செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மனசு பேசுகிறது : சாதிப் போர்வை போர்த்தும் தமிழக தேர்தல்

ங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணா அவர்களின் தந்தையார் எழுத்தாளர் திருமிகு. பாஹே (பாலசுப்ரமணியம் ஹேமலதா) அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியை கில்லர்ஜி அண்ணாவின் பதிவின் மூலமாக அறிந்தேன். ஸ்ரீராம் அண்ணா குடும்பத்தாருக்கு மட்டுமல்ல எழுத்துலகுக்கும் மிகப்பெரிய இழப்பு. ஐயாவின் கதை ஒன்றை சமீபத்தில் எங்கள் பிளாக்கில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. அருமையான எழுத்தோட்டத்தில் அற்புதமானதொரு கதை... ரொம்ப மனசு லயித்துப் படித்த கதை... அதைப் பற்றி கூட மனசின் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்.  உடல் நலமில்லாமல் இருந்தார்கள் என்பதை நண்பர்கள் மூலமாக அறிய முடிந்தது. இந்த இழப்பில் இருந்து ஸ்ரீராம் அண்ணாவும் அவரது குடும்பத்தாரும் மீண்டு வரவும்... ஐயாவின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

****

வைகோ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லி கடைசி நேரத்த்தில் மாறியது குறித்தான அரசியல் பேச விருப்பமில்லை. அவரின் முடிவு மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கும் என்று கூட சொல்லலாம். தேவர் சிலைக்கு மாலை போடச் சென்றவரை கருணாசின் (கூலிப்)படை தடுத்து நிறுத்தியதும் அதற்காக அவர் ஆவேசம் கொண்டு பேசியதும்... பல வரலாறுகளைச் சொன்னதும்... ஆம்பளையா இருந்தா தடுத்துப் பாரு... நான் வருவேன்... மாலை போடுவேன் எனச் சொல்லி அதைச் செய்து காட்டியதும் பக்கா அரசியல் என்று பலர் பேசினாலும் அவர் செய்தது சரியே என்று தோன்றியது.

சாதிகள் இல்லையடி பாப்பான்னு நாம பள்ளிக்கூடத்துல படிக்கிறோம்... ஆனா இன்றைய நிலையில் சாதிகள் இல்லா தமிழகம் இல்லையடி பாப்பான்னுதான் சொல்லணும்... இனி வரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்கணும்... அரசியல் முழுக்க முழுக்க சாதியை வைத்தே நடத்தப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கூட அந்தத் தொகுதியில் எந்த சாதி வாக்கு அதிகம் இருக்கோ அந்த அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுகிறார். அவ்வாறு நிறுத்தப்படும் போது அவர்கள் செய்யும் அடாவடிக்கு அளவில்லாமல் போய்விடுகிறது.

இன்றைய தமிழகத்தில் நமக்காக போராடிய... நமக்காக வாழ்ந்த தலைவர்களை எல்லாம் சாதி என்னும் வட்டத்துக்குள் கொண்டு வந்து கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் கூண்டுக்குள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யும் தலைவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக போராடியவர்கள்... போராட்ட காலங்களில் சிறை சென்றவர்கள் என்பதால்தான் இன்னும் சிறைக்குள் வைத்திருக்கிறோமோ..?

சரி விடுங்க... எல்லாருக்கும் பொதுவான தலைவர்களை சாதி வட்டத்துக்குள் ஏன் கொண்டு வரவேண்டும்... இப்படிக் கொண்டு வர அரசு எப்படி அனுமதிக்கலாம் என்று யோசித்தால் தலைவர்களை சாதி வட்டத்துக்குள் கொண்டு வரச் செய்வதே அரசியல்வாதிகள்தானே... இப்பப் பாருங்க... மக்கள் தலைவர் தேவரை முக்குலத்தோர் சமுதாயம் எடுத்துக் கொண்டு விட்டது. அவருக்கான ஜெயந்தி அன்று நடப்பதை எல்லோரும் அறிவோம். வெள்ளையனை எதிர்த்து தூக்குக்கயிறை முத்தமிட்ட மருது சகோதரர்களை அகமுடையர் சமுதாயமும் வெள்ளையரை எதிர்த்து பிரங்கிமுனையில் கட்டி சுடப்பட்ட வீரன் அழகுமுத்துவை யாதவர் சமுதாயமும் வ.உ.சியை பிள்ளைமார் சமுதாயமும் எடுத்துக் கொண்டன. இப்படி வேலு நாச்சியார், இம்மானுவேல், அம்பேத்கார் என ஒரு நீண்ட பட்டியலில் அண்மையில் நாடர் சமூகம் காமராஜரையும் இணைத்தது. இதையெல்லாம் விட கேலிக்கூத்தாக ஒரு பதாகையில் பாரதியை ஐயர் சமூகம் அபகரித்துக் கொண்டது.

இதெல்லாம் எவ்வளவு கேவலமான செயல்... மக்களுக்கான தலைவர்களை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமே ஒழிய ஒரு சமூகம் கொண்டாடக் கூடாது. அவர் எங்கள் உரிமை என மரியாதை செய்ய நினைப்போரை தடுத்தலும்... அடிதடி... கலவரம்... வெட்டுக் குத்து... சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு என போவதும் எந்த வகை அரசியல்..?  நாம் சாதியை ஒழிப்போம் என்று சொல்லி சாதிகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தத் தேர்தல் பல இடங்களில் சாதீய மோதல்களுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் அதற்கான வேலையை அழகாகச் செய்து வருகிறார்கள். என் சமூகமே இங்கு அதிகம் எனவே நாந்தான் வெற்றி பெறுவேன் என ஒரு வேட்பாளரால் பேட்டி கொடுக்க முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சை இன்று கேட்க நேர்ந்தது. என்ன அருமையான பேச்சு... நீ பகவத் கீதை படிக்கலாமா...? கண்ணகி பற்றி பேசலாமா...?  அது வேறு மதம் சார்ந்தது அல்லவா...? என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு... மதம் இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்குள் வந்ததுதான்... ஆனால் கண்ணகியும் சீதையும் அதற்கு முன்னே இருந்தே வாழ்கிறார்கள்... அவர்கள் என் ஆயாவும் பாட்டியும்... நான் படிக்காமல் யார் படிப்பார்...? என்று மதவாதிகளுக்கும் ஜாதீய சண்டாளர்களுக்கும் சாட்டையடி கொடுத்துப் பேசியிருக்கிறார். உண்மைதான் நாம் இந்தியர்கள்... நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நினைத்து வாழ்ந்தாலே போதும்... இந்த சாதியும் மதமும் காணாமல் போகும்.


பசும்பொன் கண்டெடுத்த தேவரோ... வீரமங்கை வேலு நாச்சியாரோ... மருது சகோதர்களோ... வீரன் அழகுமுத்துவோ... இம்மானுவேலோ... கப்பலோட்டியோ தமிழனோ... அம்பேத்காரோ.... கண்ணகியோ... கர்மவீரரோ... அப்துல்கலாமோ.... பாரதியோ...  இன்னும் விடுபட்ட தலைவர்கள் பலர்... இவர்கள் எல்லோருமே மக்கள் தலைவர்கள்... மக்களுக்காக தங்கள் வாழ்வைத் தொலைத்தவர்கள்... இவர்கள் சாதிக்குள் சிரிக்க நினைக்கவில்லை... தயவு செய்து இவர்களை எல்லாம் சாதிக்குள் வைத்து அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்காக சாதீய மோதல்களை உண்டாக்காதீர்கள்... அழிவு என்பது நமக்குத்தான் என்பதை உணருங்கள். ஒரு தலைவனுக்கு மாலை இட ஒருவன் வருகிறான் என்றால் அவனுக்கு அந்தத் தலைவன் மீது எவ்வளவு பற்று இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.

இவர் இந்தச் சாதிக்கானவர்... இவர் எங்கள் சாதியின் சொத்து என்றால் அவருக்கு அந்தச் சமூகம் சார்பாக நடக்கும் விழாக்களில் அரசியலில் பெரும் பதவி வகிக்கும் மற்ற சாதியினரை ஏன் கூப்பிடுகிறீர்கள்... ஏன் மாலையிட அனுமதிக்கிறீர்கள்...? சாதி என்பது ஊறுகாயாக இருக்கட்டும் உள்ளம் எங்கும் நிரம்ப வேண்டாம்.

வைகோ பேசியது அங்கு பிரச்சினை பண்ணினவர்களைப் பார்த்து என்பதை அந்தப் பேச்சைக் கேட்ட அனைவரும் அறிவர். ஆனாலும் இன்று காலை பத்திரிக்கைத் துறையில் இருக்கக் கூடிய ஒரு நண்பர் 'தேவர் சமூகத்தினரைப் பார்த்து ஆம்பளையா என்று பேசிய வைகோ, சாதி மோதலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்' என்று முகநூலில் பரப்புரை செய்கிறார். இவர்களைப் போன்றோர்தான் சாதீய மோதல்களுக்கு வித்து... இவர்கள்தான் மோதல் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்... இவர்களே தமிழகத்தை அழிக்க வந்த விஷக்கிருமிகள்... முதலில் இவர்கள் மாற வேண்டும்... மாற்றம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மாறவிடாமல் தடுப்பவர்கள் இவர்கள்... இவர்கள் மாறினால் எல்லாம் மாறும்.

வைகோ பிரச்சினை முடிந்து சென்ற பின்னர் ஒரு நபர் பூட்டையும் சாவியையும் கேட்டு போலீசிடம் சண்டையிடுகிறார். போலீஸ் விவரமாய்ச் சொல்லி புரிய வைக்க அவர் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான போலீஸ்காரர் "நீங்கள்லாம் எத்தனை வருசம் ஆனாலும் திருந்தமாட்டீங்க..." என்று சொல்கிறார். இதுதான் உண்மை... இதுதான் நிதர்சனம்... நாம் எப்போதும் திருந்தப் போவதில்லை... சாதியைக் கட்டிக் காப்போம்... சமுதாயம் தழைத்து ஓங்கும்...
-'பரிவை' சே.குமார். 

9 கருத்துகள்:

  1. அந்தச் சாதியை வைத்து அரசியல் நடத்தி மக்களைத் தூண்டி விடுபவர்கள் அரசியல்வாதிகள்தான்.

    அப்பா பற்றிய வரிகளுக்கும் ஆறுதல்களுக்கும் நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் சார் அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்....

    மக்களை பிரித்து வைத்திருந்தால் தானே இவங்க பிழைப்பு பிரச்சனையில்லாமல் இருக்கும்.... சாதி அங்கீகாரம் கொண்டாடும் கட்சிகளையும், வேட்பாளர்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம் அப்பா அவர்களை பற்றி நீங்கள் சொன்னது சரியே. நல்ல எழுத்தாளர். நல்ல மனிதநேயம் மிக்க மனிதர். குடும்பத்தினர்களுக்கு ஆறுதலை இறைவன் தருவார்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி

    ஜாதியை மக்கள் மறக்க நினைத்தாலும் ஓட்டுப்பொறுக்கிகள் மறக்க விடமாட்டார்கள்

    அந்த வைகோ போட்டோவை மாற்றுங்கள் பாவம் அவரை ஜெயிலுக்குள் பார்ப்பது போல இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி

    பதிலளிநீக்கு
  6. பாஹே அப்பாவிற்கு அஞ்சலி வணக்கங்கள்.

    சாதி ஹும் இதைக் கேட்டுக் கேட்டு மனம் நொந்துவிட்டது குமார்...இது ஒழியும் போதுதான் நல்லது நடக்கும்.

    இம்முறை வலைத்தளங்கள் புகுந்து புறப்பட்டு எழுத்வதால் நிச்சயமாக அதன் தாக்கம் இருக்கும் என்று நினைக்கின்றேன் பார்ப்போம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க வைக்கும் சிறப்புப் பதிவு

    பதிலளிநீக்கு
  8. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தை ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    சாதியை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரியே

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி