சனி, 1 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 29)

முந்தைய பகுதிகள் :

28-வது பகுதியின் இறுதியில்...

"தூக்கம் வரலைப்பா.... அதான்... ஏம்ப்பா காளை மாட்டைக் கழுவி விடலாம்ல்ல... சாணியிங்கீணியுமாக் கெடக்கு பாரு..." என்றார்.

"இன்னிக்கி கழுவணும்ப்பா... எங்க எதாச்சும் ஒரு வேலை வந்திருது... உங்க பேராண்டிகளை மாட்டைக் கழுவி விடுங்கடான்னு சொன்னா... எங்க கேக்குறானுக..." என்று பதில் சொல்லியபடி "இந்தா வாறேன்.." என்று நடந்தான்.

வீட்டுப் படியேறியவர் காளியம்மாள் இன்னும் தூங்குவதைப் பார்த்ததும் 'இவ இன்னும் எந்திரிக்கலை போலயே... உடம்புகிடம்பு சரியில்லையா?' என்ற நினைப்போடு அருகே சென்றார்.

இனி...

காளியம்மாள் இன்னும் படுக்கையில் இருந்து எழுந்திரிக்காததைப் பார்த்ததும் 'இவ இன்னும் எந்திரிக்கலை போலயே... உடம்புகிடம்பு சரியில்லையா' என்ற நினைப்போடு அருகே சென்ற கந்தசாமி, "ஏய்... இந்தா... ஏலா... என்னலா... விடிஞ்சி வெள்ளச்சேவல் கூவிருச்சி... என்னக்குமில்லாத திருநாளா தூங்குறே...? மேலுக்கு நல்லாயில்லையா? என்ன பண்ணுது...?' என்றபடி காளியம்மாளின் கழுத்தில் கை வைத்தார்.

உடம்பு சில்லென்று இருந்து... "ஏய்... என்னாச்சு... எந்திரிலா...." அவளை உலுக்கினார். "ஏய்... ஏய்.... ஏலா..." எழுந்திரிக்கவில்லை... சநதேகத்தோடு மூக்கின் அருகே விரலைக் கொண்டு சென்றார்... "ஏய்...ஏ...ய்....ய்ய்ய்ய்....ய்.... ஏ....லாலாலாலா...." பெருங்குரலெடுத்துக் கத்தினார். "ஏய்... எப்படி... எப்படி.. இது.. என்னைப் பாருலா..." அழுகையோடு கத்தினார். அவரின் சத்தம் கேட்டு "மாமா... என்னாச்சு...?" என பதட்டத்தோடு ஓடிவந்தாள் கண்ணகி.

"உங்க அயித்தை... நம்மளை விட்டுப் பொயிட்டாத்தா..." கத்தினார்.

"ஐயோ.... அயித்தை.... என்னாச்சு.... எப்படி... அயித்தை..." கதறியபடி கண்மணி, காளியம்மாளின் அருகே ஓடி விழுந்தாள். அங்கே ஒரு பக்கமாக ஒருக்களித்து தூங்குவது போல் கிடந்தவளைப் பார்த்ததும்... செத்துப்பொயிட்டா என்பதை நம்ம முடியவில்லை. நம்பாதவளாய் "அயித்தை... அயித்தை..." என்று உலுக்கிப் பார்த்தாள். இரவு உறக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்க வேண்டும். எப்போது போனது...? கடைசியாக அவள் என்ன நினைத்தாள்...? யாரைப் பார்க்க நினைத்தாள்...? என எதுவும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கந்தசாமி அவளின் காலருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தார்.

ஊர் ஆட்கள் எல்லாம் சத்தம் கேட்டு கூடி விட்டார்கள். 'எப்படிப்பா... நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்துச்சு...', 'சாவு திடீர்ன்னு வந்திருக்கு பாருங்க...', 'படுத்த பொம்பள எந்திரிக்கலை பாரு...', 'நல்ல மனுசி பொட்டுன்னு பொயிட்டா...' என ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க, கண்ணகி தன் பின்னே ஓடி வந்து அழுது கொண்டு நின்ற மூத்தவனிடம் "டேய்... கம்மாப்பக்கம் போயி அப்பாவை சீக்கிரம் கூட்டிக்கிட்டு வா..." என்றபடி அவிழ்ந்து கிடந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டு எழுந்தாள்.

"என்னலா... ஏலா... எங்கிட்ட சொல்லாமப் பொயிட்டே...? எப்படி உனக்கு மனசு வந்துச்சு... ராத்திரி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தியே... இதுக்குத்தானா? இனி எனக்கு யார் இருக்கா...? என்னையவும் கூட்டிக்கலா..." என்று கதறிய கந்தசாமியின் தோள்களைப் பற்றிய கோவிந்தன் "ஏய் கந்தா... நீயே நெஞ்சுவலிக்காரன்... மனசைத் தேத்திக்க... உன்னோட உடம்புக்கு ஆகாதுப்பா... இப்படி ஆகும்ன்னு யாரு நெனச்சா... நடந்தது நடந்திருச்சு... ஆக வேண்டியதைப் பாக்கணுமில்ல... பயலுகளுக்கு போன் பண்ணனும்... சொந்த பந்தத்துக்கு சொல்லணும்... நீ ரொம்ப அழுகாதே... உனக்கு ஒண்ணுன்னா என்ன பண்றது..." என்றபடி தூக்கி அருகே கிடந்த சேரில் அமர்த்தினார்.

"என்ன ஆகும்... செத்துப் போவேனா... போறேன்... அவ பின்னால நானும் போறேன்... இனி எனக்கென்ன இருக்கு கோவிந்தா... எல்லாத்துக்கும் எம் பின்னாலயே நிப்பா... இதுல மட்டும் எனக்கு முன்னால பொயிட்டாளே... எங்க போனாலும் சொல்லிட்டுத்தான் போவா... இப்ப சொல்லாமப் பொயிட்டா... என்னய ஏமாத்திட்டா... என்னய ஏமாத்திட்டா..." புலம்பிக் கொண்டே கதறினார். அவரைப் பார்த்து அங்கு இருந்த  அனைவருக்கும் அழுகை வந்தது.

"சித்தப்பா... அயித்தையை குளியாட்டி... வாயி, கையெல்லாம் கட்டி திண்ணையில போட்டுடலாம்..." என்று கோவிந்தனிடம் சொன்னாள் கண்ணகி.

"ஆமா... ஆமா... ஆத்தா நாலு பொம்பளைங்க வாங்க... தண்ணி எடுத்துக்கிட்டு வந்து குளியாட்டி... செய்ய வேண்டியதைச் செய்யலாம்... பயலுகளுக்கு சொல்லணும்... இன்னைக்கி செய்யிறதா நாளைக்கிச் செய்யிறதான்னு கேட்டுக்கிட்டு அதுக்குத் தகுந்தமாதிரி ஏற்பாடு பண்ணனும்... பொம்பளைங்க மத்த காரியத்தைப் பார்த்து தலமாட்டுல வெளக்கேத்தி கிடத்துங்க" என்று கோவிந்தன் சொல்லி விட்டு அருகிலிருந்தவரிடன் ஏதோ பேச, "எம்மவன் கண்ணதாசன் எங்கே...? இன்னும் வரலையா...? அவனுக்கிட்ட கேட்டுக்க கோவிந்தா... அவனுக்கிட்ட கேட்டுக்க..." கந்தசாமி அழுகையோடு சத்தமாகச் சொன்னார்.

"சித்தப்பா... மத்த விஷயத்துக்கு அவுக வந்திருவா.... கேட்டுக்கலாம்..." என கண்ணகியும் சொல்ல, "சரி... மத்ததைப் பாருங்க... கண்ணதாசன் வரட்டும்..." என்றார் கோவிந்தன்.

கொஞ்ச நேரத்தில் ஓடி வந்த கண்ணதாசன் 'என்னாச்சு... அம்மாவுக்கு என்னாச்சு...' என ஓடிவந்து காளியம்மாள் மீது விழுந்து "சின்னம்மா... எந்திரி சின்னம்மா... எங்கிட்டத்தானே கடைசியா பேசினே... உறக்கம் வரலைன்னு சொன்னியே... இப்படி மொத்தமா உறங்கிட்டியே... எந்திரி சின்னம்மா..." என்று கதறினான்.

"கண்ணா...." பீறிட்ட அழுகையோடு கந்தசாமி அழைக்க, "சித்தப்பா... எப்படி சித்தப்பா... நம்மள அனாதை ஆக்கிட்டுப் போயிருச்சே சித்தப்பா..." என்று கதறியபடி அவரைக் கட்டிக் கொண்டு அழுதான். கொஞ்ச நேரம் பேசாமல் நின்ற கோவிந்தன் "கண்ணதாசா... கந்தா முடியாதவன்... அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீயே இப்படி அழுதா எப்புடிப்பா... ஆக வேண்டியதைப் பாக்க வேண்டாமா? எல்லாருக்கும் சொல்லணுமில்ல... கொஞ்சம் மனசைத் தேத்திக்கப்பா... எந்திரி... வா" என்று தோளில் ஆறுதலாய் கை பிடிக்க, "மாமா... எங்க அம்மாவைவிட என்னைய நல்லாப் பாத்துச்சே... எது செஞ்சாலும் கண்ணனுக்குன்னு எடுத்து வைக்குமே...? எத்தன மணிக்கு வந்தாலும் வாசல்ல காத்திருந்து வந்துட்டியாப்பா... காணுமேன்னு பாத்தேன்னு கேட்டுட்டு படுக்கப் போகுமே...? ராத்திரி கூட உறக்கம் வரலைன்னு வெளிய வந்த எங்கிட்ட பேசிட்டு போயி படுன்னு சொல்லிட்டுப் போகுதே..." புலம்பியபடி அவர் பின்னே நடந்தான்.

போனில் மணி, குமரேசன், சுந்தரி, கண்மணி, கற்பகம், சொந்த பந்தம் என எல்லோருக்கும் அழுகையோடு சொல்லி முடித்த கண்ணதாசன், "மாமா... முக்கியமான ஆளுகளுக்கு சொல்லிட்டேன்... மத்த ஊருகளுக்கு பசங்களை அனுப்பிடலாம்..." என்றான்.

"ம்.... இன்னைக்கே செஞ்சிடலாம்ல்ல... பயலுக ரெண்டு பேரும் வந்திருவானுங்கள்ல..."

"வந்திருவாங்க... சுந்தரி அக்கா வீட்டுக்காரர் இப்ப வந்திருவாரு... அவரு வந்தோடனே கேட்டுக்கலாம்... கண்ணகி வீட்டுக்காரர்தான் பிஸினஸ் விஷயமா கோயமுத்தூர் போயிருக்காராம்... அவரு நம்பருக்கும் அடிச்சிட்டேன்... கையில கார் இருக்கதால வந்திடுவாரு..." என்று சொன்னபடி வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

அதற்குள் காளியம்மாளைக் குளிப்பாட்டி, கோபுரக்கரைச் சேலையைக் கட்டி நெற்றியில் விபூதி பட்டை அடித்து வட்டமாய் குங்குமம் வைத்து அதன் மீது சந்தனம் வைத்து அதில் காசை வைத்து வாயில் வாக்கரிசி இட்டு துணி வைத்துக் கட்டி, கை, கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டி திண்ணையில் கிடத்தியிருந்தார்கள். தூங்குவது போல் கிடந்தவளைப் பார்த்துப் புலம்பியபடி கண்ணில் நீர் வடிய சேரில் அமர்ந்திருநார் கந்தசாமி.

"ராத்திரி எனக்கு கெட்ட சொப்பனம்... படக்குன்னு முழிச்சிக்கிட்டேன்... படபடப்பா இருக்கவும்தான் வெளிய வந்தேன்... அப்பத்தான் சின்னத்தாவைப் பார்த்தேன்... ஏதோ நடக்கும்ன்னு நினைச்சி உங்க மககிட்ட புலம்பினேன் மாமா... ஆமா இப்படி ஆகும்ன்னு நினைக்கலை..." கோவிந்தனிடம் புலம்பினான் கண்ணதாசன்.

"என்ன மாப்ள பண்றது..? சாவெல்லாம் நம்ம கையிலயா இருக்கு... இந்தா நம்ம அப்துல்கலாம் பேசத்தானே போனாரு... பொணமாத் திரும்பி வரலையா...? யாருக்கு எப்போன்னு தெரியிற மாதிரி எழுதி வைக்கலையே... நல்ல சாவு... அம்புட்டுத்தான்... என்ன செய்ய..." என்று சொல்லி கோவிந்தன் அவனைத் தேற்றினார்.

"க...கண்ணா... அப்பா... கண்ணா..." கூப்பிட்டபடி எழுந்து வந்தார் கந்தசாமி.

"எ... என்ன சித்தப்பா... " என்று ஓடி அவரைப் பிடித்துக் கொண்டான்.

"ராத்திரிக்கூட உனக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னாளேடா..." தாங்கள் பேசியதை மனைவி சொன்னதாகச் சொல்லி அழுதார்.

"ஆமா... அதான் மொத்தமாச் செஞ்சிட்டுப் போயிருச்சாக்கும்... போங்க சித்தப்பா... கண்ணனுக்கு பிடிக்கும்ன்னு எது செஞ்சாலும் எடுத்து வைக்குமே... இப்ப எதுவுமே சொல்லாம... ராத்திரி பாக்கும் போது கூட எனக்கு முடியலைடான்னு சொல்லியிருந்தா... தூக்கிக்கிட்டு ஓடிப்போயி காப்பாத்தியிருப்பேனே... ஒண்ணுமே சொல்லலையே..." அவரைக் கட்டிக் கொண்டு அழுதான்.

"விடு... விடு... நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்... எனக்கு முன்னாடி பூவும் பொட்டோட சுமங்கலியாப் பொயிட்டான்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்... வேற என்ன பண்ண... கண்ணா... இன்னைக்கே எல்லாம் முடிச்சிடலாம்... கெடந்தா அவ உடம்பு தாங்காதுப்பா... போகும்போது அவ சந்தோஷமாப் போகணும்... அத்தானுக்குச் சொல்லிட்டியா... அவரு வரட்டும்... சிறப்பா அவளை அடக்கம் பண்ணனும்..." அழுகை விடுத்து கொஞ்சம் உறுதியோடு பேசினார்.

கொஞ்ச நேரத்தில் அழகப்பனும் சுந்தரியும் வண்டியில் வந்து இறங்க, கந்தசாமி பெருங்குரலெடுத்து "அம்மாவைப் பாக்க வந்தியா?" என்று கத்தினார். 

"அம்மோவ்... என்னப் பெத்த அம்மோவ்..." என்று கதறி ஓடி கீழே விழுந்து எழுந்து வந்து கந்தசாமியைக் கட்டிக்கொண்டு கத்திய சுந்தரி, "கண்ணா... நம்மள அநாதை ஆக்கிருச்சேடா..." என்று அவனையும் கட்டிக்கொண்டு கதறினாள்.

"அக்கோவ்... அயித்தை...." அதற்கு மேல் பேசமுடியாமல் கதறியபடி ஓடிவந்து சுந்தரியைக் கட்டிக் கொண்டாள் கண்ணகி. அவளைக் கட்டிக் கொண்டு அழுதவள் "அம்மோவ்.... என்னப் பெத்த அம்மோவ்... சுந்தரி வந்திருக்கேன்... பாரும்ம்ம்ம்ம்மா...." என்று கத்தியபடி காளியம்மாள் மீது விழுந்தாள்.

"மா...மாமா...." என்று கந்தசாமியைக் கட்டிக் கொண்ட அழகப்பன் கண்ணீர் வடித்தபடி, கண்ணதாசனையும் கட்டிக் கொண்டார்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு "எப்படி... என்னாச்சு மாப்ள?" என கண்ணதாசனிடம் கேட்டார்.

"தூக்கத்துலயே போயிருச்சு அத்தான்... மாரடைப்பாத்தான் இருக்கும்... காலையில சித்தப்பாதான்..." சொல்ல முடியாமல் அழுதான்.

"என்னப்பா... இன்னைக்கே காரியம் செய்யிறதுன்னா மேளம், பூவு, குளி வெட்டுறவனுங்க... அப்புறம் வண்ணான் அம்பட்டையன் எல்லாருக்கும் சொல்லிவிடணுமில்ல..." என்ற கோவிந்தன், "என்ன பெரியாண்ணே நாஞ்சொல்றது... இனி விஷயம் தெரிஞ்சு ஆளுக சன்னமா வர ஆரம்பிச்சிருவாக... ராத்திரியே ஆனது... எப்புடியும் மூணு நாலு மணிக்கெல்லாம் எடுத்துறணுமில்ல..." என அருகில் நின்றவரைப் பார்த்துச் சொன்னார்.

"ஆமா தம்பி... கோவிந்தன் சொல்றதுதான் சரி... இன்னைக்கி ராத்திரி போட்டு வைக்கிறதுன்னா... அதுக்கு உள்ள ஏற்பாட்டைப் பண்ணனும்... இப்பத்தான் கரண்டுப் பெட்டி இருக்குல்ல... கொண்டாந்து வச்சிடலாம்..."

"இல்ல சித்தப்பா... இன்னைக்கே பண்ணிடலாம்... மணி பேசினான்... இன்னைக்கே பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டான்.... குமரேசன் பேசலை... அவன் வரட்டும் பேசிக்கலாம்... போனில் பேச எனக்கு ஜீவன் இல்லை... எப்படி... இப்படி ஆச்சின்னு அவனுககிட்ட பேசுறது... ரமேஷ்தான் கோயம்புத்தூர்ல இருக்கான். கிளம்புறேன்னு சொன்னான். எல்லாம் ரெடி பண்ணுனா அவன் வந்திருவான்... ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்..."

"அப்ப சரி... மேளம் வானத்துக்குச் சொல்ல ஓரு ஆளை அனுப்புங்க... வெவரமான ஆளாப் போகட்டும்... பூவுக்கு பெரியாண்ணே நீ போன் பண்ணி ஐயப்பங்கிட்ட சொல்லிடு... குளிவெட்ட பூமிக்கு ஒரு ஆள் அனுப்புங்க..." என்று ஆர்டரைகளைப் பிறப்பித்தார் கோவிந்தன்.

"அ...ப்...பா..." அழகப்பனை அழைத்தார் கந்தசாமி.

"என்ன மாமா? " என்றபடி அருகே செல்ல, "நல்ல மேளமா வையிங்கப்பா... அவ சந்தோஷமாப் போகணும்..." என்றார் கந்தசாமி.

"ம்... நீங்க மனசை திடமா வச்சிக்கங்க..." என்றபடி அவரிடம் இருந்து விலகிய அழகப்பன் கோவிந்தனிடம் வந்து "அந்த வாடிப்பட்டி மேளமாட்டம் இங்க காரைக்குடியில் ஒரு குரூப் இருக்கானுங்களே அவனுகளுக்குச் சொல்லச் சொல்லுங்க சித்தப்பா..." என்றபடி கண்ணதாசனிடம் அமர்ந்தார். 

நிமிடங்கள் யுகங்களாய் கடக்க, சொந்த பந்தம் வர ஆரம்பித்ததும் வீடெங்கும் அழுகுரல் நிரம்பி வழிந்தது. அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து 'அம்மோவ்' என்று கதறிபடி ஓடி வந்து படியில் விழுந்தான் குமரேசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

16 கருத்துகள்:

  1. படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது நேரில் பார்ப்பது போன்ற உணர்வு.கண்ணதாசன் கனவு பலித்து விட்டதே!

    'நல்ல மனுசி பொட்டுன்னு பொயிட்டா...' //
    ஆனால் பெரியவர் நிலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. முந்தைய தொடரும்,இப்போழுதைய பதிவும் படித்தேன்...கஷ்டமாக இருந்தது.இனி கந்தசாமி என்ன செய்வரோ என்று மனம் பதைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. உணர்வுபூர்வமான எழுத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே..
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே.

    கதையின் போக்கு கண்களை கலங்கச் செய்து மனதை பாரமாக்கி விட்டது. இறப்பு அனைவரையும் ஓர்நாள் அணைக்கதான் செய்யும். ஆயினும், அதை கண்ணதிரே உணரும் போது மனதின் வேதனை சொல்லில் வடிக்கவியலாது. கதையே என்றாலும், கண்ணம்மாவின் மரணம் மனதை தொடுகிறது. இனியும் நகரும் கதையை மனத்தை கல்லாக்கிக் கொண்டுதான் படிக்க முடியும். இயல்பாக எழுதுகிறீர்கள்! தொடருங்கள். தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. "நிமிடங்கள் யுகங்களாய் கடக்க, சொந்த பந்தம் வர ஆரம்பித்ததும் வீடெங்கும் அழுகுரல் நிரம்பி வழிந்தது. அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து 'அம்மோவ்' என்று கதறிபடி ஓடி வந்து படியில் விழுந்தான் குமரேசன்." என்ற இயல்பு வாழ்வு உள்ளத்தில் பதிகிறதே!
    கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. உங்களது இக்கதை வழக்கம்போல் தங்களின் கதையினைப் போல மிகவும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் உள்ளது. தங்களின் இந்த நடையே கதைக்கு செறிவூட்டுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. சுவாரஸ்யம் . தொடருங்கள். tm4

    பதிலளிநீக்கு
  8. மிக மிக உணர்வுபூர்வமான பகுதி...உங்கள் நடை அப்படியே கண் முன் நிகழ்வுகளைக் காட்டுகின்றது...

    //"என்ன மாப்ள பண்றது..? சாவெல்லாம் நம்ம கையிலயா இருக்கு... இந்தா நம்ம அப்துல்கலாம் பேசத்தானே போனாரு... பொணமாத் திரும்பி வரலையா...? யாருக்கு எப்போன்னு தெரியிற மாதிரி எழுதி வைக்கலையே... நல்ல சாவு... அம்புட்டுத்தான்... என்ன செய்ய..." என்று சொல்லி கோவிந்தன் அவனைத் தேற்றினார்.// சமீபத்திய நிகழ்வையும் இதில் செருகி.....பொருத்தமாக...அசத்தல்...

    பதிலளிநீக்கு
  9. சென்ற பகுதியும் படித்துவிட்டோம்...தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  10. நிறைய வாசிப்பும் துல்லியமான நடையும் உங்கள் எழுத்தில் தெரிகின்றன.

    காலத்தின் நிகழ்வுகளைக் கொண்ட கதைப்பின்னல் தற்பொழுது கதை நடப்பதுபோல உள்ள சூழலை உருவாக்கிவிடுகிறது.

    அருமை

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி