வெள்ளி, 22 ஜனவரி, 2016

சினிமா : தாரை தப்பட்டை...


தாரை தப்பட்டை...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை கொஞ்சம் கொடூரமாய்ப் பேசும் பாலா, இந்த முறை கையில் எடுத்திருப்பது கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை. அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை அழகாக படம்பிடித்திருக்கும் இயக்குநர் அதே பாதையில் பயணித்திருந்தால் அது பத்தோடு ஒன்றான தமிழ் சினிமா ஆகிவிடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த மனிதர்களின் வலியை மிகக் கொடூரமாக திரையில் கொண்டு வந்து பார்வையாளனை பதற வைக்கும் படங்களை பாலாவால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதையும் நாம் அறிவோம். இது போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களைத்தான் பெறும். அதே நிலைதான் தாரை தப்பட்டைக்கும்.... சிலர் கிழிந்தது தப்பட்டை என்றும் சிலர் ஆட்டம் தூள் என்றும் கலவையாய்த்தான் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

சாமிப்புலவன் (ஜி.எம்.குமார்) என்னும் பழம்பெரும் வாத்தியக்காரரின் மகன் சன்னாசி (சசிகுமார்) நடத்தும் கரகாட்டக்குழுவின் பிரதான ஆட்டக்காரி சூறாவளி (வரலெட்சுமி) மாமா, மாமா என சசிக்குமாரின் மீது உயிரையே வைத்திருக்கிறார். சூறாவளியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வரும் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) அவரின் அம்மாவிடம் பேச, அவரோ எத்தனை நாளைக்குத்தான் அவளை ஆடவிட்டு சம்பாதிக்கப் போறீங்க... அவளும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டாமா என்று சொல்லி சன்னாசியின் காதலை உடைத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சூறாவளியின் திருமண வாழ்க்கை தென்றலாய் பயணித்ததா... இல்லை சென்னை மழை வெள்ளம் போல் அவளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதா என்பதைப் பேசுவதே தாரை தப்பட்டை.

சாமிப்புலவனாய் வரும் ஜி.எம் குமார், பெரும்பாலும் குடித்துக் கொண்டே இருக்கிறார். கலையை கலையாய் பார்க்க வேண்டும்... அதை காலச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அழித்து விடக்கூடாது என்று நினைக்கும் ரகம். ஆரம்பக் காட்சியில் தவில் வாசிப்பதாகட்டும், சூறாவளியுடன் குடிப்பது, மகனிடம் எகத்தாளம் காட்டுவது, வெள்ளைக்காரர்கள் முன்னிலையில் பாடி தனக்கு அளித்த மாலையை திரும்ப அவனுக்கே அளித்து வருவது என தனது பண்பட்ட நடிப்பைக் காட்டியிருக்கிறார். மகன் மீது பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வைத்திருக்கும் அந்த மனிதர் மகன் காறி உழிந்ததும் குலுங்கிக் குலுங்கி அழுவதில் பாசத்தை பறை சாற்றி, தன்னை கேள்வி கேட்ட மகன் முன்னே சாதித்து வந்த மகிழ்ச்சியில் இறந்தும் போகிறார்.

கருப்பையாவாக வரும் ஆர்.கே. சுரேஷ், கலெக்டரின் டிரைவர் எனச் சொல்லி அறிமுகமாகி சூறாவளியை கரம்பிடிக்க சன்னாசியிடன் அடி வாங்கி, அவளின் அம்மாவை மயக்கி தன்னோட திருமணத்தை முடித்துக் கொள்கிறார். அதன் பின்னான ஆட்டத்தில் அசால்ட்டாய் நடித்து... யார்டா இந்த வில்லன் என எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். முதல் படம் என்பதை நம்மால் நம்ப முடியாத நடிப்பு. தமிழ் சினிமாவுக்கு புதிய வில்லனை தாரைதப்பட்டை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

சன்னாசியாக வரும் சசிக்குமார் நீண்ட முடியை கொண்டை போட்டுக் கொண்டு தாடிக்குள் சோகம், சந்தோஷம், வலி என எல்லாவற்றையும் மறைத்து அதை எல்லாம் பார்வையில் காட்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பிணத்துக்கு முன் ஆடும் நிலை வரும்போது வருந்தி, பின்னர் தன்னை நம்பியிருப்போரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடுவது... சூறாவளி நல்லாயிருக்கட்டும் என காதலை விட்டுக் கொடுப்பது... அப்பாவிடம் சண்டையிட்டு எச்சிலை காறித் துப்புவது... அண்ணன் தங்கை போட்ட ஆபாசப்பாடல் ஆட்டத்தைப் பார்த்து குமுறுவது... இறுதிக் காட்சியில் வில்லனை சூரசம்ஹாரம் செய்வது என தன்னோட நடிப்பில் ஜெயித்திருக்கிறார்.

சூறாவளியாக வரலெட்சுமி, அசல் கரகாட்டக்காரியை நினைவு படுத்துகிறார். சன்னாசி மேல் வைத்திருக்கும் காதலை 'என் மாமனுக்கு பசியின்னா நான் அம்மணமாகக்கூட ஆடுவேன்' என்று சொல்லும் ஒற்றை வசனத்தில் நச்சென சொல்லி விடுகிறார். அவர் போடும் ஆரம்ப ஆட்டங்களின் ஒவ்வொரு அசைவும் நிஜ கரகாட்டக்காரிகளின் ஆட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.(இதற்காகவே ஒரு மாதம் பயிற்சி எடுத்திருக்கிறார்) தன்னை வேறொருவனைக் கட்டிக் கொள்ளச் சொல்லும் மாமனை புரட்டி எடுப்பது, சாமிப்புலவருடன் சேர்ந்து தண்ணி அடிப்பது... பாதிக்கப்பட்ட பெண்ணாய் பதறுவது.... இறுதிக்காட்சி என படத்தின் ஒட்டுமொத்த குத்தகையே இவர்தான். போடா போடி பார்த்த போது இதெல்லாம் எதுக்கு நடிக்க வருது என்று நினைக்க வைத்தவர் இதில் என்னாலும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். சூறாவளியாய் மிளிரும் வரலெட்சுமிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் அமுதவாணன், ஆனந்தி, அந்தோணி, சூறாவளியின் அம்மா, சாமியார் என எல்லாரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். அமுதவாணன் - ஆனந்தி வயிற்றுப் பிழைப்புக்காக போடும் ஆபாச குத்தாட்டம் இன்றைய உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. அதன் பின்னான வசனங்கள் அந்த ஆட்டத்தை நியாயப்படுத்தினாலும்... அண்ணனும் தங்கையும் வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி ஒரு ஆட்டம் போடுவதை நினைத்து நமக்கும் வலிக்கத்தான் செய்கிறது.

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வின் இன்றைய நிலையை அப்படியே கண் முன்னே நிறுத்தும் படம். ஆபாசமாக ஆடி அவர்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்தாலும் நமது பாரம்பரியக் கலை ஒன்று அதன் சுயம் இழந்து ஆபாசக் கூண்டுக்குள் சிக்கிவிட்டதைப் பற்றி படம் பேசும் என்று நினைத்தால் அதை விடுத்து சூறாவளியின் வாழ்க்கைக்குள் நுழைந்து பாலாவின் முத்திரையான கொடூரமான பாதையில் பயணித்து முடிகிறது. 

கரகாட்டக்காரிகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வருவது... அது ஒரு ஏமாற்று வேலைதான் என்றாலும் இன்றைய உலகில் சாத்தியமில்லாத ஒன்று. அந்தமான் காட்சியில் அந்தப் பெண்களை எங்களுடன் படுக்க அனுப்பு என்று கேட்பதுபோல்தான் பல இடங்களில் ஆடப் போகும் போது அவர்களுக்கு நிகழ்கிறது. அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பேசும் ஆபாசம்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் என்று நினைக்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்களே ஒழிய ஒரு கரகாட்டக்காரியை மனைவி ஆக்கி சமுதாயத்தில்  ஒருவனாய் வாழ எவனும் முன்வருவதில்லை. எங்கள் ஊருக்கு ஆட வந்த ஒரு பெண் இளம்வயது... ஏற்பாடு செய்து கூட்டியாந்தவன் இளைஞன்... இருவருக்கும் அதன் பின்னான நாட்கள் ரொம்ப காதலால் கசிந்து உருக ஆரம்பித்தது போல் தெரிந்தது. ஆனால் அவள் அவனுக்கு பயன்படும் வரை உருகினான். பின்னர் அவளை விடுத்து தன் வாழ்க்கைப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டான். அவளது வாழ்க்கையோ ஏஜெண்டுகளை நம்பி பயணிக்கும் கரகாட்டக்காரியாய் தொடர்கிறது.

இப்படியெல்லாமா உடை உடுத்தி ஆடுகிறார்கள்... இதெல்லாம் இப்போ மலையேறிப் போச்சு என்கிறார்கள் சில விமர்சகர்கள்... இப்ப இதைவிட மோசமாகவும் உடை உடுத்தி ஆடுகிறார்கள். எங்க மாவட்டத்தில் கரகாட்டம் நடத்த ஏகப்பட்ட கெடுபிடிகள்... பத்து மணிக்கு ஆரம்பித்து மூணு மணிக்கு முடித்துவிட வேண்டும் என்ற கட்டளையுடனும் தலைவர்கள் குறித்து பாடக்கூடாது... ஆபாசமாக ஆடக்கூடாது என்ற ஏகப்பட்ட கெடுபிடிகளுடனும்தான் காவல்துறை அனுமதி வழங்கும். இவர்கள் கரகாட்டம் என்று சொல்லிக் கொண்டு ஆடல்பாடலுக்கு இணையான ஆபாசத்தை மக்கள் முன் இறக்கி வைக்கிறார்கள் என்பதால்தான் இத்தனை கெடுபிடி... ஆடல்பாடலுக்கு இப்போ அனுமதியே இல்லை... 

முதல் காட்சியிலேயே குடிகாரியாக காட்டுகிறார் என்று வேறு குதிக்கிறார்கள்... ஏன் காட்டினால் என்ன தப்பு... அந்த மனிதர்களின் வாழ்க்கையை பேசும் போது உண்மையைக் காட்டுவதில் தவறே இல்லை... சென்ற முறை எங்கள் ஊருக்கு வந்த கரகாட்டக் குழுவினரை நானும் எனது மச்சானும்தான் ஒரு வீட்டு மாடியில் தங்கச் சொன்னோம்.... மாடியில் ஏறும் முன்னர் பாட்டில் எங்கே என்றுதான் கேட்டார்கள். பிரதான தவில் கலைஞர் குடித்துவிட்டு குப்புறப்படுத்து அவரை எழுப்ப நாங்கள் பட்டபாடு தனிக்கதை. எங்க ஆள் ஒருத்தர் வாங்கி வச்சிருக்கிறார்... கொண்டு வந்து தருவார் என்றதும் குறத்தி (தஞ்சைப் பிரபலம்) எனக்கு ஆப் பாட்டில் அப்படியே வேணும் என்று கராராகச் சொல்ல அதையும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தோம். பின்னர் அவரின் கணவரான குறவன் இதெல்லாம் அவளுக்கு ஒரு சுத்துக்குப் பத்தாது... ராவா ஊத்திக்குவா என்று சொல்லிச் சிரித்தார். எனவே கரகாட்டக்காரிகள் எல்லாம் கலையை வளர்க்க இப்ப அந்தத் தொழிலில் இல்லை... வாழ்க்கையை ஓட்ட மட்டுமே இதைத் தொடர்கிறார்கள்.  சூறாவளி மூணு நிமிடம் ஆடுவது போல் இரவு முழுவதும் ஒரு பெண் ஆடவர்கள் முன்னிலையில் ஆடுவதற்கும் ஆபாசமாய் பேசுவதற்கும் அதுதான் துணை என்ற நம்பிக்கை... சூறாவளி ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாலே தெரியுமே...

ஒளிப்பதிவு பாலாவின் ஆஸ்தான மனிதரான எங்க சிவகெங்கைக்காரர் செழியன்.... அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

படத்தின் இசை ராஜ்ஜியம் ராசா.... ஆயிரமாவது படம் என்ற அடைமொழியோடு வந்திருக்கிறது. பின்னணியில் எப்பவும் நாந்தான் ராஜா என்று சொல்லும் மனிதர் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. பாடல்களும் அதற்கான இசையும் ராஜா... ராசாதான் என்று சொல்ல வைக்கின்றன. அதுவும் 'பாருருவாய' என்ற திருவாசகம் பாடலாய் நம் முன்னே காட்சிப்படுத்தப்படும் போதும்... 'தகிட தகிடதிமி' ஆட்டத்தில் குதிக்கும் இசையும், 'இடரினும்...' பாடலும் என கலந்து கட்டி ஆடியிருக்கிறார் ராசா... ராசாவின் இசை கேட்டாலே போதும்... அந்த சுகானுபவத்தில் இருந்து மீள்வதென்பது எனக்கெல்லாம் ரொம்பக் கடினம். அப்படித்தான் 'பாருருவாய' என்னுள்ளே பாய்ந்து கொண்டே இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்த 'ஆட்டக்காரி மாமன் பொண்ணு' பாடல் நீக்கப்பட்டிருப்பது வருத்தமே.

அந்தமான் காட்சிகள், இடைவேளையில் காட்டப்படும் வில்லனின் முகம், தன்னுடன் படுத்திருப்பவன் கணவன் இல்லை என்பதை அறியாமல் ஒரு பெண் இருப்பது, நேரடியாக சூறாவளி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக்குள் வரும் சன்னாசி, இறுதி சண்டைக்காட்சி என நிறைய காட்சிகளில் படம் தொங்கி நிற்கிறது. எதையும் முழுமையாகச் சொல்லவில்லை.  பாலா விளிம்பு நிலை மனிதர்களைப் பேசும் படம் எனச் சொல்லி அதைவிடுத்து இடைவேளைக்குப் பிறகு வேறு தளத்தில் பயணப்படும் கதையில் இறுதி 20 நிமிடக்காட்சிகள் கொடூரம் என்னும் அவரின் டெம்ப்ளெட் காட்சிகளால் சூழப்படுவதால் நிறையப் பேருக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை.

பாலா சார் படிக்கப் போவதில்லை... இருந்தும் நாம ஏதாவது சொல்லித்தானே ஆகணும்... அதுக்காக பாலா சாருக்கு ஒரு கடிதம்....


வணக்கம் பிதாமகனே...

தமிழ் சினிமா கற்பனை உலகுக்குள் கவர்ச்சி ஜிகினா காட்டி நடந்த போது அதை உடைத்து தனக்கென ஒரு பாணியில் வாழ்வியல் பேசி நடந்தவர் உங்கள் குரு... எங்கள் பாலுமகேந்திரா. அதேபோல் 'ஓங்கி அடிச்சான்'னு சுள்ளானெல்லாம் வசனம் பேசி, நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி மக்களை முட்டாளாக்கி லாபம் பார்த்தோர் மத்தியில் நாந்தான் பாலா... இவன் இப்படித்தான் என அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சோகங்களை உங்களுக்கே உரிய நகைச்சுவையோடு ஆரம்பித்து... கஞ்சா... கொடூரமான முடிவு எனப் பயணிக்க வைத்து ரசிகர்களின் மனங்களை வென்றவர் நீங்கள். 

எல்லாருமே கனவு உலகத்திலேயே பயணித்தால் யார்தான் உண்மையை உள்ளபடி பேசுவது என நீங்கள் தைரியமாக இறங்கினீர்கள். அந்த உண்மைகளில் இருந்து நீங்கள் எடுத்த கதைக்களங்கள் வித்தியாசமானவைதான். எல்லாருமே சந்தோஷமாய் பயணித்தால் எப்படி இது போன்ற படங்களும் வரத்தான் வேண்டும் என்பதுதான் உண்மையான ரசிகனின் ஆசையும் கூட. அதையும் நீங்கள் சரியாகத்தான் செய்தீர்கள். அப்படியிருக்க உங்கள் படங்கள் பேசும் கொடூரமான வாழ்வியல் படத்துக்குப்படம் கூடிக்கொண்டே போவதுதான் பாலாவை கொடூரமானவன் என்று முத்திரை குத்தி வைத்துவிடுமோ என்று உங்களின் ரசிகனாய் மனதுக்குள் ஒரு பயத்தைக் கொடுக்கிறது. 

எதையும் வாழ்ந்து பார்த்து... அனுபவித்து... ரசித்து படம் எடுக்கும் நீங்கள் உங்கள் மீது விழுந்திருக்கும் இந்த டெம்ப்ளெட் முத்திரையை உடைத்தெறிய இன்னுமொரு விளிம்பு நிலை மனிதர்களின் கதையோடு வாருங்கள்... அது அவர்களின் வாழ்வியலை உங்களின் அழகியலோடு பேசட்டும்... அவர்களின் வாழ்வின் சந்தோஷம், வலி பேசட்டும்... வதைபடுபவைகளை தவிர்த்து... வன்மம் தவிர்த்து... ஒரு சந்தோஷ வாழ்க்கையை வாழட்டும். அதில் கொடூர வில்லன் வேண்டாம்... ரத்தம் குடிக்கும் நாயகனும் வேண்டாம். நாம் நாமாக வாழும் வாழ்க்கையை படமாக்குங்கள். 

கமலஹாசன் செய்வது போல் நடிப்புக்காய் ஒரு படம் என்றால் நகைச்சுவையாய்... பணத்துக்காய்... சில படங்கள் என்ற கொள்கையில் நீங்களும் பயணியுங்கள்... உங்கள் பாணியில் கொடூரமாய் இரண்டு படம் கொடுத்தால் எதார்த்தமாய் ஒரு படமாவது கொடுங்கள்... இப்பவும் சொல்றேன்... நீங்க விளிம்பு நிலை மனிதர்களோடு பயணித்து ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... இந்த வெற்றியில் உங்களின் கொடூர டெம்ப்ளெட்டின் கனம் கூடிக்கொண்டே போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். இந்த ஓட்டத்தில் கொஞ்சம் இளைப்பாறுங்கள். விளிம்பு நிலை மக்களின் சந்தோஷங்களோடு உங்கள் டெம்ப்ளெட் கதைக்களத்தினை உடைத்தெறியுங்கள்.

எனக்கு தாரை தப்பட்டை ரொம்ப பிடிச்சிருக்குபாலா சார்...  கொடூரமாய் கடக்கும் காட்சிகள் இறுதி இருபது நிமிடங்களே... மீதமுள்ள நேரங்களில் எல்லாம் கதை நன்றாகவே பயணிக்கிறது. காட்சிப்படுத்துதலில் இருந்த தொய்வுதான் படம் தொடராய் பயணிக்க திணறுவதைக் காட்டுகிறது. இருந்தாலும் கொடூரமாய் ரத்தச் சகதியில் பயணிக்கு கதைக் களத்தை கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை அறியாத நகரத்து மனிதர்கள் எத்தனை பேர் விரும்புவார்கள் சொல்லுங்கள். ரத்தவாடைக்குள் இருந்து வெளியே வாருங்கள்... இந்த வெற்றிப் பயணம் தொடரட்டும்.

(பாருருவாய பிறப்பற வேண்டும்)

பொறுமையாய் கரகாட்டகாரர்களின் வாழ்வை அறிய நினைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம். தாரை தப்பட்டை எனக்கு ராஜாவின் இசை ராஜ்ஜியம்... பாலாவின் பாசங்கற்ற திரைக்கதை.. உங்களுக்கு...?

-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

  1. கடிதம் உட்பட விமர்சனமும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. அநேகமாக மாறி விடுவார் என்று நம்புவோம்... இல்லையெனில் நாம்...!

    பதிலளிநீக்கு
  3. விமரிசனம் மிக அருமை குமார்.

    பதிலளிநீக்கு
  4. வரலட்சுமியின் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கடிதமும் விமர்சனமும் அருமை சகோ ..எவ்விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாத இயக்குனர் ..அதனாலேயே பயத்தில் அவர் படங்களை விமர்சனத்தோடு படிப்பதோடு நிறுத்திடுவேன் .சேது படம் பார்த்ததில் இருந்து இந்த முடிவு ..இப்படிக்கூட நடக்குமா இது சாத்தியமா என்பவருக்கு ..பதில் ஆம் ..
    பல மனிதர்களின் வக்கிரங்களுக்கு இந்த கரகாட்டம் மற்றும் கூத்து ஆடுவோர் ஒரு தீர்வு :(
    குட்டை பாவாடை குட்டை சட்டைன்னு சொல்றவங்கதான் லெக்கின்சை எங்கள் உரிமைன்னு கொடி பிடிச்சாங்க :(
    பஞ்சுமெத்தையில் படுத்துறங்கும் எங்களுக்கு அவகளின் கல் முள் நிறைந்த வாழ்கையின் வலி தெரியாது ..கொஞ்சம் வயலன்ஸ் அதிகமே படத்தில் அதை தவிர்த்தல் நன்றாக இருந்திருக்கும் ..
    மனதை உருக்கி போட்டது பாருருவாய பாடல்

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவுள்ளா இவன் செய்வானா என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் ஒரு பெண் கேட்பாரே? அதுபோலத்தான் கேட்கத் தோன்றுகிறது பாலாவைப் பார்த்து.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமர்சனம் குமார். கடிதத்தில் குறிப்பிட்டது உட்பட. பெரும்பாலும் கரகாட்டங்கள் இப்படியும் நடைபெற்றதுண்டு. அதாவது இடைப்பட்டக் காலத்தில். குடித்தல் என்பது வெகு சகஜம் அவர்களில் பெண்கள் உட்பட. பெண்கள் ஆடும் போதே கூட பல பார்வையாளர்கள் ஆண்களால் அழைக்கபடுவதுண்டு. சில செய்கைகள், வார்த்தைகள் என்று. பணத்தைக் கூட பெண்களின் மார்பில் செருகும் ஆண்களைக் கூட கண்டதுண்டு. உண்மை வாழ்க்கையைத்தான் பாலா படம்பிடிப்பதுண்டு. அதைத்தான் செய்திருக்கிறார். என்னவென்றால் அவரது எல்லா படங்களிலுமே அந்தக் கடைசி நிமிடங்கள் -க்ளைமாக்ஸ் என்று சொல்லப்படுவது மிகவும் கஷ்டமானதாக இருக்கும் மனதை என்னவோ செய்யும். இடையில் ஒரு படம் எடுத்தாரில்லையா அவன் இவன் எனும் படம் கொஞ்சம் மற்ற படங்களிலிருந்து மாறுபட்டு..அதுவும் விளிம்புநிலை மனிதர்கள் என்றாலும் இத்தனைக் கொடூரம் இல்லாமல்.. அது அவ்வளவாக ஓடவில்லை இல்லையா?

    ம்ம்ம் பார்ப்போம் அவர் வித்தியாசமான இயக்குநர் தான் அதில் நீங்கள் சொல்லுவது போல் கொஞ்சம் வெளியில் வந்தால் நன்றாக இருக்கும். இப்போது புதுசு 5 நாயகர்கள் வைத்துப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகின்றது.பார்ப்போம் பொறுத்திருந்து அது எப்படி என்று..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. நடுநிலையான விமர்சனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்ல விமர்சனம் நானும் பாலா படங்களை விரும்புபவனே ஒரு மாறுபட்ட கலைஞன்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  11. நல்ல விமர்சனம்! கடிதமும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி