இந்த மனசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு. மனசு பேசுகிறது மட்டுமே தொடர்ச்சியாய் எழுத வாய்க்கிறது. இன்னைக்கு கொஞ்சம் கலவையாய் எழுதலாமே என்பதால் மனசின் பக்கத்தைப் புரட்டுகிறேன்.
நண்பர் ஜாக்கி சேகர் நடிப்பில் ஆர்வா என்பவர் இயக்கியிருக்கும் 'அப்பா காண்டம்' என்ற குறும்படத்தைப் பார்த்தேன். உண்மையிலேயே மிகச் சிறப்பானதொரு படம்... எடுத்திருக்கும் விதமும் அருமை. ஒரு அப்பா தன் மகனிடம் பேச யோசிக்கும் செக்ஸ் தொடர்பான விஷயங்களை, மகன் தன் காதலியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த பின் அவனைத் திருத்துவதற்காக அவனுடன் அமர்ந்து பேசுவதே கதை... வசனங்கள் எல்லாம் செம... இந்த மாதிரியான வசனங்களை யாருமே பேசி நடிக்க மாட்டார்கள் என்பதே உண்மை... நாம் ஜாக்கியைப் பற்றி அறிவோம்... அவருக்கு இந்த வசனங்கள் அல்வா சாப்பிடுவது போல... மனுசன் ஒவ்வொரு வசனத்திலும் சிக்ஸர் அடிக்கிறார். இரண்டே இரண்டு நெருடல்கள் மட்டுமே.... ஒன்று லெமன் டீ போடும் போது பயன்படுத்தும் பிரைபேன், எடுத்து பிளாஸ்கில் ஊற்றும் போது காபி பாத்திரமாய் மாறிவிடுகிறது. மற்றொன்று அப்பா-மகன் எதிர் எதிரே அமர்ந்து பேசும் போது அண்ணன் தம்பி போல் இருக்கிறார்கள். ஜாக்கிக்கு கொஞ்சம் வயதான் மனிதரைப் போல் ஒப்பனை செய்திருக்கலாம். மற்றபடி வாழ்த்துகள் அனைவருக்கும்.
படம் பார்க்க : 'அப்பா காண்டம்'
தண்ணீர் பற்றியதான ஒரு கதையை '2060' என்ற பெயரில் இயக்குநராக முயற்சிகள் மேற்கொண்டு வரும் அண்ணன் ஒருவர் குறும்படமாக எடுத்திருக்கிறார். இதற்கு முன் நிறையக் குறும்படம் எடுத்திருக்கிறார். சின்னதாய் ஒரு கதை... இங்கு வெளியில் வைத்து எடுப்பது என்பது சட்டச்சிக்கல் என்பதால் ஒரு இரவில் காருக்குள்ளே வைத்து கதையை முடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களம்... அருமையான முயற்சி... அவரே நடிகர்.... தனது ஸ்டுடியோவுக்காகவும் சிந்தனைக்காகவும் தனியே ஒரு தளத்தையே வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். இந்தப் படமும் சிறப்பாக வந்திருக்கிறது... என்னோட கதை ஒன்று அவர் கையில் இருக்கிறது... நாயகி கிடைப்பது கடினம் என்பதால் காத்திருப்பில்... கிடைக்கும் போது அதுவும் குறும்படமாகலாம்.
படம் பார்க்க : '2060'
கனவுப்பிரியன் அவர்களின் 'மணல் பூத்த காடு' நாவல் வாசிப்பில் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சௌதியில் ஒரு ஊரையும் சில மருத்துவ சாதனங்களையும் பற்றிப் பேசுகிறது. நாவலாகப் பயணிக்காமல் ஒரு பயணத்தொடர் போல... அதுவும் செய்திகள்... அறியாத செய்திகள் நிறைந்த பயணத் தொடர் போல பயணிக்கிறது. அனீஸ் நம்மை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்கிறான் பல விஷயங்களை நமக்குச் சொல்லியபடி... இந்த நாவலுக்குப் பின்னே அவரின் கடின உழைப்புத் தெரிகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.
மனசு தளத்தில் எழுதியிருக்கும் 100 சிறுகதைகளுக்கு மேலான கதைகளில் 50 கதைகளை பிடிஎப் - ஆக மாற்றி சில நண்பர்களிடம் கொடுத்திருக்கிறேன். வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேர்வில் இருந்து முதலில் 20 கதைகளைத் தொகுப்பாக்கலாம் எனவும் 'வேரும் விழுதுகளும்' தொடர்கதையையும் புத்தகமாக கொண்டு வரலாம் எனவும் 'மனசு' நினைக்கிறது. இறையருள் இருந்தால் நிச்சயம் இந்த ஆண்டில் இரண்டும் வரும். சொல்ல மறந்துட்டேனே... வாசிக்கும் நண்பர்களின் கருத்துக்கள் பந்தக்காலில் வாழை மரம் கட்டுவதாய்த்தான் இருக்கிறது... திருவிழாதான்.... என்ன ஒண்ணு அழுக வைக்கிறது என்பதே எல்லாரிடமும் இருந்து வருகிறது கருத்தாய்...
2019-ல் மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இருந்து சில வரிகள்... கதைகளுக்கு இன்னும் தலைப்பிடவில்லை என்பதால் கதையினை வைத்து தற்காலிகத் தலைப்பின் கீழ்....
முதல் கதை : கருப்பர்
// நள்ளிரவில் 'ஏய்ய்... கருப்பா...' என இருட்டையும் நிசப்தந்தத்தையும் கிழித்துக் கொண்டு கத்தினார் ராமசாமி.
அவருக்கு அருகில் இருந்து ஏதேனும் குரல் வருதான்னு விழித்திருந்தவர்கள் காதைத் தீட்டிக் கொண்டு காத்திருக்க...
எங்கும் நிசப்த்தம்...
'கருப்பன் மனமிறங்கவில்லையோ..?'
'கருப்பனுக்கு யாரையும் புடிக்கலையோ...?'
'கருப்பா என்ன கோபம்...?
'இந்த வருசம் உனக்குக் கெடாப்பூசை போட்டுடுறோம்... ஆளைக் காட்டுப்பா...' என ஆளாளுக்கு மனசுக்குள் வேண்டிக் கொண்டிருந்தனர்.//
இரண்டாவது கதை : நாகர்
//அம்மா சொல்வதில் இருக்கும் உண்மை உரைத்தது... பெரும்பாலும் முனியய்யா கோவில்களில் கிடாப்பூஜை என்பது சாமி கும்பிடுவதுடன் முடிந்து விடும். படையல் எல்லாமே அருகிருக்கும் காளியம்மனுக்குதான் என ஒருமுறை சித்தப்பா சொல்லியிருக்கிறார். முனியய்யா சைவம்டா என்ற கூடுதல் செய்தியுடன்...அதன் பின் முனியய்யா கோவில் பூஜைகள் கூர்ந்து கவனித்திருக்கிறேன்... அசைவப் படையல் அருகிருக்கும் அம்மனுக்கே.. பெரும்பாலான முனியய்யா சைவமாத்தான் இருக்கு.
"நான் நாகர் கோவில் வரைக்கும் பொயிட்டு வாரேம்மா..."
"அதான் இல்லேங்கிறேன்... போறேன்னுட்டு நிக்கிறே... அங்கிட்டு முள்ளும் மொடலுமாக் கிடக்கும்... கல்யாண மாப்புள... முள்ளு கிள்ளக் குத்திக்கிட்டு வந்துறாத.... அதோட இப்ப எதுக்கு அங்க போயிக்கிட்டு... பாம்பு பட்ட கிடக்குன்னு வேற சொல்றாக..."//
மூன்றாவது கதை : கமலம்
//"நேத்து எங்கடி போனிய... நீனும் ஒம்மாமியாவும்.." மெல்லக் கேட்டாள் சங்கீதாவிடம்.
"பெரிய நாத்துனா வீட்டுக்குப் போனம்... லேட்டாத்தான் வந்தம்..."
"இருட்டுக்குள்ள தனியாவா வந்திய..."
"இல்ல... ஒம்மவனும் வந்தாக..."
"ம்... அதானே... பாத இருட்டு ஏமத்துல வாற மாரியா இருக்கு..."
எருக்கூடையைத் தூக்கி 'நங்'கென்று தலையில் வைத்துவிட்டு "தொறுத்தொறுன்னு இருக்கு... இத எப்புடித் தூக்கிட்டுப் போவெ... மேலெல்லாம் வடியுமுல்ல..." என்றாள்.//
மனசின் பக்கம் இன்னும் பேச ஆசைதான்... பதிவு நீண்டு போயிருமே...
-'பரிவை' சே.குமார்.
அறிமுக கதைகளை வாசிக்க ஆவல் தூண்டுகிறது... அருமை...
பதிலளிநீக்குநன்றி அண்ணா...
நீக்குசுவாரஸ்யமான அறிமுகங்கள்/ உங்கள் புத்தகம் சீக்கிரம் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா...
நீக்குதொடர்ந்து எழுதுங்க குமார்.
பதிலளிநீக்குசில பிரச்சினைகள் அண்ணா...
நீக்குஇப்போ கையில் சிஸ்டம் இல்ல... அலுவலகத்தில் வேலை இல்லை என்றால்தான் எழுத முடியும்.
வேலையும் அதிகம் இப்போ.
முயற்சிக்கிறேன் அண்ணா..
நன்றி அண்ணா...
அருமையான கதை அறிமுகங்கள்.
பதிலளிநீக்குபுத்தகம் கொண்டுவர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
குமார் உங்கள் புத்தகம் விரைவில் வெளிவர வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஉங்கள் கதைகளின் அறிமுகங்கள் அருமை.
முதல் குறும்படம் பார்த்துவிட்டேன். நல்லாருக்கு...நல்ல கான்செப்ட். ஒரே ஒரு இடம் மட்டும் அப்பாவின் லெங்க்தி டயலாக்...அட்வைஸ் ..அதை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக வைத்திருக்கலாமோ...என்று தோன்றியது...மற்றபடி படம் செம...நல்ல கருத்து இப்போதைய இளைஞர்களுக்குத் தேவையான ஒன்று. அப்பா நல்ல ஃப்ரென்ட்லி அப்பா...
படம் எடுத்தவிதம் ஃபோட்டோ க்ராஃபி எல்லாம் அருமை...நல்ல மேக்கிங்க்..
அடுத்த படம் இனிதான் பார்க்கனும் பார்த்துட்டு வரேன்...
கீதா
இரண்டாவது படமும் நல்லாருக்கு...உண்மை நிலவரம்!! நிஜமாகவே இதுதான் நடக்கப் போகுது...இதே போன்று சாப்பாடும் கேப்சுயூலில் வந்துருமோ?!!!
பதிலளிநீக்குகாருக்குள்ளேயே எடுத்தது சவால் தான்...நல்ல முயற்சி...
படத்தில் உள்ள ஒரு சின்ன குறை...வால்யூம்...என் போன்ற செவித்திறன் இல்லாதவர்களுக்குக் கேட்பது கடினமாக இருக்கிறது. சப்டைட்டில் இருந்தால் நல்லாருக்கும்...
மிக்க நன்றி குமார். இரண்டு நல்ல குறும்படங்கள் மற்றும் வர இருக்கும் உங்கள் சிறு கதைகள் என்று செம...வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் எல்லாவற்றிற்கும்.
கீதா
குறும்படங்கள் மற்றும் உங்கள் சிறுகதைகளின் அறிமுக வரிகள் எல்லாம் சிறப்பு. விரைவில் தளத்தில் வரும் என்று நினைக்கிறோம்.
பதிலளிநீக்குஉங்கள் புத்தகம் வெளிவர மனமார்ந்த வாழ்த்துகள்!
துளசிதரன்
குறும்படங்கள் தில்லி சென்ற பிறகு பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகதை முழுதும் படிக்க காத்திருக்கிறேன். உங்கள் புத்தகங்கள் அச்சில் வெளிவர மனம் நிறைந்த வாழ்த்துகள்.