வெள்ளி, 30 அக்டோபர், 2015

மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...

ரவணன் அண்ணனின் இரண்டாவது குறும்படமான அகம் புறத்தில் சிறு குறைகள் இருந்தாலும் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வசனங்கள் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. தனது படம் குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு எல்லாம் மிகச் சிறப்பான பதிலோடு தனது தளத்தில் ஒரு பகிர்வு போட்டிருக்கிறார். அவர் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் சிறப்பாக வளர்வீர்கள் அண்ணா... விரைவில் உங்களை வெள்ளித் திரையில் காண்போம். இதுவரை அகம் புறம் பார்க்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று பாருங்கள்.


***

Actor Vivek son died by dengue fever

ம்மை எல்லாம் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார். மிகவும் வருத்தமான செய்தி... ஒரு தகப்பனாய் மகனை இழந்து தவிக்கும் விவேக்கிற்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாதுதான்... இருப்பினும் அவர் இழப்பில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும். இந்த டெங்குவினால் எத்தனை எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  இதைத் தடுக்க முடியாவிட்டாலும் நம்மை நெருங்காதவண்ணம் நாமாவது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

பிரசன்னா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

***
ஞ்சா கருப்பு தனது சொந்த ஊரில் இலவசப் பள்ளிக்கூடம்  நடத்தும் செய்தி முகநூலில் ஏனோ இப்போதுதான் அவர் ஆரம்பித்திருப்பது போல உலா வருகிறது. அவர் ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டது. நான் தான் படிக்கவில்லை என் ஊர் குழந்தைகளாவது படிக்கட்டுமே என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். அவரின் டாக்டர் மனைவிதான் பள்ளியையும் பார்த்துக் கொள்கிறார். இதனிடையே வேல் முருகன் போர்வெல்ஸ் படத்தில் நடித்த போது சிவகங்கைப் பகுதியில் சில கிராமங்களில் சொந்தச் செலவில் போர் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன... அதுவும் உண்மைதான். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் முகநூலில் தற்போது வைரலாகிவரும் அந்த செய்தி கண்டதும் ஒரு நண்பர் இது உண்மையா... இதற்கு சான்று இருக்கா... என்றெல்லாம் கேட்டு... போர் போட்டுக் கொடுத்தார் என்பதை எல்லாம் ஆதாரமில்லாமல் நம்ப முடியாது என ஒரு பக்கப் பதிவு போட்டிருந்தார். 
அவர் இதன் நம்பகத்தன்மையை அறியவே முகநூலில் கேட்டிருக்கிறார். அவருக்கு நானும் சில நண்பர்களும் பதில் சொன்னதும் அப்படியா சந்தோஷம் என்று சொல்லியிருந்தார். நாம் மாற்றம் முன்னேற்றம் என்று நம்மை ஏமாற்ற வரும் கூட்டத்தை, செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு அரியணை ஏற்றி அமர வைத்து கோவணத்துடன் அமர்ந்து கொள்கிறோம்... மாற்றம் முன்னேற்றம் எல்லாம் அவர்கள் குடும்பத்தோடு நின்று விடுகிறது... நமக்குத்தான் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை... தான் சம்பாதித்த பணத்தில் தன்னால் முடிந்த ஒரு செயலை ஒருவர் செய்யும் போது இதற்கு சாட்சி இருக்கா... இதுல உப்பு இருக்கான்னு கேட்போம்... என்ன மனிதர்கள் நாம்..?

***
கல் தீபாவளி மின்னிதழில் எனது சிறுகதைக்கும் இடமளித்திருக்கிறார்களாம்... முகநூலில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வசம் எனது பரிசு பெற்ற சிறுகதையும் மற்றொரு சிறுகதையும் இருக்கு... எந்தக் கதை என்று அறியும் ஆவலில் காத்திருக்கிறேன்... தீபாவளி மலரில் எனது கதைகள் வருமா என கல்லூரியில் படித்த காலத்தில் ஏங்கியிருக்கிறேன். மற்ற நாட்களில் வந்த கதையோ கவிதையோ தீபாவளி மலர்களில் மட்டும் வருவதில்லை. அது இந்த வருட தீபாவளிக்கு நனவாகிறது. அகல் மின்னிதழ் குழுவுக்கு நன்றி.

***
ங்கள் வார்டு குறித்து தினகரன் நகர்மலர் பகுதியில் செய்தி வந்திருக்கு. அதில் எனது துணைவியாரும் கருத்துச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தும் அவரது போட்டோவும் தினகரனில் வந்திருந்ததாம். நான் இணையத்தில் பார்த்து எடுத்துப் படித்தேன்... நாம கிறுக்கும் போது நம்ம துணையும் கொஞ்சமாவது நம்மளைப் போல் இருக்க வேண்டாமா என்ன... அவர் என்னைவிட நன்றாக கவிதை எழுதுவார்.

***
ங்கு குளிர்காலம் ஆரம்பமாகிறது... வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது... இரவு 7 மணி வரைக்கும் வீட்டுக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்த சூரியன் ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. காலையில் நல்ல காற்று இருக்கிறது... மதியும் வெயில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கிறது... இனி நான்கு ஐந்து மாதங்களுக்கு வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பி குளிரில் குதூகலிக்கலாம்... என்ன அலுவலகத்தில்தான் அரபிப் பெண்கள் வெயில் காலத்தில் எப்படி ஏசி பயன்படுத்துவார்களோ அப்படியே குளிரிலும் பயன்படுத்துவார்கள். நாமதான் தண்ணீரில் நனைந்த கோழியாய்... மார்கழி மாதம் அதிகாலையில் கண்மாயில் குளித்து விட்டு... வெடவெடக்கும் குளிரில் பற்கள் டக்கு...டக்குன்னு அடிச்சிக்க... வீடு நோக்கி ஓடிய நாட்களை நினைத்தபடி... அதே சூழலில் அமர்ந்திருக்க வேண்டும்.

***
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன்... கொஞ்சம் காதல் கலந்த கதை... வித்தியாசமான பார்வையில்... மழை பெய்யும் மாலை... ஆட்டுக் கசாலை... இதுதான் கதையின் களம்... கதை மாந்தராய் மூவர் மட்டுமே.... எனக்குப் பிடித்திருந்தது. ஒரு இதழுக்கு அனுப்பும் பொருட்டு நண்பனுடன் பேசியபோது அவன் எங்கே கதையைச் சொல்லு என்றான்.... சொன்னேன்... நீயாடா எழுதினே என்றான் சிரிப்போடு... ஆமாடா நாந்தான் ஏன்..? என்றேன் அப்பிராணியாய்... மூதேவி நீ இப்படியெல்லாம் எழுத மாட்டியே... நீ உன்னோட போக்குல போடா... எதுக்குடா இப்படியெல்லாம் கதை எழுதிக்கிட்டு என்றான்... டேய் நான் எழுதிய முதல் தொடர்கதை முழுக்க முழுக்க காதல்தானேடா... எல்லாருக்கும் பிடித்திருந்தது... அது போக இந்தக் கதையும் வித்தியாசமாத்தான்டா இருக்கு என்றதும் என்னமோ போ... உனக்கு கதை எழுதத் தெரிந்த அளவு அதைச் சொல்லத் தெரியலைன்னு நினைக்கிறேன்... ஒருவேளை அதை முழுவதும் படித்தால் எனக்கு உன்னோட கதை பிடிக்கலாம் என்று சொல்லிச் சிரித்தான். கதை சொல்றது எப்படின்னு படிக்கணும் போல... சரி சரவணன் அண்ணனுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என்ற முடிவோடு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாலயே துண்டைப் போட்டு வச்சிருக்கேன்... 

***

த்து எண்றதுக்குள்ள படம் பார்த்தேன்... காரில் சம்மர் ஷாட் அடிப்பதும்... பறப்பதும்... வீலிங் செய்வதும்... என இன்னும் இன்னுமாய் விக்ரம் செய்கிறார். இதை எல்லாம் ரஜினி செய்தால் ரசிப்போம்... ஏன்னா ஸ்டைல்ன்னா ரஜினின்னு நாம கொண்டாடிட்டோம்... கால்ல கயிரைக்கட்டி ஓடுற காரை இழுத்து நிப்பாட்டினாலும்... ஷூவுல தீப்பொறி பறக்க நடந்தாலும் கைதட்டி ரசிப்போம்... குருவி, சுறான்னு விஐய் செய்து பார்த்து நொந்து போயிக் கிடக்காரு... இப்ப புலியும் பதுங்கிருச்சு... விக்ரம் உடலை வருத்தி நடிக்ககூடிய நல்ல நடிகன்... அவரும் எதற்காக இது போன்ற சூறாவளிக்குள் சிக்கிக் கொண்டார் என்று தெரியவில்லை... கதை சொல்லும் போதே எனக்கு இது செட் ஆகாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? காரில் பயணிக்கும் கதை,  பத்து எண்ணுறதுக்குள்ள முடியும் விக்ரமின் வேலைகள், அழகான சமந்தா என எல்லாம் இருந்தும் படத்தை ரசிக்க முடியவில்லை என்றாலும் இதுவரை உடம்பை வருத்தி நடித்த விக்ரம் இதில் சாதாரணமாக நடித்திருப்பதால் அவருக்காக ரசிக்கலாம்... மற்றபடி படம் ரொம்பச் சுமார்.
***
சில பாடல்களை கேட்டே இருக்க மாட்டோம்... ஆனால் எப்போதாவது தற்செயலாக கேட்க நேர்ந்தால் அது நம்மைப் பிடித்துக் கொள்ளும். அப்படித்தான் மன்னாரு படத்தில் வரும் இந்தப் பாடலும்... இதுவரை கேட்டதேயில்லை... இன்றுதான் முதன் முதலில் கேட்டேன்... கிருஷ்ணராஜ் அவர்களும் எஸ்.பி. சைலஷா அம்மாவும் பாடியிருக்கிறார்கள். 80களின் மெலோடியை ஞாபகப்படுத்திறது பாடல்... இசை உதயன் என்பவராம்... மிகவும் அழகாக செய்திருக்கிறார்... கேட்டுப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.



மனசின் பக்கம் மீண்டும் வரும்...
-'பரிவை' சே.குமார். 

செவ்வாய், 27 அக்டோபர், 2015

மனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே...


லைப்பதிவர் விழா முடிந்ததும் அது குறித்து விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் நிறைகளுடன் சில கேள்விகளையும் முன்வைத்தார்கள். ஏன் நான் கூட விழாவில் வைக்கப்பட்ட கவிதைக் கண்காட்சியில் எனது கவிதையும் இருந்ததா தெரியவில்லை என்று கேட்டிருந்தேன். எல்லாருடைய கேள்விகளுக்கும் முத்துநிலவன் ஐயா, தனபாலன் அண்ணா, கீதா அக்கா உள்ளிட்ட உறவுகள் மிக அழகாக விளக்கம் அளித்தார்கள். அவர்களின் விளக்கங்கள் மூலமாக எல்லாரும் விவரமாக அறிந்து கொள்ள முடிந்தது.

இன்று காலை கில்லர்ஜி அண்ணாவின் பதிவு பார்த்தேன்... அதில் முத்து நிலவன் ஐயா குறித்து ஒரு நண்பர் சொல்லியிருந்த கருத்துப் பற்றி எழுதி நிலவு நட்சத்திரங்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை...நிலவைத் தேடித்தான் நட்சத்திரங்கள் செல்ல வேண்டும் என்று எழுதியிருந்தார். வாசித்ததும் ஏன் நம் உறவுகள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று தோன்றியது. நான் விழாவுக்குப் போகவில்லை என்றாலும் கவிதை, மின்னூல், கையேடு குறித்து எழுதிய சமீபத்திய பதிவில் ஐயா அவர்கள் விளக்கமாக கருத்து எழுதியிருப்பார்கள். அந்தப் பதிவு குறைகளைச் சொல்ல எழுதியதில்லை... நடப்பு இப்படி என்பதாய் எழுதியது. அதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்... ஆனால் சிலர் நான் ஏதோ குறை சொல்வது போல் நினைத்துவிட்டார்கள். குறையோ நிறையோ சொல்ல நான் விழாவுக்கே செல்லாமல் எப்படி முடியும் சொல்லுங்கள்... செவி வழி  மற்றும் பதிவின் வழியாகவும் கேட்டு எழுதியவைதான். அதை தனிப்பட்ட முறையில் முத்துநிலவன் ஐயாவிடம் மின்னஞ்சல் மூலமாக சொல்லியிருக்கலாம்தான்... ஆனால் அவரின் பதில்களை அனைவரும அறிய வேண்டும் என்பதாலே எனது மனசின் பக்கத்தில் சினிமாச் செய்திகளுடன் எழுதினேன். ஐயாவும் தன் கருத்தைச் சொல்லியிருந்தார்.

ஒரு விழாவை முன்னின்று நடத்துவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எங்க ஊர் திருவிழாவில் எங்க சித்தப்பாதான் கணக்கு வழக்குப் பார்த்து எல்லாம் செய்வார். தலைமையாசிரியராக இருந்தவர் அதனால் எல்லா வேலைகளுக்கும் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார். புதிதாக பார்ப்பவர்களுக்கும் என்னடா இவர் இப்படிக் கத்துறாரு என்று தோன்றும்... ஆனால் அவர் கத்துவதால் வேலை நடக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். அவரே பார்ப்பதா... வேறு ஆள் மாற்றுவோம் என்று சின்ன பிரச்சினையில் ஆள் மாற்றினார்கள்... அந்த வேலையை மற்றவர்கள் செய்யும் போதுதான் தலைமைப் பணியின் கஷ்டம் என்ன என்பதை அறிய முடிந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தலைமையில் இருப்பவர்களைப் பற்றி நாம் சுலபமாகப் பேசிவிடலாம்... ஆனால் அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து... அனைவருடனும் ஒருங்கிணைந்து நிகழ்வைச் சரிவர நடத்தி முடிப்பதில் எத்தனை சிரமங்கள், சிக்கல்களை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் யாரும் அறிவதில்லை... அறிந்து கொள்ள விரும்புவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.... தன்னை முன்னிறுத்தவே முத்துநிலவன் ஐயா இந்த விழாவைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறாராம்... என்னய்யா இது... நம்ம வீட்டு விழா என்றாலே நம்மால் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய முடியாது. அப்படியிருக்க புதுகை நண்பர்களை அரவணைத்து இரவு பகல் பாராது வேலை பார்த்து ஒரு விழாவை மிகச் சிறப்பாக நடத்தியவருக்கு தன்னை முன்னிறுத்த நினைத்தார் என்பதாய் ஒரு பட்டம்... ஒருவேளை அவர் முத்துநிலவன் ஐயாவைப் பற்றி அறியாதவராய் இருக்கக்கூடும். தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள அவர் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்ளத் தேவையில்லை... அவர் நீண்டநாள் பிரபலம்தான்... லியோனி பட்டிமன்றத்தில் பேசி பட்டிதொட்டி மட்டுமின்றி உலக அரங்கில் எல்லாம் பிரபலமாய் வலம் வருபவர்தான்.... அவரை வலையுலக மாநாடுதான் பிரபலமாக்க வேண்டும் என்பது இல்லை. படைப்பாளி, பண்பாளி, பேச்சாளி என்ற வகையில் அவர் மிகவும் பிரபலம் என்பதை இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

தனது வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விழாவுக்காக இரவு பகல் பாராது வேலை பார்த்தவர் அவர்... கில்லர்ஜி அண்ணன் சொன்னது போல் அதிகாலையில் எல்லாம் பின்னூட்டங்களும் பதிவும் அவரிடம் இருந்து வரும். அவர் பிரபலமாக இருந்த காரணத்தால்தான் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து போட்டிகள் வைக்க  முடிந்தது. அதேபோல் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தரையும் விழாவில் பேச அழைத்து வர முடிந்தது. விழாக் குழுவினரை முடுக்கிவிட்டு கவிதை ஓவியக் கண்காட்சி, வலைப்பதிவர் கையேடு, திட்டமிட்டு நடத்திய விழா நிகழ்வுகள், நிறைவான சாப்பாடு என பார்த்துப் பார்த்துச் செய்ய முடிந்தது. இவை அனைத்துமே அவர் தன்னை முன்னிறுத்தச்  செய்தவையா நண்பர்களே...?

நாம் அனைவரும் நிறைகளையும் குறைகளையும் சொல்கிறோம்... அதற்கு அவர்களும் என்னடா இவர்கள் என்று எண்ணாமல் பொறுமையாய் பதிலளிக்கிறார்கள். குறைகள் இல்லாத விழாக்கள் இல்லை... இந்தக் குறைகளை அடுத்த விழாவில் நிறைகளாக்குவோம் என்றுதான் அவர்களும் நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பின்னர் எதற்காக நாம்... அவர் தன்னை முன்னிறுத்தப் பார்க்கிறார்... இவர் தன்னை முன்னிறுத்தப் பார்க்கிறார் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம்.... மன்னிக்கவும் விரலுக்கு வந்தபடி எல்லாம் பதிவேற்றுகிறோம்... இது நியாயமா?, ஒருவேளை இதை எழுதிய நண்பர் இந்த விழாவின் நிறை குறைகளை வைத்து இப்படி ஒரு கருத்தை எழுதினால் தானும் வலையுலகில் முன்னணிக்கு வரலாம் என்று நினைத்திருப்பார் போலும்... அப்படி நினைத்தால் அது தவறு. அவரது எழுத்துக்கள் அவரை தானாகவே முன்னணிக்கு கொண்டு வரும்.

விழாவுக்கு விரும்பியவர்கள் நன்கொடையாகத்தான் கொடுத்தார்களே தவிர... அனைத்துப் பதிவர்களும் கட்டாய உறுப்பினர் கட்டணம் எதுவும் செலுத்தவில்லை. தாங்களால் முடிந்ததைவிட மிகச் சிறப்பாக நடத்தினார்கள்... அதற்கான செலவு அவர்கள் கையைப் பிடித்தபோது கூட இவ்வளவு குறைகிறது எல்லாரும் பகிர்ந்து கொள்வோம் என்று சொல்லவில்லை... வலைப்பதிவர் கையேடுக்கு பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். அப்ப செலவில் கூடுதலானதை அவர்கள்தானே ஈடு செய்திருப்பார்கள். அப்படியிருக்க புதுகை நண்பர்களை வாழ்த்தாவிட்டாலும் வசைபாடாதிருப்போம். அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

எனது கதைகளை புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று நினைத்து ஐயாவிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அப்போது மலேசியா, சிங்கப்பூர் என பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தார். தனக்கு இப்போது நேரமில்லை சில நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு பின்னர் ஒருநாள் நல்லாயிருக்கு என்று சொன்னார். நானும் அவரும் அது குறித்து பின்னர் பேசவில்லை.... இன்னும் புத்தகம் கொண்டு வரவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தனது வேலைகளின் இடையில் கூட பதிவுலக நட்பை மதித்து இத்தனாம் தேதிக்குள் படித்து கருத்துச் சொல்கிறேன்... தாமதத்திற்கு மன்னியுங்கள் ஐயா என்று மின்னஞ்சல் அனுப்பியவர் அவர். பதிவர்களை உறவாய் பார்ப்பவர்களில் அவரும் ஒருவர்... நான், மதுரைத் தமிழன், முரளிதரன் ஐயா சொல்லித்தான் தன் வலைப்பூ பிரபலமானது என்று பலதடவை சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்லித்தான் அவர் பிரபலமாக வேண்டும் என்பதில்லை... அவர் பிரபலத்துக்கு பிரபலம்... அவர்தான் எங்களை அறிமுகம் செய்யும் இடத்தில் இருக்கிறார். 

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை...  தயவு செய்து தன்னை முன்னிறுத்தத்தான் இந்த பதிவர் விழாவை அவர் நடத்தினார் என்று இனிமேலும் பேசாதீர்கள். அவர் மட்டுமல்ல புதுகை நண்பர்களும் இன்னும் சிலரும் பட்ட கஷ்டங்களுக்கு நிறைவான விழாவாய் அமைந்தது என்பதை மறக்காதீர்கள்... நாம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்த வேண்டாம்... அவர்களின் மனதைப் புண்ணாக்கிப் பார்க்காமல் இருந்தால் போதும்... பிரபலமே பிரபலமாகத்தான் இதை நடத்தியது என்று சொல்லி உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். இந்தப் பதிவுலகில் முகம் பார்க்காமல் எழுத்து மூலமாகவே எல்லோரும் உறவாய்... நட்பாய்... பாசமாய் உலகெங்கும் விரிந்து கிடக்கிறோம். இந்த உறவுகள் என்றும் சந்தோஷமாய் தொடர வேண்டும்... நாம் இருக்கும் வரை நட்போடு இருப்போம்... நம் வீட்டு விழாவில் நிகழ்ந்த சிறு தவறுகளை மறந்து அடுத்த நிகழ்வில் இந்தத் தவறுகள் நிகழாது பார்த்துக் கொள்வோம்.

நிறை எழுதுகிறேன்... குறை எழுதுகிறேன்... என்று சொல்லிக் கொண்டு ஒரு மெல்லிய கோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாய் நின்று கல்லெறியாதீர்கள்... விழும் கல்களால் அடிபடுவது நம் இதயம்தான்... மேலும் இரவெல்லாம் விழித்து பதிவு போட்டு... பதிவு போட்டு... தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள தனபாலன் அண்ணா இந்த விழாவைப் பயன்படுத்தினார் என்றோ... எல்லாருடைய பதிவிலும் கருத்து இட்டு விழாவுக்கு வாங்க... விழாவுக்கு வாங்கன்னு சொல்லி  கீதா அக்கா தனைப் பிரபலப்படுத்திக் கொள்ள முயன்றார் என்றோ... விழாவுக்கு போகவில்லை என்றாலும் தினமும் பகிர்வில் விழா குறித்து எழுதி.. எழுதியே கில்லர்ஜி அண்ணா இதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சித்தார் என்றோ... புதுகைப் பதிவர்களுக்கு ஜால்ரா அடித்து எழுதி சே.குமார் இதன் மூலம் தன்னைப் பிரபலமாக்க நினைக்கிறான் என்றோ... பேசவோ எழுதவோ செய்யாதீர்கள். அவரவர் எழுத்தில் அவரவர் நிறைவாய்த்தான் இருக்கிறார்கள்... இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல்... அதில் அவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வலைப்பதிவர் விழா குறித்து நிறை, குறை எல்லாம் நிறையப் பேசியாச்சு... இனி யாரும் அது பற்றி எழுத வேண்டாம் என்பதே என் எண்ணம். மீண்டும் அவரவர் பாணிக்கு திரும்புவோம்... எப்போதும் போல் சந்தோஷமாக நகரட்டும் நம் நாட்கள்...

இந்தப் பகிர்வு முத்துநிலவன் ஐயாவைச் சொல்லிவிட்டார்களே என்பதற்கான பதிவு அல்ல.... நம்மில் யாரைப் பற்றி சொல்லியிருந்தாலும் இங்கு கண்டிப்பாக எழுதியிருப்பேன். குறை கூறுகிறேன் என்று நம்மைநாமே குறைத்துக் கொள்வதை தவிர்ப்போம். இரவு பகல் பாராது உழைத்த நம் புதுகை உறவுகளைப் பாராட்டுவோம்...

இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல... மற்றவர் மீது எதுவும் அறியாமல் சேற்றை இறைக்காதீர்கள் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரைதான் இது. தவறாக இருந்தாலோ புண்படுத்தியிருந்தாலோ என்னை மன்னியுங்கள் நண்பர்களே.... நாம் என்றும் உறவாய் இருப்போம் என்பதைச் சொல்ல விளைந்த கட்டுரைதான் இது.

ஆம்... நாம் நாமாகவே இருப்போம்.


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 26 அக்டோபர், 2015

குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா?

ஆர்.வி.சரவணன் குடந்தை
குடந்தையூர் என்னும் தளத்தில் எழுதிவரும் அண்ணன் சரவணன் அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இவரின் எழுத்தில் 'இளமை எழுதும் கவிதை நீ' என்ற நாவல் வெளிவந்திருக்கிறது. அதில் கல்லூரிக்குள் நடக்கும் கதையை திரைக்கதை வடிவில் எழுதியிருப்பார். அதன் பின்னர் 'சில நொடி சிநேகம்' என்ற தனது முதல் குறும்படத்தை சென்ற ஆண்டு மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிட்டார். அந்தப்படம் நல்லதொரு கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் நடிகர்களின் செயற்கைத்தனமான நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் பெரிதாக பேசப்படவில்லை. மேலும் அந்தப் படத்தை நண்பர்களிடம் கொண்டு சென்ற அளவுக்கு மற்றவர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதால் அது வெற்றி என்று சொல்லமுடியாத நிலைதான். இருப்பினும் தனது முயற்சியில் இருந்து பின்வாங்காது இரண்டாவது படத்தை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார். வாருங்கள் அகம் புறம் எப்படியிருக்குன்னு மனம் விட்டுப் பேசலாம்.

அகம் புறம் - பூட்டப்பட்ட அறைக்குள் என்ன இருக்கிறது, அதேபோல் கலர் பேப்பர் சுற்றப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கு என்பதை மையமாக வைத்து அகமும் புறமுமாக கதை நகர்கிறது. பூட்டிய அறைக்குள் இருந்து கேட்கும் சப்தம், சிரிப்பொலிகள் என மிரட்டலாய் பயணிக்கிறது படம். 

துளசி சார், கார்த்திக் சரவணன், பாலகணேஷ் அண்ணா, அரவிந்த், ஆரூர் மூனா, ஜெகன் என  ஒரு பட்டாளமே பூட்டிய அறைக்குள் இருந்து சப்தம் வருவதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு பக்கம் நகர, கணிப்பொறி முன் அமர்ந்திருக்கும் அரசனிடம் ஒரு சிறுவன் பரிசுப் பெட்டியைக் கொடுத்து பிரிக்கச் சொல்ல அதை மெதுவாக பிரித்துக் கொண்டிருக்கிறார். முடிவில் அறைக்குள் நிகழ்ந்தது என்ன...? பரிசுப் பெட்டியின் கதை என்ன என்பதை நகைச்சுவையுடன் திரில்லையும் கொஞ்சம் கலந்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.

முதல் படத்தைப் போலவே இந்தப் படத்துக்கும் அவர் எடுத்துக் கொண்ட கதையும் அவரின் வசனங்களும் அருமை...  ஒரு வீட்டின் மாடிப்படியும் பூட்டிய அறையும்தான் கதையின் களம்... அங்கு நின்றே அனைவரும் நடித்து விடுகிறார்கள்... கேமரா வேறு எங்கும் நகரவில்லை. படியில் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கிறது. முந்தைய படத்தோடு ஒப்பிடுகையில் சரவணன் அண்ணனிடம் இந்தப் படத்தில் நல்ல முன்னேற்றம் இயக்குநாய்...

'கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர்றவன்டா' என்றபடி வரும் மொட்டை முருகேசன், நம்ம நண்பர் ஆரூர்.மூனா நடிப்பிலும் வசனத்திலும் கலக்கியிருக்கிறார். அலட்டலில்லாமல் குறிப்பாக கேமரா பயமின்றி நடித்திருக்கிறார். அவருக்கு கைத்தடியாக சரவணன் அண்ணன் அவர்களின் தம்பி அரவிந்த், குறைவாய் பேசினாலும் நிறைவாய்...

நண்பர் அரசனை ஒரு இடத்தில் அமர்ந்து பரிசுப்பெட்டியை பிரிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் அதைச் செவ்வனே செய்கிறார். இடையிடையே நக்கலான வசனங்கள். ஆரூர்.மூனாவைப் பற்றிச் சொல்லும் போது 'கட்சியோட போர்வாள்' என்று அரவிந்த் சொல்ல, 'ரொம்பத் துருப்பிடிச்சிருக்கே' என்று தன் கையில் இருக்கும் கத்தியைப் பார்த்துச் சொல்வார். இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறார். வார்த்தைகளைக் கடிப்பது போல் பேசுவதை இதிலும் தொடர்கிறார். அதுதான் ஸ்டைலா அரசன்?

துளசிதரன் சார்... வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுப் புலம்பும் சராசரி சென்னைவாசியாய்... மௌனவிரதம் இருக்கும் மனைவி சைகையால் நாளைக்கு இருக்கு உங்களுக்கு என்று சொன்னதும் இன்னைக்கி நீ இருந்த மாதிரி நாளைக்கு நான் இருந்துட்டுப் போறேன் என்று சொல்லி ரசிக்க வைக்கிறார்.

கார்த்திக் சரவணன்... சாவி தேடி மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என படிகளில் ஓடுகிறார்... பேப்பர் போடும் பையனாக வருவது ஆவியின் சகோதரர் என்று நினைக்கிறேன்... துறுதுறுவென பேசுகிறார். 

பாலகணேஷ் அண்ணன் போலீஸ் என்பதால் முறுக்கிய மீசையுடன் வருகிறார்... நம்ம மீசை முருகேசன் ஐயாவை நினைவூட்டுகிறார்... ஆரம்பத்தில் துளசி சாரிடம் வாங்க போங்க போட்டு, வா என்றழைத்து என்னய்யாவுக்கு வருகிறார்... ஒருவேளை போலீஸ் என்றால் இப்படித்தான் என்பதால் வசனத்தில் சரவண அண்ணன் இப்படி எழுதியிருப்பாரோ?

சரவண அண்ணனின் மகன் ஹர்ஷா, பல்ராம் நாயுடு கமல் போல் பேசுவது ரசிக்க வைத்தது.... நடிப்பில் பெரியவர்களைவிட சிறியவர்கள் அதிகம் ஸ்கோர் பண்ணி விடுகிறார்கள். அதிலும் நான் கொக்கிதான் போட்டேன்... எல்லாத்தையும் எம்மேல சொல்லாதீங்க என்று சொல்லும் சிறுவனின் கேமரா பயமில்லாத நடிப்புக்கு சபாஷ்.

ஒரு வார்த்தை கூட பேசாமல் கை. முக பாவனையால் பேசும் துளசி சாரின் மனைவியாக வரும் திருமதி.உஷா அவர்கள் இன்னும் முகபாவனை நன்றாக காட்டியிருக்கலாமே என்று தோன்றினாலும் தனக்கான கதாபாத்திரத்தில் நிறைவாய் செய்திருக்கிறார்.

இன்னும் இதில் நடித்த மற்றவர்களும் அவரவர் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள்.

ஆங்... பாருங்க முக்கியமான ஆளை விட்டாச்சு... நம்ம கோவை ஆவி... பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் எப்படி பேசுவனோ அப்படிப் பேசி அருமையாய் நடித்திருக்கிறார். ஆரூர் மூனா, துளசி சார் போல ஆவியும் கலக்கலாய் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் வரும் 'மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி' பாடல் நல்ல தேர்வு... அதேபோல் செல்போன் ரிங்டோனாக வரும் ரஜினிப் பட இசை இயக்குநர் தீவிர ரஜினி ரசிகர் என்பதை அறியாதவர்களுக்கு அறிவிக்கிறது.

என்ன நிறையாய் போறீங்க... உங்ககிட்ட நான் கேட்டது நிறைகளை மட்டுமல்ல... குறைகளையும்தான் என்று சரவணன் அண்ணன் கோபமாகப் பார்க்கலாம்... ஒரு மனிதனின் முயற்சியை நல்லாயிருக்கு என்று பாராட்டுவதே அழகு... அதில் குறை சொல்வது அழகல்ல என்று எங்கள் இருவருக்குமான அரட்டையில் பேசினோம். அப்போதே எனக்கு உங்கள் பார்வையில் குறைகளும் வேண்டும்... எதிர்பார்ப்பேன் என்று  கண்டிப்புடன் சொல்லிவிட்டார். அதனால் இனி குறைகள்... இந்தக் குறைகள் அவரின் அடுத்த ஆக்கத்தில் நிறைகளாகும் என்ற நம்பிக்கையில்...

ஆரூர்.மூனா, ஆவி, துளசி சார், சிறுவர்கள் தவிர மற்றவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத்தனம் இருக்கிறது. இந்தக் கருத்தை அவரின் சில நொடி சிநேகம் பார்த்த போதும் அவரிடம் சொல்லியிருந்தேன். இந்தப் படம் பண்ணும் முன்னும் நாங்கள் இருவரும் பேசினோம். இருந்தும் அந்த செயற்கைத்தனம் இதிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

வசன உச்சரிப்பு எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போல இருக்கிறது.... எழுதும் எழுத்துக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாம் யாரும் எழுதியது போல் பேசுவதில்லை... பேச்சு வழக்குத்தான் ஜெயிக்கும். 'என்ன இருக்கு..?' என்று கேட்பதை 'இதுல என்னடா இருக்கு' என்று இழுத்தாற்போல் சாதாரணமாகக் கேட்டால் இன்னும் நல்லாயிருக்கும் இல்லையா..?.அந்த பேப்பர் போடுற பையன், ஆருர் மூனா என சிலர் பேச்சு வழக்கில் பேசுவது போல் எல்லோரும் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆரம்பத்தில் அறையைக் காட்டும் போது ஆடாத பூட்டு, அடுத்த முறை காட்டும் போது ஆடுவது கொஞ்சம் இடிக்கிறது. டீசரில் அறையைப் பார்க்கும் போது இருந்த 'பக்' இதில் 'பக்', 'பக்' என்று இருந்திருக்க வேண்டாமா..?

ஒரு பார்சலை படம் ஆரம்பிக்கும் போது பெற்று முடியும்வரை பிரிப்பது என்பது ஏற்புடையாதாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதாவது முயற்சித் திருக்கலாம்...

இறுதிக் காட்சியில் கோவை ஆவி சொல்லும் காரணம் சப்பென்று இருக்கிறது. 

நிறைய கதாபாத்திரங்கள்... கொஞ்சம் கொஞ்சம் நடித்துச் செல்வது அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே தோன்றுகிறது. குறைவான கதாபாத்திரங்களை வைத்து இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.

சரி... அண்ணன் கேட்டதற்காக மனசில்பட்டதைச் சொல்லியாச்சு....

இனி நாம பேசலாம்... சில நொடி சிநேகம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதைவிட சரியான முறையில் அதை பார்வையாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதை சரவணன் அண்ணனும் நானும் பலமுறை பேசியிருக்கிறோம். அதனால் இந்தப் படத்தை எல்லோரிடமும் பரவலாய்க் கொண்டு செல்லவேண்டும் என்பதே அண்ணனிடம் நான் கேட்டுக் கொண்டது. சில விஷயங்களைத் தவிர்த்து விட்டு பார்த்தோமேயானால் இயக்குநராய் சரவணன் அண்ணன் சிறப்பாய் செய்திருப்பதோடு வசனங்களில் ஆட்சி செய்கிறார். அதில் என்னைக் கவர்ந்த சில வசனங்கள்...

"தெரியலைன்னு சொல்லக்கூடாது திங்க் பண்ணனும்..."

"எதுக்கு திங்க் பண்ணனும்... ? பிரிச்சிப் பாத்தா தெரியப்போகுது..."

***

"என்ன கிண்டலா கட்சியோட போர்வாள் தெரியும்ல..."

"ரொம்பத் துருப் பிடிச்ச மாதிரி இருக்கே..."

***

"உன் வணக்கத்தைப் போயி குப்பையில போடு"

"இதுக்கு நீ குப்பைத் தொட்டிக்கே வணக்கம் வச்சிருக்கலாம்.."

***

"கதவை நீதானே பூட்டினே..."

"உண்மையைச் சொல்லவா... பொய் சொல்லவா...?"

"நடந்ததைச் சொல்லு..."

"நடக்கப் போறதைப் பாரு...."

***

"நீதான் கதவைப் பூட்டுனியாடா..."

"இல்லை இல்லை... எல்லாப் பழியையும் என் மேல போடாதீங்க... நான் ஒன்லி தாப்பாள் மட்டுந்தான் போட்டேன்... தப்பிச்சேன்டா..."

***

இப்படி இன்னும் சொல்லலாம்... வசனகர்த்தாவாக இயக்குநராக சரவணன் அண்ணனிடம் நல்ல முன்னேற்றம்... படத்துக்கு இசை நல்லாயிருக்கு... பெரும்பாலும் முகநூலில் வரும் கருத்துக்களில் கூட நடிப்பைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது. பரவாயில்லை... நண்பர்கள் அனைவரும் கேமராவுக்கு புதியவர்கள்... பயம் இருக்கத்தான் செய்யும்... பாலகணேஷ் அண்ணா முறுக்கு மீசைக்கு ஏற்றவாறு புகுந்து விளையாடியிருக்கலாமே..? ஆரூர் மூனா அதிரடியாய்... ஆவி அடக்கி வாசித்தாலும் அமர்க்களமாய்... துளசி சார் கவலைப்பட்டாலும் கலக்கலாய்... சிக்ஸரடித்திருக்கும் போது முறுக்கு மீசை போலீஸ் அந்த சிக்ஸரை ஹெலிகாப்டர் ஷாட்டாக மாற்றி கிரவுண்டுக்கு வெளியே அனுப்பி நம்ம தலயின்னு கைதட்ட வச்சிருக்க வேண்டாமா? 

முகத்தில் நடிப்பை கொண்டு வருவது என்பது மிகப்பெரிய நடிகர்களுக்கே சவால்... அப்படியிருக்க நம் நண்பர்கள் வளர்ந்து வருபவர்கள்தானே... விரைவில் மெருகேறுவார்கள்... வசனங்களை வாசிப்பதாய் இல்லாமல் சாதாரணமாக பேசியிருந்தால் முகபாவனைகளை யாரும் அதிகம் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

தலைப்பில் அகம் புறம் அசத்தலான்னு வச்சிட்டு ஒண்ணுமே சொல்லலைன்னு பாக்குறீங்களா...? இருங்க... இது சில நொடி சிநேகம் கதையைவிட சாதாரண நகைச்சுவைக் கதைதான் என்றாலும் திரில்லர் மிக்ஸ்... ரசிக்க வைக்கும் வசனங்கள்... முடிவை அறியும் வரை எழும் ஆவல்... என எல்லாமே அருமையாய்.... படத்தின் குறைகளை மனதில் கொள்ளாது பாருங்கள்... கண்டிப்பாக உங்களுக்குப் படம் பிடிக்கும்... அசத்தலான ஒரு எழுத்தாளரின் ஆளுமையைக் காண்பீர்கள்... ரசிப்பீர்கள்...



சரிங்க... மறக்காம உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்... அவரின் பாதையை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரின் பார்வையும் முக்கியம்...

அடுத்தடுத்த குறும்படங்களின் மூலம் குறும்பட இயக்குநராய் ஜொலிக்கும் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அண்ணன் தனது கனவான வெள்ளித் திரையிலும் விரைவில் இயக்குநாய் ஜொலிக்க வாழ்த்துவோம்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்?

முன்கதை
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். தனது விசாரணையைத் தொடர்கிறார்.

பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

பகுதி -2 படிக்க கொலையாளி யார்?

பகுதி -3 படிக்க கொலையாளி யார்?


"நா...நா... ன் மட்டுந்தான்..." அவனுக்கு வியர்த்தது.

"பொய் சொன்னே கொன்னேபுடுவேன்... உன்னோட யார் இருந்தா...?"

"ச...சத்தியமா.... யா... யா...ரு...மே இல்லை சார்... " அவனுக்கு போதை சுத்தமாக இறங்கியிருந்தது.

"உனக்கு குடும்பம் இருக்கா?"

"இ... இருக்கு சார்..."

"ம்... எங்கே ஊட்டியிலதானா?"

"இல்ல மதுரைக்குப் பக்கம்..."

"இங்கேதான் இருப்பியா... ஊருகுப் போவியா...?"

"மூணு மாசத்துக்கு ஒருக்கா போவேன்..."

"சரி... எப்ப பிளான் பண்ணுனே... இதை எத்தனை பேர் சேர்ந்து பண்ணுனீங்க?" சுகுமாரன் மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.

"என்ன சார்.... திரும்பத் திரும்ப நாந்தான் கொன்னேன்னே பேசுறீங்க... எனக்கு படியளந்த தெய்வத்தைக் கொல்லுவேனா? பாண்டியய்யா மேல சத்தியமா 

எனக்கு காலையில லதாப்பொண்ணு கத்தும்போதுதான் கொலை நடந்ததே தெரியும்..."

"சரி... நீ செய்யலை... ஒத்துக்கிறேன்.... ஆனா நீ இதுல சம்பந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சா மவனே அப்பவே உன்னை எண்கவுன்டர்ல போட்டுடுவேன்.... 

பாத்துக்க..."

"..." பேசாமல் எச்சில் விழுங்கினான். அப்போது ஒரு இளைஞனும் யுவதியும் கான்ஸ்டபிள் ஆறுமுகத்துடன் உள்ளே வந்தார்கள்.

"நீ ஓரமா நில்லு..." என ரெத்தினத்தை ஓரங்கட்டியவர், அவர்களை "உக்காருங்க" என்று சொல்லி தானும் சீட்டில் அமர்ந்தார்.

"இன்ஸ்பெக்டர் ஐ ஆம் வருண், இது என்னோட சிஸ்டர் தர்ஷிகா" என்றபடி அவரிடம் கை நீட்டிய அந்த இளைஞன், ரெத்தினத்தினத்தைப் பார்த்து "என்ன 

ரெத்தினண்ணே... நீங்கள்லாம் இருந்து இப்படி..." என்றான் கலங்கிய கண்களோடு.


"தம்பி... இப்படி நடக்கும்ன்னு நினைக்கலையே..." கண் கலங்கியபடி முன்னே வந்தவன் சுகுமாரனின் முறைக்கு சற்று ஒதுங்கி நின்றான்.

"உக்காருங்க... " என்று சொல்லியபடி தனது இருக்கையில் அமர்ந்த சுகுமாரன் இருவரையும் நன்றாகப் பார்த்தார். வருண் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் 

போல இருந்தான்... ஆனால் நல்ல சிகப்பு.  தர்ஷிகா பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருந்தாள். உடம்பை நயன்தாரா போல் சிக்கென்று வைத்திருந்தாள். 

அவள் மீதிருந்த கண்களை வேறு இடம் மாற்ற சிரமப்பட்டார். நான் இராமநாதபுரத்துக்காரியாக்கும் என புவனா கண்ணில் வந்து மறைய மீண்டும் வருண் 

பக்கம் பார்வையைத் திருப்பினார். 

"ம்... சொல்லுங்க வருண்... அப்பாவுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?"

"எதிரிங்கன்னு யாரும் இல்லை சார்... எல்லாருக்குமே நல்லதுதான் செய்வார்... எப்படி... இப்படின்னு..."

"எதாவது பிஸினஸ் மோட்டிவ்.."

"சான்ஸே இல்லை சார்.. அப்பாவோட பிஸினஸ்ல பார்ட்னர்ஸ் யாரும் இல்லை... எல்லாமே இண்டிவிச்சுவல் பிஸினஸ்தான்..."

"சொத்துக்காக..?"

"அப்பாவோட பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லாம் இவரை விட வசதியானவங்க.. சொத்துக்காக கொல்ல வேண்டிய அவசியமில்லை." 

"சரி... அம்மா சைடுல..?" என்றபடி  தர்ஷிகவைப் பார்த்தார். அவளோ கன்னத்தில் வழிந்த கண்ணீரை கர்ச்சிபால் துடைத்துக் கொண்டு படபடப்போடு அமர்ந்திருந்தாள்.

வருண் மௌனமாக அமர்ந்திருக்க, "என்ன அம்மா இறந்துட்டாங்களா? சாரி வருண்" என்றார்.

"இல்ல சார்.... அவங்க இருக்காங்க..."

"இல்லைன்னு கேள்விப்பட்டேன்..."

"எங்க கூட இல்லை... அவங்க கூட டச்சும் இல்லை... சொல்லப்போனா அவங்களை நாங்க மறந்துட்டோம்..." என்றவன் அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்தான்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மனசின் பக்கம் : அகமும் புறமும்

லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவும் அமைந்துவிட்டதென பகிர்வுகள் பார்க்க நேர்ந்தது. பணத்தைப் புரட்டி விடலாம் என்ற நம்பிக்கை புதுகை நண்பர்களிடம் இருக்கிறது. இருப்பினும் வலைப்பதிவர் கையேட்டினை பணம் கொடுத்து வாங்கி உதவுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதை நாம் செய்யலாமே... பற்றாக்குறை முழுவதையும் நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும் கையேட்டை பணம் கொடுத்துப் பெறுவதால் நண்பர்களின் சுமையை நம்மால் முடிந்த அளவு குறைக்கலாம் அல்லவா? சிறப்பாக நடத்தியவர்களுக்கு பணப் பற்றாக்குறையை ஈடு செய்யவது என்பது பெரிய விஷயமில்லை... இருந்தாலும் நம் குடும்ப விழா நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம் அல்லவா? செய்வோம் என்ற நம்பிகையோடு மிகச் சிறப்பாக விழா நடத்திய புதுகை நண்பர்களை வாழ்த்துவோம்.


*
லைப்பதிவர் கையேட்டில் வாசிக்க வேண்டிய பதிவர்கள் என பிரித்துப் போட்டிருப்பதாக ஐயா ஒருவர் பதிவில் தெரிவித்திருந்தார். அது ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. நான் கையேடும் பார்க்கவில்லை. ஒருவேளை பதிவுலகம் வரும் புதியவர்கள் வலைத்தளம் அமைப்பது எப்படி என்ற தொழில் நுட்பங்களைப் தனபாலன் அண்ணா, நண்பர் தங்கம் பழனி உள்ளிட்ட பதிவர்களின் பதிவுகளைப் படிப்பதன் மூலம் அறியலாம் என்று போட்டிருக்கிறார்களா... அல்லது இவர்களின் எழுத்துக்கள்தான் பிரபலமானவை என்று போட்டிருக்கிறார்களா... என்பது தெரியவில்லை. விவரம் தெரியாமல் எதையும் பேசக் கூடாது... ஐயாவும் விவரமாக எழுதவில்லை. என்ன இருந்தாலும் இது நம் வீட்டு விழா... எந்த விழா என்றாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும்...  பார்த்துப் பார்த்துச் செய்யும் சின்னச் சின்ன வீட்டு விசேசங்களில் கூட குறைகள் வரத்தான் செய்யும். எல்லாம் நிறைவாய்... எல்லாருடைய மனசுக்கும் நிறைவாய் செய்வதென்பது கடினமான ஒன்று. குறைகளைக் களைந்து நிறைகளைப் பகிர்வோம். அப்புறம் கவிதைகள் எழுதி படங்களுடன் அழகாய் காட்சிக்கு வைத்திருந்தார்கள்... நம்ம கவிதை எல்லாம் அதில் இருந்ததா என்று தெரியவில்லை... போன நண்பர்கள் யாரும் இதுவரை சொல்லவில்லை... அப்படியென்றால் இல்லை என்றுதானே அர்த்தம்... சரி யார் யார் கவிதைகள் அதில் இடம் பெற்றன என ஒரு பகிர்வை முத்து நிலவன் ஐயா பகிர்ந்தால் நல்லா இருக்கும்... செய்வீர்களா?
*
லைப்பதிவர் மாநாட்டில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் நடத்திய போட்டிகளுக்கு வந்த கட்டுரைகள், கவிதைகளில் பரிசு பெற்றவையுடன் நல்லா எழுதியிருக்கிறார்கள் என்ற நிலையில் உள்ளவற்றைத் தொகுத்து மின்னூலாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். வரவேற்கத்தக்க செய்தி... வாழ்த்துக்கள்.  எனது கட்டுரையை மின்னூலாக்கலாம் என்று  எழுத்தாளரின் ஒப்புதல் மின்னஞ்சல் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். இதில் மின்னூலாக்க இருக்கும் கட்டுரைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெறலாம் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் அனைவருக்கும் மின்னூலாக்கும் ஆசை இருக்கும்... எல்லோரும் ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்புவோம். கவிதைப் பகிர்வைப் போல் என்னுடையது ஆகவில்லை... உன்னுடையது ஆகவில்லை... என்ற மன வருத்தங்கள் வரலாம். எனவே முதலில் தேர்வு செய்து எழுதிய நண்பர்களிடம் கேட்கலாம்... அவர்கள் வேண்டாம் என்றால் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். இதை முத்து நிலவன் ஐயாவும் நம் புதுகை நண்பர்களும்தான் செய்ய வேண்டும். 

*
ங்கள் கதைகள் அழ வைக்கின்றன என்று அன்பு ஐயா செல்வராஜூ அவர்கள் சொன்னார்கள் என்று முன்பே எழுதியிருந்தேன்... அதே வேளையில் சினிமா விமர்சனம் எல்லாம் எழுதுறீங்க... அது எதற்கு குறைத்துக் கொள்ளலாமே என்றும் சொன்னார். உண்மைதான் இதை ஐயா சொல்லும் முன்னே என் நண்பன் தமிழ்க்காதலும் போனில் பேசும்போது திட்டியிருக்கிறான்... ரொம்ப அன்பாக ஆரம்பித்து (மூதேவி அன்புதானேங்க) நல்லா எழுதுறே... அதே வழியில போடான்னு சொன்னா எதுக்கு சினிமாப் பின்னாடி போறேன்னு மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்டு அடிக்கடி திட்டுவான்... திட்டுறான்... திட்டுகிறான்... இனி சினிமா விமர்சனங்களைக் குறைக்கலாம்... இருந்தாலும் அப்ப அப்ப நம்ம தளம் இருக்குன்னு எல்லாருக்கும் காட்டுறதே சினிமாப் பகிர்வுகள்தான்... ஏன்னா கதை, கவிதை, கட்டுரைகளுக்கு எல்லாம் இங்கு ஒரு சிலரைத் தவிர பலருடைய பகிர்வுகளுக்கு நல்ல மார்க்கெட்டிங் இல்லை என்பதே உண்மை... சிறுகதை பகிர்ந்தால் 100 பேர் பார்த்தால் சினிமா என்றால் 1000 பேர் வாசிக்கிறார்கள். எனவே சோற்றில் ஊறுகாய் போல அப்ப அப்ப நாமும் வலையில் நிலைத்து நிற்க இதையும் செய்ய வேண்டித்தான் இருக்கிறது. இந்த மனநிலை தவறு என கில்லர்ஜி அண்ணா சண்டைக்கு வரலாம்... ஏனென்றால் அவருக்கு சினிமா பிடிக்காது. இருந்தாலும் இதுதான் இன்றைய பதிவுலகின் நிதர்சனம்.... இல்லையேல் நமக்கென ஒரு பெரிய குழுவைக் கட்டிக் காக்க வேண்டும்... அப்போதுதான் பிரபலமாகலாம். அதற்கெல்லாம் நாமும் அதிகம் பேருக்கு கருத்துக்கள் இட வேண்டும். அதைச் செய்ய முடியாத சூழல்... எழுதுவதும் கருத்துக்கள் இடுவதும் அவரவர் விருப்பமே... ஆனால் இங்கும் பதிவு அரசியல் தலைவிரித்து ஆடுகிறது என்பதே உண்மை... எழுத்தால் சிலர் முன்னேறி வரும் போது அவன் எப்படி முன்னே போகலாம் என்ற சண்டைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படியோ அடுத்தவருக்காக இல்லை என்றாலும் நம் மன திருப்திக்காக முடியும் வரை எழுதுவோம்.

*
ள்ளி மாறுவேடப் போட்டியில் பாரதி வேடம் அணிந்து 'அச்சமில்லை... அச்சமில்லை' என மழலைக்குரலில் உரக்கச் சொன்ன விஷாலுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அவனை கொஞ்ச நேரம் மேய்க்க முடியவில்லை... அதிகம் பேசுகிறான் என்று சொன்னாலும் கண்டித்து அடக்கி வைப்பதைவிட அவன் போக்கில் விட்டால்தான் இன்னும் சிறப்பாக வளருவான் என்று நினைக்கிறேன்... அப்படியே வளரட்டும் பேச்சாளனாக மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நிழல் தரும் ஆல மரமாக...

*
ந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின்,கங்குலி, டிராவிட்டுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த வீரர் என்றால் அது சேவாக்தான்... எதற்கும் பயப்படாத மிகவும் துணிச்சலான வீரர்... மைதானத்தில் நின்றால் மிக லாவகமாக அடிக்கடி நான்கும் ஆறும் விளாசி ரசிகர்களை மகிழ்விக்கும் வீரர்... மைதானத்தில் நிதானமாக விளையாடு என்று யாராலும் கட்டுப்படுத்த முடியாத வீரர்.... சச்சின் கூட ஐம்பது அடிக்க போகிறார் என்றால் நாற்பதில் வேகத்தடை வரும்... பின்னர் பந்துகள் கடக்கும் ரன் ஒன்றிரண்டாகும்... அதே போல்தான் சதம் அடிக்கப் போகிறார் என்றால் தொன்னூறில் வேகத்தடை வரும்... சாதித்த வீரர் என்பதைவிட தன் சாதனைகளை செதுக்கிக் கொண்ட வீரர் என்றே சொல்லலாம்... ஆனால் சேவாக் நான் விளையாடுவது நாட்டிற்காக... எனது தனிப்பட்ட சாதனைகளுக்காக அல்ல என்று விளையாண்டவர்... நான்கு, ஆறு அடித்து போட்ட ஐம்பதுகளும் நூறும்தான் அதிகம்... முன்னூறுக்கும் இருநூறுக்கும் சொந்தக்காரர்.... அந்த ரன்கள் கூட சாதனைக்காக காத்திருந்து வரவில்லை என்பதை போட்டிகளைப் பார்த்த அனைவரும் அறிவார்கள். 


இப்போது விளையாண்டால் முதலவதாய் களமிறங்கி என்னால் ஆட முடியாது என்றும் அன்று நான் ஆட்டமிழந்தாலும் பின்னணி வீரர்கள் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது அடித்து ஆடினேன். இன்று இந்திய அணியில் நடுவரிசை மிகவும் மோசமாக இருக்கிறது அதனால் என்னால் அப்படியெல்லாம் ஆட முடியாது என்று உண்மையை உரக்கச் சொல்லி தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.... சேவாக் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெயர்... வாழ்த்துக்கள் சேவாக்... இவரைப் போல் யார்க்கர் மன்னன் ஷாகீர் கானும் ஓய்வை அறிவித்திருக்கிறார்... இந்தியப் பந்து வீச்சாளர்களில் துல்லியமாக ஸ்டெம்பைக் கலக்கிய பந்து வீச்சாளர் இவர். இவரையும் வாழ்த்துவோம்... இந்திய கிரிக்கெட் சங்கம் வீரர்களை வழியனுப்புவதில் இன்னும் திருந்தவில்லை... மற்ற நாடுகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும். இதே சங்கம்தான் சச்சினுக்காக இந்தியாவில் போட்டியை அமைத்து வழி அனுப்பி வைத்தது... மற்றவர்களை கேவலப்படுத்தித்தான் அனுப்புகிறது.... இதுதான் நாளை தோணிக்கும்தான்... ஏனென்றால் இப்போதே தோணியை வெளியாக்கும் முயற்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன என்பதை நாடே அறியும்.
*

சென்ற வாரத்தில் சில மலையாளப் படங்கள் பார்த்தேன்... அதில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படமும்... கிளைமேக்ஸ் காட்சியில் வேண்டுமானால் சினிமாத்தனம் இருக்கலாம்... ஆனால் படம் மிகவும் அருமை... அருமையான கதைக்களம்... நல்ல படம். தமிழில் எடுக்க இருப்பதாக செய்தி படித்தேன். இன்னும் SHE TAXI, ஒரு வடக்கன் செல்பி, நீ-நா போன்ற படங்களும் பார்த்தேன்... ஒரு வடக்கன் செல்பி கொஞ்சம் நல்லாப் போச்சு. எனக்கு நிவின் பாலியை ரொம்பப் பிடிக்கும்.. ஒரு எதார்த்த நடிகன்... வடக்கன் செல்பியிலும் நல்லா நடிச்சிருக்கார்... படமும் சென்னை, பழனி, தஞ்சாவூர் என பயணிப்பதால் தமிழ் வாடை அதிகம் இருக்கு...   போதைப் பழக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணமான அவளின் மேனேஜர் மற்றும் அவரின் மனைவிக்கும் இடையில் நடக்கும் கதைதான் நீ-நா.... நீனாவாக தீப்தியும் நளினியாக ஆன் அகஸ்டினும்... அருமையாக நடித்திருக்கிறார்கள்... படமும் பார்க்கலாம்... கொஞ்சம் பொறுமை வேணும்... புத்த பிட்சுக்கள், கோடி மதிப்புள்ள ஓவியங்கள், அதை அபகரிக்க கிளம்பும் வில்லன்கள் என பரபரப்பான கதைக்களமாக அமைத்து டாக்ஸி ஓட்டும் பெண், அவளது பயணம், கொள்ளை அடிக்கத் திட்டமிடும் நாயகனும் அவனது நண்பர்களும் அவர்களின் பயணம் நகைச்சுவையாய் மாற்றி  இறுதியில் ஓவியங்களை யார் எடுத்தார்கள் என்று முடிக்கிறது SHE TAXI. ரொம்ப நல்லாவெல்லாம் இல்லை... பொழுது போகலைன்னா பாக்கலாம்.

*

ல்லாரும் சிவகார்த்திகேயனை தலையில் வைத்து ஆடும்போது நான் விரும்பும் நடிகன் விஜய் சேதுபதி... கொஞ்ச நாளாகவே நட்புக்காக நடிக்கிறேன்... பாசத்துக்காக நடிக்கிறேன்... என தன் பாதையை மாற்றி தனது இடத்தை இழந்து கொண்டிருப்பதைக் கண்டு வருத்தமாக இருந்தது. ஒண்ணுமே இல்லாமல் ரஜினி இடத்தைப் பிடிக்கிறேன் என மற்றவர்கள் முன்னே போய்க் கொண்டிருக்க, திறமை இருந்தும் எதற்காக இவர் பின்னோக்கி போகிறார் என்று எண்ணியிருக்கிறேன். தன்னோட இடத்தை தக்க வைத்துக் கொள்ள மிகவும் அருமையான வாய்ப்பை வழங்கியிருக்கிறது நானும் ரவுடிதான்... கடைசி வரைக்கும் நகைச்சுவையோடு பயணிக்கும் படக்கதையில்... விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் என சொல்லி அதகளம் பண்ணுகிறார். நயன்தாரா சொல்லவே வேண்டாம்.... நாயகனைவிட இவருக்குத்தான் விசில் பறக்கிறது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். காது கேட்காத பெண்ணாக... கலக்கியிருக்கிறார்... ராதிகா, வில்லன் பார்த்திபன், நண்பராக வரும் ஆர்.ஜே. பாலாஜி, அட பயங்கர வில்லனாகப் பார்த்த ஆனந்தராஜ் சூப்பர் காமெடியானாக என ஆளாளுக்கு சிக்ஸர் அடிக்கிறார்கள். படம் பக்கா.... கமல், அஜீத், தனுஷ் என்ற எனக்குப் பிடித்த நாயகர்கள் வரிசையில் விஜய் சேதுபதியும்.... நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் இன்னும் சிறப்பான இடத்தை அடையலாம்... செய்ய வேண்டும்.

*
கல் - பிரதிலிபி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்கு புத்தகங்கள் பரிசாக கிடைத்திருக்கின்றன. போட்டியை நடத்திய இரண்டு இணையத்துக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்... பாக்யா மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிடும் எஸ்.எஸ். பூங்கதிர் சாருக்கும் பாக்யா இதழ் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்... குடந்தையூர் சரவணன் அண்ணனின் இரண்டாவது குறும்படமான அகம் புறம் குறித்த போட்டோக்களும் செய்திகளும் முகநூலிலும் அவரின் குடந்தையூர் தளத்திலும் சில நாட்களாக பதியப்படுகின்றன. படத்தின் டீசரும் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.  வெற்றி பெற வாழ்த்துவோம். அகம் புறம் குறும்பட டீசர் கீழே...




மனசின் பக்கம் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

புதன், 21 அக்டோபர், 2015

குறுந்தொடர்: பகுதி - 5. கொலையாளி யார்?

முன்கதை

தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். லதா, டாக்டர் சிவராமன் என விசாரணையை நடத்திவிட்டு பாடியை போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பி விட்டு கிளம்புகிறார்.

பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

பகுதி -2 படிக்க கொலையாளி யார்?

பகுதி -3 படிக்க கொலையாளி யார்?


பொன்பலத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டு மதியத்துமேல்தான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார் சுகுமாரன். அதற்கு இடையே டி.எஸ்.பி வேறு போன் செய்து 'என்னாச்சு...? எதுவும் தடயம் கிடைத்தாதா...?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு இருக்க டென்சனை இன்னும் அதிகமாக்கிவிட அதை வந்ததும் வராததுமாக ஸ்டேசனில் இருந்த கான்ஸ்டபிளிடம் காண்பித்து விட்டு அவர் வாங்கிக் கொண்டு வந்த டீயைக் குடித்தபடி யோசிக்கலானார்.

'எந்த ஒரு கொலை என்றாலும்  ஏதாவது ஒரு தடயம் கிடைத்து விடும். அதை வைத்து நூல் பிடித்தாற்போலச் சென்றால் எப்படியும் கொலையாளியைப் பிடித்து விடலாம். ஆனால் இந்தக் கொலையில் எல்லாம் கிளீன்... ஒரு தடயமும் கிடைக்கவில்லை. தடயம் இல்லாமல் எந்தப் பொறியை வைத்து கொலையாளியைப் பிடிப்பது... ஒரு தடயமும் விடாமல் மிகவும் துல்லியமாக கொலை செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட திறமைசாலியாக இருக்கணும்... எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது..? ' அவரின் யோசனையைக் கலைத்தது செல்போன்.

"என்ன மாமா... சொல்லுங்க?" என்றவர் "என்னது இந்த வாரமா? சான்ஸே இல்லை... இங்க ஒரு கொலை... செத்தது பெரிய பிஸினஸ்மேன்... கொலை நடந்து இன்னும் முழுசா ஒருநாள் கூட முடியலை... அதுக்குள்ள டி.எஸ்.பி. கூப்பிட்டு காட்டுக் கத்தாக் கத்துறாரு... ஆளு கொஞ்சம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்ன்னு தோணுது... மேலிடத்துப் பிரஷர் வேற... எங்கிட்டும் நகர முடியாது... கொலைக்கான மோட்டிவ் என்ன..? கொலையாளி யார்...?  அப்படின்னு கண்டுபிடிக்காம எனக்கு ஊருக்கெல்லாம் வர நேரமே இல்லை... முடிஞ்சா புவியை அனுப்பி வைக்கிறேன்... சாரி மாமா..." என்றவர் எதிர்முனை சொல்லியதைக் கேட்டுவிட்டு "ஓகே அப்புறம் கூப்பிடுறேன்..." என்று கட் செய்தார்.

'எங்கிருந்து ஆரம்பிப்பது...? பேசாமல் டிடெக்டிவ் முருகனை இதுல இறக்கலாமா..?' என்று யோசித்தவர்  ஒரு பேப்பரில் வட்டமிட்டு அதில் வலம் இடம் மேலிருந்து கீழ் என கோடு போட்டு நாலாகப் பிரித்தார்.  லதா, டாக்டர், வாட்ச் மேன் என ஒவ்வொரு  பெயராக எழுதினார். மீதமிருந்த கால் பகுதியில் கேள்விக்குறி போட்டு வைத்தார். அதையே ரொம்ப நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 'இந்தக் கொலைக்கும் இவர்கள் மூவருக்கும் சம்பந்தம் இருக்குமா? இவர்கள் இல்லையென்றால் நாலாவதாக கேள்விக்குறிக்குள் மறைந்து நிற்கும் அந்த நபர் யார்? உறவா... பழக்கமா... பகையா... அல்லது காசுக்காக கொலையா?' என மண்டையைப் போட்டுக் குடைந்தார்.


'சமையக்காரி லதாவை சந்தேக வட்டத்துக்குள் வைக்க முடியலை... ஏன்னா அவளோட பதில்களும் பார்வையும் அவளை வெளியில் நிறுத்தச் சொன்னது. அடுத்தது டாக்டர்... ஆனா சமூகத்துல அந்தஸ்தோட இருக்க அவரு  எதுக்காக இதைச் செய்யணுமின்னு யோசிக்க வேண்டியிருக்கு... இருந்தாலும் ஒரு கண் வைப்பது நல்லது...  மூணாவதாக வாட்ச் மேன்... இவனுக்கு தெரியாம அங்க யாரும் வந்திருக்க முடியாது.. பொன்னம்பலம் சொன்னதைக் கேட்டு ஏன் இவனை விசாரிக்காமல் வந்தேன்... டாக்டர் வரவும் இவனை மறந்துட்டேனா...? அப்ப இதுல முக்கியமான ஆள் இவன்தானா? இவனை விசாரித்தால் முட்டிக் கொண்டு நிற்கும் விசாரணைக்கு ஒரு வழி கிடைக்குமா...? என்று யோசித்தபடி அவனின் பெயரை சிகப்பு இங்கினால் வட்டமிட்டார்.

செல்போனை எடுத்து பொன்னம்பலத்தைக் கூப்பிட்டார். 

"சார்... சொல்லுங்க சார்..." எதிர்முனையில் பொன்னம்பலம் மரியாதையோடு பேசினார்.

"என்ன எல்லாம் முடிஞ்சதா?"

"இன்னைக்கி போஸ்ட் மார்டம் பண்ணி ஈவ்னிங் ரிசல்ட் தர்றேன்னு சொல்லிட்டாங்க... கைரேகை ரிப்போர்ட்டும் ஈவ்னிங் வந்திரும் சார்..."

"அவரு பசங்க வந்தாச்சா..?"

"வந்தா ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு வரச்சொல்லி கான்ஸ்டபிள்க்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன் சார்... எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திருவாங்க சார்..."

"சரி... சரி... இப்ப நீங்க அங்கே இல்லையா...? எங்க இருக்கீங்க...?"

"ஹாஸ்பிடல் வந்தேன் சார்... டாக்டரிடம் பேசினேன்..."

"ஓ.... அப்புறம் அந்த வாட்ச் மேன்....?" மெதுவாக இழுத்தார்.

"அவனுக்கு என்ன சார்..."

"இல்லை அவன விசாரிச்சா கொஞ்சம் கிளியராகும்ன்னு தோணுது..?"

"நான் விசாரிச்ச வரைக்கும் அவனுக்கு இதுல சம்பந்தம் இருக்க மாதிரி தெரியலை சார்... அவரோட பசங்க வரட்டுமே..."

"இல்லை ஒரு சந்தேகம்... விசாரிக்கலாமே.... நமக்கும் மூடியிருக்க கதவு திறக்குதான்னு பாக்கலாம்... ஏன்னா தீவிரமா விசாரித்தான் நம்மளால என்னங்கிறதை பாயிண்ட் அவுட் பண்ண முடியும்..."

"ம்..."

அப்ப நீங்க ஒண்ணு செய்யிங்க... அப்படியே ஸ்பாட்டுக்குப் போயி வாட்ச் மேனை கூட்டிக்கிட்டு வாங்க..."

"சரி...சார்... ஆனா என்ன மோட்டிவ்வால நடந்திருக்குங்கிற க்ளூ நமக்கு கிடைக்கவேயில்லையே சார்..."

"அதைக் கண்டுபிடிக்கத்தானே நாம இருக்கோம்... எப்படியும் பிடிக்கத்தானே போறோம்... என்ன ஆளு மதுரையில பெரிய பிஸ்னஸ்மேன்.... மேலிடத்துல இருந்து பிரஷர் வர ஆரம்பிச்சிருச்சு... டி.எஸ்.பி. வேற புடுங்க ஆரம்பிச்சிட்டாரு... அவருக்கென்ன தெரியும் நாமதானே அலையணும்... எனிவே... நீங்க வாட்ச்மேனோட வாங்க.... மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்"

"ஓகே சார்..."

"நீதான் ரெத்தினமா?" எதிரே ஒடிசலாய் நின்றவனைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.

"ஆ...ஆமா...சார்..."

"என்ன தண்ணி அடிச்சிருக்கியா?"

"ம்.... ஐயாவோட சாவைத் தாங்கமுடியலை சார்... அதான் கொஞ்சமா ஊத்திக்கிட்டேன்..." தலையைச் சொறிந்தான்.

"கவலைக்கும் தண்ணி... சந்தோஷத்துக்கும் தண்ணி... அப்படித்தானே...?"

ஒன்றும் பேசாமல் மீண்டும் தலையைச் சொறிந்தான்.

"ஆமா இது உண்மையிலேயே கவலையா... இல்லை சந்தோஷமா...?" நக்கலாய்க் கேட்டதும்  ரத்தினத்துக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது.

"சா... சார்... எங்கம்மா சத்தியமா புண்ணியவான் செத்துட்டாரேன்னு கவலைதான் சார்... எதுக்கு சார் நான் சந்தோஷப்படணும்..." கண்ணீரோடு கேட்டான்.

"சரி.. அழுது நடிக்காதே... இது சினிமா இல்லை.... அடிச்சி துவைச்சி காயப்போட்டுடுவேன்... கேக்குற கேள்விக்கு சரியான பதில் வரணும்... என்ன..?" பார்வையில் கோபத்தை வைத்து வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார்.

"ம்..." தலையை ஆட்டினான்.

"ஆமா... நீதான் ஐயாவுக்கு எல்லாமுமாமே?"

அவரின் கேள்வி புரியாமல் விழித்தான்.

"என்ன பாக்குறே... அவரு இங்க வர்றப்போ பொண்ணு, தண்ணி எல்லாத்தையும் நீதான் அரேஞ்ச் பண்ணுவியாமே..?"

"சார்... ஐயாவுக்கு பொண்ணுங்க பழக்கமெல்லாம் இல்லை.... அதே மாதிரி அவரு பாரின் சரக்குத்தான் அடிப்பாரு.. மொத்தமா வாங்கி வச்சிருப்பாரு...."

"உனக்கு கொடுப்பாரா?"

"எப்பவாச்சும் கொடுத்து அடிடாம்பாரு.."

"ம்.... நேத்து ராத்திரி யாரு வந்தாங்கன்னு தெரியுமா?"

"எப்பவும் வர்ற டாக்டர் சார் வரலை.... தனியாத்தான் இருந்தாரு.. லதாப்பொண்ணு போனதும் ஏழு மணி வாக்குல என்னைக் கூப்பிட்டு இருநூறு ரூபாய் கொடுத்து போயி எதாவது சாப்பிட்டு வந்து படுத்துத் தூங்குன்னு சொல்லிட்டு கதவை சாத்திக்கிட்டார்."

"எதுக்கு பணம் கொடுத்தாரு.. எப்பவும் கொடுப்பாரா?"

"சம்பளம் நல்லாக் கொடுப்பார்... எப்பவாச்சும் சந்தோஷமா இருந்தா காசு கொடுப்பார்.. நேத்து சந்தோஷமா இருந்தது மாதிரி தெரிஞ்சது...."

"அவரு சந்தோஷத்துக்கு என்ன காரணம்?"

"தெரியலை..."

"ம்... நீ போயி தண்ணி அடிச்சிட்டு வந்தே.. இல்லையா?"

"ஆமா... வந்து மெயின் கேட்டைப் பூட்டிட்டு முன்னால எரிஞ்ச லைட்டெல்லாம் அமத்திட்டு பின்னால என்னோட ரூம்ல போயி படுத்துட்டேன்..."

"நீ மட்டுமா இல்ல கொலைகாரங்களுமா?"

"நா...நா... ன் மட்டுந்தான்..." அவனுக்கு வியர்த்தது.

(தொடரும்...)
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 19 அக்டோபர், 2015

விரிவோடிய வாழ்க்கை (அகல் போட்டியில் புத்தகம் பரிசு பெற்ற கதை)

கல் மின்னிதழும் பிரதிலிபி இணைய தளமும் இணைந்து நடத்திய செய்தித் தாளில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து எழுதும் சிறுகதைப் போட்டியில் பணப்பரிசு பெறாவிட்டாலும் புத்தக்ங்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறது எனது இந்தச் சிறுகதை. மொத்தமாக வந்த கதைகளில் நடுவர்களின் பார்வையில் 6வது இடத்தைப் பிடித்து திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் புத்தகங்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறது.  ஒரு செய்தியை வைத்து கதை எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. எனக்கு அப்படியெல்லாம் எழுத வராது. என்னைப் பொறுத்தவரை கரு எல்லாம் யோசித்து வைத்து எழுதுவதில்லை. உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போதுதான் அடுத்தடுத்து என்ன என்பதாய் விரிந்து போகும். அப்படியே பழகிவிட்டேன் இருந்தும் முயற்சித்துப் பார்த்தேன். அதில் புத்தகங்களைப் வென்றிருக்கிறது என் கதை என்பதில் மிகுந்த சந்தோஷம்.

நன்றி அகல் மற்றும் பிரதிலிபி

***************
யலில் உரம் போட்டு விட்டு ரோட்டுக்கு வந்த கந்தசாமிக்கு உடம்பெல்லாம் அரிப்பது போல் இருக்க, 'கம்மாயில போயி மேல ஒரு அலசு அலசிட்டு வந்திடலாம்' என்ற நினைப்போடு கண்மாய் நோக்கி நடந்தார். காலையிலேயே வெயில் உக்கிரமாக இருந்தது. 'ஒரு மழ பேஞ்சா நல்லாயிருக்கும்... ம்... இப்ப போடுற மொட்ட வெயிலுக்கு மழ எங்க வரப்போகுது... மழ இல்லாட்டி கடைசி கட்டத்துல எரவா மரம் போட்டுத்தான் தண்ணி எறைக்கணும்... அதுக்குக்கூட ஆளு கிடைக்கிறது கஷ்டந்தான்... இன்னைக்கு வேலக்கி வர்றவனெல்லாம் ஐநூறைக் கொடு... எழனூறைக் கொடுன்னுல்ல கேக்குறானுங்க... தண்ணி எறைக்காம வெளயிற மாதிரி ஒரு மழ பெய்யணும்... பாப்போம்' என்ற சிந்தனையோடு கண்மாய்க்கரையை அடைந்தார்.

தலையில் இருந்த துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு போட்டிருந்த பனியன், கைலி எல்லாம் தண்ணீரில் நனைத்து துவைக்கிற கல்லின் மீது வைத்தார். உரம் எடுத்து வந்த பையையும் நனைந்து உரம் கலக்க எடுத்து வந்த வாளியில் தண்ணீர் பிடித்து அதற்குள் போட்டுவைத்தார். கரையோரத்தில் இருந்த புளியமரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கினார். தண்ணீருக்குள் நீர்க்காகங்கள் மூழ்கி மூழ்கி மீன்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தன. 'ம்.... வெளியிலுக்கு இதுக்குள்ளயே கிடக்கலாம்... அம்புட்டு சுகமா இருக்கும்...' என்று நினைத்தவர், சின்ன வயதில் கண்மாய்க்குள் மணிக்கணக்கில் கிடந்ததையும், நீருக்கு அடியில் மூழ்கி நிமிடக்கணக்கில் நீந்தியதையும், கடப்பாரை நீச்சல், மல்லாக்க நீச்சல் என நீச்சலில் பலவகையையும் செய்ததையும் நினைத்து பெருமூச்சை விட்டுக் கொண்டார். இப்போதெல்லாம் இடுப்பளவு தண்ணிக்குள்  அமர்ந்துதான் குளிக்கச் சொல்கிறது.

"என்ன பெரியப்பா? தண்ணியப் பாத்துக்கிட்டு யோசிக்கிறீங்க... உரம் போட்டுட்டு வந்தீகளா?" என்றபடி சோப்பை கல்லில் வைத்துவிட்டு வாயில் பிரஸூடன் கேட்டான் அவரின் தம்பி மகன் சேகர்.

"ஆமாடாம்பி.... களை நெறைய இருக்கு... அதான் கொஞ்சம் களைக்கொல்லி கலந்து தூவிட்டு வந்தேன்... சத்த தண்ணிக்குள்ள கெடந்த உடம்புல பட்டிருக்கிற உரமும், அரிப்பும் அடங்குமின்னுதான்  குளிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். தண்ணிக்குள்ள நீர்க்காக்கா நீந்துறதைப் பார்த்தும் சின்ன வயசுல இதுக்குள்ள நானு, உங்கப்பன், மேல வீட்டு கோவிந்தன், ஓட்டு வீட்டு வீரய்யான்னு எல்லாரும் இதுக்குள்ளதான் மணிக்கணக்குல கெடப்போம்ன்னு ஞாபகத்துல வர அப்படியே அதை நினைச்சிப் பார்த்தேன்... என்ன காலம் அது தெரியுமா? ம்... இனியா அது வரப்போகுது... இனி ஒவ்வொருத்தரா வேல முடிஞ்சிருச்சின்னு போக வேண்டியதுதான்.."

அவர் பேசுவதைக் கேட்ட சேகர் வாயில் இருந்த பேஸ்ட் நுரையைத் துப்பிவிட்டு "ஏம் பெரியப்பா... அதுக்குள்ள சாவைப் பத்தியெல்லாம் யோசிச்சிக்கிட்டு இன்னும் நிறைய நாள் நீங்கள்லாம் எங்க கூட இருப்பீங்க" என்றார்.

"அடப்போடா..." என்று சிரித்தவர் "இனிமே காடு வாவான்னு கூப்பிடுற வயசுதான்... நாளை எண்ணிக்கிட்டே இருக்கவேண்டியதுதானே?"

"அதுக்காக... அதெல்லாம் வரும்போது வரட்டும்.... ஆமா இந்தத் தடவை சொசைட்டியில உரங்கொடுப்பாங்களா?"

"முன்னாடியெல்லாம் உரம் கடனாக் கொடுத்துட்டு அப்புறம் அதையும் தள்ளுபடி பண்ணுவானுங்க... இப்ப உரம் மானியமாக் கொடுக்கிறேன்னு சொல்லுறானுங்க... எங்க செய்யிறானுங்க... அதுலயும் கொஞ்ச காசு நம்மாளுக பாக்கத்தான் செய்யிறானுங்க..."

"ஆமா... ஆமா... எல்லாத்துக்குமே இப்பெல்லாம் ஆளுக சப்போர்ட் வேணும்..."
"ம்... பிரசிடெண்ட் தம்பிக்கிட்ட கூட பேசிப் பாத்திருக்கோம்... அவரு எல்லாருக்கும் கொடுக்கணுமின்னு சொசைட்டியில கூப்பிட்டுச் சொல்லியிருக்காரு... பாப்போம் கிடைக்கிதான்னு..." என்றபடி தண்ணிக்குள் இறங்கி நீருக்குள் தலையை அமுக்கி எழுந்தார். சேகரும் தண்ணீருக்குள் இறங்கி அவரைத் தாண்டிச் சென்று நீச்சலடித்துத் திரும்பினான்.

"நம்ம எம்.எல்.ஏ. இங்கிட்டு வரவேயில்லையே....?"

"நம்ம எம்.எல்.ஏன்னு இல்ல எல்லா எம்.எல்.ஏவும் அப்படித்தான்.... தேர்தலப்போதான் அவனுக எல்லாம் வருவானுக... இப்ப அதுக்கும் வேலையில்லாமப் போச்சுல்ல.... காசைக் கொண்டாந்து கொடுத்துடுறானுங்க... இன்னைக்கித்தான் காசுக்காக எவன் நல்லவன் கெட்டவனெல்லாம் பாக்காம ஓட்டைப் போட்டுடுறோமுல்ல... எங்க காலமெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு... இனிப் போற காலம் இப்படித்தான்... நாமதான் திருந்தணும்... நாடா திருந்தாது"

"எங்கிட்டு திருந்துறது... காசுக்குதானே ஆசைப்படுறோம்...."

"ஆமா... ஆமா... இன்னைக்கி விவசாயம் எல்லாப் பக்கமும் செத்துக்கிட்டு வருது... இங்கிட்டே நம்ம சுத்துப்பட்டு கிராமங்கள்ல எத்தனை ஊர்ல விவசாயத்தை பாக்க முடியலைன்னு நிப்பாட்டிட்டானுங்க தெரியுமா... நம்ம பக்கம் வானம் பாத்த பூமி ஒரு வருசம் விளையும் ஒரு வருசம் விளையாது... இருந்தாலும் அதுல நாம வெதச்சிக்கிட்டுத்தானே இருக்கோம்... நம்மளோட ஆதாரமே விவசாயந்தானே... ஆனா அது இப்ப பட்டுப்போயிக் கெடக்கு... வடக்க விவசாயியெல்லாம் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகுறான்... அவனோட குடும்பமெல்லாம் தண்ணியில்லாம காஞ்சி விரிவோடிப் போன வயக்காடாட்டம் ஆயிப்போயிக் கெடக்கதை யாரு நினைச்சிப் பார்க்கிறோம்... சொல்லு..."

கந்தசாமி படிக்காதவர் என்றாலும் எல்லா விவரங்களையும் கை நுனியில் வைத்திருப்பார். டிவிச் செய்திகள், பேப்பர்கள், மற்றவர்கள் சொல்வது என எல்லாவற்றையும் நன்றாக தெரிந்து கொள்வார். அது குறித்து தீவிரமாக விசாரிப்பார்.

"ஆமா பெரியப்பா... நீங்க சொல்றது சரிதான்... நம்ம நாட்டோட முக்கியமான ஒண்ணு விவசாயம்... நாட்டோட உயிர்நாடியே இதுதான்... ம்... அரசுக்கு இது மேல எல்லாம் அக்கறை இல்லை... என்ன செய்வது?"

"நேத்துக்கூட ஒரு செய்தி பார்த்தேன்... நானா படேகர்ன்னு ஒரு இந்தி நடிகர், தற்கொலை செய்து கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துல முதக்கட்டமா அறுபத்திரெண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு அவரால முடிஞ்ச நிதி உதவி பண்ணியிருக்கார். விவசாயிகளே தற்கொலை பண்ணிக்காதீங்க... எங்கிட்ட வாங்கன்னு வேற சொல்லியிருக்காரு... தெரியுமா? எந்த அரசியல்வாதியும் இதப்பத்தி பேசலைங்கிறதுதான் வேதனையான விஷயம்... அரசியலுக்காக எதாச்சும் பேசுவானுங்க... அப்புறம் எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சிட்டு அவங்க வாழ்க்கையைப் பாப்பானுங்க..." என்றபடி இடுப்பளவு தண்ணீருக்குள் நின்று கொண்டு துண்டை அவிழ்த்து அலசி... உதறி... தலையைத் துவட்டி தண்ணீருக்குள் இடுப்புக்குள் கீழ் மேலே தெரியாதவாறு நகர்ந்து வந்து டக்கென எழுந்து துண்டை லாவகமாகச் சுற்றிக் கொண்டார்.

"ம்... நானும் படிச்சேன் பெரியப்பா... அப்புறம் நாங்கூட ஒரு குறும்படம் பார்த்தேன்... விவசாயி ஒருத்தனும் அவனோட செல்லப் பெண்ணும்... விவசாயம் பொய்த்துப் போக... அவன் வயலை வயலைப் பாத்துட்டு வாரான்... கையில கயறும் எடுத்துக்கிட்டுப் போவான்... அந்தப்புள்ள அப்பா வயலுக்கு போயி வருத்தப்படுறதை தினமும் ஸ்கூலுக்குப் போகும்போது பின்னாலயே போயி பார்த்து வருத்தப்படும்.. ஒருநா அப்பா தூக்கு மாட்டினாலும் மாட்டிக்கும்ன்னு கயரை எடுத்து ஒளிச்சி வச்சிடும்... ஆனா மறுநா அது காணாமப் போயிடும்.. " தண்ணீருக்குள் இருந்தபடி சொல்லிக் கொண்டே தலையை துவட்டிக் கொண்டிருந்தான் சேகர்.

“ம்.... அவன் செத்துப் போறானாக்கும்... அதுதானே இன்னைக்கி நிலமை...”

“இருங்க பெரியப்பா...” என்றவாறே கரைக்கு வந்தவன்... “புள்ளை அப்பா சாகத்தான் பொயிட்டானுன்னு வயலுக்கு ஓடி தேடுது... அப்ப அப்பன்காரன் கயிரை அரசமரத்துல போடுறான்... அப்பான்னு கத்திக்கிட்டு ஓடுது... அவன் மகளுக்கு அதுல ஊஞ்சல்தான் கட்டுறான்.... கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுகுது... விவசாயிகள் தற்கொலை பண்ணிக்காதீங்க... உங்களுக்கு குடும்பம் இருக்கு... அதுல உங்களை உயிரா நினைக்கிற குழந்தைங்க இருக்குன்னு சொல்ல வாரானுங்க... நல்ல கதை... எனக்கு கண் கலங்கிடுச்சு....” என்றபடி கைலியை கட்டிக் கொண்டு துண்டை அலசிப் பிழிந்தான்.

“அது ஒரு வலிடாம்பி... அந்த வலி இங்க யாருக்கும் தெரியலை...” என்றவாறு கல்லில் கிடந்த பனியன், கைலியை அலசிக் கொண்டே, " ம்... அந்த மனுசனுக்கு... அதுதான்டா நாஞ்சொன்னேனே அந்த நானா படேகர் அவருக்கு பெரிய மனசு... அவருக்காச்சும் விவசாயமும் விவசாயிக வாழ்க்கையும் தெரிஞ்சிருக்கே... வடக்குப் பக்கம் போன வருசத்துல மட்டும் ஐயாயிரம் விவசாயிகளுக்கு மேல செத்திருக்காங்க... ஆனா யாருக்கும் அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லைடாம்பி..."

"ம்...விவசாயத்தை நேசிக்கிற மனுசன்" என்ற சேகர் அவருக்காக காத்திருந்தான். கந்தசாமி உரம் இருந்த பையையும் அதைக் கலந்து வீசிய வாளியையும் கழுவி எடுத்துக் கொண்டார். கரையில் இருந்த முனீஸ்வரனைக் கும்பிட்டு குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு வர, அவனும் அவருடன் நடந்தான்.

"நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்குடாம்பி... ஆனா பாரு... இங்க விவசாயி சாகுறான்... அங்க... அதான் நாடாளுமன்றத்துல எம்.பிக்களுக்கு எல்லாம் சலுகை விலையில உணவு தர்றானாம்... பாத்துக்க... அவன்ல எவன் மக்களுக்காக உழைச்சி மக்களுக்கு ஒதுக்குற பணத்துல சரியா செலவு செய்யிறான்... அம்புட்டுப் பேரும் கோடீஸ்வரனா இருக்கான். தாங்குடும்பம்... தன் மக்கள்ன்னு ஊரை அடிச்சி உலையில போடுறான்... அவனுக்கு அரசு கோடியில உலை வைக்கிது...  நல்ல சாப்பாட்டை சலுகைன்னு கொடுக்கிறான்... இங்க சாதாரண சாப்பாடே கிடைக்காம ரொம்ப பேரு செத்துக்கிட்டு இருக்கான்.”

சேகர் பேசாமல் வர அவரே தொடர்ந்தார். “இவனுக சாப்பாட்டுக்குன்னே கோடிக்கோடியா வருசாவருசம் ஒதுக்குறானுங்க... அவனுக்கு கொடுக்கிற சாப்பாட்டுக்கு என்ன செலவோ அதை வாங்க வேண்டியதுதானே... அந்தக் கோடிகளை தெருக்கோடியில கெடக்கவனோட வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாம்... விரிவோடிப்போன வாழ்க்கை எதுக்குன்னு சாகுற விவசாயிக்கு... விவசாயத்துக்கு ஒதுக்கலாமே... விவசாயத்தை அழியாம காக்கலாமே... அதெல்லாம் செய்யமாட்டானுக... அரசாங்கம் அரசியல்வாதிகளுக்காக கோடிக்கோடியா செய்யிற செலவு எல்லாமே மக்கள் வரிப்பணம்தானே... இப்படி வீணா விரையம் பண்ணுறதுக்குப் பதிலா பயனுள்ள செலவா மாத்துனா நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உயர்வுதானே... ம்... இதெல்லாம் நடக்குறகாரியமா சொல்லு... ஆனா நடந்தா நல்லா இருக்கும்தானே... நம்ம நாட்டுல இப்படி ஒரு மாற்றம் இனியாவது வரணும்... இப்படி சாப்பாடு சவரட்டனைக்கு செய்யும் தேவையில்லாத கோடிகளை ஒதுக்கி உலக அளவுல விவசாயத்துல தன்னிறைவு பெற்ற நாடா நம்மை நாட்டை மாத்துர பிரதமர் வரணும்... ஆனா இந்த ஆசையெல்லாம் நடக்குமான்னு தெரியலை...  இதெல்லாம் வெறுங்கனவாத்தான் போகும்ன்னு தோணுது..." என்று நிறுத்தினார்.

"நாடாளுமன்றத்துல மட்டுமா நடக்குது நம்ம எம்.எல்.ஏ. ஆஸ்டல்ல கூட இப்படித்தானாமே...?"

"ம்.... எல்லா இடத்துலயும் இதுக்கு கோடிகளை செலவு பண்ணி என்னாகப் போகுது... தெருவுல பட்டினியோட கெடக்கவணும்... விவசாயம் போச்சேன்னு சாகுறவனும் இன்னும் கூடிக்கிட்டேதான் போகப் போறானுங்க... எல்லாம் நிர்ணயிச்ச விதி... தேர்தலப்போ இதை அரசியல் ஆக்குவானுங்க... நாம செம்மறி ஆட்டுக் கூட்டம்...  சுயமா முடிவெடுக்கமாட்டோம்... அவன் நம்மளை மொளகாய் அரச்சிட்டு சலுகை எல்லாம் அனுபவிப்பான்... "

“ம்... உண்மைதான் பெரியப்பா... இப்ப சில இளைஞர்கள் விவசாயத்துல இறங்கியிருக்காங்க... ஒரு சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குற பசங்க கொஞ்சப் பேர் சேர்ந்து ஏக்கர் கணக்குல நிலம் வாங்கி விவசாயம் பண்ணுறாங்க. தெரியுமா...?”

“நானும் படிச்சேன்... நானும் அதைத்தான் சொல்ல வாறேன்... நாட்டை இளைஞர்கள் கையில் எடுக்கணும்... சாப்பாட்டுக்கு கோடி செலவு பண்ணுற இது மாதிரி வெட்டிச் செலவுகளை எல்லாம் வேரறுந்து நிக்கிற விவசாயத்துக்கும்... வாழ்வறுந்து நிக்கிற மனிதர்களுக்கும் செலவு பண்ணி நாட்டை உலக அரங்கில் முன்னிருத்தணும்... இதெல்லாம் உன்னைய மாதிரி இளைஞர்கள் கையில்தான் இருக்கு... ஆனா எல்லாரும் ஒத்துமையா நின்னு சாதிக்கணும். அப்படிச் சாதிச்சா நம்ம நாட்டை உலக அரங்கில் யாராலும் வெல்லவே முடியாது.” என்றவரைக் சைக்கிளில் கடந்து சென்ற மாணிக்கம் "ஏப்பா... எங்க போனே... நம்ம பிரசிடெண்ட் ஆளனுப்பியிருந்தாரு... " என்றார்.

கந்தசாமி நடையை நிறுத்தி  "என்னவாம்?" என்று கேட்க, "வர்ற செவ்வாக்கிழமை கலெக்டரோட குறை தீர்க்கும் நாள் நம்ம பஞ்சாயத்துல இருக்காம்... அதான் சொல்லிவிட்டிருந்தார்." என்று கத்தியபடி சென்றார்.

"ம்...ம்... என்ன குறை... எதைத் தீக்க... அட நீ வேற போயி வேலை வெட்டியிருந்தாப் பாருப்பா..." என்றபடி நடந்தவர், "பாத்தியாடாம்பி.... குறை தீர்க்கும் நாளாம்... கொடுக்கிற கவரை குப்பையில போடுவானுங்க... நாடெல்லாம் பத்தியெரியிற விவசாயிங்க குறை தீர்க்க நாதியில்ல... கோடிகள்ல சாப்பாடு செஞ்சி பாதியைக் கீழே கொட்டுவானுங்க... ம்... குறை தீர்க்கிறானுங்களாம் குறை... எத்தனை வருசமாத்தான் தீர்ப்பானுங்க... இப்படியே போன கலாம் கண்ட கனவு பலிச்சி இந்தியா வல்லரசாயிடும்டாம்பி..." என்றார் சிரித்துக் கொண்டே, சேகர் ஒன்றும் பேசாமல் அவரோடு நடந்தான். 

-'பரிவை' சே.குமார்.