செவ்வாய், 1 ஜூன், 2021

கி.ரா.வின் 'புறப்பாடு' போல் ஒரு நிகழ்வு

சென்ற வெள்ளியன்று கி.ரா. நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் ஆசிப் மீரான் அண்ணன் கி.ராவின் 'புறப்பாடு' என்னும் கதை பற்றிப் பேசினார். கதையைச் சுருக்கமாய் சொல்வதை விட, அப்படியே வாசிக்கிறேன் அப்போதுதான் அதிலிருக்கும் நகைச்சுவையும் வட்டார வழக்கின் சுவையும் உங்களால் ரசிக்க முடியும் எனச் சொல்லி முழுக்கதையையும் வாசித்தார்.

கதையில் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டு கிடக்கும் அண்ணாரப்பக் கவுண்டரைக் கருணைக் கொலை செய்ய உற்றாரும் ஊராரும் முயற்சிப்பது முக்கால்வாசியும் அவரின் ஊர்வலம் காவாசியுமாய்தான் இருக்கும் என்றாலும் அவரின் உயிரைப் பறிக்க பால் ஊற்றுதல், தலைக்கு ஊத்துதல் என என்னெல்லாமோ செய்து இறுதியாய் அவருக்குப் பிரியப்பட்ட வயலில் இருந்து கரிசல் மண் கொஞ்சமாய் எடுத்து வந்து கரைத்து ஊற்றிய மறுநாள் உயிர் போவதாய் நகைச்சுவையும் வட்டார வழக்கும் கலந்து அடித்து ஆடியிருப்பார் கி.ரா. 

மண்ணைக் கரைத்து ஊற்றுதல் என்பதை நான் கேள்விப்பட்டதில்லை... பாலூற்றுதல்தான் எங்கள் பக்கம் அதிகம். அதில் உயிரைப் பிடித்துக் கொண்டு போக வேறு சிலவற்றையும் கலப்பதுண்டு... அதெல்லாம் பிரம்ம ரகசியம். காதும் காதும் வச்சதுபோல் நிகழ்ந்து முடிந்துவிடும். முடிந்தது தெரிந்ததும் 'அய்யே... அப்பே'ன்னு கொன்ன உறவுகளே கொடூரமாய் அழவும் செய்யும். 

சனிக்கிழமை எங்கள் மாமா இறந்து போனார்... எங்கள் குடும்பத்தில் மூத்தவர்... அப்பாவின் தங்கை கணவர். எங்க அப்பா அம்மாவுக்கு அவர் அம்மான் (மாமா) முறைதான், எங்களுக்கும் அவர் மாமாதான். எங்க வீடும் அத்தை வீடும் அருகருகே என்றாலும் மாமா ஊரில் அதிகம் இருக்கவில்லை. கோயம்புத்தூர் பக்கம் சித்த வயித்தியரின் சமையல்காரராய் இருந்தார். ஊருக்கு வரும் போதெல்லாம் உணவில் உப்பு, உரைப்பு கூடாதென்பார்.. எங்களின் சின்ன வயதில் எல்லாம் அவர் ஊருக்கு எப்போதாவதுதான் வருவார். வயதாகி உடல் நலமில்லாதபோதுதான் ஊரில் வந்து இருந்தார். 

ஊருக்கு மேற்கே, எங்கள் கருப்பர் கோவிலின் தென்மேற்குத் திசையில் ஒரு அரசமரம், அதன் அடியில் ஒரு சுமாது (சமாதி) இருக்கும். அவர் எங்கள் ஊர் கருப்பர் கோவில் சாமியாடி என்பதும் அம்பலார் குடும்பத்தின் முந்தைய தலைமுறை என்பதும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. எங்கள் மாமாவும் அந்த வகையறாவைச் சேர்ந்தவர்தான் என்பதால் அந்தச் சுமாது மனிதருக்கும் இவருக்கும் நெருக்கமான உறவு முறை. எங்களுக்கு அவர்களின் உறவு முறை என்னவென்பதெல்லாம் தெரியாது, ஆனால் மாமா ஊரில் இருந்து வந்ததும் குளித்து விட்டு அங்கு போய் கும்பிட்டு விட்டுச் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டுத்தான் வருவார்.

சின்ன வயதில் மாடு மேய்க்கும் போது மாடுகளை மேய்ச்சல் திடலில் விட்டு விட்டு இந்தச் சுமாதில்தான் படுத்திருப்பது, அமர்ந்திருப்பது, கதை பேசுவது எல்லாம்... அது இறந்த மனிதன் ஒருவருக்கு கட்டப்பட்டது என்பது எங்களுக்கு எப்போதும் ஞாபகத்தில் இருப்பதில்லை. உச்சி உருமம் என்றெல்லாம் இல்லை... எந்த நேரம் என்றாலும் துண்டால் தூசியைத் தட்டி விட்டு அதில் படுத்திருப்போம். அந்த இடத்தில் ஒரு பயமும் இருப்பதில்லை. இதே சுடுகாட்டில் என்றால் படுப்போமா..? அந்தப் பக்கமே போகமாட்டோம் இல்லையா..?

மாமாவும் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்த பின்னர் அங்கு அடிக்கடிப் போவதும் அங்கே படுத்திருப்பதுமாய் இருந்திருக்கிறார். சமீப காலமாய் பெரும்பாலான நேரங்களை அங்குதான் செலவழித்திருக்கிறார். நான் செத்தால் என்னைச் சுமாதுக்குப் பக்கத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் சொல்லியிருந்திருக்கிறார். 

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக உடல் ரொம்ப மோசமடைந்து படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு பாகமாகச் செயலிழந்து, தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் மாறி, தொண்டைக்குழியில் மட்டும் உயிர் நின்றிருக்கிறது. அந்தத் துடிப்பு மட்டும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடங்கிவிடும் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி 'புறப்பாடு' நாயக்கரைப் போல புறப்பட மறுத்திருக்கிறார். இப்படியே எத்தனை நாளைக்குப் போட்டு வைப்பது என்ற பேச்சின் முடிவில்தான் சுமாது கதை வெளியாகியிருக்கிறது.

சுமாதுலயில்ல அடக்கம் பண்ணச் சொன்னார் என்ற பேச்சின் பின்னே அதெப்படி அங்கு கொண்டு செல்வது..? ஊர் வழக்கத்துக்கு மாறாக எதுவும் செய்யக் கூடாது எனப் பேசியிருக்கிறார்கள். சுமாது இருப்பது ஊருக்கு மேற்கே என்பதால் அந்தப் பக்கம் பிணம் கொண்டு போகக் கூடாது என்ற வழிவழியான முறைக்கு மாற்றாக செய்யக் கூடாது என்பதால் அங்கு கொண்டு போகாமல் சுடுகாட்டுக்குத்தான் கொண்டு செல்வார்கள் என்பது மாமாவுக்கு தெரிந்திருக்கும் அதனால் கூட இப்படி இழுத்துக் கொண்டிருந்திருக்கலாம்... எல்லாரும் கூடிப் பேசியதன் முடிவில் சுமாதுக்கிட்ட மண்ணெடுத்தாந்து கரைச்சி ஊற்றினால் உயிர் போய்விடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதையே செய்தும் இருக்கிறார்கள். அதன் பின்னேதான் உயிர் பிரிந்திருக்கிறது. 

எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் முதல்நாள்தான் அப்படியொரு கதையைக் கேட்கிறோம். அப்போது ராஜாராம் கூட நம்ம பக்கம் மண்ணெல்லாம் கரச்சி ஊத்திக் கேள்விப்பட்டது இல்லையில்லண்ணே என்றார். அடுத்தநாள் அந்த நிகழ்வு குறித்து நான் எழுதிக் கொண்டிக்கும் போது எங்க மாமாவின் இறப்புச் செய்தி வருகிறது. அதன் பின் மனைவியிடம் பேசும்போதுதான் அவருக்கு மண்ணைக் கரைத்து ஊற்றியதைச் சொன்னார். இறுதியாய் இழுத்துக் கொண்டிருந்த உயிரை நிறுத்த அந்த மனிதர் எதன் மீது பற்றுக் கொண்டிருந்தாரோ அதன்படி செய்யப்படும் என்பதை அறிந்திருந்தாலும் இது நான் முதல்முறை கேள்விப்பட்ட செய்தி. 

இதை கருணைக்கொலை, கொலை என்றோ அல்லது பாவம் கஷ்டப்படாமப் போகட்டும் என்றோ நிகழ்த்தப்பட்டதாய் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் உயிரை நாம்தானே பறித்திருக்கிறோம். இறுதி மூச்சை இழுத்துப் பிடித்திருப்பவர் மீண்டு(ம்) வரப்போவதில்லை என்ற நிலையில் அவரின் உடலின் பல பாகங்கள் செயல் இழந்த நிலையில் வேறு வழி தெரியாத சூழலில் செய்யப்பட்டதுதான் இது என்றாலும் அந்த மனிதரின் மனசுக்குள் ஏதேனும் ஓடிக் கொண்டிருந்திருந்தால்...? 

மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. இது கிராமங்களில் நிகழ்த்தப்படும் ஒன்று என்பதால் அவர்களைப் பொறுத்தவரை கஷ்டப்பட்டுக்கிட்டு கிடக்கிறதைப் பார்க்கச் சகிக்கலை அதான் பால் ஊற்றினோம் என்பதாய் சொல்லப்படும்... அப்படித்தான் இதுவும் மண்ணைக் கரைச்சி ஊற்றினோம் பொட்டுன்னு பொயிட்டாரு எனக் கலைந்து செல்வார்கள்.

இரண்டு வருடம் முன்பு ஊருக்குப் போனபோது எங்கள் ஊரில் இருக்கும் அப்பாவின் மற்றொரு தங்கை கணவரின் மரணம்... அப்படி ஒரு மரணத்தை நான் அதுவரை பார்த்ததில்லை... மரண வேதனை என்பதை மனிதர் அனுபவித்து மரணித்தார். காலையில் தேவகோட்டை போகும் போது எங்கம்மாவிடம் பேசிவிட்டுப் போகிறார். மதியம்தான் திரும்புகிறார்... நாங்கள் வெயில்தாழ ஊரில் இருந்து தேவகோட்டைக்கு வந்தபின், மச்சான் போன் செய்து சித்தப்பாவுக்கு ரொம்ப முடியலை ஒரு டாக்டரின் பெயரைச் சொல்லி அவர்க்கிட்ட கொண்டு போனோம் சரியாகலை, பின்னர் பூமிநாதனுக்கிட்ட கொண்டாந்தோம்... வாசலிலேயே பார்த்துட்டு மூணு மணி நேரம்தான் தாங்கும்ன்னு சொல்லி வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லிட்டார் என்றான்.

உடனே கிளம்பி ஊருக்குப் போனால், வயிறு பெரிதாக வீங்கியிருக்க, அவர் சிறுநீர் இறங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். எல்லாரும் சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள்... என்னென்னவோ வைத்திய முறைகள் செய்தும் ஒண்ணும் நடக்கலை... மூத்தரம் பெய்யணும் என்றதும் முன்பக்கமாய் கூட்டி வந்தால், எதுவும் நடக்கலை... மீண்டும் வீட்டுக்குள் கொண்டு போக, சிறிது நேரத்தில் மீண்டும் போகணும் என்றார்... அதேபோல் முன்னால் கொண்டு வர, எதுவும் நடக்கலை... மூன்றாவது முறை பின்பக்கமாகக் கூட்டிப் போக, வாசலை விட்டு இறங்கியபோது உயிர் போனது. அந்த மூணு மணி நேரம் சாகப் போகிறோம் என்பதை அறிந்து, எப்படியும் பிழைக்க வேண்டும் என அவர் பட்டபாடு... யாருக்குமே நேரக்கூடாத மரண வேதனை.

அவரின் மரணம் கூட இரண்டு கிட்னியும் செயலிழந்ததால் போராடி உயிர் போனது. இவரின் மரணத்துக்கு 'மண்ணே' முக்கியமானதாய் இருந்திருக்கிறது.

எது எப்படியோ எங்கள் குடும்பத்தின் மூத்தவரை இழந்திருக்கிறோம். மாமாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கல்கள். குமார்.

    மனம் ஏற்க மறுக்கும் நிகழ்வு. இறைவன்/இயற்கையின் படைப்பில் உருவாகும் உயிரை மாய்க்க நமக்கு உரிமை இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுந்தது அப்படி
    இந்தக் கருவில் ஒரு கதை கூட நான் எழுதி பாதியில் வைத்திருக்கிறேன். சில வருடங்கள் முன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு பிரசித்தமாகி, ஷன்பாக் எனும் நர்ஸ் நடைப்பிணமாக ஆஸ்பத்திரியில் ஏழு வருடங்கள் இருந்தது... வழக்காகி அதற்கு ஒரு பத்திரிகையாளர் போராடியது...அப்புறம் சுப்ரீம் கோர்ட் மெதுவாக விஷம் கொடுக்க (பாசிவ் பாய்சனிங்க்) அனுமதி கொடுத்தது பற்றி..வந்த போது

    கிராமத்தில் நடப்பது கோர்ட்டிற்கு வருவதில்லை அதுவும் பட்டென்று கருணைக் கொலை...அப்படி இக்கருவில் ஒரு கதை..வழக்கம் போல் பாதியில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இவ்வாறு யாருக்கும் நடக்க வேண்டாம்... ஆழந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி