ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

சிறுகதை : அப்பா... அம்மா... அட்வைஸ்...! (முத்துக்கமலம்)

இந்த மாத 16-02-2019 முத்துக்கமலம் இணைய இதழ் பதிப்பில் எனது சிறுகதை வெளியாகி இருக்கிறது. முத்துக்கமலத்தில் இது 5-வது கதை.

கதையின் தலைப்புதான்  'அப்பா... அம்மா... அட்வைஸ்...!' என குமுதம் பாணியில் மாற்றப்பட்டது விட்டது என்றாலும் கதை வழக்கம் போல குமார் பாணிதான்...

நான் வைத்திருந்த தலைப்பு 'நீரில் நனைந்த நெருப்பு'

வாசித்து கருத்து சொல்லுங்க...

அப்பா... அம்மா... அட்வைஸ்...!



நான் திவாகர்... வயது 27.

வேலை தேடிக்கொண்டிருக்கும் முதுகலைப் பட்டாதாரி. கிடைக்கும் வேலையை விட விரும்பும் வேலைதான் முக்கியம் என்பதால் கிடைத்த வேலைகளை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

மற்றபடி என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. என்னைப் போல் தண்டச்சோறுகளான நண்பர்களின் சங்கமத்தில் தெருமுனை டீக்கடையே பெரும்பாலான நேரங்களை விழுங்கியது. சிகரெட்டும் டீயுமே எங்கள் சங்கமத்தில் அதிகம். 

மாலைவேளைகளில் பெண்களைக் சைட் அடிப்பதும் கேலி செய்வதும் உண்டு. இதைச் சொல்வதில் எனக்கு எப்பவும் வெட்கமோ வருத்தமோ பயமோ இல்லை. இளைஞன் ஒருவன் பெண்ணைப் பார்க்கவோ கேலி பேசவோ செய்யவில்லை என்றால்தான் யோசிக்க வேண்டும்... அவன் இளைஞன்தானா என்பதை... இன்று இளைஞிகள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது இல்லையா..?

"இப்படியே இன்னும் எவ்வளவு நாளைக்குத் திரியிறதா உத்தேசம்...?" அப்பாதான் கேட்டார்.

"வேலை கிடைக்கும் வரை..." படக்கென்று சொன்னேன்.

"வேலை கிடைக்கும் வரை.. சரித்தான்... இந்த வேலைக்குத்தான் போவேன்னு நின்னா எப்படிக் கிடைக்கும்... கிடைக்கிற வேலையில ஏறிக்கிட்டு அப்புறம் நினைக்கிற வேலைக்கு முயற்சிக்கணும்..."

"அப்படியெல்லாம் ஏறிட்டா... அப்புறம் விருப்பப்படுற வேலையைப் பிடிக்க முடியாது... உங்கள மாதிரி நாற்காலிய தேய்ச்சிக்கிட்டு குப்பை கொட்ட வேண்டியதுதான்..."

"என்ன செய்ய... அன்னைக்கி நானும் படிச்ச படிப்புக்கு வேலை வேணுமின்னு உன்னைய மாதிரி ஊரு சுத்தியிருந்தா... எனக்குப் பின்னால இருந்த நாலு பேரைக் கரை சேர்த்திருக்க முடியாதே... நாற்காலியத் தேய்ச்சித்தானே நாலு பேரைக் கரை சேர்த்தேன்... உங்க மூணு பேரைப் படிக்க வச்சேன்..."

"இப்ப எதுக்கு உங்க புராணமெல்லாம்...? யார் கேட்டா அதை...? திரும்பத் திரும்பக் கேட்டுப் புளிச்சிப் போச்சு…" வாய்க்குள் முணங்கினேன்.

"புராணம் இல்லை... வாழ்க்கைதான்... உனக்குப் பின்னால ரெண்டு பொட்டப்புள்ளைங்க இருக்காங்க... ஊரு சுத்துறதால ஒண்ணும் ஆகப் போறதில்லை... டீக்கடைக்காரன் கூட காசு கொடுத்தாத்தான் சிகரெட்டும் டீயும் கொடுப்பான்.... அதைப் புரிஞ்சிக்க..."

"விடுங்க நீங்க... அவன் விருப்பப்படி வேலை கிடைக்கும்... டேய் ஏண்டா அப்பாக்கிட்ட வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... போ... போய் குளிச்சிட்டு சாப்பிட வா..."

அம்மா இடைபுக, நான் நகர்ந்தேன்.

"ஆமா... இப்படியே ஜாமீன் வாங்கியே அவனைக் கெடுத்துடு... சிகரெட் பிடிச்சி உதடெல்லாம் கருத்துப் போயிக் கிடக்கு... நேத்து பார்ல தண்ணியப் போட்டுட்டு சலம்பல் பண்ணியிருக்கான்... என்னோட வேலை பாக்குற ஒருத்தன் பார்த்துட்டு வந்து சொல்றான்... அதையெல்லாமா கேட்டேன்.. அப்படிக் கேட்டிருந்தா இந்நேரம் என்னாயிருக்கும்... தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை திட்டக்கூடாதுன்னுதான் வேலை விசயமாக் கேட்டேன். என்னவோ பண்ணச் சொல்லு... சின்னப்புள்ளையில அவன்தான் சிகரெட் பிடிக்காதீங்கப்பான்னு என்னைத் தடுத்தான்... நான் விட்டுட்டேன்... இன்னைக்கு அவன் அதைச் செய்யிறான்... நான் சொன்னா விடவாப் போறான்... வேலைக்குப் போனா இந்த வெத்துச் சகவாசமெல்லாம் குறையும்... குடி, சிகரெட்டு, பொண்ணு புள்ளைகளைக் கேலி பேசுறது எல்லாம் குறையும்... இருக்கிறத விட்டுட்டுப் பறக்குறதுக்கு ஆசைப்பட்டா எப்பக் கிடைக்கும்...? சொல்லு... போ... போயி உன் சீமந்த புத்திரன் குளிச்சிட்டு வந்ததும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பு... மாநாட்டுக்கு லேட்டாயிரும்..."

என்னைப் பற்றித்தான் பேசுவாருன்னு தெரியும் என்பதால் குளிக்கப் போனவன் "அம்மா..." எனக் கத்தினேன்.

"என்னடா..." என்றபடி உள்ளே வந்தாள் அம்மா.

"என்ன எனக்குப் பண்ணுன உபதேசத்தோட தொடர்ச்சியா... இப்ப என்ன வயசா ஆயிப்போச்சு... கிடைச்ச வேலைக்குப் போன்னு குதிக்கிறாரு... சும்மா சும்மா கத்தக் கூடாதுன்னு சொல்லி வையி..."

"அவரு உம்மேல உள்ள பாசத்துலதானே பேசுறாரு... நீ சிகரெட்டு... தண்ணியின்னு திரியிறதைப் பார்த்துட்டு பல பேரு அவருக்கிட்ட சொல்லியிருக்காங்க... உனக்கு அசிங்கம் தெரியலை... ஆனா அவருக்கு அது அசிங்கம்தானேடா... அதெல்லாம் எங்கிட்டதானே புலம்புறாரு... உங்கிட்ட இதுநாள் வரைக்கும் எதுனாச்சும் கேட்டிருப்பாரா சொல்லு..."

"அம்மா நீயுமா...?"

"இந்த வயசு... எதையும் கேக்கக் கூடாதுன்னு ஒரு வீராப்போட சுத்துற வயசு... யார் என்ன சொன்னாலும் அது கடுப்பாத்தான் இருக்கும்... அதுவும் அட்வைஸ்ன்னா... சொல்லவே வேண்டாம்... சொல்றவங்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கணும் போலத் தோணும்... நாங்களும் இதைக் கடந்து வந்தவங்கதான்..."

"அம்ம்ம்மா... ஆளை விடு... அந்தாளு பரவாயில்லை போல... நான் குளிச்சிட்டு வாறேன்... சூடா இட்லி அவிச்சி வையி..." அங்கிருந்து நகர முயன்றேன்.

"இருடா... எங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் உங்கப்பா சிகரெட் பிடிப்பார்ன்னு எனக்குத் தெரியும்... அதுவும் அவர் ஒரு ஜெயின் சுமோக்கர் தெரியுமா...? ஊதித் தள்ளுவாரு... எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்... இது ஆபீஸ் டென்சனைக் குறைக்க... இதை மட்டும் விடச் சொல்லாதேன்னு மறுத்திட்டாரு... ஒரு பொண்ணுக்குப் புருசன் ஆசையா பக்கத்துல வரும் போது, பிடிக்காத சிகரெட் வாசனையும் சேர்ந்து வந்தா எப்படியிருக்கும்... அதையும் பொறுத்துக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தினேன்... நீங்க மூணு பேரு பிறந்தீங்க..."

"ஐயோ அவரு சுயபுராணம் முடிஞ்சி... இப்ப உன்னோட புராணமா... ஐயோ... ஏம்மா... இப்படி மாத்தி மாத்திக் கொல்றீங்க..." கடுப்பானேன்.

"பேச விடுடா... சும்மா சும்மா குறுக்கப் பேசாம..."

"இப்ப இதுக்கு என்ன அவசரம்... மெதுவா உன்னோட சுயபுராணத்தைச் சொல்லலாம்..."

"அவசியமிருக்கு... நான் சொல்லி விடாத சிகரெட்டை... அப்பா சிகரெட் நாத்தம் பிடிக்கலைன்னு சின்னப் பிள்ளையில நீ சொன்னதால... எம்மகனுக்குப் பிடிக்கலையாம்ன்னு சொல்லி... விட்டொழிச்சவரு உங்கப்பா... இப்ப நீ சிகரெட் பிடிக்கிறியே... அது அவருக்குத் தெரிஞ்சிருந்தும் உங்கிட்ட கேட்கலை... கண்டிக்கலை... அப்படி கேட்டாலும் கண்டிச்சாலும் நீ கேக்கப் போறதில்லை... கண்டிப்பாக மல்லுக்கு நிப்பேன்னு தெரியும்...ம்... சரி... எனக்காக இல்லேன்னாலும் உங்கப்பாவுக்காக... அவரோட மனசுக்காக... இதையெல்லாம் குறைச்சிக்க..."

"பிரசங்கம் முடிந்ததா...? நான் குளிக்கப் போகலாமுல்ல..." என நகர்ந்தேன்.

"டேய்..."

"ஐய்யோ இன்னும் என்னம்மா இருக்கு... சண்டேயும் அதுவுமா காலங்காத்தால புருஷனும் பொண்டாட்டியும் அட்வைஸ் பண்ணிக் கொல்றீங்களே... என்னன்னு சொல்லும்மா... எனக்கு வேலையிருக்கு..."

"ஆமா... உன் தங்கச்சி பிரண்ட் ராதிகாவை... அதான்டா நம்ம லட்சுமி மக... அவளைக் ரொம்ப மோசமாக் கேலி பண்ணுனியாம்... நேத்து வந்து ஒரே அழுகை... சொல்லி வைங்க ஆண்டின்னு... ஏன்டா..."

"அழுதாளாக்கும்... எல்லாரையும்தான் கேலி பண்றோம்... எல்லாரும் வீட்டுக்கு வாராளுகளா என்ன... ஜஸ்ட் லைக் ஜாலியா எடுத்துக்கிட்டுப் போவேண்டியதுதானே... இனிமே வந்தான்னா உன்னையவே எம்மருமகளாக்கிக்கிறேன்னு சொல்லு... அப்புறம் கம்ப்ளைண்ட் கொடுக்க வரமாட்டா..." சிரித்தபடி சொன்னேன்.

"அப்படியும் நடக்கலாம்... யாரு கண்டா..."

"அந்த அடங்காப் பிடாரியா... ஆளை விடு தாயி..." இதற்கு மேல் நிற்கக்கூடாதென வேகமாகப் பாத்ரூமிற்குள் ஓடினேன்.

குளித்து... சாமி கும்பிட்டி... திருநீறு இட்டு... அம்மா கொடுத்த ஆவி பறக்கும் இட்லியை காரச்சட்டினியோடு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.

வாசலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவைப் பார்க்காமல் செல்ல நினைத்துத் தலையைக் குனிந்தவாறு வாசலுக்கு வந்தேன்.

"என்ன மாப்ள எதாவது வேலை கீலை கெடச்சதா...?" அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த அவரின் நண்பர் சாம்பவசிவம் மாமா சப்தமாக கேட்டதுடன், நான் கேட்காமலே "எங்க வனிதாவுக்கு கூட விப்ரோவுல வேலை கிடைச்சிருச்சு.." என்றார் மகிழ்வோடு.

நான் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் "நிறைய வேலைக்கான இண்டர்வியூ வருதுப்பா... போன வாரம் கூட ராம்கோவுல இருந்து இண்டர்வியூக்கு கூப்பிட்டிருந்தாங்க... கிடைச்ச வேலையை விடப் பிடிச்ச வேலையா அமைஞ்சா அவனோட பியூச்சர் நல்லாயிருக்கும் பாரு... அதான் அவசரப்பட வேண்டான்னு நினைக்கிறோம்... அவன் எதிர்பார்க்கிற வேலை கிடைக்காமலாப் போகப் போகுது..." அப்பா பேசிக் கொண்டே போக, நான் பதில் பேசாது வண்டியை எடுத்தேன்.

டீக்கடையில் டீயுடன் சிகரெட்டையும் நீட்டினான் மணி... ஏனோ சிகரெட்டைத் தவிர்த்தேன்.
-‘பரிவை’ சே. குமார்

3 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி