சனி, 30 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-15)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    


ண்ணப்பன் மகனை ரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்து விட்டார்கள் என வாத்தியார் வாசுதேவன் சொன்னதற்கு ‘செஞ்சது சரிதான்’ என வேலாயுதம் சொன்னதும் வாசுவுக்கு கோபம் தலைக்கேறியது.

"என்ன சரி... ஒரு உயிருய்யா... சாதி வெறி அப்புடியா உங்களுக்கெல்லாம் உடம்புக்குள்ள ஓடுது... ஒரு பெண்ணைக் கெடுக்கும் போது மட்டும் உங்களுக்கு சாதி தெரிவதில்லை... மதம் தெரிவதில்லை... உடம்பு மட்டும்தானே தெரியுது... ஆனா கலப்புத் திருமணம்ன்னு வந்துட்டா மனசு தெரியலை... அவளோ அவனோ வாழ வேண்டியவங்கன்னு தெரியிறதில்லை... வெட்டிச் சாய்ப்பீங்க... தூக்குல தொங்க விடுவீங்க... அதுவும் இல்லேன்னா ரயில்வே டிராக்குல போட்டுட்டு போவீங்க... என்னய்யா ரத்தம்... இந்த சாதி வெறி பிடிச்ச ரத்தம்...” கத்தினார் வாசு,

“ஏய் வாசு விடு... அவன் பொதுவாத்தானே சொன்னான்... ஏம்ப்பா வேலாயுதம்... எல்லாரும் ஒண்ணா மண்ணா பழகிக்கிட்டு இருக்கோம்.... எதுக்கு இப்ப நீ பழைய பகையை மனசுல வச்சிக்கிட்டு வாசுக்கிட்ட இப்புடிப் பேசுறே... பேச்சை விடு...”

“நா ஏன் விடணுங்கிறே...  என்ன தப்பாச் சொல்லிட்டேன்... பாத்துப் பாத்து படிக்க வச்சி... புள்ள உசந்த நெலயில இருக்கத கண் குளிரப் பாக்கணுமின்னு நினைக்கிற பெத்தவங்க வயித்துல நெருப்பைக் கொட்டிட்டு ஓடிப் போறாங்களே அது சரியின்னு சொல்றியா..? பெத்தவயிறு அந்த வலியால சாகுற வரைக்கும் வேதனை அனுபவிக்குமே... அதுக்கு யாரு ஆறுதல் சொல்லு... அது வலிப்பா.... வலி... அதை அனுபவிச்சாத்தான் தெரியும்... நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்... நம்ம புள்ளை நம்மளைப் பாத்துக்கும்ன்னு நினைச்சிப் படுற சந்தோஷத்தை எவளோ ஒருத்திக்காகவோ ஒருத்தனுக்காகவோ அழிச்சிட்டு போயிடுறாங்களே... அது என்ன நியாயம்... நீ அதைச் சரிங்கிறியா... இல்ல இந்த வாத்தியாரு அது சரிங்கிறாரா...?”

“யாரு சரியின்னு சொன்னா... இப்ப எதுக்கு கோபப்படுறே... விடுப்பா நீ...”

“இந்த வாசு அவனை வெட்டிட்டாங்க... உயிருய்யா.... மயிருய்யான்னு பேசுறாரே... அவனை பெத்தவங்க ஏன் அவனை படிச்சி நல்ல வேலைக்குப் போயி கூலி வேலை பாக்குற எங்களை கோபுரத்துல வச்சிப் பாக்காட்டியும் கோவணத் துணியையாவது மாத்தி வாழ வைக்கணுமின்னு சொல்லி வளக்கலை...  இப்படிப் புள்ளை சாகும்ன்னு தெரிஞ்சும் நீ தூக்கிட்டு வாடான்னுதானே சொல்றாங்க... எங்கே இவரை இல்லைன்னு சொல்லச் சொல்லு... நம்ம டார்கெட்டே நமக்கு மேல இருக்கிற சாதிக்காரனோட பிள்ளைங்கதான்... அதை நீ செஞ்சா உனக்கு நான் பணம் தாறேன்னு அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்லலை... பணத்துக்காகத்தானே இந்த காதல்களும் ஆணவக் கொலைகளும் நடக்குது... இல்லேன்னு சொல்லச் சொல்லு... பணம் கண்ணை மறைக்க பிள்ளை செத்தாலும் பரவாயில்லை... அவன் குடும்பத்துப் பிள்ளை ஒரு நாளாவது நம்ம வீட்டு மருமகளாவோ மருமகனாவோ வாழணுமின்னு நினைக்கிறாங்களா இல்லையா...? வெட்டிட்டாங்க... வெட்டிட்டாங்கன்னு பேசுறீங்களே... அதுக்கு யார் காரணம்..? அரசியல்வாதிகளும் ஊர்ப் பெரியவனுங்களும்தானே... ஏன் தொடர்ந்து நம்ம சாதிப்புள்ளைங்களை மேலப்பக்கத்துல இருக்கவனுக கெளப்பிக் கொண்டு போகலையா... ராம்நகரு குருந்தப்பன் மகளைக் கொண்டு போனானுங்களே ஞாபகம் இருக்கா... நாம அங்க போனப்ப என்ன சொன்னானுங்க... போலீஸ் ஸ்டேசன்ல குரூப்பா நின்னு எங்கபய விரும்பிட்டான்னு சொல்லி பெத்தவங்க வேண்டாம்ன்னு அத்துக்கிட்டு வான்னு சொல்லி... அதைச் செய்ய வச்சி... நாம பாக்க அந்தப் பிள்ளையை வேலைக்காரி மாதிரி நடத்தலையா..? உனக்கும் தெரியுந்தானே... பேச வந்துட்டாரு...  இந்தாளை பேசாம போகச் சொல்லு... எனக்கு வர்ற கோபத்துக்கு....” கத்தினார் வேலாயுதம்.

