சனி, 26 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-10)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7         
பகுதி-8       பகுதி-9      


சுபஸ்ரீயின் நட்பு அழைப்பை ஏற்பதா... வேண்டாமா... என்று யோசித்தவன், பலமான யோசனைக்குப் பின் ‘நண்பனுக்கு மனைவியாகப் போற பெண்... புத்திசாலி... நிறைய எழுதுபவள்... சமூக சிந்தனை கொண்டவள்... ஏற்பதில் தப்பில்லையே...’ என தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அவளின் நட்பு அழைப்பை ஏற்றான்.

அதன் பிறகு தான் வந்த வேலையில் கவனம் செலுத்தினான். வேண்டிய செய்திகளை டவுன்லோட் பண்ணி பென்டிரைவில் ஏற்றிக் கொண்டு மணி பார்த்தான், வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. இண்டர்நெட் மையத்தின் ஓனர் இவன் படிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்தான்... அதுவும் இவன் படிக்கும் அதே துறையின் மாணவர்தான். ஒரு மணி நேரத்துக்கு முப்பது ரூபாய் வாங்குவார்... இவன் ரெகுலராக வருபவன் என்பதால் இருபது ரூபாய் வாங்குவார். ஒரு மணி நேரத்துக்கு மேல் பத்து நிமிடம்... இருபது நிமிடம் என்றால் கண்டு கொள்ளமாட்டார். இவனும் இங்கு வரும்போது அவருக்கு பிரிண்டிங் வேலைகள் இருந்தால் வேர்டில் அலைன்மெண்ட் எல்லாம் பண்ணிக் கொடுப்பான். அதனால் இருவருக்குள்ளும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்.

‘சரி கிளம்பலாம்... அப்பா வேறு லேட்டாப்போனா கத்துவாரு... தீவனம் வேற வாங்கிக்கிட்டு போகணும்... நாலு மணிக்கு முடியிற காலேசுல இருந்து உம்மவன் ஆறு மணிக்கு வர்றான் பாருன்னு அம்மாக்கிட்ட கத்துவாரு... அதோட விடமாட்டாரு... அங்க எவ கூட சுத்திட்டு வாறான்னு கேளுன்னு வேற ஊரே கேக்குற மாதிரி வாசல்ல உக்காந்துக்கிட்டு காட்டுக் கத்துவாரு... அவருக்கு காலேசுக்கு படிக்கப் போற பசங்க எல்லாரும் பொண்ணுங்க பின்னாடி சுத்துவானுங்கன்னு நினைப்பு... ‘ என்று நினைத்தபடி எழப்போனான்.

அவங்க ஊர் சுப்பையா இவனுக்கு மாமா முறை, அவரோட மக அன்னக்கொடியும் இதே காலேசுதான். அது நாலு மணிக்கு காலேசு விட்டா நாலரைக்கெல்லாம் வீட்டுல இருக்கும்.  அதே மாதிரி இவனும் வரணுமின்னு நினைப்பாரு... இவன் படிக்கிற துறையும் அவ படிக்கிற துறையும் வேற வேற... அதெல்லாம் அவருக்கு தெரியாது... ஊர் சுத்தக் கூடாது அம்புட்டுத்தான். அதனாலேயே முன்னெச்சரிக்கையா வரும்போதே அம்மாக்கிட்ட இன்னைக்கு எனக்கு பாட சம்பந்தமா கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டியிருக்கு...  கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்னு சொல்லிட்டு வந்திருவான்... அப்பத்தான் அவரு பேசும் போது அம்மா இவனுக்கு சப்போர்ட்டா அவன் எங்கிட்ட சொல்லிட்டுத்தான் போனான்னு சொல்லும்.

'அம்மாக்கிட்ட சொல்லியாச்சில்ல...' என்று நினைத்தபடி மீண்டும் முகநூலுக்குள் நுழைந்தான். அங்கு ‘ஹாய்’ என உள்டப்பியில் வந்திருந்தாள் சுபஸ்ரீ. இவனும் பதிலுக்கு ‘ஹாய்’ என அடித்தான்.

‘என்ன சார்... எங்களையெல்லாம் சேர்த்துக்கமாட்டேன்னு சொன்னீங்க... பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த அரைமணி நேரத்துல அக்சப்ட் பண்ணிட்டீங்க...’

‘ம்... என்னோட தங்கை அபி சொன்னதால... நண்பனின் வருங்காலங்கிறதால...’

‘ஓ... அப்ப என்மேல பாசமில்லையில்ல... பரவாயில்லை... உங்க கவிதைகள்... சமுதாய கருத்துக்கள் எல்லாம் பார்த்தேன்... நல்லாத்தான் எழுதியிருக்கீங்க... எனக்கும் செலக்டிவ் பிரண்ட்ஸ்தான்... சும்மா மத்தவா போடுறதை ஷேர் பண்ணி விடுறதும்... ஷேர் பண்றவாளையும் எனக்குப் பிடிக்காது.  ஷேர் பண்ற மேட்டர் பயனுள்ளதா இருக்கணும்... அதைவிட்டுட்டு கண்டதையும் ஷேர் பண்ணுவா... இதுல டேக் வேற... எல்லாத்துலயும் நம்மளை டேக் பண்ணுவா... நாம கேட்டோமா... என்னை டேக் பண்ணுங்கோன்னு... அவா எழுதுறது நன்னாயிருந்தா நாம அவா வால்ல போயி படிக்கப்போறோம்... லைக் பண்ணப்போறோம்... அதான் பிரண்டா இருக்கோம்ல்ல... பின்ன என்னத்து டேக் பண்ணி... யாரு கருத்துப் போட்டாலும் நமக்கும் மணி அடிச்சிக்கிட்டு... ஐ டோண்ட் லைக்...’

நீண்டதாய் எழுதி அனுப்பியிருந்தாள். அதற்கு இவன் ‘ஆமாங்க’ என்ற ஒற்றைச் சொல்லை பதிலாக்கினான்.

‘நைட் பேசலாமா?’ என வினாவினாள்.

‘நைட்டா..?’ எனத் திருப்பினான்.

‘எதுக்கு இந்த பயம்...? பேசலாமான்னுதானே கேட்டேன்... ஓடிப்போலாமான்னு கேட்ட மாதிரி பயப்படுறீங்க... ஹி...ஹி...’ என அவனை ஓட்டினாள்.

‘இல்லைங்க வீட்ல சிஸ்டம் இல்ல... இண்டர்நெட் மையத்துலதான் இப்ப இருக்கேன்... கிளம்பணும்... அதான்...’

‘ஓ... சாரி... ஆத்துல இருப்பீங்கன்னு நினைச்சேன்...’ என அனுப்பியவள், ‘பாருங்க வீடுன்னு சொல்லாம ஆத்துன்னு சொல்லிட்டேன்’ என்றும் அடுத்து அனுப்பினாள்.

‘சரிங்க... டைம் ஆச்சு... கிளம்புறேன்.. பை... சீயூ...’ என டைப்பினான்.

‘என்னங்க அத்து விட்டுட்டுப் போறீங்க... கொஞ்ச நேரம் இருக்கலாமே...’ என அவளிடம் இருந்து உடனே திரும்பி வந்தது.

‘சாரிங்க... கொஞ்சம் வீட்டு வேலை இருக்கு... அதான்... இன்னொரு நாள் பேசலாம்...’ முடிக்கும் எண்ணத்தில் அனுப்பினான்.

‘எப்போ..?’ உடனே எதிர்புறம் இருந்து கேள்வி வந்தது.

‘பாக்கலாம்... எப்ப நான் இங்க வர்றேனோ... அப்ப நீங்க ஆன்லைனில் இருந்தா பேசலாம்...’ என்று அனுப்பியவன் இதற்கு மேல் இருந்தால் நேரமாகும் அப்புறம் வீட்டில் அர்ச்சனைதான் என்று நினைத்தபடி அவளின் பதிலுக்காக காத்திருக்காது கட் பண்ணி விட்டு எழுந்தான்.

அவன் மனசுக்குள் ‘இவளை பிரண்ட் ஆக்கியது தவறோ? சாட்டிங்கில் வந்து தொந்தரவு கொடுப்பாளோ..?  இவளால் பிரச்சினைகளை சந்திக்க நேருமோ?’ என்ற கேள்விகள் எழுந்து அடங்க மறுத்த.


ரவணன் வீட்டுக்கு அரிசி கொண்டு சென்ற வேலாயுதம், அன்று மாலையே கிளம்ப ஆயத்தமானார்.

“இப்ப என்னப்பா அவசரம்..? நைட்டு அன் டயத்துல போயி இறங்கி நம்ம ஊருப் பாதையில... அந்த இருட்டுக்குள்ள போகணுமாக்கும்... காலையில போகலாம்ல்ல...’ என்றான் சரவணன்.

“ஆமா மாமா... நைட்டு இருங்க... மத்தியானமும் ஒண்ணும் சமைக்கலை... நைட்டுக்கு சிக்கன் வாங்கி குழம்பு வைக்கிறேன்...”

“அதெல்லாம் வேண்டாந்த்தா... உங்க அயித்த தனியா இருப்பா... இன்னும் வயல் வேல முடிஞ்சி வீடு வாசல்லாம் சுத்தம் பண்ணாம போட்டது போட்டபடி கிடக்கு... காலையில எல்லாத்தையும் சுத்தம் பண்ணனும்... இப்பப் போனா சரியா இருக்கும்...

இருங்க ஐயா... காலையில போகலாம்...” டிவி பார்த்துக் கொண்டே கத்தினாள் பேத்தி ப்ரீத்தி.

“இல்லடா... ஐயாவுக்கு வேலை இருக்குல்ல...”

“போங்கய்யா... எப்பவுமே நீங்க இப்படித்தான்.... அப்பத்தாவையும் கூட்டியார மாட்டீங்க... இதே அத்தை வீட்டுக்கு மட்டும் அடிக்கடி போவீங்க...” என கோபமாய்ச் சொன்னாள் ப்ரீத்தி.

“அதெல்லாம் இல்லடா... அத்த வீடு பக்கத்துல இருக்கா... சைக்கிள்லயே போயிருவோம்... இங்க பஸ்ல வரணுமில்ல... அப்பத்தாவுக்கு உடம்புக்கு முடியலையில்ல... அதான் வரலை... நீ லீவுக்கு வா... செரியா.... இப்ப என்ன நா ராத்திரிக்கு இங்க இருக்கணும் அவ்வளவுதானே... செரி... இருக்கேன்...” என்றபடி அவளருகே அமர்ந்தார்.

இரவு சமையலுக்கு வாங்கிக் கொண்டு வந்த சரவணன், அவருக்கு பிடித்த நிஜாம்லேடி புகையிலை பாக்கெட்டுகள் சிலவும் வாங்கி வந்து கொடுத்தான். ஊருக்கு கொண்டு போக என சில பொருட்களும் வாங்கி வந்திருந்தான். ஊர் விஷயங்கள் குறித்து அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது “அப்பா அண்ணனை குடும்பத்தோட ஒரு கல்யாண வீட்டுல வச்சிப் பார்த்தேன்” என்றான்.

உடனே வேலாயுதம் “நீ பேசினியா?” என கோபமாகக் கேட்டார்.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)

-‘பரிவை’ சே..குமார்.

6 கருத்துகள்:

  1. வெற்றி நமதே!..

    தங்களுடைய பதிவினுக்கு இணைப்பாக நமது தளத்தில் ஒரு பதிவு..

    நாளை காலையில் காண்க!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே
    தொடர்கிறேன்
    தம+1

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு
    கதை நகர்வு நன்று
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து வருகிறேன் நண்பரே..
    த.ம + 1

    பதிலளிநீக்கு
  5. படம் அருமை தோழர்,
    தொடர்கிறேன்
    தம +

    பதிலளிநீக்கு
  6. கடந்த பல நாட்கள் வலைத்தளம் வர இயலாத காரணத்தால் தொடர இயலவில்லை. இன்று வாசித்துவிட்டோம்..தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி