வியாழன், 12 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 8. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.
ணிகாசலத்தின் உடலைப் பெற்றுக் கொண்டு வருணும் தர்ஷிகாவும் மதுரைக்குக் கிளம்பிய மறுநாள் மாலை...

மருத்துவ அறிக்கையை மீண்டும் ஒருமுறை வாசித்தார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், அதில் அவரை ஆழ்ந்த உறக்கத்தில் வைத்து கொலை செய்திருப்பதாகவும் இதயத்தில் இரண்டு கத்திக்குத்து விழுந்திருப்பதாகவும் அதில் முதல் குத்து ஆழமாக பாய்ந்திருப்பதாகவும், அவர் எந்த எதிர்ப்பும் காட்டாமலே இறந்து போய் இருக்கக் கூடும். மேலும் அவர் உயிர் போயிருக்குமா என்ற சந்தேகத்தில்தான் கழுத்தில் அறுத்திருக்கக் கூடும் என்று மருத்துவர் தெரிவித்திருந்தார்.

"ஆழ்ந்த உறக்கம்ன்னா... தூக்க மருந்து கொடுத்திருக்கணும்... இல்லேன்னா தண்ணி ஓவரா அடிச்சிருக்கணும்... என்ன எழவுய்யா... எல்லாப் பக்கமும் முட்டுச் சுவரா இருக்கு..." புலம்பினார் சுகுமாரன்.

"சார் ஒருவேளை அவர் சாப்பிட்ட சாப்பாட்டுல தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருந்தா..." என்றார் பொன்னம்பலம்.

"ஆழ்ந்த உறக்கம்ன்னுதானே மருத்துவ அறிக்கை சொல்லுது... அப்படி இருந்தா தூக்க மருந்து கொடுத்து அதுக்கப்புறம் குத்தியிருக்காங்கன்னு சொல்லியிருக்க மாட்டாங்களா?"

சுகுமாரன் சொன்னதைக் கேட்டு பொன்னம்பலம் சிரித்தார்.

"எதுக்குய்யா சிரிக்கிறே..?"

"பின்ன என்ன சார்... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க... விஷம் கொடுத்துக் கொன்னாக்கூட அது விஷந்தான்னு கண்டுபிடிக்க  முடியாத அளவுக்கு இன்னைக்கு உலகம் முன்னேறிடுச்சு... இது ஆப்ட்ரால் தூக்கமருந்து... அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... ஆனா ஆழ்ந்த தூக்கத்துக்காக அப்படி ஒரு மருந்தை உபயோகப்படுத்தியிருந்தால் இந்தக் கொலையை மெடிசின் பற்றி நல்லா விவரம் தெரிந்த ஒரு ஆள்தான் பண்ணியிருக்கனும்.. ஆனா ரொம்ப பொறுமையா... சுத்தமா வேலை பார்த்திருக்காங்க.... இந்த கொலையில புரபஷனல் கொலைகாரன் இறங்கலை... ஏன்னா அவன் வெட்டிச் சாய்ச்சிட்டு போய்க்கிட்டே இருப்பான்... இங்க நெஞ்சுல குத்தி... அப்புறம் கழுத்துல கொஞ்சம் அறுத்து வச்சி... பொறுமையா கைரேகை எங்கயும் படாம விவரமா வேலை செஞ்சிருக்காங்க..."

"ம்... எனக்கென்னவோ ஒரு ஆள் செஞ்சது மாதிரி தெரியலை... ரெண்டு மூணு பேர் வந்திருக்கணுமின்னு தோணுது... ப்ரான்சிக் ரிப்போர்ட் என்னய்யா சொல்லுது..."

"சுத்தம்ன்னு சொல்லுது... எந்த ஒரு தடயமும் கிடைக்கலை... பிளாங்கா இருக்கு சார்..."

"ஒரு தடயமும் கிடைக்காமல் ஒரு கொலை.... என்னோட சர்வீஸ்ல இப்பத்தான்யா பார்க்கிறேன்... ரெண்டு நாள் ஆச்சின்னு நாளைக்கு மேலிடத்துல இருந்து போன் பண்ணி லெப்ட் ரைட் வாங்குவானுங்க.... என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை... ஒரு வெளிச்சமும் இல்லாமல் சூனியமா இருக்குய்யா..."

"சார்... தப்புப் பண்ணுனவன் எப்படியும் மாட்டுவான் சார்... என்ன கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும்.... நாம ஏன் மறுபடியும் வேலைக்காரப் பெண் லதாவை விசாரிக்கக் கூடாது. "

"மறுபடியுமா...?"

"வேற வழி... அவரோட சாப்பாட்டுல விஷம் கலந்திருந்ததுன்னு சொல்லி விசாரிப்போம்."

"ம்... நாளைக்கு நீயே போயி விசாரிச்சிட்டு வாய்யா... நாங்கொஞ்சம் வெளியில புவனா கூட போக வேண்டியிருக்கு..."

"சரி சார்..."

"எதுக்கும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு தணிகாசலம் கொலை நடந்த வீட்ல மறுபடியும் நம்ம ஆளுங்க ரெண்டு பேரை விட்டு இஞ்ச் பை இஞ்சா அலசிப் பாத்துட்டு வரச்சொல்லுய்யா..."

"இனி அங்க என்ன சார் கிடைக்கப் போகுது... தேவையில்லாத வேலை சார்..."

"எதுய்யா தேவையில்லாத வேலை... நமக்கே தெரியாம எதாச்சும் மறைஞ்சு கிடக்கலாம்... அப்படி ஒண்ணு கிடைச்சா அதுதான் நம்மளோட துருப்புச் சீட்டு... ஏதாவது கிடைக்கும்ன்னு மனசு சொல்லுது..."

"ம்... உங்க ஆசைக்காக ஆள் அனுப்புறேன் சார்... எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை... இஞ்ச் பை இஞ்சா அங்க நாம காலையிலயே அலசியாச்சு.."

"ஏதாவது இருக்கும்ய்யா... ஆளை அனுப்பி தேடிப்பாக்கச் சொல்லு... அந்த லதாக்கிட்ட விசாரி... ரொம்ப போர்ஸ் பண்ணாம விசாரி... முன்னுக்குபின் முரணா பேசினான்னா இங்க கொண்டாந்துரு... விசாரிக்கிற விதமா விசாரிச்சிப்போம்... சரியா..." என்றபடி அவர் நாற்காலியில் இருந்து எழ, "ஒகே சார்..." என்றபடி பொன்னம்பலமும் எழுந்தார்.

"சரி... வீட்ல இருந்து மிஸ்டுகால் வந்துக்கிட்டே இருக்கு... கோயிலுக்குப் போகணுமின்னா... நம்ம தொழில்ல கோயிலாவது குளமாவது... சொன்னா கேக்க மாட்டா... எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸேசன் வேணுமின்னு தோணுது... கோயிலுக்குப் போற நேரம் இந்தக் கேஸ்ல ஏதாவது குளூ கிடைக்கலாம்ல்ல... இப்பவே ஏழரை மணி ஆச்சு.. இனியும் நான் போகலைன்னா எங்களுக்குள்ள ஏழரை ஆயிடும்...  "

"மனுசன் நாயா பேயா அலையிறோம்.... ஒண்ணும் கிடைக்கலை... கோவில் சிலைதான் வந்து கண்டுபிடிச்சிக் கொடுக்கப் போகுது... அட போங்க சார்..."

"நீ நாத்திகவாதியில்ல... உனக்கிட்ட சொன்னா... இங்க பாரு நம்பினவனுக்கு அது தெய்வம்... நம்பாதவனுக்கு அது கல்லு.... எத்தனையோ கல்லு வெளியில கிடக்கு எல்லாம் சிலையாகுறது இல்லை... எந்தக் கல்லையும் பார்த்து மனம் உருகுறதும் இல்லை... மருகுறதும் இல்லை.... சரிவிடு உங்கிட்ட பேசினா அது பெரிய தர்க்கமாகும்... இப்ப தர்க்கம் பண்ண மூடில்லை... மண்டைக்குள்ள தணிகாசலம் ஆக்கிரமிச்சிருக்காரு.... அவரை விட அதிகமா என் பொண்டாட்டி ஆக்கிரமிச்சிருக்கா... சரி வாறேன்..." என்றபடி சுகுமாரன் கிளம்ப, பொன்னம்பலம் சிரித்துக் கொண்டார்.

சுகுமாரன் போனதும் கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு டீ வாங்கி வரச்சொல்லிக் குடித்து விட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அமர்ந்த பொன்னம்பலம், 'தடயம் கிடைக்கிதாம்... தடயம்... இஞ்ச் பை இஞ்சாவுல தேடியிருக்கோம்... தடயம் கிடைச்சா இவரு என்ன பண்ணுவாருன்னு நமக்குத் தெரியாதா என்ன..? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறானுங்கன்னு பிடிச்சி லட்சம் லட்சமா கைப்பற்றினப்போ என்ன பண்ணுனாரு... எனக்கிட்ட ஐம்பதாயிரத்தைக் கொடுத்துட்டு சுளையா ரெண்டரை லெட்சத்தை சுருட்டிக்கிட்டு கணக்கு காட்டுனவருதானே இவரு... வேலையில புலிதான்... ஆனா இந்த மாதிரி கெடச்சா... சுருட்டுறதுலயும் புலிதானே இவரு... கேட்டா இப்ப அடிச்சிட்டுப் போன மாதிரி லெக்சர் அடிப்பாரு... அவரு சொல்றதும் உண்மைதானே... அப்படியே கொடுத்தா மேலிடத்துல உள்ளவன் தின்பான்... நாங்க சுட்டது போக கொடுத்த இருபத்தி ரெண்டு லெட்சத்துல மேலிடம் கணக்கு காட்டுனது பதினைந்து லெட்சம்தானே... ஒரு கொலைக்கேசுல கெடச்ச மோதிரம் கணக்குலயே வராம அவரு பொண்டாட்டி கைக்கு போனது தெரியாதா... என்ன' என்று மனசுக்குள்ளே பேசியபடி புகையை இழுத்து விட்டார்.

"சார்... அந்த சாமிநாதன் கேசு விஷயமா ஒருத்தர் வந்திருக்கார்..." என்று கான்ஸ்டபிள் வந்து சொல்ல "இன்னைக்கெல்லாம் முடியாதுய்யா... நாளைக்கி வரச்சொல்லு... நான் வெளியில போறேன்..." என்றபடி எழுந்தார் பொன்னம்பலம்.

'என்ன லஞ்சம்ன்னு யாருக்கிட்டயும் வாங்க மாட்டாரு... ஆனா இப்படிக் கெடச்சா எடுத்துக்குவாரு... ஏன்னா நாம எடுக்கலைன்னா மத்தவன் எடுத்துப்பான்... பொருள் சொந்தக்காரனுக்கா போகப்போகுதுன்னு சொல்வாரு... இந்த விஷயத்துல அப்படியிப்படிருந்தாலும் ஆளு கேசை முடிக்கிறதுல கில்லாடி... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா மாறி மாறி முன்னேறிப் போவார். அதில் வெற்றியும் பெறுவார். ம்... மனுசன் நாளைக்கு என்ன முடிவுல வருவாரோ...' என்று முணங்கிக் கொண்டே பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு அதை எடுத்தார். 

அது... 

ஒரு வைர மோதிரம்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

  1. தொடர்கிறேன்நண்பரே
    அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.
    நன்றாக உள்ளது கதை.. தொருங்கள்... த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நல்ல விறுவிறுப்பு தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  4. தொடர்கிறேன் சகோ..எனக்கு அந்த டாக்டர் மேல தான் சந்தேகம்..பார்ப்போம் நீங்க என்ன சொல்றீங்கன்னு..

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு வைர மோதிரம்... இவர் அமுக்கிட்டாரா! :) தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அட! வைர மோதிரம்!! பொன்னம்பலத்திற்கு லாட்டரி? கொலை நடந்த இடத்துலருந்து? அது தடயமாக இருக்கச் சான்ஸ்?? தொடர்கின்றோம் குமார் நல்லாருக்கு

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி