சனி, 23 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-14)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    

‘என்னை லவ் பண்றீங்களா?’ என்று கேட்டு விட்டு அவனது இலையில் இருந்து அப்பளத்தை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்த கண்ணன், ‘இவள் விளையாட்டுக்கு கேக்கிறாளா... இல்லை உண்மையிலேயே கேட்கிறாளா... ‘ என மனதுக்குள் யோசித்தபடி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.

“அலோ... நான் கேட்டதுக்கு பதிலைக் காணோம்...”  

என்னங்க நீங்க... சும்மா விளையாடாதீங்க... என்ன பேசுறோம்ன்னு இல்லாம... பக்கத்துல இருக்கவங்க கேட்டா என்ன நினைப்பாங்க...” சிரித்து மழுப்பினான்.

“என்ன நினைப்பாங்க... நீங்க நடந்துக்கிறது அப்படியிருந்துச்சு... அதான் கேட்டேன்.” மெல்லச் சொன்னாள்.

“என்ன நான் நடந்துக்கிட்டேன்... பொய் சொல்லாதீங்க... என் நண்பனுக்கு மனைவியாகப் போறவங்க நீங்க... உங்க மேல மரியாதை இருக்கு...”

“ஒக்ஹோஹோ... உங்க நண்பனோட மனைவியாகப் போறவதானே... பின்ன எதுக்கு என்னைப் பார்த்து பயந்து ஒளியுறீங்க... ஹாய் சிஸ்டர்ன்னு.... எப்படி... சி...ஸ்...ட...ர்.... அப்படின்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே.... இதுவரைக்கும் அப்படி ஒரு வார்த்தையை யூஸ் பண்ணியிருக்கீங்களா..?” சிஸ்டரை அழுத்தமாக்கி அவனிடம் சொன்னாள்.

“சொ... சொல்லலாமே... மரியாதையாக வாங்க... போங்க... சொன்னேன்.... சரி இனிமே அப்படியே கூப்பிடுறேன்... எதாயிருந்தாலும் அப்புறம் பேசுவோம்... எல்லாரும் பார்க்கிறாங்க பாருங்க...”

“பாக்கட்டும் கேட்டதுக்கு பதில் வேணும்... இதுவரை நீங்க என்னைய சிஸ்டர்ன்னு சொன்னதில்லை... என்னை பார்த்து ஒளியிறதுலயே உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியிறது....” என்றபடி அவன் இலையில் இருந்த பொரியலை எடுத்துச் சாப்பிட்டாள்.

“என்னங்க நீங்க... மத்தவங்க ஒரு மாதிரி பாக்குறாங்க பாருங்க...” கண்ணன் மற்றவர்களின் பார்வைக்காக வெட்கப்பட்டான்.

அவர்களுக்கு எதிரே சாப்பிட்ட ஒரு அம்மா பக்கத்திலிருந்த பெண்ணிடம் “பந்தியில பொண்ணு மாப்ளயத்தான் ஊட்டி விடச்சொல்லி போட்டோ எடுப்பாக... நமக்கு எதுத்தாப்புல பாரு... படிக்கிற புள்ளைக மாதிரி தெரியுது... அந்தப் புள்ள அந்தத் தம்பி எலயில இருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடுது...” என்றாள்.

“பாருங்க... நம்மளைப் பத்தித்தான் எதித்தாப்புல பேசுறாங்க...” மெல்லச் சொன்னான் அவன்.

“பேசட்டும்... அதுக்கென்ன இப்போ... கேட்டதுக்கு பதில்.... என்னை லவ் பண்றீங்களா?”

“சாப்பிடுங்க... வெளியில போயி பேசலாம்...”

“சத்தியமா..? வெளியில போயி எஸ்கேப் ஆயிட மாட்டீங்களே...” அவன் கை தொட்டுக் கேட்டாள்.

“இல்லை... கண்டிப்பாப் பேசலாம்....”

“ம் சொல்லுங்க...” என்றபடி அவனருக்கு அருகில் அமர்ந்தாள். அவளின் சேலை முந்தானை அவன் மேல் பட்டது. அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

“என்ன சொல்லணும்..?”

“ம்... இந்த சாரி உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்ல அதுக்கு பதில்...” கடுப்பாய்ச் சொன்னாள்.

“ம்...”

“என்ன ம்...?”

“பிடிச்சிருக்குன்னு அர்த்தம்....”

“அப்ப என்னை...?”

“என்ன நீங்க...? திரும்பத் திரும்ப அங்கயே வாறீங்க... பிரண்டுக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு நீங்க... விளையாடாதீங்க...”

“என்னங்க நீங்க... பிரண்டுக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு... நிச்சயம் பண்ணுன பொண்ணுன்னு பேசுறீங்க... பெரியவா முடிவு பண்ணியிருக்கா... எங்க மனசுக்கு செட்டாகணுமில்ல... என் மனசுல பார்த்தாவை கட்டிக்கணுமின்னுல்லாம் எண்ணம் இல்லை... பட் பெரியவா ஆசைக்காக நான் மறுக்கலை... ஏன்னா எனக்குள்ள எனக்கான ஆள் இவன்தான்னு நான் யாரையும் முடிவு பண்ணி வைக்கலை.  ஆனா இப்ப என்னால ஒத்துக்க முடியாது... அதுபோக பார்த்தாவோட மனசும் என்னோட மனசும் ஒத்துப் போகுமா தெரியலை... ம்... அப்புறம் உங்களை பார்த்ததும் நான் உங்களை விரும்பிட்டேன்னு நினைக்காதீங்க... உங்களைப் பற்றி அபி எங்கிட்ட சொல்லச் சொல்ல உங்கமேல ஒரு பற்றுதல்... நீங்க பார்த்தாவோட வந்தப்போ... பாட்டிக்கிட்ட பேசினப்போ... மத்தவாளுக்காக பரிந்து பேசுறது.... சமுதாயத்துல உள்ள சாதி ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து நிக்கிறது... உங்க பேச்சு... கவிதைகள்... சமுதாயம் குறித்த கருத்துக்கள் எல்லாமே என்னை அறியாமல் உங்க மேல ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திருச்சு....”

“அதுக்காக...?”

“அதுக்காகன்னா...?”

“சரி... நீங்க குரலை உயர்த்துறீங்க... அப்புறம் பேசலாம்...”

“இல்ல அவங்க எல்லாரும் வந்துட்டா நீங்க பேச மாட்டீங்க... அம்பேத் கூட எஸ்கேப் ஆயிருவீங்க... அப்புறம் உங்களை நான் எப்படி பிடிக்கிறது... இப்பவே சொல்லுங்க... என்னை லவ் பண்றீங்களா?”

“ஐய்யோ... என்னங்க நீங்க... அது எப்புடிங்க... நண்பனோட... சினிமாவுல வேணுமின்னா நிச்சயம் பண்ண பொண்ணை லவ் பண்ணலாம்... பாக்காம லவ் பண்ணலாம்... திருமணத்தன்னைக்கு கூட பெண்ணை லவ் பண்றேன்னு சொல்லலாம்.... ஆனா இது வாழ்க்கைங்க... உங்க அத்தை கையால ஒரு வாய் சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன்... எப்படி அவங்களை எல்லாம் ஏமாத்தச் சொல்றீங்களா...?”

“யாரு... ஏமாற்றச் சொல்றா..?  அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்கலைதானே..?” சுபஸ்ரீயின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

“இந்த மௌனத்தை நான் எப்படி எடுத்துக்கிறது... பிடிச்சிருக்குன்னா... பிடிக்கலைன்னா...” அவளின் குரல் உடைந்தது. முதல் முறை அவளின் குரல் உடைவதை உணர்ந்தவன் மெல்ல அவளைப் பார்த்தான்...  கண் கலங்கியிருந்தாள்.

“என்னங்க... எதுக்குங்க இதெல்லாம்...? வாழ்க்கை இதுதான்னு முடிவு செஞ்சி வச்சிருக்காங்க... இப்பப் போயி...”

“நம்ம வாழ்க்கையை நாம்தானே தீர்மானிக்கணும்... என்னோட வாழ்க்கையை தீர்மானிக்க அவங்க யாரு...”

“என்னங்க நீங்க... எல்லாம் பாத்துப் பாத்து செய்யிற பெத்தவங்க இதுல மட்டும் எப்படி தவறான முடிவெடுப்பாங்க... பார்த்தாதான் உங்களுக்கு சரியான ஜோடி... இதுல காதல் அது இதுன்னு... ப்ளீஸ் வேண்டாமே...”

“பெத்தவங்க பிள்ளைங்களோட திருமண விஷயத்துல எடுக்கிற முடிவு எப்பவுமே அவங்களுக்கு சாதகமானதுதான்... இதில் மட்டும் அவங்க விட்டுக் கொடுக்கமாட்டாங்க... அது எதுக்கு இப்போ... நாம விவாதம் பண்ண வரலை... விவாகம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்... உங்களுக்கு என்னை பிடிக்கலை... இனி பேசி என்னாகப் போறது... ஓகே... பார்க்கலாம்...” இனி இருந்தால் அழுது விடுவோமோ என்று நினைத்தவள் வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டு எழுந்தாள். “சுபா... ப்ளீஸ்...” என்றபடி அவளின் கையைப் பிடித்து உட்காரச் சொல்ல. அம்பேத்கார் அதைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். அவனின் பார்வையில் தெரிந்த உஷ்ணம் கண்ணனின் பிடியைத் தளர்த்தியது.


“என்னத்தான் இப்படிச் சொல்றீங்க... நீங்கதானே நம்ம வீட்டுல மூத்தவங்க... நீங்கதானே நல்லது கெட்டது எல்லாத்துலயும் முன்னால நிக்கணும்... அவனைச் சேர்க்க  உங்களை விட்டா வேறு யார் இருக்கா?” சரவணன் போனில் கெஞ்சுவது போலக் கேட்டான்.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் மாப்ள... ஆனா மாமா இப்பத்தான் ஊருக்குள்ள சாதிக் கொடி ஏத்தி போர்டெல்லாம் வச்சிக்கிட்டு திரியிறாரு... இவரு எப்படி சாதிச் சாக்கடைக்குள்ள இருந்து வருவாருன்னு நினைக்கிறே... அன்னைக்கு கொடியேத்துறேன்னு நின்னப்போ ராசுப்பய நாலு பயலுகளோட பதிலுக்கு போர்டு வைக்கணுமின்னு வந்திருக்கான்... நம்ம வாத்தியார் மாமாதான் அவனுகளை சத்தம் போட்டிருக்காரு... அவரு குரலுக்கு மதிப்புக் கொடுத்து ராசுவும் அவனோட வந்தவனுங்களும் போயிருக்கானுங்க... வாத்தியார் மாமாவுக்கு அவங்க சாதிக்குள்ள மதிப்பு இருக்கு... ஆனா அது எம்புட்டு நாளைக்கு சொல்லு... அந்தப் பயலுக ஒருநா அவரை எதுக்கமாட்டானுங்கன்னு என்ன நிச்சியம்... நாளைக்கு நம்ம மாமா எதாவது பண்ணினா எதுக்கிட்டு வருவானுங்களா மாட்டானுங்களா... உனக்கு அவரை திருத்த வழி தெரியலை... உனக்குத் தேவை வருசா வருசம் அவரு கொடுக்கிற அரிசி... நீ என்னைக்காச்சும் அவருக்கிட்ட இதெல்லாம் தப்பு... இந்த வயசுல இது தேவையான்னு கேட்டிருக்கியா... ஒருவேளை மூத்தவன் இருந்திருந்தா தட்டிக் கேட்டிருப்பான்... இங்க பாரு மாப்ள முதல்ல அவரை சாதிக்குள்ள இருந்து வெளிய கொண்டா... மத்ததை நான் பாத்துக்கிறேன்... புரிஞ்சதா...?” என்றான் ராமநாதன்.

“சரி... மாமா அடுத்த மாசத்துல ரெண்டு நாள் லீவு வரும்... அப்போ ஊருக்கு வர்றேன்... அப்பாக்கிட்ட பேசுறேன்...” என்றபடி போனை வைத்தான்.

ண்ணப்பன் மகனை வெட்டிக் கொன்று விட்டார்கள் எனச் சொன்ன வாசுவிடம் வெட்டியது சரியென வேலாயுதம் சொன்னதற்கு வாசுவின் பதில் என்ன...? அதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதா..? அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...) 

-பரிவைசே..குமார்.

3 கருத்துகள்:

  1. வாசுவின் பதிலறிய காத்திருக்கின்றேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. அருமையாக இப்போது இன்னும் சற்றுக் கூடுதல் விறுவிறுப்புடன் பயணிக்கிறது கதை. ஆவலுடன் தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி