புதன், 16 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது : 'பேட்ட' வாசம்

பேட்ட vs விஸ்வாசம்

இந்த ரெண்டு படமும் வசூலில் சாதித்ததா இல்லையா..? 

இது முந்தியா அல்லது அது முந்தியா...? 

ரஜினி அழகாயிருக்காரா... இல்லை அஜித் அழகாயிருக்காரா..? 

இவரு பேசுற 'பஞ்ச்' நல்லாயிருக்கா இல்லை அவரு பேசுற 'பஞ்ச்' நல்லாயிருக்கா..? 

பேட்டை நல்லாயில்லைன்னு சொல்றியா அப்ப நீ அஜித் ரசிகன், அதோட கமல் ரசிகனும் கூட.... விஸ்வாசம் நல்லாயில்லைன்னு சொல்றியா அப்ப நீ ரஜினி ரசிகன், அதோட விஜய் ரசிகனும் கூட...

'பேட்ட' அரங்குகள் நிறைந்திருக்குன்னு பொய் சொல்லாதே... அடே நீ 'விஸ்வாசம்' அரங்குகள் நிறைந்திருக்குன்னு பொய் சொல்லாதே...

இப்படியெல்லாம் ஒரு பக்கம் ரசிகர்கள் மட்டுமின்றி மக்களும் பேசிக்கிட்டு இருக்கட்டும் நாம் இரண்டு படம் குறித்தும் பார்ப்போம்.

Image result for viswasam hd images

'பேட்ட' முதல்பாதி கல்லூரி ஹாஸ்டல் வார்டன் கதையின் பின்னே ஏதோ ஒன்று இருக்கு என்ற எதிர்பார்ப்பை நம்முள் ஏற்படுத்தி இடைவேளை வரை விறுவிறுப்பாய் நகர்கிறது... 'பாட்ஷா'த்தனமாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் பாட்ஷாவாய் இல்லை என்பதே உண்மை.

'விஸ்வாசம்' முதல்பாதி மனைவியோட பிரிவைச் சொல்லும் கதையாய்... அஜித் புகழ்பாடும் கதையாய்... கொஞ்சம் காமெடி கலந்து நம்முள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் நகர்கிறது... சிவாவின் 'வீரம்' போல் இருக்கு என்று சொல்கிறார்கள் ஆனால் வீரமாய் இல்லை என்பதே உண்மை.

தன்னை வளர்த்த குடும்பத்தில் தன் தம்பியாக வளர்ந்தவனின் வாரிசைக் காப்பாற்ற ரஜினி போருக்குப் (அவரே சொல்வது) போறார். தான் பெற்ற மகளைக் காப்பாற்ற வில்லனை ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடுகிறார் அஜித். இருவரும் செல்வது வடநாட்டுப் பக்கம்தான்.

வடநாட்டில் இருந்து தமிழகம் வரும் டாக்டர் நயன்தாரா மீது அஜித்துக்கு காதல் வருவது அரதப் பழசான தமிழ் சினிமா ரகம். எங்கம்மா அழகா இருப்பாங்கன்னு தம்பி மகனோட காதலி சொல்லியதும் அழகாய் கிளம்பிப் போய் லவ்வும் ரஜினி, புதுமை என்றெல்லாம் சொல்ல முடியவில்லை... பெண்ணே அம்மா அழகாயிருப்பா மயங்கிடாதீங்கன்னு சொல்றதும் ரஜினி  உடனே லவ்வக் கிளம்புறதும் புதுமை என இயக்குநர் நினைத்திருக்கலாம்.

அஜித் காமெடி பண்ணுவது புதுமை என்றாலும் சில இடங்களில் ஒட்டவில்லை... ரோபோ சங்கருடன் இணைந்து பேசுபவற்றை ரசிக்கலாம். ரஜினியைப் பொறுத்தவர காமெடி என்பது அவர் படங்களில் எப்போதும் உண்டு. இதிலும் இருக்கிறது... பழைய படங்களில் சிறப்பாக இருக்கும்.. இதில் சிறப்பில்லை என்றாலும் பல இடங்களில் ரசிக்க முடிகிறது.

நயன்தாரா முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வந்தாலும் படம் முழுவதும் வருகிறார். சிம்ரனும் ஜானுவும் மன்னிக்கவும்... த்ரிஷாவும் சில்லென வந்தாலும் கொஞ்ச நேரமே வருகிறார்கள். அதுவும் ஜானுவைக் கொன்னுடுறானுங்க... பாவிங்க. சிம்ரன் கவர்கிறார்.

விஸ்வாசத்தில் தம்பி ராமையாவும் ரோபோ சங்கரும் ஏன் விவேக் கூட சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பேட்டயில் சசிகுமார் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். பாபி சிம்ஹா அடாவடியாய் வந்து அடங்கிப் போகிறார். பாவம் எங்க சேது நடிப்புக்குத் தீனியில்லை வந்து போகிறார். சூப்பர் ஸ்டார் முன்னாடி தன்னோட கெத்தைக் காட்டத் தவறவில்லை... நடிகன்டா நீ.

Image result for petta images hd

இரண்டு பேருக்குமே வில்லன்கள் பேருக்குத்தான் இருக்கிறார்கள். அடாவடியாய் இல்லை... இவர்கள் போக இரண்டிலுமே சின்னச் சின்ன வில்லன்கள் இருந்தும் சுரத்தில்லை.

இரண்டு படத்தின் வசனங்களும் சிறப்பு... பேட்டயில் ரஜினியின் 'பஞ்ச்' வசனங்களுக்கு விஸ்வாசத்தில் அஜித்தின் 'பஞ்ச்' வசனங்கள் பதில் சொல்வதாய் அமைந்தது எதார்த்தமாக இருக்கலாம் ஆனால் ரொம்பப் பொறுத்தமாய் இருக்கிறது.

வில்லத்தனமான அஜித்தின் வேகம் விஸ்வாசத்துக்குப் ப்ளஸ்... இளமையான ரஜினி பேட்டக்குப் ப்ளஸ்.

'உள்ளே போ...' என ரஜினி சொல்லும் போது பாட்ஷாவின் வசனம் நம் கண் முன்னே வர, 'உள்ளே போ' சுரத்தில்லாமல் இருக்கிறது. 'ஒத்தைக்கு ஒத்த வாடா...' எனும் போது வீரத்தைவிட அஜித் வேகமாய்த் தெரிகிறார்.

உங்கண்ணனைக் கொல்றேன்னு சொல்லிட்டு 'டொப்'புன்னு சுடுற ரஜினி நமக்குப் புதுசு... உயிர் அவ்வளவு ஈஸியாப் போச்சு இந்தச் சினிமாவுல... வில்லன்கிட்ட உங்க மேல கோபமே வரலைன்னு சொல்ற அஜித் ரொம்பப் புதுசு.

இன்னும் சின்னப் பையனாட்டம் ரஜினி... திரையில் தெரிகிறார். எப்பவும் போல வயதான மனிதராய் அஜித், முக்கியமாக உடம்பில் கவனம் செலுத்த வேண்டும்... திரையை நிறைக்கிறார்.

காதலுக்கு தூது போய் பெண்ணின் அம்மாவை கரெக்ட் பண்ணுவது தமிழ் சினிமா கற்றுக் கொடுக்கும் நல்ல விஷயம்... அதுவும் சூப்பர் ஸ்டார் மூலமாக. மகளுக்காக மனைவியின் முன் வேலைக்காரனாக நிப்பாட்டி வைத்து அப்பாவின் பாசத்தினை உயர்த்திக் காட்டுவது தமிழ் சினிமா எப்போதேனும் செய்யும் நல்ல காரியம்... அதுவும் அஜித் மூலமாக செய்யத் தைரியம் தேவை... செய்து வென்றிருக்கிறார்கள்.

இந்த வயசிலும் ரஜினியின் வேகம் பிரமிக்க வைக்கிறது... அஜித்தின் அடாவடி எப்பவும் போல் ரசிக்க வைக்கிறது.

Image result for petta images trisha hd

ரஜினியைக் காக்க வந்த பிரம்மா என கார்த்திக் சுப்புராஜை சொல்வதெல்லாம் ரொம்ப அதிகம், நல்ல படங்களைக் கொடுத்த கார்த்திக், ரஜினி என்ற மனிதருக்காக ரொம்பவே இறங்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அஜித்தை வைத்து நாலு படங்களை இயக்கிய சிவா, முதலுக்குப் பின்னான சறுக்கல்களைச் சமாளிக்க இடைவேளை வரை அஜித் புகழ் பாடி அப்படியே பயணிக்காமல் அப்பா - மகள் செண்டிமென்டுக்குள் நுழைந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அஜித்தையும் காப்பாற்றிவிட்டார்.

அனிருத் 'மரண மாஸ் கொடுத்தால்...' தமான் 'வேட்டி வேட்டி வேட்டிகட்டு'ன்னு கொண்டாடிட்டார். ஆரம்பத்தில் அடக்கி வாசித்த அனிருத் இறுதிக்காட்சிகளில் எப்பவும் போல் பாத்திரங்களைப் போட்டு உருட்ட ஆரம்பிச்சிட்டார்.... முடியல. படம் முழுவதும் தன் இசையால் நிறைவு செய்திருக்கிறார் தமான்.

'இளமை திரும்புதே'யில் ரஜினி - சிம்ரனை ஜில்லுன்னு காட்டி ரசிக்க வைத்தார்கள் என்றால் 'கண்ணான கண்ணே...' பாடலில் அப்பா - மகளை மழையில் நனையவிட்டு நம் கண்களைக் குளமாக்கிவிட்டார்கள்.

தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த ரஜினிக்கு 'பேட்ட' வெற்றி நோட் எழுதியிருக்கிறது. நடந்துக்கிட்டே இருப்பாரே என்ற அஜித்துக்கு நடிக்கவும் வரும் எனக் காட்டி, அதிக தோல்விகளைக் கொடுத்தவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது 'விஸ்வாசம்'.

நகரம் விரும்பும் அடிதடி, கொலையைக் கொண்டிருக்கிறது பேட்ட. கிராமங்கள் விரும்பும் நேசத்துடன் அருவாளையும் தூக்கியிருக்கிறது விஸ்வாசம்.

ரஜினி பேசும் அரசியல் வசனங்களை விட அஜித் பேசும் வசனங்கள் வலுவாய் இருக்கின்றன.

Image result for viswasam nayanthara hd images

இடைவேளை வரை மெல்ல நகரும் 'விஸ்வாசம்' அதன்பின் வேகமெடுக்கிறது. இடைவேளை வரை விறுவிறுப்பாய் நகரும் 'பேட்ட' அதற்குப் பின் முடிவை நோக்கிச் செல்லத் திணறுகிறது.

பிள்ளைகளை பிள்ளைகளாய் வளர விடுங்கள் எனச் சொல்லிக் கொடுக்கிறது 'விஸ்வாசம்'. பிள்ளையின் காதலுக்கு உதவப் போங்கள் அப்படியே பெண்ணின் அம்மாவையும் லவ்வுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறது 'பேட்ட'.

இருவருக்குமே வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை... அடுத்த படத்திலும் இதை தக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் ஆசையாய் இருக்கும் என்பதே உண்மை.

கிராமத்தானாய் எனக்கு அடிதடியான 'பேட்ட'யை விட உணர்ச்சிகரமாக, அழ வைத்த 'விஸ்வாசம்' பிடித்திருந்தது.

'பேட்ட'யில் இளமையான ரஜினியை மீண்டும் பார்க்க முடிந்தது. 'விஸ்வாச'த்தில் எப்பவும் போல் நரைகூடிய அஜித்தை தெற்குப் பக்கத்து மீசையுடன் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

'பேட்ட'யில் பல நடிகர்கள் இருந்தும் ரஜினியே படத்தைத் தூக்கிச் சுமக்கிறார். விஸ்வாசத்தில் எப்பவும் போல் அஜித்தே படத்தை தாங்கிப் பிடிக்கிறார்.

பலருக்கு இரண்டுமே பிடிக்கலாம்... அல்லது பிடிக்காமலும் போகலாம்... ஆனாலும் ஒருமுறை பார்க்கலாம்.

மொத்தத்தில் இரண்டு படமும் ஒன்றாய் வந்து ரசிகர்களை அடித்துக்கொள்ள வைத்திருக்கின்றன. இதில் கமலும் விஜய்யும் மிதிபடுவதுதான் பாவம்.

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லம் இன்னும் தொடருதல் வேதனை... விழுந்து சாதல் என்பது அதைவிடக் கொடுமை... அநியாயம்.  இணைய வளர்ச்சி எங்கயோ போய்க்கிட்டு இருக்கு நாம் இன்னும் கடவுட்டுக்களை கடவுளாய் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகனை நடிகனாய்ப் பார்த்தல் நலம். எவனும் நமக்காக வந்து நிற்கப் போவதில்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்?
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

  1. கலந்து கட்டி... விமர்சனம் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  2. ஒப்பீடான விமர்சனம் வித்தியாசம். இரண்டையுமே பார்ப்பேன் - மெதுவாக!

    பதிலளிநீக்கு
  3. இரண்டு படங்களை ஒரே பதிவில் விமர்சித்து இருப்பது நன்று.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம்,படங்கள் பார்க்க வேண்டும்,

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா18/1/19, 9:10 AM

    என்னதான் சொன்னாலும் அந்த மொக்கை அஜித் படத்துக்கு பேட்ட மண்டி போட்டிருக்கு
    இந்த அசிங்கத்துக்கு ரஜினி நாண்டுக்கிட்டு சாகலாம்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் குமார்..

    தங்களுக்கும் அன்பின் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. நகைச்சுவைக்கு என்று நடிகர்கள் இருக்கும்போது மாஸ் ஹீரோக்கள் நகைச்சுவை என்ற பெயரில் கூத்தடிப்பது தமிழ் படங்களில் மட்டுமே நடடக்கக்கூடியது . இது தமிழ்ப்பட இயக்குனர்களின் , கதாசிரியர்களின் கற்பனை வரட்சியை பறைசாற்றுகிறது .

    பதிலளிநீக்கு
  8. இரண்டு படங்களையும் கம்பேர் செய்து சொல்லியிருக்கும் விமர்சனம் அருமை. வித்தியாசமாகவும் அதே சமயம் விறு விறுப்பாகவும் இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி