புதன், 30 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது: அவனும் வாழ்க்கையும்

ந்த வீட்டிற்கு அவர்கள் வந்து மூன்று மாதமாகிறது. 

அந்தத் தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள். 

மற்ற மூன்று வீடுகளில் ஆந்திராக்காரர்களும் பெங்காலிகளும். 

இவர்கள் வீட்டில் மட்டுமே மலையாளிகளும் தமிழர்களும்...

வீடு என்றால் முழு வீட்டையும் இவர்கள் பயன்படுத்தப் போவதில்லை. அதிலிருக்கும் மூன்று படுக்கை அறையில் (ஹாலையும் படுக்கை அறை ஆக்கி விடுவார்கள்) ஒன்றுதான் இவர்களுக்கு... நாலைந்து வருடத்துக்குப் பிறகு பால்கனியுடன் அறை கிடைத்திருந்தது. அடுப்படி மூன்று அறை ஆட்களுக்கும் பொதுவாய்... கழிவறை இரண்டும் அப்படியே. வாசிங்மெசின் கூட எல்லாருக்கும் ஒன்றாய்.

அந்த வீட்டில் எல்லாமே சேவல்கள்தான்...  பாலகுமாரனின் சிறுகதைத் தலைப்பை போல அது 'சேவல் பண்ணை'தான். பக்கத்து வீட்டில் யாரிருக்கிறார்கள் என்றே தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.

எப்பவாவது லிப்டில் கணவன் மனைவியும் வருவார்கள். அதுவும் நாம் நிற்பதைப் பார்த்தால் அவன் அவளை மறைக்கப் படும்பாடு இருக்கிறதே... சில நேரம் சிரிப்பு வரும். பல நேரம் அந்தப் பெண்ணுக்கான சுதந்திரம் இல்லாத நிலை கண்டு வருத்தமே மேலிடும். 

பர்தாவுக்கு மேல் அந்தப் பெண்ணின் கண்ணைத் தவிர வேறு எந்தப் பாகத்தைப் பார்த்து விடப் போகிறோம் எனத் தெரியவில்லை. அந்தப் பெண்ணை மறைத்தபடி கதவைத் திறந்து வேகமாக உள்ளே தள்ளி விடுவான் அவளின் கணவன்... அந்த வீட்டில் மேலும் இரண்டு குடும்பங்கள் இருக்கலாம். இவர்களைத் தவிர மற்ற குடும்பத்தைப் பார்த்ததில்லை. 

எதிர்த்த வீடு இரண்டிலும் ஆந்திரா ஆண்களும் பெண்களும்... அதில் சிலர் குடும்பத்துடன்... அந்தப் பெண்கள் இங்கும் அங்குமாக மாறி மாறி இருப்பார்கள். பெரும்பாலும் அந்தப் பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் நின்று  பேசிக் கொண்டிருப்பார்கள் போனில்... முதல் வீட்டில்தான் அவர்கள் இருப்பார்கள் என்றாலும் சில நாட்கள் இரண்டாவது வீட்டில் இருந்து எழுந்து செல்வதைக் காணலாம். 

இவர்களுக்கெல்லம் குடும்பம் ஊரில்தான் இருக்கும் என்றாலும் இங்கும் குடும்பமாய் இருப்பார்கள்... பெரும்பாலும் திருமணமாகாத பசங்களுடன்... வாழும்வரை வாழலாம் என்ற கோட்பாடு போலும்.  இது தெலுங்கு மற்றும் சிங்களரிடம் அதிகம் காணப்படும்.. பெரும்பாலான வட இந்தியர்கள் பிலிப்பைனிகளுடன் வாழ்கிறார்கள்... சில தமிழர்களும் இது போன்ற வாழ்க்கை வாழத்தான் செய்கிறார்கள். இதை எழுதினால் நிறைய எழுதலாம். 

ஆந்திராக்காரப் பெண்கள் துவைத்த துணிகளை வெளியில் கம்பி உலர்த்தி வைத்து அதில்தான் காயப் போடுவார்கள் உள்ளாடைகள் உள்பட. மனைவியை எவனும் பார்த்து விடுவானோ என்று நினைப்பவன் மத்தியில் உள்ளாடையை பார்ப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது எனக் காயப்போடும் இப்பெண்கள் மேல் எனத் தோன்றும். 

கணவனால் மறைத்துக் கொண்டு போகும் பெண்ணைப் பார்க்க வேண்டிய அவசியமும் இங்கு இல்லை... ரோட்டில் போனால் சினிமாவை விட மோசமான உடைகளில் பலரைப் பார்க்கலாம்... இது முஸ்லீம் நாடென்றாலும் உடைக் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு மட்டுமே... வண்ண வண்ணப் பூக்கள் விநோதினி உடையில் பலரைப் பார்க்கலாம். நம்மவர்கள் கூட இங்கு கலாச்சாரக் காவலர்களாய் இருப்பதில்லை... பதின்ம வயதுப் பிள்ளைகளை கவர்ச்சியாய் கூட்டிச் செல்வதில் மகிழ்வும் கவுரவமும் நம்மவர்களுக்கு... மலையாளிகளின் பிள்ளைகள் பல இடங்களில் உதடுகளுடன் உறவாடிக் கொண்டிருப்பார்கள்.

அவன் கதையை விடுத்து அவள்கள் கதைக்குள் போவானேன்.. 

Image result for வெளிநாட்டு வாழ்க்கை

அந்த அறைக்கு அவர்கள் வந்து மூன்று மாதமாகிறது. அருகே தெரிந்த பூக்கடை இருப்பதால் சாமிகளுக்கு அவ்வப்போது பூ வாங்கிப் போட்டார்கள்... தினமும் தீபம் ஏற்றினார்கள்... கம்ப்யூட்டர் சாம்பிராணி வாங்கி வைத்து செவ்வாய், வெள்ளி ஏற்றினார்கள்... அதன் வாசம் அறை எங்கும் வியாபித்திருப்பது மன நிறைவு அவர்களுக்கு... 

அந்த அறை அவர்களுக்கு சுபிட்சமாகத் தெரிந்தது. காலைச் சூரியன் அறைக்குள் மகிழ்வாய் நுழைந்தமர்கிறான். கஷ்டங்கள் எல்லாம் தீரும் என நம்பினார்கள்... நம்பிக் கொண்டிருக்கிறார்கள்... நம்பிக்கைதானே வாழ்க்கை... இல்லையா... 

அந்த அறையில் இருக்கும்... மன்னிக்கவும் இருந்த நால்வரில் இருவர் ஒரே கம்பெனி... எதுக்கு இங்க மன்னிக்கவும் வந்துச்சுன்னு யோசிக்காதீங்க... இப்ப நால்வரணி பஞ்ச பாண்டவராயாச்சு... ஐவரில் இருவர் மலையாளிகள். 

அந்தச் சிறிய அறையில் ஐவர் என்பது கொஞ்சம் சிரமமே. அவன் நண்பனிடம் வேண்டாம் நால்வரே சரியா இருக்கும் எனச் சொல்லிப் பார்க்க, வாடகை கொஞ்சம் குறையும் நான் கீழே படுத்துக்கிறேன் என்பது நண்பனின் பதிலாய் வந்தது. கொஞ்ச நாள் கீழ படுக்க நல்லாயிருக்கும்... விடுமுறை தினங்களில் கஷ்டமாயிருக்கும் பார்த்துக்க... நாலு பேர் போதும் நமக்கு எனச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டான். 

அவனும் கிட்டத்தட்ட ஆறாண்டுகள் கீழேதான் படுத்திருக்கிறான். விடுமுறை தினங்களில் அமர இடமின்றி அவதிப்பட்டதை... படுக்க வேண்டும் என மனசு அடம் பிடித்தாலும் படுக்க முடியாமல் உட்கார்ந்திருந்ததை அவனால் மறக்கவே முடியாது. கீழே படுப்பதென்பது மிகவும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும் இடமும் சூழலும் சரியாக இருப்பதில்லை என்பதால்  இப்போதெல்லாம் கட்டிலைத் தேர்வு செய்து விடுவதுண்டு. புதிதாக இணைந்தவனும் நண்பனுடன் பணி எடுப்பவன் என்பதால் அதற்கு மேல் ஒன்று சொல்லவில்லை அவன். 

'ஒண் பிளஸ் ஒண் டூ மாமா
யு பிளஸ் மீ த்ரி மாமா ...'

அப்படின்னு மாரி-2வுல ரவுடி பேபி பாட்டுல வருமே அப்படி நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்யும் மலையாளிகள் இருவரும் சேர, ஒரே நிறுவன ஆட்கள் மூவரானார்கள்.

அந்த அறைக்கு வந்த புதிதில் சேர்ந்தவன் தினக் குடிகாரன்... வேலை விட்டு வந்ததும் கைகால் கழுவுறானோ இல்லையோ கையில் கிளாஸ் எடுக்கணும்... ஊருக்குப் பேசணும்... லவ்வருக்குப் பேசணும்... ரஹ்மான் பாட்டுக் கேக்கணும்... இந்த நேரத்தில் இரண்டு பெக் உள்ளே செலுத்தி விடணும் என்பதே அவனின் முக்கியமான வேலையாக இருந்தது. 

அடுத்த மாதம் இணைந்த மலையாளி, வருத்தத்துக்காவும் டென்சனுக்காகவும் குடிக்கிறேன் என அளவு தெரியாமல் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். பின்னர் படுத்தி வைத்து மற்றவர்களை வருத்தத்துடன் டென்சனும் ஆக வைப்பான். 

அவனின் நண்பனும் குடி என்றால் அப்படி ஒரு குடி குடிப்பான். சாப்பிட மாட்டான்... தூங்க மாட்டான்... பாட்டில் பாட்டிலா காலி பண்ணிட்டு ராத்திரியெல்லாம் பொண்டாட்டிக்கிட்ட சத்தமாப் பேசி (சில நேரம் கொஞ்சல்... பல நேரம் சண்டை) மற்றவர்களைத் தூங்க விடமாட்டான். இனிக் குடிப்பதில்லை என ஆறு மாதமாக இருந்த விரதத்தை முதல் மலையாளி நண்பனின் வரவில் கலைத்து மடையைத் திறந்தான்... அதிகமில்லை என்றாலும் விடுமுறை தினங்களை வீணாக்குவதில்லை. 

ஆக மொத்தம் இவர்கள் மூவரும் சேர்ந்தால் பால்கனி பல்லாங்குழி ஆடும். அரசியலும் சினிமாவும் இவர்களின் விரலில் பேசும்.

அப்பப்ப வீட்டு உரிமையாளரும் உரிமையாய் பால்கனிக்கு வருவதுண்டு... கொஞ்சமே குடித்துவிட்டு இரவுகளை இரவல் நாயகிக்கு அர்பணித்து விடுவார். என்ன நடக்கிறது என்பதெல்லாம் அவர் பார்ப்பதில்லை... கருமமே கண்ணாயிருப்பார்... வறுபடும் கடலையில் இவரின் மனைவியும் அவளின் கணவனும் காணாது போயிருப்பார்கள். 

இப்ப வந்திருக்கவன் மொடாக் குடியனாம்... இனி நால்வரின் நாடகம்... உரிமை சேர்ந்தால் ஐவரின் நாடகம் அரங்கேறும் இடம் பால்கனியாகும்... பால்கனி என்ன பாடு படப்போவுதோன்னு நினைக்கும் போது அவனுக்குப் பயமாக இருந்தது.

எதிரே இருக்கும் கட்டிடங்களில் எல்லாம் குடும்பங்கள்தான் அதிகம் சேவல் பண்ணை குறைவு. தண்ணி போட்டுக் கொண்டு சப்தம் போட்டால் போலீசுக்குத் தகவல் சொல்லிவிடுவார்கள். உடனே போலீஸ் வந்து நிற்பான்... எல்லாருக்கும்தான் அபராதம் விதிப்பான்... இருக்கும் இடத்துக்கும் பிரச்சினை வரலாம்.  

எல்லாரிடமும் கண்டிப்பாக இரு, ரொம்ப இடம் கொடுக்காதே, அறைக்குள் பிரச்சினை இருக்கக் கூடாது என்று முன்னமே நண்பனிடம் சொல்லி விட்டான். போதைக்குப் பின் நண்பன் ஸ்டெடியாக நிற்பானா என்பது தெரியாதல்லவா..? மாட்டுக்கறி சமைப்பதில்லை என்ற கோட்பாடெல்லாம் உடைக்கப்படும் போது இதெல்லாம் எம்மாத்திரம்...

எப்பவுமே மலையாளிகளுடன் குடும்பம் நடத்துவது என்பது அவனுக்குப் பிடிக்காத ஒன்று... இரவில் சீக்கிரம் தூங்க மாட்டார்கள்... கணிப்பொறியையோ செல்போனையோ நோண்டிக்கொண்டு கிடப்பார்கள். கதவை 'மடார்' என்று திறப்பார்கள்... அடைப்பார்கள்... விடுமுறை தினங்களில் காலையில் சீக்கிரம் எந்திரிக்க மாட்டார்கள். குறிப்பாக படுத்த படுக்கையை மடித்து வைக்காமல் அப்படியே போட்டு வைப்பார்கள். இவர்களிலும் விதி விலக்கு உண்டுதான் என்றாலும் குளியலறையை அதிக நேரம் குத்தகைக்கு எடுப்பதில் எல்லாருமே ஒண்ணுதான்... இதில் விதிவிலக்கெல்லாம் இல்லை. சில நேரம் ஒண்ணுக்குப் போக ஒரு மணி நேரமெல்லாம் காத்திருந்திருக்கிறான் அவன்.

சமையலைப் பொறுத்தவரை அவனும் நண்பனுமே சமைக்க வேண்டும்... மலையாளிகள் இருவரும் சாப்பாட்டில் இணைந்திருந்தாலும் சமைக்கத் தெரியாது. காலையில் சாதம் வைக்கச் சொல் என்றால் அவனுகளுக்குத் தெரியாது... நாமதான் வைக்கணும் என கூலாகச் சொல்கிறான் நண்பன். என்ன சொல்வது என்று தெரியாமல் நண்பனுக்காக ஓடும்வரை ஓடட்டும் என விட்டுவிட்டான் அவன்.

தண்ணி அடித்து அவர்கள் ஆடிய ஆட்டத்தை எல்லாம் அப்பப்ப முகநூலில் புலம்பி வைப்பான்.. இனி என்ன நடக்குமோன்னு முன்னாடியே புலம்ப ஆரம்பிச்சிட்டான். புலம்புவதால் நடக்க இருப்பது நடக்காமலா போகும்... பிரச்சினைகள் விஸ்வரூபமெடுக்கும் வேலையில் அவன் வேறொரு அறைக்கு மாறியிருக்கலாம். 

ஒரு அறைக்குள் தண்ணி அடிப்பவன் நுழைந்தால் அங்கு தங்கியிருக்கும் 'குடி'களுக்கு எத்தனை சந்தோஷம் என்பதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். 'கிளாஸ் எடுங்க' என ஒருத்தனும் 'இந்தாங்க இதை ஊத்துங்க' என ஒருவனும் 'சைடுக்கு மிக்ஸர் அதிலிருக்கு பாருங்க' என ஒருவனும் குதிப்பார்கள். உடனே ஜோதியில் ஐக்கியமாகிவிட்டால் மச்சான், மாமான்னு உறவு முறைக்குள் நீச்சலடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படித்தான் ஐந்தாவது ஆள் வந்தபோது 'வா குடிக்கலாம்... வந்தன்னைக்கே ஆரம்பிச்சி வை' என தினக்குடிகாரன் குதூகலித்தான்... இந்தளவுக்குப் பேசுவான்... சிரிப்பான்... என்பதை அவன் அன்றுதான் பார்த்தான். கண்ணாடிக்கு வெளியே சிரிச்சி நிக்குது தினக்குடியின் மகிழ்ச்சி. அதுக்கும் காரணம் இருக்கு... அது என்னன்னா தினக்குடி முன்னாடி குடியிருந்தது ஐந்தாவது வரவுடன்தான். ஐந்தாவது வரவுதான் தினக்குடியை அவனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

இவர்களின் அலம்பலையும் சலம்பலையும் பார்த்துக் கொண்டே... 

எதையும் காட்டிக்கொள்ளாமல்....

என்னண்ணா என எதாவது கேட்டால்...

எப்பவும் போல் சிதறாத புன்னகையை பதிலாக்கிவிட்டு... 

புத்தக வாசிப்பில் தீவிரமாகிறான் அவன்.

அவனது கையில் கனவுப்பிரியனின்...'மணல் பூத்த காடு' (இதில் அவரின் இயற்பெயரான முஹம்மது யூசுஃப்) சிரித்துக் கொண்டிருக்கிறது. 

நாயகன் அனீஸ் உடன் தோழப்பாவின் ஆலோசனைகளைக் கேட்டபடி பயணப்பட்டு 300 பக்கங்களைத் தாண்டிவிட்டான் அவன்.

எல்லாரும் படுத்ததும்...

பால்கனியில் நின்று ஊரிலிருக்கும் சாமிகளை வேண்டிவிட்டு....

எதிரே உயர்ந்து நிற்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் விளக்கொளியை ரசித்தபடி...

எத்தனை காலம்தான் கஷ்டப்படுவது...? எப்போது விடுதலை..? என்ற ஏக்கத்தை எப்பவும் போல் இறக்கி வைக்க முடியாமல் சுமந்தபடி...

கதவினைப் பூட்டி....

விளக்கணைத்து...

விடியலில் எழ வேண்டுமேயென...

படுக்கையில் விழுபவனின் மொபைலில் சிரிக்கிறான் மகன்.

முத்தங்களைக் கொடுத்து விட்டு முகத்தை மூடிக் கொள்கிறான் போர்வையால்...

தூக்கம் வராத இரவு மெல்ல நகர... 

தெருவில் இரவெல்லாம் வாகனங்கள் பயணிக்கின்றன இரைச்சலை விதைத்தபடி... 

இந்தப் பயணம் எப்போது முடியும் என்பது அவனுக்குத் தெரியாது.

தொடரும் நாட்கள் சுகமானவையா... சுமையானவையா என்பதும் அவனுக்குத் தெரியாது.

விடியல் மகிழ்வாய் இருக்குமா என்பதும் தெரியாது....

விடியும் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்குள் எப்போதும்.

இது கற்பனை என்று நினைத்தால் அது உங்கள் எண்ணமாக மட்டுமே இருக்கும்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 28 ஜனவரி, 2019

மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை

ந்த மனசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு. மனசு பேசுகிறது மட்டுமே தொடர்ச்சியாய் எழுத வாய்க்கிறது. இன்னைக்கு கொஞ்சம் கலவையாய் எழுதலாமே என்பதால் மனசின் பக்கத்தைப் புரட்டுகிறேன்.

ண்பர் ஜாக்கி சேகர் நடிப்பில் ஆர்வா என்பவர் இயக்கியிருக்கும் 'அப்பா காண்டம்' என்ற குறும்படத்தைப் பார்த்தேன். உண்மையிலேயே மிகச் சிறப்பானதொரு படம்... எடுத்திருக்கும் விதமும் அருமை. ஒரு அப்பா தன் மகனிடம் பேச யோசிக்கும் செக்ஸ் தொடர்பான விஷயங்களை, மகன் தன் காதலியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த பின் அவனைத் திருத்துவதற்காக அவனுடன் அமர்ந்து பேசுவதே கதை... வசனங்கள் எல்லாம் செம... இந்த மாதிரியான வசனங்களை யாருமே பேசி நடிக்க மாட்டார்கள் என்பதே உண்மை... நாம் ஜாக்கியைப் பற்றி அறிவோம்... அவருக்கு இந்த வசனங்கள் அல்வா சாப்பிடுவது போல... மனுசன் ஒவ்வொரு வசனத்திலும் சிக்ஸர் அடிக்கிறார். இரண்டே இரண்டு நெருடல்கள் மட்டுமே.... ஒன்று லெமன் டீ போடும் போது பயன்படுத்தும் பிரைபேன், எடுத்து பிளாஸ்கில் ஊற்றும் போது காபி பாத்திரமாய் மாறிவிடுகிறது. மற்றொன்று அப்பா-மகன் எதிர் எதிரே அமர்ந்து பேசும் போது அண்ணன் தம்பி போல் இருக்கிறார்கள். ஜாக்கிக்கு கொஞ்சம் வயதான் மனிதரைப் போல் ஒப்பனை செய்திருக்கலாம். மற்றபடி வாழ்த்துகள் அனைவருக்கும்.

படம் பார்க்க :  'அப்பா காண்டம்'

ண்ணீர் பற்றியதான ஒரு கதையை '2060' என்ற பெயரில் இயக்குநராக முயற்சிகள் மேற்கொண்டு வரும் அண்ணன் ஒருவர் குறும்படமாக எடுத்திருக்கிறார். இதற்கு முன் நிறையக் குறும்படம் எடுத்திருக்கிறார். சின்னதாய் ஒரு கதை... இங்கு வெளியில் வைத்து எடுப்பது என்பது சட்டச்சிக்கல் என்பதால் ஒரு இரவில் காருக்குள்ளே வைத்து கதையை முடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களம்... அருமையான முயற்சி... அவரே நடிகர்.... தனது ஸ்டுடியோவுக்காகவும் சிந்தனைக்காகவும் தனியே ஒரு தளத்தையே வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். இந்தப் படமும் சிறப்பாக வந்திருக்கிறது... என்னோட கதை ஒன்று அவர் கையில் இருக்கிறது... நாயகி கிடைப்பது கடினம் என்பதால் காத்திருப்பில்... கிடைக்கும் போது அதுவும் குறும்படமாகலாம்.

படம் பார்க்க : '2060'

னவுப்பிரியன் அவர்களின் 'மணல் பூத்த காடு' நாவல் வாசிப்பில் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சௌதியில் ஒரு ஊரையும் சில மருத்துவ சாதனங்களையும் பற்றிப் பேசுகிறது. நாவலாகப் பயணிக்காமல் ஒரு பயணத்தொடர் போல... அதுவும் செய்திகள்... அறியாத செய்திகள் நிறைந்த பயணத் தொடர் போல பயணிக்கிறது. அனீஸ் நம்மை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்கிறான் பல விஷயங்களை நமக்குச் சொல்லியபடி... இந்த நாவலுக்குப் பின்னே அவரின் கடின உழைப்புத் தெரிகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.

Image result for மணல் பூத்த காடு

னசு தளத்தில் எழுதியிருக்கும் 100 சிறுகதைகளுக்கு மேலான கதைகளில் 50 கதைகளை பிடிஎப் - ஆக மாற்றி சில நண்பர்களிடம் கொடுத்திருக்கிறேன். வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேர்வில் இருந்து முதலில் 20 கதைகளைத் தொகுப்பாக்கலாம் எனவும் 'வேரும் விழுதுகளும்' தொடர்கதையையும் புத்தகமாக கொண்டு வரலாம் எனவும் 'மனசு' நினைக்கிறது. இறையருள் இருந்தால் நிச்சயம் இந்த ஆண்டில் இரண்டும் வரும். சொல்ல மறந்துட்டேனே... வாசிக்கும் நண்பர்களின் கருத்துக்கள் பந்தக்காலில் வாழை மரம் கட்டுவதாய்த்தான் இருக்கிறது... திருவிழாதான்.... என்ன ஒண்ணு அழுக வைக்கிறது என்பதே எல்லாரிடமும் இருந்து வருகிறது கருத்தாய்...

2019-ல் மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இருந்து சில வரிகள்... கதைகளுக்கு இன்னும் தலைப்பிடவில்லை என்பதால் கதையினை வைத்து தற்காலிகத் தலைப்பின் கீழ்....

முதல் கதை : கருப்பர்

// நள்ளிரவில் 'ஏய்ய்... கருப்பா...' என இருட்டையும் நிசப்தந்தத்தையும் கிழித்துக் கொண்டு கத்தினார் ராமசாமி.

அவருக்கு அருகில் இருந்து ஏதேனும் குரல் வருதான்னு விழித்திருந்தவர்கள் காதைத் தீட்டிக் கொண்டு காத்திருக்க... 

எங்கும் நிசப்த்தம்... 

'கருப்பன் மனமிறங்கவில்லையோ..?'

'கருப்பனுக்கு யாரையும் புடிக்கலையோ...?'

'கருப்பா என்ன கோபம்...? 

'இந்த வருசம் உனக்குக் கெடாப்பூசை போட்டுடுறோம்... ஆளைக் காட்டுப்பா...' என ஆளாளுக்கு மனசுக்குள் வேண்டிக் கொண்டிருந்தனர்.//

இரண்டாவது கதை : நாகர்

//அம்மா சொல்வதில் இருக்கும் உண்மை உரைத்தது... பெரும்பாலும் முனியய்யா கோவில்களில் கிடாப்பூஜை என்பது சாமி கும்பிடுவதுடன் முடிந்து விடும். படையல் எல்லாமே அருகிருக்கும் காளியம்மனுக்குதான் என ஒருமுறை சித்தப்பா சொல்லியிருக்கிறார். முனியய்யா சைவம்டா என்ற கூடுதல் செய்தியுடன்...அதன் பின் முனியய்யா கோவில் பூஜைகள் கூர்ந்து கவனித்திருக்கிறேன்... அசைவப் படையல் அருகிருக்கும் அம்மனுக்கே.. பெரும்பாலான முனியய்யா சைவமாத்தான் இருக்கு.

"நான் நாகர் கோவில் வரைக்கும் பொயிட்டு வாரேம்மா..."

"அதான் இல்லேங்கிறேன்... போறேன்னுட்டு நிக்கிறே... அங்கிட்டு முள்ளும் மொடலுமாக் கிடக்கும்... கல்யாண மாப்புள... முள்ளு கிள்ளக் குத்திக்கிட்டு வந்துறாத.... அதோட இப்ப  எதுக்கு அங்க போயிக்கிட்டு... பாம்பு பட்ட கிடக்குன்னு வேற சொல்றாக..."//

மூன்றாவது கதை : கமலம்

//"நேத்து எங்கடி போனிய... நீனும் ஒம்மாமியாவும்.." மெல்லக் கேட்டாள் சங்கீதாவிடம்.

"பெரிய நாத்துனா வீட்டுக்குப் போனம்... லேட்டாத்தான் வந்தம்..."

"இருட்டுக்குள்ள தனியாவா வந்திய..."

"இல்ல... ஒம்மவனும் வந்தாக..."

"ம்... அதானே... பாத இருட்டு ஏமத்துல வாற மாரியா இருக்கு..."

எருக்கூடையைத் தூக்கி 'நங்'கென்று தலையில் வைத்துவிட்டு "தொறுத்தொறுன்னு இருக்கு... இத எப்புடித் தூக்கிட்டுப் போவெ... மேலெல்லாம் வடியுமுல்ல..." என்றாள்.//

மனசின் பக்கம் இன்னும் பேச ஆசைதான்... பதிவு நீண்டு போயிருமே...

-'பரிவை' சே.குமார்.

புதன், 23 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது : சரக்கடியும் அதன் பின்னான நிகழ்வுகளும்

பிரதிலிபி 'கவி மழை' போட்டியில் இருக்கும் என் கவிதை

வேலிப் படலோரம்
வெள்ளெருக்கு செடியிருக்க...
காலிக் குடமொன்று
கல் சுவற்றின் மீதிருக்க...

கழட்டிய செருப்பொன்று
நடைபாதை வழி மறிக்க...
காலொடிந்த கோழிக்குஞ்சு
இரைக்காக இரைஞ்சி நிக்க...

தொடர்ந்து வாசிக்க / கருத்திட ---> 'மல்லுக்கு நிக்கும் மனசு'

Image result for குடிகாரன்

'யாரையும் குடிக்காதே' என்று சொல்லமுடியாது இங்கு, பெரும்பாலானோர் குடியை ஒரு முக்கியமான வேலையாகத்தான் செய்கிறார்கள் என்பதை கடந்த பத்தாண்டு அமீரக வாழ்க்கையில் பார்த்தாச்சு. 

தங்கும் அறையில் அவர்கள் இல்லாது தங்குதல் என்பது இயலாத காரியம்... அவர்களால் நமக்குத் தொல்லை இல்லாது இருக்குமா என்று மட்டுமே பார்க்க முடியும். அவர்களுக்கு விடுமுறை தினங்கள் விடிவதே பாட்டில்களோடுதான் என்றாலும் நம் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை பிரச்சினையில்லை.

இரண்டு மாதம் முன்பு நானும் நண்பரும் புதிய அறை பிடித்து வரும் போது  2200 திர்ஹாமை இருவர் பகிர்ந்து கொள்வதென்பது சிரமம் என்பதால் இன்னும் இருவரை இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். நண்பருடன் பணி செய்யும் மலையாளி அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்ல, இன்னொரு நண்பர் மூலம் ஒரு பையன் கிடைத்தான். ரொம்ப கஷ்டப்படுறவன் 500 திர்ஹாம்தான் தர முடியுமென்று சொல்ல, முதல் மாதம் அவனின் வாடகை போக மீதத்தை நானும் நண்பரும் பகிர்ந்து கொண்டோம். 

இங்கு வாடகை மாத ஆரம்பத்திலே கொடுக்க வேண்டும். அதே போல் விடுமுறையில் ஊருக்குப் போனாலும் வாடகை கொடுத்து விட்டுத்தான் செல்ல வேண்டும் அல்லது நமக்குப் பதிலாக வேறு நபரைத் தற்காலிகமாக தங்க வைக்க வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதி. 

சரி விஷயத்துக்கு வருவோம்... 

மறுநாள் பையன் கையில் பையோட வந்தான்... என்னடான்னு பார்த்தா... சரக்கு... பால்கனியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிச்சிட்டான்... அதன் பின் அவனுக்கு கம்பெனி சாப்பாடு என்பதால் இரண்டு மூன்று கட்டிடம் தள்ளியிருக்கும் கம்பெனி ஆட்கள் தங்கியிருக்கும் கட்டிடம் போய் சாப்பிட்டு வந்து கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான். இது தினமும் தொடர ஆரம்பித்தது என்றாலும் அவனிடம் எந்த அலம்பலும் இல்லை. சரக்கு அடிக்க... சாப்பிட்டு விட்டு வர... தூங்க... என்பதாய் நாட்களை நகர்த்தினான். நமக்கும் பிரச்சினையில்லை.

இரண்டு நாளுக்கு ஒருமுறை சரக்குக்கு முப்பது, நாப்பது எனச் செலவு செய்பவனால் வாடகை 500 திர்ஹாமுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நண்பனிடம் நீதானே சொன்னே கஷ்டப்படுறவன் என்று... உண்மையிலேயே கஷ்டப்படுறவன் என்றால் இன்னும் 100 திர்ஹாம் கூட குறைக்கலாம்... ஆனா இவனுக்கு எதுக்குச் செய்யணும்ன்னு சப்தம் போட, கொஞ்ச நாள் ஓடட்டும்... அவனால நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை பாரு என்றான். அதுவும் சரிதான் என்று தோன்றியதால் கொஞ்சநாள் போகட்டும் என நானும் நினைத்தேன் என்றாலும் இந்த வயதில்... அதுவும் திருமணம் கூட ஆகாத பையன் சரக்குப் போட்டால்தான் தூக்கம் வரும் என்று சொல்வதை நினைத்தாலே கோபம்தான் வருகிறது.

ஒருநாள் வேலை காரணமாகத் தாமதமாக அறைக்கு வந்தவனுக்கு சரக்கடிக்கும் நேரம் மாறிப்போச்சாம்... கையை உதறுறான்.... காலை உதறுறான்.. சை... சை... என்கிறான். அப்போதுதான் கவனித்தேன் அவன் சரக்குக்கு எவ்வளவு தூரம் அடிமையாகியிருக்கிறான் என்பதை... 

மற்றொருநாள் அறையில் குடிக்கும் தண்ணீர் இல்லை... வந்ததும் பாட்டிலை எடுத்தவன் கலக்க தண்ணியில்லை என்றதும் 'தண்ணி வாங்கலையா..? வாங்காம என்ன பண்ணுனீங்க..?' என நண்பனிடம் கோபமாகக் கேட்க, 'பைசா இல்லடா... காலையில வாங்கிக்கலாம்...' என்று பதில் சொல்லவும் 'காசில்லைன்னா சாப்பிடாம இருப்பீங்களா..?'ன்னு கேட்டிருக்கிறான். நண்பனுக்கு கோபம் தலைக்கேற. 'கீழ போயி கடையில வாங்கிட்டு வா... போ...' என்று சொல்லிவிட்டு என்னிடம் வந்து 'என்ன சொல்றான் பாத்தியா... முதல்ல தொலைக்கணும்' என்றான். இந்த முறை நான் இருக்கட்டும் பார்த்துப்போம் என்றேன்.

அறைக்கு வந்த இரண்டாவது மாதம் மலையாளி வந்து சேர்ந்தான். அவனும் சரக்கடிப்பான் என்று சொல்ல, முதல்ல ஒரு ஆள் இருக்கானுல்ல அவனோட சேர்ந்துக்கட்டும்... நமக்குப் பிரச்சினை இல்லைனாச் சரிதான் என்றேன். முதல் நாள் ஆரம்பம் அமர்க்களமாத்தான் இருந்துச்சு... சரக்கடிப்பதை விட்டிருந்த நண்பனும் மூன்றாவதாக இணைய, மும்மூர்த்திகளை பால்கனி தாங்கிக் கொண்டது... மும்மூர்த்தி சங்கமம் தினமும் இல்லை... வார இறுதி என்ற வியாழன், வெள்ளி, சனி மட்டுமே என்பதாய் நண்பர் இருவருக்குள்ளும் தீர்மானம். அது சில நாட்கள் உடைக்கப்படும் கண்டுக்கக் கூடாது.

ஒரு வியாழன் இரவு அந்தத் தளத்தின் உரிமையாளரும் வந்து சேர, நாலு பேரும் பால்கனியில் அமர்க்களமாய் சரக்கடித்தார்கள்... உரிமையாளர் ஒரு 'பெக்'குடன் ஊரில் இருக்கும் தொடுப்புடன் தொடர்பில் போய் சரக்குக்கு தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார். அந்தப் பையனும் தன் நிலை அறிந்து எழுந்து சாப்பிடப் போய்விட்டான். நண்பர்கள் இருவரும் மட்டும் அரசியல் பேசியபடி சரக்கில் மூழ்கியிருந்தார்கள்... நேரம் நீண்டு கொண்டே போனது முடிவில்லாமல்.

எல்லாம் முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பமாச்சு... உரிமையும் எங்களுடன் சாப்பிட, மலையாளி என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேச ஆரம்பிச்சி, சாப்பாடே போகம... ஆள் உட்கார்ந்த இடத்திலிருந்து ஆட ஆரம்பிச்சிட்டான்... பேசியதையே பேசுறான். 

நண்பனுக்கு நான் என்ன சொல்வேனோன்னு கவலை... சாப்பிடாதவனை அழைச்சிக்கிட்டு கீழே போய் உட்கார்ந்து அவனோட வாழ்க்கைப் பிரச்சினையை எல்லாம் கேட்டு, அவனைச் சரி பண்ணி, கொண்டு வந்து படுக்க வச்சான். படுத்த உடனே வேகமாக இறங்கி ஓடியவன் எங்க அறை வாயிலிருந்து மெயின் கதவு வரை வாந்தி எடுத்து வைத்து விட்டான்.

எனக்கு செம கடுப்பு... நண்பனுக்கு அதை விட... நாளைக்கு காலையில விரட்டி விட்டுறணும்... வச்சிக்கக் கூடாது என குதித்தான். சரி விடு எல்லாருந்தானே சாப்பிட்டீங்க... அவனோட லிமிட்டுக்கு மேல எதுக்கு குடிக்க விட்டீங்கன்னு கேட்டா... இல்ல.... லிமிட்டுக்கு மேல போகலைன்னு சொன்னான்... ஆனா ஊத்திக் கொடுத்ததே அவன்தான்னு உரிமையாளர் சாப்பிடும் போதே என்னிடம் தனியாக சொல்லிச் சென்றிருந்தார்.

சரி வாய்யா... நாம சுத்தம் பண்ணலாம் என நான் சொன்னதுக்கு நாம எதுக்குப் பண்ணனும்... அவன்தான் பண்ணனும் பண்ணட்டும்... அப்புறம் நாம சுத்தம் பண்ணலாம் என்று சொல்லி அவனைப் பிடித்துக் கொண்டு வந்து சுத்தம் பண்ண விட்டுவிட்டு அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டான். இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியில் கட்டிலில் படுத்திருந்த 'தினந்தோறும்' தம்பி எந்திரிச்சி, என்னாச்சு... லிமிட்டாக் குடிக்கணும்... அளவு தெரியலைன்னா என்ன குடிகாரன் என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான்.

பக்கத்து அறை மலையாளிகள் எல்லாம் நம்ம அறை மலையாளிக்கு உதவ,  மலையாளிகள் எப்பவும் அப்படியே... நாம் தான் நம்மவர்களைப் பார்த்ததும் பீட்டர் இங்கிலீசில் பிச்சு உதறுவோம்... சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது. ஆனா மலையாளிங்க அவங்க ஆளைப் பார்த்துட்டா உருகிடுவானுங்க.... அதான் அவனுங்க சுத்தம் பண்ண வந்துட்டாங்க... உரிமையாளரின் அறை நண்பர்கள் 'என்ன கேவலமானவனுங்களா இருக்கானுங்க...' என்று புலம்பியதால், அவரும் சுத்தம் செய்யும் குழுவில் இணைய வேலையை அட்சர சுத்தமாக செய்து முடித்தார்கள்.

அதுக்கப்புறம்தான் பிரச்சினையே... வேலை இல்லாத, 24 மணி நேர சரக்கடி மன்னனான பக்கத்து அறை மலையாளி... எங்க அறைக்குள் வந்து 'என்ன ஆசானே... உங்க ரூம் ஆளு வாமிட் எடுத்திருக்கு... நாங்க சுத்தம் பண்றோம்... நீங்க இங்க உக்காந்திருக்கு... என்ன இது...' அப்படியிப்படின்னு அட்வைஸ்... நான் வெளிய போடா என்று சொல்ல, நண்பன் சுத்தம் பண்ணுனதுக்கு காசு வேணுமாடா... என்று சத்தம் போட, திரும்பத் திரும்ப பேசினான்... நாங்க செய்தது தப்பென்று சத்தம் போட்டான். உன்னோட அறையில தங்க வச்சிக்கடா அவனை எனச் சொன்னதும் 'நம்ம ரூம் வளர டீசண்டானு'ன்னு சொன்னான் பாருங்க... எனக்குச் சுள்ளுன்னும் அதுக்கு மேல நண்பனுக்கும் வர 'போடா நாய்க்க மவனே'ன்னு நண்பன் விரட்டிட்டான்.

வெளியில போயி நின்னுக்கிட்டு ரொம்பப் பேசினான்.. உரிமையாளர், அவர் அறை நண்பர்கள் எல்லாம் சொல்லியும் கேட்கலை... நானும் நண்பனும் எதிர்த்துப் பேச, உரிமை என்னிடம் நீங்க போங்கன்னு சொல்லிட்டு அவனைத் திட்ட, அவன் மீண்டும் என்னிடம் அடிக்க வருவது போல் மோதினான்... நமக்குள்ள கிடந்த தேவகோட்டையான் சீறிக்கிட்டு எழ, 'வகுந்துருவேன்... என்ன நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கே... ஒழுங்காப் போயி படு... இல்லே மிதிவாங்குவே'ன்னு கையைத் தூக்கி அடிக்கப் போக, அதுக்குள்ளயும் உரிமை எங்கிட்ட உரிமையா நீங்க போய்ப் படுங்க நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டார்.

மறுநாள் உரிமையின் அறை நண்பர்கள் முகம் கொடுத்துப் பேசவில்லை... உரிமையும் கூட மௌனம் சாதித்தார். எங்க அறை மலையாளி 'குடும்பத்துல பிரச்சினையண்ணா... லவ் மேரேஜ் பண்ணின பொண்டாட்டி (தமிழ்) விவாகரத்து கேட்கிறா... மன வலி... அதான் ஓவராயிடுச்சு,,, இனி இப்படி நடக்காது'ன்னு மன்னிப்புக் கேட்டான். அதன்பின் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறான். நண்பனும் குடியைக் குறைத்துவிட்டு ஜிம்முக்கு போக ஆரம்பிச்சிட்டான்.

இங்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கத்தான் செய்யுது... எல்லாருமே எது ஒரு பிரச்சினையில் சிக்கித்தான் தவிக்கிறோம்... அதற்கான தீர்வு... குடி மட்டும் அல்லன்னு சொல்லத்தான் முடியுமே ஒழிய,  யாரையும் குடிக்காதேன்னு அறிவுரை சொல்ல முடியாது.. 80% பேர் இங்கு குடிக்காமல் இருப்பதில்லை. 

நானும் இந்த 10 வருடத்தில் நாலைந்து அறை மாறி, நிறையச் சரக்கு வண்டிகளைப் பார்த்திருக்கிறேன்... முதல் முறை வாந்தி எடுத்தவனைப் பார்க்கிறேன். ஊரில்தான் சொல்வார்கள் 'அவனுக்கு நிறைஞ்சது தெரியாது'ன்னு.... அது மாதிரி அவனுக்கு நிறைஞ்சது தெரியலைன்னு நினைச்சிக்கிட்டு நாம போக்குல போக வேண்டியதுதான்... வேறென்ன செய்வது..?

குடிதான் பலரை இங்கே இயக்குது... அதுவே உயிரையும் எடுக்குது.

ஒரே வருத்தம் உரிமையின் அறை நண்பர்களின் பார்வை அதன் பின் மாறியிருப்பதுதான். எத்தனை சோப்புப் போட்டுக் கழுவினாலும் பட்ட கறை போகப்போவதில்லை.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது : முருகன் என் காதலன்

Related image

சின்ன வயசுல இருந்தே முருகன் மீது காதல்... 

இந்தக் காதல் இப்போதும் தொடர்கிறது... எப்போதும் தொடரும்... 

'அதென்ன அவன் மீது மட்டும் காதல்..?' என்ற கேள்வி வருமாயின் அதற்கு எதற்காக என்ற விளக்கம் எல்லாம் கொடுக்கத் தெரியாது ஆனால் அவன் மீது தீராக்காதல்... ஆம் இறுதிவரை தீராத காதல்.

எப்போதும் முருகன் பாடல்கள் என்றால் ஒருவித ஆர்வம்... திருவிழாவுக்கு ரேடியோ கட்டினால் காலையில் சாமிப்பாடலாய் முருகன் பாடலை ஒலிக்க விட்டுக் கேட்பதில் அத்தனை ஆர்வம் அந்தப் பள்ளிப் பருவத்தில்... இப்போதும் அப்படியே.

முருகன் மீதான காதலால் ஐயப்பன் மீது பற்றற்று இருந்த பருவம் அது... ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்களை இங்கிருந்து கேரளாவுக்குப் போறானுங்க பாரு என்று கேலியாகப் பார்த்தவன் நான். 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்ற பாடலைப் ஒலிக்க விடும் ஒலிபெருக்கி உரிமையாளரிடம் இதை மாற்றி 'மருதமலை மாமணியே' போடுண்ணே என்று நின்றவன்தான் நான். 

அப்படி ஒரு காதல் அழகன் முருகன் மீது.

அழகான முருகன் படங்கள் கிடைத்தால் சாமி அறையில் ஒட்டி வைப்பேன். சில படங்கள் பள்ளிப் பாட நோட்டின் முன் பக்கத்தை அலங்கரிப்பதுண்டு.

பள்ளியில் படிக்கும் போது எங்க ஊரில் இருந்து நிறையப் பேர் பழனிக்கு பாதயாத்திரை செல்வார்கள். மாலை போட்டது முதல் தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, பிரசாத விநியோகம் என களை கட்டும்.

எல்லாருமே அருமையாக முருகன் பாடல்களைப் பாடுவார்கள். 'சுட்டதிரு நீரெடுத்து  தொட்டகையில்  வேலெடுத்து தோகைமயில்  மீதமர்ந்த  சுந்தரம்..', 'ஆடுக  ஊஞ்சல்  ஆடுகவே அய்யா  முருகா ஆடுகவே..', 'பாசி படர்ந்த மலை முருகய்யா... பங்குனித் தேர் ஓடும் மலை முருகய்யா..' என ஒவ்வொரு பாடலும் அவர்களின் கணீர்க்குரலில் ஒலிக்கும். இறுதியில் கந்தர் சஷ்டி கவசம் பாடி முடிப்பார்கள்.

அப்போதெல்லாம் பழனிக்கு மாலை போட்டவர்கள் மாரியம்மன் கோவிலை ஒட்டிக் கொட்டகை போட்டு இரவில் அங்குதான் தங்குவார்கள். நடை பயணம் ஆரம்பிக்கும் முதல் நாள் நெருங்கிய உறவுகளை அழைத்து விருந்து வைத்து அன்றிரவே கிளம்பி மாரியம்மன் கோவிலுக்கு வந்து விடுவார்கள். மறுநாள் அதிகாலை சாமி கும்பிட்டுக் கிளம்பிவிடுவார்கள். அவர்களுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் செல்வார்கள்.

அப்போதெல்லாம் நாமும் பழனிக்கு நடக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் மனசுக்குள் முளைவிடும்... ஆனால் அம்மாவோ குன்றக்குடி வரைக்கும் கூட நடந்து போக விடமாட்டார். பள்ளியில் படிக்கும் வரை ஆசை நிராசையாகவே இருந்தது. கல்லூரி வந்த பின் பழனிக்குச் செல்லும் ஆசை நிறைவேறியது.

தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடை... அதாவது பூசத்தைக் கணக்குப் பண்ணிப் போனால்... 

நாங்களெல்லாம் கூட்டத்தைக் கணக்குப் பண்ணிப் போவதால் 5ஆம் நாள் இரவு ஆயக்குடி போய் தங்கிவிட்டு ஆறாம் நாள் அதிகாலை பழனிக்குப் போய் அன்று முழுவதும் அங்கிருந்து முருகன் தரிசனம், தங்கத்தேர், கேரளத்தினரின் காவடி ஆட்டம் என எல்லாம் பார்த்து இரவு கிளம்பி மறுநாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிவிடுவோம்.

அந்த நடைப் பயணம் கொடுத்த அனுபவங்கள் ஒன்றா... இரண்டா... 

ஆஹா... அதை அனுபவித்து ரசிக்க வேண்டும். 

முதல்நாள் குன்றக்குடியில் தங்க வேண்டும் என்பார்கள். பழனி செல்லும் போது குன்றக்குடி மலை ஏறக்கூடாது என்பதால் முருகனுக்கு கீழிருந்தே சலாம் வைத்துவிட்டு இரவுத் தங்கலை நாங்கள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் வாசலில் வைத்துக் கொள்வோம்.

பெரும்பாலும் இரவு 2 மணிக்கெல்லாம் விடிஞ்சிருச்சு எனச் சொல்லி கிளப்பி நடக்க வைத்து விடுவார்கள். அந்தக் குளிரில் நடப்பதென்பது அலாதியானது... காலை பத்தரை, பதினோரு மணிக்கெல்லாம் எங்காவது ஒரு வீட்டு நிழலில் படுக்கையைப் போட்டு விட்டு, மதியம் சாப்பிட்டு, மீண்டும் படுத்து... வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும் போது மீண்டும் நடை... நல்ல இடத்தில் தங்க வேண்டும் என்பதால் இரவு பத்து மணி வரை கூட நடை தொடரும்.

தொடர்ந்து ஆறாண்டுகள் முருகனைக் காண நடைப்பயணம்... 

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான அனுபவம். 

மறக்க முடியாத பயணம் அது. முருகனைத் தரிசிக்கும் போது நடந்து வந்த கால் வலி எல்லாம் மறந்து போகும். பேருந்துக்கு வரிசையில் நிற்கும் போதுதான் 5 நாள் நடையின் வலி தெரியும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
(தேவகோட்டை மலை முருகன் கோவில்)
ஒருமுறை நகரத்தாருடன் திருப்பரங்குன்றத்துக்கு நடந்திருக்கிறேன்... அவர்களின் பயணத்திட்டமிடல் மிகச் சிறப்பாக இருக்கும். தங்குமிடத்தில் சமையல் செய்து, பஜனை முடித்து எல்லாருக்கும் சாப்பாடு. பாடல்கள், ஆட்டம் என அவர்களுடன் பயணித்தது புதுவிதமான அனுபவம். 

தேவகோட்டையில் இருந்து செல்லும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு மரியாதை உண்டு. காவடியுடன் ஒரு முறை நடைப்பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் உண்டு. அது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை.

முருகன் மீதான காதலால் ஐயப்பனை ஒதுக்கினேன் என ஆரம்பத்தில் சொன்னேனல்லவா... ஆனால் கல்லூரியில் வேலை பார்க்கும் போது எங்க எம்.எஸ். சார் தலைமையில் ஐந்துமலை அழகனைத் தரிசிக்கும் வாய்ப்பு... 

நான்காண்டுகள் தொடர் சபரிமலைப் பயணம்...  

எட்டுவித அபிஷேகத்துக்கான பொருட்களையும், அவற்றைத் தயாரிப்பதற்கான பாத்திரங்களையும் சுமந்து கொண்டு, எங்கள் பேராசிரியர்களுடன் லேசான தூறலில் மலை ஏறுதல் என்பது வித்தியாசமான அனுபவம்... 

ஐயப்பனின் தரிசனம், அபிஷேகம், பஸ்மக்குளக் குளியல், மஞ்சமாதா தரிசனம், அங்கு இராத்தங்கல், படிபூஜை என பழனிக்கு மாற்றான ஒரு அனுபவம் சபரிமலைப் பயணத்தில்... 

'அப்பா ஐயப்பன் கோவிலுக்குப் போகணும்' என்ற விஷாலின் ஆசையை அவனுடன் பயணித்து நிறைவேற்ற வேண்டும். பார்க்கலாம்... எப்போது ஐய்யப்பன் வரவழைக்கிறான் என.

பழனிக்கு நாங்க 5 நாளில் போனால் எங்க அண்ணன்கள் 3 நாளில் போய்த் திரும்பி வந்தார்கள். அதிகம் தூங்காமல்... அதிகம் ஒய்வெடுக்காமல் மனுசனுங்க நடந்தே சாதிச்சிருக்கானுங்க... பாவம் திரும்பி வந்ததும் இவனுக கூட போகவே கூடாதுப்பா... சொல்லி வச்ச மாதிரி விடிஞ்சிருச்சு வாடான்னு தூங்கவே விடலைன்னு மச்சான் ஒருத்தர் புலம்பினார். காலம் அவரை இளம் வயதிலேயே எடுத்துக் கொண்டு விட்டது.

முருகன் மீதான காதல் எப்போதும் தீரப்போவதில்லை... 

எதார்த்தமாகவே என்னோட நட்பில் எப்போதும் முருகன் என்ற பெயர் மிகவும் நெருக்கமான நட்பாக அமையும். நான் மதிக்கும் என் பேராசான் பெயர் பழனி.

எப்பவுமே அமர்ந்தாலும்... எழுந்தாலும்... பெரிதாக மூச்சை இழுத்து விட்டாலும்..... ஏன் எதைச் செய்தாலும் 'ஸ்ஸ்ஸ்... அப்பா முருகா...' என்ற வார்த்தை வந்து கொண்டேயிருக்கும்... ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட இந்த வார்த்தை என்னிலிருந்து வெளியாகும். 

முருகன் என் காதலன்... அவன்தான் என்னை இயக்குகிறான்.

அவனே இத்தனை கஷ்டத்திலும் துயரிலும் துணை நிற்கிறான்.

இன்று தைப்பூசம்.... அவன் பாதம் பணிவோம்.

'அப்பா... முருகா... எல்லோரையும் காப்பாத்து'


***********
ணக்கம்.

பிரதிலிபி போட்டியில் இருக்கும் எனது கவிதைக்கான இணைப்பு கீழே...

முடிந்தால் வாசித்து உங்கள் கருத்தையும் பதியுங்கள்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

புதன், 16 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது : 'பேட்ட' வாசம்

பேட்ட vs விஸ்வாசம்

இந்த ரெண்டு படமும் வசூலில் சாதித்ததா இல்லையா..? 

இது முந்தியா அல்லது அது முந்தியா...? 

ரஜினி அழகாயிருக்காரா... இல்லை அஜித் அழகாயிருக்காரா..? 

இவரு பேசுற 'பஞ்ச்' நல்லாயிருக்கா இல்லை அவரு பேசுற 'பஞ்ச்' நல்லாயிருக்கா..? 

பேட்டை நல்லாயில்லைன்னு சொல்றியா அப்ப நீ அஜித் ரசிகன், அதோட கமல் ரசிகனும் கூட.... விஸ்வாசம் நல்லாயில்லைன்னு சொல்றியா அப்ப நீ ரஜினி ரசிகன், அதோட விஜய் ரசிகனும் கூட...

'பேட்ட' அரங்குகள் நிறைந்திருக்குன்னு பொய் சொல்லாதே... அடே நீ 'விஸ்வாசம்' அரங்குகள் நிறைந்திருக்குன்னு பொய் சொல்லாதே...

இப்படியெல்லாம் ஒரு பக்கம் ரசிகர்கள் மட்டுமின்றி மக்களும் பேசிக்கிட்டு இருக்கட்டும் நாம் இரண்டு படம் குறித்தும் பார்ப்போம்.

Image result for viswasam hd images

'பேட்ட' முதல்பாதி கல்லூரி ஹாஸ்டல் வார்டன் கதையின் பின்னே ஏதோ ஒன்று இருக்கு என்ற எதிர்பார்ப்பை நம்முள் ஏற்படுத்தி இடைவேளை வரை விறுவிறுப்பாய் நகர்கிறது... 'பாட்ஷா'த்தனமாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் பாட்ஷாவாய் இல்லை என்பதே உண்மை.

'விஸ்வாசம்' முதல்பாதி மனைவியோட பிரிவைச் சொல்லும் கதையாய்... அஜித் புகழ்பாடும் கதையாய்... கொஞ்சம் காமெடி கலந்து நம்முள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் நகர்கிறது... சிவாவின் 'வீரம்' போல் இருக்கு என்று சொல்கிறார்கள் ஆனால் வீரமாய் இல்லை என்பதே உண்மை.

தன்னை வளர்த்த குடும்பத்தில் தன் தம்பியாக வளர்ந்தவனின் வாரிசைக் காப்பாற்ற ரஜினி போருக்குப் (அவரே சொல்வது) போறார். தான் பெற்ற மகளைக் காப்பாற்ற வில்லனை ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடுகிறார் அஜித். இருவரும் செல்வது வடநாட்டுப் பக்கம்தான்.

வடநாட்டில் இருந்து தமிழகம் வரும் டாக்டர் நயன்தாரா மீது அஜித்துக்கு காதல் வருவது அரதப் பழசான தமிழ் சினிமா ரகம். எங்கம்மா அழகா இருப்பாங்கன்னு தம்பி மகனோட காதலி சொல்லியதும் அழகாய் கிளம்பிப் போய் லவ்வும் ரஜினி, புதுமை என்றெல்லாம் சொல்ல முடியவில்லை... பெண்ணே அம்மா அழகாயிருப்பா மயங்கிடாதீங்கன்னு சொல்றதும் ரஜினி  உடனே லவ்வக் கிளம்புறதும் புதுமை என இயக்குநர் நினைத்திருக்கலாம்.

அஜித் காமெடி பண்ணுவது புதுமை என்றாலும் சில இடங்களில் ஒட்டவில்லை... ரோபோ சங்கருடன் இணைந்து பேசுபவற்றை ரசிக்கலாம். ரஜினியைப் பொறுத்தவர காமெடி என்பது அவர் படங்களில் எப்போதும் உண்டு. இதிலும் இருக்கிறது... பழைய படங்களில் சிறப்பாக இருக்கும்.. இதில் சிறப்பில்லை என்றாலும் பல இடங்களில் ரசிக்க முடிகிறது.

நயன்தாரா முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வந்தாலும் படம் முழுவதும் வருகிறார். சிம்ரனும் ஜானுவும் மன்னிக்கவும்... த்ரிஷாவும் சில்லென வந்தாலும் கொஞ்ச நேரமே வருகிறார்கள். அதுவும் ஜானுவைக் கொன்னுடுறானுங்க... பாவிங்க. சிம்ரன் கவர்கிறார்.

விஸ்வாசத்தில் தம்பி ராமையாவும் ரோபோ சங்கரும் ஏன் விவேக் கூட சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பேட்டயில் சசிகுமார் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். பாபி சிம்ஹா அடாவடியாய் வந்து அடங்கிப் போகிறார். பாவம் எங்க சேது நடிப்புக்குத் தீனியில்லை வந்து போகிறார். சூப்பர் ஸ்டார் முன்னாடி தன்னோட கெத்தைக் காட்டத் தவறவில்லை... நடிகன்டா நீ.

Image result for petta images hd

இரண்டு பேருக்குமே வில்லன்கள் பேருக்குத்தான் இருக்கிறார்கள். அடாவடியாய் இல்லை... இவர்கள் போக இரண்டிலுமே சின்னச் சின்ன வில்லன்கள் இருந்தும் சுரத்தில்லை.

இரண்டு படத்தின் வசனங்களும் சிறப்பு... பேட்டயில் ரஜினியின் 'பஞ்ச்' வசனங்களுக்கு விஸ்வாசத்தில் அஜித்தின் 'பஞ்ச்' வசனங்கள் பதில் சொல்வதாய் அமைந்தது எதார்த்தமாக இருக்கலாம் ஆனால் ரொம்பப் பொறுத்தமாய் இருக்கிறது.

வில்லத்தனமான அஜித்தின் வேகம் விஸ்வாசத்துக்குப் ப்ளஸ்... இளமையான ரஜினி பேட்டக்குப் ப்ளஸ்.

'உள்ளே போ...' என ரஜினி சொல்லும் போது பாட்ஷாவின் வசனம் நம் கண் முன்னே வர, 'உள்ளே போ' சுரத்தில்லாமல் இருக்கிறது. 'ஒத்தைக்கு ஒத்த வாடா...' எனும் போது வீரத்தைவிட அஜித் வேகமாய்த் தெரிகிறார்.

உங்கண்ணனைக் கொல்றேன்னு சொல்லிட்டு 'டொப்'புன்னு சுடுற ரஜினி நமக்குப் புதுசு... உயிர் அவ்வளவு ஈஸியாப் போச்சு இந்தச் சினிமாவுல... வில்லன்கிட்ட உங்க மேல கோபமே வரலைன்னு சொல்ற அஜித் ரொம்பப் புதுசு.

இன்னும் சின்னப் பையனாட்டம் ரஜினி... திரையில் தெரிகிறார். எப்பவும் போல வயதான மனிதராய் அஜித், முக்கியமாக உடம்பில் கவனம் செலுத்த வேண்டும்... திரையை நிறைக்கிறார்.

காதலுக்கு தூது போய் பெண்ணின் அம்மாவை கரெக்ட் பண்ணுவது தமிழ் சினிமா கற்றுக் கொடுக்கும் நல்ல விஷயம்... அதுவும் சூப்பர் ஸ்டார் மூலமாக. மகளுக்காக மனைவியின் முன் வேலைக்காரனாக நிப்பாட்டி வைத்து அப்பாவின் பாசத்தினை உயர்த்திக் காட்டுவது தமிழ் சினிமா எப்போதேனும் செய்யும் நல்ல காரியம்... அதுவும் அஜித் மூலமாக செய்யத் தைரியம் தேவை... செய்து வென்றிருக்கிறார்கள்.

இந்த வயசிலும் ரஜினியின் வேகம் பிரமிக்க வைக்கிறது... அஜித்தின் அடாவடி எப்பவும் போல் ரசிக்க வைக்கிறது.

Image result for petta images trisha hd

ரஜினியைக் காக்க வந்த பிரம்மா என கார்த்திக் சுப்புராஜை சொல்வதெல்லாம் ரொம்ப அதிகம், நல்ல படங்களைக் கொடுத்த கார்த்திக், ரஜினி என்ற மனிதருக்காக ரொம்பவே இறங்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அஜித்தை வைத்து நாலு படங்களை இயக்கிய சிவா, முதலுக்குப் பின்னான சறுக்கல்களைச் சமாளிக்க இடைவேளை வரை அஜித் புகழ் பாடி அப்படியே பயணிக்காமல் அப்பா - மகள் செண்டிமென்டுக்குள் நுழைந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அஜித்தையும் காப்பாற்றிவிட்டார்.

அனிருத் 'மரண மாஸ் கொடுத்தால்...' தமான் 'வேட்டி வேட்டி வேட்டிகட்டு'ன்னு கொண்டாடிட்டார். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த அனிருத் இறுதிக்காட்சிகளில் எப்பவும் போல் பாத்திரங்களைப் போட்டு உருட்ட ஆரம்பிச்சிட்டார்.... முடியல. படம் முழுவதும் தன் இசையால் நிறைவு செய்திருக்கிறார் தமான்.

'இளமை திரும்புதே'யில் ரஜினி - சிம்ரனை ஜில்லுன்னு காட்டி ரசிக்க வைத்தார்கள் என்றால் 'கண்ணான கண்ணே...' பாடலில் அப்பா - மகளை மழையில் நனையவிட்டு நம் கண்களைக் குளமாக்கிவிட்டார்கள்.

தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த ரஜினிக்கு 'பேட்ட' வெற்றி நோட் எழுதியிருக்கிறது. நடந்துக்கிட்டே இருப்பாரே என்ற அஜித்துக்கு நடிக்கவும் வரும் எனக் காட்டி, அதிக தோல்விகளைக் கொடுத்தவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது 'விஸ்வாசம்'.

நகரம் விரும்பும் அடிதடி, கொலையைக் கொண்டிருக்கிறது பேட்ட. கிராமங்கள் விரும்பும் நேசத்துடன் அருவாளையும் தூக்கியிருக்கிறது விஸ்வாசம்.

ரஜினி பேசும் அரசியல் வசனங்களை விட அஜித் பேசும் வசனங்கள் வலுவாய் இருக்கின்றன.

Image result for viswasam nayanthara hd images

இடைவேளை வரை மெல்ல நகரும் 'விஸ்வாசம்' அதன்பின் வேகமெடுக்கிறது. இடைவேளை வரை விறுவிறுப்பாய் நகரும் 'பேட்ட' அதற்குப் பின் முடிவை நோக்கிச் செல்லத் திணறுகிறது.

பிள்ளைகளை பிள்ளைகளாய் வளர விடுங்கள் எனச் சொல்லிக் கொடுக்கிறது 'விஸ்வாசம்'. பிள்ளையின் காதலுக்கு உதவப் போங்கள் அப்படியே பெண்ணின் அம்மாவையும் லவ்வுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது 'பேட்ட'.

இருவருக்குமே வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை... அடுத்த படத்திலும் இதை தக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் ஆசையாய் இருக்கும் என்பதே உண்மை.

கிராமத்தானாய் எனக்கு அடிதடியான 'பேட்ட'யை விட உணர்ச்சிகரமாக, அழ வைத்த 'விஸ்வாசம்' பிடித்திருந்தது.

'பேட்ட'யில் இளமையான ரஜினியை மீண்டும் பார்க்க முடிந்தது. 'விஸ்வாச'த்தில் எப்பவும் போல் நரைகூடிய அஜித்தை தெற்குப் பக்கத்து மீசையுடன் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

'பேட்ட'யில் பல நடிகர்கள் இருந்தும் ரஜினியே படத்தைத் தூக்கிச் சுமக்கிறார். விஸ்வாசத்தில் எப்பவும் போல் அஜித்தே படத்தை தாங்கிப் பிடிக்கிறார்.

பலருக்கு இரண்டுமே பிடிக்கலாம்... அல்லது பிடிக்காமலும் போகலாம்... ஆனாலும் ஒருமுறை பார்க்கலாம்.

மொத்தத்தில் இரண்டு படமும் ஒன்றாய் வந்து ரசிகர்களை அடித்துக்கொள்ள வைத்திருக்கின்றன. இதில் கமலும் விஜய்யும் மிதிபடுவதுதான் பாவம்.

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லம் இன்னும் தொடருதல் வேதனை... விழுந்து சாதல் என்பது அதைவிடக் கொடுமை... அநியாயம்.  இணைய வளர்ச்சி எங்கயோ போய்க்கிட்டு இருக்கு நாம் இன்னும் கடவுட்டுக்களை கடவுளாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகனை நடிகனாய்ப் பார்த்தல் நலம். எவனும் நமக்காக வந்து நிற்கப் போவதில்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்?
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

ஆட ஆரம்பிச்சிட்டா 'அம்புயாதனத்துக் காளி'

பிரபு கங்காதரன்...

இவரைக் காளியின் காதலனாய் அறியும் முன்னர் யூசுப் அண்ணன் மூலமாக முதல் சந்திப்பு நிகழ்ந்தது அபுதாபி செட்டிநாடு ஹோட்டலில் 'சுமையா'வைப் பெற வரும் போதுதான்... அவசரமாய் வந்து அமர நேரமின்றி அவசரமாய்ச் சென்றார்.

பிரபுவை நல்ல வாசிப்பாளன் என்பதாய் மட்டுமே அறிய முடிந்தது அவ்வேளையில்...

பின்னான நாட்களில் அவர் தீவிர வாசிப்பாளன் என்பதை அவரின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எந்த ஒரு தலைப்பு என்றாலும் பேசக்கூடிய அதுவும் தான் வாசித்தவற்றில் இருந்து மேற்கோள்களுடன் பேசக்கூடியவர் என்பதை அறிந்த போது வியப்பாய் இருந்தது. 

யூசுப் அண்ணன், நெருடா போன்றோருடன் பிரபு பேசும் போது சற்றே ஒதுங்கியிருந்து அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பேன் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 

சிறு தெய்வ வழிபாடு பற்றி அஞ்சப்பர் ஹோட்டலில் அரை மணி நேரம் பேசியதில் வீசிய 'கெட்ட வார்த்தை'களைக் கேட்டு எப்படா இவனுக போவனுங்கன்னு முகத்தை முகத்தைப் பார்த்த ஹோட்டல் மேனேஜர் இன்னும் நினைவீல் நிற்கிறார். 

பல நேரங்களில் பேச்சின் ஊடே இடையோடும் 'கெட்ட வார்த்தைகள்' இடம் பொருள் ஏவலெல்லாம் பார்ப்பதில்லை. முகநூலில் கூட அப்படியே வந்து விழும் என்பதே இவரின் அடையாளம்.

முகநூலில் அவரின் பக்கம் செல்ல நேர்ந்த போதுதான் மனுசன் காளியோடு கவிதையில் குடும்பம் நடத்துவதைக் காண முடிந்தது. 

எல்லாமே காமம் தூக்கலாக தூவப்பட்ட நள்ளிரவு உணவாய்.

அவர் எடுத்தாளும் மொழி மிகச் சிறப்பாய் இருக்கும்... பல நேரங்களில் இந்தாளு இந்த வார்த்தையை எல்லாம் எங்கிருந்து எடுக்கிறார் என்ற கேள்வி எழும். சிக்கலான வார்த்தைகள் அவருக்கு வசப்படும்... அதை வாசிக்கும் போது  நம்மை கண்டிப்பாக வசீகரிக்கும்.

காளிக்கான கவிதைகளுக்கு தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் இவருக்கு எங்கு கிடைக்கின்றன என்றே தோன்றும். அப்படி பொருத்தமாய் படங்கள் அமைந்திருக்கும்.

தினமும் காளியோடு கவி உறவாடிய பின்தான் உறக்கம் என்பதாய் நகரும் நாட்கள் அவருடையவை.

சில நாட்கள் என்ன இன்னும் காளியின் கவிதை வரலையே என நினைக்கும் போது கவிதை வந்து விழும்... அந்நேரம் இரவு 2.30 மணியாகக் கூட இருக்கலாம்.



இப்படியே எழுதிக்கிட்டே போறியேய்யா... எடுத்துத் தொகுத்து வைத்துக் கொள்... புத்தகமாக்கலாம் என்று எல்லாரும் சொல்லிய போது அடப் போங்கய்யா இதெல்லாம் புத்தகமாக்குறதா... பெரிய ஆளுக எல்லாம் இருக்காங்க என மறுத்துப் பேசினார்.

யூசுப் அண்ணன் கூட ஒருமுறை பிரபுவின் பாணியிலே சத்தம் போட்டார். அவர் காளியோடு பிண்ணிப் பிணைதலை நாவலாக்கு என்று கூட சொல்லிப் பார்த்தார்.

நீங்கள்லாம் சொல்லுங்க... நான் கிறுக்குவேன்... தொகுக்க மாட்டேன் என்பதில் காளியாய் நின்றார்.

அது உரைநடை வடிவமா... கவிதை வடிவாமா... என்பதெல்லாம் கடந்து காளியைக் காதலிக்கும்... காளியை மோகிக்கும்... காளியைக் காமுறும் ஒரு எழுத்து... அதற்கென்ன வடிவம் வேண்டிக்கிடக்கு என்பதாய் நம் முன்னே உயர்ந்து நிற்கும்.

இங்கே எங்கள் நட்பு வட்டத்தில் அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ காமம் பேசுதுதென எதிர்த்து நின்றவர்களே அதிகம். இதோ காளி பேசுவது முழுவதுமே காமம்தான்.

இதற்கென விமர்சனக் கூட்டம் வைக்கும் போது ஒரு படையல் இருக்கு என்றாலும் படைப்பாளியாய் உயர்த்திய எழுத்து அது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எழுத்தாளர் சாருவின் ஆசியில்... பிரபுவின் மனத் தோன்றலாய் காளி மீதான மோகிக்கும் காதல் 'அம்புயாதனத்துக் காளி' என்ற புத்தகமாய் மலர்ந்திருக்கிறது இந்தாண்டு புத்தகத் திருவிழாவில்.... ஸீரோ டிகிரி வெளியீடாய் வந்திருப்பது சிறப்பு. 

இது நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் என தன் முகநூல் பக்கத்தில் எழுதி பிரபுவின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார் சாரு. 

பிரபு... 

வாசிப்பின் பின்னே வலம் வந்தவர்... 

இன்று எழுத்தாளனாய் ஏற்றம் பெற்றிருக்கிறார். 

காளியோடான காமக் காதல் மட்டுமின்றி இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

இந்த எழுத்து காமம் நிறைந்தது என்பதால் காமத்தை அதில் தேடாதீர்கள்... வாசித்து முடிக்கும் போது காளியின் மீதான ஒரு பக்தனின் காதலை உள்ளம் முழுவதும் சுமந்து கொள்வீர்கள்... காமம் நிறைந்த காதல் அதுவென்பதை உணர்வீர்கள்.

காளி எல்லார் மனதிலும் உக்கிர தாண்டவம் ஆடுவாள் என்பது உறுதி.

கவிதைகள் மட்டுமில்லாமல் சிறுகதைகளும் நாவலும் படைக்க வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.