அந்த வீட்டிற்கு அவர்கள் வந்து மூன்று மாதமாகிறது.
அந்தத் தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள்.
மற்ற மூன்று வீடுகளில் ஆந்திராக்காரர்களும் பெங்காலிகளும்.
இவர்கள் வீட்டில் மட்டுமே மலையாளிகளும் தமிழர்களும்...
வீடு என்றால் முழு வீட்டையும் இவர்கள் பயன்படுத்தப் போவதில்லை. அதிலிருக்கும் மூன்று படுக்கை அறையில் (ஹாலையும் படுக்கை அறை ஆக்கி விடுவார்கள்) ஒன்றுதான் இவர்களுக்கு... நாலைந்து வருடத்துக்குப் பிறகு பால்கனியுடன் அறை கிடைத்திருந்தது. அடுப்படி மூன்று அறை ஆட்களுக்கும் பொதுவாய்... கழிவறை இரண்டும் அப்படியே. வாசிங்மெசின் கூட எல்லாருக்கும் ஒன்றாய்.
அந்த வீட்டில் எல்லாமே சேவல்கள்தான்... பாலகுமாரனின் சிறுகதைத் தலைப்பை போல அது 'சேவல் பண்ணை'தான். பக்கத்து வீட்டில் யாரிருக்கிறார்கள் என்றே தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.
எப்பவாவது லிப்டில் கணவன் மனைவியும் வருவார்கள். அதுவும் நாம் நிற்பதைப் பார்த்தால் அவன் அவளை மறைக்கப் படும்பாடு இருக்கிறதே... சில நேரம் சிரிப்பு வரும். பல நேரம் அந்தப் பெண்ணுக்கான சுதந்திரம் இல்லாத நிலை கண்டு வருத்தமே மேலிடும்.
பர்தாவுக்கு மேல் அந்தப் பெண்ணின் கண்ணைத் தவிர வேறு எந்தப் பாகத்தைப் பார்த்து விடப் போகிறோம் எனத் தெரியவில்லை. அந்தப் பெண்ணை மறைத்தபடி கதவைத் திறந்து வேகமாக உள்ளே தள்ளி விடுவான் அவளின் கணவன்... அந்த வீட்டில் மேலும் இரண்டு குடும்பங்கள் இருக்கலாம். இவர்களைத் தவிர மற்ற குடும்பத்தைப் பார்த்ததில்லை.
எதிர்த்த வீடு இரண்டிலும் ஆந்திரா ஆண்களும் பெண்களும்... அதில் சிலர் குடும்பத்துடன்... அந்தப் பெண்கள் இங்கும் அங்குமாக மாறி மாறி இருப்பார்கள். பெரும்பாலும் அந்தப் பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள் போனில்... முதல் வீட்டில்தான் அவர்கள் இருப்பார்கள் என்றாலும் சில நாட்கள் இரண்டாவது வீட்டில் இருந்து எழுந்து செல்வதைக் காணலாம்.
இவர்களுக்கெல்லம் குடும்பம் ஊரில்தான் இருக்கும் என்றாலும் இங்கும் குடும்பமாய் இருப்பார்கள்... பெரும்பாலும் திருமணமாகாத பசங்களுடன்... வாழும்வரை வாழலாம் என்ற கோட்பாடு போலும். இது தெலுங்கு மற்றும் சிங்களரிடம் அதிகம் காணப்படும்.. பெரும்பாலான வட இந்தியர்கள் பிலிப்பைனிகளுடன் வாழ்கிறார்கள்... சில தமிழர்களும் இது போன்ற வாழ்க்கை வாழத்தான் செய்கிறார்கள். இதை எழுதினால் நிறைய எழுதலாம்.
ஆந்திராக்காரப் பெண்கள் துவைத்த துணிகளை வெளியில் கம்பி உலர்த்தி வைத்து அதில்தான் காயப் போடுவார்கள் உள்ளாடைகள் உள்பட. மனைவியை எவனும் பார்த்து விடுவானோ என்று நினைப்பவன் மத்தியில் உள்ளாடையை பார்ப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது எனக் காயப்போடும் இப்பெண்கள் மேல் எனத் தோன்றும்.
கணவனால் மறைத்துக் கொண்டு போகும் பெண்ணைப் பார்க்க வேண்டிய அவசியமும் இங்கு இல்லை... ரோட்டில் போனால் சினிமாவை விட மோசமான உடைகளில் பலரைப் பார்க்கலாம்... இது முஸ்லீம் நாடென்றாலும் உடைக் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு மட்டுமே... வண்ண வண்ணப் பூக்கள் விநோதினி உடையில் பலரைப் பார்க்கலாம். நம்மவர்கள் கூட இங்கு கலாச்சாரக் காவலர்களாய் இருப்பதில்லை... பதின்ம வயதுப் பிள்ளைகளை கவர்ச்சியாய் கூட்டிச் செல்வதில் மகிழ்வும் கவுரவமும் நம்மவர்களுக்கு... மலையாளிகளின் பிள்ளைகள் பல இடங்களில் உதடுகளுடன் உறவாடிக் கொண்டிருப்பார்கள்.
அவன் கதையை விடுத்து அவள்கள் கதைக்குள் போவானேன்..
அந்த அறைக்கு அவர்கள் வந்து மூன்று மாதமாகிறது. அருகே தெரிந்த பூக்கடை இருப்பதால் சாமிகளுக்கு அவ்வப்போது பூ வாங்கிப் போட்டார்கள்... தினமும் தீபம் ஏற்றினார்கள்... கம்ப்யூட்டர் சாம்பிராணி வாங்கி வைத்து செவ்வாய், வெள்ளி ஏற்றினார்கள்... அதன் வாசம் அறை எங்கும் வியாபித்திருப்பது மன நிறைவு அவர்களுக்கு...
அந்த அறை அவர்களுக்கு சுபிட்சமாகத் தெரிந்தது. காலைச் சூரியன் அறைக்குள் மகிழ்வாய் நுழைந்தமர்கிறான். கஷ்டங்கள் எல்லாம் தீரும் என நம்பினார்கள்... நம்பிக் கொண்டிருக்கிறார்கள்... நம்பிக்கைதானே வாழ்க்கை... இல்லையா...
அந்த அறையில் இருக்கும்... மன்னிக்கவும் இருந்த நால்வரில் இருவர் ஒரே கம்பெனி... எதுக்கு இங்க மன்னிக்கவும் வந்துச்சுன்னு யோசிக்காதீங்க... இப்ப நால்வரணி பஞ்ச பாண்டவராயாச்சு... ஐவரில் இருவர் மலையாளிகள்.
அந்தச் சிறிய அறையில் ஐவர் என்பது கொஞ்சம் சிரமமே. அவன் நண்பனிடம் வேண்டாம் நால்வரே சரியா இருக்கும் எனச் சொல்லிப் பார்க்க, வாடகை கொஞ்சம் குறையும் நான் கீழே படுத்துக்கிறேன் என்பது நண்பனின் பதிலாய் வந்தது. கொஞ்ச நாள் கீழ படுக்க நல்லாயிருக்கும்... விடுமுறை தினங்களில் கஷ்டமாயிருக்கும் பார்த்துக்க... நாலு பேர் போதும் நமக்கு எனச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டான்.
அவனும் கிட்டத்தட்ட ஆறாண்டுகள் கீழேதான் படுத்திருக்கிறான். விடுமுறை தினங்களில் அமர இடமின்றி அவதிப்பட்டதை... படுக்க வேண்டும் என மனசு அடம் பிடித்தாலும் படுக்க முடியாமல் உட்கார்ந்திருந்ததை அவனால் மறக்கவே முடியாது. கீழே படுப்பதென்பது மிகவும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும் இடமும் சூழலும் சரியாக இருப்பதில்லை என்பதால் இப்போதெல்லாம் கட்டிலைத் தேர்வு செய்து விடுவதுண்டு. புதிதாக இணைந்தவனும் நண்பனுடன் பணி எடுப்பவன் என்பதால் அதற்கு மேல் ஒன்று சொல்லவில்லை அவன்.
'ஒண் பிளஸ் ஒண் டூ மாமா
யு பிளஸ் மீ த்ரி மாமா ...'
அப்படின்னு மாரி-2வுல ரவுடி பேபி பாட்டுல வருமே அப்படி நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்யும் மலையாளிகள் இருவரும் சேர, ஒரே நிறுவன ஆட்கள் மூவரானார்கள்.
அந்த அறைக்கு வந்த புதிதில் சேர்ந்தவன் தினக் குடிகாரன்... வேலை விட்டு வந்ததும் கைகால் கழுவுறானோ இல்லையோ கையில் கிளாஸ் எடுக்கணும்... ஊருக்குப் பேசணும்... லவ்வருக்குப் பேசணும்... ரஹ்மான் பாட்டுக் கேக்கணும்... இந்த நேரத்தில் இரண்டு பெக் உள்ளே செலுத்தி விடணும் என்பதே அவனின் முக்கியமான வேலையாக இருந்தது.
அடுத்த மாதம் இணைந்த மலையாளி, வருத்தத்துக்காவும் டென்சனுக்காகவும் குடிக்கிறேன் என அளவு தெரியாமல் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். பின்னர் படுத்தி வைத்து மற்றவர்களை வருத்தத்துடன் டென்சனும் ஆக வைப்பான்.
அவனின் நண்பனும் குடி என்றால் அப்படி ஒரு குடி குடிப்பான். சாப்பிட மாட்டான்... தூங்க மாட்டான்... பாட்டில் பாட்டிலா காலி பண்ணிட்டு ராத்திரியெல்லாம் பொண்டாட்டிக்கிட்ட சத்தமாப் பேசி (சில நேரம் கொஞ்சல்... பல நேரம் சண்டை) மற்றவர்களைத் தூங்க விடமாட்டான். இனிக் குடிப்பதில்லை என ஆறு மாதமாக இருந்த விரதத்தை முதல் மலையாளி நண்பனின் வரவில் கலைத்து மடையைத் திறந்தான்... அதிகமில்லை என்றாலும் விடுமுறை தினங்களை வீணாக்குவதில்லை.
ஆக மொத்தம் இவர்கள் மூவரும் சேர்ந்தால் பால்கனி பல்லாங்குழி ஆடும். அரசியலும் சினிமாவும் இவர்களின் விரலில் பேசும்.
அப்பப்ப வீட்டு உரிமையாளரும் உரிமையாய் பால்கனிக்கு வருவதுண்டு... கொஞ்சமே குடித்துவிட்டு இரவுகளை இரவல் நாயகிக்கு அர்பணித்து விடுவார். என்ன நடக்கிறது என்பதெல்லாம் அவர் பார்ப்பதில்லை... கருமமே கண்ணாயிருப்பார்... வறுபடும் கடலையில் இவரின் மனைவியும் அவளின் கணவனும் காணாது போயிருப்பார்கள்.
இப்ப வந்திருக்கவன் மொடாக் குடியனாம்... இனி நால்வரின் நாடகம்... உரிமை சேர்ந்தால் ஐவரின் நாடகம் அரங்கேறும் இடம் பால்கனியாகும்... பால்கனி என்ன பாடு படப்போவுதோன்னு நினைக்கும் போது அவனுக்குப் பயமாக இருந்தது.
எதிரே இருக்கும் கட்டிடங்களில் எல்லாம் குடும்பங்கள்தான் அதிகம் சேவல் பண்ணை குறைவு. தண்ணி போட்டுக் கொண்டு சப்தம் போட்டால் போலீசுக்குத் தகவல் சொல்லிவிடுவார்கள். உடனே போலீஸ் வந்து நிற்பான்... எல்லாருக்கும்தான் அபராதம் விதிப்பான்... இருக்கும் இடத்துக்கும் பிரச்சினை வரலாம்.
எல்லாரிடமும் கண்டிப்பாக இரு, ரொம்ப இடம் கொடுக்காதே, அறைக்குள் பிரச்சினை இருக்கக் கூடாது என்று முன்னமே நண்பனிடம் சொல்லி விட்டான். போதைக்குப் பின் நண்பன் ஸ்டெடியாக நிற்பானா என்பது தெரியாதல்லவா..? மாட்டுக்கறி சமைப்பதில்லை என்ற கோட்பாடெல்லாம் உடைக்கப்படும் போது இதெல்லாம் எம்மாத்திரம்...
எப்பவுமே மலையாளிகளுடன் குடும்பம் நடத்துவது என்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்று... இரவில் சீக்கிரம் தூங்க மாட்டார்கள்... கணிப்பொறியையோ செல்போனையோ நோண்டிக்கொண்டு கிடப்பார்கள். கதவை 'மடார்' என்று திறப்பார்கள்... அடைப்பார்கள்... விடுமுறை தினங்களில் காலையில் சீக்கிரம் எந்திரிக்க மாட்டார்கள். குறிப்பாக படுத்த படுக்கையை மடித்து வைக்காமல் அப்படியே போட்டு வைப்பார்கள். இவர்களிலும் விதி விலக்கு உண்டுதான் என்றாலும் குளியலறையை அதிக நேரம் குத்தகைக்கு எடுப்பதில் எல்லாருமே ஒண்ணுதான்... இதில் விதிவிலக்கெல்லாம் இல்லை. சில நேரம் ஒண்ணுக்குப் போக ஒரு மணி நேரமெல்லாம் காத்திருந்திருக்கிறான் அவன்.
சமையலைப் பொறுத்தவரை அவனும் நண்பனுமே சமைக்க வேண்டும்... மலையாளிகள் இருவரும் சாப்பாட்டில் இணைந்திருந்தாலும் சமைக்கத் தெரியாது. காலையில் சாதம் வைக்கச் சொல் என்றால் அவனுகளுக்குத் தெரியாது... நாமதான் வைக்கணும் என கூலாகச் சொல்கிறான் நண்பன். என்ன சொல்வது என்று தெரியாமல் நண்பனுக்காக ஓடும்வரை ஓடட்டும் என விட்டுவிட்டான் அவன்.
தண்ணி அடித்து அவர்கள் ஆடிய ஆட்டத்தை எல்லாம் அப்பப்ப முகநூலில் புலம்பி வைப்பான்.. இனி என்ன நடக்குமோன்னு முன்னாடியே புலம்ப ஆரம்பிச்சிட்டான். புலம்புவதால் நடக்க இருப்பது நடக்காமலா போகும்... பிரச்சினைகள் விஸ்வரூபமெடுக்கும் வேலையில் அவன் வேறொரு அறைக்கு மாறியிருக்கலாம்.
ஒரு அறைக்குள் தண்ணி அடிப்பவன் நுழைந்தால் அங்கு தங்கியிருக்கும் 'குடி'களுக்கு எத்தனை சந்தோஷம் என்பதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். 'கிளாஸ் எடுங்க' என ஒருத்தனும் 'இந்தாங்க இதை ஊத்துங்க' என ஒருவனும் 'சைடுக்கு மிக்ஸர் அதிலிருக்கு பாருங்க' என ஒருவனும் குதிப்பார்கள். உடனே ஜோதியில் ஐக்கியமாகிவிட்டால் மச்சான், மாமான்னு உறவு முறைக்குள் நீச்சலடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படித்தான் ஐந்தாவது ஆள் வந்தபோது 'வா குடிக்கலாம்... வந்தன்னைக்கே ஆரம்பிச்சி வை' என தினக்குடிகாரன் குதூகலித்தான்... இந்தளவுக்குப் பேசுவான்... சிரிப்பான்... என்பதை அவன் அன்றுதான் பார்த்தான். கண்ணாடிக்கு வெளியே சிரிச்சி நிக்குது தினக்குடியின் மகிழ்ச்சி. அதுக்கும் காரணம் இருக்கு... அது என்னன்னா தினக்குடி முன்னாடி குடியிருந்தது ஐந்தாவது வரவுடன்தான். ஐந்தாவது வரவுதான் தினக்குடியை அவனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
இவர்களின் அலம்பலையும் சலம்பலையும் பார்த்துக் கொண்டே...
எதையும் காட்டிக்கொள்ளாமல்....
என்னண்ணா என எதாவது கேட்டால்...
எப்பவும் போல் சிதறாத புன்னகையை பதிலாக்கிவிட்டு...
புத்தக வாசிப்பில் தீவிரமாகிறான் அவன்.
அவனது கையில் கனவுப்பிரியனின்...'மணல் பூத்த காடு' (இதில் அவரின் இயற்பெயரான முஹம்மது யூசுஃப்) சிரித்துக் கொண்டிருக்கிறது.
நாயகன் அனீஸ் உடன் தோழப்பாவின் ஆலோசனைகளைக் கேட்டபடி பயணப்பட்டு 300 பக்கங்களைத் தாண்டிவிட்டான் அவன்.
எல்லாரும் படுத்ததும்...
பால்கனியில் நின்று ஊரிலிருக்கும் சாமிகளை வேண்டிவிட்டு....
எதிரே உயர்ந்து நிற்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் விளக்கொளியை ரசித்தபடி...
எத்தனை காலம்தான் கஷ்டப்படுவது...? எப்போது விடுதலை..? என்ற ஏக்கத்தை எப்பவும் போல் இறக்கி வைக்க முடியாமல் சுமந்தபடி...
கதவினைப் பூட்டி....
விளக்கணைத்து...
விடியலில் எழ வேண்டுமேயென...
படுக்கையில் விழுபவனின் மொபைலில் சிரிக்கிறான் மகன்.
முத்தங்களைக் கொடுத்து விட்டு முகத்தை மூடிக் கொள்கிறான் போர்வையால்...
தூக்கம் வராத இரவு மெல்ல நகர...
தெருவில் இரவெல்லாம் வாகனங்கள் பயணிக்கின்றன இரைச்சலை விதைத்தபடி...
இந்தப் பயணம் எப்போது முடியும் என்பது அவனுக்குத் தெரியாது.
தொடரும் நாட்கள் சுகமானவையா... சுமையானவையா என்பதும் அவனுக்குத் தெரியாது.
விடியல் மகிழ்வாய் இருக்குமா என்பதும் தெரியாது....
விடியும் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்குள் எப்போதும்.
இது கற்பனை என்று நினைத்தால் அது உங்கள் எண்ணமாக மட்டுமே இருக்கும்.
-'பரிவை' சே.குமார்.
விடியல்களை நோக்கி இரவுகளும், இரவுகளை நோக்கி விடியல்களும்!
பதிலளிநீக்குமனதின் வேதனை புரிகிறது...
பதிலளிநீக்குபலரது வாழ்க்கை ஓட்டம் திரைப்படமாய் மீண்டும் பார்த்தது போன்ற உணர்வு எனக்கு...
பதிலளிநீக்குவேதனை....
பதிலளிநீக்குவிடியும் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்குள் எப்போதும்//
பதிலளிநீக்குபடிக்கும் போதே மனம் கனத்து போகுது.
குடும்பத்தை பிரிந்து குடும்பத்திற்கு எவ்வளவு இன்னல்களை அனுபவித்துக் கொண்டு சம்பாதித்து கொடுக்கும் பலரது வாழ்க்கையை சித்தரிக்கிறது .பதிவு.
குமார் புரியுது யாருடைய வாழ்க்கை என்று! இப்படித்தான் பலரது வாழ்வும் அங்கே இல்லையா? வேதனை! ஆனால் அதுவும் நம்பிக்கையில்தானே ஓடுகிறது! நம்பிக்கைதானே வாழ்க்கை....
பதிலளிநீக்குகீதா