“ஏம்ப்பா வாசு... நீ போப்பா... இங்க நின்னியன்னா இன்னும் ஏதாவது மாத்தி மாத்திப் பேசி நல்லாயிருக்க ஊருக்குள்ள சண்டையில வந்து முடியும்...” கெஞ்சலாய்ச் சொன்னார் பஞ்சநாதன்.

வண்டியை நிறுத்தி இறங்கி “இம்புட்டு வியாக்கியானம் பேசுறியே... வேற சாதியில கட்டுனா வெட்டணுமின்னு சொல்றியே... உம்மவனும் ஒருத்தியை இழுத்துக்கிட்டுத்தானே ஓடினான்... போ போயி அவனை வெட்டு... அவனை வெட்ட மாட்டியல்ல... ஏன்னா அவன் உன்னோட பையன்... உன்னோட ரத்தம்...” வாசுதேவன் கோபமாய்க் கத்த கூட்டம் கூடியது.

வேகமாய்த் திண்ணையில் இருந்து எழுந்த வேலாயுதம், “நாந்தான் அந்தச் சனியனே வேண்டான்னு தல முழுகிட்டேனே... அவன் எவள இழுத்துக்கிட்டுப் போனானோ அவ சாதிக்காரனுக்கிட்ட சொல்லி... அருவா எடுத்துக் கொடுத்து அந்த நாயை வெட்டச் சொல்லு... யாரு வேணாமின்னா... இப்பச் சொல்றேன் கேட்டுக்க... என்னப் பாத்து இப்புடி ஒரு வார்த்தை நீ கேட்டதுக்கு அப்புறம் நா சும்மா இருந்தா வீரையாவோட மகன்னு சொல்லிக்கிறதுக்கு அர்த்தமேயில்ல.... எஞ்சாவுக்கு கூட அவன் வரக்கூடாது... வரமாட்டான்... அப்படி மீறி நா உயிரோட இருக்கும் போது வந்தான்னா அவனை நா வெட்டுவேன்டா... இல்ல எஞ்சாவுக்கு வந்தான்னா நீ வெட்டுடா அவனை....” கோபத்தில் கத்தினார் வேலாயுதம்.


ம்பேத்கார் பார்த்துக் கொண்டு வரவும் சுபஸ்ரீயை பிடித்த கையை மெல்ல விட்டான் கண்ணன். சுபஸ்ரீ அவன் முகம் பார்த்து பேசாமல் அவனருகில் அமர, அருகே வந்த அம்பேத்கார், “போகலாமாடா.... எனக்கு வேலை இருக்கு..?” என்றான்.

எதுவும் சொல்லாமல் சுபஸ்ரீயைப் பார்த்தபடி “ம்”  என எழுந்த கண்ணன் “நீங்க எப்படிப் போவீங்க...?” என்றான் அவளிடம்.

“நாங்க பிரண்டோட கார்லதான் வந்தோம்... அவதான் டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தா...  அதுல போயிருவோம்....” என்றாள் மெல்ல.

“ம்... அப்ப நாங்க கிளம்புறோம்...” என்றபடி நகர, அவளும் பின்னாலேயே வந்தாள். மண்டப வாசலுக்கு வந்தபோது “ நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டீங்களா... சொல்லலைதானே... எதாயிருந்தாலும் சொல்லிட்டா நான் குழப்பமில்லாமப் போவேனுல்ல...” அவனுக்குப் பின்னிருந்து மெல்லக் கேட்டாள்.

திரும்பி அவளைப் பார்த்தவன் ஒன்றும் பேசாது அம்பேத்காரைப் பார்த்தான். அவனோ அவள் கேட்டது காதில் விழாதது போல முன்னே நடந்தான். வரவேற்பில் வைத்திருந்த ரோஜாவை எடுத்து “இதை தலையில காதோரமா வச்சா இன்னும் அழகா இருக்கும்” என்றான்.

அவனைச் சீண்டும் விதமாக “நாந்தான் வச்சிருக்கேனே...” என்று சொல்லிச் சிரித்தாள்.

“அதை எடுத்துட்டு இதை வச்சா இன்னும் அழகா இருக்கும்ன்னு சொன்னேன்...” என நீட்டினான். அவளுக்குப் புரிந்தது... மனசு சிறகடித்தது. பின்னாலேயே வந்து சேர்ந்த தோழியர் ‘ஹே’ என்று கத்தி, “சக்ஸஸ் ஆயிருச்சுல்ல... போகும் போது  பார்ட்டி வைக்கிறே...” என்று கூவினர்.

அவன் கையிலிருந்து பூவை வாங்கி காதோரமாக வைத்து “நல்லாயிருக்கா...?” என்றாள்.

“சூப்பர்... ஜ லைக்...” என்றவன் “வர்றேன்... நாளைக்கி சாயந்தரம் எப்.பில வாறேன்... பை...” என்று கிளம்ப, சுபஸ்ரீ சந்தோஷ வானில் பறக்க ஆரம்பித்தாள்.

ண்டியில் போகும் போது அம்பேத்கார் இது குறித்து பேசுவான் என்று எதிர்பார்த்தான். அவனோ எதுவும் தெரியாதது போல வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். கண்ணனுக்கோ ஆரம்பிக்கப் பயம்... எப்படியும் திட்டுவான்... கத்துவான்... தான் செய்தது மிகப்பெரிய துரோகம்... நட்புக்குச் செய்யும் துரோகம்... இனி எப்படி சாரதி கூட சகஜமாகப் பேச முடியும்... அவனிடம் பொய்யாக நடிக்கும் போது மனசு வலிக்குமே... நாந்தான் அவனுக்கு மனைவியாகப் போறவளின் காதலன் என்றால் எப்படி அவனால் ஏற்றுக் கொள்ள முடியும்...? இப்படி ஒரு துரோகத்தை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்...? ஏன் இதுவே என் அத்தை பெண்ணாக இருந்து வேறு யாரேனும்... வேறு யாரேனும் என்ன சாரதியோ இல்ல இந்த அம்பேத்தோ இதுபோல் செய்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா..? அவசரப்பட்டுட்டேனோ... நட்பை விட ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பலம் அதிகமா? அது ஒரு மனிதனைச் சாய்ச்சிருமா...? அதான் சாஞ்சிட்டேனே... அப்ப துரோகி நான்... அவளை காதலிக்கவில்லை என்று சொல்லிவிடலாமா...? அதெப்படி முடியும்... அவ சாரதியை கட்டிக் கொள்ளும் எண்ணத்தில் இல்லையே... இருவருக்கும் நிச்சயமா பண்ணி வைத்திருக்கிறார்கள்... அவளுக்கு என்னைப் பிடித்திருக்கு... அவ எனக்கு மனைவியா வந்தா நான் பாக்யசாலிதானே... ஆனால் சாரதி... என்னுள் நிறைந்தவனாயிற்றே... பள்ளி நாட்களில் இருந்து எனக்காக எதை எதையோ விட்டுக் கொடுத்தவனாயிற்றே... அவன் எனக்கு நண்பன் மட்டுமில்லையே... என்னோட பிறந்தவன் போன்றவன் அல்லவா..? அவன் வாழ்க்கை என்னால் சூனியமாவதா...? சுபஸ்ரீ காதலிக்கிறேன் என்று சொன்னதால் மட்டுமா நான் சரியென்றேன்... இல்லையே முதல் சந்திப்பிலேயே என்னுள் மலர்ந்தவளாயிற்றே... அவளை மனசுக்குள் காதலிக்க ஆரம்பித்ததால்தானே ஒதுங்க ஆரம்பித்தேன்... இன்று அவளின் ஸ்பரிசம்... அந்தக் கண்ணீர் எல்லாமும் என் காதலை சொல்ல வைத்து விட்டதே... இனிதானே பிரச்சினைகளின் மேகம் எம்மைச் சூழும்... எல்லாவற்றையும் தாங்கும் சக்தி எனக்கிருக்கிறதா..? அப்பா...? அவரை எப்படி சமாளிப்பேன்..? இது தெரிந்தால் வெட்டக் கூட தயங்கமாட்டாரே...? தெரியும் போது பார்த்துக் கொள்ளலாம்... அப்போது என் நிலமை என்ன என்பதை இப்போது எப்படி முடிவு செய்ய முடியும்... இறங்கியாச்சு... இனி எல்லாவற்றையும் சந்தித்துத்தானே ஆக வேண்டும்... என பலவாறு நினைத்தபோது அம்பேத்கார் வண்டியை நிறுத்தினான். 

நன்றி : படம் இணையத்திலிருந்து (ஓவியர் : மாருதி)

  (அடுத்த சனிக்கிழமை தொடரும்...) 

-பரிவைசே..குமார்.

5 கருத்துகள்:

  1. வண்டியோடு நானும் தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா....
      தொடர்ந்து வந்தீங்கன்னாத்தானே நானும் தொடர்ந்து எழுத முடியும்.

      நீக்கு
  2. அருமை,தொடர்கிறேன் சகோ !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தொடர்ந்த வாசிப்பிற்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. இதையும் வாசித்துவிட்டுத்தான் இதன் அடுத்த பகுதிக்குப் போனோம் குமார்...அருமையா போகுது

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி