செவ்வாய், 19 ஜனவரி, 2016

மனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்...


ன்னைக்கு பேசப்போறது எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான். நாம் எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை ஒரு நொடியில் முடிவெடுக்கப்படுபவைதான் என்பதை எல்லாரும் அறிவோம். அப்படி எடுக்கும் முடிவுகள் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அதையே கொஞ்ச நேரம் யோசித்து... இதைச் செய்யலாமா... வேண்டாமா... என முடிவெடுத்தால் பல கெட்ட முடிவுகளை நாம் எடுக்காமலே விடமுடியும். ஆனால் அதை நாம் செய்வதில்லை என்பதே உண்மை.

கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீடியோ பார்த்தேன்... ஒரு இளம்பெண் இரயில்வே ஸ்டேஷனில் போனில் பேசிக்கொண்டு இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது இரயில் வருகிறதா என்றும் பார்க்கிறாள். பார்ப்பவர்கள் எல்லாருமே அவள் இரயிலுக்குக் காத்திருப்பதாகத்தான் நினைத்திருப்பார்கள். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தாள்... ஆனால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக. ஆம் இரயில் அருகே வர படக்கென்று நடைமேடையில் இருந்து குதிக்கு தண்டவாளத்தில் படுத்துவிட்டாள். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என்று திகைக்க, சிலர் சிரத்தையாய் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு லைக்கும் கமெண்ட்டும்தானே மனிதாபிமானம். இரயில் ஏறி அவளை இரண்டு துண்டாக்கிச் சென்றது. எதற்காக இப்படி ஒரு முடிவு... அப்படி என்னதான் பிரச்சினை என்றாலும் பொறுமையாய் சிந்தித்து அதற்கான முடிவை எடுத்தால் எல்லாம் சுகம்தானே. அவசர முடிவால்தான் நாங்கள் ஒருவனை இழந்தோம். அந்த நொடி தற்கொலை முடிவு அவர்களுக்கு சரியானதாகத் தெரிகிறது. ஆனால் அதன் பின்னான வாழ்வில் தினம் தினம் அவர்களின் குடும்பம் செத்துக் கொண்டிருப்பதை அவர்கள் நினைப்பதில்லை. ம்... எல்லாம் அந்த நொடியின் செயல்பாடுகள்தானே.

நாம் ஒரு நொடி சிந்தித்தால் நல்ல அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்திடலாம். நம் குறைகளை ஓரளவுக்காகவாவது நிறைவேற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை தேர்ந்தெடுத்திடலாம். வாழவே முடியாது என்ற நிலையில் இருந்து இதிலும் வாழ்ந்து பார்த்திடலாம் என்றும் நினைத்திடலாம். இந்தப் பாடம் அப்படி என்ன பெரிய விஷயம்... என்னால் பாஸாக முடியும் என்று நினைத்தால் கஜினி முகமது படையெடுப்பை கட்டுக்குள் வைத்திடலாம். இப்படி நிறைய விஷயங்களில் நம்மால் ஜெயித்திருக்க முடியும். ஆனால் எதையும் சிந்திப்பதில்லை. காசு கொடுத்தா போதும் அவனுக்கு குத்திட்டு வந்து குத்துதே குடையுதேன்னு கவிழ்ந்து கிடப்போம். காதல் தோல்வியா, பரிட்சை தோல்வியா கயிறையோ மருந்தையோ எடுத்துக்கிட்டு போயி முடிச்சிக்குவோம்.  எல்லாம் ஒரு நொடி முடிவுதானே.

இந்தா கச்சா எண்ணெய் 28 டாலருக்கு வந்திருச்சு. இங்க கம்பெனிக்காரன் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறான். கட்டுமானப் பணியில் அமீரகத்தில் பிரபலமான ETA (இது தமிழரின் கம்பெனி) குழுமம் இன்று தனது பணியாளர்களில் 35% பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. இது தற்போது நண்பர் சொன்ன தகவல். இப்படி நிறைய கம்பெனிகள் ஆட்டம் கண்டுபோய் இருக்கின்றன. என்னதான் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் விலை குறையாது. காரணம் தனியார் முதலாளிக்கு சொம்பு தூக்கும் அரசாங்கமே. 127 டாலர் இருக்கும் போது இருந்த விலைக்கும் 30 டாலர் இருக்கும் போது இருக்கும் விலைக்கும் சில ரூபாய்களே வித்தியாசம். இதையெல்லாம் நாம் கேட்கமாட்டோம். ஏனென்றால் நம் சிந்தனையெல்லாம் இதில் மட்டும்தானா..? அவனும் ஒரு ரூபாய் கூட்டினால் 75 பைசா இறக்குவான். விலை கூடும்போது நள்ளிரவு முதல்ன்னு காலையில அறிவிப்பான். பங்குக்காரனும் பெட்ரோல் இல்லைன்னு சொல்லி ஸ்டாக் வச்சி நள்ளிரவுக்கு மேல நல்லாச் சம்பாரிச்சுக்குவான். இப்படித்தான் ஓடுது.... இனியாவது ஒரு நிமிடம் சிந்தித்து செயல்படுவோம் மக்களே... (இது விஜயகாந்த் சொல்லும் மக்களே இல்லைங்கோ)

சரிங்க... என்னடா இவன் ஆபீஸ்ல நடந்த கதையின்னு சொல்லிட்டு என்னமோ பேசுறானேன்னு பார்க்கிறீங்கதானே... இல்லை கச்சா எண்ணெய் பிரச்சினை இங்க கடுமையாத் தாக்கும் போல தெரியுது. எங்க கம்பெனி வேலை எல்லாமே அரசாங்க வேலைகள் என்பதால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் இப்ப பார்க்கிற வேலைக்குப் பின் புதிய வேலை எதுவும் இல்லை என்பதே உண்மை. அரசு அலுவலகங்கள் புதிய வேலைகளில் இன்னும் துணிந்து இறங்கவில்லை என்பதும் உண்மை. ஒரு வேலை போனால் அதே நிலையில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். அப்படியிருக்க எங்களோடு வேலை பார்த்த ஒருவன் தெளிந்த நீரில் கல்லெறிந்துவிட்டு காத்திருக்கிறான். ஆம் அவன் ஒரு நொடி யோசிக்காமல் செய்த செயல்தான் இதற்கு காரணம் என்றாலும்.... அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றமே.

நாங்கள் இப்போது பணி எடுக்கும் அலுவலகம் அபுதாபி தண்ணீர் மின்சாரம் சம்பந்தமான அலுவலகங்களுக்குத் தலைமை அலுவலகம். இங்கு அரபிப் பெண்கள் அதிகம் பேர் வேலை செய்வார்கள். எங்களுடன் இருந்த பாகிஸ்தானி சென்ற வாரத்தில் மதிய சாப்பாட்டுக்குப் பிறகு கிச்சனில் அமர்ந்து கொண்டு அந்தப் பெண்களில் ஒருவரை (இளம்பெண்) தன்னுடைய மொபைலில் போட்டோ எடுத்து இருக்கிறான். அதுவும் முன் பின்னாக... ஒன்றல்ல இரண்டல்ல 17 போட்டோ... அவள் திரும்பும் போது முழுப் போட்டாவாக ஒன்று மொத்தம் 18 போட்டோக்கள். அவள் அதைப் பார்த்து பிடித்துக் கேட்கப் போக, இவன் மழுப்பியிருக்கிறான். இவன் கையிலிருந்து போனைப் பறித்துப் பார்த்திருக்கிறாள். தலை இல்லாத பின்புறங்களின் போட்டோ விடுவாளா.... நேராக அவனின் போனோடு அந்தத் துறைக்கான மேலதிகாரியிடம்  சென்றுவிட, இவன் லிப்டில் இறங்கி எஸ்கேப் ஆயிட்டான். அவள் போய் எங்க கம்பெனி பேரைச் சொல்லி என்னை போட்டோ எடுத்துட்டான் என்று சொல்ல, யாரென்று தெரியாமல் எங்க குழுவின் தலைமைக்கு உடனே போன் வந்திருக்கிறது. அவனுக்கும் யாரென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நானும் இன்னொரு மலையாளியும் மற்றுமொரு கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உடனே எங்கே இருக்கே என எனக்கு போன் அடிச்சிட்டான்...நான் சாப்பிடுகிறேன் என்றதும் எந்த கிச்சன் என்றான்... எப்பவும் சாப்பிடும் இடம் என்றேன். ரியாஸ் (மலையாளி) எங்கே என்றான்... இந்தாத்தான் இருக்கான்... என்னடா விஷயம் என்றதும் ஒண்ணுமில்லை சாப்பிட்டு வான்னு சொல்லி ஆமா பாகிஸ்தானி எங்கே என்றான்... தெரியலை சாப்பிடப் போயிருப்பான் என்று சொல்லி வைத்துவிட்டேன்.

இதன் பிறகு எங்க தலைவன் (நம்ம எகிப்துகாரந்தான்) அலைந்து திரிந்து கீழே நின்ற அவனைப் பிடித்துக் கொண்டு வந்து மேலதிகாரி அறைக்கு கூட்டிச் செல்ல, அங்கு பஞ்சாயத்து.. இங்கு சட்ட திட்டங்கள் எப்படி எனத் தெரியும்... மாட்டினால் அவனோட வாழ்க்கை முடியும்.... இவர்கள் பேச, அந்தப் பெண் விடுவதாக இல்லை... அவளுக்கு மொத்த அலுவலகத்துக்குமான பெரிய ஆள் (முதிர்) சொந்தக்காரனாம். அவனுக்கிட்ட போறேன்னு நின்னிருக்கா. அதற்குள் எங்க அலுவலகத்துக்கு விவரம் சொல்லப்பட, எங்க புராஜெக்ட் மேனேஜர் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்துவிட, ஒருவழியாக பேசி அவனை இந்த அலுவலகத்துக்குள் இனி வரக்கூடாது என அனுப்பிவிட்டார்கள். இதெல்லாம் எங்களுக்கு பின்னரே தெரியும். அப்புறம் இந்த விஷயம் லெபனானில் இருக்கும் எங்க அசோசியேட் மேனஜருக்கு போக, அவன் குதியோ குதியின்னு குதிச்சிருக்கான். அதை மேனேஜிங் டைரக்டர் காதுக்கு கொண்டு போக, இதுக்கு உடனே நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிட்டாராம். அதுபோக அரசு அலுவலகமும் உடனே நடவடிக்கை எடுங்க இல்லேன்னா நாங்க போலீசில் கேஸ் பைல் பண்ணுறோம்ன்னு சொல்லிட்டாங்க. கம்பெனிக்கு கிளையண்ட் வேணும் என்பதால் அவனை தூக்கிவிடுவது என முடிவு எடுத்துவிட்டார்கள். பணி நீக்கம் செய்தால் வாழ்க்கை போகுமே எனச் சொல்லி எங்க HR அதிகாரியான லெபனான் பெண் சாதரண முறையில் வேலையை விட்டு எடுக்கலாம் என்று சொல்லி அதற்கான வேலையில் இறங்கியாச்சு.  இந்தச் செயலில் கம்பெனி துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏறத்தாழ 20 வருடங்களுக்கு மேலான பந்தம் ஒரு நொடியில் அறுந்து போயிருக்கும். அபுதாபியில் எங்கள் கம்பெனியை இழுத்து மூடியிருக்க வேண்டியதுதான்.

அவன் செய்துட்டுப் பொயிட்டான்... ஆனால் அங்கிருக்கும் ஆட்களை எங்களை கேவலமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெண் எங்க அதிகாரியிடம் இனி நான் எப்படி உங்கள் அலுவலக நண்பர்களுடன் சகஜமாக பழகமுடியும் என்று சொல்லியிருக்கிறார். எங்க அலுவலகத்துக்கு வரவைத்து எங்களுக்கு பயங்கர அட்வைஸ் மழை.... அப்படியிருக்கணும்... இப்படி இருக்கணும்... பொண்ணுங்க கூட பழகுறீங்க.. எப்படி இருக்கணுமின்னு தெரியணும். அவங்க உங்களை இனி நம்ப மாட்டாங்க... அப்படின்னு போட்டுத் தாக்கிட்டானுங்க. இதுல கம்பெனிக்கு என்ன வருத்தம்ன்னா ஏறத்தாழ 40 ஆண்டுகால கம்பெனி வாழ்க்கையில் இது முதல் கரும்புள்ளி என்பதுதான். அதனால் அவனுக கத்தத்தான் செய்வானுங்க. என்ன எனக்கு நுங்கு குடிச்சவன் சும்மா இருக்க கொதம்பை நக்கியவன் மாட்டுன கதைதான் ஞாபகத்துக்கு வந்துச்சு. சொல்ல மறந்துட்டேனே... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்குன சாம்சங் எஸ்-6 மொபைலை அவர்கள் இவனிடம் திருப்பிக் கொடுக்கலை... அதை ஐடியில் இருக்கும் நம்ம திருச்சிக்கார அண்ணன்தான் பார்மெட் பண்ணியிருக்கிறார். மேலதிகாரி அதை உடைக்கச் சொல்லியாச்சாம்... இந்நேரம் உடைத்திருப்பார்கள். இந்த அண்ணனும் அந்தப் பெண்ணிடம் பாவம் குடும்பம் இருக்கு விட்டுடுன்னு தினமும் சொல்றார். அவளும் கொஞ்சம் இறங்கி வந்தாச்சு...போலீசுக்கோ வீட்டிலோ சொல்லவில்லையாம். சொல்லியிருந்தால் அவளின் அண்ணன்காரன் இரண்டு பேர் பெரிய பதவியில் இருக்கானுங்களாம். தூக்கிட்டுப் போய் பாகிஸ்தானியை உப்புக்கண்டம் போட்டிருப்பானுங்க என்றார்

பாவம் பாகிஸ்தானி... மனைவியும் ஒரு வயது குழந்தையும் இங்க இருக்கு... இப்படிப் பண்ணிட்டானேன்னு எனக்கு ரெண்டு நாள் மனசு வதைச்சிக்கிட்டே இருந்துச்சு... ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு... அவனைப் போயி பார்த்தோம்... ஆனா ஆள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. பின்னாலதான் எடுத்தேன்... ஒரு போட்டோவுல மட்டும்தான் முகம் தெரிஞ்சது... அவ பாக்குறான்னு தெரிஞ்சும் அந்த நிமிடம் என்ன நினைச்சேனோ தெரியலை.. எடுத்துட்டேன். அவ விட்டாலும் மேலதிகாரி விடமாட்டேனுட்டான்... அவனும் பாகிஸ்தானிதான் என்பதால் உருதுல கூட பேசினேன்... உதவி செய்ய மாட்டேனுட்டான். நான் இப்படி எப்பவும் எடுத்துட்டு வீட்டுக்குப் போகும் போது அழித்துவிடுவேன்... ஏனென்றால் என் மனைவி என் போனை தினமும் எடுத்துப் பார்ப்பாள் என்று அவன் தன் தவறை சரியென்பது போல் சொன்னதும் இவனுக்கா வருந்தினோம் என்று தோன்ற ரெண்டு விடலாமான்னு யோசிச்சேன். ஆனா இது நம்ம ஊர் இல்லையே தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க. ஏன்டா நாதாரி உம் பொண்டாட்டிய எவனாவது போட்டா எடுத்தா நீ பரவாயில்லை எடுன்னு பாத்துக்கிட்டு நிப்பியான்னு நாலு கழட்டு விட்டுட்டுத்தான் வந்தேன்.

இப்படி ஒரு செயலைச் செய்ததை நியாயப்படுத்துகிறானே என்று நினைக்கும் போது உண்மையிலேயே அவனுக்காக வருந்தியதற்காக வெட்கப்படுகிறேன். இவ்வளவு பிரச்சினையிலும் அவன் கையில் அதே கலரில் எஸ் 6 போன் புதிதாய் வாங்கி வைத்திருக்கிறான். இப்போ எங்க நண்பர்கள் சிலரின் உதவியில் சில இண்டர்வியூ போயிருக்கிறான். கண்டிப்பாக மனைவியிடம் இந்தக் காரணத்தை சொல்லியிருக்கமாட்டான். ஒரு நொடி சபலத்தால் இப்ப அவன் நடு வீதியில்... நாளையே நல்ல வேலை கிடைக்கலாம். ஆனால் தன் தவறுக்கு வருந்தாதவன் மீண்டும் சிந்திக்காத நொடியை சந்திக்காமலா இருப்பான்...?

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

37 கருத்துகள்:

  1. மனச்சாட்சி ஒரு நாள் தண்டனை கொடுக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      கண்டிப்பாக மனசாட்சி அவனுக்கு தண்டனை கொடுக்கும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. ஆனால் தன் தவறுக்கு வருந்தாதவன் மீண்டும் சிந்திக்காத நொடியை சந்திக்காமலா இருப்பான்...?

    நிச்சயம் சந்திப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      அவன் சிந்திக்கும் நாள் வரும்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

      நீக்கு
  3. தேவையா இது....

    செய்த தவறினால் தனது வாழ்க்கையை மட்டுமல்ல, தனது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டாரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தேவையில்லைதான்... நேரம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. சபலம் மிகப் பெரிய எதிரிதான் ஆணுக்கு. அருமையான பதிவு!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செந்தில் சார்...
      சபலமே எதிரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. மூடர்களால் - அனைவருக்கும் இடைஞ்சல்..
    அவனை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      அவன் மூடந்தான்... அவனை வெளியேற்றியும் எங்களுக்கு இப்ப சகஜமான சூழல் இல்லை...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. தற்கொலைகள் என்பது ஒரு நொடி முடிவு என்றாலும் எல்லாமே நமது மூளைச் செயல்பாடுகள் அதாவது வேதியியல் சமாச்சாரங்கள். என்னதான் நாம் பல கவுன்சலிங்க், மனதை அமைதிப்படுத்தல் என்று சொன்னாலும் அதற்கும் மீறி செயல்படுவதுதான் மூளையின் இரசாயனம்.

    அந்தப் பாகிஸ்தானி தன் தவறை, பாகிஸ்தானி என்றில்லைய் யாராய் இருந்தாலும் தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையில் திருந்தவே மாட்டார்கள் அவர்கள். அவன் திருந்துவானா என்பது அவன் உணரும் தருணம் வரும்வரை தொடரும் என்று தோன்றுகின்றது.

    உங்கள் ஊர் சட்டதிட்டங்கள் கடுமைதான் ஆனால் அந்தக் கடுமையான சட்டங்கள் நம்மூரில் இது போன்றவற்றிற்கேனும் வரவேண்டும். இங்கும்தானே நடக்கின்றன. உலகில் மற்ற நாடுகளைக் கணக்கிடும் போது இந்தியா மிகவும் சுதந்திர???!!! நாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      உண்மைதான்... எங்கள் வீட்டில் ஒருவன்... நான் அவனைப் பார்க்கிறேன் என்னைத் தாண்டித்தான் என் நண்பனின் வீட்டுக்கு விருந்துக்குப் போகிறான்... நான் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வந்து சேர்கிறேன்... பின்னாலேயே செய்தி வருகிறது....
      ஒரு நொடிதான்... எல்லாமே முடிந்து விடுகிறதே...

      நம்ம ஊரிலும் சட்ட திட்டம் கடுமையானாலும் பணம் படைத்தவனுக்கும் விஐபிகளுக்கும் மட்டும் வளைந்து கொடுக்கும் அல்லவா?

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. என்னைப் பொருத்தவரை இவன் இத்துடன் தப்பித்ததே இவர்கள் அம்மா-அப்பா ஏதோ முன்பு காசிக்கு போய் கருமத்தை தொலைத்து வந்த புண்ணியம் என்றே நினைக்கின்றேன் நானும்தான் அரேபியப் பெண்களுடன் சுமார் 16 வருடங்களாக பழகி வருகிறேன் இப்படியெல்லாம் நடந்திருந்தால் இந்நேரம் புல் முளைத்திருக்கும்

    முட்டாப்பயல் மனைவி உள்ளூரில் கூடவே இருந்தும் இவன் இப்படி செய்ததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது
    இப்படி விடயங்களை அரபிப்பெண்கள் விட்டுக் கொடுப்பது 100 ரில் 2 பெண்களே இவள் அந்த 2 சதம்போல.... வாழ்க அந்தப்பெண் பாவம் பாக்ஸ் மனைவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      ஆமாம் இவன் தப்பித்ததே கடவுள் செயல்தான்...
      அந்தப்பெண் ஏதோ மனது வந்து பெரிய அளவில் கொண்டு செல்லவில்லை... இங்கு பணிக்கு வரவேண்டாம் வேறு எங்காவது அனுப்புங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்....

      எங்கள் கம்பெனிக்கு தன் மானப் பிரச்சினை... ஆளைத் தூக்கிட்டானுங்க....

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. தன் வினை தன்னை சுடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. ஒரு நொடி சபலம்! வேலைக்கு உலையே வைத்துவிட்டது! அதை உணராத பாகிஸ்தானி மீது கோபம் வருகிறதே தவிர இரக்கம் பிறக்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      ஆமாம் நண்பரே... ஒரு நொடி சபலமே.. இதற்கு காரணம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. அட! அனேகமானவர்கள் இப்படித்தான் குமார். ஒரு நொடி சலனம்....தாமதம் மொத்த வாழ்க்கையையும் சுருட்டி போடும் என அறியாமல் இருக்கின்றார்கள்.

    எப்போதாவது குற்றம் செய்வோருத்து தான் குற்ற உணர்ச்சி உள்ளத்தினை கூறு போடும் குமார். தப்பில் உழல்பவனுக்கு தான் செய்த செய்யும் தப்பு புரியாது. அவனுக்காக கவலைப்படுதல் வீண் தான்.

    ஒரு பெண்ணை அவர் சம்மதமின்றி புகைப்படம் எடுத்தலும் ரசித்தலும் நல்லவன் செய்ய க்கூடியதல்லவே!

    சுவிஸிலும் இந்த வருடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பலாத்காரங்கள் கீண்டல்கள் சீண்டல்களுக்கு எதிரான சட்டம் மிக கடுமையாக்கி இருக்கின்றார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      ஆமாம் நிறையப்பேர் இப்படித்தான் இருக்காங்க...ஆனாலும் போட்டோ எடுப்பதென்பது சரியல்லதானே... திருமணமானவன் மனைவி அருகில் இருக்க... இது எதற்கு... வேண்டுமானால் அவன் மனைவியை விதம் விதமாக படம் எடுத்துக்கொள்ளட்டும்....

      சட்டங்கள் கடுமை ஆகணும்...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. வேதனையான விஷயம் ..பாவம் அவனது மனைவி குழந்தை ..அவன் கொஞ்சம்கூட செஞ்ச செயலுக்கு வருத்தப்பட்ட மாதிரி தெரியலை அடுத்ததா புது போனும் வாங்கியாச்சு :( புதிய இடத்திலும் அதைதான் தொடருவான் ..திருந்தாத ஜென்மம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      வேதனையான விஷயம்தான்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. முடிவு எடுக்கும் முன்
    சிந்திக்க வேண்டும்
    முடிவு எடுத்த பின்
    சிந்திக்க வேண்டாம்
    காலம் கடந்த அறிவால்
    பயனில்லையே!

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. தவறுக்கு வருத்த வேண்டும் திருந்த வேண்டும் அது தான் மனிதனுக்கு அழகு அதை சொல்லி புரிய வையுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. தவறுக்கு வருத்த வேண்டும் திருந்த வேண்டும் அது தான் மனிதனுக்கு அழகு அதை சொல்லி புரிய வையுங்கள்

    பதிலளிநீக்கு
  16. நான் சொன்ன நாலு வார்த்தை வெளியில் தெரிய வில்லையே என்ன மாயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கா தூக்கிட்டு போயிருச்சாம். திரும்பி அனுப்பிங்க.. நீங்க நாலு வார்த்தையா சொன்ன்ன்ன்ன்ன்ன்ன்னிங்க?

      நீக்கு
    2. வாங்க நண்பன்...
      தங்கள் வருகைக்கு நன்றி.
      மாயமில்லை பின்னால் வருது பாருங்க உங்க நீண்ட கருத்து...

      நீக்கு
  17. உண்மைதான் அண்ணா கட்டுரை படித்து முடித்ததும் ஒரு பெரு மூச்சுடன் எனது கருத்தைப் பகிர்கிறேன் அண்ணா அந்த பாக்கிஸ்தானி செய்தது மிகப்பெரிய தவறு கண்டிப்பாக அந்தத்தவறுக்கு அவனுக்கு தண்டனை தரத்தான் வேண்டும் அத்தோடு அவள் அவனை மன்னித்து விட்டாள் என்றால் அது பெரிய காரியம்

    அரபிப்பெண் என்று எழுதி இருந்தீர்கள் ஆனால் அவர்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்று சொல்ல வில்லை சில அரபிகள் அணியும் ஆடைகள் தன் கண்ணை மட்டும் தெரியும் படி இருக்கும் ஆனால் சில லெபனான் பொண்ணுங்க அணியும் ஆடை இருக்கே ஒரு நல்ல மனிதனையும் இப்படியான செயலுக்கு கொண்டு சென்று விடும் அந்த அளவுக்கு அணிந்து வருவார்கள் இவர்களையும் கொஞ்சம் ஆடைத்திருத்தம் கொண்டு வரச்சொல்ல வேண்டும்

    பாக்கிஸ்தானி செய்த வேலை தண்டனைக்குரிய வேலை அதில் மாற்றம் இல்லை ஆனால் அவன் நேரம் நல்லா இருக்கு அதனால் தப்பி விட்டான் இல்லை என்றால் பெண்கள் விடயத்தில் அரபிகள் எடுக்கும் முடிவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும்

    அரபிப்பெண்கள் எங்க கடைக்கு வருவார்கள் அதிலும் லெபனான் பெண்கள் வரும் அழகைப் பார்த்தால் அவர்கள் ஆடை அழகைப் பார்த்தால் மிச்சம் மோசமாக இருக்கும் எங்க கூட வேலை செய்யும் இருவர் ஒரு நேபாளி ஒரு மலையாளி இருவரும் தின்னுவது போன்று பார்ப்பார்கள் என்னை அந்த லிஸ்ட்ல சேர்க்க வேண்டாம் நான் கொஞ்சம் வித்தியாசம் இது போன்ற அசிங்கள்களை நான் பார்ப்பது இல்லை இருந்தாலும் உங்கள் கம்பனியில் நடந்த தவறு எங்க கடையிலும் நடக்க கூடாது என்பதற்காக இந்த விடயத்தையும் இப்படி நடந்துள்ளது பாக்கிஸ்தானி மாட்டி விட்டான் என்பதையும் சொல்லி வைக்கிறேன்

    இது நிறையப்பேருக்கு அதிலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் நிறையப்பேருக்கு ஒர படிப்பினை என்று சொல்ல முடியும் நாட்டில் என்றால் ஒரு வழியாக தப்பி விடலாம் இந்த நாட்டில் சட்னியாக்கி விடுவார்கள் நினைத்தாலே நடுக்கமாக உள்ளது

    உங்கள் கடந்து வந்த பாதையில் இன்று நான் ஒரு பாடம் படித்தேன் என் கூட உள்ள இரு இளைஞர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன் நன்றி அண்ணா தொடருங்கள்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட வந்திருச்சா? ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி சாரே! நல்லாருங்க மக்களே!தினம் தினம் இம்பூட்டு பெரிய்ய்ய்ய்ய பின்னூட்டம் போடுங்க..!

      நீக்கு
    2. உண்மைதான் நண்பா.
      நானும் லெபனான் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.... எங்கள் அலுவலகத்தில் அவர்கள்தானே... சிகரெட் இல்லாமல் அவர்கள் இல்லை.

      ஒருமுறை கடலுக்கு குளிக்கப் போனோம்... ஒரு லெபனான் பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் போட்ட ஆட்டம் இருக்கே.... ஒரு கட்டத்தில் செக்யூரிட்டி சத்தம் போட்டதும்தான் அடங்கினார்கள்... அதுவரை......... பக்கத்தில் குளிப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார்கள்.

      இந்தப் பெண் அரபி... அதுவும் லோக்கல் பெண்... இங்கு இருக்கும் லோக்கல்களில் சிலர் கண் மட்டும் தெரியும்படியும் சிலர் முகம் மட்டும் தெரியும் படியும் பர்தா அணிவார்கள். இந்தப் பெண் முகம் தெரிய அணிபவர் அவ்வளவே.

      அவன் தப்பித்தது முன் ஜென்மத்துப் புண்ணியமோ... அவனோட அப்பா அம்மா செய்த புண்ணியமோ தெரியலை...

      ஆனாலும் அவனுக்குள் துளியும் வருத்தமில்லை...

      என்ன செய்வது?

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

      நீக்கு
  18. பாகிஸ்தானி "கேரக்டர்தான்" இப்போ அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி