சனி, 7 டிசம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 33

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

33. கால ஓட்டமும் காதல் ஆட்டமும்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவை காதலிக்கிறான். அக்காவுக்கு கட்ட நினைக்கும் மாமா பையன் நல்லவன் இல்லை என்பதால் அம்மாவுடன் சண்டை போட, அண்ணன் மூலம் மாமா பையன் சிங்கப்பூர் அனுப்பப்படுகிறான். வைரவனை அடிக்க வந்த இளங்கோ ஆட்களை ராம்கி அடித்த ஆத்திரத்தில் அவனை போட ஆள் ஏற்பாடு பண்ணுகிறார்கள். கடவுள் கிருபையால் சேகர் மூலமாக அதிலிருந்து தப்பிக்கிறான். விடுமுறைக்கு சித்தி வீடு போகிறாள் புவனா, அவளைப் பார்க்காமல் கவலையோடு நாட்களைக் கடத்துகிறான்.

இனி...


போன் மணி அடிக்கவும் "டேய் இருடா... நா எடுக்கிறேன்... புவியா இருந்தாலும் இருக்கும்" என்றபடி போனை எடுத்தான் ராம்கி.

"அலோ" என்றவனை எதிர்முனை கட்டைக்குரல் "யாரு சேகரா?" என்று திருப்பிக் கேட்கவும் "டேய் சேகர் உன்னைத்தான்டா கேக்குறாங்க" என்று அவன் கையில் கொடுத்துவிட்டு வந்து சோகமாய் அமர்ந்தான். சேகர் நீண்ட நேரம் பேசிவிட்டு வந்தான்.

"சித்தப்பாடா... அப்பாக்கிட்ட ஏதோ பேசணுமாம்... அதான்... நாங்கூட தங்கச்சிதான் பேசுதோன்னு நினைச்சேன்..." என்றான்.

"நானும் அப்படித்தான்டா நினைச்சேன்... காவேரி வேற பொண்ணு பேசுச்சுன்னு சொன்னுச்சில்ல... சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்... புவியா இருந்தா மறுபடியும் கூப்பிடுவாதானே..."

"ஆமாடா... வெயிட் பண்ணலாம்..." என்றபடி கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் சேகரின் அப்பா அம்மாவும் வந்துவிட, இனி இவர்களுக்கு மத்தியில் அவளிடம் எப்படி பேசுவது என்று நினைத்து  "சரிடா நான் கிளம்புறேன்" என்றவனை "இருப்பா... காபி போட்டுட்டேன் குடிச்சிட்டுப் போ..." என்றார் சேகரின் அம்மா.

அப்போது மீண்டும் போன் மணி அடிக்க, சேகர் போனை எடுத்தான். எதிர்முனை "அலோ... சேகர் அண்ணன் இருக்காங்களா?" என்றதும் "நான் சேகர்தான் பேசுறேன்... நீங்க?" என்றான்.

"புவனா பேசுறேண்ணே... அவரை வரச் சொல்றீங்களா? அப்புறம் கூப்பிடுறேன்..."

"இங்கதான் இருக்கான்... டேய் உனக்குத்தாண்டா போன்... உன்னோட பிரண்ட்..." என்று கண்ணடித்தான்.

போனை வாங்கி "அலோ" என்றான்.

"ராம் நாந்தான்..."

"சொல்லு... எப்படியிருக்கே? "

"நல்லாயிருக்கேன்... பொழுதே போகலை..."

"ம்... எனக்குந்தான்... எப்படா காலேசு திறப்பாங்கன்னு இருக்கு...  நீ எப்ப வருவே?"

"ஆமா... எனக்குந்தான்...ஆனா லீவெல்லாம் இங்கதான்... காலேசு திறக்கும் போதுதான் வருவேன்..."

"ம்... நா வேணா அங்க வரவா... வந்தா பாக்கலாமா?"

"இங்கயா... அய்யோ... வேண்டாம்... இப்ப சித்தப்பா வெளிய போயாச்சு... சித்தி வெளியில பேசிக்கிட்டு இருக்காங்க... அதான் போன்ல டிரைப் பண்ணினேன்... சித்தி வந்தா யாருக்கு எதுக்குடி போன் பண்ணினேன்னு கேப்பாங்க.. "

"இங்கயும் சேகர் பேரண்ட்ஸ் வந்துட்டாங்க... இல்லேன்னா பயமில்லாம பேசலாம்..."

"ம்.. உங்களை ஆள் வச்சி அடிக்க அந்த இளங்கோ ஏற்பாடு பண்ணினானாமே?" படபடப்பாகக் கேட்டாள்.

