புதன், 20 நவம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 29

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

29. காதல்... காதல்... காதல்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன புவனாவும் மல்லிகாவும் வராதது ராம்கிக்கு பொங்கல் வருத்தமாக இருந்தாலும் அவர்களைச் சந்தித்துப் பேசியதும் சமாதானமானான்.

இனி...

காதல் வானில் கல்லூரி நாட்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. வைரவனால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் புவனா ராம்கியின் காதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பெரும்பாலான நாட்களில் மாலை வேளைகளில் ஐயா வீடே அவர்கள் சந்திப்பிற்கான இடமாக ஆகியிருந்தது. இருவருக்குள்ளும் காதல் இருக்குமோ என்ற எண்ணம் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் வந்தாலும் இருவரிடமும் அது குறித்துப் பேசுவதைத் தவிர்த்தார்கள். அவர்கள் மீது நண்பர்களுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது. 

ராம்கியின் அண்ணன் ராசுவும் முத்துவும் சிங்கப்பூருக்குச் சென்றுவிட, சீதாவுக்கு தனது திருமணம் தள்ளிப் போனதில் சந்தோஷம் ஆனால் அம்மாவுக்கோ சீதாவின் திருமணத்தை நடத்த முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. இந்நிலையில் இரண்டாவது செமஸ்டர் ஆரம்பமானது. அரியர் இல்லாமல் வகுப்பில் முதலாவதாக வர வேண்டுமென்று படிக்க ஆரம்பித்ததால் பெரும்பாலும் இருவரும் சந்திப்பதற்கான சூழல் அமையவில்லை.

தமிழ் தேர்வு அன்று காலை இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, புவனாவைத் தேடித் சென்றான் ராம்கி.

"புவி எப்படிடா இருக்கே?"

"ம்... எக்ஸாமுக்கு பிரண்ட்ஸ்கூட பிரிப்பேர் பண்ணுறதால கொஞ்சம் லோன்லியா பீல் பண்ணலை... இல்லைன்னா உங்களைப் பார்க்காம என்னால இருந்திருக்க முடியாது."

"ம்... எனக்குந்தான்... ஆனா உன்னோட நினைப்புத்தான் எப்பவும்... என்னால உன்னைய பிரிஞ்சு இருக்குறது நரக வேதனையா இருந்துச்சு. பிரண்ட்ஸோட படிக்கும் போது அதிகம் நினைக்கலைன்னாலும் தனியா இருக்கும் போது நீதான் என்னைய ஆக்கிரமித்திருந்தாய் புவி..."

"ம்..."

"நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா?"

"ம்... அதெல்லாம் சூப்பரா ரெடியாயாச்சு... நான் நீங்க ஐயா வீட்டுக்கு வருவீங்கன்னு ரெண்டு நாள் வந்து பார்த்தேன்.. ஆனா நீங்க வரலை...  என்னாச்சு அப்படியா படிக்கிறான்... இந்தப் பக்கமே காணோம்ன்னு அம்மா கேட்டாங்க... எனக்கென்ன தெரியும்ன்னு சொன்னதும் உனக்குத் தெரியாமலான்னு இருக்கும்ன்னு சொன்னாங்க.... எனக்கு பக்குன்னு ஆயிருச்சு. ஸோ ஐயா வீட்லயும் நம்ம மேல லேசா சந்தேகம் வந்திருக்கோன்னு தோணுது. இனி அங்க அடிக்கடி சந்திக்கிறதை நிப்பாட்டணும்... சரி இப்போ பரிட்சையை பார்ப்போம். நல்லா எழுதிட்டு வாங்க. மத்தியானம் போயிடாதீங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேசினால் இன்னும் கொஞ்ச நாள் உங்களைப் பார்க்காம இருக்கமுடியும்."

"சரி... நல்லா எழுதிட்டு வா புவி. பை"

ரிட்சை முடிந்ததும் வாடா போகலாம் என்று நண்பர்கள் அழைக்க, நீங்க போங்கடா நான் புவனாவைப் பார்த்துட்டு வாரேன் என்றான்.

"என்னடா அப்படி என்ன முக்கியமான விஷயம்.?" என்றான் சரவணன்.

"சும்மாதான்டா... பாத்து ரொம்ப நாளாச்சு... அதான்"

"அதான் காலையில பாத்தியல்ல..." நக்கலாகக் கேட்டான் பழனி.

"பார்த்தேன்... எதோ பேசணுமின்னாங்க...பார்த்துட்டு வாரேனே... இங்கிலீஸ் பரிட்சைக்கு இன்னும் நாளிருக்குல்ல... அப்புறம் என்ன நாளைக்குப் படிக்க ஆரம்பிக்கலாமுல்ல..."

"இப்ப என்ன சொல்ல வர்றே... ஆங்கிலப் பரிட்சையைவிட அத்தாச்சிதான் முக்கியம்ன்னு சொல்றியா...?" அண்ணாத்துரை கேட்க, "இவன் என்னமோ மறைக்கிறான்டா" என்றான் அறிவு.

"மறைக்க என்னடா இருக்கு... இன்னைக்கு சாயந்தரம் வந்து சொல்றேனே... ப்ளீஸ்..."

"ஓகே...ஓகே... இப்ப வெயிட் பண்ணட்டுமா... வேண்டாமா..." என்றான் பழனி.

"வேணான்டா.. கொஞ்சம் லேட்டாகும்... "

"சரி... பிரச்சினை எதுவும் வராம பாத்துக்க அம்புட்டுத்தான்... இன்னைக்கு பர்ஸ்ட் இயருக்கு மட்டும்தான் பரிட்சை... அதனால வைரவனோ, இளங்கோவோ வரப் போறதில்லை. எதுக்கும் பாத்துப் பேசிட்டு வா... " என்றபடி நண்பர்கள் கிளம்பி விட புவனாவின் வருகைக்காக காத்திருந்தான்.

"என்ன ரொம்ப சீக்கிரம் வந்துட்டிங்களா?" என்றபடி வந்தாள் புவனா.

"ம்... கொஸ்டின் ஈசியா இருந்துச்சு... அதான் சீக்கிரம் வந்துட்டேன்..."

"நானும் வந்துட்டேன். லேடீஸ் ரூம்லதான் உக்காந்திருந்தேன். பிரண்ட்ஸ் வந்ததும் சொல்லிட்டு வந்தேன்."

"சரி வா பேசிக்கிட்டே போகலாம்..."

"என்ன யாருமில்லைன்னு தைரியமா?"

'அப்படியில்லை... இங்க நின்னு பேசுறதைவிட பேசிக்கிட்டு போறது  நல்லதுன்னு நினைச்சேன்..."

"பேசிக்கிட்டே எங்க போறது காலேஸ் கேட்டை தாண்டிட்டா நீங்க ஒரு பக்கமும் நான்  ஒரு பக்கமும் போகப் போறோம். நான் உங்க கூட கொஞ்ச நேரம் பேசணுமின்னு நினைக்கிறேன்."

"சரி... இந்த நேரத்துல எங்க போறது... ஐயா வீடு போகலாமா?"

"காலையிலேயே சொன்னேனே... அங்கயும் கொஞ்சம் சந்தேகம் வந்தாச்சு... இந்த நேரத்துல போன நாமளே காட்டிக் கொடுக்கிற மாதிரி ஆயிடும்..."

"ம்.. என்னோட பிரண்ட்ஸ் துருவித் துருவி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... அவங்களுக்கும் தெரிஞ்சிருச்சின்னு நினைக்கிறேன்..."

"என்னோட பிரண்ட்ஸ்கிட்ட என்னால மறைக்க முடியலை... சொல்லிட்டேன்... மறைச்சு என்னாகப் போகுது.... சரி மல்லிகா வீட்டுக்குப் போகலாமா?"

"மல்லிகா வீட்டுக்கா...? அவங்க போயாச்சு... அது போக அவங்களுக்கும் உனக்கும் சரி வராதே..."

"அதெல்லாம் அப்ப... இப்ப நானும் அவளும் திக் பிரண்ட்ஸ்... சரி அதெல்லாம் எதுக்கு... அவ லேடீஸ் ரூம்லதான் இருக்கா... நாங்க ரெண்டு பேரும் முன்னால போறோம்... நீங்க அப்புறம் வாங்க... அவ வீடு பக்கத்துலதானே இருக்கு... அவங்க அம்மாவுக்கு நம்ம ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். அதனால பிரச்சினை இல்லை.. நான் உங்ககிட்ட பேசணுமின்னு சொன்னதும் அவதான் இந்த ஐடியா கொடுத்தா..."

"அது சரி... அவங்க அம்மா வரைக்கும் கவர் பண்ணிட்டியா...ரெண்டு பேரும் பெரிய கள்ளிங்கடி... எனக்கிட்ட மறச்சிட்டிங்களே.."

"சரி... நீங்க போங்க... நான் வாறேன்..."

ல்லிகா வீட்டில் அம்மா கொடுத்த சாப்பாட்டை மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராமு நீங்க ரெண்டு பேரும் பழகுற விசயத்தை மல்லிகா சொன்னா. நானும் மல்லிகாவோட அப்பாவும் லவ் மேரேஜ்தான். நாங்க லவ் பண்ணினப்போ எம்புட்டு பிரச்சினை தெரியுமா? அதையும் தாண்டித்தான் நாங்க சேர்ந்தோம். எங்க ரெண்டு குடும்பமும் எங்க கூட சேர ரொம்ப நாளாச்சு... இப்போதான் அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பின்னு எல்லாரும் வாராங்க... ஆனா இன்னும் எல்லாரும் ரொம்ப நெருங்கலைங்கிறதுதான் உண்மை. நீங்களும் வேற வேற ஜாதியின்னு தெரியும். பட் காதல்ல ஜெயிக்கணும். அதுதான் எனக்கு வேணும்..."

"ம்.... கண்டிப்பா ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணாத்தான் இருக்கோம்.... எத்தனை பிரச்சினை வந்தாலும்... ஆமாம்மா நீங்க லவ் மேரேஜ்... ஆனா மல்லிகா லவ் பண்ண மாட்டா போலவே..." என்றாள் புவனா.

"அவளுக்கு அந்த எண்ணம் வந்தால் கண்டிப்பாக ஏத்துக்குவோம். ஆனா அவ பண்ணமாட்டா... ஏன்னா சின்ன வயசுல எத்தனையோ பிரண்ட்ஸ் இருந்தாலும் ஐயா, ஆயா, சித்தி, சித்தப்பா, மாமான்னு சொந்தங்கள் இல்லாம வளர்ந்ததால அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்காமல் போயிருச்சு... எப்பவும் சொந்தங்களே இல்லாம வீடு சுடுகாடா இருக்குன்னு சொல்லுவா... நீங்க வீட்டை எதுத்துக் கல்யாணம் பண்ணுறதைவிட ரெண்டு குடும்பத்தையும் சேத்து கல்யாணம் பண்ணுங்க..."

"அது நடக்குமா தெரியலை... ஏன்னா ரெண்டு குடும்பமும் வேற வேற... பாக்கலாம் அம்மா... எப்படி நடந்தாலும் நாங்க கண்டிப்பா சேருவோம்..."

"ம்..."

"அம்மா அவங்க பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க இங்க வந்தா நீ என்னடான்னா கதை பேசிக்கிட்டு..."

"உனக்கு நான் பேசக்கூடாதே... சரி பின்னால தோட்டத்துப் பக்கம் போயி மூணு பேரும் பேசிக்கிட்டு இருங்க... நான் தூங்கப் போறேன்..."

"சரி" என்று பின்னால் தோட்டத்துப் பக்கம் வந்தர்கள். "நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போது நான் எதுக்கு..? அந்த மாமரத்துக்கு கீழ சேர் கிடக்கு அதுல உக்காந்து எம்புட்டு நேர்ம பேசணுமோ பேசுங்க... எந்த டிஸ்டர்ப்பன்சும் இருக்காது... நான் இங்க உக்காந்து கதைப் புத்தகம் படிக்கிறேன்" என்று மல்லிகா கழண்டு கொண்டாள்.

இருவரும் சேரில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை.

"ராம்... செமஸ்டர் லீவுல என்னைய சித்தி வீட்டுக்குப் போகச்சொல்லி அம்மா வற்புறுத்துறாங்க. எனக்குத் தெரியும் அவங்க ஏன் போகச் சொல்றாங்கன்னு... இங்க இருந்தா ஐயா வீட்டுக்கு போவேன்... உங்களைப் பார்ப்பேன்னு அவங்களுக்கு சந்தேகம். ஆனா இன்னும் நேரடியா நீ அவனைக் காதலிக்கிறியான்னு கேட்கலை..."

"ம்... எனக்கு செமஸ்டர் லீவுல உன்னையப் பாக்காம இருக்க முடியாது புவி... எந்த ஊருக்குப் போறே... நா உன்னையப் பார்க்க வர்றேன்..."

"சித்தி வீடு திருப்பத்தூர்லதான்... சித்தப்பா அங்க பெரிய ஆளு... அங்க வந்தெல்லாம் பாக்க முடியாது. ப்ளீஸ் ராம் வீட்டுக்கு போன் கனெக்சன் வாங்குங்க... உங்க கூட போன்லயாவது பேசுவேன்ல..."

"அண்ணன் ஊருக்குப் போனதும் அப்ளை பண்ணியாச்சு... ஊர்ல அல்ரெடி கனெக்சன் இருக்கதால சீக்கிரம் கொடுத்துடுவாங்கன்னு நினைக்கிறேன்... நான் திருப்பத்தூர் வாரேன் புவி... "

"பாக்கலாம்... இன்னும் பரிட்சை இருக்குல்ல முதல்ல அது முடியட்டும்... அப்புறம் முடிவு பண்ணலாம்... முடிஞ்சளவு சித்தி வீடு போறதை தவிர்த்திருவேன். ஆனா ஐயா வீட்ல சந்திக்க முடியாது. இங்கயும் அடிக்கடி வேண்டாம். இன்னைக்கு வந்தது சரி... நம்மனாலே மல்லிகாவுக்கு பிரச்சினை வந்துடக்கூடாது. இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. உங்ககூட இவ்வளவு நேரம் பேசினது ரொம்ப சந்தோஷம். சரி வீட்ல தேடுவாங்க... கிளம்புறேன்.. டயம் போனதே தெரியலை... ரொம்ப லேட்டாயிருச்சு..." என்று எழுத்தவளின் கையைப் பிடித்து இழுத்து கையில் முதல் முத்தத்தைப் பதித்தான். புவனாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

-சனிக்கிழமை தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. 'முத்தம் போதாதே,சத்தம் போடாதே' ன்னு பாடத் தோணுது,ஹி!ஹி!!ஹீ!!!

    பதிலளிநீக்கு
  2. "அது நடக்குமா தெரியலை.. ஏன்னா ரெண்டு குடும்பமும் வேற வேற.. பாக்கலாம் அம்மா!.. எப்படி நடந்தாலும் நாங்க கண்டிப்பா சேருவோம்.."

    நம்பிக்கையும் மன உறுதியும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  3. விறுவிறுப்பு குறையாமல் கதை செல்கிறது...வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே,,
    கதையோட்டம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது அருமை. விறுவிறுப்பு குறைவில்லை. யாரு சேருராங்களோ இல்லையோ நாங்க கரக்டா ஆஜர் ஆகிடுவோம் தங்கள் பதிவை வாசிக்க.. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமாகப் போகிறது.தொடர்வேன்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி