இப்பல்லாம் இந்தப் பக்கம் வருவதும் நண்பர்களின் பக்கங்களை வாசித்துக் கருத்திடுவதும் குறைந்து விட்டது என்பதே உண்மை... இதை விடுத்து வேறெங்கும் எழுதியும் தள்ளிவிடவில்லை என்பதும் உண்மை. அப்படியிருக்க வேலையின் காரணமாகவும் சுழலும் பிரச்சினைகளின் காரணமாகவும் என்ன எழுத இருக்கிறது என்ற சலிப்பே மிஞ்சி நிற்பதுதான் காரணமேயொழிய வேறொன்றும் இல்லை.
காற்றுவெளி, கொலுசு, முத்துக்கமலம், அகல், மின்கைத்தடி என சில மாதங்கள் முன்பு வரை பயணித்துக் கொண்டுதான் இருந்தது எழுத்து... அதெல்லாம் இப்போது அப்படியே நின்று போய்விட்டது. இரண்டு மாதத்துக்கு முன் வாசகசாலை, யாவரும் என பிரபலமான இணைய இதழ்களில் கதை வெளிவந்தாலும் ஏனோ எழுதும் எண்ணம் குறைந்து போய்விட்டது. வேறு எதற்கும் அனுப்பாத நிலையில்தான் சஹானா மின் இதழில் ஒரு கதை வந்தது. ஆசிரியர் தினத்துக்கு ஒரு கதை கேட்டு, அதன் நீளம் காரணமாக பதிவிட முடியாத சூழலை அவர் சொன்னபோது அதே கதை கலக்கல் ட்ரீம்ஸில் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாய் கறுப்பிக்கும் வாய்ப்புக் கொடுத்தார் சகோதரர் தசரதன். கறுப்பியும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது மகிழ்ச்சி.
இப்போது புதிதாக கதைகள் எதுவும் எழுதவில்லை... சில போட்டிகளுக்கென எழுதியதில் இருந்து அனுப்பியிருக்கிறேன்... யாவரும் போட்டிக்காக எழுதிய ஒரு சிறுகதை, பார்வதி டீச்சர், கரகாட்டக்காரி என மூன்று கதைகளுக்குப் பின் கதைகள் எழுதவே இல்லை என்பதே உண்மை. போன வாரம் இராஜராம் எதாவது எழுதுங்கண்ணே.... அப்படியே போட்டுட்டீங்க எனச் சொன்ன பின் பூனையை வைத்து ஒரு கதை எழுதிப் பார்த்தேன்... இரண்டு நாட்கள் முன்னர் தளிர் சுரேஷ் அவர்கள் ஜீவநதி நல்லகதை... நான் தீபாவளி மலருக்கு எடுத்துக் கொள்கிறேன் என்றபோது அது சென்ற ஆண்டில் மின்கைத்தடியில் வந்த கதை என்பதால் அதை கொடுப்பது நியாயமற்ற செயல் எனத் தோன்ற வேறு கதை எழுதித் தாரேன் என்று சொல்லி நேற்று எழுதியதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகான இரண்டாவது கதை... இன்றொரு சிறிய கதை பாக்யா எஸ்.எஸ்.பூங்கதிர் சாரின் கதிர்'ஸ் மின்னிதழுக்காக... நண்பர்கள் விரும்பிக் கேட்கும் போதும் எழுதும் மனநிலை சற்றும் வரவில்லை என்பதுதான் வருத்தம்.
இன்றைய தினம் ஏனோ சொல்லிக் கொள்ளும்படியான விடுமுறை தினமாக இல்லாமல் இருந்தாலும் தருகிறேன் என்று சொன்னதால் கதிர்'ஸ் இதழுக்கு எழுதிக் கொடுத்தேன். அப்புறம் பிக்பாஸ் பதிவுகள் எப்போதாவது மனசு வலைத்தளத்தை காயப் போடாமல் எழுதலாமென நினைத்து ஆரம்பித்தேன். அது ரொம்ப நல்லாயிருக்கு எங்கள் தளம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம்... எங்களுக்கு நீங்கள் எழுதியதாக இருக்கட்டுமென கவிஞரும் எழுத்தாளருமான சகோதரர் சிவமணி கேட்டார். இவர் வதிலை பிரபா அவர்களின் மகாகவி இதழிலும் அவர்களின் 'TAMILTALKS.ORG' இணைய தளத்திலும் இணை ஆசிரியர்.
(படத்தைச் சொடுக்கினால் அந்தத் தளத்துக்குள் செல்லலாம்) |
எனக்கு எழுத ஒரு களம்... அவங்க அடிச்ச லூட்டியையோ போட்டியையோ லைவ் கவரேஜ் பண்ற ஆளில்லை நான்... எனது சென்ற ஆண்டு பிக்பாஸ் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்த தனபாலன் அண்ணனுக்கு அது தெரியும். அவர்கள் நடந்து கொள்வதில் இருந்து எனக்கு என்ன தேவையோ அதை எடுத்து கரம், மசாலா சேர்த்து என் பாணியில்தான் எழுதுவேன். தமிழ்டாக்ஸ் தளத்தில் பிக்பாஸ் சீசன் - 4 எனத் தனி டேக் உருவாக்கியிருக்கிறார்கள். நிறையப் பேர் வாசிப்பதாகவும் சொன்னார். எதாவது எழுதினால்தான் எழுத்து இன்னும் மெருகேறும் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் உண்டு. எனக்கு முன்னே பயணிக்கும் என் நண்பர்களின் எழுத்துக்கள் ஏதோ ஒரு வகையில் வசீகரிப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படியான வசீகரத்தை எழுத்துக்குள் கொண்டு வர தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் அவசியம் என்பதே என் எண்ணம்.
இந்த எழுத்து பெரிதாய் பணத்தைச் சம்பாரித்துக் கொடுக்கவில்லை என்றாலும் உலகம் முழுவதும் நிறைய நட்பைக் கொடுத்திருக்கிறது... சமீபத்தில் அத்தியின் வரவின் போது எழுதிய கதையொன்றை 'BHARATWRITERS.COM' என்னும் தளத்திற்கு அனுப்பினேன். கதையில் நயன்தாரா என்ற பெயர் வந்ததை நடிகை என மாற்றி, எனக்கு அனுப்பி மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா எனக் கேட்டு ஒப்புதல் பெற்று பதிந்தார்கள். வாராவாரம் பதியப்படும் அந்த இணையத் தளத்தில் வரும் லைக்கைப் பொறுத்து பணமும் கொடுப்பார்களாம். சென்ற வாரத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் மூன்றாவது இடம் 2000 உங்க பணம்...அதை எப்படி எடுக்கலாமென ஏதோ சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் இன்னும் விரிவாக விசாரிக்கவில்லை என்றாலும் ஏதோ நம்ம பேரில் பணம் என அவர்கள் தளத்தில் போடுகிறார்கள்... கிடைக்குமா... கிடைக்காதா என்பதெல்லாம் தெரியவில்லை. அடிக்கடி எழுதுங்கள்... அனுப்புங்கள் என்று சொல்லி மின்னஞ்சல் வேறு அனுப்பினார்கள்.
இணைய இதழ்களில் எழுவதுதான் சிறந்தது எனத் தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு எழுத்தாளரின் வாரிசின் கதை ஒரு இதழில் வெளியாகும் போது அவருக்கு அந்த இதழ் மிகப்பெரும் அறிமுகத்தைக் கொடுத்தது. அவரின் எழுத்து அருமையா இல்லையா என்ற விவாதத்துக்கு இதைச் சொல்லவில்லை... அந்த இதழில் கதை வெளியான ஒரு மாதத்துக்குள் தமிழின் எல்லா வார இதழ்களிலும் அவரின் கதை வெளியாகியிருக்கிறது. அவர் புதிதாய்த்தான் எழுத வந்திருக்கிறார். எத்தனையோ பேர் பலகாலமாக நல்லா எழுதினாலும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினாலும் கண்டு கொள்ளாத பத்திரிக்கைகள்தான் பிரபலங்களின் பிள்ளைகள் என்றால் உடனே வாய்ப்புக் கொடுக்கின்றன. சினிமாவிலும் அரசியலிலும் மட்டும் வாரிசு என்பது இல்லை எழுத்துலகிலும் அது இருக்கத்தான் செய்கிறது. எனவே நல்லா எழுதும் நண்பர்கள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் காத்திருப்பதைவிட மின்னிதழ்களுக்கு அனுப்புங்கள்... உங்கள் கதைகள் பணத்தை பெற்றுத் தராவிட்டாலும் பலரின் பாராட்டைப் பெற்றுத் தரும்.
-'பரிவை' சே.குமார்.
நண்பர் எழுதி தரக் கேட்பதே மகிழ்வை தருகிறது... பாராட்டுகள்...
பதிலளிநீக்குஉளவியல் பார்வையுடன் சிலவற்றை வாசிக்கும் போது, "நாமும் நினைத்தோமே..." என்று ஒரு மகிழ்வு உண்டாக்கும்... தொடர்ந்து பயணிக்கவும் குமார்...
அன்பின் நல் வாழ்த்துகளுடன்,
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ..
எட்டுத்திக்கும் சுற்றி வெற்றிக்கொடி நாட்டி வருவது மகிழ்ச்சி குமார். மென்மேலும் வளர வாழ்த்துகள். உங்கள் கடைசி பாராவில் சொல்லி இருப்பவர் யார் என்று யூகிக்க முடிகிறது. அவர்தான் என்றால் அவரது சிறுகதைகளைவிட அவரது நாவல்கள் வெகு சுவாரஸ்யமாய் இருக்கும்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
பதிலளிநீக்குபயனுள்ள பல கருத்துகளையும், உத்திகளையும் பகிர்ந்துள்ளீர்கள். வாய்ப்பு கிடைக்கும்போது இவற்றில் ஏதாவது ஒரு முயற்சியில் களம் இறங்குவேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் பாராட்டுகள். உங்களிடம் நல்ல எழுத்தாற்றல் உள்ளது. இணையத்தில் பலர் பத்திரிகைகளைவிட சிறப்பாக எழுதுகிறார்கள்.
பதிலளிநீக்குஎழுதிக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று அலுப்பு தோன்றுவது எல்லோருக்கும் வரும். வியாசருக்கே வந்ததாம். அதற்காக எழுதுவதை நிறுத்திவிடக் கூடாது. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குதங்களின் பதிவின் எழுத்துரு அழகாக உள்ளது
எழுத்துருவின் பெயரினை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்