் இல்லாமப் பாத்துப்போம்... அத்தையைத்தான் பாத்துக்கிற சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கலை... உங்களையாவது எங்ககூட வச்சிப் பார்த்துக்கிறோமே..." அபி இடையில் புகுந்தாள்.
"இல்லத்தா எனக்கு எல்லாரோடவும் இருக்கத்தான் ஆசையா இருக்கு.... ஆனா இங்க இருக்கதுல கிடைக்கிற ஒரு சந்தோஷம்... திருப்தி... எங்கயும் கிடைக்காதேத்தா... அவ மூச்சுக்காத்தை சுவாசிக்கிட்டு இங்கயே கிடந்துடுறேனே... நல்லநாள் பெரியநாள்ன்னா அவ இருக்கும்போது எப்படிக் கூடினமோ அப்படிக் கூடலாமுல்ல... அது போதுமே..."
"இல்ல... மாமா... நா என்ன சொல்ல வாறேன்னா...." அழகப்பன் பேச ஆரம்பிக்க "இல்ல மாப்ள..." என அவரை இடைமறித்த கந்தசாமி, "தனியா இருக்கேன்... தனியா இருக்கேன்னு எல்லோரும் புலம்புறீங்களே... ஏன் இதுவரைக்கும் மகனுக்கு மகனா இங்கன இருந்த கண்ணதாசன் இன்னும் கொஞ்ச நாள் பாக்க மாட்டானா..?"
"சி... சித்தப்பா...." கண்ணதாசன் அதற்கு மேல் பேசமுடியாமல் தவித்தான்.
"என்ன மாமா நீங்க... பெத்தபுள்ளைங்க ரெண்டு பேரு இருக்கும் போது கண்ணதாசன் மச்சான் வீட்ல தங்குனா ஊரு உலகம் என்ன பேசும்... அது நல்லாவா இருக்கும்... சாதி சனம் பெத்த அப்பனுக்கு கஞ்சி ஊத்த வக்கில்லைன்னு மாப்பிள்ளைகளைப் பேசாது..." ரமேஷ் படக்கென்று சொல்லிவிட்டான்.
"ஆமா மாமா... தம்பி சொல்றது உண்மைதானே.... நீங்க மாப்ளங்க வீட்டுக்கு போங்க... இல்லாட்டி எங்க வீட்டுக்கு வாங்க... கண்ண மச்சானை நமக்குத் தெரியும்... ஆனா அவரு வீட்ல இருந்தா அது நல்லாயிருக்காதுல்ல.. என்ன கண்ண மச்சான்... நா பேசுனது உங்களுக்கு வருத்தமா இருக்கா?" என்றார் அழகப்பன்.
"அய்யய்யோ... அதெல்லாம் இல்லை அத்தான்... நீங்க சொல்றதுதான் சரி..."
"என்னடா சரி... அப்ப இந்த அப்பனுக்கு ஒரு நேரம் கஞ்சி ஊத்த மாட்டியா? சித்தப்பா... சித்தப்பான்னு சுத்தி வந்ததெல்லாம் பொய்யா.... உன்னையும் என்னோட மகனாத்தானேடா பாத்தேன்..."
"என்ன சித்தப்பா இது... உங்களுக்கு கஞ்சி ஊத்த மாட்டேன்னு சொல்வேனா... உங்களை எங்கூட வச்சிக்கிறதுங்கிற சந்தர்ப்பம் கிடைச்சா அது என்னோட பாக்கியம்... ஆனா ஊரு உலகத்தையும் பாக்கணுமில்ல... மணி அண்ணனும் தம்பியும் நல்லா இருக்கும் போது நீங்க இங்க இருந்தா நரம்பில்லாத நாக்கு அத்தான் சொன்ன மாதிரித்தானே பேசும்... இதுவரைக்கும் சந்தோஷமா இருந்த நமக்குள்ள இந்த ஏச்சும் பேச்சும் பிரச்சினையை ஆரம்பிச்சி வச்சிடாதா... பேசாம தம்பி கூட போங்க... அப்புறம் வரலாம்..."
"மச்சான்... உன்னோட பெரிய மனசு எனக்குத் தெரியும்... ஊரு பேசும்ன்னுதான் சொன்னேன்... உன்னைய தப்பாச் சொல்லலை..." ரமேஷ் வேகமாக எழுந்து கண்ணதாசனின் கையைப் பிடித்துக் கொண்டான்.
"என்னத்தான் நீங்க... இதுல என்ன தப்பிருக்கு... அவரு ஆசை அவரு சொல்றாரு... இனி நாமதான் முடிவெடுக்கணும்..." என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு கண்ணகியைப் பார்த்தான். அவளோ 'என்ன இது சின்னக் குழந்தையாட்டம்... கண்ணைத் துடைங்க....' என்று கண்களால் ஜாடை செய்தாள்.
"இங்க பாருங்க மாப்ள... இங்கயே வளந்து... இங்கயே வாந்து... இன்னைக்கோ நாளக்கோ போயிச் சேரப் போறவன்... இனி புது எடம்... புது வாழ்க்கையின்னு வாழப் பழகுறது கஷ்டம்... இந்த வீட்டுக்குள்ளயே கிடக்கேனே... இங்கயே இருந்து இங்கயே சாகணும் மாப்ள... என்னோட நெலையைப் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். நா கண்ண விட்டுல போயி இருக்கேன்னு சொல்லலை... என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த ஆடு மாடுகளை பாத்துக்கிட்டு கெடக்கேன். என்ன மூணு வேலைக்கும் கண்ணகி எனக்கு சாப்பாடு கொடுக்கப் போறா... அதுக்குவேனா கொஞ்சம் பணத்தைக் கொடுத்துடலாம்... அந்தக் கெழவிக்கிட்ட சாகுறதுக்கு மொதநா ராத்திரி கண்ணனுக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னேன்.... காசாக் கொடுத்தா அவனுக்கும் உதவியா இருக்குமுல்ல..."
"சி... சித்தப்பா... உங்களுக்கு சோறு போட எனக்கு காசா? காசு பணம் கொடுத்து பாசத்தைப் பிரிச்சிப் பாக்குறதுன்னா எனக்கு வேண்டாம்... நீங்க தம்பி கூடவே போயிடுங்க... போயிருங்க..." கண்ணதாசன் தழுதழுத்தான்.
"என்ன மாப்ள... மாமா சொல்றது சரியின்னுதான் படுது... கண்ணனும் நம்மள்ல ஒருத்தந்தான்... அவரோட விருப்பப்படி இங்கயே இருக்கட்டுமா என்ன சொல்றீங்க" மணியைப் பார்த்து அழகப்பன் கேட்டார்.
"என்னத்தான் நீங்க... எல்லாரும் இருக்கும் போது அநாதை மாதிரி இங்க அவர விட்டுட்டு... கண்ணதாசன் வீட்டுல சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு போறது நல்லாவா இருக்கு... எனக்கென்னவோ இது சுத்தமாப் பிடிக்கலை... நீ என்னடா சொல்றே..?" என்று தம்பியைப் பார்த்தான்.
"இதுல நான் சொல்ல என்ன இருக்கு... அவரோட முடிவு அதுவா இருக்கும் போது என்னத்தைச் சொல்ல... சித்தப்பா மகன் நம்மகிட்ட அன்னியப்பட்டு நின்னாலும் நாம மூணு பேரும் ஒண்ணாத்தானே வளர்ந்தோம். இதுவரை எல்லாத்துலயும் நம்மளைவிட அதிக ஈடுபாட்டோட இருந்தது அண்ணந்தான்... அப்பா இங்க இருக்கேன்னு சொல்றதை எதிர்த்துப் பேசுறதா நினைச்சிக்கிட்டு நாம எல்லாருமே அண்ணனோட மனசை நோகடிக்கிற மாதிரித் தெரியுது... எனக்கு அது புடிக்கலை... இதுவரைக்கும் ஒண்ணா மண்ணா இருந்துட்டு... இப்பக் கண்ணைக் கசக்கிக்கிட்டு... சரியில்லைண்ணே.... அவரு போக்குலயே விட்டுடலாம்..." என்றான் குமரேசன்.
"டேய் நீ என்னடா நீயி... ஊரு உலகத்துல நடக்குறதைத்தானே பேசுறாக... இதுல நா வருந்த என்ன இருக்கு... எனக்கு அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, அத்தான், தங்கச்சி, மச்சான்னு இந்த உறவு எப்பவும் தொடரணுமின்னுதான் ஆசை... நீங்க பேசுறதை எல்லாம் நா எதுக்கு தப்பா எடுத்து வருத்தப்படணும்... எனக்கு எப்பவுமே உறவுகளுக்குள்ள நடக்குற சின்னச்சின்ன மனஸ்தாபங்களை எல்லாம் பெரிசாக்கிப் பாக்கணுங்கிற நினைப்பு வராது. நான் பொறந்ததும் வளந்ததும் அப்படிப்பட்ட மனுசங்ககிட்டதான்..." என்றான் கண்ணதாசன்.
"அண்ணே... உன்னைப் பத்தி தெரியும்... இதே கண்மணி வீட்டுக்காரர் ஒரு பிரச்சினைக்காக பேசப்போகும் போது நடந்துக்கிட்ட விதமும் அதுக்கு நீங்க நடந்துக்கிட்டதும் என்னால மறக்கவே முடியாதுண்ணே.... உலக நடப்புன்னு பேசும்போது உனக்கு வருத்தமாயிருமேன்னுதான் சொன்னேன்..."
ரமேஷின் முகம் மாறுதலாவதைக் கண்ட அழகப்பன் "மாப்ள எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு... இப்ப மாமா எங்க இருக்கணும் அதை மட்டும் பேசுங்க... சும்மா தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதையா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு..." என்று அதட்டினார்.
"அத்தான்... நீங்க பேசுங்க.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... முடிச்சிட்டு வாறேன்..." என்று எழுந்த கண்ணதாசன், கண்ணகியைப் பார்த்து "வா... போகலாம்..." என்றான்.
-(வேரும் விழுதுகளும் நிறைவு அடுத்த பகுதியாக)
[ இன்று முடிக்கும் எண்ணத்தில்தான் சென்ற வாரமே அடுத்த பகுதி நிறைவுப் பகுதி என்று போட்டிருந்தேன்... ஆனால் எழுத்தாக கொண்டு வரும் போது இறுதிப் பதிவு நீளமாகிவிட்டது. அதனால் இரண்டாக்கி விட்டேன். நிறைவுப் பகுதி வாசிக்க அடுத்த சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டாம்... நாளை மாலை பகிர்கிறேன். ஆம் வேரும் விழுதுகளும் நாளை நிறைவடையும் --- நன்றி ]
-'பரிவை' சே.குமார்.
முடிவை நெருங்கிவிட்டதா...அதற்குள்.......பொதுவாக வயதானவர்கள் தாங்கள் வாழ்ந்த வீட்டிலேயே இருப்பதைத்தான் விரும்புகின்றார்கள் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால்.....பெரியவரின் முடிவும் கூட அப்படித்தான் இருக்கின்றது...ஒருவேளை வீடு பிரிப்பது நடக்குமோ...ம்ம்ம் காத்திருக்கின்றோம்
பதிலளிநீக்குவாங்க துளசி சார் / கீதா மேடம்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறப்பாக உறவுகளை படம்பிடித்த தொடர்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாங்க சகோதரரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை நண்பரே
பதிலளிநீக்குதம +1
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்கிறேன்....
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
சொந்தங்கள் எப்போதும் சங்கிலி பினைப்புத்தான்
த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குகதை நன்றாக ஒரு பொறுப்பான குடும்பத்தின் கனமான வார்த்தைகளோடு செல்கிறது. ஒரு விதத்தில் பெரியவர் எடுத்த முடிவு சரிதான்!. யாருக்கும் பாரமில்லாமல். இருந்து விடுவோம் என்று அவர் ஆசைப்படுவது புரிகிறது. ஆனால் மகன்களும் மகள்களும் அந்த முடிவை அவ்வளவு எளிதில் முடிவாக்கி விடுவார்களா.? எப்படிபட்ட முடிவை விதி அமைக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.! காத்திருக்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்..
வாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீள்வதால் பரவாயில்லை. நாங்களும் தொடர்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நேரில் பார்ப்பது போன்ற ஒரு எழுத்து.அருமை!
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.