திங்கள், 30 செப்டம்பர், 2013

மனசின் பக்கம்: கொஞ்சம் பேசுவோம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் ஊதாக்கலரு அடிக்கடி கேட்கும் பாடலாக இருந்தாலும் மனதில் நிற்கும் மெலோடியாக பார்க்காதே பார்க்காதே ஆகிவிட்டது.  அலுவலகத்தில் 11 மணி நேரம் தொடர் பணி என்பதால் வேலை அலுப்புத் தெரியாமல் இருக்க இளையராசா பாடல்கள் கணிப்பொறியில் சேமித்து வைத்திருந்தாலும் ராசாவின் ராகங்களுக்கு இடையே சில புதிய பாடல்களும் அடிக்கடி கேட்கச் சொல்கின்றன அதில் இந்த பார்க்காதேயும் ஆனந்த யாழும் முக்கியப் பாடல்களாகிப் போய்விட்டன.



மத்தாப்பூ மற்றும் மூடர்கூடம் சென்ற வார விடுமுறையில் பார்த்தோம்... மூடர் கூடம் ஆஹா... ஓஹோ என்றெல்லாம் சொன்னார்கள். அந்தளவுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை... பார்க்கலாம் படங்கள் ரகம்தான்... என்னோட ரசனை அப்படின்னு நினைக்கிறேன்... மத்தாப்பூ தினந்தோறும் நாகராஜ் பல வருடங்களுக்குப் பிறகு பண்ணியிருக்கிறார். கதை போரடிக்காமல் போகிறது. நாயகி... சோகத்தை அதிகம் சுமந்து கொண்டே திரிவதுதான் சகிக்கலை.... மற்றபடி இரண்டு படங்களுமே ஒருமுறை பார்க்கலாம். இன்னும் 6 மெழுகுவர்த்திகள் பார்க்கவில்லை... ஷாமின் நடிப்பிற்காகவாவது பார்க்க வேண்டும்.

கிராமத்து நினைவுகள் எழுதும் சந்தோஷத்தைவிட இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் வெங்கட் நாகராஜ் அண்ணன் எனது உப்பு வண்டியைப் படித்துவிட்டு அவரது மனச்சுரங்கத்தில் இருந்து சந்தையில் ஏலம் விடுதல், கீரை வாங்குதல் என சந்தை ஞாபகங்களை எழுதியிருக்கிறார். எனது பதிவையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். அண்ணனுக்கு நன்றி.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா பாட்டில் பின்னாடி சுத்த வச்சி என்ற வரி வரும். ஒரிடத்தில் சிவகார்த்திகேயன் பின்புறமாக திரும்பி இடுப்பை வளைத்து ஆட்டுவார். அப்போது அந்த வரியைக் கவனிக்க... எப்படி பாடுகிறார் பாடகர் என்று... இது தற்செயலாக நடந்ததா இல்லை வேண்டுமென்றே பாடினார்களா என்று தெரியவில்லை... இருந்தாலும் சந்தடி சாக்குல சுத்தவக்கிறதை கொஞ்சம் அழுத்திட்டாருபோல... என்னய்யா பண்றது நல்லதைவிட இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் கண்ணுல காதுல விழக்கெண்ணெய் ஊத்தாம கிளியரா தெரியுது... கேட்குதுங்க.



நூறாண்டு சினிமா விழாவுல தமிழகத்தின் தாய்... திரையுலக விடிவெள்ளி நினைத்ததை சாதிச்சிட்டு சத்தமில்லாம உக்காந்திருக்கு... ரஜினி, கமல், விஜய் மட்டுமின்றி மூத்த கலைஞர்களையும் வருத்தப்பட வைத்துவிட்டு விழாவை நடத்தியிருக்கிறார். தமிழ் சினிமா உலகின் நடிகர் சங்க கடனை தான் தலைவராக இருந்தபோது அடைத்த விஜயகாந்தை படத் தொகுப்பில் கூட சரியாக் காட்டக்கூடாதுன்னு சொன்ன அம்மாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மேல எம்புட்டு கடுப்பு இருக்கும்ன்னு பார்த்துக்கங்க... இப்ப ஆளாளுக்கு கேவலப்படுத்தப்பட்டுட்டோம்ன்னு புலம்புறாங்க... புலம்பி என்ன ஆகப்போகுது... எல்லாம் அம்மா செயல்.

விஷால் இப்பல்லாம் அதிகமா அரட்டை அடிக்கிறான். என்ன சொன்னாலும் அதுக்கு சரியா பதில் வச்சிருக்கான். அவங்க ஆயா ஏன்டா தம்பி அக்காவை அம்மா அடிச்சிக்கிட்டே இருக்குதாமே... எதுக்குடா அதை அடிக்கிதுன்னு கேட்டிருக்காங்க... எங்க அம்மா சும்மா சும்மா உங்ககிட்ட அழுதுக்கிட்டே இருந்தா நீங்க கொஞ்சுவீங்களோ... எங்க அம்மாவை அடிச்சித்தானே வளப்பீங்க... அப்படித்தான் பாப்பா சேட்டை பண்ணினா எங்கம்மா அடிப்பாங்கன்னு சொல்லியிருக்கான். அதுக்கு அப்புறம் ஆயா கேள்வி கேப்பாகங்கிறீங்க... எல்லாத்துக்கும் நாங்க பதில் வச்சிருக்கோமில்ல....

ஆரம்பம் படத்தில் என்னை எல்லாப்பாடல்களும் கவர்ந்தாலும் இந்தப் பாடலில் இசையும் அருமையா வந்திருக்கு... யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்...


மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

கதை சொல்லும் நாளைய இயக்குநர்கள் - 2

நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது பதிவர்களான நாளைய திரைப்பட பாடலாசிரியர்களை வைத்து கதை சொல்லச் சொல்லலாம் என்று தோன்ற வைத்த பரிதிமுத்துராசன் அண்ணாச்சிக்கு நன்றி. எதுக்கு அண்ணனுக்கு நன்றின்னு கேக்குறீங்களா... இருங்க சொல்றேன்.... தொடர்ந்து எழுதலாம் என்று ஆரம்பித்த கதை சொல்லும் பதிவர்கள் பதிவு வேலைப்பளு மற்றும் புதுவீட்டுப் பணிக்காக சிக்கல்கள் களவாடிய பொழுதுகளில் எல்லாம் மறந்து போச்சு. அண்ணாச்சி நேற்று ஒரு பின்னூட்டம் இட்டு நமக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி... ஒரு தட்டு இல்லை ரெண்டு தட்டுத் தட்டி எழுப்பிவிட்டார். இதோ இங்கு சில பதிவர்கள் கதை சொல்கிறார்கள். இனி அவர்கள் பாணியில் தொடர்வோம்.

"வணக்கம் சார்..."

"சொல்லுங்க..."

"நான் ஒரு மரபுக்கவிஞன்... சுயநலவாதியில்லாத பொதுநலவாதி..."

"அதுக்கு.. நான் என்ன செய்யணும்?"

"இல்ல ஒரு படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்... நல்ல கதை இருக்கு சார்.... இது சொல்ல மறந்த கதை இல்ல சொல்ல நினைத்த கதை..."

"என்னோட கதையே கீழ விழ வச்சி பட்டி தொட்டியெல்லாம் பரவிக்கிடக்கு... பொக்கிஷமா வளர்த்த மக காதல் கீதம் பாடிட்டா..."

"விடுங்க சார்... இதெல்லாம் இப்ப எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே.. என்ன பிரபலங்கள் பிற பலங்களால ஜெயிச்சிடுறீங்க... சாதாரண மக்கள் தோத்துடுறாங்க... வெளிய தெரியிறதில்லை... சரி கதைக்கு வருவோம்.... அப்படியே எல்லார் மனசுலயும் சாரல் அடிக்கிற மாதிரி நவ்யா நாயரை உங்க ஜோடியாக்கி ஒரு படம் பண்ணிரலாம்...."

"ம்... கதையை சொல்லுங்க..."

"இதயத்துல சாரல் அடிக்கிற மாதிரி கதை சார்..."

"அதைத்தான் சொல்லுங்கன்னு சொல்றேன்..."

"ஓபனிங்க சீன்ல நீங்க..."

"என்னால தல தளபதி மாதிரியோ... சுள்ளான் விசில் மாதிரியோ பில்டப்பெல்லாம் கொடுக்கமுடியாது... கையில ஒரு பேக் போட்டுக்கிட்டு பேக்கு மாதிரி வரணுன்னா அழகா வருவேன்..."

"அதே... அதேதான்.... ஞாபகம் வருதே .... ஞாபகம் வருதே... அது மாதிரி ஒரு ஓபனிங்க் சாங்க்... அப்புறம் கல்லூரி போறீங்க... அங்க உங்க இதயத்துக்குள்ள நவ்யா சாரல் அடிக்க அரம்பிக்குது... அப்படியே நகர்ற கதையில..."

"இதுவரைக்கும் ஒண்ணுமே நகரலையே ஐயா... நீங்கதான் அங்க இருந்து இங்க நகர்ந்து இருக்கீங்க... எனக்குப் பொருத்தமான கதையா இது தெரியலை... வேணுமின்னா மிஷ்கின், அமீர், சீமானை டிரைப் பண்ணிப் பாருங்க..."

"நவ்யா வேண்டான்னா நஸ்ரியாவை போட்டுக்கலாம் சார்..."

"போதும் இனி காதலிக்கிற மாதிரி படம் பண்ண எண்ணம் இல்லை... சாரி... மரபுக் கவிஞரே..."

"இதயத்துல சாரல் அடிக்கும்ன்னு வந்தேன்... சரி வேற யார்கிட்டயாவது சாரல் அடிக்கிதான்னு பார்க்கிறேன்... சரி வாறேன் சார்...."

"நல்லது... என்னோட படத்துல உங்களுக்கு பாட்டெழுத வாய்ப்புத்தாறேன்... சந்தோஷந்தானே...."

"ரொம்ப சந்தோஷம்..."

***

"வாங்கம்மா... கவிதாயினி..."

"வணக்கம் சார்..."

"சொல்லுங்கம்மா... என்ன விசயமா வந்தீங்க... சட்டுன்னு சொல்லுங்க... ஒரு விழா... அதுக்குத்தான் ரெடியாயிக்கிட்டு இருக்கேன்... இப்பல்லாம் வேஷ்டி சட்டையில தான் போறது..."

"உங்களுக்காகவே ஒரு கதை வச்சிருக்கேன் சார்... நீங்க புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு தெரியும் அதான்... நல்ல கதை சார்..."

"ம்... டயமில்லை... வேகமா சொல்லுங்க..."

"வேகமா சொன்னா கதை புரியணும்... புரியிற மாதிரி சொல்லணுமின்னா வேகத்தை குறைக்கணும்... வேகத்தைக் குறைத்தா கதையோட்டம் தெரியாது... கதையோட்டம் தெரியணுமின்னா வேகமா சொல்லித்தான் ஆகணும்... நானும் சொல்லனும் நீங்களும் கேட்கணும்.. கேட்கிற நீங்க சொல்ற நான்... எல்லாம் எப்பவும்... எப்படியும்... எல்லாராலயும்... எங்கயும்..."

"அம்மா.... கவிதாயினி... ஸ்... அப்பா... என்ன சொல்ல வாறீங்க... முடியல..."

"இல்ல சார் அப்ப அப்ப விசு சார் மாதிரி எழுதிப் பார்ப்பேன்... அதை ட்ரை பண்ணினேன்..."

"அப்ப அவருக்கிட்டயே ட்ரை பண்ணுங்க... என்னை விட்டுடுங்க..."

"சார்... சார்... ப்ளீஸ் கதையை சொல்றேன் கேளுங்க..."

"சொல்லுங்க..."

"தூரிகை வீசுற மாதிரி... அப்படியே முத்துக்களைச் சிதறவிட்ட மாதிரி ஒரு கதை சார்...."

"நீங்க கடல்ராசா..."

"என்னது மறுபடியும் கடல் ராசாவா... ஒரு தடவை பட்டதே போதும்... அம்புட்டுப் பயலும் அந்தப் புள்ளைய பாக்கத்தான் வந்திருக்காங்கன்னு அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது... சரி.. வேற மாதிரி சொல்லுங்க..."

"சரி எப்பவும் போல ஊர் சுத்துற கதாபாத்திரம்... உங்களுக்கு ஜோடியா ஸ்ருதி இருந்தா நல்லா இருக்கும்..."

"ஏம்மா மூணுல ஸ்ருதி சேர்ந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே...  நான் மூணு முடிச்சுப் போட்டவ வேற கொலவெறியோட முடியப் புடிச்சு ஆஞ்சுபுட்டா மறுபடியும் அந்தப் புள்ளயா... குடும்பத்துல குழப்பம் வேண்டாம் தாயி..."

"இல்ல தலைவர் வேற மேடையில கமல் சாரை அண்ணன்னு சொன்னாருன்னு படிச்சேன்... அவருக்கு அண்ணன் பொண்ணு உங்களுக்கு கொழுந்தியாதானே சார்..."

"ஏம்மா கதை சொல்றேன்னு சொல்லிட்டு திரிவக்கிறே... இருக்கிற கொழுந்தியா போதுந்தாயி..."

"சரி விடுங்க... கதைக்கு வருவோம்....சார் நீங்க ஆட்டோ ஓட்டுறீங்க.. ஒருநாள் உங்க ஆட்டோவுல கதாநாயகி ஏறுறாங்க..."

"ம்.. கதாநாயகியா ஸ்ரேயா இருக்கட்டும்... எனக்கு நல்ல பிரண்ட் அவங்க..."

"ஹன்சிகாவை கேட்கலாம் சார்..."

"எதுக்கும்மா... தேவையில்லாம வாலண்டா போயி வண்டியில ஏறச்சொல்றே.... நல்லா இருப்பே... ஏதோ வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு... இப்ப படம் பண்ற ஐடியா இல்லை... நீ உன்னோட தூரிகையை சிதறாம எடுத்துக்கிட்டு விமல், சிவகார்த்திகேயன் இப்படி ஆளுங்களைப் பாரு.... நல்லா நடிக்கிற பயலுவ... கண்டிப்பா உங்க டீம் ஜெயிக்கும்..."

"சரி சார்... முடியாதுன்னு நாசூக்கா சொல்லிட்டீங்க... கடைசியா இரண்டு கேள்வி சார்... ஒண்ணு உங்க மனைவி வந்ததுக்கு அப்புறம் நிறைய நல்ல படங்கள். தேசிய விருது எல்லாம் வாங்கினாலும் எப்பவும் அண்ணன்... அண்ணன்னு அவரையே சொல்றீங்களே... கட்டின மனைவியை சொன்னா என்ன சார்.."

"ஏம்மா... ஏன்... நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு...."

"அப்புறம்...?"

"அம்மா தூரிகை... ப்ளீஸ் என்னோட குடும்பத்தை சிதறவிட்டுறாதேம்மா... மூணுல நொறுங்கி நிக்கிது... விழுகாம தாங்கிப் பிடிச்சிருக்கேன்... கொஞ்ச நாள் கழித்து வாங்க கண்டிப்பா உங்களுக்காக ஒரு படம் பண்றேன்..."

"சரி சார்.... சிவகார்த்திகேயனை வச்சிப் பண்றேன்... நீங்கதான் தயாரிப்பாளர்... " என்றபடி நகர்கிறார் கவிதாயினி.

"அதுசரி... சிவாவ சொன்ன ஒத்துக்குவேன்னு பாக்கிறீங்க... விசு சார் வசனம் எழுதுங்க... நான் கூட இப்ப வரப்போற படத்துல ஒரு பாட்டு விசு சார் மாதிரி டிரைப் பண்ணியிருக்கேன்... நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு... உங்க விசு வசனத்துக்காகவே அடுத்த தயாரிப்புல உங்களை வசனகர்த்தாவா ஆக்கிடலாம்..."

"ஆகட்டும் சார்..."

***

"என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"உங்ககிட்ட கதை சொல்லலாம்ன்னு..." 

"கதையா... இப்ப கேக்கிற மூடுல நான் இல்ல... எங்க அப்பாகிட்ட வேணுமின்னா..."

"அவருகிட்டயா... ஐய்யய்யோ டண்டணக்கா டணக்குணக்கான்னாருன்னா என்னோட எண்ணத்துல ஓவியமா இருக்கிற கதை இதுவரை சிதறாம இருக்கு... மௌனத்தைக் கலைச்சா சிதறி ஓடிரும்... அஞ்சே அஞ்சு நிமிடம் சார்..."

"சொல்லுங்க... ஹன்சிக்கு கிப்ட் வாங்கப் போகணும்..."

"அப்படி என்னதான் கிப்ட் கொடுப்பீங்க.... எப்ப பார்த்தாலும் கிப்ட் கிப்ட்டுன்னு... சரி... சரி... கொடுக்கிறதை கொடுத்தாத்தானே.... கிடக்கிறது கிடைக்கும்"

"என்ன என்னம்மா.... என்னய பார்த்தா எப்படி தெரியுது..? "

"கோபப்படாதீங்க... கதைப்படி நீங்க மன்மதன்...."

"கதையில மட்டுமில்ல... எப்பவுமே நான் மன்மதன்தான்..."

"தெரியுமே..."

"நாயகியோட பேரு ஐஸ்வர்யா... நாயகியா ஸ்ருதி இருந்தா..."

"இந்த ஐஸ் வேண்டாம்... நான் ஒரு சைஸ் ஆனாதே இந்தப் பேராலதான்... அப்புறம் இனி என்னோட நாயகி ஹன்சி மட்டும்தான் அவதான் நாயகியா இருக்கணும்... வேணுமின்னா செகண்ட் ஹீரோயினியா நயனைக் கேட்டுக்கலாம்... சரி கதைக்கு வாங்க..."

"கதைப்படி நீங்க விரல் வித்தை செய்யும்...."

"சர்க்கஸ்க்காரனா... சுள்ளான் பாடிக்கலக்குறான்... நான் ஆடிக்கலக்குவேன்... கமலுக்கு சலங்கை ஒலி மாதிரி எனக்கு கதை ரெடி பண்ணிக்கிட்டு வாங்க.... ஒவ்வொரு பாட்டுலயும் பின்னால பத்து நிமிசம் டண்டணக்கா அடிக்கு அலப்பறையா ஆட்டம் போடணும்..."

"டண்டணக்கா உங்க குடும்பக்குத்தா சார்.."

"என்னது?"

"இல்ல குடும்பச் சொத்தான்னு கேக்க வந்தேன்... டங்க் சிலிப்பாயிருச்சு... சரி  கதைக்குப் போவோம்... நீங்க நிறைய பொண்ணுங்களோட பழகுறீங்க... அப்ப ஒரு பெண்ணால சிக்கல்... அந்தச் சிக்கல்ல இருந்து எப்படி வெளிய வாறீங்கன்னு கதை சொல்றோம்..."

