(படம் : கூகிள்)
கிராமத்து நினைவுகளை அப்ப அப்ப கொஞ்சம் மீட்டிப் பார்ப்பதுண்டு. அப்படி இன்று எனக்குள் வந்து சென்ற நினைவு அம்மாவுடன் சேர்ந்து நெல் அவித்த நாட்கள் குறித்தாகும். சரி அதை கிராமத்து நினைவுகளில் பகிரலாம் என எழுதியாச்சு...
வயலில் அறுவடை செய்து களத்துக்கு கொண்டு வந்து அடித்து காயவைத்து மூட்டைகளாகக் கற்றி பின்னர் மறுநாட்களில் மீண்டும் காயவைத்து தூற்றி சுத்தம் செய்து மச்சுக்குள் (நெற்குதிர்) கொட்டி வைப்போம்.
கிராமத்து வீடுகளில் எல்லாம் நெல் கொட்டி வைக்கும் மச்சு என்பது ஒன்று இருக்கும். எங்கள் வீடு மாடமாளிகையோ கூட கோபுரமோ இல்லை... சிறிய ஓட்டு வீடுதான்... வீட்டில் முதலில் இருப்பதை திண்ணை (மோப்பு) என்போம் அதற்கு அடுத்தது ஆல்வீடு (ஒருவேளை ஹால் என்பது ஆல் என்று மாறியிருக்குமோ என்னவோ) எங்க வீடு இது இரண்டையும் கொண்டது. திண்ணையில் பத்துக்குப் பத்து அறை அளவுக்கு மச்சு கட்டியிருப்போம். அதன் மேலே பாத்திரங்கள், களைக்கொட்டு, கதிர் அருவாள்கள் மற்றும் சிலவற்றை போட்டு வைத்திருப்போம். மச்சின் மேல் புறம் நடுவில் ஒரு ஆள் இறங்கி ஏறும் அளவுக்கு பலகையால் அடைத்து வைத்திருப்போம். மச்சின் முன்புறம் கீழிருந்து சற்றே உயரமான இடத்தில் வட்டவடிவில் ஒரு ஓட்டை இருக்கும் அதையும் அடைத்து வைத்திருப்போம்.
ஆல்வீட்டில் ஒரு சாமி அறை இருக்கும் அதற்குள் சாமிப்படங்களைத் தவிர மர பீரோக்கள் முக்கியமான பாதுகாக்க வேண்டிய பொருட்களை வைத்து பூட்டி வைத்திருப்போம். வீட்டின் பின்னே ஒரு மாட்டுக் கசாலை. முன்னால் அடுப்படி அதை ஒட்டியிருக்கும் இடத்தில் சிமெண்ட் போட்டு தென்னங்கீற்றால் ஒரு கொட்டை போட்டு வைத்திருப்போம். சரி வீட்டு நினைவுக்கு அப்புறம் போகலாம். நெல் நினைவுக்குப் போகலாம் வாங்க.
நல்லா காய்ந்த நெல்லை கொண்டு வந்து மச்சுக்குள் கொட்டி வைப்போம். ஒரு சில வருடங்கள் மச்சு நிறைந்து இடமில்லாம் மூட்டைகளாக கட்டி வைப்பதும் உண்டு. அப்போதெல்லாம் அப்பா மச்சுக்குள் இத்தனை பொதியிருக்கு என்று கணக்கு வைத்திருப்பார். அவர் கணக்கெல்லாம் நமக்குத் தெரியாது.
நெல் அவிப்பதற்கு அம்மா தேர்ந்தெடுக்கும் நாள் பெரும்பாலும் சனி, ஞாயிறுதான்... அப்பத்தானே நாங்கள் வீட்டில் இருப்போம். மச்சுக்குள் நெல் அதிகமிருந்தால் பிரச்சினை இல்லை முன்பக்கம் இருக்கும் வட்ட வடிவ ஓட்டையைத் திறந்து கொட்டாப் பொட்டியில் (பணமட்டை நாறில் உருவாக்கியது) பிடித்து வைப்போம். அம்மா அதிகாலையில் எழுந்து எப்பவும் நாங்கள் நெல் அவிப்பதற்காக போட்டிருக்கும் 'ஃ' வடிவாக வைத்திருக்கும் மூன்று கல்லின் மீது நெல் அவிக்கும் பெரிய அண்டாவை வைத்து முதல் நாள் கொண்டு வந்து போட்ட கருவைச் சுப்பிகளையும் பனைமரத்தின் சில்லாமடைகளையும் போட்டி அடுப்பைப் பற்ற வைக்க நாங்கள் நெல்லைக் கொண்டு வந்து கொட்டி அண்டாவை முக்கால் அளவுக்கு நிறைத்து தண்ணீரும் மோந்து ஊற்றி வைக்க, கொஞ்ச நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். கொதி வந்ததும் சாக்கை வைத்து இறுக மூடி விடுவாரக்ள். நன்றாக அவிந்ததும் தண்ணீரை வடித்து கொட்டாப்பெட்டி மற்றும் கூடைகளில் அவிந்த நெல்லை அள்ளி வைத்து நன்றாக நீர் வடிந்ததும் களத்தில் கொண்டுபோய் காய வைப்போம்.
மச்சுக்குள் இருந்து நெல் அள்ளுவதே ஒரு கலைதான் போங்க... நிறைந்து இருந்தால் பிரச்சினை இல்லை. முன்பக்கம் இருக்கும் ஓட்டை வழியாக சுலபமாக நெல்லை பெட்டிகளில் பிடித்துவிடலாம். குறைந்து அடிமட்டம் வரும்போது மேல்புறமாக திறந்து ஒருவர் இறங்கி நெல்லைக் குவித்து முன்பக்க ஓட்டை வழியாக தள்ளிவிட வேண்டும். பள்ளியில் படிக்கும் போதெல்லாம் மின்சாரம் இல்லை. அப்போ இறங்கி டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு தள்ள வேண்டும். வேர்க்க ஆரம்பித்ததும் நெல் தூசி மேலில் பட்டு அரிக்க ஆரம்பித்துவிடும். நாளாக நாளாக அந்து என்ற பூச்சியும் நிறைய இருக்கும். உள்ளே இறங்குபவரை மொய்த்து எடுத்துவிடும். அதில் இறங்க எனக்கும் தம்பிக்கும் சண்டையே நடக்கும். பின்னர் யாராவது ஒருவர் இறங்க ஒருவர் பெட்டிகளில் பிடித்து அம்மாவிடம் கொண்டு செல்வோம்.
அடுத்த பிரச்சினை நெல் காயப்போடும் பொட்டலில் ஆரம்பிக்கும்... வீட்டுக்கு அருகில் இருக்கும் பொட்டலில் போட நினைத்தால் வேறு யாராவது விளக்குமாற்றைப் போட்டு இடம் பிடித்துவிடுவார்கள். அக்கா ரொம்ப உஷாரா இருந்து அதிகாலையிலேயே விளக்குமாற்றைப் போட்டு வைத்து அதன் பிறகு மாட்டுச்சாணியைக் கரைத்து நன்றாக தெளித்து கூட்டி வைத்துவிடும். நெல்லைக் கொட்டி காய வைப்பது என்பது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி 2 மணி வரை அடிக்கடி நெல்லைக் கிளறிவிட்டு காய வைக்க வேண்டும். அப்போது யாராவது ஒருவர் அங்கயே உட்கார்ந்து இருந்து மாடு ஆடு தின்னுவிடாமல், கோழி கலைத்துவிடாமல், காக்கை வந்து சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நெல்லோடு சேர்ந்து வெயிலில் காய்வதற்குப் பதில் மாடு மேய்க்கப்போனால் பசங்களுடன் கம்மாயில் ஆடலாம், செட்டியார் தோட்டத்தில் எளநீ வெட்டிக் (தெரியாமல்தான்) குடிக்கலாம் என்பதால் எனக்கும் தம்பிக்கும் மீண்டும் சண்டை வரும். ஜெயிப்பது பெரும்பாலும் தம்பியாகவே இருக்கும். நெல்லைக் காயப் போட்டுவிட்டு அங்கிருக்கும் மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு க்ரைம் நாவலோ பாக்கெட் நாவலோ படிக்க வேண்டியதுதான். அம்மா காபி போட்டுக் கொடுத்துவிடுவார். அப்பா தேவகோட்டை போனால் மலையாளத்தார் கடையில் அப்பம் வாங்கிக் கொண்டு வருவார். பொட்டலில் நெல்லைப் பார்த்துக் கொள்ளும் நமக்கு இரண்டு கிடைக்கும்.
மழை வருவது போல இருந்தால் உடனே அள்ளிவிடுவோம். இல்லையென்றால் நல்லா காயவைத்து அள்ளி மூட்டைகளில் வைப்போம். இரண்டு மூன்று நாட்கள் நன்றாக காய வைத்து அரைக்கப் போகும் அன்று கொஞ்ச நேரம் நிழக்காய்ச்சலில் போட்டு (அப்பத்தான் நெல் உடையாமல் இருக்கும்) அரைக்க கொண்டு போவோம். அப்பாவும் நானும் ஆளுக்கொரு சைக்கிளில் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் அரைத்து வருவோம். அது பெரிய கதையாக இருக்கும் அதை பின்னொரு பதிவில் பார்ப்போம்.
இப்ப என்ன வருத்தம்ன்னா விவசாயமும் பொய்த்துப் போச்சு... எங்க வீட்ல மச்சையும் இடித்து எடுத்தாச்சு... இப்போ பத்துக்குப் பத்து இடம் திண்ணையில் கூடியாச்சு. நெல் காயப்போட்ட களங்களெல்லாம் மாட்டுச் சாணமும் குப்பையுமாய்... நெல் அவிக்கும் அண்டா பரணில் பத்திரமாய்... எல்லாம் இழந்து இப்போ மில்லில் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
-'பரிவை' சே.குமார்.
திண்ணை... சிறு வயதில் என்னென்ன விளையாட்டுக்கள்...! இன்று எல்லாமே காணாமல் போய் விட்டது... அண்ணன் தம்பி இனிய சண்டையை ரசித்தேன்...
பதிலளிநீக்குஇது போல தொடர்ந்து எழுதுங்க
பதிலளிநீக்குபடியளந்தார் பண்டைத் தமிழர்! நாம் எப்படி இருக்கிறோம்..?
பதிலளிநீக்குநமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக் கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறாரு ......' என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.
படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'பாஸ்ட் புட்' கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விஷயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.
நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.
'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.
இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.
இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.
இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விஷயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.
என்ன அது..?
சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.
பதிலளிநீக்குஅந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விஷயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.
முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.
ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?
இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.
இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.
ஏன் அப்படி..?
ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.
இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.
இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?
நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது
இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?
யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்..?
fb
கிராமிய மணம் கமழ்கிறது
பதிலளிநீக்குகிராமிய மணம் கமழ்கிறது
பதிலளிநீக்குநினைவுகளை மீட்க உதவியமைக்கு நன்றி,குமார்!இப்பெல்லாம் எங்க ..................................ஹூம்!
பதிலளிநீக்குஇரண்டு வருடங்களுக்கு முன்புவரை நெல்லை அரைத்து தான் அரிசி .இப்பொழுது 25 கிலோ சிப்பம் ஏதோ பழைய நினைவுகள்!...
பதிலளிநீக்குவாங்க தனபாலன் சார்...
பதிலளிநீக்குகிராமத்து வாழ்க்கை என்பது எனக்கு மிகவும் பிடித்தமானது.
தற்போது அனுபவிக்கும் சூழல் இல்லாமல் போய்விட்டது... வருத்தம்தான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஜோதி அண்ணா....
மிகவும் அருமையாக ஒரு பதிவாகவே தந்துவிட்டீர்கள்...
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க குட்டன் சார்...
பதிலளிநீக்குகிராமத்து வாழ்க்கையை பற்றி எழுதினால் மிகவும் சந்தோஷமாக எழுத வருகிறது என்பதே உண்மை....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க யோகராஜா...
பதிலளிநீக்குதொடர்ந்து எனது பதிவுகளுக்கு உங்கள் கருத்துக்களை வழங்கி வருகிறீர்கள்...
கிராமத்து வாழ்க்கை என்பது சந்தோஷமான ஒன்றுதான்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீனிவாசன்...
பதிலளிநீக்குஉண்மைதான்... இப்ப எல்லா வீட்டிலும் கடையில் வாங்கும் அரிசிதான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மனம் கிராமத்துக்கு பயணித்துவிட்டது நண்பரே...
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை...
வைக்கோல் போரில் ஆனந்தமாக குதித்து விளையாடியதும், விளையாடி முடித்தபின் அது தரும் சுல்-சுல் அரிப்பை சுகமாக சொரிந்துவிட்டதும், ஞாபகம் வருகிறது.
பதிலளிநீக்குஅருமை! அருமை! இது தான் உங்களுக்கே உரித்தான கிராமீய மணம் வீசும் எழுத்து குமார்! வெந்து கொண்டிருக்கும் நெல்லின் வாசம் இங்கே வரை வருகிறது!!
பதிலளிநீக்குகிராமத்து நெல்அரிசி சோறு தனிச்சுவையானது. உங்கள் பகிர்வும் சுவைக்கின்றது.
பதிலளிநீக்குசிறுவயதில் எங்கள் பக்கத்துவீட்டில் நெல்அவித்து காயபோட்டுவிடுவார்கள் குருவிகள் காகம் கோழி கூட்டாக உண்ணும் நாங்களும் ரசிப்போம்.கைகளால் அளைந்தும் விளையாடுவோம் :)
உலர்ந்த நெல்லை உரலிட்டு குத்தி கைக்குத்து அரிசியை மண்பானையில் இட்டு சோறாக்குவார்கள் சிவப்பாக மணமாக இருக்கும்.
நெல் அவிக்கும் மணம் அருமையாக இருக்கும்.அதை காய வைக்கும் போது கைகளால் அழகாய் மேலே இருந்து கிழே வரும் வரை துழாவி விடுவார்கள். கோடு கோடாய் மிக அழகாய் இருக்கும். திருவெண்காட்டில் பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஜோதிஜி அவர்களின் பின்னூட்டம் அருமை.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க மகேந்திரன் சார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க செங்கோவி...
பதிலளிநீக்குஅதையெல்லாம் நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். வைக்கோல் படப்பெல்லாம் இப்போ காத்தாடுது...
அதெல்லாம் ஒரு கனாக் காலமாயிருச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குவாங்க அம்மா...
ரொம்ப நன்றி...
அந்த வாசம்...ம்.. அருமையா இருக்கும்மா.... வெந்த நெல்லை தோல் நீக்கி சுவைப்பதில் அலாதி இன்பம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குவாங்க மாதேவி அக்கா...
ஆமாம்... புத்தரிசி சோறு என்றால் சுவையே தனி.
கைக்குத்தல் அரிசியின் சுவை வித்தியாசமானது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க கோமதி அக்கா..
பதிலளிநீக்குநாங்கள் நெல்லைக் கிண்டுதல் என்று சொல்வோம். காலால் கிளறிவிடுவோம்... நல்லா காயவேண்டும் என்றால் கையால் வரிவரியாக கிளறுவோம்... பார்க்க அழகாக இருக்கும்.
உங்கள் வாழ்த்தை அண்ணனுக்குச் சொல்லி விடுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நாங்க சொந்தமா ரைஸ் மில் வட்சு இருந்தோம் ஆனா இப்போ இழுத்துத் பூட்டியாச்சு
பதிலளிநீக்குஇரசித்து வாசித்தேன் குமார். வயல், தோட்டத்துடனான பல நினைவுகளைக் கிளப்பி விட்டது தங்கள் அருமையான பகிர்வு. ஜோதிஜி அவர்களின் பின்னூட்டங்கள் சுவாரஸ்யமான பல தகவல்களை அறியத் தந்தன.
பதிலளிநீக்குநெல் அவிப்பது, காய வைப்பது, நெற்குதிர், நாட்கதிர் வழிபாடு இவற்றைப் பார்த்து வளர்ந்த அனுபவத்தில் நான் எழுதிய கதையொன்று இங்கே: வயலோடு உறவாடி