அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் வாட்ஸப் குழுமத்தைச் சார்ந்த எட்டு எழுத்தாளர்களின் ஒன்பது புத்தகங்களின் வெளியீட்டு விழா நிகழ்வு வெள்ளி மாலை நடைபெற்றது.
ஒரு விழாவிற்கான திட்டமிடலும், அதனை நினைத்தபடி நடத்தி முடித்தலுமே அவ்விழாவினைச் சிறப்பாக்கும். அப்படியான முன்னெடுத்தலை எடுத்த அண்ணன்கள் ஆசிப் மீரான், பாலாஜி மற்றும் அவர்களுடன் உழைத்த நண்பர்களுக்கும் விழாவை மிகச் சிறப்பாக்கிய அனைவருக்கும் பகிர்வுக்குள் செல்லும் முன் அமீரக எழுத்தாளர் குழுமத்தில் ஒரு உறுப்பினராய் எனது நன்றி.
ஆமாம்... என்னென்ன புத்தகங்கள் வெளியிடப்பட்டன..? என்ற கேள்வி நமக்குள் எழும் அல்லவா. அதனால் நிகழ்வு குறித்துப் பார்க்கும் முன் சிறு குறிப்பு ஒன்றை புத்தகங்கள் குறித்துப் பார்த்து விடலாமே....
எழுத்தாளர்கள் அய்யனார் விஸ்வநாத் பணத்துக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கையை காமம் தூக்கலாகக் கலந்து எழுதியிருக்கும் விறுவிறுப்பான 'பழி'; முஹம்மது யூசுஃப் சவுதியின் பல பக்கங்களை... சிறப்புக்களை நடையாடியாய் மனம் பூக்க எழுதியிருக்கும் 'மணல் பூத்த காடு'; தேவா சுப்பையா காதலுடன் கசிந்துருகி எழுதியிருக்கும் 'காதலே சுவாசமாக' மற்றும் தன் மண்ணின் மீதான காதலை, அம்மக்களின் வாழ்க்கையை சிறுகதையாய் செதுக்கியிருக்கும் 'யாரோ எழுதிய கதை'; பிரபு கங்காதரன் காளி மீது கொண்ட பேரன்பின் காதலை, காமம் கொப்பளிக்க கொடுத்திருக்கும் 'அம்புயாதனத்துக் காளி'; ஜெஸிலா எழுதியிருக்கும் குழந்தைகளுக்கான என்று சொல்லப்பட்டாலும் பெரியவர்களும் அறிந்து கொள்ள வேண்டிய 'மூஸா' வரலாறு; தெரிசை சிவா தன் மக்களின் வாழ்க்கையைப் பதிந்திருக்கும் 'குட்டிக்கோரா'; ஆர்.ஜே. நாகா இசையின் நிறத்தைத் தூரிகையில் தேடியிருக்கும் 'இசையின் நிறம் தேடும் தூரிகை'; ஆசிப் அண்ணன் தொகுத்திருக்கும் 'ஒட்டக மனிதர்கள்' என்ற அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகள்.
துபையில் நடக்கும் விழாவுக்குச் செல்லுதல் என்பதுதான் சிரமம் என்பதால் பல நிகழ்வுகளுக்குச் செல்ல முடிவதில்லை. நேற்றைய நிகழ்வுக்கு என் இருப்பிடத்துக்கே வந்து அழைத்துச் சென்றார் சகோதரர் பால்கரசு. இரண்டு கார்களில் பயணம் என்பதால் எங்களின் காரோட்டியாய் சகோதரர் இராஜாராம்.
விழா சற்றே தாமதமாய் ஆரம்பித்தாலும் சிறப்பான நிகழ்வாய் அமைந்தது. காபியும் சமோசாவும் அதனுடன் கேசரியும் விழா ஆரம்பிக்கும் முன்னே வயிற்றுக்கு நிறைவைக் கொடுத்துவிட்டது. அதன் சுவையில் மயங்கி அரங்கிற்குள் செல்லாமல் எல்லாரும் அவ்விடத்திலேயே சுற்ற, பாலாஜி அண்ணன் கடையைச் சிறிது நேரம் அடைக்கும் சூழல் ஏற்பட்டது.
சிறிய அரங்கம் என்றாலும் இங்கு இலக்கிய நிகழ்வில் நிறைவதென்பது அரிதே என்ற போதிலும் இடமின்றி பலர் நின்று கொண்டிருக்கும் அளவுக்கு கூட்டம் கூடியது சிறப்பிலும் சிறப்பு.
விழாவை எப்பவும் போல் ஆசிப் அண்ணன் தொகுத்து வழங்கினார். அந்தக் காந்தக் குரலுக்கு எப்பவுமே கூட்டத்தை வசீகரிக்கும் தன்மை அதிகம். அது நேற்றும் அரங்கத்தில் நிறைந்து நின்றது. ஐயா அப்துல் ஜாப்பரின் வாரிசு என்றால் சும்மாவா..?
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட நான்கு மகளிரை மேடைக்கு அழைத்தார். நால்வரின் குரலையும் தாண்டி அண்ணாச்சியின் குரலே கணீரென ஒழித்தது. அரங்கமே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியது.
வரவேற்புரையை ரமாமலர் எதுகை மோனையுடன் ஆரம்பித்து வைக்க, அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தைப் பற்றி, அவர்களின் முன்னெடுப்புக்களைப் பற்றி அன்னையின் கருவினிலே தமிழ்பால் குடித்தவன் என்று சொல்லும் சசிகுமார் பேசினார்.
முதல் வெளியீடான தெரிசை சிவாவின் புத்தகம் குறித்து மாகவிஞன் என்று அண்ணாச்சியால் பட்டம் பெற்ற பிரபு கங்காதரன் பேசினார். சில கதைகளைக் குறித்து சிலாகித்தார். கரகாட்டக்காரியிலேயே நின்றார். அதன் பின் புத்தகத்தை சிவாவின் நண்பர் கிருஷ்ணன் வெளியிட மகேந்திரன் பெற்றுக் கொண்டார். சிவா ஏற்புரை வழங்கும் போது குழுமத்தினையும் பழி நாவலையும் குறித்தே அதிகம் பேசினார். குட்டிக்கோராவை வாசகர்கள் பேசட்டும் என விட்டு விட்டார் போல.
அடுத்ததாக பெண்ணியப் போராளி (இந்தப் பட்டமும் அண்ணாச்சி கொடுத்ததே) ஜெஸிலாவின் மூஸா நாவல் குறித்து பேச ஆரம்பித்தால் அடித்து ஆடும் குறிஞ்சிநாதன் நிறைய விஷயங்களுடன் பேசினார். புத்தகத்தை ஜெஸிலா அவர்களின் சகோதரி வஹிதா நஜ்முதீன் மர்யம் ஸலாஹூதீன் வெளியிட மற்றொருவர் பெற்றுக் கொண்டார். ஜெஸிலா தனது ஏற்புரையின் போது புத்தகம் குறைத்து ஜார்ஷா புத்தக விழாவில் நிகழ்ந்த வெளியீட்டின் போது நிறையப் பேசிவிட்டேன் என்றாலும் இங்கும் சில விஷயங்களைப் பேச வேண்டும் எனப் பேசினார்.
மூன்றாவதாய் நாகாவின் 'இசையின் நிறம் தேடும் தூரிகை' குறித்து பேச இருந்த அஞ்சுகம் உடல்நலக் குறைவால் வர முடியாமையால் சசிக்குமார் அவர்கள் பேசினார். புத்தகத்தை வாசிக்கவில்லை என்ற உண்மையைச் சொல்லி, பண்பலையில் நாகாவின் ஆளுமை குறித்துப் பேசினார். புத்தகத்தை முஹைதீன் வெளியிட கவிதா சோலையப்பன் பெற்றுக் கொண்டார். அதன் பின் முஹைதீன் சில நிமிடங்கள் பேசியதால் நேர்ந்த குழப்பத்தின் காரணமாக ஏற்புரைக்காக நாகா அழைக்கப்பட மறக்க, அங்கே சின்னதாய் ஒரு சீற்றம்... பாலை மண்ணள்ளவா கொஞ்சம் சூடாய்த்தானே இருக்கும். ஆசிப் அண்ணாவின் சிறிய முயற்சிக்குப் பின் மேடையேறி எனக்குத் தமிழ் தெரியாது என நடிகைகள் நன்றி வணக்கம் சொல்வதைப் போல் சொல்லிச் செல்ல, மீண்டும் அவரைச் சமாதானம் செய்யும் நிகழ்வு அரங்குக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருக்க. உள்ளே விழா தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
நான்காவதாக தேவாவின் 'காதலே சுவாசமாக' பற்றி சான்யோ பேசினார். காதலைச் சுவாசித்து அதே காதலுடன் பேச வேண்டும் என்பதால்தான் தேவா இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் போல... காதல்... காதல்ன்னு மட்டுமின்றி தேவா... தேவான்னும் உருகிட்டார். அதன் பின் 'யாரோ எழுதிய கதை' குறித்து ஆசிரியை ஷோபியா பேசினார். சிவபாக்கியம் அப்பத்தாவைச் சிலாகித்தார். இறுதியில் புத்தகத்தைக் குறித்துப் பேசச் சொன்னதற்கு நன்றி என்பதற்குப் பதிலாய் வெளியிடச் சொன்னமைக்கு நன்றி என்றார் மேடைப் பதட்டம் போலும். புத்தகங்களை ஆசிப் அண்ணன் வெளியிட அய்யனார் பெற்றுக் கொண்டார். தேவா அவர்கள் தனது ஏற்ப்புரையில் சிவபாக்கியம் ஆயா என்னோட வாழ்க்கையில் நான் பார்த்த கதை என்றார்.
சமாதனம் அடைந்த நாகா மீண்டும் பேச வந்தார். கலைஞனுக்கே உரிய கோபம் என்றார். இதுதான் தன் முகம், பண்பலையில் பேசும் போது பணி நிமித்தம் அப்படி இப்படி மாற்ற வேண்டியிருக்கும் முகத்தை... ஆனால் சுயம் இதுவே என்பதாய்ப் பேசினார். அது நான் இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்வதாய் இருந்தது. கோபம் வரவேண்டியதுதான் மேடையில் நின்று பல முறை மன்னிப்புக் கேட்டும் கலைஞனுக்கு கோபம் வரும் என்பதெல்லாம் சற்றே அதிகமாய்த்தான் பட்டது. இருப்பினும் நாகா பேசாதிருந்தால் விழா நிறைவு பெற்றதாய் தோன்றியிருக்காது என்பதால் அவருடன் பேசி சமாதானம் செய்த நட்புக்கள் உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்கள்... சான்யோ 'அவர் அப்படித்தான்... திரும்பி வந்து பேசுவார்' என்று காதலே சுவாசமாக குறித்துப் பேசும் போதே சொல்லி வைத்திருந்தார். அதே போல் அவர் நிறைவாகப் பேசவில்லை என்றாலும் கோபம் மறந்து மீண்டும் வந்து பேசியது கரும்புள்ளியைத் கலைத்தது என்றே சொல்லலாம்.
ஐந்தாவதாக யூசுஃப்பின் 'மணல் பூத்த காடு' குறித்து பேச வந்த ராம் சுரேஷ் அவர்கள் நாவலைப் பற்றி தனக்கு சில விமர்சனங்கள் இருக்கிறது அதை விமர்சனக் கூட்டத்தில் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லி இது அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய மிகச் சிறந்த நாவல் என்று சொன்னார். தமிழ் மக்கள் மன்றத்தின் முரளி மற்றும் நீலகண்டன் ஆகியோர் வெளியிட தீபக் பெற்றுக் கொண்டார். யூசுஃப் பணி நிமித்தம் கேரளா சென்றிருப்பதால் திடீர் புதுமாப்பிள்ளை ஆக்கப்பட்ட பிலால் பேசினார். எங்களிடம் யூசுஃப் அவர்கள் சொன்ன அப்பாஸை மானசீக நாயகனாக வைத்திருந்த ஒரு பையனின் கதையைச் சொல்லி, முஸ்லீம் இளைஞர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைந்த புத்தகம் என்றார். யூசுஃப் நாவல் குறித்துப் பேசிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது.
ஆறாவதாய் பிரபுவின் 'அம்புயாதனத்துக் காளி' குறித்து அய்யனார் விஸ்வநாத் பேசினார். இதுதான் கவிதை... கவிதை என்று கிறுக்குபவர்கள் சற்றே ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்பதாய்ப் பேசினார். புத்தகத்தை வேல்முருகன் அவர்கள் வெளியிட அடியேன் பெற்றுக் கொண்டேன். நூல் குறித்து ஏற்ப்புரை வழங்கிய பிரபு நான் என்ன பேசுவது... படிச்சிட்டு நீங்களே பேசுங்கள் என்பதாய் உரையை முடித்துக் கொண்டார்.
ஏழாவதாய் அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி' குறித்து தேவா பேசினார். எழுத்தாளன் என்பவன் ஒரு புள்ளியில் நிற்கக்கூடாது. அவன் சாதி, மதம் கடந்து வெளியில் வரவேண்டும். பழி இலக்கிய நாவல் இல்லை என்று யார் சொன்னா... இதிலும் இலக்கியம் இருக்கு என்று தனது சட்டையின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு பேசினார். இடையில் சாரு பழி குறித்து எழுதிய முகநூல் செய்தியும் வாசிக்கப்பட்டது. புத்தகத்தை ஜெஸிலா அவர்கள் வெளியிட ஷோபியா, சான்யோ, ரமா, ஜெசி, சுடர்விழி என பெண்கள் அணி பெற்றுக்கொண்டது. அய்யனார் விஸ்வநாத் தனது ஏற்ப்புரையில் இதுதான் என முதல் நாவல் என்றும் 2009-ல் பிளாக்கில் எழுதிய காலகட்டத்தில் பலத்த எதிர்ப்பையும் அதன் பின் பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நாவல் இது என்றும் சொன்னார்.
எட்டாவதாய் அமீரக எழுத்தாளர்களின் ஒட்டக மனிதர்கள் குறித்து ஆசிப் அண்ணன் பேசும் போது நிறைய எழுத்தாளர்கள் விடுபட்டுப் போய்விட்டார்கள் என்றும், இந்தப் புத்தகத்துக்கான முன்னட்டைப் படம் எப்படித் தேர்வு செய்தோம் என்றும் இது நிறைவான புத்தகமாக இல்லை என்றாலும் நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நிறைந்த புத்தகம் என்றார். கைக்காசை போட்டிருக்கிறேன் புத்தகத்தை எல்லாரும் வாங்குங்கய்யா என மார்க்கெட்டிங் செய்யவும் மறக்கவில்லை. ஒரளவு எல்லாரும் வாங்கினார் என்பதும் சந்தோஷமே. புத்தகத்தை மூத்த எழுத்தாளர் ஆபிதின் அவர்கள் வெளியிட எஸ்.எஸ். மீரான் அவர்கள் பெற்றுக் கொண்டார். ஒட்டக மனிதர்களில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாரும் மேடையில் இருந்தனர்.
நன்றியுரைக்கு பாலாஜியும் கூட திடீர் மாப்பிள்ளையாகத்தான் அழைக்கப்பட்டார். நம்ம பக்கத்து நக்கல் நையாண்டி ரசிக்கக் கூடியதே என்பதால் மனிதரின் பேச்சு எட்டுப் புத்தகங்களின் அறிமுக, ஏற்புரைகளைக் கேட்டு அயற்சியாய் இருந்தவர்களை புன்னகை கடலுக்கே கொண்டு சென்றது... கோபத்துல சேரை உடைக்கிறாங்க... குரூப்புல அடிச்சி மண்டையை உடைச்சிக்கிட்டு உருளுவானுங்க... அடுத்த நாள் காலையில ராஜாராம் வந்து எதுவும் நடக்காதது மாதிரி திருக்குறள் போடுவாரு.... கூப்பிடுறானுங்கன்னு நம்பி யாரும் வந்துறாதீங்க.... என்றெல்லாம் தன் பாணியில் அடித்து ஆடி, அரங்கை சிரிப்பால் நிரப்பினார். சதமடித்தவனைவிட போட்டியில் ஜெயிக்க கடைசி நேரத்தில் சிக்ஸராக விளாசியவனையே கொண்டாடும் உலகம் இது என்பதை நேற்று பாலாஜியின் பேச்சுக்கு கிடைத்த கரகோஷமும் சிரிப்பொலியும் நிரூபித்தது.
விழாவைத் தொகுத்தளித்த ஆசிப் அண்ணன் இடையிடேயே தனது சிலேடைப் பேச்சை, நகைச்சுவையாய் தந்து கொண்டே இருந்தார். மாப்பிள்ளை பெஞ்சு லூட்டி விழா முழுவதும் தொடர்ந்தது. விழா குறித்து ஹேமா பேசிய காணொளி ஒளிபரப்பப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில் குழுமத்தின் ஒரு வருட செயல்பாடுகளின் காணொளி காண்பிக்கப்பட்டது.
எழுத்தாளர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டன... பொன்னாடைகளை அமீரக மதிமுக வழங்க தி.மு.கவின் எஸ்.எஸ்.மீரான் போர்த்தினார்.
விழா முடிந்த பின்னர் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என பாலாஜி எங்களை இழுத்து நிறுத்தினார். ஹோட்டலில் எங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட பிலால் அதைச் சொல்லவா... இதைச் சொல்லவா... என கேட்டுக் கேட்டு வாங்கிக் கொடுத்தார். அருமையான சாப்பாடு... செட்டிநாடு பெப்பர் சிக்கன் கிரேவி என எதையோ வைத்தார்கள்... செட்டிநாட்டுக்காரனான நமக்குத்தான் கஷ்டமாக இருந்தது. மற்றபடி எல்லாம் அருமை... அதிலும் அந்த இளநீர்ப் பாயாசம்... அட... அட... இன்னும் இனிக்கிறது. மதுரைக்காரய்ங்க பாசத்துல மட்டுமில்ல உபசரிப்பிலும் முன்னோடிதான்.
அங்கிருந்து இரவு 11:30 மணிக்கு மேல் தமிழ் மக்கள் மன்ற நண்பர்களுடன் காரில் கிளம்பி, இரவு 1:30 மணிக்கு மேல் எங்கள் கட்டிடத்தின் வாசலிலேயே இறக்கிவிடப்பட்டேன். காரில் வரும்போது அரசியல்... அரசியல்... அரசியல் என நடுராத்திரியில் பேசிக்கொண்டே வந்தார்கள். நமக்கு அது வெகு தூரமான களம் என்பதால் அவ்வப்போது தூக்கத்தை அணைத்துக் கொண்டேன்.
சுபான் அண்ணாச்சி சிறப்பாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். எப்பவும் போல் நம்மளை கண்டுக்காம இருந்திருக்கலாம். ஏதோ கோபமாக முகத்தை வைத்தாற் போலிருக்கும் போது சரியாக கணித்து எடுத்திருக்கிறார்.... ஆனாலும் பெண்களை எல்லாம் வளைத்து வளைத்து அழகாக எடுத்திருக்கிறார். படங்கள் அருமை... வாழ்த்துக்கள் அண்ணா.
ஒரு நல்லதொரு நிகழ்வை நிகழ்த்தி முடித்திருக்கிறது அமீரக வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர் குழுமம். இந்த விழா சிறக்க உழைத்த ஒவ்வொருவரும் பாராட்டுக்குறியவர் என்பதில் சந்தேகமில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
விடுமுறை நாளின் மாலைப் பொழுது நிறைவாய் அமைந்தது.
நன்றி.
*************
பிரதிலிபி 'காதலா... காதலா...' சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது இரண்டு சிறுகதைகள்...
-'பரிவை' சே.குமார்.
அருமை! காட்சி பிழையின்றி தான் கண்ட நிகழ்வுகளை வாசிப்பவர் கண்முன் நிறுத்தும் எழுத்தாளுமை உள்ள என் மரியாதைக்குரிய மூத்த சகோதரர் குமார் அவர்களுக்கு எப்போதும் கையைவிட்டகலா கலை...! எல்லோருக்கும் அது வாய்க்காது. எங்களது முதல் அறிமுகத்தில் கைகுலுக்கி சென்றவர் அவரின் இதுபோன்ற எழுத்தால்தான் மிக நெருக்கமானார் என்றால் அதுதான் சதமான உண்மை! இன்னமும் இதுபோன்ற எழுத்துக்களால் பல உள்ளங்களை அவர் இல்லமாக்கிக் கொள்வார் என்பதில் ஐயமில்லை!
பதிலளிநீக்குசிறப்பு அண்ணே!
அமீரக எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஒரு விழாவை நேரில் கண்ட நிறைவு உங்கள் எழுத்தில் ..அருமை
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துகளை பிரதிலிபி யில் தொடர்கிறேன் ..வாசிக்கிறேன்
சிறுகதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிறப்பான நிகழ்வு...
பதிலளிநீக்குஅமீரக எழுத்தாளர்கள் மற்றும் நூல்வெளியீட்டு விழா நிகழ்வுகளைச் சுவையாக வழஙகியது பாராட்டத் தக்கது.
பதிலளிநீக்கு