"இ... இல்லையே... அ... அப்படியெல்லாம் எதுவும் இல்லை..."

"எனக்கு எல்லாந்தெரியும்... நான் போன் செஞ்சதே முக்கியமா இதைக் கேக்கத்தான்... வைரவன் எங்கிட்ட எல்லாம் சொன்னான். அவன் இளங்கோவைக் கூப்பிட்டு சத்தம் போட்டு விட்டானாம்... வைரவன் எங்கிட்ட எதுக்கு சொன்னான்னு தெரியலை.... உங்ககூட பேசினாலே கோபப்படுவான்... ஆனா இதை எங்கிட்ட சொன்னான்... அவனுக்கு உங்க மேல கொஞ்சம் பாசம் இருக்கத்தான் செய்யுது... ஆமா அடிக்க வந்தவன் மோசமான ரவுடியாமே... எதோ நல்ல நேரம் அந்த நேரத்துல யாரோ வந்து காப்பாத்தியிருக்காங்க.. இல்லேன்னா..." அதற்கு மேல் பேசாமால் எதிர்முனை விசும்பியது.

"அதெல்லாம் இல்லை... முன்னால உள்ள கோபத்துல அடிக்க வந்தானுங்க... சேகர்தான் அந்த நேரத்துல வந்து காப்பாத்துனான்.. வந்தவன் சேகரோட பிரண்ட்டுங்கிறதால என்னோடவும் பிரண்ட் ஆகிட்டான். எல்லாம் விவரமா பேச முடியாது. வெளியில நிக்கிற சேகர் அப்பா எப்ப வேணுமின்னாலும் உள்ள வரலாம்... அழுகாதே... நான் நல்லாயிருக்கேன்... நீ உடம்பை பார்த்துக்க... சித்தி வந்துறப்போறாங்க அப்புறம் வீணான சந்தேகம் வந்துடும்..." மெதுவாகப் பேசினான்.

"ம்... எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை... உங்களைப் பார்க்கணும் போல இருக்கு... எங்கம்மா சித்திக்கிட்ட லேசுவாச சொல்லியிருப்பாங்க போல... மெதுவா கேட்டாங்க... ஒரு பையன் கூட ரொம்ப குளோசாமேன்னு... ஆமா என்னோட பிரண்ட்... ஒரு பொண்ணும் பையனும் பிரண்டா இருக்கக்கூடாதா என்னன்னு திருப்பிக் கேட்டதும் உன்னையப் பற்றித் தெரியும்... எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை... ஆனா உங்கம்மாதான் பயப்படுறாங்கன்னு சொன்னுச்சு... சித்தி நான் எப்பவும் சுத்தம் தெரிஞ்சிக்கன்னு சொல்லிட்டேன். அப்புறம் பேசலை.... சரி சித்தி வந்தாலும் வந்திரும். நா வச்சிடுறேன்... முடிஞ்சா ரெண்டு நாள் கழிச்சுக் கூப்பிடுறேன்..."

"சரி... உடம்பைப் பார்த்துக்க... சியூடா..." என்றபடி போனை வைத்துவிட்டு திரும்ப... "என்ன மாப்பிள்ளக்கு போனெல்லாம் வருது... புதுசா இருக்கு... இதுவரைக்கும் ஒரு போனும் வந்ததில்லை... காலேசுக்குப் போனதும் போன்ல பேசுற பிரண்டெல்லாம் கிடைச்சாச்சா" என்ற சேகரின் அம்மாவுக்கு சிரிப்பை மட்டும் பதிலாக்கி வெளியில் வந்தான்.

அவனை அப்படியே தள்ளிக் கொண்டு வீதிக்கு வந்த சேகர், "என்னடா... என்ன சொன்னா?"

"அழுகுறாடா... எனக்கு கஷ்டமா இருக்கு...."

"அழுகுறாளா... ஏன்டா... என்னாச்சு... வீட்ல தெரிஞ்சிருச்சா என்ன..."

"இல்லடா.... என்னைய போட வந்தது அவளுக்குத் தெரிஞ்சாச்சு..."

"அது சரி... யாரு சொன்ன?"

"வைரவந்தான்... ஆமா எப்படிடா வைரவனுக்கு..."

"இது என்ன சிதம்பர ரகசியமா... மணிக்கு இளங்கோவும் வைரவனும் ஒண்ணுதான்... எல்லாரும் சொந்தக்காரங்கதான்... எவனாவது வைரவங்கிட்ட இளங்கோ ஒருத்தனை போடச் சொன்னாரு... கடைசியில அவன் தப்பிச்சிட்டான்னு சொல்லியிருப்பான். உடனே வைரவன் யாரு என்னன்னு விசாரிச்சிருப்பான்... நீன்னு சொல்லவும் அவகிட்ட சொல்லியிருப்பான்..."

"எம்மேல பாசமிருக்கவும்தானே இளங்கோவை சத்தம் போட்டிருக்கார். அது போக புவிக்கிட்டயும் சொல்லியிருக்கார்."

சேகர் சத்தமாக சிரித்தான். அவனது சிரிப்புக்கு அர்த்தம் புரியாத ராம்கி "எதுக்குடா சிரிக்கிறே?" என்றான்.

"போடா வெண்ணை... பாசமாவது மண்ணாங்கட்டியாவது... நாளைக்கி இளங்கோகூட சேர்ந்து உன்னைய அடிக்க வந்தாலும் வருவான்... இங்க பாரு அவனைப் போட ரெடியாயிட்டானுங்க...  ஒதுங்கியிருன்னு சொல்லுறதுக்காகக் கூட தங்கச்சிக்கு போன் பண்ணியிருப்பான்... பாசமாம்... பாசம்... இவனுக எல்லாமே காலைச் சுத்தின கருநாகம் மாதிரி... கடிக்காம விடமாட்டானுங்க..."

"ம்... புவிய பாக்கணும்போல இருக்குடா..."

"இன்னும் கொஞ்ச நாள்தானே வெயிட் பண்ணு..."

ல்லூரி திறந்து ஸ்டிரைக், சின்னச் சின்ன சண்டைகள் என நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, இதற்கிடையே வைரவனும் இளங்கோவும் பேப்பருக்கு இவ்வளவு என பணம் கொடுத்து டிகிரியை முடித்திருந்தார்கள். வைரவன் மதுரை லா காலேசிலும் இளங்கோ பெங்களூரில் எல்.எல்.பியும் படிக்கப் போய்விட்டார்கள். ராம்கி வீட்டிலும் டெலிபோன் வந்துவிட்டது. 

கல்லூரியின் புதிய ரவுடிகளாக சுதாகரும், சிவாவும் பொறுப்பேற்க அவர்களின் அடிபொடிகளாக சிலர் உருவானார்கள். புவனா ராம்கியின் காதல் இடையூறு இன்றி சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்தது. பலமுறை ராம்கியை தாக்க சிவா முயன்றும் சுதாகர் அதை தகர்த்துக் கொண்டே வந்தான். இரண்டாம் வருட படிப்பு இருவருக்கும் இடையிலான மிகப் பெரிய அடிதடியால் இருமுறை காலவரையற்ற கல்லூரி மூடலுடன் நிறைவு பெற்றது.

ராம்கியின் அண்ணனும் முத்துவும் சிங்கப்பூரில் சந்தோஷமாக இருந்தனர். முத்துவின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக போனில் அண்ணன் ராசு சொன்னதும் எல்லாருக்கும் சந்தோஷம். சேகருக்கும் காவேரிக்கும் திருமண செய்து வைத்துவிடலாம் என இரு வீட்டிலும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க, இப்போதெல்லாம் புவனாவும் ராம்கியும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்களின் காதலுக்கும் இரண்டு வயதாகப் போவதால் கொஞ்சம் பயம் குறைத்து ஒரு பிடிப்பு ஏற்பட்டிருந்தது. அன்று கல்லூரி முடிந்ததும் இருவரும் அருகில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சைக்கிளை தள்ளியபடி சிரித்துப் பேசியபடி நடக்க ஆரம்பிக்க, அவர்களுக்கு எதிரே தமிழய்யா சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. வணக்கம்

    சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. //மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க, இப்போதெல்லாம் புவனாவும் ராம்கியும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.//

    எங்களுக்கு கவலையாக இருக்கின்றது.
    இடையூறு ஏதும் வந்து விடக்கூடாதே.. என்று!..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே
    காதல் வந்தால் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வை மிக அழகாக வெளிபடுத்தியுள்ளீர்கள். இடையில் வேகமாக 3 ஆம் ஆண்டிற்கு செட் வேகத்தில் நகர்த்தி விட்டீர்களே! தமிழ் அய்யா என்ன சொல்வார் என்று பொருத்திருந்து காண்போம். பகிர்வுக்கு நன்றி (உடல்நலமின்மை காரணமாக கருத்திட வரவில்லை பொருத்தருள்க)

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி