கொரோனா... கொரோனான்னு அதன் பின்னால் போகும் மனதை இழுத்து நிறுத்தி, தினம் கேட்கும் இழப்புக்கள், நண்பர்கள் வட்டம், முகநூல் வட்டமென எல்லாப் பக்கமும் இருந்து தினம் தினம் வந்தடையும் துக்கச் செய்திகளை விடுத்து சமீபத்தில் பார்த்த இரு மலையாளப் படங்களைக் குறித்து கொஞ்சம் எழுதலாம் என்பதால்தான் இந்தப் பதிவு.
நிழல்... குஞ்சக்கோ போபன், நயந்தாரா, இஸின் ஹாஸ் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் ஒரு விபத்துக்காட்சி... அந்த விபத்தில் அடிபட்ட நீதிபதி பேபிக்கு கொஞ்சம் மனப்பிறழ்வு ஏற்பட்டது போல், வெயில் அடிக்கும் போது மழை பெய்வது போல் தெரிகிறது... அதிலிருந்து மீள முயற்சிகள் மேற்கொள்ளும் போது ஆறு அல்லது ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கொலைக்கதைகள் எழுதுகிறான்... அவன் எழுதும் இடங்கள் உண்மையானவை என்பதாய் பேபியின் தோழி ஒரு செய்தியுடன் வருகிறாள். அதன் பின்னான பயணத்தில் நயந்தாரா மற்றும் அவரின் மகன் இஸினுடன் பயணிக்கிறார். அதன் பின்னே படம் வேகமெடுக்கிறது.
இது ஏதோ ஒரு சைக்கோ படம் என நினைத்தால்... அதெல்லாம் இல்லை... இது கொலை, பேய் எனப் பயணிக்கப் போகும் படம் என நம்மை மாற்றி, மீண்டும் சைக்கோத்தனமான படம்தான் என நம்மை நம்ப வைத்திருக்கும் படமிது.
மிரட்டலான காட்சிகள் அவ்வளவாக இல்லை என்றாலும் சில காட்சிகள் மிரட்டுகின்றன... குஞ்சக்கோ எப்பவுமே அலட்டலில்லாத நடிப்பைக் கொடுப்பார். பஹத்தின் நடிப்பு சிறப்பு என்று நினைத்து அவர் படத்தைத் தேடிப் பார்க்கும் போது சமீபத்திய படங்கள் சரியான குப்பை... அப்படியிருக்க குஞ்சக்கோவின் படங்கள் பார்க்கும்படியாக இருப்பது சிறப்பு... நாயாட்டுக்குப் பின் நிழலும் நல்லதொரு படம்தான்.
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாருங்க... அப்படியா எங்கே... தமிழ்நாட்டுல... ஊசி போட்ட மாதிரி போஸ் கொடுத்ததுக்கே தமிழகத்து ஆண்கள் வயசு வித்தியாசமின்றி அன்னந்தண்ணி இல்லாம வருந்திக் கிடந்தாங்க... அதிலும் நாப்பத்தஞ்சி வயசாயிருச்சுன்னு எழுபத்தஞ்சி வயசெல்லாம் புலம்பிக்க்கிட்டு இருந்துச்சு... அப்படிப்பட்ட நயன்தாராவுக்கு சிறப்பான கதாபாத்திரமெல்லாம் இல்லை.... ஆறு வயசுப் பையனின் அம்மா... கொஞ்சம் ரப் அண்ட் டப் அம்மா ஆரம்பத்தில்... அதன் பின் குஞ்சக்கோவின் பின் பயணிக்கும் அம்மா... அவ்வளவுதான் என்றாலும் தன் கதாபாத்திரத்துக்கு அவரால் முடிந்தளவு பெருமை சேர்த்திருக்கிறார்.
சிலருக்கு என்னடா படம்... ஒரு பய கதை சொல்றான்... அதைக் கேட்டுப் போனா அவன் சொன்ன கதை அங்கே உண்மையாய் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது... இப்படியெல்லாம் ஒரு படமா... போராடிக்கிறது என்று சொல்லலாம்... இறந்தவனின் மனைவி என நீதிபதி பேபியைத் தேடிவரும் பெண் உங்களிடம் இந்தக் கொலையைப் பற்றிச் சொன்னது கொல்லப்பட்டதில் ஒருவர்தானே என்று கேட்பதும், ஒரு கதையின் பின்னே பயணிக்கும் போது திடீரெனத் தரையில் இருந்து ஒரு கை எழுந்து காலைப் பிடிப்பதும் என கொஞ்சம் பயமுறுத்தவும் செய்வதால்... இந்த மாதிரி திரில்லர் படங்கள் பிடிக்கும் என்பவர்கள் தைரியமாய் பார்க்கலாம்... தொய்வில்லாமல் பயணிக்கும் கதை.
அடுத்தது டொவினோ தாமஸின் கள - Kala (கலா / களா / காலா/ காளா அப்படின்னு எல்லாம் தமிழ்ல எழுதியிருக்காங்க, ஏதோ ஒண்ணு வச்சிக்கங்க). இந்தப் படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுத்ததுன்னு போடுறாங்க... இப்படி ஒரு உண்மைச் சம்பவமான்னு மனசுல பயத்தை உண்டாக்குது.
பாதிக்கு மேல் நாயகனுக்கும் நாயை இழந்தவனுக்கும் ஆரம்பிக்கும் சண்டை அந்தத் தோட்டத்துக்குள்ளேயே சுற்றி இறுதியில் வீட்டுக்குள் வந்து முடிகிறது... யார் வென்றார்...? யார் தோற்றார்..? என்பதுதான் படத்தின் முடிவாய்... உடல் முழுவதும் அடிபட்டு ரத்தம் வடிய வடிய இருவரும் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படத்துக்கு மேல் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.
அடுத்தடுத்து நகரும் காட்சிகளில் சில திடுக்குகளாய் - வேலையாள் மரத்தில் இருந்து விழுவது, மனைவி திரும்பி வருவது, மருத்துவமனை சென்ற அப்பா திரும்பி வருவது என பார்ப்பவரைத் 'திக்... திக்....' எனப் பார்க்க வைக்கிறார்கள். இறுதிக் கட்டத்தை நெருங்கும் போது வில்லன் நாயைப் போல் மாறி, நாயகனைப் பன்றியாய் நினைத்து வேட்டையாட நினைக்கிறான். இருவருக்கும் மாறி மாறி மரணப் போராட்டமாய் நகரும் கதைக்களம்.
ஒரு வித்தியாசமான கதை முயற்சி... எடுக்கப்பட்ட விதம் சிறப்பு... நமக்குத்தான் பாலாவின் தாரைதப்பட்டையின் இறுதிக்காட்சியை மட்டும் வைத்து முழுப்படம் எடுத்தது போல் இருக்கும்... அத்தனை வன்முறை... படத்தில் அடுத்து என்னாகும் என பார்ப்பவரை பதற வைக்கும் காட்சிகள் அதிகம்... விருப்பமிருந்தால் பார்க்கலாம்... விறுவிறுப்பாய் நகரும் படம்தான்.
-'பரிவை' சே.குமார்.
'நிழல்' கொஞ்சம் பார்க்க ஆரம்பித்து நிறுத்தி விட்டேன். பொறுமை இல்லை!
பதிலளிநீக்குஇரு படங்கள் பற்றியும் கேள்விப்பட்டேன். பார்க்க வாய்ப்புக் கிட்டுமா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
எனக்குத் திரில்லர் ரொம்பப் பிடிக்கும். நிழல் ஓகே போலத் தோன்றுகிறது. விமர்சனம் நல்லாருக்கு குமார்
பதிலளிநீக்குகீதா
இரண்டு படங்கள் குறித்த தகவல்களுக்கு நன்றி. பார்க்க முயல்கிறேன்.
பதிலளிநீக்குசரி, இரு படத்தையும் பார்த்து விட வேண்டியது தான்... வேறு என்ன வேலை இருக்கு... மனதும் சிறிது நேரத்திற்கு வேறு பாதைக்கு செல்லும்...
பதிலளிநீக்குஎனக்கு இந்த இரண்டு படமும் பார்க்கும் ஆர்வமே வரலை.
பதிலளிநீக்கு