கிட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கியது. அலுவலகம், வீடு என எங்கும் நகராமல் நகர்ந்த வாழ்க்கைக்கு நேற்றைய மாலையில் கடற்கரையில் பேசிச் சிரித்த நிமிடங்கள் மனதை மடை மாற்றி விட்டதாக உணர முடிந்தது.
அலுவலகத்துக்காக வியாழன் இரவு PCR சோதனை செய்திருந்தாலும் நேற்று பனிரெண்டு மணிக்குத்தான் பரிசோதனை முடிவு வந்தது. அதுவரை ஷார்ஜா செல்லும் எண்ணமெல்லாம் இல்லை... காலையில் பால்கரசு கேட்டபோது வரவில்லை என்றுதான் சொல்லியிருந்தேன். போய் விட்டு வந்தால் இரண்டாவது தடுப்பூசி போட்டு இருபத்தெட்டு நாட்கள் ஆகாததால் பயணம் செய்த நாளில் இருந்து முறையே 4,8 ஆகிய நாட்களில் PCR டெஸ்ட் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்ட வேண்டிய கப்பம் மிகப்பெரிய தொகை என்பதால் எதற்குத் தேவையில்லாத வேலை என்றுதான் தோன்றியது. இருப்பினும் ஒரு மணிக்கு சரி சென்று வரலாம் எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்குமென நினைத்துப் பால்கரசுயுடன் பேசியதும் முஸாபாவில் இருந்து அபுதாபி கிளம்பி வந்து விட்டார்.
அபுதாபியில் இருந்து ஷார்ஜாவில் ஆசிப் அண்ணன் வீட்டுக்குப் போய், (எத்தனை முறை போனாலும் ரெண்டு மூணு சுத்துச் சுத்தித்தான் அண்ணாச்சி வீட்டுக்குப் போக வேண்டி இருக்கு என்பது தனிக்கதை) அங்கிருந்த ராஜாராம், பிர்தோஷ், பிலால், பாலாஜி அண்ணன், ஆசிப் அண்ணனுடன் நீண்டதொரு பயணத்தின் பயணக் களைப்பைப் போக்கும் விதமாக கொஞ்ச நேரம் சிரித்து மகிழ்ந்து டீக்குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம் முதுபெரும் எழுத்தாளரும் வட்டார வழக்கின் ஆணி வேருமான கதை சொல்லி கி.ராவின் இரங்கல் கூட்டம் நடக்க இருந்த உம்-அல்-குவைனின் மாங்குரோவ் சதுப்பு நிலக் கடற்கரை நோக்கி.
எத்தனையோ எழுத்தாளர்கள்... பாலாஜி அண்ணன் பாணியில் சொல்லப் போனால் தலைப்பிரட்டை எழுத்தாளர்கள் வட்டார வழக்கெல்லாம் கதை எழுதச் சாத்தியமா என்று முகத்துக்கு நேரே சொன்ன போதிலும் தான் என் வட்டார வழக்கில்தான் எழுதுவேன், என் மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியில் சொல்லத்தான் செய்வேனென்ற முடிவில் மாறாமல் நின்று, நிறை வாழ்வு வாழ்ந்து, அவருக்குப் பின்னே வட்டார வழக்கில் கோலோச்சிய நிறைய எழுத்தாளர்களுக்கு ஆலமரமாய் இருந்து சமீபத்தில் மறைந்த கி.ராவின் சாவு, ஊரில் சொல்வது போல் கல்யாணச் சாவு... அப்படிப்பட்ட சாவுக்கான இரங்கல் கூட்டம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருந்தது... அதுதான் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் சிறப்பு.
கருப்புப் பட்டை அணிந்து அமைதியாய் உட்கார்ந்து பிழியப் பிழிய அவரின் நினைவைக் கொட்டி, இருக்கும்வரை அவர் எப்படி இருந்தார் என்றெல்லாம் நமக்குத் தெரிந்திருக்காது... இறந்த பின் இப்படி வாழ்ந்தார், இப்படி எழுதினார் எனக் கூட்டத்தின் முன் ஒப்பாரி வைப்போம். ஆளாளுக்கு இறந்தவரின் முகத்துக்கு முன் வந்து சுபஹான் அண்ணன் சொன்னது போல் முகஸ்துதி செய்ய ஆரம்பிப்போம். ஒப்புக்கு ஒப்பாரி வைத்துவிட்டு 'நான் பேசுனது சரிதானே தோழரே..?' என்ற கேள்வியோடு அடுத்த இழவுக்காகக் காத்திருப்போம். அப்படியெல்லாம் இங்கு எதுவும் நடக்கவில்லை... எப்பவும் போல் கல்யாணக் கூட்டம்தான்... அதே ஆட்ட பாட்டம்தான்... அன்போடு அணைத்தலும் உண்டு மகிழ்ந்தலும் எப்பவும் போல் மாறாமல் நேற்றைய கடற்கரை மணலிலும்... இந்தச் சந்திப்புக்காக பதினெட்டு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது... கி.ராவின் 'புறப்பாடு' எங்கள் குழுமத்தின் கூட்டத்தை மீண்டும் வண்டிப்பாதையில் நகர்த்தி வைத்திருக்கிறது. சில இடங்களில் நொடியும் வதியும் இருந்தாலும் பயணம் எப்பவும் போல் இனியும் சிறப்பாகவே இருக்கும்.
மாங்குரோவ் கடற்கரைக்குள் போக காருக்கு இருபது திர்ஹாம் வாங்குகிறார்கள்... அங்கு அப்படி என்ன வசதி இருக்குன்னு இந்தப் பணம் என்று தெரியவில்லை... உள்ளே சென்று இடம் பிடித்து அமர்வதில் இங்கா அங்கா என்ற கொஞ்ச நேர அலசலில், விளக்குக்கு அருகில் அமர்வோம் என்ற பிலாலின் சொல்லே வென்றது... ஆளுங்கட்சியில்ல... பாய் விரித்து அமர்ந்ததும் வடையும் டீயும்... அதை முடித்த பின்தான் இரங்கல் கூட்டமே. எங்களுக்கும் பசிக்கும்ல்ல... சாப்பாடு முக்கியம்.
கூட்டத்தை எப்பவும் போல் எங்கள் 'மேய்ப்பர்' ஆசிப் அண்ணன் தொடங்கி வைத்து ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தச் சொன்னார். பின்னர் கி.ரா. பற்றிப் பேச வந்த சகோதரர் பிலால் கி.ராவைப் பற்றிப் பேசி, அவருக்குத் தமிழக அரசு கொடுத்த மரியாதையைப் பற்றிச் சொல்லி, அவர் தி.மு.கவின் அமீரக முக்கியப் புள்ளி என்பதால் கட்சி சார்ந்து கொஞ்சம் அதிகமாகவே பேசியதாகத் தெரிந்தது இருந்தாலும் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைத்த மரியாதைக்கான நன்றியாகவே தெரிந்தது. அவரின் பேச்சு எப்பவும் போல் சிறப்பு.
அடுத்துப் பேசிய சகோதரி ஜெஸிலா, கி.ராவின் ஒரே ஒரு கதையைத்தான் நான் படித்தேன் என்றும் அந்தக் கதை எவ்வளவு அழகாக எழுதப்பட்டிருக்கிறது என்றும் அதை எழுதிய போது அவருக்கு முப்பத்தைந்து நாப்பது வயதுக்குள்தான் இருந்திருக்கும் என்றும் சொல்லி, ஒரு பேருந்துப் பயணத்தில் நிகழ்வுதான் கதை என்பதையும் ஒரு வித சோகத்துடன் பயணிகள் பயணிப்பதாய் நகரும் கதையில் ஒரு இளம்பெண் ஏறியவுடன் ஒவ்வொருவர் முகத்திலும் ஏற்படும் மகிழ்வை அதில் பயணிக்கும் மருத்துவனாய் தன்னை நிறுத்திக் கதைசொல்லி கி.ரா. எழுதியிருப்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். இளம்பெண்ணைக் கண்டதும் எப்படி மாறினார்கள் என்பதற்கான உதாரணத்தை அவர் எங்கள் முன் வைத்த போது அஞ்சலிக் கூட்டத்தில் சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.
அந்தக் கதையில் ஒவ்வொருவரின் பார்வையும் ஆரம்பத்தில் தண்ணீர் காணாது வறண்டு போய்க் கிடக்கும் எங்கள் பகுதியைப் போல் இருந்து அந்தப் பெண்ணின் வரவுக்குப் பின் காவிரி பாயும் தஞ்சை போல் ஆனது என்பதை மிக அழகாக, தான் பார்த்து ரசித்ததைப் போல் கி.ரா எழுதியிருக்கிறார் என்பதை ரசனையோடு விவரித்தார். கடுகடுன்னு இருக்க நடத்துனர் கூட டிக்கெட்டைக் கிழித்து ஒரு குழந்தையின் கையில் கொடுப்பதாகவும் அந்தக் குழந்தை அதைக் காற்றில் பறக்க விட, அவர் சிரித்தார் என்பதாய் முடியும் கதையை எப்பவும் போல் அழகாகச் சொல்லி முடித்தார்.
எப்பவும் மேடை ஏறாமல் கேமராவுடன் இருக்கும் சுபஹான் அண்ணன், நானும் பேசுறேன்னு முன் வந்து முகஸ்துதி என்னும் கதையைப் பற்றிப் பேசினார்... கரணம் தப்பினால் மரணம்ன்னு சொல்ற மாதிரி பல இடங்களில் பயணப்பாதை நொடிக்குள் விழுந்திருமோ என்ற பயம்... ஏன்னா அவர் கதை சொல்லி எல்லாருமே கேட்டிருக்கிறோம்... ஒரு நொடியில் பல மாற்றங்கள் நிகழும் என்றாலும் நொடியில் விழாமல் வண்டியை லாவகமாக ஓட்டிவிட்டார்.
சிங்கம், நரி, கழுதைதான் கதையில்... சிங்கத்துக்குப் பசி, நரி அதற்கு உணவு கொண்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்று கழுதைக் குட்டியைப் பார்த்து நீ அழகி , உன்னை சிங்கராஜாவுக்கு கட்டி வைக்கிறேன் என முகஸ்துதி பாடி அழைக்க, அது கத்துமே.... அதான் கர்ஜிக்குமேன்னு கழுதைக்குப் பயம், அத்லெல்லாம் கத்தாது வா நீதான் ராணின்னு சொல்லிக் கூட்டிவர, கழுதையைப் பார்த்ததும் கிழட்டுச் சிங்கம் கர்ஜிக்க, உடனே கழுதை ஓட்டமெடுத்து விடுகிறது. சிங்கத்தை நரி திட்டிவிட்டு மீண்டும் கழுதையுடன் வருகிறேன்னு சொல்லிக் கிளம்ப, இனி அது வருமான்னு சிங்கம் கேட்க, அதென்ன அதோட அப்பத்தாவையே கூட்டியாரேன்னு சொல்லிட்டு (இந்த இடத்துல எல்லாம் மனுசன் நொடிக்குள்ள விழாம வண்டி ஓட்டிய லாவகம் இருக்கே... அதெல்லாம் சொன்னாப் புரியாது... நேரில் அனுபவிச்சிருக்கணும்... பாலாஜி அண்ணன் கடைசி வரை 'அவந்தான்டா எம்மவே... நீ எதுக்கு ஒப்பாரி வைக்கிறே...' பாணியில சிரிப்பை அடக்க முடியாமல் டிஷ்யூ பேப்பரை வாயில் அடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்) மறுபடியும் கழுதை முன்னாடி முகஸ்துதி பாடி, நரி நயமாய்க் கூட்டியார... இந்த முறை சிங்கம் ஒரே அடியில் கழுதையைக் கொல்கிறது.
சாப்பிடலாம் வான்னு நரி சொன்னதும் 'அட இருப்பா... கடற்காற்று கசகசன்னு இருக்கு'ன்னு சட்டையை மாற்றி பனியன் போட்டுக் கொண்டு வந்த பால்கரசுவைப் போல, பசியில குளிக்காம கிடந்தேன்... குளிச்சிட்டு வர்றேன் சாப்பிடுவோம்ன்னு சொல்லிட்டு சிங்கம் குளிக்கப்போக, நரிக்கு முன்னால கிடக்க கழுதைக் கறி மேல ஆசை... அதுக்கு நாக்கு ஊறப் பசிக்க ஆரம்பிச்சிருது... நரி டாக்டருக்குப் படிச்சிருக்கும் போல எங்க தட்டுனா ஓடு தனியா வரும் மூளையை எடுக்கலாம்ன்னு படிச்சிருந்ததால அங்க தட்டி மூளையை மட்டும் எடுத்துச் சாப்பிட்டு விட்டு நல்லபிள்ளையாய் காத்திருக்கு... சிங்கம் வந்ததும் என்ன மண்டை ஓடு தனியா இருக்க மாதிரி தெரியுதுன்னு யோசிக்க, நரியோ 'அட அது மூளையில்லாத கழுதை... முதல்ல கத்துறேன்னு பயந்து ஓடிட்டு மறுபடியும் கூப்பிட்டதும் திரும்ப வந்துச்சு பாத்தியா... அப்பவே எனக்குச் சந்தேகம்... அதுக்கு மூளை இருக்காதுன்னு நினைச்சேன்... அதான் தட்டிப் பார்த்தேன்... உண்மையிலேயே மூளை இல்லை' என்று சொன்னதை சிங்கமும் நம்பிச் சாப்பிட ஆரம்பித்தது எனக் கதையை முடித்தார். சிறப்பாகவே இருந்தது.
அடுத்தாக ஆசிப் அண்ணன் 'புறப்பாடு' கதையைப் பற்றிப் பேசினார்... கதையைப் பற்றிச் சொல்வதை விட அதை அப்படியே வாசித்தால் இன்னும் சுவராஸ்யமாய் இருக்கும் எனக் கதையை வாசிக்க ஆரம்பித்தார். கதை மூன்று பெண்டாட்டியும் ரெண்டு தொடுப்புமாக வாழ்வை அனுபவித்த அண்ணாரப்பக் கவுண்டரின் மரணம் தொடர்பானது. செத்துருவாருன்னு நினைச்சாலும் சாவைப் பக்கத்தில் அண்ட விடாமல் இழுத்துக் கொண்டு கிடக்கும் பெரிசு, போயிருவாருய்யா என அடித்துச் சொல்லியும் இன்னும் இழுத்துக் கொண்டு கிடப்பதால் தனது மருத்துவம் பழிக்கவில்லையே என வருந்திக் கிடக்கும் பண்டிதன் சம்முகம், அவரின் சாவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் ஊரும் உறவும் எனக் கதை நகர்கிறது.
இதைக் கொடுத்தால் சாவார்... அதைக் கொடுத்தால் சாவார் என எதை எதையோ கொடுத்தும் ஆள் புறப்பட மறுக்கிறார். பசும் பால் கொடுத்தா எங்கிட்டுய்யா சாவாரு, திக்கா எருமைப்பாலைக் கொடுக்கணும்... அப்ப ஆட்டுப்பால்..? யோவ் அதைக் கொடுத்து ஆளை எழுப்பிவிடவா என அவரை வழி அனுப்பி வைக்க நடக்கும் முயற்சிகள் ஏராளமாய் எல்லாமே சிரிக்க வைக்கும் உரையாடல்கள். அம்மாவாசை வருதுல்ல... அப்பத் தூக்கிரும்ன்னு ஊரில் சொல்வார்கள் அதைபோல் இங்கும் பௌர்ணமி அமாவாசைக்களை ஆவலோடு எதிர்பார்த்து சிக்ஸ் அடிப்பார் தோணி என நினைக்கும் போது கட்டை வைப்பதைப் போல ஆகிவிடுகிறது. அமாவாசைகள்தான் வந்து போகின்றன கவுண்டரோ கல்லுப் பிள்ளையாராய் கிடக்கிறார்.
முடிவாத் தலைக்கு ஊத்தலாம் என ஒரு மனதாய்த் தீர்மானமெடுத்து பண்ணி எண்ணெயை உடலெல்லாம் சலும்பத் தேய்த்துத் தண்ணி ஊத்துறாங்க... அப்ப அவரைத் தாங்கிப் பிடிக்கும் இளைஞன் தண்ணியில நனைஞ்சதுல உடம்பு ஆட, வாடையில் (குளிர்) நடுங்கியபடி பற்கள் அடித்துக் கொள்ள, என்னால முடியலைன்னு சொன்னப்போ பக்கத்துல நின்னு அதைப் பாக்குற வைத்தியருக்கு சிரிப்புத் தாங்க முடியாம உச்சாந்தலையில அடிச்சிக்க, வாயில் வைத்திருந்த போயிலைச் சாறு புரையேறுகிறது... அப்ப 'டேய் சாகப்போற கிழம் குளிரத் தாங்கிக்கிட்டு உக்காந்திருக்கு... நீ என்னடான்னா...' அப்படின்னு கேலியும் கிண்டலுமாய் அவரின் புறப்பாட்டைத் தொடங்க முயற்சிக்கிறார்கள்... என்ன செய்தாலும் நான் சாகமாட்டேன்னு கவுண்டர் கம்முன்னும் போய்ச்சேர மாட்டேங்கிறாரே என ஊரு உம்முன்னு காத்திருக்கு.
அப்புறம் ஒரு வழியா அவனுக்கு அவனோட மண்ணு மேல ஆசையின்னு இன்னொரு பெரிசு சொன்னதைக் கேட்டு கரிசல் மண்ணைக் கொஞ்சமாக் கரைச்சிக்கிட்டு வாயில ஊத்தி எப்படியோ பெரிசுக்கு சங்கு ஊதிடுறானுங்க... அப்புறம் அவரின் புறப்பாடு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது... பின்னே கல்யாணச் சாவுல்ல... நல்லாவா செத்தாரு... இவனுகதானே கொன்னானுங்க... இருந்தாலும் பெரும் சாவு... ஆட்ட பாட்டமென அமர்க்களம்... முன்பெல்லாம் எங்க ஊர்ப்பக்கம் ஒப்பாரி வைக்க ஆட்களைக் கூட்டி வருவாங்க (எங்க பக்கம் அதுக்கு மாரடிக்கிறதுன்னு சொல்வாங்க) இங்க அதை மேளக்காரனுங்களே செய்யிறானுங்க... 'கத்திரிக்காய் எங்களுக்கு... கைலாசம் உங்களுக்கு'ன்னு பாடி நெஞ்சில அடிச்சிகிறானுங்க... எப்பவுமே ஊருல இருக்க நடுத்தர வயசுக்காரப் பொம்பளைங்களுக்கு கிசும்பு அதிகமிருக்கும்... அப்படி ஒருத்தி 'ஏப்பே... பாத்துப்பே... மெல்ல அடிச்சிக்கோ... நெஞ்சில ரத்தம் கட்டிக்கப்போவுதுன்னு சொல்லிச் சிரிக்கிறா... எங்க பங்கம்ன்னா அடேய் பாத்துடா... கெழவன் கெளம்புறதுக்குள்ள நீ பொட்டுன்னு போயிருவே போலேன்னு பொட்டுல அடிச்சாப்புல சொல்லிட்டுப் போயிருங்க... இங்க இந்தப் பொம்பள ரத்தம் கட்டிக்கும்ன்னு சொன்னது கொஞ்சம் பரவாயில்லைன்னு தோணுச்சு.
எல்லா அமர்க்களமும் பண்ணித் தூக்கிட்டுப் போறானுங்க... சுடுகாட்டுப் பாதை நொடி நிறைந்த வண்டிப்பாதைதான்... நொடியில ஏறி இறங்கும் போதெல்லாம் வண்டியோட அலம்பல்... அதாங்க ஆட்டம் (இங்க கி.ரா இதை லம்பல்ன்னு சொல்கிறார்) ஜாஸ்தியா இருக்கு... கவுண்டரோட தாடையில கட்டுன கட்டு மெல்ல இறுக்கம் தளர, தலை வலம் இடமாக ஆட ஆரம்பிக்கிறது... அது நான் போமாட்டேன்னு சொல்ற மாதிரி இருந்துச்சுன்னு கதையை முடிக்கிறாரு... இதை அண்ணன் சொல்லி முடித்த போது சிரிப்புக்குப் பஞ்சமில்லை. ராஜாராமெல்லாம் ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.
இழுத்துக்கிட்டே கெடக்கு... பாக்கச் சகிக்கலை... இப்படிக் கெடக்கதுக்கு பொயிட்டா நல்லது எனச் சொல்லித்தான் இந்த பால் ஊத்துதல், பாலில் நெல்லைப் போட்டு ஊத்துதல் எல்லாம் கிராமங்களில் செய்யப்படுகின்றன. இங்கே ஒரு கிராமமே சேர்ந்து ஒருவனை வழியனுப்ப, எடுக்கும் முயற்சிகள் அவரின் கஷ்டம் பொறுக்காமல் செய்யும் கருணைக் கொலைதான் என்றாலும் இதுவும் கொலையே.
வேறு யாரும் பேசவில்லை என்பதால் கி.ரா.வுக்கான இரங்கல் கூட்டம் இத்துடன் முடிவுக்கு வந்தது. நால்வர் பேசினாலும் நற்சுவை... கல்யாணச் சாவுக்கு இதைவிட வேறெப்படி இரங்கல் கூட்டம் நடத்துவது... இப்படித்தான் மகிழ்வாய் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும்... ரொம்பவும் மகிழ்வாய் நடத்தினோம்...'அன்னாரது எழுத்துப் பணி...' என்றெல்லாம் நீட்டி முழக்காமல் மூன்றே மூன்று கதைகளுக்குள் முக்கனிச் சுவையாய் கி.ராவை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். இரண்டு மணி நேர இரங்கல் கூட்டம்... அவந்தான்டா மயே..., சார் நான் லைப்ரேரியன், ஓ கங்குராஜூலேசன் என மகிழ்வாகவே நகர்ந்தது.
பலர் வரமுடியாத சூழல் என்பதால் நிறையப் பேசக்கூடியவர்கள் இல்லாதது நிகழ்வுக்கு சற்றே சோர்வுதான் என்றாலும், தொடக்க ஆட்டக்காரர் சசி அண்ணனும், இடைநிலை ஆட்டக்காரர் சுரேஷ் அண்ணனும் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்றாலும், பேசிய நால்வரும் டுவெண்டி20 நாயகர்களாய் அடித்தாடி விட்டதால் நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது.
முதல் மரியாதை ராதா, நான் சரியாப் பேசுறேனா தோழர், அண்ணேன்னுதானேடா சொன்னேன் அதுக்கேவா, டேய் அவந்தான்டா மயேன், லைப்பேரியன் சார், கங்குராஜூலேசன், அலோ நான் வைஜெயந்தி ஐபிஎஸ் பேசுறேன், ஐபிஎஸ் கூடல்லாம் எனக்குத் தொடர்பில்லையேடா, பிலால் முகத்தில் பிரகாசம், தலைப்பிரட்டை, தொந்தியின் மேல் சாஜர் வச்சி டீக்குடித்தல் போன்ற சொற்றொடர்களுக்குப் பின்னே இருக்கும் நகைச்சுவைக் கதைகளை சம்பந்தப்பட்ட நண்பர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுத் தெரிந்து சிரித்துக் கொள்ளுங்கள்.
அதன்பின் நீண்ட நேர மகிழ்வான பேச்சுக்கள், பிரியாணி என முடித்துக் கிளம்யும் போது ராஜாராம் முஸாபா என்பதால் நான் சுபஹான் அண்ணனுடன் பயணிக்க, போகும் போது பாலாவுடன் வழித்துணைக்கு இளையராஜாவை இணைத்துக் கொண்டு பயணித்தது போல், திரும்பும் போது சுபஹான் அண்ணன் சினிமா, நடிக நடிகையர் எனக் கதைகள் பேசிக் கொண்டே வந்தார்.
அபுதாபி-துபை எல்லையில் PCR ரிசல்டைக் காட்டும் போது அவர்கள் காட்டிவிட என் செல்போனில் இணையம் இல்லாததால் காத்திருந்த கதை பெரிய கதை, எங்களால் சுபஹான் அண்ணனும் நிற்க வேண்டிய சூழல்... அவர் காத்திருந்தது மனதுக்கு வருத்தமாக இருந்தது. நல்லவேளை பால்கரசு இருந்ததால் நீங்கள் மூவரும் வாருங்கள் என அவர்கள் கிளம்ப முடிந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று பேப்பர் வாங்கியாச்சு... பேப்பர் கொடுக்கிறவன் நம்மூர்ல அரசு அலுவலரா இருந்திருப்பான் போல... கூடட்டும்... கூடட்டும்... அட இன்னும் கூட்டம் வரட்டும்ப்பான்னு வெளியில நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்துட்டு சாவகாசமா வந்து மெல்லக் கொடுத்தான். அதைக் கொண்டு வந்து காட்டினா, செல்போன்ல ஆப்பைத் திறந்து காட்டுங்கிறானுங்க... அடேய் அப்ரண்டிஸ்களா அது திறக்கலைன்னு தானே இம்புட்டு நேரம் நின்னு பேப்பர் வாங்கிட்டு வாரோம்... அந்தப் பேப்பர் இந்தா இருக்கேடா விட்டுத் தொலையேன்டான்னா, ஆப்பைத் திறந்து காட்டு அதைப் பார்த்தாத்தான் விடுவேன்... இல்லேன்னா துபை போன்னு நிக்கிறான். திரும்பத் திரும்பப் பேசுறே நீ வடிவேலு கணக்கா நின்னு ஆப்பை எடுத்துக் காமிச்சா, கைய வச்சி மேல ஒரு தள்ளு கீழ ஒரு தள்ளு ஆப்தானான்னு பாக்குறாராமாம்... போ... போன்னு சொல்ல, ஒருவழியா வீடு வந்து சேர்ந்தோம்.
மிகச் சிறப்பான சந்திப்பு... நீண்ட நாட்களுக்குப் பிறகு, மன அழுத்தம் நீங்கவும் வாய் விட்டுச் சிரிக்கவும் எல்லாரையும் சந்திக்கவும் கி.ரா. மூலமாக ஒரு வாய்ப்பு. உண்மையில் அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்ததைப் போல மனம் குளிரும் ஒரு சந்திப்பு.
கரிசல் மண்ணின் எழுத்தாளர், கதை சொல்லி, வட்டார வழக்கில் கதை எழுத நினைப்போருக்கு ஆலமரம் கி.ராஜநாராயணனுக்கு அஞ்சலி.
-'பரிவை' சே.குமார்.
மகிழ்ச்சி. கி. ரா வுக்கு எனது அஞ்சலி.
பதிலளிநீக்குஅருமையான விவரிப்பு... சொன்னவிதம் அழகு...
பதிலளிநீக்குகி ராவின் இரங்கல் சந்திப்பு நிகழ்வு ப்ற்றி மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குமார்.
பதிலளிநீக்குகி ரா வுக்கு எங்கள் அஞ்சலியும்
துளசிதரன்
கீதா
(அங்கு மாஸ்க் எல்லாம் போட வேண்டியதில்லையோ குமார்? - கீதா)
அனைவரின் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅபுதாபியில் சட்டதிட்டம் கடுமை... துபையில் கடற்கரை ஏரியா என்பதாலும் இரண்டு வாக்சினேசனும் போட்டவர்கள் என்பதாலும் மாஸ்க் இல்லாமல் இருக்கலாம் என்பது எங்களுக்கு அன்றுதான் தெரியும் அக்கா.
அமீரக எழுத்தாளர்களைக் கண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குசுலைமான் ஐயா அங்கே இன்னும் இருக்கிறாரா.
தம்பி ,குசும்பன் இவர்களை எல்லாம்
அடையாளம் காண முடியவில்லை.
ஆசீஃப், ஜசீலா தெரிந்தது.
அருமையான இரங்கல் கூட்டம். அவருடைய
குணத்திற்கேற்ப நடந்திருக்கிறது. நன்றி குமார்.
சிறப்பாக தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். நிகழ்வின் நேரடியாக கலந்து கொண்ட உணர்வு கிடைத்தது. கல்யாண சாவை இப்படியன்றி வேறு எப்படிக் கொண்டாட முடியும்?
பதிலளிநீக்கு