புதன், 11 டிசம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 34

முந்தைய பதிவுகளைப் படிக்க...


---------------------------

34. அறிவுரையும் அடாவடியும்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவை காதலிக்கிறான். அக்காவுக்கு கட்ட நினைக்கும் மாமா பையன் நல்லவன் இல்லை என்பதால் அம்மாவுடன் சண்டை போட, அண்ணன் மூலம் மாமா பையன் சிங்கப்பூர் அனுப்பப்படுகிறான். இடையில் பல பிரச்சினைகளை சந்திக்கும் ராம்கி எல்லாவற்றிலும் அதிர்ஷ்டவசமாக தப்புகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதலில் கொஞ்சம் பயத்தை துறக்க நினைக்கிறார்கள். அப்படி இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசிவிட்டு போகும்போது ஐயா கண்ணில் படுகிறார்கள்.

இனி...

மிழய்யா வருவதைப் பார்த்த புவனா 'ஐய்யய்யோ... இன்னைக்கு நல்ல மாட்டிக்கிட்டோம். இதுவரைக்கும் ஐயாவுக்குத் தெரிஞ்சாலும் அதை வெளியில காட்டிக்காம இருந்தாரு... இன்னைக்கு என்ன சொல்லப் போறாரோ...? என மெதுவாகச் சொன்னாள் 

"புவி... பயப்படுற மாதிரி இருக்காம எப்பவும் போல வா... ஐயாவைப் பார்த்ததும் எப்பவும் போல பேசு..." என்றான் ராம்கி.

இவர்கள் அருகில் வந்ததும் சைக்கிளை விட்டு இறங்கிய ஐயா "என்ன ரெண்டு பேரும் எங்க பொயிட்டுப் போறீங்க..?" என்றார்.

"சும்மா... பேசிக்கிட்டு..."

"அப்படியென்னய்யா முக்கியமான மேட்டர்?"

"அது..." இருவரும் பதில் சொல்ல முடியாமல் இழுத்தனர்.

"என்ன சொல்லுங்க.. அப்படி என்ன முக்கியமான விஷயம்?"

"இல்லய்யா..."

"நான் நேர விஷயத்துக்கு வாரேன்... நீங்க ரெண்டு பேரும் பழகுறது எனக்கும் அம்மாவுக்கும் ஒரு வருசத்துக்கு முன்னால தெரியும். சரி கேக்க வேண்டாம்ன்னு விட்டிருந்தேன். இப்போ வீட்டுப் பக்கம் வர்றதையும் ரெண்டு பேரும் குறைச்சிட்டிங்க. இன்னும் ஒரு வருசம் படிக்க வேண்டியது இருக்கு. இப்படி பொது இடங்கள்ல சுத்துறதால உங்களோட படிப்புக்கு மட்டுமில்லாம எல்லாத்துக்கும் பிரச்சினை வரும்ன்னு ஏன் உங்களுக்குத் தெரியலை... ரெண்டு பேரும் நல்லா படிக்கிறீங்க... இந்த வருசம் உங்களுக்கு லாங்குவேஜ் எதுவும் இல்லை... மேஜர் மட்டும்தான்... நல்லா ஸ்கோர் பண்ண வேண்டாமா? ம்... காதல்ங்கிறது இந்த வயசுல வர்றதுதான்... உங்களுக்குள்ள அது வந்ததை நான் தப்புன்னு சொல்லலை... வாழ்க்கையில எதை நோக்கிப் பயணிக்கிறீங்களோ அதை முதல்ல அடையணுமா இல்லையா? சொல்லுங்க..."

"இல்லய்யா... நாங்க எல்லார் மாதிரியும் ஊர் சுத்துறதுலாம் இல்லையா... எங்களுக்கு படிப்புத்தான் முக்கியம்... இன்னைக்குத்தான் கொஞ்ச நேரம் பேசலாம்ன்னு பூங்காவுக்கு வந்தோம்..."

"நான் நீங்க பூங்காவுக்குப் போனதை தப்புன்னு சொல்லலை... யாராவது பார்த்திருந்தா என்னவாகியிருக்கும்... இதுக்கு மேல மாஸ்டர் டிகிரி முடிச்சாத்தான் ஏதாவது ஒரு நல்ல வேலையில சேர முடியும். பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் ஜாதியும் மதமும் எப்பவுமே காதலுக்கு எதிரிதான். இங்க உங்க காதலுக்கும் ஜாதிதான் எதிரியா இருக்கும்ன்னு தெரியுந்தானே... சும்மா படிக்கும் போது பழகிட்டு அப்புறம் நீ உன்னோட பாதையில போ... நான் என்னோட பாதையில போறேன்னு போறதுக்குப் பேர் காதலில்லை... அப்படி நிறையக் காதலர்களை இந்தக் கல்லூரி பார்த்திருக்கு... கடைசி வரை நின்னு ஜெயிச்சு இன்னைக்கும் ஆதர்ஷ தம்பதிகளா வாழ்ற சில காதலையும் இந்தக் கல்லூரி பார்த்திருக்கு... உங்க காதல் அந்த சில காதல்ல ஒண்ணா இருக்கணும்ன்னுதான் நான் ஆசைப்படுறேன். பல காதல்ல ஒண்ணாப் போயிடக்கூடாது. முதல்ல படிப்பு... அப்புறம் வாழ்க்கை பற்றிய முடிவு... அதுதான் சரியான பாதையா இருக்கும்."

"ம்..." இருவரும் ஒன்றாகத் தலையாட்டினார்கள்.

"என்னைக்கு பிரச்சினையை எதிர்க்கிற  தகுதியை நமக்குள்ள வளர்த்துக்கிறோமோ அப்ப வாழ்க்கையில என்ன பிரச்சினை வந்தாலும் நம்மாள தீர்மானமான முடிவு எடுக்க முடியும்... ரெண்டு பேருக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன்... நல்லபடியா படிப்பை முடிச்சிட்டு வாழ்க்கையில செட்டிலாகுங்க... எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்." 

"சரிய்யா..."

"சரி புவனா நீங்க போங்க... நானும் தம்பியும் இந்தப் பக்கமா போறோம்..."

"ம்... சரிய்யா... ராம் வாரேன்... சீ... யூ..." மனசேயில்லாமல் வார்த்தைகளை உதித்துவிட்டு சைக்கிளை மிதிக்கலானாள்.

"வாங்க நாம அப்படியே மீனாட்சி ஐயா வீட்டுக்குப் பொயிட்டுப் போவோம்..." என்றபடி சைக்கிளில் ஏறினார்.

"தம்பி... உங்க குடும்ப நிலை எனக்குத் தெரியும்... புவனா குடும்பம் பணக்காரங்க... ஊருக்குள்ள நல்ல பேரோட இருக்க குடும்பம்... குறிப்பா இந்த ஊரை ஆட்டிப் படைக்கிற ஜாதி அவங்களோடது... இப்போ உங்க காதல் வெளியே தெரிஞ்சா அதனால அதிகம் பாதிக்கப் படப்போறது உங்களோட பக்கமாத்தான் இருக்கும்... ஆனா புவனா ரொம்ப நல்ல பொண்ணு..   அவங்க உங்க வாழ்க்கைத் துணையா வந்தா ரொம்ப சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு அமையும். ஆனா அதுக்கான நேரம் காலம் வர்ற வரைக்கும் கொஞ்சம் வெளிய சுத்துறதை எல்லாம் கொறச்சிக்கங்க..."

"சரிய்யா..."

"உங்களுக்கு புவனாவோட பேசணுமின்னா நம்ம வீட்டுக்கு ரெண்டு பேரும் வாங்க... பேசுங்க... அதுக்காக அடிக்கடி சந்திச்சுப் பேசணும்ன்னு நினைக்காதீங்க... வாழ்க்கையில வெல்ல காதலைவிட படிப்பு முக்கியம் தெரிஞ்ச்சுக்கங்க..."

"புரியுதுய்யா..."

"சரி... ஐயா சொல்றது உங்க நன்மைக்குத்தான்... நானும் காதல்ல அடிபட்டவன்தான்... அதனால நிறைய இழந்தேன். இன்னைக்கும் எனக்கும் அம்மாவுக்கும் இரத்த சொந்தங்களோட உறவு இல்லை. எல்லாமே உங்களை மாதிரி உறவுகள்தான். ஆனா இந்த உறவுகள் எங்களுக்கு அதிகமாக இருக்கு... வாழ்க்கை இனிமையாகவும் இருக்கு... எதுக்குச் சொல்ல வாறேன்னா நான் நல்ல வேலைக்குப் போன பின்னாலதான் அம்மாவை கைபிடிச்சேன். ஆனா உறவுகள் ஒத்துக்கலை... சரி விடுங்க... என்னடா இவரு ரொம்ப அறிவுரை சொல்றாரேன்னு வருத்தப்படப் போறீங்க..."

"அப்படியெல்லாம் இல்லைய்யா... நீங்க எப்பவும்  எங்க நல்லதுக்குத்தான் சொல்லுவீங்க... ஆனா ஒண்ணுய்யா புவனா இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைய்யா... எப்படியும் புவனாவை என்னோட வாழ்க்கைத் துணையா அடைவேன்ய்யா..."

ராம்கியின் தோளில் தட்டிய ஐயா சிரித்தபடி சைக்கிளை ஓட்டினார்.

"ராம்... ராம்..." பின்னாடி கூப்பிட்டபடி வந்தாள் புவனா.

நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு அவளது குரலைக் கேட்டும் கேட்காமல் மற்ற நண்பர்களின் அரட்டைச் சங்கமத்தில் கலக்க போய்க் கொண்டிருந்தான்.

"ராம்...." அழைப்புக்கு திரும்பவில்லை. ஒருவேளை ஐயாவின் அறிவுரைக்கு மதிப்புக் கொடுக்கிறான் போல என்று நினைத்தவள் கடுப்பாகி "அடேய் புவனாராம்..." என்று கத்தினாள். நண்பர்கள் அனைவரும் திரும்ப, ராம்கி வேகமாக அவளருகில் வந்தான்.

"என்னம்மா... எதுக்கு இப்படிக் கத்துனே... அதுவும் ரெண்டு பேர் பேரையும் சொல்லி... ஒரு நிமிடம் தூக்கிப் போட்டிருச்சு..."

"அப்புறம் என்ன பின்னாடியே கூப்பிட்டுக்கிட்டு வாரேன்... திரும்பாமப் போறீங்க..."

"ஐயா பார்த்தா நேத்துத்தானே சொன்னோம்ன்னு நினைக்க மாட்டாரா?"

"அப்ப காதலை விட்டுட்டு படிப்பைப் பார்க்கச் சொல்லுறீங்களா?"

"அப்படிச் சொல்லலை... அவரு நம்ம நல்லதுக்குத்தானே சொன்னாரு.."

"அவரு காலேசுக்கு வெளிய சுத்த வேண்டான்னுதான் சொன்னாரு... காலேசுக்குள்ள பேசுறதுக்கு ஒண்ணும் சொல்லலை..."

'ம்.. சரி சொல்லு என்ன விஷயம்?"

"நாம இந்த வீக்கென்ட் படத்துக்குப் போறோம்..."

"என்னது படத்துக்கா?" 

"படத்துக்குன்னுதானே சொன்னேன்... ஊரை விட்டு ஓடுறோம்ன்னா சொன்னேன்... எதுக்கு இம்புட்டு அதிர்ச்சி... அலோ பிரண்ட்ஸ் உங்க பிரண்டுக்கு காதலுக்கு மரியாதை கொடுக்கிறது எப்படி சொல்லிக் கொடுங்க... ஐயாவோட அறிவுரையை அப்படியே தலையில சுமந்துக்கிட்டு இருக்காரு... காதலிக்காக கொஞ்சம் இறக்கி வைக்கச் சொல்லுங்க... பிரச்சினை வந்தா ஊரை விட்டுப் போயி வாழமுடியுங்கிற தைரியத்தைச் சொல்லிக் கொடுங்க..."

"என்னடா மாப்ளே... அவ கூப்பிட்டா பொயிட்டு வர வேண்டியதுதானே..." என்று கேட்டான் அண்ணாத்துரை.

"இல்லடா... அது..."

"என்ன அது... நொதுன்னு..." சரவணன் கேட்க, "இங்க பாருடா... நீங்க ரெண்டு பேரும் நல்லாத்தான் படிக்கிறீங்க... ரெண்டு வருசமா காதலிக்கிறீங்க படிப்புல எதாவது பாதிப்பு வந்துச்சா... இல்லையில்ல... அப்புறம் என்ன... ஐயா சொன்னது தப்பில்லை ... எல்லாம் நூத்துக்குநூறு சரியே... அதுக்காக காதலிக்கும்போது அனுபவிக்கிற சின்னச் சின்ன சந்தோஷங்களை எல்லாம் தொலச்சிட்டு இலக்கை நோக்கி ஓடி அதை அடஞ்சு அப்புறம் பிரச்சினைகளை எல்லாம் கடந்து கல்யாணம் பண்ணும்போது காதல்ல கிடைக்க வேண்டிய சந்தோஷங்கள் எல்லாம் காணமப்போயி வாழ்க்கையை வாழணுங்கிற எண்ணம்தான் மனசுக்குள்ள இருக்கும்... தெரிஞ்சுக்க..." என்று அனுபவஸ்தன் போல பேசினான் சேவியர்.

"அடேயப்பா... அனுபவஸ்தன் போல பேசுறாண்டா மச்சான்" என்றான் அறிவு.

"சரி... சரி... புவி படத்துக்குப் போறோம்...எந்தத் தியேட்டருக்கு..."

"அப்ப கருப்பனை சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள போதும் போதுன்னு ஆயிடுச்சு... என்னோட சகோதர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்..."

"நன்றியை அப்புறம் சொல்லு.... எந்தத் தியேட்டர்..."

"என்ன அவசரம்.... காரைக்குடி பாண்டியன்..."

"என்னது காரைக்குடியா?" அடுத்த அதிர்ச்சிக்குப் போனான்.

"எஸ்... சண்டே காலையில காரைக்குடி பாண்டியன்ல சினிமா பாக்குறோம்... ஒகே... பை" என்றபடி ஓடினாள்.

உள்ளூர்ல பாக்குறதைவிட இது சேப்தாண்டா மாப்ளே" என்று நண்பர்கள் சொன்னாலும் முதல் முறை சினிமாவுக்குப் போறோம் என்ன நடக்கப் போகுதே... என்ற பயம் ராம்கி மனசுக்குள் குடிபுகுந்தது.

(சனிகிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. தமிழாசிரியரின் கருத்துக்கள் - அருமையானவை. யதார்த்தமானவை.
    கதையின் சம்பவங்கள் அருமையாக நகர்த்தப்படுகின்றது.

    பதிலளிநீக்கு
  2. முந்தைய பகுதி எப்படி தவறியது,தெரியவில்லை.இரண்டையும் ஒன்றாகப் படிப்பதும் சுவை தான்!நன்றாகப் போகிறது,அடுத்த வாரம் சினிமா பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  3. சகோதரருக்கு வணக்கம்
    இவர் தான் தமிழாசிரியர். அழகான கருத்துரை. படிக்க தொடங்கியதும் முடித்ததும் தெரியவில்லை. அருமையான கதையோட்டம். தொடருங்கள் சகோ. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி