முந்தைய பதிவுகளைப் படிக்க...
***** ***** ***** ***** ***** *****
9. கோபம் கொள்ளும் மனம்
முன்கதைச் சுருக்கம்.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்க முடிவு செய்கிறான்.
இனி...
"மாப்ளே... நேர கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடை போ..." என்றான் ராம்கி.
"எதுக்குடா..." - பழனி.
"அதான் மத்தியானமே சொன்னேன்னுல்ல... ஆனந்த விகடன் வாங்கணுமின்னு"
"அதுல என்னடா அப்படி வந்திருக்கு.."
"வா... புத்தகத்தை வாங்கி என்ன இருக்குன்னு காட்டுறேன்..."
"ம்..."
புத்தகத்தை வாங்கி பரபரவெனப் பிரித்தான். கவிதைகள் வெளியாகியிருந்த பக்கத்தில் கண்களை மேயவிட்டான். புவனா பேர் இருக்குதான்னு தேடினான். பேரே இல்லை... சை... எதுக்கு அவ பொய் சொல்லணும் மனசு வலித்தது. அவனது ஆவல் சப்பென்று போக முகத்தில் இருந்த சந்தோஷம் மின்சாரம் போன திரையரங்கமாக இருள் அப்பிக்கொண்டது.
"ஏய்... என்னடா ஆச்சு... சந்தோஷமா வந்தே... சப்புன்னு ஆயிட்டே..."
"ஒண்ணுமில்ல... சரி வா போலாம்..."
"இதுல என்ன இருக்கு... எதுக்கு வாங்கினே..."
"சும்மாதான்... வாடா..."
"நீ போ... நான் வரல... என்கிட்ட மறைக்கிற அளவுக்கு முக்கியமான விசயம் உன்கிட்ட இருக்குன்னா அப்புறம் உன்கூட நான் எதுக்கு... நீ போயிக்க..."
"டேய்... எதுக்குடா கோபப்படுறே... அவ கவிதை வந்திருக்குன்னு சொன்னா அதான் பாக்கலாம்ன்னு வாங்கினேன்..."
"எவ...?"
"அதான்டா புவனா..."
"ஓ... இம்புட்டுத்தூரம் வந்தாச்சா... எங்ககிட்ட அவ ஒண்ணும் சொல்லலைன்னு சொன்னே..."
"எல்லார்கிட்டயும் இத சொன்னா அவ லவ் பண்றா அது இதுன்னு எதாவது சொல்லுவாங்க... சும்மா பேசினதுக்கு கதை கட்டுவாங்க... அதான்..."
"சரி சும்மா பேசினே... சரி.... அவ சொன்னதை நம்பி புத்தகம் வாங்குற அளவுக்கு வந்திருக்கே... அப்புறம் காதல் இல்லாம் என்ன இது..."
"அதெல்லாம் இல்லடா.. சும்மா பிரண்ட்லியாத்தான் வாங்கிப் பார்த்தேன்..."
"சும்மா சொல்லி அவ உன்னைய டெஸ்ட் பண்ணிப் பாத்திருக்கா... நீ நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு புத்தகத்தை வாங்கிட்டே..."
"பிரண்டோட எழுத்துன்னா வாங்கிப் பார்க்கச் சொல்லுமுல்ல அப்படித்தாண்டா வாங்கினேன்..."
"சரி... மாப்ளே.... எதா இருந்தாலும் யோசிச்சு இறங்கு... அந்த சாதிக்காரனுவா கொலை வரைக்கும் போவாய்ங்க... நமக்கு அதெல்லாம் சரிப்படாது அம்புட்டுத்தான்... நீ போ நான் சரவணன் வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்..." என்றபடி சைக்கிளைத் திருப்பினான்.
அடுத்த நாள் கல்லூரி மரத்தடியில் சைக்கிளை நிறுத்தியவன் எதேச்சையாக திரும்ப, புவனா தோழிகளுடன் வகுப்பறை நோக்கி போய்க் கொண்டிருந்தாள். அவனைக் கடக்கும் போது புன்னகைக்க ஆனந்த விகடன் வருத்தத்தில் திரும்பிக்கொண்டான்.
"அலோ" பின்னால் குரல் கேட்டு திரும்பினான். புவனா அருகில் நின்றாள். பேசாமல் நின்றான்.
"தெரிஞ்சவங்கங்கிறதாலதான் சிரிச்சேன்... சும்மா எல்லாரையும் பார்த்து சிரிக்க நான் ஒண்ணும் பைத்தியமில்லை... பேசாம போறதுன்னா போங்க... திரும்பிக்கிறீங்க..." கோபமாகக் கேட்டாள்.
"நீங்க எதுக்குங்க எங்கிட்ட பொய் சொன்னீங்க...?"
"என்ன பொய்... எப்பச் சொன்னேன்..."
"அது சரி... ஆனந்த விகடன்ல கவிதை வந்திருக்குன்னு சொன்னீங்க... இந்தா இருக்கு இதுல எங்கங்க வந்திருக்கு?" கோபமாக புத்தகத்தை அவளிடம் நீட்டினான்.
"இதுக்குத்தான் இம்புட்டா... சரி நேத்து நான் சொன்னப்போ வேண்டா வெறுப்பாக் கேட்டீங்க.... என்ன கவிதை... என்ன பேர்ல வந்திருக்குன்னு கேட்கணுமின்னு தோணலை உங்களுக்கு... எங்க எங்க அண்ணனோ அவனோட பிரண்ட்ஸோ வந்துருவாங்கன்னு பயந்து போயி நின்னீங்க... அப்புறம் புக்க வாங்கி தேடிட்டு இல்லைன்னா நான் என்ன செய்யிறது..." என்றபடி புத்தகத்தைப் பிரித்து "இந்தாங்க வாழ்க்கைப் பயணம்ன்னு இருக்குல்ல அதைப் படிங்க..." என்று அவனிடம் திருப்பி நீட்டினாள்.
வாங்கியவன் முதலில் பேரைப் பார்த்தான் 'கவிதைப்பிரியா'ன்னு இருந்தது. கவிதையை வாசித்தவன் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியந்தான்.
"இதுல கவிதைப்பிரியான்னு...." மெதுவாக இழுத்தான்.
"நாந்தான்... சும்மா புனைப்பெயர் வச்சி எழுதுறேன்... அப்புறம் எங்கிட்ட பேசுறதுனால எங்க அண்ணன் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டான். என்னைப் பற்றி அவனுக்கு நல்லாத் தெரியும்... பயப்படாதீங்க.. ஓகே பார்க்கலாம்... வாறேன்..." என்றபடி வகுப்பறை நோக்கி நடந்தாள்.
ராம்கி மீண்டும் அந்தக் கவிதையை வாசித்துப் பார்த்து கவிதைப்பிரியாவை ரசித்தான். சைக்கிள் கேரியரில் இருந்து நோட்டையும் டிபன் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு வகுப்பிற்கு கிளம்ப அவனுக்கு அருகில் 'சர்ர்ரென்று...' தனது யமாஹாவை கொண்டு வந்து நிறுத்தினான் வைரவன்.
(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
நல்ல தொடர்
பதிலளிநீக்குவாங்க சுரேந்திரன் ராஜேந்திரன் அவர்களே...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..