திங்கள், 15 செப்டம்பர், 2014

சந்தோஷ விரு(ந்)து

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் எனக்கு விருது. இம்முறை எங்கள் தேவகோட்டைக்காரரான சகோதரர் திரு.கில்லர்ஜி அவர்களிடமிருந்தும் மணப்பாறை ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களிடமிருந்தும் 'VERSATILE BLOGGER' (பன்முகப் பதிவர்) விருது கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி... சந்தோஷம்... நன்றி.

இந்த வாரத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றுதான் முதலில் பதிவை ஆரம்பித்து முடித்திருந்தேன். இந்தப் பதிவை பகிரப் போகும் போது எனக்கு ஒரு பின்னூட்டம் வந்திருக்க... ஆர்வக் கோளாறில் அதை முதலில் திறந்து பார்த்தால்... அட நம்ம சகோதரர் ஆசிரியர் பாண்டியன் அவர்கள் ஒரு விருதை அளித்திருப்பதைத் தெரிவித்திருந்தார். இரட்டிப்பு சந்தோஷத்தோட மூன்றாவதாய் ஒரு சந்தோஷம்... சகோதரருக்கு நன்றி.

முதலாவது சந்தோஷம் சனிக்கிழமை அன்று தேனம்மை இலட்சுமணன் அவர்கள் தனது சும்மா வலைப்பூவில் சாட்டர்டே ஜாலிகார்னர் என்ற பகிர்வுல் என்னைப் பற்றி பகிர்ந்திருந்தார்.  இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தோஷம்  என்னவென்றால் கில்லர்ஜி மற்றும் பாண்டியன் எனக்களித்த விருது.  

இங்கு ஒன்று சொல்லிக்க நினைக்கிறேன். தேனக்கா போன்ற செட்டிநாடு கண்டெடுத்த மிகச் சிறந்த எழுத்தாளரின் மனதில் தம்பியாய் இடம் பிடித்து அவரது வலைப்பூவில் எனக்கான... என்னைப் பற்றிய கட்டுரை வரவும்... எங்க தேவகோட்டைக்காரரான கில்லர்ஜி மற்றும் ஆசிரியர். பாண்டியன் மனதில் எனக்குக் கொடுக்கலாம் என்று தோன்றவும் காரணமாக அமைந்த என் தாய்த் தமிழுக்கு நன்றி. 

இணையத்தில் சுற்றி வரும் இந்த விருது நம்மைப் பற்றி மற்றவர்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக அமையும் விதமாக விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்... அதன்படி நாமும் செய்ய வேண்டுமல்லவா... சரி என்ன செய்யணும்... ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்...

முதல்ல என்னைப் பற்றி...

என்னைப் பற்றி நிறையத் தடவை சொல்லிட்டேன்... இருந்தாலும் சபை நாகரீகம் கருதி மறுபடியும் சொல்லிவிடுகிறேன்.. தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமமான பரியன்வயலில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எழுவரின் நான் ஆறாவது... அதனால் குமாரசாமி என நாமகரணம் சூட்டப்பட்டு பள்ளிப் பதிவேட்டில் குமார் ஆனேன். படித்தது... எம்.சி.ஏ.,  தற்போது ஊரில் இருக்கும் அன்பான மனைவி (நித்யா) அழகான, அறிவான செல்லங்கள் (ஸ்ருதி, விஷால்) பற்றிய முழுநேர நினைவுகளுடன் அபுதாபியில் கணிப்பொறியோடு காலம் கழிக்கிறேன்.   அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என இறைவன் கொடுத்த சொந்தங்களுடன் சச்சரவுகள் இல்லாமல் கடைசி வரை அன்போடு வாழ வேண்டும் என்று நினைப்பவன் சராசரி விவசாய குடும்பத்தான்.  

மற்றபடி கதை, கவிதை. கட்டுரைகள் எழுதுண்டு... நல்லா எழுதுவேனான்னு எல்லாம் கேட்கக் கூடாது... ஏதோ எழுதுவேன்... எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக சீனா ஐயா வலைச்சரத்தில் எனக்கு இருமுறை ஆசிரியப் பணி கொடுத்ததும் பலரால் பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள். மனசு நாங்கள் கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர். அதையே வலைப்பூவுக்கு வைத்தேன். ஊர்ப் பெயரைச் சொல்வதில் சந்தோஷம் கொள்பவன் என்பதால் பேருக்கு முன்னே 'பரிவை' என சுருக்கமாக வைத்து எழுத ஆரம்பித்தேன். தற்போது வலை நட்புக்களுக்கு 'பரிவை' சே.குமார் 'மனசு' குமாராயிட்டேன். 

நான் கிறுக்கிய சில கிறுக்கல்கள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. இதற்கு மேல் சொல்ல இன்னும் அப்படி ஒன்று பெரிதாக சாதித்து விடவில்லை. சிலதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இருந்தும் அதற்கான நேரம் இன்னும் வாய்க்கவில்லை... காத்திருக்கிறேன்... காலம் சொல்லும் பதிலுக்காக...

(அப்ப முதலாவது படியைத் தாண்டியாச்சு...)

இரண்டாவதாக தளத்தில் விருதை பதியணும்...

நட்பு கொடுத்த விருதுல்ல... பதிஞ்சிட்டாப் போச்சு... 

(ரெண்டாவது படியை சுலபமாய் கடந்துட்டோமுல்ல..)

மூன்றாவதாக முத்தாக வருவது விருதினைக் கொடுத்த தளத்தைப் பற்றி...

சகோதரர். திரு. கில்லர்ஜி, முகத்தில் விருமாண்டி மீசையுடன் வீரனாய் நிற்கும் இவருக்குள் பொதிந்து கிடக்கும் சோகங்களைப் படித்த போது மனசு வலித்தது. மிகப்பெரிய சோகத்தோடு விலை மதிப்பில்லா இரண்டு பொக்கிஷங்களைச் சுமந்து வாழும் இவர் பூவைப் பறிக்க கோடாரி எதற்கு என்று கேட்டு தனது வார்த்தைகளால் தமிழைத் தழைக்கச் செய்கிறார். 

சகோதரர். ஆசிரியர். அ.பாண்டியன் அவர்கள் சாதாரண வலிப்போக்கனாய் வாழ்க்கையை கடந்து செல்கிறேன் என்று சொல்லி துடிப்புடன் வீரிய விதைகளாய் பகிர்வுகளைப் பகிர்ந்து தமிழ் அரும்புகளை மலரச் செய்து கொண்டிருக்கிறார். 

இவர்கள் இருவரிடமும் நாங்கள் பெற்ற விருதுக்காக என் சார்பாகவும் நண்பர்கள் சார்பாகவும் மீண்டும் நன்றி.

(மூன்றாவதாய் சொன்னது உதட்டளவில் அல்ல... மனசுக்குள் இருந்து... 
அப்படா மூணாவது படியையும் தாண்டிட்டோமுல்ல......) 

இனி கடைசிப் படியான நாலாவது... 10 பேருக்கு விருதைப் பகிரணும்...

இங்கதான் சிக்கலே ஆரம்பம்... யாருக்கு கொடுத்தாங்க... யாருக்கு கொடுக்கலைன்னு கண்டுபிடிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்... ஏன்னா இந்த விருது வலைப்பூவில் சுத்தி வருது... வர்ற பதிவெல்லாம் விருது... விருதுன்னு வந்துக்கிட்டே இருக்கு... இவருக்கு கொடுக்கலாம்ன்னு மனசு நினைச்சா அவரு 'ஹையா விருது வாங்கிட்டேன்னு' பதிவை பறக்க விட்டுடுறாரு... தேடித்தேடி பிடிக்கலாம் என்றாலும் நான் நினைக்கும் சிலருக்கு கிடைத்திருக்கலாம்... சிலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம்.... 

அதனால... 

அதனால... 

அதனால.... 

அட எத்தனை அதனால... என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு... எங்களை வச்சி காமடி கீமடி பண்ணலையேன்னு வடிவேலு கணக்கா நீங்க பாக்குறது தெரியிது... இருங்க சொல்றேன்...

என்னைத் தொடரும் அந்த '311' பேருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்க்றேன்.... எல்லோரும் எடுத்துக்கங்க... 

விருது எடுங்க... கொண்டாடுங்க...

(நாலாவது படியில குதிச்சு ஓடி தப்பிச்சாச்சு... டேய் குமாரு ஓடிருலே...)

அட சொல்ல மறந்துட்டேனே... நன்றி மறப்பது நன்றல்லவே... எனவே  இதுவரை மனசில் வைத்து விருது கொடுத்த பிரம்மாக்களை மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்கிறேன்

விருது கிடைத்த வரிசையில்...
பத்மாக்கா, பா.ராஜாராம் சித்தப்பா, 'சிநேகிதன்' அக்பர், நண்பர் ஸ்டார்ஜன் (ஷேக்), மனோ அம்மா, சகோதரி ஆனந்தி, சகோதரர் அப்துல்காதர், ஜலீலா அக்கா, சகோதரி. பிரஷா, ஆசியா அக்கா, முனைவர் குணசீலன், ரமா அக்கா, சாகம்பரி அக்கா, நண்பர் எல். கே, ஐயா வை.கோ, தற்போது இந்த வரிசையில் அண்ணன் கில்லர்ஜி, சகோதரர். அ.பாண்டியன்.

அப்புறம் இந்தப் பகிர்வின் முடிவாய்...

ஏதோ எழுதினோம்... பத்திரப்படுத்தினோம்... பத்திரிக்கைகளுக்கு அனுப்பினோம்... என்று இருந்த எனக்கு இன்று வலைப்பூவின் மூலமாக உலகின் மூலை முடுக்கெல்லாம் உறவுகள்... அறிஞர்கள், புலவர்கள், பேராசியர்கள், தமிழாசிரியர்கள், ஆசிரியர்கள், ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், தோழன்கள், தோழிகள் என உறவுகளைக் கொடுத்தும்... சந்தோஷத்திலும் துக்கத்திலும் முகம் தெரியாமல் மனம் கொடுத்து வாழும் உறவுகளொடு என்னைப்  பயணிக்கவும் வைத்த இறைவனுக்கும் தமிழுக்கும் நன்றி. 

(உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்த விருது இன்னும் சில தினங்களில் விருது அலமாரியை அலங்கரிக்கப் போய் விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்) 

-'பரிவை' சே.குமார்.

16 கருத்துகள்:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே...
    இன்னும் பல விருதுகள் உங்களை வந்தடைய விருப்பங்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களைத் தொடரும் 311 பேருக்கும் விருதை பகிர்ந்தளித்மைக்கு நன்றிகள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. விமரிசையாய்த் தந்த விரு(ந்)து அமர்க்களம்!

    மிகச்சிறப்பாகப் பதிவிட்டுள்ளீர்கள்!
    வாழ்த்துக்கள் சகோ!

    உங்களிடமிருந்து விருதைப் பெறும் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இரட்டை வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  5. மகிழ்வு தந்த விருதுக்கு மனம் நிறைய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. நகைச்சுவை ரெவுடி ...

    பதிலளிநீக்கு

  7. தங்களைத் தொடரும் 311 ந(ண்)பர்களுக்கும் கொடுத்து மிகப்பெரிய ''மனசு''க்காரர் என நிரூபித்து என்பதை விட்டீர் நண்பரே... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் சமர்ப்பணத்தை ஏற்று அருளினோம் !வாழ்த்துகள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
  9. மேலும் பல விருதுகளைப் பெற வேண்டும்.. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் குமார்.

    பதிலளிநீக்கு
  11. நல்வாழ்த்துகள் குமார்!

    பதிலளிநீக்கு
  12. மனமார்ந்த நல்வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள்.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி