திங்கள், 2 மே, 2016

பொலிவை இழந்த கிராமங்கள் (அகல் மின்னிதழ் கட்டுரை)

மே மாத அகல் மின்னிதழ் - 1-ல் (முழு இதழுக்குமான இணைப்பு) வந்திருக்கும் எனது கட்டுரை... கட்டுரையை வாசித்து இங்கும் அங்கும் கருத்துச் சொல்லுங்கள்... நன்றி.

கட்டுரையை வாசிக்க : பொலிவை இழந்த கிராமங்கள்


கிராமங்கள் பொலிவிழந்துவிட்டதா..? என்ற கேள்வியை மனசுக்குள் மெல்ல எழுப்பிப் பார்த்தால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இன்றைய நிலையில் விவசாயத்தை பெருமளவு இழந்து, இளைய தலைமுறையின் நகரத்தை நோக்கிய படையெடுப்பால் தன் சுயம் இழந்து... பழுத்த மனிதர்கள் மட்டுமே தேங்கி நிற்க, கிராமங்கள் மெல்ல மெல்லத் தன்னுடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

சில காலங்களுக்கு முன்னர் கிராமங்கள் பசுமை போர்த்தி மிக அழகாக காட்சியளித்தன... விவசாயத்தை நம்பிய குடிகள்... வயலும் வாழ்வுமாய்... ஆடு. மாடு, கோழிகள் என பாசத்தோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். விவசாய காலம் என்றால் தாவணி அணிந்த இளம் பெண் போல கிராமங்கள் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சை போர்த்திய வயல்கள், கரையில் மோதும் கண்மாய் நிறைந்த தண்ணீர், வாய்க்கால்களில் இரு மருங்கிலும் வளர்ந்திருக்கும் அருகம்புல்லை தடவியபடி வயலை நோக்கி பாய்ந்தோடும் தண்ணீர்... வரப்புகளில் நிற்கும் மரங்கள் சுமக்கும் பசுமை என ஊரைச் சுற்றி ஒருவித குளுமையை பரவ செய்திருக்கும்.

அதே போல் மாலை நேரங்களில் வயல் வரப்புக்களில் நடந்து போவதே ஒரு சுகம்தான்... அந்தப் பசுமையும், பாய்ந்தோடும் நீரின் சலசலப்பும், பயிரோடு விளையாடும் இளங்காற்றும், மெல்லிய குளிரோடு உடலை வருடிச் செல்லும் தென்றலும்.. ஆஹா... என்ன ஒரு சுகானுபாவமாக இருக்கும் தெரியுமா... இதை அனுபவித்தவர்களுக்கு என்னதான் இருபத்து நாலு மணி நேரமும் ஏசியில் இருந்தாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும். வெயில் காலம் கூட வெக்கையை வீட்டுக்குள் கொண்டு வராது... காரணம் என்னவென்றால் வீட்டிற்கு முன்னே நிற்கும் வேப்ப மரம்தான். ஆம் இதையெல்லாம் சிறுவயதில் அனுபவித்தோம் ஆனால் இன்று...?

நம் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் சாதிவெறி இருந்தாலும் மாமன் மச்சானாய்த்தான் எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது கிராமங்களிலும் சாதிக்கென வரவேற்புப் பலகைகளும், சாதிக் கட்சிகளின் கொடிகளும் புகுந்து விட பல இடங்களில் திருவிழாக்கள் கூட சாதிக்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டன. உள்ளூர் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் நேசமாய் வாழ்ந்த காலங்கள் கிராமங்களில் உயிர்ப்போடு இருந்தன... நல்லது கெட்டது என்றால் ஊரே கூடி நின்று எடுத்துச் செய்யும் நிகழ்ச்சிகளை நாம் கிராமங்களில் மட்டுமே காண முடியும். திருவிழாக்கள் என்றாலே ஒருவருக்கு ஒருவர் பதார்த்தங்களையும் அன்பையும் பரிமாறிக் கொள்வார்கள்.
பெரும்பாலான நகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதை அறியாமல்தான் இப்போது வாழ்கிறோம். எதற்கு அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணமே இப்போது மனசுக்குள் தூக்கலாக இருக்க ஆரம்பித்துவிட்டது. சரி கிராமங்களில் இந்த உயிர்ப்பு இப்போதும் இருக்கிறதா...?

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் குழந்தைகள் அனைவரும் கோவில் முன்பாகவோ அல்லது விளையாட்டுத் திடலிலோ ஒன்று கூடி கண்டுபிடிச்சோ, ஓடிப்பிடிச்சோ, கபடி, கோகோ, கிட்டி, சில்லு நொண்டி, தவட்டாங்கம்பு என நிறைய விளையாட்டுகளை விளையாடி இருட்டிய பிறகே வீட்டிற்குச் செல்வார்கள். விடுமுறை தினங்கள் எல்லாம் அது விளையாட்டு தினங்கள்தான் என்பதை கிராமத்துப் பிள்ளைகள் மனதில் வைத்திருப்பார்கள். கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற பலர் இப்படித்தான் வளர்ந்திருப்பார்கள் ஆனால் இன்று குழந்தைகள் இப்படி விளையாடுகிறார்களா...?

கோயில் விழாக்கள் என்றால் ஊரே ஒன்று கூடி அவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாடும். வருடம் ஒருமுறை வரும் மாரியம்மன் திருவிழாவில் காப்புக் கட்டியது முதல் திருவிழா உச்சம் பெறும் நாள் வரை (செவ்வாய் முதல் செவ்வாய் வரை மொத்தம் எட்டு நாள்) இரவு அம்மனுக்கு கரகம் வைத்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என எல்லாருமாய் மேளம் கொட்டி சந்தோஷித்து கொண்டாடும் அழகே தனிதான் ஆனால் இப்போதும் நடக்கிறதா...?

என்னடா அனைத்திலும் கேள்விக்குறியோடு முடித்திருக்கிறானே என்று பார்க்கிறீர்களா...? ஆம் பசுமையாய்.... பாசமாய்... பார்த்த கிராமங்கள் எல்லாமே இப்போது அந்தப் பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டுதான் வருகின்றன என்பதாலேயே இந்தக் கேள்விக்குறி... இன்னும் கிராமங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன... அப்புறம் எப்படி அது இல்லை... இது இல்லைன்னு சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். தூரத்துப் பச்சை பார்க்க அழகாகத்தான் இருக்கும் அதன் அருகில் போய்ப் பார்த்தால்தான் அந்த அழகு நிஜமா என்பது தெரியும்... அப்படித்தான் கிராமங்களும்...


வானம் பார்த்த பூமிகளான பல கிராமங்கள் முதலில் இழந்தது அதன் வேரான விவசாயத்தைத்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நெல்மணிகளைச் சுமந்த எங்கள் ஊர் வயல்கள் எல்லாம் இப்போது கருவை மரங்களைச் சுமந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன.

எங்கள் கிராமம் மட்டுமல்ல... இதைப் போல் நிறைய கிராமங்கள் விவசாயத்தை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டன. உடம்பில் கோவணமாய்க் கட்டிய வேஷ்டியுடன் வயலில் இறங்கி வேலை பார்த்த மனிதன் இன்று வேலை இல்லாது மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை. 

இதன் காரணமாகவே நிறைய தற்கொலைகள்... நிறைய பேரின் வெளியேற்றம்... பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனுமா... இந்த வருடம் விளையட்டும் என்றிருந்த காலம் மலையேறிப் போச்சு... பல கிராமங்கள் நெல் மணிகளை நம்பியிருந்த கண்மணிகளை முதிர் கன்னிகளாக்கி வீட்டுக்குள் முடக்கிப் போட்டு வைத்திருந்ததால் பல தற்கொலைகளைச் சுமந்தன.

விவசாயம் போச்சு என்றாலும் இப்போது கிராமங்களிலும் கல்வித்தாய் எட்டிப் பார்த்து எல்லாரும் ஓரளவுக்கு படித்து விடுகிறார்கள். வேலை, குழந்தைகளின் படிப்பு போன்ற காரணிகளே கிராமத்து இளம் தலைமுறையினரை நகரத்தினை நோக்கி படையெடுக்க வைக்கிறது. காலப்போக்கில் நகரத்து வாழ்க்கை அவர்களுக்கு சொந்த பந்தம் அற்ற ஒரு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. நல்லது கெட்டது என்றால் கூட விடுமுறை இல்லை, குழந்தைக்கு லீவு போட முடியாது என ஏதாவது காரணத்தை முன்னிறுத்த கற்றுக் கொடுத்து விடுகிறது. ஒரு நாள் சொந்த ஊருக்குப் போனாலும் என்ன இது மொபைலுக்கு டவர் கிடைக்கலை... இண்டர்நெட் இல்லை... டிவி பார்க்க முடியலை... கம்ப்யூட்டர் இல்லாம என் பையன் இருக்கவே மாட்டான் என புதிய பழக்கத்தின் அடிமைத்தனம் பழைய சுகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்ப வைக்கிறது.

கிராமங்களில் சட்டை போடாமல் விவசாயம், ஆடு மாடு எனத் திரிந்த மனிதர்களே இன்று அங்கு தங்கியிருக்கிறார்கள். இதுதான் உண்மை... எங்கள் ஊரில் நான் படிக்கும் காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகள் என கூட்டமாய் இருக்கும். அது ஒரு அன்பான உலகமாய்த் தெரியும் ஆனால் இன்று எங்களைப் பெற்றவர்கள் தங்களின் முதுமையை பிறந்த ஊரில்தான் களிப்போம் என்ற உறுதியுடன் இருப்பதாலும் உள்ளூரில் வேலை செய்யும் சக வயதுக்காரர்கள் சிலர் நகரத்து வாழ்க்கை வேண்டாமே என்று ஊரில் இருப்பதாலும் கூட்டமாய் இருந்த இடத்தில் அழிந்து போன சிட்டுக்குருவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பது போல் வீட்டிற்கு இரண்டு முதுமை சுமந்த மனிதர்களும் சில இளைய தலைமுறைகளும் இருக்கிறார்கள்.

பல வீடுகள் திருவிழாக் காலத்தில் மட்டுமே திறக்கப்படுகின்றன... சில வீடுகள் வாழ்ந்து முடிந்து மரித்தும் விட்டன... இந்த நிலை தொடரும் பட்சத்தில்... பழுத்த கிளைகள் உதிரும் போது எங்கள் கிராமத்தின் நிலை... எங்கள் என்பதைவிட பல கிராமங்களின் நிலை...? ஆம் வயல்கள் எல்லாம் வீட்டு மனைகள் ஆக கிராமங்கள் காணமல் போகும் என்பதே நிதர்சன உண்மை.

திருவிழாக்கள் என்றால் கூடிக் கொண்டிருந்தவர்கள் கூட இப்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருக்க ஆரம்பித்த பின்னர் திருவிழாக்கள் கூட தனித்துவத்தை இழந்துவிட்டது. குலவைப்பாடல், மொளக்கொட்டு பாடல், நடவுப்பாடல் என கிராமத்துக்கே உரிய தனித்துவமான பாடல்கள் எல்லாம் இப்போது இருக்கும் தலைமுறைக்கு தெரிவதில்லை... தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை....

‘ஏப்பா அந்த மைக்செட்காரத் தம்பிக்கிட்ட சொல்லி குலவைப்பாட்டு போட்டுவிடச் சொல்லு... சாமி கும்பிடணும்...’ என்றும் அடேய் மொளக்கொட்டணும் அந்த தானானேப் பாட்டை சத்த போட்டுவிடு...’ என்றும் தான் இப்போது சொல்லப்படுகிறது.
இன்னும் சில காலங்களில்... அதாவது நம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைகள், “ஆமா வேலை வெட்டி இல்லாம ஒரு வாரம் பத்து நாள்னு திருவிழாக் கொண்டாடுறானுங்களாம்... வேற வேலை இல்லை” என்று திருவிழாக்களுக்கு மூடு விழா வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.


இன்றைய உலகம் கைக்குள் சுருங்கிவிட்டது... பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தால் கண்ணாங் கண்ணாமூச்சியோ..., ஓடிப்பிடித்து விளையாடுதலோ..., கபடியோ.... இப்படி எதுவுமே விளையாட குழந்தைகள் நினைப்பதும் இல்லை அது தெரியவும் இல்லை... கிராமங்களில் விளையாட குழந்தைகள் இல்லை என்பதே சத்தியமான உண்மை. குழந்தைகளுக்குத் தெரிந்ததெல்லாம் வீடியோ கேமும் கம்ப்யூட்டரும்தான்...

இன்றைய குழந்தைகளின் உலகம் சின்ன அறைக்குள் என்றாகிவிட்டது. இவர்களுக்கு பந்த பாசமோ... உறவு முறைகளோ தெரிவதில்லை. கிராமத்தில் இருந்து வந்தவனின் மகன் கூட பழுப்பேறிப்போன தன் தாத்தா, பாட்டியைப் பார்த்தால் 'டர்ட்டி பீப்பிள்' என்றுதான் சொல்கிறான்.

நகரங்கள் விழுங்கிய கிராமத்து வாழ்க்கையில் நாம் நல்ல காற்றை இழந்தோம்... நல்ல பண்பை இழந்தோம்... உறவு முறைகளை இழந்தோம்... உண்மையான அன்பை இழந்தோம்... இவற்றிற்கெல்லாம் மேலாக நம் உயிர் நாடியாம் விவசாயத்தை இழந்தோம்... இப்படி எல்லாம் இழந்த கிராமங்கள் பெயரளவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றின் சிறப்பான பொலிவை இழந்து அழிவை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்திருக்கின்றன என்பதே உண்மை.

நன்றி சத்யா ஜி....
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. முழுக்க முழுக்க வேதனைகளைத் தந்த விடயங்கள் இனிவரும் காலங்களில் இது மேலும் குறைந்து மறந்து விடக்கூடிய நிலையே இருக்கின்றது எல்லாம் விஞ்ஞான வளர்ச்சியின் மோகம்தான் வேறென்ன சொல்வது
    அந்த தளம் சென்றேன் அதில் இந்த கட்டுரையை காணமுடியவில்லையே...
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      கருத்துக்கு நன்றி அண்ணா... கிராமங்கள் அழிந்து வருவது வருத்தமான விஷயம்.
      முழு இதழுக்குமான இணைப்பு கொடுத்திருந்தேன்.
      இப்போது கட்டுரைக்கான இணைப்பை தனியாக கொடுத்துவிட்டேன்.
      நன்றி.

      நீக்கு
  2. >>> நகரங்கள் விழுங்கிய கிராமத்து வாழ்க்கையில் நாம் நல்ல காற்றை இழந்தோம்.. நல்ல பண்பை இழந்தோம்.. உறவு முறைகளை இழந்தோம்.. உண்மையான அன்பை இழந்தோம்.. இவற்றிற்கெல்லாம் மேலாக நம் உயிர் நாடியாம் விவசாயத்தை இழந்தோம்..<<<

    உண்மை - நெஞ்சைச் சுடுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      ரொம்ப வருத்தமான விஷயம்தானே ஐயா இது....
      நாம் வாழ்ந்த கிராமங்கள் இன்று வாழ்விழந்து...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. வேதனை தரும் விஷயங்கள். பல கிராமங்கள் இப்படி தனது தனித்தன்மையை இழந்து கிடக்கிறது. இன்னும் எத்தனை விஷயங்களை இழக்கப் போகிறோமோ?

    பதிலளிநீக்கு
  4. கிராமங்களின் உண்மையான நிலையை ரொம்பவும் யதார்த்தமாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள் குமார்! மனம் கலங்கி விட்டது. அதுவும் இணைத்திருகும் படங்கள், குறிப்பாக ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துச்செல்லுபவரின் புகைப்படம் மிகவும் அழகு!

    சின்ன வயதில் கிராமமும் இல்லாத நகரமும் ஆகாத ஊர்களின் அமைதியில் வாழ நேர்ந்ததாலும் கிராமத்தில் புகுந்து வீடு அமைந்ததாலும் நீங்கள் எழுதியுள்ள அத்தனையையும் அனுபவித்திருக்கிறேன். உங்களின் எழுத்தில் உள்ள‌ வலையை நானும் இப்போது அனுபவித்து வருகிறேன். அதைப்பற்றி தனியான ஒரு பதிவு எழுத வேண்டும்!

    உங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டு ரொம்ப நாட்களாகி விட்டன. தஞ்சையிலிருக்கும் கணினியில் எப்போதுமே உங்கள் வலைத்தளம் முழுமையாக வருவதில்லை. உங்கள் பதிவுகளைப்படிப்பதுடன் சரி. இப்போது ஷார்ஜாவில் இருப்பதால் கணினியிலும் பிரச்சினைகள் இல்லாததாலும் பதிவிட முடிகிறது.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கிராமங்களில் யாதார்த்த நிலை இதுவென அருமையாக சொல்லிசென்றிருக்கும் கட்டுரை, நான் சிறியவளாயிருந்த காலத்தில் வைகாசி பௌர்ணமியில் வரும் அம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊரைவிட்டு பிழைக்கபோன அத்தனை பேரும் தவறாமல் வந்து சேர்ந்து விடுவார்கள். அதுவே திருவிழா போல் உற்சாகம் தரும்,

    தெருவெல்லாம் தோரணங்களும் மங்கலமுமாய் பெரிய ஸ்பீக்கர் பாட்டு சத்தத்தோடு மார்ச் மாதத்தில் குடிப்பூசை என பத்து நாளு, சித்திரை மாதம் சித்திரைக்கஞ்சி என இரண்டு நாள், வைகாசியில் அம்மன் கோயில் பொங்கல் என நான்கைந்து நாள், அப்புறம் நவராத்திரி, சிவராத்திரி, கந்த சஷ்டி, சூரன் போர் என கலகலவென இருக்கும்,

    தைப்பொங்கல் என்றாலே வீட்டு வாசலில் மூன்று பெரிய கருங்கல் வைத்து புதுப்பானையில் கோலம் போட்டு விறகு அடிப்பில் பொங்குவார்கள்.பொங்கலை ஊருக்கெல்லாம் கொடுக்க என எப்படியும் இரண்டு கொத்து அரிசியில் பெரிய பானை வைத்து பெரும்பாலும் பித்தளை அல்லது மண் பானையில் பொங்கல் செய்வார்கள். நினைக்கவே இனிமையாயிருக்கும்.

    இப்போவெல்லாம் திருவிழாக்களும் விசேஷம் இல்லை,கொண்டாட்டங்களும் நான்கு சுவருக்குள் காஸ் அடுப்பில் நான்கு பேருக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டு சினிமா பார்த்து என பொழுதை போக்கி விடுகின்றார்கள்.

    சித்திரை புதுவருட கைவிசேஷம் வாங்க போட்டியே இருக்கும். வீட்டில் செய்யும் பலகாரங்களை அம்மா தந்தால் அதை கொண்டு போய் கொடுத்தால் கைவிசேசம் என காசு தருவார்கள்.! பிறந்த நாள் என அம்மா சுடும் கூனி வடையை தூக்கிட்டு போவோம், அப்பவும் காசு கிடைக்கும். ஒரு ருபா என்பது கோடி ரூபாய் போல் மகிழ்ச்சியை தரும்.

    இந்த கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் வரும் போது மதமும் சாதியும் அக்காலத்தில் நுழையவே இல்லைப்பா. ஊரே ஒன்று பட்டு கொண்டாடுவோம்.

    சுத்தி வர கோயில்,அதிகாலையில் கோயிலில் சுபரபாதம் ஆரம்பித்து மாலை பூஜைக்கு பாடல் வரை ஸ்பீக்கர் சத்தம் ஊரைக்கூட்டினாலும் யாரும் மத பேதம் பார்த்ததில்லை.அப்படின்னால் என்ன எனவும் தெரிந்ததில்லை.

    சாதியும் அப்படித்தான். கோயில் பூஜையில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு குடிக்கென கொடுத்து ஊரவர் அனைவரும் கலந்துக்குவாங்க. இப்பல்லால் கிராமமும் அதன் மணம் குணமும் போய் விட்டது.

    நிரம்ப நாட்களுக்கு பின் நீண்ட பின்னூட்டம் போட வைத்த பதிவுக்காக குமாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. //நகரங்கள் விழுங்கிய கிராமத்து வாழ்க்கையில் நாம் நல்ல காற்றை இழந்தோம்... நல்ல பண்பை இழந்தோம்... உறவு முறைகளை இழந்தோம்... உண்மையான அன்பை இழந்தோம்... இவற்றிற்கெல்லாம் மேலாக நம் உயிர் நாடியாம் விவசாயத்தை இழந்தோம்... இப்படி எல்லாம் இழந்த கிராமங்கள் பெயரளவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றின் சிறப்பான பொலிவை இழந்து அழிவை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்திருக்கின்றன என்பதே உண்மை.//

    ரொம்பவும் சரி. கிராமங்கள் தங்களுக்கென இருக்கும் தனிச்சிறப்புகளை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன.

    பதிலளிநீக்கு
  7. வேதனை தரும் உண்மை அத்தனையும்.

    பதிலளிநீக்கு
  8. சில நிதர்சனங்களை ஜீரணிக்க முடிவதில்லை குமார்!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வரிகளின் முழுக் கட்டுரையின் வேதனை நிறைந்த கருத்துகளை எங்களால் உள்வாங்க முடிகின்றது. எங்கள் கிராமங்களும் அப்படி ஆகிவிட்டன. தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கின்றனதான். கேரளத்தில் துளசி வசிக்கும் நிலம்பூர் இன்னும் அந்த அளவிற்கு மாறவில்லை.

    கீதாவின் கிராமமும் பொலிவை இழந்து நிற்கின்றது. ஜீரணிக்க முடியாத வேதனை குமார்...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வரிகளின் முழுக் கட்டுரையின் வேதனை நிறைந்த கருத்துகளை எங்களால் உள்வாங்க முடிகின்றது. எங்கள் கிராமங்களும் அப்படி ஆகிவிட்டன. தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கின்றனதான். கேரளத்தில் துளசி வசிக்கும் நிலம்பூர் இன்னும் அந்த அளவிற்கு மாறவில்லை.

    கீதாவின் கிராமமும் பொலிவை இழந்து நிற்கின்றது. ஜீரணிக்க முடியாத வேதனை குமார்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி