சனி, 19 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 23

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

23. சந்தோஷம்...  சங்கீதம்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள். ராம்கியும் அவளைக் காதலிக்கிறான். இளங்கோவுடன் மோதல் ஏற்படுகிறது. 

இனி...

ரண்டு நாட்களாக புவனாவைப் பார்க்காததால் திங்களன்று கல்லூரி சென்றதும் அவளைத் தேடினான். காலை முழுவதும் அவளைப் பார்க்க முடியவில்லை. மதியம் சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் அவள் லைப்ரரிக்கு வருகிறாளா என்று கண்கள் தேடிக்கொண்டே இருந்தன. ஆனால் அவள் வரவேயில்லை. அப்போது அந்தப் பக்கமாக அவளது தோழி வரவே, நண்பர்களிடம் இந்தா வாறேண்டா என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அவளிடம் 'புவனா வரலைங்களா?' என்று கேட்டான்.

"வந்திருக்கா... இண்டர்னெல் எக்ஸாம் இருக்கு. காலையிலயும் எக்ஸாம் இருந்துச்சு. இப்பவும் இருக்கு... அதான் எல்லாரும் படிச்சிக்கிட்டு இருக்கோம். நான் புரபஸரைப் பார்க்க வந்தேன். ஏன்  அவகிட்ட எதாவது சொல்லணுமா... வேணுன்னா வரச் சொல்லவா... இல்லேன்னா நீங்க எங்க கிளாஸ்க்கு வாங்களேன்..." என்றாள்.

"இல்ல... பரவாயில்லை... அவங்க படிக்கட்டும்... ஒண்ணும் முக்கியமானதில்லை... ரெண்டு நாளா வீட்ல கொஞ்சம் வேலை அதான் ஐயா வீட்டுக்கு புக் ஒர்க் பண்ணப் போகலை... அவங்க போனாங்களா... ஒர்க் முடிஞ்சிருச்சான்னு கேட்கத்தான்... பரவாயில்லை... சாயந்தரம் நான் பாக்கணுமின்னு சொல்லுங்க..."

"இதை அவகிட்டதான் கேட்கணுமா... ஐயாகிட்ட கேட்டிருக்கலாமே... ம்... அவகிட்ட பேச ஒரு காரணம்... என்னமோ நடக்குது... நடக்கட்டும்... கத்திரிக்காய் முத்தின கடைக்கு வந்துதானே ஆகணும்.. சரி சாயந்தரம் வெயிட் பண்ணச்  சொல்றேன்..." என்றபடி சென்றாள்.

மீண்டும் நண்பர்களிடத்தில் வந்து அமர, "எங்கடா அம்புட்டு அவசரமா ஓடுனே..?" என்றான் அறிவு.

"இல்ல புவனாவோட பிரண்ட் வந்தாங்க... அதான் பார்த்துப் பேசிட்டு வாறேன்..." பொய்யாக எதாவது சொல்லி மாட்டிக்க விருப்பமில்லாமல் உண்மையைச் சொன்னான்.

"அப்படி என்ன தலைபோற அவசரம்..?" 

"தலை போற அவசரமெல்லாம் இல்லை சரவணா... ஐயா வீட்டுக்கு ரெண்டு நாளா போகலை... வீட்ல பொங்கல் வேலை, அப்புறம் சினிமான்னு அங்கிட்டுப் போகவேயில்லை... அதான் புக் ஒர்க் முடிஞ்சிருச்சா இல்லை இன்னைக்குப் போகணுமான்னு கேட்கலாம்ன்னுதான் புவனா வந்திருக்காங்களான்னு கேட்டேன்..."

"என்னடா... எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தோம்... இப்பத்தான் தெரியுது அவ வந்திருக்காளா வரலையான்னு கவலையில கேட்கப் போயிருக்கேன்னு..." பழனி நக்கலாகச் சொன்னான்.

"அப்படியெல்லாம் இல்லடா... உண்மையிலுமே இதைக் கேட்கத்தான் அவங்க வந்திருக்காங்களான்னு கேட்டேன்..."

"அட வெளக்கெண்ணை எங்களுக்கு காது குத்தியாச்சு... இதை ஐயாக்கிட்ட கேட்க வேண்டியதுதானே... அதைவிட்டுட்டு அவகிட்டதான் கேட்கணுமோ... வைரவன் காலேசுக்குள்ள வராதது உனக்கு யோகம்டி மாப்ள... நடத்து நடத்து... இப்ப உன்னோட காட்டுல மழை... கொட்டுற மழையில குடை பிடிச்சாலும் கால் நனையத்தாண்டி செய்யும்... என்னைக்கு இருந்தாலும் எங்களுக்கு உங்ககதை தெரியாமப் போகாது..."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... உங்களுக்குத் தெரியாம நான் என்னடா பண்ணப்போறேன்..."

"இந்தப் புள்ளையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சிக்கிட்டு நீ மோரே குடிச்சிக்கிட்டு இருக்கே மச்சான்..." என்றான் சேவியர்.

இவர்களின் அரட்டை தொடர்ந்து கொண்டிருக்கும் போது தூரத்தில் புவனா வேகமாக வருவது தெரிந்தது. 'ஆஹா... இவனுக இருக்கும் போது இங்க வந்து பேசினா தேவையில்லாம பேசுவானுங்களே... இப்ப என்ன பண்றது' என்று யோசிக்கும் போதே "அடேய்... ரொம்ப நல்லவனே... உன்னோட தேவதை தேடி வர்றா... போய் பேசிட்டு வா... நாங்க நீ அவகிட்ட இதை மட்டும்தான் கேட்கப் போறேன்னு நம்பிட்டோம்... வாங்கடா அவன் பேசிட்டு வரட்டும்... நாம  போகலாம்... " என்ற அண்ணாத்துரை நண்பர்களைக் கூட்டிச் செல்ல ஒரு பெருமூச்சை விட்டபடி அவளை நோக்கி நடந்தான்.

"என்ன புவி... எக்ஸாம் இருக்குன்னு சொன்னாங்க... சாயந்தரம் பாக்கலாம்ன்னு சொன்னேனே... அப்புறம் ஏன் வந்தே... ஒண்ணும் அர்ஜெண்ட் இல்லை..."

"ம்... ரெண்டு நாள் எங்க போனீங்க... இன்னைக்கு காலையில இருந்து பார்க்கலைன்னதும் அவகிட்ட ஓடிப்போயி கேட்டிருக்கீங்க... ரெண்டு நாளா நான் எப்படி தவிச்சிருப்பேன்..."

"சாரிம்மா... பொங்கல் வேலை... வீடெல்லாம் பிரிச்சு சுத்தம் பண்ணினோம்... அப்புறம் நேத்து பிரண்ட்ஸோட படத்துக்குப் பொயிட்டேன். சும்மாவே நம்மளைப் போட்டு கிண்டுறானுங்க... படத்துக்கு வரலைன்னு சொன்னா வீணாவுல கோபப்படுவானுங்க... அதான்... சாரிடா..."

"ம்... எதுக்கெடுத்தாலும் சாரி... சாரின்னுக்கிட்டு... சரி நான் கிளம்புறேன்... சாயந்தரம் பாக்கலாம்..."

"இப்ப எதுக்கு வந்தே... சும்மா பாத்துட்டுப் போகவா?"

"பாவம் நம்மளைப் பாக்காம நம்ம ஆளு ரொம்ப தவிச்சிப் பொயிட்டாரேன்னு வந்தா... ரொம்ப கொழுப்புத்தான்... எதாவது விசேசமா?"

"சரி... நீ போய் எக்ஸாமை முடி... சாயந்தரம் ஐயா வீட்ல பார்க்கலாம்..."

"இன்னைக்கு ஐயா வீடு வேண்டாம்... தினமும் அங்க போயி உக்காந்து இருந்துட்டு போறதுக்கு பேர் லவ் இல்லை... இன்னைக்கு பக்கத்துப் பார்க்குப் போகலாம்... ப்ளீஸ்..."

"ம்..."

"என்ன ம்... யாராவது பாத்துடுவாங்கன்னு பயமா? என்னைக்கா இருந்தாலும் தெரியத்தான் போகுது... எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்... எது வந்தாலும் பாத்துக்கலாம்..."

"ஓகே... கிளாஸ் முடிந்ததும் பார்க்குக்குப் போகலாம்... யார் முன்னாடி போனாலும் அங்க வெயிட் பண்ணலாம்... ஓகே..."

"அப்பா... முடியாதுன்னு சொல்லாம ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்... பை..." என்றபடி அங்கிருந்து சென்றாள்.

மாலை நண்பர்களிடமிருந்து ஒருவழியாக தப்பித்து பார்க்குக்கு சென்றான் அங்கு முன்னரே சென்று நின்று கொண்டிருந்த புவனா இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். சைக்கிளை வைத்துவிட்டு இருவரும் உள்ளே சென்று ஒரு வேப்பமர நிழலில் இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தனர். புவனா ஒரு குச்சியால் பெஞ்சின் மீது கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

"என்ன புவி... ஐயா வீடு பேசுறதுக்கு சரியா இல்லைன்னு இங்க வரச் சொல்லிட்டு பேசாம இருக்கே?"

"பேசுறதுக்கு என்ன இருக்கு... உங்ககூட கொஞ்ச நேரம் தனிமையில இருக்கணுமின்னு தோணுச்சு... ஆமா உங்க வானரப்படை எப்படி உங்களை விட்டுச்சு... நான் வரும் போது உங்க பிரண்ட்ல ஒருத்தன் உயரமா இருப்பானே... அவன் பேர் என்ன..?"

"யாரு... சேவியரா?"

"ம்... அதுதான் பாத்ரூம் போச்சு போல... என்ன தங்கச்சி மச்சானை வரச்சொல்லவான்னு கேட்டுட்டுப் போகுது..."

"அவனுகளுக்கு வேற வேலையில்லை... எப்படி மறைச்சாலும் நோண்டிக்கிட்டே இருக்கானுக... ஆமா உன்னோட பிரண்ட்ஸ்க்கு தெரியாதுல்ல..."

"அவளுக பேசுறதைப் பார்த்தா சந்தேகமாத்தான் இருக்கு... ரெண்டு பேரும் லவ்வை சொல்லிக்கிட்டோம்ன்னு தெரியாது. ஆனா லவ் பண்றோம்ன்னு தெரியும்..."

"புவி நாளைக்கு எங்கண்ணன் வர்றார்... மத்தியானம் கூட்டப் போகணும். மதியம் கிளாஸ்க்கு வரமாட்டேன்..."

"பெரிய மச்சான் வார்றாராக்கும்..." என்று சிரித்தவள் " அப்ப நாளைக்குப் பார்க்க முடியாதாக்கும்..."

"ம்... அவனுகளுக்கு தெரிஞ்சா அம்புட்டுத்தான்... நீ இப்பவே மச்சான் போடுறே... வைரவண்ணன் எப்படியிருக்கார்... இந்தப் பக்கமே வரக்காணோம்... இல்லைன்னா அந்தக் கடையிலதான் வந்து உக்காந்திருப்பாரே..?"

"அண்ணனா... நான் எப்படி மச்சான்னு சொன்னேன்... இனி அவன் மச்சான்... அண்ணன் நொண்ணன்னு சொல்லி முறையை மாத்தாதீங்க... அப்ப நான் என்ன தங்கச்சியா? அவனை அப்பா காலேசுப்பக்கமே போகக்கூடாதுன்னு கண்டிசன் போட்டு வச்சிருக்கார்... மாமா வீட்டுக்குப் பொயிட்டான். அவன் இங்க இருந்தா பார்க்குக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கமாட்டேன்..."

"அவருக்குத் தடையா? ஏத்துக்கிட்டாரா என்ன?"

"எங்க ஏத்துக்கிட்டான்... அத்தை வந்துருந்துச்சு... அதான் வாடான்னு இழுத்துக்கிட்டுப் போயிருக்கு... பொங்கலுக்கு வந்துருவான்..."

"ம்... அப்புறம் எங்க வீட்டுக்கு வாறியா?"

"உங்க வீட்டுக்கா? எப்போ...? எப்படி...?"

"மாட்டுப் பொங்கல் அன்னைக்கு... எங்க ஊர்ல மாட்டுப் பொங்கல் ரொம்ப சிறப்பா இருக்கும்... நீ வந்தியன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..."

"மாட்டுப் பொங்கல் எங்க ஊர்லயும் சிறப்பாத்தான் இருக்கும். அன்னைக்கு எப்படி வர்றது. வேற யாரு வாறாங்க...?"

"பசங்க வாறாங்க..."

"உங்க பசங்க கூடவா... அப்பா சாமி நான் வரலை..."

"இல்ல நீ வர்றதா இருந்தா நான் மல்லிகாவையும் இன்னும் சில தோழிகளையும் கூப்பிடலாம்ன்னு இருக்கேன்.."

ஒன்றும் பேசாமல் அவனை முறைத்தாள்.

"என்னாச்சு புவி... எதுக்கு இப்போ முறைக்கிறே?"

"அவகூட நான் வரணுமா? எதுக்கெடுத்தாலும் அவ... அவ..."

'ஏய் எதுக்கு கோபப்படுறே... அவகூட பழகிப் பாரு... அவளோட குணம் புரியும்... நீ மட்டும் தனியா வரமுடியுமா என்ன... அதுக்குத்தான்..."

"அதுக்காக..?"

"இங்க பாரு... என்னோட மனசுல நீ மட்டும்தான் இருக்கே... மத்தவங்க எல்லாம் நல்ல தோழிங்கதான்... எல்லாருமா வந்தா நல்லாயிருக்கும்... நீ வந்தியன்னா எனக்கு இந்தப் பொங்கல் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்... இல்லேன்னா பரவாயில்லை விடு இன்னொரு நாள் பாத்துக்கலாம்..."

"சரி... சரி... எப்படியாச்சும் வரப்பாக்குறேன்... மல்லிகாவை எங்க வந்து பாக்கணுமுன்னு முன்னாடியே சொல்லிருங்க...."

"ரொம்ப சந்தோஷம் புவி..." என்று அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"எங்க வீட்டுக்கும் வரணும்... சரியா?"

"கண்டிப்பாக வர்றேன் என்னோட ஆளு கூப்பிட்டு வரமாட்டேனா என்ன..." என்றதும் "ஆமா... பேசுறதுக்கே பயப்படுறோம்... எங்க வீட்டுக்கு வந்துட்டாலும்...." என்று சீண்டினாள்.

"வரச்சொன்னா கண்டிப்பா வருவேன்... எனக்கென்ன பயம்... என்னோட கண்மணி இருக்கும் போது..." என்றபடி அவள் தோளில் கை வைத்தான்.

"என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷம் போல... கையெல்லாம் கண்ட இடத்துக்கு வருது..."

"கண்ட எடத்துக்கு எல்லாம் வரலை... டீசண்டா தோள்மேலதான் நிக்குது... பொங்கலுக்கு அம்மணி வருதுன்னு சந்தோஷந்தான்..."

"ம்... ஏதோ பாவம்ன்னு வாறேன்னு சொன்னேன்.." என்றவள் அவன் மடியில் படுத்துக் கொண்டாள். அது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் மற்றவர்களின் பார்வைகள் அவர்களைத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் ராம்கிக்கு என்னமோ போல் இருந்தது. ஆனால் புவனா அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவும் இல்லை... கண்டுகொள்ளவும் இல்லை...

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கிளம்பினார்கள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

  1. சந்தமும் சங்கீதமுமான கதை..!

    பதிலளிநீக்கு
  2. இருவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கிளம்பினார்கள்.


    எங்களுக்கும் மனம் சந்தோஷமாக இருக்கின்றது!..

    பதிலளிநீக்கு
  3. ஹ!ஹ!!ஹா!!!மச்சான் வசமா வுளுந்துட்டாரு,எந்திரிப்பாரா?பாக்கலாம்!!!

    பதிலளிநீக்கு
  4. வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க துரை அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ.யோகராஜா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி