ஞாயிறு, 17 ஜனவரி, 2016

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

மிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா இடத்திலும் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. நம் பாரம்பரியம் சில அந்நியநாட்டு அடிமைகளால் தடுக்கப்படும் போது கட்டவிழ்ந்த காளைகள் போல் மக்கள் சீறிப்பாய்ந்ததைப் பார்க்கும் போது அரசுக்கு எதிரான சங்கு ஊத ஆரம்பித்துவிட்டது என்பதை அறிய முடிகிறது. காரைக்குடியில் 'எங்க ஊரு... எங்க கிராமம் நான் அப்படித்தான் அவிழ்த்துவிடுவேன்... நீ என்னய்யா பண்ணுவே...' என்று அம்மாவின் ஆணைக்கிணங்க வந்த போலீசிடம் சண்டை போடும் ஒருவரிடம் தெரிந்தது தமிழனின் பாரம்பரிய வீரம். இதைக்கூட ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் வீரமா என்று நக்கல் அடிக்கலாம்... எங்களைப் பொறுத்தவரை இது வீரம்தான்... வேலு நாச்சியார் பிறந்த மண்ணின் வீரம் இது. எங்கள் காளைகள் துள்ளிக்குதித்து ஓடி மகிழ்ந்தன என்பதைக் கேட்கும் போது மிகுந்த சந்தோஷம் மனசுக்குள் பொங்கியது என்பதே உண்மை.


ல்லிக்கட்டை எதிர்த்து மாட்டைக் காக்கக் துடிக்கும் பெடா அமைப்பினர் தமிழனிடம் மட்டுமே மாட்டை காப்பாற்ற வேண்டும்... துன்பப்படுகிறது என்று கத்துகிறார்கள். எல்லாமே அவர்களின் வளர்ச்சிக்கான உள்நோக்கமே. இன்று காலை முகநூலில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது, என்ன கொடூரம்.. கிரிக்கெட் மைதானம் போல் ஒன்றில் ஒரு மாடு ஆக்ரோஷமாய் ஓடுகிறது. அதற்குள் நீளக்கயிறு கொண்டு கட்டப்பட்ட குதிரையின் மீது அமர்ந்து மாட்டை விரட்டி பிடிக்க முயலும் வீரன். ஒரு கட்டத்தில் மாடு ஆக்ரோஷமாக குதிரையைப் பாய, வீரன் விழுந்தடித்து ஓடிவிடுகிறான்... ஆனால் மாடு கோபத்தோடு கட்டப்பட்டிருக்கும் குதிரையை குத்தி வயிற்றைக் கிழிக்க குடல் மொத்தமும் வெளியே வந்து விட,  அத்துடன் குதிரை ஓட... அதன் குடல் முழுவதும் கீழே விழுகிறது... உயிர்ப் பயத்தில் குடலில்லாமல் ஓடி விழுந்து குதிரை இறக்கிறது. இதற்கு மேல் என்னால் பார்க்க மனது பதறியது. அதனால் இத்தோடு நான் பார்க்கவில்லை... இது குறித்த ஒரு பகிர்வையும் அப்போதே படிக்கவும் நேர்ந்தது. அதில் குதிரை இறந்ததும் ஓடிய வீரன் இன்னும் சில வீரருடன் வந்து அந்த மாட்டை அடித்துக் கொள்கிறானாம். பின்னர் மாட்டை குதிரைகளை வைத்து மைதானத்தை சுற்றி இழுத்துச் செல்கிறார்களாம். இதை பகிர்வாய் எழுதியவர் குதிரைகளுக்கு இதயம் இல்லை ஆனால் மைதானத்தில் அமர்ந்து ஆர்ப்பரித்த மனிதர்களுக்கு இதயம் இருக்கத்தான் செய்தது என்பதாய் எழுதியிருந்தார்... என்ன வலி... எப்படிப்பட்ட மரண வேதனை... இதுவும் விளையாட்டு... இதற்கு பெடா கத்தாது... ஏன்னா நடத்துபவன் வெளிநாட்டுக்காரன்... குறிப்பாக தமிழன் இல்லை. எல்லாரும் அறிய வேண்டும் என்பதற்காக பகிர்வையும் வீடியோவையும் நானும் பகிர்ந்தேன். 


ஞ்சய்தத் நல்லொழுக்கம்(?) அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுதலையாகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். இதை மத்திய அரசோ மாநில அரசோ செய்யவில்லை... முழுக்க முழுக்க சிறைத்துறை அதிகாரியின் முடிவே என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் எப்படி விடுதலை ஆகிறார் என்றும் எந்தச் சட்டத்தில் ஆகிறார் என்றும் அதற்கான தகவலின் நகல் தனக்கு வேண்டும் என்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெரறிவாளன் மனு ஒன்றை அளித்து 48 மணி நேரத்திற்குள் விவரம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தானும் அப்படியானதொரு சட்டத்தின் வாயிலாக முன்கூட்டியே விடுதலை ஆக மனு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் எனவும் அதற்கான செலவு தொகையை தந்து விடுவதாகவும் சொல்லியிருக்கிறார். கிடைக்குமா என்பதைவிட தமிழன் என்ற அடையாளம் இருக்கும் வரை இதிலெல்லாம் இவர் விடுதலை ஆக முடியாது என்பதே உண்மை. மேலும் சட்டம் பணம் இருந்தால் மட்டுமே வளைந்து கொடுக்கும். கொலை பண்ணினால் கூட அதுக்கு சாட்சி இல்லைன்னு சொல்லி சல்யூட் அடித்து அனுப்பும். பாவம் பேரறிவாளன்... இவர் கேட்டதும் விட்டுவிடுவார்களா என்ன...


சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியின் வந்திருக்கும் ரஜினி முருகன் முழுக்க முழுக்க நகைச்சுவைத் தோரணம்தான். கதையும் இல்லை ஒன்றும் இல்லை... வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம் போல்தான்... வேலை வெட்டியில்லாமல் சுற்றுவதும், விரட்டிக் காதலிப்பதும், அப்பாவை ரொம்ப மரியாதையாக அழைப்பதும். மாமாவுடன் மோதுவதும் என முந்தைய படத்தின் சாயலில்தான் இருக்கிறது. சமுத்திரக்கனி அதிரடியாக அறிமுகமாகி இறுதிக்காட்சியில் 'வவாச' சத்தியராஜைவிட கேவலமான காமெடியன் ஆக்கப்பட்டுள்ளார்... சிரிக்கச் சிரிக்க இரண்டு மணி நேரத்துக்கு மேல போயாச்சு எப்படி படத்தை முடிப்பது என்று தெரியாமலே பஞ்சாயத்தில் இன்னொரு குடும்பம், பேரன் என்றெல்லாம் கதையை சுற்றி நம்மையும் சுற்ற வைத்து முடித்திருக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் என தமிழ்வாசி போன்ற நண்பர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். கீர்த்தி சுரேஷூம் குறை வைக்கவில்லை... அருமையாக நடித்திருக்கிறார்... அந்த சிரிப்புத்தான் அழகு போங்க... சூரி தனியாக காமெடி பண்ணும் போது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் சிவாவுடன் இணையும் போது ரசிகர்களுக்கு டபுள் தமாக்காதான்... அதிலும் வாழைப்பழ காமெடி ரொம்பநாள் பேசப்படும். கதை வேண்டாம்... கருத்து மண்ணாங்கட்டியும் வேண்டாம்... அழுகை வேண்டாம்... என்று நினைப்பவர்கள் நம்பி ரஜினி முருகன் போகலாம்... இறுதிவரை சிரித்துவிட்டு வரலாம். பாடல்களும் நல்லாயிருக்கு.


ன்று விஷாலின் பிறந்தநாள்... அவனை வாழ்த்திய உறவுகள், நண்பர்கள், முகநூல் உறவுகள், சேனை நட்புக்கள், மனசு நட்புக்கள் என எல்லாருக்கும் விஷாலின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஜல்லிக்கட்டு தொடர்பான எனது பதிவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்... எனது நண்பர்கள் தவிர நிறையப்பேர் அதை பகிர்ந்து இருந்தார்கள். நான் பகிர்ந்து கொள்ளவா என்று கேட்டும் பகிர்ந்தார்கள். நல்லாத்தான் எழுதுறோமோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அது என்ன மறைந்ததுன்னு நீங்க எண்ணலாம். நாம எழுதுறது நமக்குத் தெரியாதா... முக்கி முக்கி தள்ளினாலும் 250 பேர் படிக்கிறதே பெரிய விஷயம்...அதானால் எழுத்து நல்லாயிருக்குன்னு எல்லாம் இல்லை ஒரு பரபரப்பான விசயத்தை எடுத்துப் பேசும்போது அதற்கான மதிப்பு கூடும் என்பதை அறிய முடிந்தது.

னசில் அடுத்து ஒரு வாழ்க்கையையும் காதலையும் பேசும் கதை எழுதலாம் என்று ஒரு எண்ணம் ரெண்டு நாளா அப்பப்ப துளிர்விடுது. முக்கோணக் காதல்கதை சற்றே வித்தியாசமாய் எழுத நினைத்து அதன் சாரம்சம் ஒத்துவருமா என்பதில் எனக்கும் ஒரு அண்ணுக்குமான பேச்சில் அதைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சும்மா எப்பவும் போல கிறுக்குவோம். தொடரெல்லாம் வேண்டாமென இருந்தவனை இரண்டு நாளா இப்படி எழுதலாம்.... இப்படி ஒரு வாழ்க்கையை, ஏறத்தாழ வேரும் விழுதுகளும் மாதிரி ஒரு மனிதரின் வாழ்க்கையோடு காதல், அதன் பின்னான நிகழ்வுகளாய் பயணிக்கலாம் என்று தோன்ற இன்று முதல் பகுதிக்கான காட்சிகள் சில மனசுக்குள் வேலை நேரத்தில் வந்து வந்து போயிற்று. சரி எழுதிடலாம்ன்னு வந்தா அறையில் சில வேலைகள்.. மூடு மாறியாச்சு... இனி கதை வருமா... வராதா தெரியலை... ஏன்னா என்னைப் பொறுத்தவரை அழகா முகம் திருத்தி பொட்டு வைத்து பூ வைத்து எழுத நினைத்தால் முடிவதில்லை. உக்கார்ந்து முகமும் கழுவாது பொட்டும் வைக்காது ஆரம்பித்தால் கடகடவென எழுதிவிடுவேன். அப்படித்தான் 'அவ' சிறுகதை... ஆரம்பித்தேன் முடித்தேன் பகிர்ந்தேன்... என்னமோ தெரியலை காட்சிப்படுத்தினால் என்னால் எழுத முடியாமல் தள்ளிப் போய் காணாமல் போய் விடுகிறது. இப்படித்தான் இந்த மாதத்தில் யோசித்த மூன்று சிறுகதைகள் போயே போச்...


து எதுக்குன்னு பாக்குறீங்களா... பாலா படம்... கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கை பேசும் படம்... இந்த வாரத்துக்குள் பார்க்க வேண்டும்.

வெள்ளியன்று வரவேண்டிய மனசின் பக்கம் பொங்கல் கொண்டாட்டத்தால் இன்று மலர்கிறது.

-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. முத்ல். கருத்து சொல்ல தெரியல்ல. பாவம் என பார்த்தால் எல்லாமே பாவம் தான்.ஆனால் தடைக்கான காரணத்தை விட விளையாட தடை நீக்க கோடிய காரணங்களை சரியாக எடுத்துரைக்க வில்லை என்கின்றார்கள் குமார்.

    இரண்டாவது... பேரறிவாளன் விடயம்.எய்தவன் இருக்க அப்பாய் மாட்டுப்பட்ட அப்பாவிகள். பாவம். சீக்கிரம் நல்ல முடிவு கிட்டட்டும்

    மூன்று.........?

    நான்கு.... எங்கூட்டு செல்லம் விஷாலுக்கு வயதாச்சு அதனால் இனி அவர் பேபி இல்லை என சொல்லி பெரிய மனுசனா நடந்துக்க வாழ்த்துகின்றேன். அம்மாவுக்கும் அக்காவுக்கும் ரியல் செக்ரூட்டி வீஷால் தானாக்கும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லமே!

    நான்கு.... இதான் சாக்குன்னு படத்தை போட்டாச்ச? சகிக்கக்கல். !

    பதிலளிநீக்கு
  2. ஏகப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பதை ரசித்தேன். சிவா கார்த்தி படம் பார்க்கும் பொறுமை இல்லை! விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. காற்றுக்கென்ன வேலி..
    கடலுக்கென்ன மூடி..
    கங்கை வெள்ளம் -
    சங்குக்குள்ளே அடங்கிவிடாது..

    - கவியரசர் கண்ணதாசன்..

    பதிலளிநீக்கு
  4. விஷாலுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளுடன் பிரார்த்தனைகளும்!

    பேரரிவாளனின் கோரிக்கை ஏற்கப்படுமா...என்பது சந்தேகமே.

    ரஜினி முருகன் இனிதான் பார்க்கணும்.
    தாரை தப்பட்டை இரு வகை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நம்ம மது (மலர்த்தரு) ரொம்ப நல்லாருக்குனு எழுதியிருக்கிறார். மலர்வண்ணனும் அப்படியே. மாற்று விமர்சனங்களும் வருகின்றன...

    தொடர்கதை தொடருங்கள் குமார். பதிவுகள் எல்லாம் பேஜ் வியூஸ் பல சமயங்களில் குறைவாகத்தான் வருகின்றது எங்களுக்கும். பரபரப்புச் செய்திப் பதிவு என்றால் பயங்கரமாகப் போகின்றது..எப்படிப் பெட்டிக்கடையில் தொங்கும் பேப்பரில் பரபரப்புச் செய்தி பார்த்து அன்றைய நாளிதழ், வார இதழ்கள் விற்கப்படுகின்றனவோ அது போல...

    சினிமா பதிவுகளும் நிறைய பார்க்கப்படுகின்றன.

    கீதா: பல சமயங்களில் எனக்கும் சில கருத்த்குகள், கதைகள் மனதில் தோன்றி அப்படியே போய்விடுவதுண்டு. துளசி சொல்லுவது உடனே குறிப்பு எழுதி வைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்லுவார். அது சில சமயங்களில் மட்டுமே செய்ய முடிகின்றது. நீங்களும் குறிப்பு எழுதிவைக்க முயற்சி செய்து பாருங்கள்...





    பதிலளிநீக்கு
  5. மனதில் எழுத நினைப்பதை அவ்வப்போது எழுதி வைத்து விடுங்கள்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொடர வேண்டும் என்பதையும் மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்... நினைத்ததை விட கதை மிளிரும்...

    பதிலளிநீக்கு
  6. எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிடுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது! சினிமா பார்ப்பதை தவிர்த்து ரொம்ப நாளாகிறது. விதிவிலக்காக பொங்கலன்று சன்னில் பாபநாசம் பார்த்தேன். விளம்பரம் நிறையப்போட்டு வெறுப்பேத்திவிட்டார்கள். கதையோ கவிதையோ ஜோக்கோ நானும் உங்களைப் போலத்தான். தீவிரமாக யோசித்து காட்சிப்படுத்தி எழுதிய பதிவுகள் ப்ளாப் ஆகிவிடும் அல்லது எழுத முடியாமல் போய்விடும். திடுமெனெ தோணி எழுதி பதிவிடுபவை பாராட்டுகளை அள்ளிக் குவிக்கும். அதனால்தான் இப்போதெல்லாம் தோணுகின்ற போது பதிவுகள் வெளிவருகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் நண்பரே ஸ்பெயின் நாட்டு மஞ்சு விரட்டு வீரர்களின் வீரம் பற்றி நானும் காணொளியுடன் ஒரு பதிவு நீண்ட காலமாக வைத்து இருக்கின்றேன்

    எனக்கு நீண்ட காலமான ஆச்சர்யம் சஞ்சய்தத்தை எப்படி இவ்வளவு நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள் என்பதே... இவன் சிறையில் இருந்து வந்தும் நிறைய படங்களில் நடித்து விட்டான் மக்கள் இவன் திரைப்படத்தையும் வெற்றியடைய வைத்தார்கள் இதுதான் இந்திய மக்களின் நியாய உணர்வு.

    விஷாலுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    தமிழ் மணம் 7
    யாரோ இதற்கும் மைனஸ் ஓட்டு போட்டது போல் இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஒட்டுப்போடும் விடயமே அப்பப்ப மறந்து போகின்றது! இதில் மைனஸ் ஒட்டு போட்லாம் என்பதும் இப்ப நீங்க சொல்லித்தான் தெரிகின்றது.

      குமாருக்கு ஒட்டுப் போட்டால் சுத்திகிட்டே இருக்குதேப்பா! என்னமோ தெரியல்ல.

      நீக்கு
  8. என் மனசும் உங்கள் பக்கமாகத்தான் இருக்கிறது பரிவையாரே!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி