இந்த வாரத்தில் மகிழ்வைக் கொடுத்த சில நிகழ்வுகள்... அலுவலகத்தில் எப்பவும் பிரச்சினைகள் என்ற போதிலும் எழுத்து கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதே மகிழ்வுதானே.
சகோதரர் ஷேக் அவர்களின் 'EMIRATES FOR LIVING' தளத்திற்காக எழுதிய பகிர்வு 5K, 6K-ன்னு பார்வையைப் பெற்றிருக்கு என்று அவர் பகிர்ந்து கொண்ட போது அதைக் குறித்த பெருமையெல்லாம் எனக்குள் இல்லவேயில்லை. நமக்கு என்ன நிகழ்ந்தோ அதை எழுதினோம் அவ்வளவுதான்... பத்துப் பேர் பார்த்தாலும் மகிழ்ச்சிதான் என்பதே என் எண்ணம். எழுத்தாளர் கரன்கார்க்கியுடன் சென்ற வாரத்தில் நாப்பது நிமிடம் பேசிக் கொண்டிருந்த போது, அந்தக் கட்டுரை ரொம்ப நல்லாயிருந்தது... அதில் அலங்கார வார்த்தைகள் இல்லை... மனசுல தோணுனதை அப்படியே எழுதியிருக்கீங்க என வாழ்த்தினார். உண்மையில் மகிழ்வான தருணம் அது. அவரின் நாவல்கள் குறித்து எழுதிய காரணத்தால் என் மீது மிகுந்த அன்பு செய்கிறார். மேலும் அச்சுக்குப் போகுமுன்னே அவரின் அடுத்த நாவலை வாசிக்கக் கொடுத்தார். அது குறித்தான பேச்சின் போதுதான் என் எழுத்தையும் சிலாகித்தார். உண்மையில் எழுத்து சில நேரங்களில் எதிர்பார்க்காத நிகழ்வுகளை நடத்திக் காட்டுகிறது என்றுதான் சொல்கிறது.
BHARATWRITER என்னும் தளத்தில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. இந்தத் தளத்தில் இது முதல் சிறுகதை... இங்கு பகிரப்படும் கதைகளுக்குக் கிடைக்கும் விருப்பக்குறிகள் மற்றும் பக்கப் பார்வைகளை வைத்து அதற்கென தொகை நிர்ணயம் செய்வார்களாம். எழுத்துக்குப் பணம் கொடுக்கும் தளம் என்பதாய்ச் சொல்கிறார்கள். எது எப்படியோ அனுப்பிய முதல் கதை தேர்வாகி பதியப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் என மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். சிறுகதைகளுக்கான சுட்டியின் கீழ் வாரம் 5 கதைகள் பகிர்கிறார்கள். அதில் மூன்றாவதாய் இருக்கிறது என் கதை... கதையை வாசித்து உங்களது விருப்பக்குறியையும் மறக்காமல் பதியுங்கள். கதைக்கான சுட்டி கீழே (அதில் மூன்றாவது கதையை வாசியுங்கள் - கதைக்கென தனிச் சுட்டி இல்லை)
க/பெ. ரணசிங்கம் திரைப்படம் பேசும் கருத்து மிக முக்கியமானது என்பதற்காகவே அது கொண்டாடப்பட வேண்டிய படம். துபையில் போராட்டம் என்பதெல்லாம் அபத்தம்... பல சினிமாத்தனமான காட்சிகள்... இந்தக் காலத்தில் நிச்சயித்த திருமணத்துக்குப் பத்திரிக்கை இல்லை, போட்டோ இல்லை என்பதெல்லாம் இன்னும் கூடுதல் கேலிக்கூத்து என்றாலும் இராமநாதபுரம் மக்களின் தண்ணீர் பிரச்சினை, கார்ப்பரேட்டுக்கு கை கொடுக்கும் அரசியல்வாதிகள் எனத் தன் முதல் படத்திலேயே சாதியைச் சுமக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சினையை தூக்கிச் சுமந்திருக்கிறார் இயக்குநர் விருமாண்டி... அதற்கு வாழ்த்துகள். இந்தப் படம் குறித்த பார்வை 'TAMILTALKS' இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அதன் சுட்டி கீழே...
சகோதரர் தெரிசை சிவா, அமீரகத்தில் இருக்கும் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு 'குட்டிக்கோரா' மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் இருந்த 'சடலச்சாந்தி' என்னும் கதையை கதைசொல்லி பவா செல்லத்துரை சொல்லியிருக்கிறார். அந்த வீடியோ யூடிப்பில் இருக்கிறது. சென்ற புத்தகக் கண்காட்சிக்கு சிவாவின் 'திமில்' என்னும் இரண்டாவது சிறுகதை தொகுப்பு வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. திமில் குறித்தான பார்வை 'TAMILTALKS' தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதற்கான சுட்டி கீழே...
நேற்று ராஜாராம் ஒரு கதையின் சுட்டியை அனுப்பினார். யாவரும்.காமில் இளங்கோவன் முத்தையா எழுதிய விம்லா என்றொரு சிறுகதை... மேடையில் சிம்ரனைப் போல் ஆடும் விமலா என்ற பெண்ணின் வாழ்க்கைக்கதை... மிகச் சிறப்பான சிறுகதை... சுவராஸ்யமான எழுத்து நடை... நல்ல கதைகளை வாசிக்கும் போது மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். கதையை வாசிக்க விரும்பினால் கீழிருக்கும் சுட்டியை அழுத்துங்கள்.
இதற்கு மேல் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இந்த வாரத்தில் நடந்து விடவில்லை. பிரச்சினைகள் சூழ்ந்த வாழ்வில் இப்படியான நிகழ்வுகளே அவ்வப்போது மகிழ்வைக் கொடுக்கிறது.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
நாட்குறிப்பு எழுதுவது போல கதம்பமாய்ப் பதிவு.
பதிலளிநீக்குகதம்பமாக பல செய்திகளைக் கூறியவிதம் அருமை.
பதிலளிநீக்குஅலுவலகப்பிரச்னைகள் எங்கும் உள்ளதே. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு உங்களின் எழுத்து துணை நிற்கும்.
நிகழ்வுகள் குறித்து வைத்த பின்பும், மனதில் நிம்மதியும் திருப்தியும் சிறிது உண்டாகும்... அருமை குமார்...
பதிலளிநீக்கு