சரவணன் அண்ணனின் இரண்டாவது குறும்படமான அகம் புறத்தில் சிறு குறைகள் இருந்தாலும் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வசனங்கள் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. தனது படம் குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு எல்லாம் மிகச் சிறப்பான பதிலோடு தனது தளத்தில் ஒரு பகிர்வு போட்டிருக்கிறார். அவர் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் சிறப்பாக வளர்வீர்கள் அண்ணா... விரைவில் உங்களை வெள்ளித் திரையில் காண்போம். இதுவரை அகம் புறம் பார்க்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று பாருங்கள்.
***
நம்மை எல்லாம் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார். மிகவும் வருத்தமான செய்தி... ஒரு தகப்பனாய் மகனை இழந்து தவிக்கும் விவேக்கிற்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாதுதான்... இருப்பினும் அவர் இழப்பில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும். இந்த டெங்குவினால் எத்தனை எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத் தடுக்க முடியாவிட்டாலும் நம்மை நெருங்காதவண்ணம் நாமாவது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
பிரசன்னா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
***
கஞ்சா கருப்பு தனது சொந்த ஊரில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தும் செய்தி முகநூலில் ஏனோ இப்போதுதான் அவர் ஆரம்பித்திருப்பது போல உலா வருகிறது. அவர் ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டது. நான் தான் படிக்கவில்லை என் ஊர் குழந்தைகளாவது படிக்கட்டுமே என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். அவரின் டாக்டர் மனைவிதான் பள்ளியையும் பார்த்துக் கொள்கிறார். இதனிடையே வேல் முருகன் போர்வெல்ஸ் படத்தில் நடித்த போது சிவகங்கைப் பகுதியில் சில கிராமங்களில் சொந்தச் செலவில் போர் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன... அதுவும் உண்மைதான். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் முகநூலில் தற்போது வைரலாகிவரும் அந்த செய்தி கண்டதும் ஒரு நண்பர் இது உண்மையா... இதற்கு சான்று இருக்கா... என்றெல்லாம் கேட்டு... போர் போட்டுக் கொடுத்தார் என்பதை எல்லாம் ஆதாரமில்லாமல் நம்ப முடியாது என ஒரு பக்கப் பதிவு போட்டிருந்தார்.
அவர் இதன் நம்பகத்தன்மையை அறியவே முகநூலில் கேட்டிருக்கிறார். அவருக்கு நானும் சில நண்பர்களும் பதில் சொன்னதும் அப்படியா சந்தோஷம் என்று சொல்லியிருந்தார். நாம் மாற்றம் முன்னேற்றம் என்று நம்மை ஏமாற்ற வரும் கூட்டத்தை, செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு அரியணை ஏற்றி அமர வைத்து கோவணத்துடன் அமர்ந்து கொள்கிறோம்... மாற்றம் முன்னேற்றம் எல்லாம் அவர்கள் குடும்பத்தோடு நின்று விடுகிறது... நமக்குத்தான் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை... தான் சம்பாதித்த பணத்தில் தன்னால் முடிந்த ஒரு செயலை ஒருவர் செய்யும் போது இதற்கு சாட்சி இருக்கா... இதுல உப்பு இருக்கான்னு கேட்போம்... என்ன மனிதர்கள் நாம்..?
***
அகல் தீபாவளி மின்னிதழில் எனது சிறுகதைக்கும் இடமளித்திருக்கிறார்களாம்... முகநூலில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வசம் எனது பரிசு பெற்ற சிறுகதையும் மற்றொரு சிறுகதையும் இருக்கு... எந்தக் கதை என்று அறியும் ஆவலில் காத்திருக்கிறேன்... தீபாவளி மலரில் எனது கதைகள் வருமா என கல்லூரியில் படித்த காலத்தில் ஏங்கியிருக்கிறேன். மற்ற நாட்களில் வந்த கதையோ கவிதையோ தீபாவளி மலர்களில் மட்டும் வருவதில்லை. அது இந்த வருட தீபாவளிக்கு நனவாகிறது. அகல் மின்னிதழ் குழுவுக்கு நன்றி.
***
எங்கள் வார்டு குறித்து தினகரன் நகர்மலர் பகுதியில் செய்தி வந்திருக்கு. அதில் எனது துணைவியாரும் கருத்துச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தும் அவரது போட்டோவும் தினகரனில் வந்திருந்ததாம். நான் இணையத்தில் பார்த்து எடுத்துப் படித்தேன்... நாம கிறுக்கும் போது நம்ம துணையும் கொஞ்சமாவது நம்மளைப் போல் இருக்க வேண்டாமா என்ன... அவர் என்னைவிட நன்றாக கவிதை எழுதுவார்.
***
இங்கு குளிர்காலம் ஆரம்பமாகிறது... வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது... இரவு 7 மணி வரைக்கும் வீட்டுக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்த சூரியன் ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. காலையில் நல்ல காற்று இருக்கிறது... மதியும் வெயில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கிறது... இனி நான்கு ஐந்து மாதங்களுக்கு வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பி குளிரில் குதூகலிக்கலாம்... என்ன அலுவலகத்தில்தான் அரபிப் பெண்கள் வெயில் காலத்தில் எப்படி ஏசி பயன்படுத்துவார்களோ அப்படியே குளிரிலும் பயன்படுத்துவார்கள். நாமதான் தண்ணீரில் நனைந்த கோழியாய்... மார்கழி மாதம் அதிகாலையில் கண்மாயில் குளித்து விட்டு... வெடவெடக்கும் குளிரில் பற்கள் டக்கு...டக்குன்னு அடிச்சிக்க... வீடு நோக்கி ஓடிய நாட்களை நினைத்தபடி... அதே சூழலில் அமர்ந்திருக்க வேண்டும்.
***
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன்... கொஞ்சம் காதல் கலந்த கதை... வித்தியாசமான பார்வையில்... மழை பெய்யும் மாலை... ஆட்டுக் கசாலை... இதுதான் கதையின் களம்... கதை மாந்தராய் மூவர் மட்டுமே.... எனக்குப் பிடித்திருந்தது. ஒரு இதழுக்கு அனுப்பும் பொருட்டு நண்பனுடன் பேசியபோது அவன் எங்கே கதையைச் சொல்லு என்றான்.... சொன்னேன்... நீயாடா எழுதினே என்றான் சிரிப்போடு... ஆமாடா நாந்தான் ஏன்..? என்றேன் அப்பிராணியாய்... மூதேவி நீ இப்படியெல்லாம் எழுத மாட்டியே... நீ உன்னோட போக்குல போடா... எதுக்குடா இப்படியெல்லாம் கதை எழுதிக்கிட்டு என்றான்... டேய் நான் எழுதிய முதல் தொடர்கதை முழுக்க முழுக்க காதல்தானேடா... எல்லாருக்கும் பிடித்திருந்தது... அது போக இந்தக் கதையும் வித்தியாசமாத்தான்டா இருக்கு என்றதும் என்னமோ போ... உனக்கு கதை எழுதத் தெரிந்த அளவு அதைச் சொல்லத் தெரியலைன்னு நினைக்கிறேன்... ஒருவேளை அதை முழுவதும் படித்தால் எனக்கு உன்னோட கதை பிடிக்கலாம் என்று சொல்லிச் சிரித்தான். கதை சொல்றது எப்படின்னு படிக்கணும் போல... சரி சரவணன் அண்ணனுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என்ற முடிவோடு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாலயே துண்டைப் போட்டு வச்சிருக்கேன்...
***
பத்து எண்றதுக்குள்ள படம் பார்த்தேன்... காரில் சம்மர் ஷாட் அடிப்பதும்... பறப்பதும்... வீலிங் செய்வதும்... என இன்னும் இன்னுமாய் விக்ரம் செய்கிறார். இதை எல்லாம் ரஜினி செய்தால் ரசிப்போம்... ஏன்னா ஸ்டைல்ன்னா ரஜினின்னு நாம கொண்டாடிட்டோம்... கால்ல கயிரைக்கட்டி ஓடுற காரை இழுத்து நிப்பாட்டினாலும்... ஷூவுல தீப்பொறி பறக்க நடந்தாலும் கைதட்டி ரசிப்போம்... குருவி, சுறான்னு விஐய் செய்து பார்த்து நொந்து போயிக் கிடக்காரு... இப்ப புலியும் பதுங்கிருச்சு... விக்ரம் உடலை வருத்தி நடிக்ககூடிய நல்ல நடிகன்... அவரும் எதற்காக இது போன்ற சூறாவளிக்குள் சிக்கிக் கொண்டார் என்று தெரியவில்லை... கதை சொல்லும் போதே எனக்கு இது செட் ஆகாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? காரில் பயணிக்கும் கதை, பத்து எண்ணுறதுக்குள்ள முடியும் விக்ரமின் வேலைகள், அழகான சமந்தா என எல்லாம் இருந்தும் படத்தை ரசிக்க முடியவில்லை என்றாலும் இதுவரை உடம்பை வருத்தி நடித்த விக்ரம் இதில் சாதாரணமாக நடித்திருப்பதால் அவருக்காக ரசிக்கலாம்... மற்றபடி படம் ரொம்பச் சுமார்.
***
சில பாடல்களை கேட்டே இருக்க மாட்டோம்... ஆனால் எப்போதாவது தற்செயலாக கேட்க நேர்ந்தால் அது நம்மைப் பிடித்துக் கொள்ளும். அப்படித்தான் மன்னாரு படத்தில் வரும் இந்தப் பாடலும்... இதுவரை கேட்டதேயில்லை... இன்றுதான் முதன் முதலில் கேட்டேன்... கிருஷ்ணராஜ் அவர்களும் எஸ்.பி. சைலஷா அம்மாவும் பாடியிருக்கிறார்கள். 80களின் மெலோடியை ஞாபகப்படுத்திறது பாடல்... இசை உதயன் என்பவராம்... மிகவும் அழகாக செய்திருக்கிறார்... கேட்டுப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
மனசின் பக்கம் மீண்டும் வரும்...
-'பரிவை' சே.குமார்.
நிறைய விஷயங்களைச் சொல்கின்றது - தங்களின் பதிவு..
பதிலளிநீக்குகஞ்சா கருப்பு போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குபோற்றுவோம்
தம +1
எதிலும் சந்தேகம் என்பது இன்றைய நிலை...
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு ஏராளமான செய்திகள். விவேக்கின் மகனின் மரணம் வருந்தத் தக்கது.மருத்துவ வசதிகள் நிறைந்துள்ள இந்தக் காலத்தில் தேவையான பணவசதி இருந்தும் காப்பாற்ற முடியாமல் போனது அதிர்ச்சி அளிக்கத் தான் செய்கிறது,
பதிலளிநீக்குஅனைத்தையும் ரசித்துப் படித்தேன். கஞ்சா கருப்பு போற்றுதலுக்குரியவர். அவருக்கு பாராட்டு சொல்லும் அதே வேளையில் பிரசன்னா ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஉங்களின் எழுத்து அருமையாக உள்ளது. இவ்வளவு நாள் அறியாமல் விட்டுவிட்டேன். இனி தொடர்கிறேன்.
தீபாவளி மலரில் கதை எழுதுவதற்கு வாழ்த்துக்கள்! சிறப்பான செய்தி தொகுப்பு! நன்றி!
பதிலளிநீக்குஅனைத்து தகவல்களும் நன்று கஞ்சா கருப்பு பாராட்டுக்குறியவர் பாராட்டுவோம்
பதிலளிநீக்குதமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எங்கே ?
காணொளி அருமை
பதிலளிநீக்குொதமிழ் மணம் 5
நல்ல செய்திக்கதம்பம். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
நல்ல தகவலை தொகுத்து வழகியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதலில் வாழ்த்துகள் அகல் தீபாவளி மின் இதழில் தங்கள் கதை வெளியாவதற்கு.
பதிலளிநீக்குகஞ்சா கருப்பிற்கு வாழ்த்துகள்...
விவேக்கின் மகனின் மரணத்திற்கு இரங்கல்கள். அது மூளைக்காய்ச்சல் என்று சொல்லப்பட்டதாலும் நாங்கள் எங்களது இன்றைய பதிவில்குறிப்பிடவில்லை. டெங்கு என்று எங்கள் மனதிற்குத் தெரிந்தாலும்....ஆனால் ஆச்சரியம்...மருத்துவ வசதிகள் பெருகி விட்டது....அவருக்கு பணமும் இருக்கு என்றாலும் எப்படி என்று தெரியவில்லை...விதி??
அனைத்தும் அருமை குமார்...
கஞ்சா கருப்பை மனதாரப் பாராட்டத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇந்தப் பாடலை [ஊருக்கெல்லாம்] முன்பே கேட்டிருக்கிறேன். ஆனால் காட்சியை இப்போது தான் பார்க்கிறேன்.
நீங்கள் சொன்னது போலவே குளிர் இலேசாக ஆரம்பித்து விட்டது இங்கு! டிசம்பர், ஜனவரியில் குளிர் எப்படியெல்லாம் வாட்டப்போகிறதோ தெரியவில்லை!!
தொகுப்பு அருமை! [விவேக்கின் மகன் மரனம் தவிர்த்து]
நல்லதொரு தொகுப்பு. விவேக் மகன் மரணம் - வேதனை.....
பதிலளிநீக்குதீபாவளி மலரில் உங்கள் கதை. பாராட்டுகள். மேலும் பல சிறப்புகளை நீங்கள் பெற வாழ்த்துகள்.
பாடலை இது வரை கேட்டதில்லை. முதல் முறையாக கேட்கிறேன். நன்றாக இருக்கிறது.