"ஒரு நேரம் ஒரு பொண்ணோடதான் பழகுவேன்... இதுதான் என்னோட பாலிசி... சரி கதைதானே... சிக்கலெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி... என்னைய தப்பானவனாவே பத்திரிக்கைக்காரங்க முன்னிறுத்துறாங்க... ஏன்னே தெரியலை... மனசுக்குப் பயந்து... கடவுள் என்ன சொல்றானோ அதுபடி வாழ்றவன்... சரி... எனக்கு நேரமாச்சு... ஹன்சி காத்திருப்பா... கோபமாயிட்டா வடக்க போயிடுவா..."

'நஸ்ரியான்னு ஒண்ணு வந்திருக்கே அதுக்கு ஏதாவது..."

"அடுத்தது அதுதான் நம்ம டார்க்கெட்.... ஒண்ணு செய்யுங்க... நம்ம படத்துக்கு நயன் வேண்டாம்... நஸ்ரியாவை கேளுங்க... எனக்கும் ஒரு நல்ல படம் பண்ணின மாதிரி இருக்கும்... அப்புறம்.."

"தெரியும்... முதல்ல ஹன்சியைப் பாருங்க... சிவகார்த்திகேயன் பிந்து பிந்துன்னு பின்னாடி போகம ஹன்ஸ்ன்னு முன்னாடிப் போகப் போறாரு... நயனுக்கு ஒரு தேவா மாதிரி... ஹன்ஸ்க்கு யாரோன்னு பத்திரிக்கைகாரங்களும் முகநூல் நண்பர்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க... முதல்ல வாழ்க்கை ஓவியத்தை கலையாமப் பாருங்க.. எதாவது ஒண்ணுல ஸ்டெடியா இருங்க... உங்கப்பா மாதிரி எல்லாத்துலயும் டண்டணக்கா போடாமா... உங்ககிட்ட பேசினதுல என்னோட எண்ண ஓவியம் கலஞ்சிபோச்சு... புதுமுகத்தை வைத்து பண்ணலாம்ன்னு முடிவுக்கு வந்திட்டேன்... பாக்கலாம்..."

"இருங்க.... இருங்க.... முகநூல்ல மௌனமா சிதறுற எல்லாம் நல்லாயிருக்கு... ஒரு தொகுப்பா எடுத்துக் கொடுங்க... உங்களுக்கு நேரமில்லைன்னா உங்க அண்ணன்கிட்ட சொல்லி எடுக்க சொல்லுங்க... அடுத்த படத்துல பஞ்ச் டயலாக் ஆக்கிடலாம்..."

"சரி... எங்கண்ணன்தானே... அவன் ஒரு சோம்பேறி... சொல்லிப் பார்க்கிறேன்... வாறேன் சார்..."

இங்கு கதை சொன்ன மூவரையும் யாரென்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். நண்பனிடமும் தங்கையிடமும் அனுமதி வாங்கியிருக்கிறேன்... திட்டுவதென்றால் மின்னஞ்சலிலோ அலைபேசியிலோ திட்டுங்கன்னு சொல்லியிருக்கேன்... கவிதாயினி எனது அக்காவிடம் மட்டும் சொல்லவில்லை.... எப்பவும் அக்கா தம்பி கட்சி... அதனால் திட்டமாட்டாங்க.... சரி... தொடரும் எண்ணம் இருந்தால் சில பதிவர்களோடு மற்றுமொரு சந்தர்ப்பத்தில் தொடரலாம்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 28 செப்டம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 17

முந்தைய பதிவுகளைப் படிக்க...



******
17. மீண்டும் கூடல்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள்.

இனி...

ராம்கி போறேன்னு சொன்னதும் படக்கென்று திரும்பியவள் "இப்ப மட்டும் எங்க அண்ணனுக்கிட்ட சொல்ல மாட்டாங்களா?" என்றாள்.

"இல்லைங்க... சும்மாவே பிரச்சினையாக் கிடக்கு... இதுல மேல மேல எதுக்கு பிரச்சினையின்னுதான்..."

"ஓ... என்ன பிரச்சினை..? யாரால பிரச்சினை..? என்னாலயா... இல்லையில்ல...  எங்கண்ணனை அடிச்சாய்ங்க... நீங்க திருப்பி அடிச்சீங்க... அதானே... அதுக்கும் எங்கூட பேசுறதுக்கும் என்ன பிரச்சினை..? அப்படின்னா அவகூட பேசினா மட்டும் பிரச்சினை இல்லையா?"

"அது எங்க கிளாஸ் பொண்ணு... அதனால..."

"அதனால... அப்ப அவகிட்ட பேசுவீங்க... எங்ககிட்ட பேசமாட்டீங்க... அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க..?"

"அப்படியெல்லாம் இல்லங்க... ரொம்ப கோபமா இருக்கீங்க... நான் கோபமா பேசினதுக்கு சாரிங்க..."

"உங்களுக்கு அடிபட்டிருக்குன்னு தெரிஞ்சதும் நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்... அழுகையோட பாக்க வந்தா தூக்கியெறிஞ்சு பேசுறீங்க... நான் என்னங்க பண்ணினேன்..." கண் கலங்கினாள்.

"அதான் சாரி சொல்லிட்டேன்ல.. கண்ணைத் துடச்சுக்கங்க..."

துப்பட்டாவால் கண்ணைத் துடைத்தபடி, "இப்ப அவ சொல்லித்தானே இங்க வந்தீங்க..?" அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள்.

"இப்ப எதுக்குங்க அவங்க மேல கோபப்படுறீங்க... அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை..."

"அவளுக்கு வக்காலத்து வாங்குறீங்க... என்னைய வருத்தப்பட வைக்கிறீங்க... சொல்லுங்க அவ என்ன சொன்னா..?"

"அவங்க உங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணினாங்க... என்னைத் திட்டின்னாங்க.... இதுதான் உண்மை... சரி... சரி... கோபம் எதுக்குங்க... சாரிங்க... எப்பவும் போல நாம பிரண்டா இருப்போம்... சரி.. நான் வாறேன்..."

"நான் உங்ககிட்ட பேசணும்..."

"இப்ப பேசிக்கிட்டுத்தானே இருக்கோம்..."

"என்ன ஜோக்கா? சாயந்தரம் வெயிட் பண்ணுங்க... சரியா?"

"இல்லங்க... சாயந்தரம் ஒரு வேலை இருக்கு... நாளைக்குப் பேசுவோம்... ஐயா வீட்ல நாளைக்குச் சந்திப்போம்..."

"என்ன அத்துவிட்டுப் போறீங்களா? சரி... நாளைக்கு கண்டிப்பா ஐயா வீட்டுக்கு வாறீங்க... கதை எதாவது சொன்னா நா கொல்லங்குடி காளியாயிடுவேன்.... பார்த்துக்கங்க..."

"இப்பவே அப்படித்தான் இருக்கீங்க... இனி மாற என்ன இருக்கு" என்றான் மெதுவாக.

"என்ன..? சத்தமா சொல்லுங்க..."

"ஒண்ணுமில்ல சரியின்னு சொன்னேன்.... வரவா?"

"என்ன சொன்னீங்கன்னு தெரியும்... காளியா மாரியான்னு நாளைக்குத் தெரியும்...."

"மாரியாவே இருந்தால் அழகா இருக்கும்.. காளியான்னா இருக்க அழகும் போயிரும்..."

"என்னது...?" என்றவள் அவனை முறைப்பது போல் பார்த்தாள்.

"ஆத்தாடி... இப்பவே மாறிடாதீங்க... நான் வாறேன்..."

"ம்... அந்தப் பயம் இருக்கட்டும்..."


"அக்கா... அம்மா எங்கே?"

"அங்கிட்டுத்தான் இருந்திச்சு... யாரு வீட்டுக்காவது பேசிக்கிட்டு இருக்கப் போயிருக்கும்... பொங்கல் வருதுல்ல... சேலை துணி எடுக்கிறதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கும்..."

"ம்... எனக்கு அண்ணங்கிட்ட சொல்லி ஜீன்ஸ் பேண்ட் வாங்கியாரச் சொல்லணும்... உனக்கு சுடிதார் வாங்கச் சொல்லுவோமா?"

"ஆமா... சுடிதார்தான் குறைச்சல்.... அடப்போடா..."

"ஏங்க்கா...... என்ன அலுத்துக்கிறே...?"

"பின்ன என்னடா.... பொங்கல் முடிஞ்சா என்னோட கலியாண வேலய ஆரம்பிச்சிடுவாங்கடா..."

"அண்ணன் வரட்டும்... எல்லாம் பேசிக்கலாம்... விடு... அம்மா டிரஸ் எடுக்கிற முடிவோட இருக்கா... இல்லையா?"

"எடுக்கணுமின்னு சொன்னுச்சு... அண்ணன் அனுப்பின காசு வச்சிருக்கும் போல... எனக்கு சேலையும் அதுக்கு சேலையும் எடுக்கிறேன்னு சொன்னுச்சு.... உனக்கு அண்ணன் எடுத்துக்கிட்டு வருமாம்..."

"ம்... அக்கா பொங்கலுக்கு பிரண்டெல்லாம் வரச்சொல்லனுக்கா... அம்மா திட்டுமோ..?"

"பசங்கன்னா திட்டாது... பொண்ணுங்கன்னா ஊரைக்கூட்டினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..."

"எல்லாரையும்தான் கூட்டியாரணும்..."

"தேவையில்லாத வேலை பாக்காதே... அப்புறம் அம்மா கொல்லங்குடி காளியா மாறினாலும் மாறிடும்... என்னோட கல்யாண விசயத்துல நீ எதிர்க்க ஆரம்பிச்சதும் உம்மேல ரொம்ப கோவமா வேற இருக்கு... எவளுகளையும் கூட்டிக்கிட்டு வந்திடாதே... சேகர் மாதிரி..."

"கொல்லங்குடி காளியா...?" கேட்டவன் மனதுக்குள் நாளைக்கு கதை சொன்னா நான் காளியா மாறிடுவேன்னு புவனா சொன்னது வந்து செல்ல சிரித்துக் கொண்டான்.

"என்னடா சிரிக்கிறே...?"

"இல்லக்கா... இன்னைக்கு காலேசுல ஒருத்தவங்க இதே வார்த்தைய சொன்னாங்க... அதான் இப்ப நீ சொன்னதும் சிரிப்பு வந்திருச்சு.... அம்மாவை சமாளிச்சிக்கலாம்.... ஆனா அவங்களை சமாளிக்க முடியாதுக்கா" 

"யார்டா அவ?"

"ஐய்யோ அக்கா... அவ இல்லை அவங்க... என்னோட புரபஸர்... ஒரு கொஸ்டின் கேட்டாங்க... யாரும் பதில்சொல்லலை... நாளைக்குச் சொல்லலைன்னா கொல்லங்குடி காளியா மாறிடுவேன்னு சொன்னாங்க..." ஒருவாறு சமாளித்து "இரு இந்தா வாறேன்..." என்றபடி கிளம்பியவன் மனசுக்குள் நாளை புவனா அப்படியென்ன முக்கிய விசயம்பேசப்போகிறாள் என்று நினைத்தபடி சேகரைத் தேடிப் போனான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி

கிராமத்தில் வாழ்ந்த அந்த நாட்களை அசைபோடுவது என்பது எத்தனை சுவையானது. கிராமத்து நினைவுகளை அவ்வப்போது அசைபோட்டுக் கொண்டே வந்தாலும் எதாவது ஒன்று இன்னும் எழுத வைத்துவிடுகிறது. அந்த வகையில் இன்று உப்பு வண்டி பற்றிய நினைவை கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்கலாம்.

படிக்கும் காலத்தில் உப்பு வண்டி, வைக்கோல் வண்டி என ஊருக்குள் வந்து செல்லும். உப்பு வாங்க சந்தைக்குப் போனால் சட்டை அணியாத தேகத்தோடு ஒரு கரிய மனிதர் விற்றுக் கொண்டிருப்பார். அரைப்படி, ஒருபடி அளவில் விப்பார். மூணு நான்கு படி வாங்கி வந்தால் போதும் ரெண்டு வாரத்துக்கு வரும். இப்போ கல் உப்புக்கூட பாக்கெட்டில் வந்துவிட்டது. இன்றைய குழந்தைகளுக்கு எல்லாமே பாக்கெட் அடைத்து விற்பதுதான் தெரியும். சந்தையில் கூட இப்போது உப்பு விற்பவர்களைக் காணோம்.

எங்க ஊருக்கு மாதம் ஒருமுறை ஒரு உப்பு வண்டி வரும். கேணித்தட்டு, கூட்டு வண்டி, மொட்டை வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளில் கேணித்தட்டு பந்தயங்களில் பயன்படுத்தப்படும். கூட்டு வண்டி எங்காவது குடும்பமாக வெளியில் செல்லும் போது பயன்படுத்துவார்கள். பள்ளியில் படிக்கும் போது கண்டதேவி தேரோட்டம் காணச் சென்றால் தூரத்து ஊர்களில் இருந்து கூட்டு வண்டிகளில் வந்திருப்பார்கள். எங்க ஊரில் கூட கூட்டு வண்டிகள் அதிகம் இருந்தன. எல்லாருடைய வீட்டிலும் காளை மாடுகள் இருக்கும். உழவுக்கும் குடும்பத்துடன் வெளியில் சென்று வரவும் பயன்படுத்துவார்கள். டிராக்டர் வைத்து உழ ஆரம்பித்ததும் மாடுகள் காணாமல் போய்விட்டன. இப்பவும் சிலர் பந்தயமாடுகளை இரண்டு, மூன்று லட்சங்களுக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள்.

மூடைகள் ஏற்ற, பொருட்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட வண்டிதான் மொட்டை வண்டி. இதில் இரண்டு பக்கமும் முளைக்குச்சிகளை ஊன்றுவதற்கான ஓட்டை இருக்கும் அதில் முளைக்குச்சிகளை அடித்து வைத்திருப்பார்கள். மணல் எல்லாம் ஏற்ற வேண்டும் என்றால் இருபக்கமும் அதற்கென தயார் செய்து வைத்திருக்கும் பலகைகளை வைத்துக் கட்டிவிடுவார்கள். முன்பக்கமும் பலகையால் அடைத்துவிடுவார்கள். இந்த உப்பு வண்டியின் மேலே குடிசை போல் அமைத்து தார்ப்பாய் இட்டிருப்பார்கள். மழையின் நனையாமல் இருக்கத்தான். உள்ளே உப்பு மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு மூட்டையை மட்டும் அவிழ்த்து வைத்திருப்பார்கள். 

உப்பு வண்டி இழுத்து வரும் மாடுகள் பெரிய மாடுகளாக இருக்கும். பெரும்பாலும் காங்கேயம் மாடுகளாகத்தான் இருக்கும். கொம்பை நன்றாக சீய்த்து எண்ணெய் தேய்த்து வழுவழுன்னு வைச்சிருப்பாங்க. மூக்கணாங்கயிறு சிவப்பு வண்ணத்தில் பெரியதாக இருக்கும். கழுத்தில் பெரிய மணி கட்டியிருப்பார்கள். மாடுகள் பாரத்தை இழுத்துக் கொண்டு மெதுவாக நடந்து வரும் போது அதன் தலையாட்டலுக்குத் தகுந்தவாறு கழுத்துமணி சப்தம் எழுப்பும். வண்டியின் கீழே சக்கரங்களுக்கு இடையே அவர்களுக்கான உடைகள், சாப்பாடு, மாடுகளுக்கு வைக்கோல் எல்லாம் வைத்திருப்பார்கள்.

உப்பு வண்டியில் இரண்டு பேர் வருவார்கள். பெரும்பாலும் சட்டை அணியாமல் தோளில் துண்டு மட்டும் போட்டிருப்பார்கள். சந்தையில் விற்பதைவிட குறைத்துக் கொடுப்பார்கள். காசுக்கு மட்டும்தான் என்று இல்லை. புளி, அரிசி, நெல் என எல்லாம் வாங்கிக் கொண்டு கொடுப்பார்கள். கடனாகவும் கொடுப்பார்கள். ஆத்தா, அக்கா, ஐயா என முறை வைத்துப் பேசுவார்கள். அடிக்கடி வருவதால் ஊருக்குள் எல்லாருக்கும் உறவாகிப் போனார்கள். நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வருவார்கள். நெருங்கிப் பழகினால் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்வார்கள். போகும் ஊரில் நல்ல மாப்பிள்ளைகளோ பெண்ணோ இருந்தால் நல்ல குடும்பம் எனக்கு நல்லாத் தெரியும் என்று சொல்லி கட்டச் சொல்வார்கள்.

காலை நேரங்களில் வந்தால் நீச்சத்தண்ணி குடுங்காத்தா... அதுல கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் போட்டு கரைச்சுக் கொடுதாயின்னு சொல்லி வாங்கிக் குடிப்பார்கள். மாலை நேரத்தில் வந்தால் விற்றுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்றால் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் வண்டியை அவிழ்த்து நுகத்தடியிலோ, வண்டி சக்கரத்திலோ மாட்டைக் கட்டி வைக்கோல் அள்ளிப் போட்டு விட்டு சாப்பாடு கையில் இருந்தால் சாப்பிட்டுவிட்டுப் படுப்பார்கள். இல்லையென்றால் யார் வீட்டிலாவது சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள்.

கொண்டு வந்த மூடைகள் எல்லாம் விற்றுவிட்டால் வண்டியில் சொந்த ஊரை நோக்கி கிளம்புவார்கள். ஊருக்குச் திரும்பும் போது வண்டியை பூட்டி விட்டு வண்டியில் ஏறி படுத்தால் மாடு அவர்களை அழகாக வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்திடும் என்பார்கள்.  தென்றல் வீசும் மாலை நேரங்களில் 'உப்பு... உப்பு...' என்று கூவியபடி வந்து திரும்பும் உப்பு வண்டிகளெல்லாம் இப்போது வருவதில்லை. சில நாட்களில் சைக்கிளில் மூட்டையை வைத்துக் கொண்டு உப்பு விற்க வரும் அந்த சைக்கிள்காரரையும் இப்போது காணவில்லை.

இபோ உப்புவண்டி பற்றி சொன்னால் உப்பு வண்டியா அப்படின்னா என்னன்னு பிள்ளைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உப்பு மூட்டை தூக்குறதுன்னா கூட என்னன்னே தெரியலை.  அத்தளிப் பித்தளின்னு சொன்னா பிங்கி பிங்கி பாங்கின்னு பாடுறாங்க... ம்... உப்பு வண்டிகள் மட்டுமல்ல மாட்டு வண்டிகள் கூட இப்போது மறைந்து விட்டன என்பது வருத்தமான விஷயம்தான்.

மீண்டும் ஒரு கிராமத்து நினைவுகளோடு வருவோம்...
-'பரிவை' சே.குமார்.

வீடியோ : விஜயகாந்த் பாடல்கள்

ரஜினி, கமல் இருவரும் கைக்குள் வைத்திருந்த தமிழ் சினிமாவிற்குள் மோகன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெள்ளி விழா நாயகனாக திகழ்ந்தார் என்றால் எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் கருப்பான ஒருவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரே... அருமையான பாடல்கள், சண்டைகள் என தன்னை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டினார். அவரின் பாடல்கள் சில இன்றைய வீடியோப் பகிர்வில்....


படம் : அகல் விளக்கு
பாடல் : ஏதோ நினைவுகள்...



படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் : பூவை எடுத்து...




படம் : நீதியின் மறுபக்கம்
பாடல் : மாலைக் கருக்கலில்...



படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் : சின்ன மணிக்குயிலே...




படம் : சிறையில் பூத்த சின்ன மலர்
பாடல் : வாசக் கருவேப்பில்லையே...




படம் : ஆட்டோ ராஜா
பாடல் : சங்கத்தில் பாடாத கவிதை...




படம் : தெற்கத்திக் கள்ளன்
பாடல் : ராதா அழைக்கிறாள்...



பாடல்களை ரசித்தீர்களா? 

மீண்டும் மற்றுமொரு இனிய பாடல் தொகுப்பில் தொடருவோம்....

-'பரிவை' சே.குமார்.

புதன், 25 செப்டம்பர், 2013

புரிதல் இருந்தால்...

ணவன் மனைவிக்குள் புரிதல் என்பது இருந்தால் அவர்களின் வாழ்க்கை கடைசி வரைக்கும் இனிமையானதாக இருக்கும். அதே நேரத்தில் புரிதல் இல்லாத வாழ்க்கையாக அமைந்து விட்டால் வாழ்க்கை என்பது வாழப்பிடிக்காமல் போய்விடும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

கணவனோ மனைவியோ தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக்கவும் செய்தால் போதும் வாழ்க்கை த் தேர் சந்தோஷமாக நகரும். அதற்காக எதைத் தொட்டாலும் நான் தட்டிக்கேப்பேன் என்று  சொன்னால் வாழ்க்கையையும் தட்டிவிட்டுட்டுப் போக வேண்டியதுதான். 

சென்ற வாரம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அறையில் இருந்தோம். அப்போது ஒரு அண்ணனுக்கு ஊரில் இருந்து போன்... அவரது மனைவிதான் அழைத்தார். அண்ணனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டாவது மகளின் திருமணத்திற்காக போய்விட்டு சென்ற மாதக் கடைசியில்தான் மீண்டும் இங்கு வந்தார். எப்பவும் அவரது மனைவியுடன் பேச ஆரம்பித்தால் சந்தோஷமாகப் பேசுவார். இங்க பாரு கடலை போட ஆரம்பிச்சிட்டார் என்று அறையில் சிரிப்பார்கள். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் ஒரு அந்நியோன்யம் இருக்கும். எப்பவும் போல்தான் போனை எடுத்தவர் வேகமாக வெளியில் சென்று பேசினார்.

அவர் வெளியில் சத்தமாகப் பேசியது கேட்கவும் வெளியில் சென்று பார்த்தால் யாருடனோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.  பொண்ணு கொடுத்த இடத்துல எதுவும் எதிர்பார்க்கிறார்கள் போலன்னு நெனச்சுக்கிட்டோம். ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்து அமர்ந்தவர் அவராகவே மெதுவாக ஆரம்பித்தார். இவரது மனைவி வீட்டில் இட்லி அவிழ்த்து விற்பார்கள் போல, அங்க வந்து எதோ ஒரு தீப்பெட்டி இவர் ஊருக்கு போயிருந்த போது வேறு பெண்ணுடன் இருந்தார் என்று பத்த வைத்துவிட்டு போயிருக்கிறது.

இவரைப் பற்றி நன்கு புரிந்து வைத்த மனைவி என்ன செய்திருக்க வேண்டும். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்து இருக்கவேண்டும். அதைவிடுத்து இவருக்கு போனடித்து அவர்கள் சொல்வது உண்மைதான் என்று வாதிட்டிருக்கிறார். இவரும் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணி, தெய்வங்கள் மீது சத்தியம் பண்ணி புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார். இத்தனை வருசமாகப் புரிதலுடன் வாழ்க்கை நடத்திய மனைவி இந்த ஒரு விசயத்தில் தான் சொல்வதே சரியென்று சொல்லி சண்டைபிடிக்க, இவர் இனி உன்னுடன் பேசமாட்டேன்... எப்போ இது உண்மையில்லைன்னு தெரிஞ்சு வர்றியோ அன்னைக்குப் பேசுறேன்னு சொல்லி போனை வைத்துவிட்டு மாமியாருக்குப் போன் பண்ணி சத்தம் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.

இங்கே இவரைப் பற்றி, சாதாரண கிளினிங் கம்பெனியில் இரவு வேலை பார்க்கிறார். அவர்களுக்கு என இருக்கும் கேம்பில் தங்காமல் எங்கள் அறையில் தங்கிக் கொண்டு பகலில் சாப்பாடு தயார் பண்ணித் தருவார். மேலும் காலையில் இருந்து மாலைக்குள் மூன்று வீட்டில் சமையல் வேலை பார்க்கிறார். ஒரு இடத்தில் வாரம் ஒருமுறை கிளினீங் பண்ணுகிறார். தூக்கம் என்பது அவருக்கு வேலை செய்யுமிடத்தில் இரண்டு மூன்று மணி நேரம், மதியம் ஒரு இரண்டு மணி நேரம் அவ்வளவுதான். கஷ்டப்பட்டு இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்துவிட்டார். பையனை இஞ்சினியரிங்க் படிக்க வைக்கிறார். இன்னும் ஒரு பொண்ணு இருக்கு. இவ்வளவு கஷ்டம் யாருக்காகப்படுகிறார்? ஊரில் ஒரு ஓட்டலை வைத்துக் கொண்டு இருக்கத் தெரியாமலா இருபது வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுகிறார். அவருக்குத் தேவையென்றால் இங்கு கிடைக்காதா என்ன ஊரில் போய்தான் தவறு செய்ய வேண்டுமா? எதுவாகயிருந்தாலும் நன்கு யோசித்து நம்மவர் செய்திருப்பாரா என்று யோசித்து கேட்கிறவிதமாக கேட்டிருக்கலாம். இங்கே பெண்புத்தி பின்புத்தியாகிவிட்டது.

எங்கள் அறையில் தண்ணி அடிக்க அனுமதியில்லை என்பதால் தண்ணியடித்த அவரை தடுத்து அடிக்கவிடாமல் வைத்திருந்தோம். அன்று சண்டை போட்டதும் எனக்கு மனசு சரியில்லை இன்று ஒருநாள் கிச்சனில் வைத்து அடிச்சிக்கிறேன்னு சொன்னார். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. வாங்கி வந்து அடித்துவிட்டுத்தான் படுத்தார். இப்போ மனைவி போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. விட்டுப் பிடிப்போம் என்கிறார்... விரைவில் சரியாகும்... இருந்தும் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஆத்மா இங்கே காயப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான விசயந்தானே? 

கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருந்தால் வாழும் காலம் வரை ஒன்றாக வாழ்ந்து இறப்பிலும் ஒருவர் பிரிவை ஒருவர் தாங்காமல் இறப்பார்கள் என்பதற்கு பிரபலத்தை உதாரணமாக சொல்லணும் என்றால் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியை சொல்லலாம். இதே பிரபலமில்லதா ஜோடி என்றால் எங்க சின்னையாவை சொல்லலாம். அவரும் அப்பத்தாவும் அப்படி ஒரு அந்நியோன்யம்.. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ரொம்ப புரிதல் இருந்ததால்தான் பதினோரு குழந்தைகளைப் பெற்றார்கள் போல. எங்கு சென்றாலும் இருவரும்தான் செல்வார்கள். சண்டைக்குப் போனாலும் கூட... இருவரும் சண்டைக்கு கிளம்பிட்டால் நாங்க ஐயாவும் அப்பத்தாவும் முகூர்த்தம் சொல்லக் கிளம்பிட்டாங்கன்னு சொல்லிச் சிரிப்போம்.

இருவரும் இரவில் சேர்ந்து தண்ணியடிப்பார்கள் என்று சொல்வார்கள்.  நான் பார்த்தது இல்லை.மறைந்த அந்த பெரியவர்களைத் தப்பாகச் சொல்ல மனமில்லை. ஆனால் அப்பத்தா இறந்ததும் ஐயாவின் மூளை எல்லாவற்றையும் மறந்துவிட்டது. எதோ வாழ்க்கையை ஓட்டினார் என்பதைவிட நடைபிணமானார் என்பதே உண்மை... எந்த நல்லது கெட்டதுக்கும் போவதில்லை... சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவதில்லை... நடந்தே செல்ல ஆரம்பித்தார்... நடந்து போறவரை நம்ம வண்டியில் ஏற்றினால் ஏறும் போது 'யாரு சேது மகந்தானே... எம் பேராண்டியில்ல' என்று ஏறுவார். இறங்கும் போது 'ஆமா நீங்க யாரு... இந்தக் கிழவனை கூட்டியாந்ததுக்கு நன்றி தம்பி' அப்படின்னு சொல்லுவார். எல்லாம் மறந்து வாழ்ந்தவர் அப்பத்தா நினைவில் விரைவிலேயே அப்பத்தாவிடமே போய்விட்டார்.

நமக்கான வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. திருமண  வாழ்க்கையை நல்லதாகவோ... கெட்டதாகவோ மாற்றுவது இரு மனங்கள்தான். அந்த மனசுகளுக்குள் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை கடைசி வரை சந்தோஷத் தேரில் பவனி வரும். எதற்காகவும் யாருக்காவும் உங்கள் துணையை விட்டுக் கொடுக்காதீர்கள். சரியோ தவறோ எதுவாக இருந்தாலும் அதை சொல்லும்விதமாக சொல்லி வாழ்க்கையை வாழக் கத்துக் கொள்ளுங்கள்... வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

மீண்டும் மற்றுமொரு தலைப்பில் பேசுவோம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 16

முந்தைய பதிவுகளைப் படிக்க...

           பகுதி-1        பகுதி-2        பகுதி-3       பகுதி-4        பகுதி-5     
           பகுதி-6        பகுதி-7        பகுதி-8       பகுதி-9       பகுதி-10   
           பகுதி-11      பகுதி-12      பகுதி-13    பகுதி-14      பகுதி-15
******
16. மீண்டும் ஊடல்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவை கூட்டிவந்து சமாளித்து விடுகிறான்.

இனி...


புவனா அவனை நோக்கி வரவும் "சரிங்க... நீங்க போங்க..." என்று மல்லிகாவிடம் சொன்னான்.

"ஏங்க... பெர்சனலா எதுவும் பேசப்போறீங்களா... நான் டிஸ்டர்ப்பா இருக்கேனா?" திருப்பிக் கேட்டாள் மல்லிகா.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அவங்களும் பிரண்ட்தான்... இருங்க..." என்று அவளிடம் சொல்லும் போதே புவனா அருகில் வந்திருந்தாள். மல்லிகாவைப் பார்த்து ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துவிட்டு ராம்கியை ஏறிட்டாள்.

அவனது தலையில் இருந்த கட்டைப் பார்த்தவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். 

"என்னங்க..."

"ம்... அடி பலமா பட்டுடுச்சா?" தலையை நிமிராமல் கேட்டாள்.

"அதெல்லாம் இல்ல... லேசாத்தான்.. உங்க அண்ணனுக்குத்தான் கத்தி நல்லாபட்டிருச்சு..."

"அவன் உங்களுக்குத்தான் நல்ல அடின்னு வருத்தப்பட்டான்... வலி இருக்கா?" தொட்டுப் பார்க்க துடித்த கையை அடக்கிக் கொண்டாள்.

"இல்லங்க... இப்போ பரவாயில்லை..."

"சஸ்பெண்ட் அது இதுன்னு... தேவையில்லாம உங்க பேர் கெட்டுப் போச்சு... இனி எங்கண்ணனை அடிக்க வந்தவங்க உங்களையும் சீண்டிக்கிட்டே இருப்பாங்க... அதான் எனக்குப் பயமா இருக்கு..." சொல்லும் போதே கண் கலங்கியது.

"அட அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க... எதுங்குங்க கண் கலங்குறீங்க... யாராவது பார்த்தா தப்பாத் தெரியும்... சும்மாவே அங்க பேசக்கூடாது... இங்க பேசக்கூடாதுன்னு உங்க அண்ணன் சொல்லியிருக்காரு... எதுக்குங்க வம்பு... நான் நல்லாயிருக்கேன்... எந்தப் பிரச்சினையும் இல்லங்க..."

"நான் வருத்தப்பட்டுக் கேட்கிறது உங்களுக்கு தப்பாத் தெரியுதுல்ல... பரவாயில்ல... நேத்துல இருந்து தவிச்சுப் போயி வந்திருக்கேன்... அன்பா பேசணுமின்னு தெரியலையில உங்களுக்கு... எங்க அண்ணன் என்னங்க பண்ணிடுவான்... சும்மா அவன் சொன்னான்... அவன் சொன்னான்னு பூச்சாண்டி காட்டுறீங்க... எங்கூட பேசத் தைரியம் இருந்தா எவனுக்குப் பயப்படணும்... உங்களுக்கு புதுசா பிரண்ட்ஸ் வந்ததும் எங்கூட பேசக்கூடப் பிடிக்கலை... நான் வாறேன்..."

கண்களைத் துடைத்தபடி திரும்பிச் சென்றவளை "புவனா.. ப்ளீஸ்.. நில்லுங்க..." என்ற ராம்கியின் கத்தல் கட்டுப்படுத்தவில்லை.

"ம்... எதுக்கெடுத்தாலும் கோபம்...சரி வாங்க..." என்று மல்லிகாவுடன் நடந்தான்.

"நம்ம மேல யார் அதிகம் பாசம் வச்சிருக்காங்களோ... அவங்க கோபமும் படுவாங்க ராம்கி..."

"ம்... சின்னப்பிள்ளை மாதிரி..."

"உங்களை அந்தளவுக்கு நேசிக்கிறாங்க போல..."

"நீங்க வேற... பிரண்ட்ஸ்தாங்க... நேசம் அது இதுன்னு சொல்லி புதுக்கதைய ஆரம்பிச்சு வச்சிடாதீங்க..."

"நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா லேடீஸ் ரூமுக்குள்ள புவனா குரூப் இருந்தாலே உங்க பேச்சுத்தான்..." என்று சிரித்தாள்.

"அதுக்காக...  இப்ப உங்க கூட பேசிக்கிட்டு வாறேன்... உடனே உங்களையும் என்னையும் இணைச்சு சொல்லிடுறதா? பிரண்ட்ஷிப் வேற காதல் வேறங்க... எனக்கு இன்னும் யார் மேலயும் காதல் வரலைங்க..."

"இல்லங்க... காலேசுக்குள்ள ஒரு பொண்ணும் பையனும் பேசினாலே அதை காதலாத்தான் பாப்பாங்க... நேத்து உங்களுக்காக கையெழுத்து வாங்கினப்போ... நம்ம பச்சமுத்து என்ன லைன் போடுறியா.... வாழ்த்துக்கள்ன்னு சொல்றான்... எனக்கு உங்க மேல அன்பிருந்தா டைரக்டா சொல்லப் போறேன்... இதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கைத் தொடணும்... சொல்லுங்க..."

"ஆமாங்க... புவனாகூட நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு... ஆனா அவங்க அண்ணனுக்காக அவங்ககிட்ட பேசுறதைக்கூட கொறச்சுக்க வேண்டியிருக்கு... பாவம் ரொம்ப வருத்தப்பட்டுட்டாங்க..."

"அவ உங்களை லவ் பண்றா ராம்கி..."

"என்னங்க நீங்க திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு..."

"உண்மை... உங்க மேல எந்த அளவுக்கு காதல் இருந்தா ஒரு பொண்ணு பக்கத்துல இருக்காளேன்னு கூட பாக்காம கண் கலங்கியிருப்பா... ஏதோ பேச வந்தவ என்னையப் பார்த்ததும் பேசலை... பாவங்க அவ..."

"என்னங்க நீங்க... என்னென்னமோ பேசிக்கிட்டு... வாங்க கிளாஸ்க்குப் போவோம்..."

"நான் கிளாஸ்க்குப் போறேன்... நீங்க அவளைப் பார்த்துட்டு வாங்க... காதலியா பிரண்டான்னு அப்புறம் முடிவு பண்ணுங்க... இப்ப உங்கமேல அன்பா இருக்கிற ஒரு பொண்ணா அவளைப் பார்த்து பேசிட்டு வாங்க... அவங்க அண்ணனுக்காக அவளை கஷ்டப்படுத்தாதீங்க...ப்ளீஸ் எனக்காக... அவகிட்ட பேசிட்டு வாங்க..."

"ம்.. சரிங்க... ஆனா எல்லாரும் கிளாஸ்க்குப் பொயிட்டாங்களே... அவங்களும் போயிருப்பாங்களே..."

"இல்ல அவங்களுக்கு இந்த பிரியேடு இல்லை போல... லேடீஸ் ரூம்தான் போனாங்க... போய்ப் பாருங்க... வைரவண்ணன் பூச்சாண்டியெல்லாம் விட்டுத் தள்ளுங்க... இப்ப காலேசுல நீங்களும் ஒரு ரவுடிதான்..."

"என்னங்க சந்தடி சாக்குல என்னையும் ரவுடின்னுட்டிங்க... நம்ம ஒரே கிளாஸ்... பேசிச் சிரிச்சாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க... ஆனா வேற பொண்ணுக்கிட்ட பேசினா கண்ணு காது மூக்கு வச்சி பெரிசாக்கிடுறாங்க..."

"அதெல்லாம் அப்படித்தான்... சும்மா உங்களை கேலி பண்ணினேன்... போங்க... போய் பேசுங்க..."

"சரி... போறேன்..."

"டீ..  உன்னோட ஆளு உன்னையப் பார்க்க வர்றாரு..."

"சும்மா இருடி.. அங்கிட்டு திரும்பாதே... புரிஞ்சிக்காத ஜென்மம்..."

"எதுக்குடி கோபப்படுறே... பாவம் உங்கண்ணனுக்குப் பயந்து சொல்றாரு... அது போக உனக்காகத்தானே உங்கண்ணனை காப்பாத்தப் போயி அடிபட்டு வந்திருக்காரு... சும்மா அலையவிடாதே..."

"அலையவிட்டாத்தான் ஒரு மனசோட தவிப்புத் தெரியும்..."

"அது சரி... இப்புடி தவிக்க விட்டியனா இப்ப இங்க வர உத்தரவு கொடுத்த மகாராணி தட்டிக்கிட்டுப் போயிடுவா..."

"ம்... போவா போவா... விட்டுடுவேனா... நான் வைரவன் தங்கச்சியாக்கும்..."

"புவனா...."

அவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்...

"புவனா ப்ளீஸ்... "

"என்னவாம்டி... என்னனு கேட்டுட்டு போகச் சொல்லுங்கடி... யாராவது பார்த்தா எங்கண்ணனுக்கிட்ட சொல்லிடுவாங்க... அவன் மறுபடியும் கத்தியை தூக்கிருவான்... இங்க எதுக்கு வந்திருக்காராம்..?"

"ப்ளீஸ் புவனா.... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."

"......."

"சரி... உங்க கோபம் எப்ப தீருதோ... அப்ப வந்து பேசுங்க... நான் வாறேன்..."

அவன் போறேன் என்று சொன்னதும் படக்கென்று திரும்பினாள்.

(சனிக்கிழமை தொடரும்)

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

குடும்ப விளக்கு

காலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.

"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..?"

"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா..."

"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது..."

"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளை..."

"ஆமாண்டி... நா ஆம்பிள்ளாதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்..."

"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... "

"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு."

"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். "

"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே" என்றபடி அவளை ஒரு அறை அறைந்துவிட்டு "எவனாவது வாங்கிக் கொடுப்பாண்டி... அடிச்சிட்டு வந்து உனக்கு கச்சேரிய வச்சுக்கிறேன்..." என்றபடி கிளம்பினான்.

'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல பொயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கனும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு பொட்டப் புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்னு தெரியல... எல்லாம் அந்த மாரி செயல்...' மனசுக்குள் புழுங்கியபடி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு." என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.

"இந்தா வாறேம்பா..." என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.

"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...?"

"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் புரவும் தொடர்கதைதான்... "

போன் மணியடிக்க... "மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க..."

"அலோ..."

"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்க."

"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..."

"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..?"

"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ?"

"என்னம்மா... வந்து என்ன பண்றது..? இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா?"

"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல..."

"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..? உண்மைய சொல்லுங்க..."

"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல..."

"கல்யாணமா?" வெறுமையாக சிரித்தவள், "அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''

"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...?"

"அம்மா... எங்களுக்கு நல்ல தாயை கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டிருந்தாலு, பரவாயில்லை... மூணு பேரையும் பொம்பளைப் பிள்ளையா வேற படைச்சுட்டான். அண்ணனோ தம்பியோ இருந்த அவங்க பாப்பாங்க... இப்ப அவளுகளுக்கு என்ன விட்டா செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்."

"ம்... நீ சொன்ன கேட்கவா போறே..."

"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும்.நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல."

"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளளு"

"பணம் வந்ததும் முதல்ல ஒரு செல்போன் வாங்கிக்க."

"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு."

"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புறம் பேசுறேன்..."

"சரிம்மா".

கடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா... உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா... தினம் தினம் ஒருத்தனுக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல் வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான்... எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா... என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள் வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோம்... என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே. அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... ' வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா...? நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது... இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிரு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்குது." என்று தோழி ஒருத்தி ஆறுதல் சொல்லியபடி அவளை அழைக்க, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

(2010 - ல் சிறுகதைகள் தளத்தில் கிறுக்கியது சில மாற்றங்களுடன் மீண்டும்...)

-'பரிவை' சே.குமார்

சனி, 21 செப்டம்பர், 2013

மனைவி


நீயும் நானும்
காதலித்த தருணங்களில்
வாய் ஓயாது
பேசியபடி நீயும்...
ரசித்தபடி நானும்...
சாலையில் வருவோர்
பற்றிய கவலையின்றி
செல்வோமே..!

மழையில் நனைந்து
நான் வரும்
வேளைகளில்
துப்பட்டா துறந்து
துடைப்பாயே..!

உனக்குப்
பிடிக்காத போதும்
எனக்காக
நண்பன் வீட்டில்
மீன் சமைத்தாயே..!

எல்லாம் எனக்கு
மீண்டும் வேண்டும்..!

வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?

(2010 நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கியது...)
-'பரிவை' சே.குமார்

தொடர்கதை : கலையாத கனவுகள் - 15

முந்தைய பதிவுகளைப் படிக்க...

           பகுதி-1        பகுதி-2        பகுதி-3       பகுதி-4        பகுதி-5     
           பகுதி-6        பகுதி-7        பகுதி-8       பகுதி-9       பகுதி-10   
           பகுதி-11      பகுதி-12      பகுதி-13    பகுதி-14
******
15. வாடகை அம்மா

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவுக்கு ஏற்பாடு செய்கிறான்.


இனி...


காலையில் அவசர அவசரமாகக் கிளம்பினான். இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருந்துட்டு நாளைக்குப் போடா... என்ன அர்ஜெண்டுன்னு கேக்குறேன்னு கேட்ட அம்மாவிடம் இன்னைக்கு முக்கியமான பரிட்சை இருக்கு... இப்போ வலி இல்லை... சாயந்தரம் வரும்போது ஆஸ்பத்ரி பொயிட்டு வாறேன்... வீட்ல இருந்தா பரிட்சை போயிடும்... என்றபடி சைக்கிளை எடுத்தான்.

கல்லூரிக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு வைரவனுக்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் வைரவன் வந்து சேர, அவனது பைக்கின் பின்னால் இருந்து ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்கினாள்.

"ராம்கி இது சரசக்கா... இவங்கதான் இன்னைக்கு உங்க அம்மாவா நடிக்கப் போறாங்க... நான் விவரம் சொல்லியிருக்கேன்... நீயும் எல்லாம் சொல்லிக் கூட்டிப்போ... அக்கா கொஞ்சம் தத்ரூபமா நடிக்கும்.. அப்பத்தான் பிரின்ஸிக்கு சந்தேகம் வராது... அடிச்சாலும் வாங்கிக்க... பாத்து முடிச்சிட்டு இங்க கூட்டிக்கிட்டு வா... நான் கூட்டிக்கிட்டுப் போறேன்... சரியா?"

"சரிண்ணே..." என்றபடி சரசக்காவைப் பார்த்தான். ஏறக்குறைய அவனது அம்மாவை ஒத்திருக்கும் சாயல்... நல்ல வளர்த்தி... தலையில் ஆங்காங்கே வெள்ளை முடி... ஒற்றை நாடி தேகம்... ஒரு பாடாவதி கண்டாங்கிச் சேலை... அதற்கு சற்றும் ஒத்து வராத ஜாக்கெட், பொட்டில்லாத நெற்றி... கழுத்தில் தாலி... செங்கற்காலவாய்க்கு செம்மண் மிதித்து சிவப்பேறிய கால்கள்... மிஞ்சி இல்லாத விரல்... அவளைப் பார்வையால் எடைபோட்டு அவள் முகத்துக்கு வந்தபோது, 

"என்ன தம்பி விழுங்குற மாதிரி பாக்குறே... அம்மா வேசம் கட்ட வந்திருக்கேன்... அத்தாச்சி வேசம் கட்ட வந்தமாதிரி பாக்குறே..?" என்று சொல்லி சத்தமாகச் சிரித்தவள் வாய்க்குள் நிஜாம் லேடியையோ... கலைமானையோ அதக்கியிருந்தாள்.

"ஏய்... அவன்கிட்டப் போயி அத்தாச்சி நொத்தாச்சின்னு வந்த வேலையை மட்டும் பாரு..." என்றான் வைரவன்.

"இல்லக்கா... அம்மா வேசத்துக்கு வந்திருக்கீங்க... நெத்தியில பொட்டில்ல... மிஞ்சி இல்ல ஓகே... ஆனா தாலிக் கயிறு.... அதான்..."

"ஏப்பா... உனக்கு நடிக்கிறதுக்காக எம்புருஷனை சாகவா சொல்லமுடியும்... நல்லாயிருக்கே...?"

"ஐய்யய்யோ அப்படி சொல்லலை... அதை மறைச்சு..."

"தம்பி... வைரவன் உன்னோட அப்பா இல்லைன்னு சொன்னாப்ல... அதான் பொட்டு வைக்கலை... எப்பவும் செங்கலுக்கு மண்ணு மிதிக்கிறப்போ மிஞ்சியைக் கழட்டி வச்சிருவோம்... அதனால அதுவும் இல்லை... பாக்கிறவங்க பார்வை நெத்தியப் பாக்கும்... இல்லேன்னா காலைப் பாக்கும் அது ரெண்டையும் மறைக்க முடியாது... சேல முந்தானிய எடுத்து மூடிக்கிட்டா தாலியிருக்கது தெரியாது.. அதெல்லாம் நா பாத்துக்கிறேன்... நீ விவரம் சொல்லு..."

அவளுக்கு விவரம் சொல்லி, தனது அம்மாவை அழைத்துப் போவதுபோல் சைக்கிளில் வைத்து கல்லூரிக்குள் அழைத்துச் சென்றவன் சைக்கிளை நிறுத்திவிட்டு துறைத்தலைவரின் அறைக்கு சரசுவுடன் செல்லும் போது எதிர்ப்பட்ட தமிழய்யா, "என்ன ராம்கி... அம்மாவை கூட்டியாந்துட்டீங்களா... வணக்கம்மா... நல்லாப் படிக்கிறபுள்ள... தெரிஞ்ச பையனை அடிக்கிறாங்கன்னு கம்பை எடுத்துருச்சு... காலேசுக்கு வெளிய நடந்ததுதான்... இருந்தும் காலேசு பேரு கெட்டுடக்கூடாதுன்னுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்காங்க.... புள்ளய எதுவும் சொல்லாதீங்க... இனி இப்படி நடக்கக்கூடாதுன்னு மட்டும் தம்பிக்கு சொல்லி வையுங்க..." என்றபடி நகர்ந்தார்.

புரபஸர் கேவிஎஸ் இண்டியன் எக்ஸ்பிரஸைப் படித்துக் கொண்டிருந்தார். ராம்கி அவரருக்கில் செல்லவும்.

"ம்... அம்மாவா...?"

"ஆ... ஆமா.. சார்..."

"அம்மா பிரச்சினைக்குன்னு காலேசுக்கு வர்றது இதுதான் கடைசியா இருக்கணும்... சரியா.... மறுபடியும் அடிதடின்னு போகக்கூடாது... சரி வாங்கம்மா பிரின்ஸ்பாலைப் பாத்துட்டு வரலாம்..."

"ம்.."

"இதுதான் உங்க அம்மாவா..?" பிரின்ஸிபாலின் முதல் கேள்வியே மிரட்டும் வண்ணம் வந்தது.

"ஆ... ஆமா... சார்..."

"உங்க பேரு என்னம்மா?"

"நாகம்மாங்க சார்..."

"உங்க வீட்டுக்காரர் தவறிப்போயிட்டாராமே..."

"ஆமா... இந்தா இதுக சிறுசுகளா இருக்கயிலயே போயிச் சேந்துட்டாரு... கஷ்டப்பட்டு படிக்க வச்சா இது அடிதடின்னு வந்து நிக்கிது... நா வாங்கியாந்தா வரம் அப்படியிருக்குங்க சார்..."

"இது மொத தடவைங்கிறதாலயும்... அவங்க புரபஸர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணுனதாலயும் இத்தோட விடுறேன். அப்புறம் அவங்க பசங்களெல்லாம் இவன் நல்லவன்... நல்லா படிக்கிற பையன்... இந்த ஒரு தடவை மன்னிச்சுருங்கன்னு சொல்லி எழுதிக் கொடுத்திருங்காங்க... இந்தா இருக்கு பாருங்க... உங்க புள்ளைக்கு புத்திமதி சொல்லுங்க..."

"சரிங்க சார்..."

"குடும்ப சூழலை நினைச்சு படிக்கச் சொல்லுங்க...  இவன நம்பித்தானே இருக்கீங்க... நல்லா படிச்சு நல்ல வேலைக்குப்  போனான்னா குடும்ப கஷ்டம் போகுமில்ல.... நீங்க என்ன வேலை பாக்குறீங்க..."

"புத்தி சொல்றேங்க சார்... இன்ன வேலையின்னு இல்ல சார்... பாலூத்துவேன்... தயிரூத்துவேன்... களை எடுக்கப் போவேன்... கருதறுக்கப் போவேன்... வீட்டு வேலைக்குப் போவேன்.... இப்புடி எல்லாஞ் செய்வேங்க சார்..."

"தம்பி.... பாரு அம்மா எம்புட்டு கஷ்டப்படுறாங்கன்னு... அவனை அடிச்சாங்க... இவனை அடிச்சாங்கன்னு நீ முன்னாடி போவாதே... அவனுக அடிச்சிக்கிறதுக்குன்னே வர்றவனுங்க... நீ படிக்க வர்றே... அதை மனசுல வச்சுக்க... இனி உம்பேரு பிரச்சினைகள்ல வரக்கூடாது சரியா..."

"சரி சார்..."

"என்னோட கனவுல மண்ணை அள்ளிப் போட்டுறுவான் போலங்க சார்... பெரியவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்புறான்.. இது இங்க சண்டியராத் திரியுது... எல்லாம் என்னோட தலையெழுத்து.... சனியனை பன்னெண்டாப்போடா மில்லுல விடச் சொன்னாங்க... நாந்தேன் படிக்கட்டுமின்னு நெல்லப்பில்ல வித்து குடும்பம் நடத்துனாலும் பரவாயில்லன்னு காலேசுல சேர்த்துவிட்டேன்... ரவுடின்னு பேரு வாங்கிருச்சு... சனியனே... ரவுடின்னு பேர் வாங்கி என்னை இங்க கொண்டாந்து நிறுத்தவா காலேசுக்கு அனுப்புனேன்.... " என்றபடி ராம்கி கன்னத்தில் பளார்ன்னு ஒரு அறைவிட்டு விட்டு முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.

"அம்மா தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்காதீங்க... அன்பா சொல்லி புரிய வைங்க... இனி படிப்புல மட்டும் கவனம் செலுத்துவான்... அடிக்காதீங்க... அதுவும் எங்க முன்னாடி அடிச்சீங்கன்னா அவன் ரொம்ப பீல் பண்ணுவான்... சரி... தம்பி நீங்க இனி கிளாஸ்க்குப் போகலாம்..."

"சரி சார்...."

"வர்றேனுங்க சார்... பயல நல்லா பாத்துக்கங்க.... நானும் புத்தி சொல்லுறேன்... நீங்களும் சொல்லுங்க..." என்று முதல்வரிடமும் கேவிஎஸ் சாரிடம் சொல்லிவிட்டு வெளியேற, அவர்கள் பின்னே எழுந்த கேவிஎஸ்ஸை 'இருங்க சார் போகலாம்' என்றார் முதல்வர்.

"சொல்லுங்க சார்..."

"அந்தம்மா வாங்குன காசுக்கு நல்லா ஆக்ட் பண்ணுது பாத்தீங்களா?"

"என்ன சார் சொல்றீங்க... வந்தது அவனோட அம்மா இல்லயா?"

"என்ன சார் எத்தனை பேரைப் பாக்குறோம்... அம்மா மகன்னு பாத்தோடனே தெரியாதா என்ன... அதுவும் போக அந்தம்மா உள்ள நுழையும் போதே எங்கயோ பாத்திருக்கமேன்னு யோசிச்சேன்... அப்புறம் பேசும் போதுதான் ஞாபகம் வந்துச்சு... போன வருசம் ஒ ருதடவை வைரவன் அப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்க... இது என்னோட சித்தியின்னு கூட்டியாந்தான். இன்னைக்கு இவனுக்கு அம்மாவா வந்திருக்கு.. வைரவனுக்கு ராம்கி என்ன சித்தி பையனா?"

"சார் என்ன திருட்டுத்தனம்... இப்பவே கூப்பிட்டு கண்டிக்கனும் சார்..."

"சார்... பாவம் நல்லா படிக்கிற பய... அவங்க அம்மா கஷ்டப்படுறவங்க... பல கனவோட இருப்பாங்க... அதை கெடுத்துடக்கூடாதுன்னு இவனுககிட்ட கேட்டிருப்பான்... விட்டுடுங்க... அடுத்து மாட்டினான்னா அப்ப பாக்கலாம்... விட்டுடுங்க..."

"சரி சார்.... இருந்தாலும்..."

"விட்டுடுங்க... தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க..."

"ஓகே..."


"என்னடா.... பிரச்சினை முடிந்ததா..?" என்றனர் நண்பர்கள்.

"ம்... ஏன்டா பழனி... நம்ம கிளாஸ்ல எல்லாருமா சேர்ந்து தண்டிக்கக்கூடாதுன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்க... ரொம்ப நன்றிடா..."

"இதுக்கு முக்கியகாரணம் மல்லிகாதான்... நாங்க சொன்னதும் அதை உடனே செயல்படுத்தியவ அவதான்....  லேடீஸ் ரூம் போயிட்டா போல... ஆள் இல்லை... இவங்களை அனுப்பிட்டு வந்து அவளுக்கு நன்றி சொல்லு..."

"சரிடா... இப்ப வாறேன்... வாங்கக்கா போலாம்..."

"காலேசுக்குள்ள அம்மான்னு சொல்லு யாராவது கேட்கப் போறாங்க...." என்று சிரித்தபடி சைக்கிளில் ஏறினாள்.

"எதுக்கு பளார்ன்னு அறைஞ்சிங்க...?"

"அப்பத்தான் தத்ரூபமா இருக்கும்... எத்தனை பிரின்சுபாலைப் பார்த்திருப்பேன்..."

"அது சரி... அதுக்காக இப்படியா அடிப்பீங்க..."

"ரொம்ப வலிக்கிதா...?"

"அடிச்சிட்டு... வலிக்கிதான்னா... விடுங்க..." என்றான்.

கடையில் வைரவன் வண்டி நிக்க ஆளைக் காணோம்... 

"அண்ணே... வைரவண்ணன் எங்க போனாரு..?"

"பசங்க கூப்பிட்டாங்கன்னு டவுனுக்குள்ளா போயிருக்கு... இந்த அம்மாவை இங்க இருக்கச் சொன்னுச்சு... உன்னைய கிளாசுக்குப் போகச் சொன்னுச்சு...."

"இல்ல இவங்களுக்கு காசு கொடுக்கனும் அதான்..."

"அதெல்லாம் அது கொடுத்துக்கிதாம்...அப்புறம் பேசிக்கலாம்ன்னு சொல்லச் சொன்னுச்சு..."

"சரிண்ணே... அக்கா  ரொம்ப நன்றி... நான் வாறேங்க்கா... அண்ணன் வந்து பணம் கொடுப்பாரு... அண்ணே அக்காவுக்கு ஒரு பவண்டோ குடுங்க... இந்தாங்க காசு..." என்று கொடுத்து விட்டு கிளம்பினான்.

சைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்பிற்கு நடந்தவன் எதிரே வந்த மல்லிகாவிடம் "ரொம்ப நன்றிங்க..." என்று சொல்ல, "இதுக்கு எதுக்கு நன்றி... நன்றி எல்லாம் சொல்லி என்னைய பிரிச்சுப் பாக்காதீங்க..." என்றாள். 

"அப்படியில்லை... உங்க முயற்சிக்கு நன்றி சொல்லனுமில்ல..." என்றபடி அவளுக்கு இணையாக நடந்தான்.

"ராம்... ஒரு நிமிசம்..." என்று குரல் கேட்க, திரும்பினான்... அவனை நோக்கி புவனா வந்து கொண்டிருந்தாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்