திங்கள், 28 மார்ச், 2011

சுவடுகள்




"இப்ப எங்க இருக்கே...?"

"கிளம்பிக்கிட்டே இருக்கேன்டி... எப்படியும் நீ வாரதுக்குள்ள நான் வந்துடுவேன்..."

"இப்படித்தான் சொல்லுவே... ஆனா வாராவாரம் நான் தான் போறவனையும் வர்றவனையும் பாத்துக்கிட்டு நிக்கணும்."

"இல்ல இன்னைக்கு உனக்கு முன்னால அந்த இடத்துல நிப்பேன். போதுமா... வந்து சேரு... சும்மா மிரட்டாம..."

"ஆமா... உங்களை மிரட்டிட்டாலும் ஐயா அப்படியே பயந்து அடங்கிடுவிய... அட ஏன் நீ வேற... நான் கிளம்பிட்டேன்... காக்க வச்சிடாதே..."

"சரி தாயே... வந்து சேரு... இன்னும் அரைமணி நேரத்துல நான் அங்க இருப்பேன்" செல்போனை அணைத்து சட்டைப் பைக்குள் போட்டபடி வண்டியை ஸ்டார்ட் பண்ணினான் நவீன்.

***

அதே நேரம் தனது சிவப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவில் இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள் அகிலா.

'எப்பவும் அவன் வந்து காத்திருந்ததா சரித்திரமே இல்லை. இன்னைக்கு வாராறாம். பாப்போம் அவனா நானான்னு... எங்கயாவது சுத்திட்டு வந்துட்டு டிராபிக் அதிகமா இருந்துச்சு, அப்பா அப்பத்தான் ஒரு வேலை கொடுத்தாரு, அண்ணன் வந்துட்டான்னு ஆயிரங்கதைகள் சொல்லுவான். அவனுக்கு மட்டும்தான் கதைகள் கிடைக்குமா என்ன... நமக்கும்தான் கிடைக்கும், இன்னைக்கு ஒருவேளை லேட்டாப் போனால் நாமளும் ஒரு கதையை எடுத்துவிடலாம் என்று நினைத்தபடி அந்த தெருவில் திரும்பியவள் அவனைப் பார்த்துவிட்டாள். 'இவன் சந்துருதானே...' ஆமா என்று உள்மனசு சொல்ல "ஏய்... சந்துரு... சந்துரு..." என்று கத்தினாள்.

வண்டியை ஸ்லோப் பண்ணி திரும்பியவன் இவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

"ஏய் அகி... எப்படிடி இருக்கே?"

"நல்லா இருக்கேன்டா... ஆமா நீ பாளையங்கோட்டைதானே... எப்படா சென்னைக்கு வந்தே?"

"நாம திருச்சியில படிப்ப முடிச்சதும் கொஞ்சநாள் ஊருப்பக்கம் இருந்தேன். அப்புறம் சும்மா இருந்து என்ன செய்ய... அதான் நண்பன் ஒருத்தனோட உதவியில சென்னை வந்து ஒரு சின்ன கம்பெனியில வேலை பார்த்தேன். இப்ப ஒரு ஆறுமாசமா மல்டி நேசனல் கம்பெனியில வேலை. நல்ல சம்பளம்... பரவாயில்லடி."

"நீ இப்ப வேளச்சேரியிலயா தங்கியிருக்கே...?"

"ஆமாண்டி... பஸ்ஸ்டாண்ட்டுக்குப் பக்கத்து சந்துல பிரண்ட்ஸோட இருக்கேன். ஆமா நீ திருச்சிதானே... இங்க எங்கயும் வேலை பாக்கிறியா?"

"அப்பாவுக்கு கவர்மெண்ட் ஜாப்ல அவருக்கு சென்னைக்கு மாற்றல் கிடைச்சது. அதான் இங்க வந்தோம். கவுஸிங் போர்டுல பி பிளாக்ல இருக்கோம். ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்கிறேன். அப்புறம் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாடா...?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க. எந்தங்கச்சி மேரேசுக்கு நம்ம செட்ல எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்க நினைச்சேன். யாரும் தொடர்புல இல்லை. சிலருக்கு ஆட்டோகிராப் அட்ரஸை வச்சு இன்விடேசன் அனுப்பினேன். நிறைய ரிட்டனாயிடுச்சு... சில பேர் மட்டும் வந்தாங்க. உன்னைய பாத்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?"

"எனக்கும்தான்டா... அதுக்கப்புறம் கவிதாவை பாத்தியாடா..."

அவன் மௌனமாக நிலம் பார்க்க, "ஏண்டா... பாக்கலையா.?"

"இல்லடி... அந்தப் பிரச்சினைக்கு அப்புறம் எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்லைங்கிறதும் அந்த பிரச்சினைக்கு ஜவகர்தான் காரணம் நான் இல்லைங்கைறதும் உனக்கெல்லாம் தெரியும்தானே.."

"ஆமா.. நாங்கதான் அவகிட்ட எடுத்துச் சொன்னோமே...?"

"சொன்னீங்க... ஏனோ தெரியலை அதுக்கு அப்புறம் அவ என்னைய விட்டு விலக ஆரம்பிச்சா... சரியின்னு நானும் விலகிட்டேன். அப்புறம் அவளுக்கு கல்யாணம் ஆன விவரத்தை மகேசு சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சரிவிடு... அவ எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும். காதலிச்ச என்னைய அவ ஒதுக்கிட்டான்னு சாபமெல்லாம் விடுற அல்பையில்லை நான்... ஆமா கல்யாணம் பண்ணிட்டியா..."

"அதுக்குள்ளயும் ஏன்டா அந்த வட்டத்துக்குள்ள விழச் சொல்றே... வீட்ல அலையன்ஸ் பாக்கனுமின்னு நிக்கிறாங்க. நாந்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமின்னு சொல்லி கடத்திக்கிட்டு வாரேன். நீ பண்ணலாமுல்ல... கவிதா நெனப்பா?"

"சே... அப்படியெல்லாம் இல்ல. ஒரு தங்கச்சி மேரேஜ் முடிஞ்சிருச்சு. இன்னொரு தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்கிறாங்க. அப்புறம்தான் மேரேஜ் பத்தி யோசிக்கணும். நீ இங்க யாரையும்..."

"ஏன்டா நிறுத்திட்டே...லவ் பண்றியான்னுதானே கேக்குறே... ஆமா காலேசுல லேசா இருந்துச்சு... உனக்குத் தெரியுமே?"

"ஏய்... நவீன்..."

"ஆமா அவந்தான் இப்ப ரெண்டு பேரும் தீவிரமா இருக்கோம். வீட்ல சொல்லி பெர்மிஷனோட மேரேஜ் பண்ணனுமின்னு ரெண்டு பேருக்கும் எண்ணம்."

"ரொம்ப நல்லவன். அவன் எங்க இருக்கான்?"

"அவங்க பேமிலி இங்கதான் வடபழனியில இருக்காங்க. நவீன் சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான்"

"அப்படியா... அவனை ரொம்ப கேட்டேன்னு சொல்லு... சரிடி உன் நம்பரைக் கொடு கால் பண்றேன். பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க. இன்னைக்கு சண்டேயில பீச்சுக்குப் பொயிட்டு ராத்திரிதான் வருவோம்."

"உன் நம்பரை சொல்லு மிஸ்டு கால் கொடுக்கிறேன். போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாடா."

"கண்டிப்பா... வாரேண்டி... பாத்துப்போ..."

"ஒகேடா..."

***

அதே நேரம்...

அடுத்த பதிவில் முடியும்.

**************************

((இது தொடர்கதை அல்ல... சிறுகதைதான்.  இந்தக் கதை சில மாதங்களுக்கு முன்எழுதிய கதை என்பதால் சற்றே பெரியதாக இருக்கின்றது. போன சிறுகதைக்கே நண்பர்கள் நீளம் அதிகம் என்று சொன்னதால் "சுவடுகள்" இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. படித்து கருத்துக் கூறுங்கள்.  மீதி அடுத்த பதிவாக...))

-'பரிவை' சே.குமார்.

Thnaks for Photo : Google

வியாழன், 24 மார்ச், 2011

மாமச்சீரு...




"இங்க பாருங்க நான் சொல்றத சொல்லிப்புட்டே... இதுக்கு மேலயும் அக்கா... நொக்கான்னா நல்லாருக்காது பாத்துக்கங்க..."

"ஏண்டி இப்புடி அத்தெரிஞ்சு பேசுறே... நம்ம குடும்பத்துல நடக்கிற நல்ல விசயம்... அக்காவுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கா..?"

"போதும் போதும் ஒக்காவுக்கு செஞ்சது... நாம கஷ்டப்படுறப்போ எவ வந்து பாத்தா... நல்லா ஒக்கா போட்டு ஆட்டுறாக..."

"இங்க பாரு... நமக்கு அவுக பாத்தாக பாக்கலை... அத இப்பவா பாக்குறது... முத முதல்ல புள்ளைக்கு கல்யாணம் வைக்கிது... தாய்மாமன் முறைக்கு நாம செய்யிற மொறைய செஞ்சுதானே ஆகணும்..."

"நா... புள்ளயளை வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டப்ப இந்தா வச்சுக்கண்ணு ஒரு பத்து ரூபா கொடுக்க நாதியில்ல... நாதியத்த பய குடும்பத்துல... இதுல மாமச்சீரூ ஏத்தணுமாம் மாமச்சீரு..."

"அப்ப அவங்க என்ன கோட்டையிலயா இருந்தாக... அவங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருந்தாக... ஏண்டி பழசையெல்லாம் பேசிக்கிட்டு... மாமச்சீரு செய்யத்தான் வேணும்... உன் பேச்சையெல்லாம் கேக்கமுடியாது..."

"ஆமா... எப்பவும் உங்க குடும்பந்தான் உங்களுக்கு பெருசு... எம் பேச்சை கேட்டிருந்தாத்தான் இன்னும் நல்லாயிருந்திருப்பமே..."

"ஏய்...தேவையில்லாம பேசாம உன் வேலை என்னவோ அதைப்பாரு... அதை விட்டுட்டு வாய்க்கு வந்தபடி பேசினே... மவளே செவுலு பிஞ்சு போயிரும்..."

"அத ஒண்ணுந்தான் இதுவரைக்கும் செய்யலே... அதையும் செஞ்சிருய்யா... உன்ன கட்டிக்கிட்டு நா... என்ன சொகத்தை கண்டேன்... எம் பேச்சுக்கு எப்பவும் மருவாதியில்ல... எங்கப்பனை சொல்லணும்.... நல்லவன்னு சொல்லி நாதியத்துப் போனவன் வீட்டுல கட்டி வச்சுட்டு அவரு பாட்டுக்கு மசுரு போச்சுன்னு போயி சேந்துட்டாரு... நானுல்ல அவதிப்படுறேன்..." என்று இருவது வருசத்துக்கு முன்னர் கல்யாணம் பண்ணி வைத்து வாழ்ந்து மறைந்த அப்பனையும் சேர்த்து திட்டினாள்.

"அம்மா... அம்மோவ்..."

"இருடா வெளங்காதவனுக்கு பொறந்தவனே..."

"அம்மா... இப்ப சாப்பாடு போட வாரியா... நாங் கெளம்பவா... எனக்கு காலேசுக்கு நேரமாச்சும்மா..."

"இரு... வாரேன்... என்ன எக்கேடு கெட்டாலும் அப்பனுக்கும் புள்ளைக்கும் வடிச்சுக் கொட்டத்தானே நா... இருக்கேன்."

"இப்ப என்னம்மா... அப்பா மேல உள்ள கோபத்தை எங்கிட்ட காட்டுறியா... ஒஞ்சோறும் வேணாம்... ஒண்ணும் வேணாம்... சும்மா கத்தாதே..." என்று பதிலுக்கு அவனும் கத்தியபடி சைக்கிளை எடுக்க...

"டேய் வெறுவாக்கெட்ட பயலே... அப்பேம் புத்திதானே உனக்கும் இருக்கும்... போ... போ... ராத்திரிக்கு வா... புளித்தடவி வைக்கிறேன்..." என்று அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே இதுக்கு மேல இங்க இருந்தா மறுபடிக்கும் வேதாளம் நம்ம மேல தாவும் என்ற நினைப்பில் டீக்கடைப் பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.

"அவுகதான் காலேசுக்குப் போறாக... நீங்க எங்க போறீக?" என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நடையைக் கட்டினார்.



"வாண்ணே... எப்ப ஊர்ல இருந்து வந்தே..."

"நேத்து வந்தேம்ப்பா..."

"பொழப்புத் தழப்பெல்லாம் எப்புடி போகுதுண்ணே..."

"அதுக்கென்ன நல்லாப் போகுதுப்பா... ஒரு டீக் கொடு..." என்றபடி அன்றைய தினசரியை புரட்ட ஆரம்பித்தார்.

"அடடே... வா செல்லையா... எப்ப வந்தே..." என்றபடி அருகில் அமர்ந்தார் பால்கார சண்முகம்.

"நேத்து வந்தேன் மாமா... அத்தை பசங்களெல்லாம் நல்லாருக்காங்களா.. அப்பறமா வீட்டுப் பக்கம் வாரேன்.."

"சரிப்பா... என்ன திடீர்ன்னு வந்திருக்கே..."

"அக்கா பொண்ணுக்கு நிச்சயம் பண்ணுதுல்ல..."

"அட ஆமா... நாந்தான் மறந்துட்டேன்... உங்க குடும்பத்துல நடக்கிற மொத கல்யாணமுல்ல... மாப்பிள்ளை நல்லா படிச்சிட்டு லண்டன்ல இருக்கானாமே..."

"ஆமா...."

"நல்ல சம்பந்தமா புடிச்சிருக்கு... பரவாயில்லை... சீர் செனத்தி நிறைய செய்யிறாப்புல இருக்கும்... இல்லையா... ஆமா மாமக்காரன் நீ... முத முதலா மொறை செய்யப் போறே... உங்கப்பா இருந்திருந்தா கேக்கவே வேணாம்... அந்தளவுக்கு பண்ணி சபைய நிறைச்சிருப்பாரு... எந்தக் கொறையுமில்லாம நல்லா பண்ணிருப்பா..."

"அதெல்லாம் நல்லா பண்ணிருவேன் மாமா...அதுகளுக்கு என்னைய விட்டா யாரு மாமா இருக்கா..."

"உம் பய மூத்தவனா இருந்தா ரெண்டுக்கும் முடிச்சைப் போட்டிருக்கலாம்... சரி விடு சின்னவ மக படிக்கிதுல்ல... அதை புடிச்சி கட்டி வச்சிடலாம்..."

"அதெல்லாம் நம்ம காலத்துல மாமா... இப்பல்லாம் நாம யாரையும் கம்பல் பண்ண முடியாது.கடவுள் சித்தம் என்னவோ அதுபடித்தான் நடக்கும்."

"ஒம் பொண்டாட்டி மாமச்சீரெல்லாம் ஏத்த முடியாதுன்னு சொன்னதா உங்க அத்த சொல்லிக்கிட்டிருந்தா... அவளுக்கு இதுல சந்தோஷமில்லையா என்ன..." மெதுவான குரலில் கேட்டார்.

"அப்படியெல்லாம் இல்ல மாமா... எதாவது கோவத்துல சொல்லியிருப்பா... "

"அதானே... இருக்கதே ஒரு மாமன்... நீயும் ஒண்ணும் செய்யலைன்னா எப்படி சிறக்கும்ன்னேன்... அப்புறம் சபையில நாலு பேரு நாலு விதமா பேசினா நமக்குத்தானே அசிங்கம்... சரிப்பா... சாயங்காலம் வீட்டுப் பக்கம் வா... தோட்டத்துல நடவு நடக்குது... ஆளுக வந்தாச்சான்னு ஒரு எட்டு பாத்துட்டு ....தலையாரிக்கிட்ட ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு... அவரு வீட்டுக்கும் பொயிட்டு வாரேன்..."

"சரி மாமா..."

"ஏண்ணே... பெரியக்கா பொண்ணுக்கா கல்யாணம்...."

"ஆமாப்பா... நாளைக்கு நிச்சயம் வச்சிருக்கு..." என்றபடி காசை கொடுக்க

சில்லறையை தேடியபடி, "சின்னப்புள்ளைங்களா நீங்க தோள்ல தூக்கிக்கிட்டே திரிவிய... அதுக்கு கல்யாணம்.... நாளும் பொழுதும் என்னமாப் போகுது..." என்றான்.

"காலத்தை நாம கட்டிப் போட முடியுமா என்ன... சரிப்பா... வாரேன்" என்றபடி மீண்டும் வீட்டுக்கு நடக்கலானார்.



"ஒங்கக்கா போன் பண்ணினாக... தம்பி வந்தாத்தான் போனெல்லாம் வரும்..."

"வந்தோடனே ஒம் பஞ்சாயத்தை ஆரம்பிக்காம என்ன சொன்னுச்சுன்னு சொல்லு..."

"என்னத்தை சொல்லப் போறாக... நாளைக்கு நிச்சயம் பண்றதுக்கு சாமானெல்லாம் வாங்கணுமாம்... வரச்சொன்னாக..."

"சரி... குளிச்சிட்டு வாரேன்... சாப்பாடு போடு..."

"எல்லா ரெடியாத்தான் இருக்கு... திங்கிறதுக்குத்தான் ஆளக்காணும்... சரி உங்கக்காவுக்கு போன் பண்ணி எனக்கு வேலையிருக்கு நீங்க பாத்து வாங்குங்கண்ணு சொல்லுங்க..."

"என்ன வேலையிருக்கு... நிச்சயத்துக்குதானே வந்தேன்... அதுவும் நம்ம வீட்டு விசேசந்தானே... நாமட்டுமில்ல நீயும் கிளம்பு போயிட்டு வந்திடுவோம்..."

"உங்களையே போக வேண்டாங்கிறேன்... என்னையும் கூப்பிடுறீக... எங்கக்கா வாறாளாம்... அவங்க வாறதால நீங்க அங்க போக வேண்டாம்..."

"இங்க பாரு உங்கக்காவை பாக்கிறதவிட எங்கக்கா வீட்டுக்கு போறதுதான் சரி... சும்மா வீம்பு பண்ணாதே.. நீ வேணா இரு... உங்கக்கா வந்தா இருக்கச் சொல்லு... நான் பொயிட்டு வந்திடுறேன்..."

"அதானே எங்க வீட்டு மனுசங்களைத்தான் உங்களுக்கு சுத்தமா புடிக்காதே... இன்னைக்கு நீங்க நல்லா இருக்கீங்கன்னா அதுக்கு எங்க வீட்டாளுங்கதான் காரணம் தெரிஞ்சுக்கங்க..."

"ஆத்தா... நல்லாயிருப்பே... நேத்து வந்ததுல இருந்து இந்தப் பாட்டத்தான் பாடுறே... நீ என்ன பாடுனாலும் நான் செய்யப் போற மாமச்சீருல்ல எந்தக் கொறையும் வைக்கப் போறதில்லை... நீ ஊரு பூராம் சொன்னாலும் சேரி... கல்யாணத்துக்கு வரலைன்னாலும் சேரி... நான் கல்யாணத்துல ஒரு தம்பியா எம்பங்கை செய்யத்தான் போறேன்... சும்மா கத்திக்கிட்டு இருக்காதே..."

"என்னைய மதிச்சிருந்தாத்தான்....." வாசலில் கார் வந்து நிற்கவும் பேச்சை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்தாள்.

காரிலிருந்து இறங்கிய அக்காவையும், அத்தானையும் பார்த்ததும் நடந்த சண்டையை முகத்தில் மறைத்து அக்கா, அத்தான் என்றாள்.

"வாங்கண்ணே... வாங்கண்ணி..."

"என்ன தம்பி... எப்ப வந்தீங்க... நிச்சயத்துக்காக வந்திருக்கீங்களோ..."

"ஆமா... உள்ள வாங்க"

சில நிமிட பேச்சுக்களுக்குப் பிறகு, "இருங்கண்ணே... அக்கா வீட்டு வரைக்கும் பொயிட்டு வந்துடுறேன்... "

"ஆமாமா... நிச்சயக்கார வீடு... வேலையிருக்கும் நீங்க பொயிட்டு வாங்க... நாங்க கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறோம்..."

"இருங்க... நான் வந்துடுறேன்... அப்புறம் போகலாம்" என்றபடி சாப்பாட்டை நினைக்காமல் வண்டி எடுத்தான்.

"என்ன வடிவு... மாமச்சீரு செலவு ஒண்ணு வருது... என்ன செய்யப் போறீங்க..."

"அட ஏங்க்கா... இது வரைக்கும் அதுக்காத்தான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு..."

"எதுக்கு சண்டை போடுறீங்க... நல்லா செய்ய வேண்டியதுதானே... நம்ம வீட்டுக் கல்யாணம்..."

"என்னக்கா... அவங்களையெல்லாம் பத்தி உனக்கே தெரியும்... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட நாயேன்னு கூட திரும்பிப் பாக்காதவங்க... நாங்க கஷ்டப்பட்டப்போ நீங்கள்லாம்தான் தூக்கி விட்டீங்க... அவங்களுக்கு எதுக்கு செய்யணும்..."

"அடியே... அவங்க செஞ்சாங்களா... செய்யலையான்னு... பாக்கிற நேரமாடி இது.அவங்க கூட பொறந்த ஆம்பளைப்பிள்ளை உன்னோட வீட்டுக்காரர்தான்... நாளைக்கு சபை சிறக்க செஞ்சாத்தானே... மாமக்காரன் நல்லா செஞ்சாய்யான்னு ஊரு பேசும்..."

"உங்கக்கா சொல்றதுதான் சரி..." என்று இடையில் புகுந்த அத்தான் "வடிவு... இப்ப நாங்க எங்க போறோம் தெரியுமா... எங்கண்ணன் பொண்ணுக்கு நகை வாங்கத்தான் போறோம்..." என்றார்.

"நகையா..?"

"ஆமாடி... கல்யாணம் வைப்பாரு போல தெரியுது... இன்னைக்கு அவரவிட நாங்க நல்லாயிருக்கோம்... யாருக்கும் யாரும் உதவின்னு செஞ்சுக்கலைன்னாலும் பொறந்த பொறப்புக்குள்ள சண்டை சச்சரவு இல்லாம எல்லா நல்லது கெட்டதுலயும் எல்லாருமா நின்னு செஞ்சிருக்கோம்... புள்ளைங்களும் யாரையும் வித்தியாசமா பாக்காமா எல்லாரையும் அம்மா, அப்பான்னுதான் கூப்பிடுதுங்க... அதான் இவரு கூட கல்யாணத்தப்போ பணமா கொடுத்தா அண்ணனுக்கு செலவுக்கு ஆகுமின்னாரு... ஒரு அஞ்சு பவுனுல நகைய எடுத்துக் கொடுத்த அந்தப் புள்ளயும் சந்தோஷப்படும்... கல்யாணச் செலவுல முன்னப்பின்ன வந்தா அப்ப போட்டு சரி பண்ணிக்கலாமுன்னு சொல்லி கூட்டியாந்திருக்கேன்..."

"...."

"இங்க பாரு சீரு செய்யிறது நம்ம கடமை... அதுவும் மாமன்காரன் முறைய யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அந்தப்புள்ள யாரு நீங்க தூக்கி வளத்ததுதானே... அவங்க நமக்கு பாக்கலை அதனால எதுவும் செய்யக்கூடாதுன்னு சண்ட போடுறதுக்கு என்ன இருக்கு... அன்னைக்கு நிலமையில ஓ நாத்தனா கணவனை இழந்துட்டு நின்னப்போ நீ போயி உதவுனியா இல்லையே... ஏதோ சொத்து சொகம் இருந்ததுனால கஷ்டப்பட்டு பால் மாடு வச்சி புள்ளைங்களை படிக்க வச்சி இப்ப நல்ல நிலமையில இருக்கு... அப்ப எல்லாரும் கஷ்டப்பட்டிங்க... இப்ப எல்லாரும் நல்லாயிருக்கீங்க... அப்புறம் எதுக்கு வேண்டாத பேச்சு... நீங்க செய்யிற சீருல சபை சிறக்கணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... சும்மா அந்த மனுசனுக்கிட்ட கத்துறதை விட்டுட்டு ஓ... வீட்டு கல்யாணமாட்டம் சந்தோஷமா நின்னு செஞ்சு வையி... என்ன நான் சொல்றது..."

"சரிக்கா... நாந்தான் பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவருகிட்ட சண்டை போட்டுட்டேன்... சிறப்பா செய்யச் சொல்றேங்க்கா... ஓந்தங்கச்சியா பொறந்தும் ஓ... குணம் இல்லாம போச்சேக்கா... இனிமே இது மாதிரி இருக்க மாட்டேங்க".

"நீயும் நல்லவதாண்டி... கால நேரம் உன்னைய இப்படி சிந்திக்க வச்சிருக்கு... விடு... சரி ஓ... நாத்தனாருக்கு போன் பண்ணி நானும் வாரேன்னு சொல்லிட்டு கிளப்பு நாங்க அப்படியே விட்டுட்டுப் போறோம்... "
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 மார்ச், 2011

கிராமத்து நினைவுகள்: தண்ணீர்... தண்ணீர்...




இப்பல்லாம் எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தையும் மனச்சோர்வு தின்று விடுகிறது என்பதே உண்மை. சரி விசயத்துக்கு வருவோம்.

நான் முன்பு கிராமத்து நினைவுகள் மற்றும் மனசின் பக்கம் என்ற தலைப்பில் சில பதிவுகள் எழுதினேன். இரண்டுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது என்பது உண்மை. இருந்தும் தொடர முடியாமல் வேலைப்பளூவின் காரணமாக மனச்சோர்வு. அதன் காரணமாக படிப்பது எப்பவோ குறைந்து விட்ட நிலையில் இப்போது எழுதுவதும் குறைந்துவிட்டது.

இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் கிராமத்து நினைவுகளில் தண்ணீர் குறித்த எழுதலாம் என்று தோன்றியதின் விளைவே இந்த தண்ணீர்... தண்ணீர்...

நாங்கள் படிக்கும் காலத்தில் எங்கள் ஊரில் ஒரே ஒரு அடிபைப் மட்டுமே. அந்தப் பைப் மோட்டார் பொருத்தப்பட்டு இன்றும் எங்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் தண்ணீர் அடித்துத்தான் எடுக்க வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் முன் 10, 15 குடம் தண்ணீர் எடுத்து வீட்டில் நிரப்பி வைத்துச் செல்ல வேண்டும். தினமும் இதுதான் வேலை. நான் மட்டுமல்ல... என் தம்பி மற்றும் மற்ற பசங்கள் எல்லாரும் தினமும் செய்வோம். அதன்பின் பெரிய இரும்பு வாளிகளில் தண்ணீர் அடித்து நிரப்பி பைப்பின் அருகிலேயே வைத்து எல்லாரும் பேசிக் கொண்டே குளிப்போம்.

அடிபைப் தண்ணீர் குடிக்க அவ்வளவாக நல்லா இருக்காது. சோறு வடித்தால் பழைய சாதம் நல்லாவே இருக்காது. அதனால் நல்ல தண்ணி தனியாக எடுக்கப் போக வேண்டும். சைக்கிள் ஓட்டாத காலங்களில் குடி தண்ணீருக்காக அக்காக்கள் தலையில் குடம் சுமந்து 4,5 கிலோ மீட்டர் நடந்தே சென்று செங்கல் சூளைக்காக வெட்டப்பட்டிருக்கும் கிணறுகளில் அவர்களின் திட்டுக்களை வாங்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவார்கள். ஊரில் உள்ள இளம் பெண்களும் பெரியவர்களும் வாளியும் கையுமாக செல்லும் போது அந்த வயதில் அவர்களின் கஷ்டமும் வலியும் தெரிவதில்லை.

தினமும் தண்ணீர் எடுக்க வருகிறார்களே... திட்டினாலும் கேக்க மாட்டேங்கிறார்களே என்று கிணறுகளில் செடி கொடிகளை வெட்டிப் போட்டு வைத்து விடுவார்கள். ஒவ்வொரு கிணறாக பார்த்து தண்ணீர் எடுத்து வருகிறோம் என்று சொல்லுவார்கள். அதை கேட்பதோடு சரி... அது குறித்து யோசிப்பதே இல்லை.

நானெல்லாம் பிறக்கும் முன் தண்ணீர் கஷ்டம் போக்க எங்கள் ஊர் கம்மாய்க்குள் கிணறு வெட்டி உரையெல்லாம் இறக்கியிருந்தார்கள். சில காலம் அதில் தண்ணி தூக்கியதாக சொல்வர்கள். அப்புறம் யாரோ சில புண்ணியவான்கள் செத்த ஆடு, மாட்டின் இளங்கொடி என சிலவற்றை அதில் போட, அந்தக் கிணறும் பாழாகிப் போனதால் மீண்டும் குடம் தூக்குவதாக அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். இன்னும் அந்தக் கிணறு பிரயோசனமற்று இருக்கிறது.

ஏழாவது படிக்கும் போட்டு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, எட்டாம் வகுப்பு படிக்கும் போது நல்லா ஓட்டியதால் அப்புறம் சைக்கிளில் தண்ணீர் எடுக்கும் பணியைத் தொடங்கினோம். நாங்கள் நாலஞ்சு பேர் சைக்கிளில் இரண்டு குடங்களை கட்டி தொங்கவிட்டு தண்ணீர் தேடிப் போவோம். நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவோம்.

ஒரு கிணறை பிடித்து வைத்து தொடர்ந்து எடுத்து வந்தோம். எல்லாரும் ஒரே இடத்தில் தொடர்ந்து எடுக்க... அங்கயும் பிரச்சினை வந்தது... அப்புறம் அடுத்த கிணறு.... இப்படியாக நாலைந்து வருடங்கள் சைக்கிள் தண்ணீர் எடுத்து வந்தோம்.

சில நாட்கள் போக மனமின்றி மறுத்தால் நீ புள்ளையா இந்த சேகரு ரெண்டு தடவை எடுத்துக்கிட்டு வந்திட்டான். சரவணன் கூட பொயிட்டான்னு அம்மாகிட்ட திட்டு வாங்கணும். அப்புறம் முனங்கிக்கிட்டே குடத்தை எடுத்து கட்டிக்கிட்டு தண்ணீர் எடுத்து வந்த நாட்கள் கண்ணுக்குள் இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்றன.

கம்மாய் நிறைந்து இருந்தால் தண்ணீர் எடுக்கப் போகவேண்டியதில்லை. கம்மாத் தண்ணியத் தூக்கிட்டு வந்து தேத்தாங்க் கொட்டை போட்டு சுத்தம் பண்ணி வைத்து பயன் படுத்துவார்கள். அப்பல்லாம் எங்க வீட்ல மண்ணு போட்டு அதுமேல மண் பானை வச்சி தண்ணி வச்சிருப்பாங்க. கம்மாய்த் தண்ணி அதுல ஊத்தி வச்சி வெட்டி வேரு போட்டு இருக்கும். சும்மா சில்லுன்னு இருக்கிற தண்ணிய செம்பு நிறைய மோந்து அப்படியே மடமடன்னு குடிக்கும் போது வயிறும் மனசும் சில்லுன்னு இருக்கும் பாருங்க... அப்பா அந்த சந்தோஷத்துல கடுகளவுகூட இப்ப குடிக்கிற பிரிட்ஜ் தண்ணியில இல்லை.



அதுவும் பள்ளிக்கூடத்துல இருந்து வரும் போது ஓடிவந்து கம்மாயில இறங்கி தண்ணிய லேசா ஒதுக்கி விட்டு அப்படியே வாய் வச்சி குடிச்சா மனசும் வயிறும் நிறையும். ஒரு சில பேரு ரொம்ப சுத்தமானவங்க மாதிரி கையில அள்ளி அள்ளி குடிப்பாங்க... நமக்கெல்லாம் அப்படியே வாயை வச்சி உறிஞ்சதான் பிடிக்கும். அந்த சுவையே தனிதான்.

நல்ல மழை பெய்யும் போது மழையோட நாங்கள்ளாம் கிளம்பி போயி குழக்கால் அங்க இங்க எல்லாம் சரி பண்ணி எங்க கம்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்போம். கம்மாய் நிறைந்திருக்கும் காலத்தில விடுமுறை நாட்களில் மதிய வேளையில் தண்ணீருக்குள் கிடப்பதே ஒரு சுகந்தான். அதுவும் மழை பெய்யும் போது கண்மாய்க்குள் குளித்தால் மேலே சில்லிப்பாகவும் உள்ளே இளஞ்சூடாகவும் இருக்கும் பாருங்க... வாவ்... அதையெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த சுகம் தெரியும்.

இப்ப எங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவரின் சீரிய பணியால் ஊருக்குள் தண்ணீர் தொட்டி கட்டி போர் போட்டு எல்லா வீட்லயும் பைப் போட்டு வச்சிருக்காங்க. காலையிலும் மாலையிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இப்ப மழைக்காலத்தில் கண்மாய் நிரம்பினாலும் சில நாட்களில் பாசம் படர்ந்து பயன்படமால் போய்விடுகிறது. சைக்கிளில் குடம் கட்டும் காலம் எங்களோடு போய்விட்டது.

ஊருக்குப் போகும் போதெல்லாம் நாங்கள் அடித்து அடித்து தண்ணீர் எடுத்த அடிபைப்பில் போய் தண்ணீர் பிடித்து அங்கயே குளிக்க ஆசையாக இருக்கும்.... இருந்து வீட்டுக்கே தண்ணீர் வருவதால் இங்கயே குளிடா என்று அம்மா சொல்லுகிறார்கள். எல்லாம் காலத்தின் மாற்றம்.

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photos from Google

திங்கள், 21 மார்ச், 2011

கட்சிகளும் காட்சிகளும்...




தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி அமைப்பதில் அதிக சிரத்தை காட்டிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் நடத்திய நாடகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி தவித்த தி,மு,க, கூட்டணிக்குள் தவறே செய்யாத தங்க கட்சி போல் காங்கிரஸ் கொஞ்சம் முரண்டு பிடித்தது... உடனே நம்ம கலைஞர் 'அ.தி.மு.க எதிரிக் கட்சி, காங்கிரஸ் துரோகிக் கட்சியின்னும் இனி அண்ணா வழியில் காங்கிரஸை எதிர்ப்போம்' என்றும் சினிமா டயலாக் எல்லாம் பேசி, வெளியில் இருந்து ஆதரவு, மந்திரிகள் ராஜினாமா என்று உதார்விட்டுப் பார்த்தார். ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் மசியவில்லை...

'ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்' என்று பாடிக் கொண்டே தொகுதி விசயத்தில் சிங்கும் அன்னையும் அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கவில்லை... யோசித்த கலைஞர் கூட்டிக் கழித்துப் பார்த்து தனக்கும் தன் மக்களுக்கும்(!!!) நன்மை கிடைக்கும் ஒரு முடிவோடு தில்லியில் தனது பரிவாரங்களை வைத்துப் பேசி அவர்கள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார்.

அது குறித்து காங்கிரஸ்காரர்கள் நாயன்மார்கள் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதி உடன் பிறப்புக்களுக்கு விளக்கம் கொடுத்தார். தனது அரசியல் சாதுரியத்தால் காங்கிரஸை வெளியில் விடாமல் பார்த்துக் கொண்டார். காங்கிரஸ் வேண்டாம் என்றோ இவ்வளவுதான் தருவேன் என்று மம்தா போலோ கடைசிவரை கலைஞர் நின்று பிடிக்க முடியவில்லை.

கொடநாட்டில் இருந்து தேர்தலுக்காக அவசரப் பயணமாக சென்னை வந்த ஜெயலலிதா கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டினார். அதன்படி மூன்றாவது சக்தியாக அவதரித்து இருக்கும் விசயகாந்த், சாதிக் கட்சிகள், கம்யூனிஸ்ட் என வளைத்து நல்லதொரு கூட்டணி அமைத்தார். சரி குடும்ப அரசியலுக்கு வேட்டு வைக்கும் இந்த தோழி அரசியல்ன்னு நெனக்கும் போதே ஜான்ஸிராணி தன்னிச்சையாக செயல்பட மூன்றாவது அணி அமையும் என்பது போன்ற மாய சுனாமி கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மையம் கொண்டு அப்படியே மறைந்தும் விட்டது. எல்லாரையும் இழுத்து மறுபடிக்கும் தேர் இழுக்க அம்மாவும் ரெடி ஆகியாச்சு.

கடந்த ஏழு வருசமாக அம்மா அணியில் இருந்து அம்மாவுக்காக தனது சிம்மக்குரலில் பேசி வந்த வைகோவை தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக்கு கூப்பிடாமல் கேவலப்படுத்தி கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் தொகுதிகளை அள்ளிக் கொடுத்து வைகோவை வைக்கோலாக மதித்த அம்மா, வைகோ தேர்தலை புறக்கணிக்கப் போறேன் என்றதும் ஐய்யா மாதிரி நீலிக் கண்ணீரோடு அன்புச் சகோதரி என்று கடிதம் எழுதுகிறார்.பாவம் வைகோ கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்ணீரோடு இருக்கிறார்.

அம்மாவோடு பிரச்சினை என்றதும் வெளியில் தனித்து இருக்கும் வைகோவை பார்த்துப் பேச கிருஷ்ண சாமிக்கோ கம்யூனிஸ்டுகளுக்கோ எண்ணம் வரவில்லை... எல்லாரும் விசயகாந்த பின்னால்... என்ன கொடுமை இது?
அம்மா உருவப் பொம்மை எரித்த தொண்டர்களை தே.மு.தி.க. எதுவும் சொல்லாத நிலையில் அம்மாவுக்கு எதிராக களம் இறங்கிய ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ கண்டித்த போது எல்லாரும் கேலி பேசினார்கள். ஆனால் அதில் அவரின் நல்ல உள்ளம் தெரிந்தது, தன்னை கேவலப் படுத்தினாலும் ஏழு வருடங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட நன்றிக்கடன் தெரிந்தது. இருந்து தேர்தலைப் புறக்கணிக்கும அவரது முடிவால் ம.தி.மு.க நிறைய இழக்கும் என்பதை அறியாமலா இருப்பார்... இருந்தும் எப்படி இப்படி ஒரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார்?

விசயகாந்த் மாபெரும் சக்தியாக உருவெடுத்து வந்தாலும் தேர்தலுக்குப் பின் கிடைக்கும் எம்.எல்.ஏக்களுடன் அம்மாவை விட்டு வெளியில் வந்தால் நல்லது இல்லையேல் இன்றைய வைகோவாய் நாளை விசயகாந்தும் மாறலாம்... ஏன்னா அம்மா எப்பவும் இறங்கி வருவதில்லை.

மூன்றாவது அணி அமையும் என்ற நிலை வந்த போது மனசுக்குள் மகிழந்த கலைஞர் வெளியில் அடுத்த கட்சிப் பிரச்சினைகளைப் பார்த்து சந்தோஷப்படுவன் நானல்ல என்றார். ஆனால் மருத்துவர் அய்யாவும், திருமாவும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள். எப்படியும் நாம ஜெயிக்கலாம் என்ற நப்பாசையில் பூரித்துத் சிரித்தார்கள். ராமதாசை நம்பி ஏமாந்த மக்கள் இன்னமும் அவர் பேச்சைக் கேட்டு ஏமாந்து கொண்டிருக்கிறார்களே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. திருமாவைப் பொறுத்தவரை தன் மக்களுக்காக உழைக்கும் தலைவராகத்தான் இன்னும் இருக்கிறார்...

மக்களைப் பொறுத்தவரை இலவசங்களுக்கு அடிமையாகி சில காலமாகிவிட்டது. பதவி வெறி பிடித்த தலைவர் கதாநாயகி என்று வர்ணித்து கிரைண்டர், மிக்ஸி என இலவசங்களை அடுக்குகிறார். நாம் இலவசங்களுக்கு மயங்கி அவர் சம்பாதிக்க வழி வகை செய்வோம் என்று அதீத நம்பிக்கை.

இலவசங்களை மட்டுமே நம்பும் அரசு தனது சாதனைகளை சொல்ல முடியுமா..? வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம் என்றோ... ஏழைகள் இல்லாத தமிழகமாக மாற்றினோம் என்றோ... சொல்ல முடியுமா? எப்படி சொல்வார்கள் பரம ஏழைகளுக்கு அரிசி இலவசம் என்றதும் எல்லாரும் பரம ஏழைகளாகி விடுகிறோம்... ஏழைகள் நிறைந்த தமிழகமாக மாறி வரும் போது எப்படி ஏழைகளே இல்லை என்று சொல்ல முடியும்?.

ஹிந்தி வேண்டாம் என்று சொல்லி நம்மை படிக்க விடாமல் அவர்கள் குழந்தைகளை மட்டும் படிக்க வைத்தவர்கள்தான் அவர்கள்... தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்லி லண்டனில் பேரன் பேத்திகளை படிக்க வைத்தவர்கள் அவர்கள். இலவசங்களால் நம்மை எழும்ப விடாமல் அமுக்கி வைப்பவர்கள்தான் அவர்கள்... தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளும் காட்சிகளும் மட்டுமே மாறுகின்றன. மாறாமல் மடிந்து கொண்டிருப்பது தமிழன் என்ற இனம் மட்டுமே.

இந்த முறை இலவசங்களுக்காக நமது தன்மானத்தை இழக்காமல் இயன்றவரை நல்லவர்களுக்கு வாக்களிப்போம். இனியாவது இலவசங்களின் பிடியில் இருந்து இறங்கி சுயமாக சிந்திக்க ஆரம்பிப்போம்.

வைகோ போல் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் நாம்... எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியின்னு பார்த்து வாக்களிப்போம்... இதுவரை தொகுதிக்குள் வராத எம்.எல்.ஏ.வுக்கு இந்த முறை வாக்களிக்க முடியாது என்று சொல்லுவோம். இயன்றவரை நல்லவன் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி பேதம் பார்க்காமல் அவனுக்கே வாக்களிப்போம்.

-'பரிவை' சே.குமார்.
 
Thanks : Phots from Google

ஞாயிறு, 20 மார்ச், 2011

பேரு... பெத்த பேரு... (தொடர் பதிவு)

உனக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள் என்பதை உண்மையாக... சத்தியமாக... உள்ளதை உள்ளபடி பதிவுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என எனது அன்பு அக்கா சுசி அவர்கள் விடுத்த அன்புக் கட்டளைக்கு செவி சாய்த்து மீண்டும் ஒரு தொடர் பதிவு எழுத வேண்டிய கட்டாயம். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

இப்பதான் நண்பர் அக்பரின் அழைப்பை ஏற்று காதல் பதிவு ஒன்று எழுதினேன். அந்த சூடு குறைவதற்குள் அடுத்த தொடர் பதிவு... சரி... நம்ம பேரைச் சொல்ல என்னங்க கஷ்டம்... சொல்லிட்டா போச்சு...

நாம் பொறந்தப்போ எல்லாரும் கூடி விழா எடுத்தோ... இல்ல நியூமராலஜி பார்த்தோ நமக்கு பேர் வைக்கலை. ஏன்னா சாலை வசதி கூட சரியா இல்லாத (இப்ப வசதிகள் பரவாயில்லை) ஒரு சிறிய கிராமத்தில் வானம் பார்த்த பூமியை நம்பி வாழ்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன்.

நாங்க மொத்தம் ஏழு பேருங்க... அதுல ஆறாவதுதான் நான். எனக்கு மூன்று அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி. அஞ்சாவது பொம்பளப்புள்ளையா பொறந்தா பஞ்சுன்னும் பசங்க பொறக்காம பொம்பளப்புள்ளங்களா பொறந்தா போதும் பொண்ணுன்னும் வைக்கிறது மாதிரி ஆறாவது புள்ளைன்னா முருகன் பேரு வைப்பாங்க.

நாம ஆறாவதா பொறந்ததால எங்க ஐயா (அம்மாவோட அப்பா) முருகன் பேரு வைக்கணுமின்னு ஆறுமுகம் அது... இதுன்னு ஏதேதோ சொல்லி வைக்க, திருத்துறைப்பூண்டியில குமாரசாமி ராஜா வீட்ல கணக்குப்பிள்ளை (Accountant) வேலை பார்த்த அப்பா, அவங்க மொதலாளி மேல உள்ள பாசத்துல குமாரசாமின்னு வச்சிருக்காரு. இதுல அப்பா நினைச்சதும் நடந்தாச்சு... ஐயாவின் ஆசையும் நிறைவேறியாச்சு.

நம்ம ஜாதகத்துல எல்லாம் குமாரசாமிதான். அப்பா வெளியூர்ல வேலை பார்த்ததால் எங்களை எல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிற வேலை எங்கம்மாவுக்கே... அவங்க எல்லாருக்குமே வச்ச பேரை வச்சபடியே விட்டுட்டு வீட்டுல கூப்பிடுறபடி பள்ளிக்கூடத்துல சேர்த்துருவாங்க... (நல்ல அம்மா).

அந்த வகையில ராமசாமி ரவிச்சந்திரனாகவும் உமையாள் பிரேமாவாகவும் ஆக குமாரசாமியான நான் பள்ளியில் குமார் என்று சேர்க்கப்பட்டேன். அதன்பின் எல்லா இடத்திலும் குமார் ஆனேன். எங்க ஊரு பெருசுங்களுக்கு குமார் அப்படின்னு கூப்பிட வராது... அதனால எங்க ஆயா முதக் கொண்டு எல்லாருக்கும் கொமருதான்... எங்கள் மக்கள் வஞ்சனையில்லாமல் கொமரு எப்ப வந்தே என்று விசாரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் கல்லூரியில் நண்பர்கள் (எங்கய்யா பேரச் சொல்லி கூப்பிட்டாங்க...) எல்லாருக்கும் பங்காளி... ஒருத்தனுக்கு மட்டும் மாப்பிள்ளை... அப்பா பேரு சேதுராமன் என்பதால் சிலருக்கு எஸ்.கே. எங்க தமிழ் ஐயாவும் எனது கல்வித் தந்தையுமான திரு. பழனி ராகுலதாசனுக்கு எப்பவும் தம்பி, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கும் போது மட்டும் பரியன்வயலார். என் ஐயா வீட்டில் எனக்கு கிடைத்த நட்புக்களுக்கு பண்ணையார்... இப்படி நிறைய பெயர்கள் கல்லூரி வாழ்க்கையில்...

சில காலம் வாத்தியாராக இருந்ததால் என் நண்பர்கள் சிலர் இன்னும் "வாத்தியாரே" என்றுதான் அழைக்கிறார். எங்கள் ஊரில் ஒரு சிலர் இப்போது சின்ன வாத்தியார் என்று கூப்பிடுகிறார்கள். (எங்க சித்தப்பா தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அதனால் அவர் பெரிய வாத்தியார் )

தமிழில் எழுதும் போது எனக்கு சே.குமார் என்று எழுதவே பிடிக்கும். எஸ்.குமார் என்று ஐயாவும் S.குமார் என்று சில நண்பர்களும் எழுதுவதுண்டு.

அப்புறம் பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதும் போது பரியன் வயல் சே.குமார் என்று போட்டதுண்டு... ஸ்ருதி என்று மகள் பெயரிலும் சில கதைகள் எழுதியதுண்டு.

அபுதாபிக்கு வந்த பின்னர் எனது அலுவலகத்தில் அரபிகள் கொமார் என்றுதான் ஆரம்பத்தில் அழைத்தார்கள்... இப்ப பரவாயில்லை குமார் என்று அழைக்கிறார்கள்.

பதிவுலகிற்கு வந்த போது சே.குமார் என்றுதான் வைத்திருந்தேன். பின்னர் ஊர் பெயரைச் சுருக்கி 'பரிவை' சே.குமார் ஆனேன். நான்கு வலைப்பூவையும் ஒன்றாக்கி மனசு என்ற வலையில் எழுத ஆரம்பித்தது முதல் பல நண்பர்களுக்கு 'மனசு' சே.குமார் என்றானேன்.

எனது திருமண அழைப்பிதழில் என் பெயரை குமாரசாமி என்றுதான் போட வேண்டும் என அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அம்மாவும் நானும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை... அதிலும் குமார்தான்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதும்போது KUMAR என்று எழுதாமல் KUMAAR என்று எழுது... உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்றார். எனக்கு அதில் நம்பிக்கையில்லாததால் KUMAR என்றே எழுதுகிறேன்.

இந்தப் பெயர் பணம் காசை சம்பாரித்துக் கொடுத்ததோ இல்லையோ நல்ல நண்பர்களைக் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. நல்ல மனைவி, அருமையான இரண்டு மக்கள் என வாழ்க்கையையும் நன்றாக்கியுள்ளது.

மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றோ... கூப்பிடப் பிடிக்கவில்லை என்றோ... வேறு பெயர் வைத்திருக்கலாம் என்றோ இதுவரை தோன்றவில்லை.

நான் எதாவது செய்தால் குமார் செஞ்சா சரியாத்தான் இருக்கும் என்றும் எதாவது ஒன்றை வெற்றிகரமாக முடித்து விட்டால் வெரிகுட் குமார் என்றும் முடியவில்லை என்றால் சரிடா குமார்... அடுத்துப் பார்த்துக்கலாம் என்றும் எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு. ஏனென்றால் குமாரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

இதுவரை யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியாததால் இதை தொடர இதுவரை எழுதாத என் அன்பு நட்புக்களை அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க....

நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

என்னுள்ளே... என்னுள்ளே... (தொடர்பதிவு)



காதல் படிக்கட்டுகளில் சாதம் வாங்கிச் சாப்பிட்டு நினைவுகளைச் சுமந்த பாரா சித்தப்பாவின் அழைப்பினை ஏற்று பாரா... பாராவாக தன் காதலை உருக்கிக் கொடுத்த என் அன்பு நண்பர் சிநேகிதன் அக்பர் அவர்கள் என்னைத் தொடரும்படி அழைத்திருந்தார்.

அலுவலகத்திலிருந்து வரவே இரவு 9 மணி ஆகிவிடுகிறது. மேலும் எனது கணிப்பொறியும் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுதால் அவர் அழைப்பை உடனே ஏற்கமுடியவில்லை, அதற்காக நண்பரிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இருந்தாலும் நான் பாட்டுக்கு செவனேன்னு வேலை உண்டு அறை உண்டுன்னு இருக்கது புடிக்கலை போல காதலப் பத்தி எழுது... அது... இதுன்னு ஒரு குடும்பஸ்த்தனை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாரு பாருங்க... அதுக்கு என்னங்க செய்யலாம் அவரை... சரி... பேசிக்கலாம்.

இங்கயே சொல்லிக்கொள்கிறேன்... நீங்கள் படிக்கப் போவது அடைகாத்து வைத்த நினைவல்ல... அதா வந்து விழுந்த கற்பனை... கலப்படமில்லா கற்பனை... 100% அக்மார்க் கற்பனை... இதுக்கு மேல என்ன சொல்லி புரிய வைக்கிறது... எப்படியும் என்னை எங்க வீட்டம்மாக்கிட்ட மாட்டிவிடுற மாதிரி பின்னூட்டம் போடத்தான் போறீங்க... இது தேர்தல் நேரம்... எனக்கு சாதகமான பின்னூட்டம் வந்தால் அழகிரியின் திருமங்கலம் பாணியில் கவனிக்கப்படும்... சரி வாங்க கற்பனைக் காதலுக்குள் போவோம்.... (ஸ்... அப்பா... எப்படியெல்லாம் முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கு...)

ரோஜாவில் முள் இருக்கு என்பதால் நாம் அதை வெறுப்பதில்லை. அதேபோல் காதல் வருகிறதோ இல்லையோ எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு காதலிக்கப் பிடிக்கவில்லை என்றோ நான் காதலித்தது இல்லை என்றோ சொன்னால் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதைதான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மலர்ந்தால் மட்டுமே காதல் என்று அர்த்தம் கொள்வோமேயானால் நாம் அறிந்தது அவ்வளவுதான் என்றே அர்த்தம். காதல் என்பது இயற்கை, பாடல், இசை, சினிமா, விளையாட்டு... இப்படி எதன் மீதும் வரலாம்.

காதல்... இந்த மூன்றெழுத்து எத்தனை மனங்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. இதன் வீரியத்தில் இன்பம் துன்பம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். இருந்தும் காதலிக்கும் அந்தத் தருணங்களை அனுபவிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்?

காதல் சாரலாய் இறங்கிய அந்தத் தருணம் இன்னும் பசுமையாய்... அவள்... தாவணியில் தரையிறங்கிய தங்க நிலா. நிலவில் பூத்து இதய வயலில் பதியமிட்டாள். இருவருக்குமான முதல் சந்திப்பு கல்லூரியில் நடந்த கட்டுரைப் போட்டியில்... அதில் இருவருக்கும் பரிசு கிடைக்க பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்ட புன்னகையே காதலின் தொடக்கம்.

அவள் அறிவியலை ஆராய்ந்த போதும் தமிழ் மீது காதல் கொண்டிருந்தாள். அந்தத் தமிழ்தான் இலக்கியத் தாகம் கொண்ட எங்களை நட்பு என்னும் இன்னும் பலமாக்கியது. ஆண்பால் பெண்பால் என்ற அர்த்தமற்ற நட்பு வட்டம் துறந்து நாங்கள் இணைத்த வட்டமோ பலவின்பால்.

ஆளுக்கொரு திறமை... ஆளுக்கொரு தாக்கம்... எங்கள் நட்பு வட்டத்தில் எண்ணங்களின் கருத்து மோதல்கள் நடக்கும் போதெல்லாம் மற்றவர் அறியா வண்ணம் எங்கள் கண்கள் மோதிக் கொள்ளும்... அப்போதெல்லாம் நட்பா... காதாலா... என்று அறியாமல் கழிந்தன பொழுதுகள்.

எத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் எங்கே என்று அவள் விசாரிக்கும் தோணியில் காதல் இருப்பதாக நண்பர் ஏற்றிவிட கனவுகளின் கோட்டைக்குள் கற்பனையாக வாழ்ந்தாலும் அந்த முகம் கண்டதும் எல்லாம் மறக்கும் என்னையும் சேர்த்து...

எதற்கும் பயப்படாத அவள் குணம் எல்லாத்துக்கும் யோசிக்கும் என் மனமும் ஒத்துப் போனதில் எனக்கே வியப்புத்தான். பெரும்பாலான மாலை வேளைகளில் என்னுடன் உரையாடியபடியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவள் வரும்போது கிண்டல்களையும் கேலிகளையும் சுமக்க முடியாமல் நெளியும் என்னை அவன் கத்துனா உனக்கென்ன... நம்ம பேசுறது அவனுக்கு பிடிக்கலை என்று சொல்லி தைரியமாக அவள் வீடு வரை வரும் அந்த திமிர் நிறைந்த குணம் மனசுக்குள் மையமிட்டது.

அவளைத்தேடி அவள் வகுப்பறைக்குச் சென்ற நாட்களை விட அவள் தேடி வந்த நாட்கள்தான் அதிகம்... அது வகுப்பறை என்றில்லை... மதிய வேளையில் நண்பர்களிடன் அரட்டை அடிக்கும் இடத்திற்கும் வருவாள். நண்பர்களிடம் எவ்வளவு சொன்னாலும் அவள் வரும்போது அண்ணி வந்தாச்சு என்று சப்தமாக சொல்லுவார்கள்...

அதைக் கண்டு கொள்ளாதது போல அவள் உதிர்க்கும் ஒற்றைச் சிரிப்பு ஆம் என்கிறாதா இல்லை என்கிறதா... புரியாமல் எகிறித் துடிக்கும் இதயத்தோடு டேய்... சும்மா இருங்கடா என்று நண்பர்களை அடக்க முயலும் போது என்ன சொல்றாங்க உங்க பிரண்ட்ஸ் என்று எதுவும் தெரியாதது போல அவள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அலையும் கண்களைக் கண்டு சிரிக்கும் அந்த நிமிடம்... அவளுக்குள் இருப்பது என்ன என்று தெரியாமலே கடந்து செல்லும்.

மூன்றாண்டுகள் நண்பர்கள் வளர்த்த எங்கள் காதல் பயிர் இருவருக்குள்ளும் இருந்திருக்கலாம்... ஆனால் அறுவடை செய்யவில்லை... ஆட்டோ கிராப் நோட்டில் எல்லாம் அவள் குறித்த கருத்துக்களை நண்பர்கள் இட்ட போதும் எங்களுக்குள் இருப்பது காதலா... நட்பா... கருத்துப் போராட்டம் மனசுக்குள்...

எனக்கு நண்பர்கள் பதிந்த ஆட்டோகிராப்பில் எழுத்துக்களாய் அவள்... அவள் மட்டுமே... எல்லாருக்கும் ஆட்டோகிராப் இட்டுக் கொடுத்தவள் நான் கேட்டபோது மட்டும் எதுக்கு ஆட்டோகிராப் போட வேண்டும் என்று மறுத்தாள்... மனசுக்குள் இருப்பது எழுத்தில் வருமென நினைத்தது நெஞ்சம்... எங்கே ஆட்டோகிராப்பில் கொட்டி விடுவோமோ என்று நினைத்தது போலும் அவள் நெஞ்சம்... கடைசி வரை மறுத்தவள் என்னிடமும் வாங்கவில்லை.

மறுநாள் ஆட்டோகிராப் நோட்டை குடு நான் பார்க்கணும் என்றவளிடம் மறுத்தபோதும் பறித்துச் சென்று படித்துத் தந்தாள். கொடுக்கும்போது அவள் சிவந்த முகத்தில் அரும்பிய புன்னகைக்கு அர்த்தம் என்ன..? நண்பர்களின் கருத்தை ஆமோதிக்கிறாளா... அலட்சியப் படுத்துகிறாளா... தெரியவில்லை...

காதல் இருவருக்குள்ளும் மலர்ந்திருந்த போதிலும் எதோ ஒன்று வெளிக்காட்ட மறுத்தது... அதனால் சொல்லாக் காதாலாகிப் போன வாழ்க்கையில் தண்டவாளமாய் விளைந்து போனோம்...

இன்றும் அவள் கொடுத்த பொருட்களும் அனுப்பிய வாழ்த்து அட்டைகளும் பொக்கிஷமாய்... சொல்லாமல் சொல்கின்றன எங்கள் காதலை...

கல்லூரி வாழ்க்கைக்குப் பின் தொடர்வுகள் அற்றுப் போன வாழ்க்கையில் குடும்பம் என்ற கூட்டுக்குள் போனாலும் இதயத்துக்குள் இன்னும் அவள் இருந்து கொண்டுதான் இருக்கிறாள்... அவளுக்குள்ளும் இருப்பான் இவன் என்பதில் துளியும் சந்தேகமில்லை..

இதைத் தொடர சகோதர சகோதரிகளை அழைப்பதைவிட நட்பை அழைப்பதே சாலச் சிறந்தது என்ற நம்பிக்கையில் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் மோகனன் இருவரையும் அழைக்கிறேன். காசா... பணமா... காதல்தானே.... மற்றவர்களும் எழுதுங்களேன்...

டிஸ்கி : சத்தியமா... காதலைப் பற்றி எழுதச் சொன்னதால்தான் இந்தக் கதை... இந்தக் கதையில் வரும் நான் நானல்ல...

-'பரிவை' சே.குமார்.

Photo From Google

புதன், 9 மார்ச், 2011

தமிழர்களே... தமிழர்களே...


தன்மானத் தலைவர்... தமிழர்களின் உயிர் நாடி... மக்களுக்காக வாழும் மனிதநேயம்... மக்கள் நலனுக்காக தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் அமர்ந்து அயராது உழைக்கும் செம்மொழி கண்ட எம்மொழிச் சிங்கம்... அண்ணாவின் அடிபற்றி ஆட்சி செய்யும் அட்சய பாத்திரம்... பாராட்டு விழாக்களின் பகலவன்... டாக்டர் கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படம் இரண்டு காட்சிகள் ஓடியதோ இல்லையோ... காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீட்டு நாடகம் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக ஓடியது.

நம்மளைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறதாலதான் இந்த வயசிலும் அவரு சிக்ஸர் அடிச்சு சதம் போடுறாரு... நாம இலவசங்களின் இயக்கத்தில் இயங்கும் சுய நினைவில்லா பதர்கள் என்பதால்தான் இலவசங்களால் நம்மை அடித்துப் போட்டு அவர் மக்களுக்காக ஆட்டம் போடுகிறார். தமிழகத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கைப் பிடிப்போடு இருக்கும் தம் மக்களாட்சித் தலைவர் கலைஞர் காங்கிரஸ்க்காரன் ஆட்சியில் பங்கு என்றதும் 'குய்யோ... முறையோ..' என்று குதித்து என்னமோ மக்களாட்சி நடத்துவது போல் மக்களே கேளுங்கள் இது நியாயமா...? தர்மமா...? என்றார்.

தொகுதிப் பங்கீட்டின் போது இத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையால் தூக்கம் இழந்து தவித்து அறிக்கைகள் விட்டார். 63 என்றதும் 60தான் என்றார்... இங்கே ஒரு கேலிக்கூத்து என்னவென்றால் 3 தொகுதிகளுக்காக கூட்டணி உடைந்ததாம். அவர்கள் என்ன கருணாநிதி, ஸ்டாலின் தொகுதிகளையா கேட்டார்கள். ஏதோ அறுவதும் அறுபத்து மூணும் எட்டாத தூரம் என்பது போல் முடியாது என்று சொல்லி கூட்டணி உடைந்ததாக அறிவித்தார். அதிலும் துரோகி கட்சி என்று விமர்சித்ததுடன் இனி அண்ணா வழியில் காங்கிரஸை பார்ப்போம் என்றார்.

இந்த நாடகத்தின் உச்சகட்டமாக பிரச்சினை அடிப்படையில் ஆதரவு என்றும் ராஜினாமா என்றும் தனது வழக்கமான ராஜ தந்திர அம்பை பிரயோகித்தார். இது தெரியாமல் பல அல்லக்கைகள் உடனே அறிக்கைகள் விட்டு அசத்தினார்கள். பாவம் வெளிவராத படத்துக்கு விமர்சனம் எழுதியது போல் ஆகிவிட்டது அவர்கள் நிலை. கறுப்புத்துண்டும் சிறுத்தையும் தன்மானம் இழந்து தவிப்பது தெரியாமல் புன்னகை பூசி புலியாக காட்டிக் கொள்கிறார்கள்.



இதைவிட கொடுமை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவரும் திரு. இளங்கோவன், சுதந்திரம் கிடைத்தது என்று மகிழந்தார். பாவம் கலைஞர் கைதேர்ந்த எழுத்தாளர் என்பது அவருக்கு தெரியவில்லை... கதாநாயகனாக சிங்கும் நாயகியாக சோனியாவும் நடிப்பதும் கூட அவருக்கு தெரியவில்லை போலும். இனி அவர் எந்த முகத்துடன் தலைவர் கலைஞருடன் இணைந்து செயல்படப் போகிறார், அரசியல்ல இதெல்லாம் சகஜம்... தொடச்சிட்டு போக வேண்டியதுதானே... அஞ்சு வருசமாக போகாத தொகுதிக்குள்ளயே தன்மானத் தமிழனா ஓட்டுக் கேட்டு போகாமயா இருக்காங்க... எல்லாம் சரியாகும்... நாளைக்கே நிரந்தர முதல்வர் அவர்களேன்னு போயி பாத்துப் பேசிட்டு பேட்டியும் கொடுத்திட மாட்டாரா என்ன...

சரி விசயத்துக்கு வருவோம்... கூட்டணி முறிவுக்கு அறுபத்தி மூணுதான் காரணமா என்ற கேள்விக்கு அதுவும் ஒரு காரணம் என்றார். அப்ப மற்ற காரணங்கள்...? அதுக்காகத்தானே இந்த விவாகரத்து நாடகம். எல்லாரும் நல்லா நடிக்கிறாங்கய்யா... எப்பவும் இவங்க நடிக்கிறதை பார்ப்பதும்... டீக்கடையில உக்காந்து தினத்தந்தி பாத்து அலசுறதுமே நம்ம பொழப்பாப் போச்சு... பிள்ளைகளுக்காவது செம்மறி ஆட்டுக் கூட்டத்துல இருந்து விலகி வர பழகிக் கொடுப்போம்

தில்லியில உக்கார்ந்து பேசுனாங்களாம்... அப்ப கூட்டணி பேரம் சரியாயிடுச்சாம்... 63க்கு சம்மதிச்சிட்டாங்களாம். இந்தப் பிரச்சினையில காங்கிரஸ் கடைசி வரைக்கும் நின்னு ஜெயிச்சதாவும் நம்ம தன்மானத் தலைவர் அம்மாகிட்ட (இது டெல்லி அம்மா) சரணடைஞ்சிட்டாருன்னும் சொல்றாங்க...

எப்ப தலைவரு சரணடைஞ்சிருக்காரு... அவருக்கு வேண்டிய பேரங்கள் எல்லாம் முடிஞ்சாச்சு... இனி கலைஞர் தொலைக்காட்சிக்கு ரெய்டு தொல்லை இருக்காது... மகளுக்கு கைது பயமில்லாம தூக்கம் வரும்... ராசவுக்கும் கொஞ்சம் நிம்மதி வந்திருக்கும்... பேரனும் மகனும் இன்னும் சம்பாதிக்கலாம்... இன்னும் நிறைய சாதங்கள் இருக்குல்ல... இப்ப சொல்லுங்க இந்த நாடகத்துல சரணடைஞ்சது யாரு... ?

ஏதோ தமிழக மீனவர்கள் கொல்லப்படுறதுக்கும் இலங்கையில தமிழன் அழிக்கப்படுறதுக்கும் எதிர்ப்பு தெரிவிச்சு காங்கிரஸ் கூட்டணிய முறிச்சிக்கிட்டது போலவும் உடனே அவங்க தமிழர்கள் பாதுகாப்புக்கு நாங்க பொறுப்புன்னு செம்மொழியில உறுதி கொடுத்ததால மக்கள் நலனுக்காக மீண்டும் கூட்டணியை தொடர்வது போலவும் அவங்களும் அறிக்கை விடுறாங்க... நாமளும் டீயை குடிச்சிக்கிட்டு படிச்சு சந்தோஷப்படுறோம்... இது கொள்கைக்காக ஏற்பட்ட கூட்டணி இல்லை... கொள்ளைக்காக தொடரும் கூட்டணி... போயி புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலையப் பாப்போம்....



மக்கள் பிரச்சினைக்காக கடிதம் எழுதும் டாக்டர் கலைஞர் தம் மக்கள் பிரச்சினைக்காக தில்லிக்கே போவார்... அங்கிருந்து அறிக்கையும் விடுவார்... இதில் இருக்கும் குடும்ப பாசமெல்லாம் நமக்குத் தெரியாது... தெரிஞ்சிருந்தாத்தான் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத... ஐந்து வருடங்களாக ஏறெடுத்துப் பாக்காத... நிரந்தர எம்.எல்.ஏ. போலிப் புன்னகையோடு ஓட்டு கேட்டு வந்ததும் எல்லாம் மறந்து ஓட்டுப் போட்டு மீண்டும் தேர்ந்தெடுக்க மாட்டோமே...

பாமக ஒரு இடத்தை விட்டுக் கொடுத்திருக்காம்.... எத்தனை இடம் கேட்டாலும் திருப்பிக் கொடுக்கும் குணம் கொண்டவர்தான் மருத்துவர் ஐயா... ஆனால் அன்பு மகனுக்கான ஒரு இடத்தை கேட்டிருந்தால் கூட்டணியை விட்டு முதல்ல வெளிய வந்திருப்பாருல்ல... சரி.. விடுங்க...

இங்கிட்டு மட்டுமில்ல அங்கிட்டு... பெரியாத்தா நம்மகிட்ட வந்தாலும் வருமின்னு நம்மாத்தா காத்திருந்திச்சு... அதுக்காக அம்மா புகழ்பாடி சோர்ந்திருக்கும் மறுமலர்ச்சியை கண்டுக்காம இருந்திச்சு... இனி அவருக்கு எதாவது போடும்... பாக்கலாம்... நல்ல பேச்சாளன் இன்னைக்கு கேப்டனுக்கு கிடைச்ச மரியாதையில் பாதிகூட இல்லாமல் காத்திருக்கிறார்... பாவம்...

எல்லா நாடகமும் முடிவுக்கு வருகிறது... தேர்தலில் நமது முடிவை நாமே எடுப்போம்... இன்னும் கதை பேசி காலத்தை ஓட்டாமல் சிந்திப்போம்... சில மாற்றங்களையாவது நாம் சந்திப்போம்...



டிஸ்கி: வேலைப்பளூ மற்றும் கணிப்பொறி பிரச்சினை காரணமாக நிறைய இடுகைகளைப் படிக்க முடியவில்லை... இருந்தும் எனது படைப்புக்கு உங்கள் வருகையை தந்து சிறப்பிக்கும் எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று வேலை குறைவால் இந்தப் பகிர்வு. இதற்கு முன் பகிர்ந்த எல்லாக் கதைகளும் நான் முன்பு எழுதி பதிவிடாமல் இருந்தவையே... மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.
 
-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி.

திங்கள், 7 மார்ச், 2011

அடைகாத்த நினைவு



கடந்த இரண்டு வருடமாக திருவிழாவுக்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன். அதிகமாக ஊருக்கு செல்வதையும் குறைத்துக் கொண்டேன். தட்ட முடியாத நல்லது கெட்டது என்றால் மட்டும் செல்வதுண்டு, அதுவும் அவசரப்பயணம் மட்டுமே. சில நாட்களாகவே போனில் பேசும் போதெல்லாம் அம்மா, நீ வராமா ரெண்டு வருச திருவிழா நல்லாவேயில்லை ரகு. நீ இந்த வருசம் கண்டிப்பா வந்திட்டுப் போப்பா.. என அனத்த ஆரம்பித்திருந்தார்கள். போதாக்குறைக்கு அப்பா, 'ஏன்டா வர மாட்டேங்கிறே..?' என்று கேள்வி வேறு கேட்க ஆரம்பித்து விட்டார்.

சரி அவர்களுக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள். அக்காவும் கல்யாணமாகி திருப்பூரில் கணவனுடன் இருக்கா. இந்த முறை அவளும் வர்றேன்னு சொன்னதா அம்மா சொன்னார்கள். சரி போன எல்லாரையும் பார்த்துட்டு வந்துடலாமுன்னு திருவிழாவுக்குப் போக முடிவு செய்தேன். ஆனால கிளம்பும் வரை போவோமா... வேண்டாமான்னு மனசுக்குள்ள ஒரே போராட்டம். சரி பொயிட்டு உடனே திரும்பிடலாம் என்ற எண்ணத்துடன் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

திருவிழா என்றால் முதல் ஆளாக போகும் நான் இரண்டு வருடமாக திருவிழாவை ஒதுக்கக் காரணம்... ஒரு பெண்... அவள் என் ஜாஸ்மின்.

"தம்பி... தம்பி..."

கண்களுக்குள் ஜாஸ்மினை வைத்திருந்த நான் சற்று விழித்துப் பாத்தேன். கையில் மஞ்சள் பையுடன் ஒரு பெரியவர் நின்னார்.

"என்ன வேணும்?"

"இல்ல தம்பி... கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளி உக்காந்தீங்கன்னா அங்கிட்டு உக்காந்துப்பேன். ஜன்னல் ஓரத்துல உக்காந்தா மொகத்துல காத்தடிக்கிறதால கொடலப் பொறட்டிக்கிட்டு வராது. இல்லன்னா பொறட்டிக்கும்... வாந்தி வர்ற மாதிரி இருக்கும்.. அதான்..."

"அதுக்காக... வேற எடமில்லையா..?" கோபமாய் கேட்டேன்.

"இல்ல தம்பி... கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க... தம்பி.." பாவமாய் கேட்டார்.

"சரி... சரி உக்காருங்க..." என்றபடி தள்ளி அமர்ந்து மீண்டும் கண்களை மூட, கண்ணுக்குள் சிரித்தாள் ஜாஸ்மின்.

"ஏய் ஜாஸ்...ஜாஸ்..."

"என்ன..."

"நில்லேன்... நானும் வாரேன்..."

"வேண்டாம்பா... எங்க வீட்ல யாராவது பாத்தா கொன்னுபுடுவாங்க..."

"யாரும் பாக்க மாட்டாங்க ஜாஸ்... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"என்ன சொல்லு..?"

"அது... அது... உனக்கு எப்ப பரிட்சை ஸ்டார்ட் ஆகுது..?"

"இதை கேட்கத்தான் என்னைய நிக்கச் சொன்னியாக்கும்?"

"இல்ல... அது வந்து..." குழறலாய் அன்று விதைத்தது தொடர்ந்த நாட்களில் பேசாத இரவுகள் தூங்காத இரவுகளாகின. எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக காதல் பயிர் வளர ஆரம்பித்தது. நான் எம்.காம் முடிக்கும் போது அவள் எம்.எஸ்.ஸி படித்துக் கொண்டிருந்தாள். ஊருக்கு வெளிய இருந்த எங்கள் காதல் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் காலை எனது செல்போன் அழைக்க..

"என்ன ஜாஸ்... என்ன விசயம்..?"

"நீ சென்னைக்கு போறியா..?"

"ஆமா... ஒரு வேலை இருக்குன்னு பிரண்ட் சொன்னான்... போய் பாத்துட்டு வரலாமுன்னு பாக்கிறேன்... வந்துடுவேன்டா..."

"ப்ளீஸ்... நீ போறதுக்கு முன்னால உங்க வீட்ல நம்ம காதலைப் பத்தி சொல்லி உங்கப்பாவை எங்கப்பாகிட்ட பேசச் சொல்லேன்..."

"அதுக்கு இப்போ என்ன அவசரம்... நான் ஒரு வாரத்திலயோ... இல்ல... ஒரு மாசத்திலயோ திரும்பி வந்திடுவேன்...ஒரு வேலையோட வந்து பேசினாத்தான்டா கெத்தா இருக்கும்."

"கெத்தெல்லாம் பாக்க வேண்டாம்பா... எங்க சின்ன மாமாவுக்கு என்னை கட்டி வச்சிடலாமுன்னு வீட்ல பிளான் போட்டுக்கிட்டு இருக்காங்க... "

"இங்க பாரு... நீ படிக்கணுமின்னு சொல்லி வை.. படிப்பு முடிஞ்சதும் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்க... அதுக்குள்ள நான் வேலையோட வந்திடுவேன்... சரியா... இப்ப நம்ம குடும்பத்துக்குள்ள பூகம்பத்தை கிளப்ப வேண்டாம்."

"ஐய்யோ... புரிஞ்சுக்க... அவருக்கு வயசு ஏறிக்கிட்டே போகுதாம். அதனால பாட்டியும் அம்மாவும் இந்த முடிவை எடுத்து இருக்காங்க. கல்யாணத்தைப் பண்ணிட்டு தொடர்ந்து படிக்கட்டுமின்னு சொல்றாங்க. அதனாலதான் வீட்ல பேசச் சொல்றேன்... இல்ல சரியா வராதுன்னா சொல்லு எங்கயாவது நாம போயிடலாம்."

"என்ன ஜாஸ் பேசுறே... கொஞ்ச நாள் பொறு பேசுவோம்...ஓடிப்போயி என்ன பண்றது சொல்லு இன்னும் நிலையான வேலையில்லை... தெருவில நிக்கிறதா... நான் பேசுறேன்... நீ பயப்படாதே..."

"என்னடா... தனியா வந்து நின்னு என்ன பேசுறே..." என்றபடி அப்பா அருகில் வர...

"இல்லப்பா... பிரண்ட் ஒருத்தனுக்கு ஒரு பிரச்சினை... அதான்... ஒண்ணும் ஆகாது... பயப்படாதேன்னு சொன்னேன்..." மிடறு விழுங்கினேன்.

"அப்படி என்னப்பா தலை போற பிரச்சினை...?"

"இல்லப்பா...அவன் படிக்கும் போது வேறு சாதிப் பெண்ணை... லவ் பண்ணினான்... இப்ப ரெண்டு பேரும் வீட்ல சொன்னப்போ பிரச்சினையாயிடுச்சு... அந்தப் பொண்ணு வீட்ல அதுக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பாக்கிறாங்க... அதான்..."

"கஷ்டப்பட்டு காடு கழனிய வித்து படிக்கவச்சா லவ் பண்றாங்களாம் லவ்வு... இதுக வெளங்கவா... இதுக்கு நீங்க ஆதரவு... ஆமா வீட்ல ஒத்துக்கலைன்னா ஓடிப்போற முடிவ எடுத்திருக்க்காங்களா..?"

"அப்படியெல்லாம் இல்லப்பா..."

"இல்ல அப்படியும் தோணும்... அப்பன் காசுல படிச்சாச்சி... அப்புறம் என்ன விருப்பப்பட்டவளை கட்டிக்கிட்டு எங்கிட்டாவது போக வேண்டியதுதானே... பெத்தவங்க எப்படி போனா என்ன... சரி காலங்காத்தால உனக்கெதுக்கு இந்த வேலை... போயி ஊருக்கு போறதுக்கு ஆக வேண்டியதைப் பாரு... அப்புறம்பா... எங்கூட வேல பாத்தான்னு எவளையாவது எனக்கு மருமகளா இழுத்துக்கிட்டு வந்திடாதே... ஆமா..."

"சேச்சே...அப்படியெல்லாம் இல்லப்பா..."

ஜாஸ்மினை தனியாக சந்தித்து சூழலை எடுத்துக்கூறி சீக்கிரம் நல்ல வேலையோட வந்து நம்ம விசயமா பேசுறேன்னு ஆறுதல் கூறி வந்தது முதல் தினமும் ஜாஸ்மினுடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் ரகு எனக்கும் எங்க மாமாவுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க... என்னால முடியாது... ப்ளீஸ் வந்து கூட்டிப் போயிடு என்று அழுதாள். ஊருக்கு போயி அவளை கூட்டி வந்து விடலாம் என்று நினைத்து நண்பனிடம் பேசினேன்.

"வேண்டான்டா... கல்யாணம் நிச்சயமான பொண்ணை கூட்டிக்கிட்டு வந்துட்டியன்னா... அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேரோட பெற்றோர் நிலமையை நினைச்சுப்பாரு... அவ சொன்ன அன்னைக்கே பேசியிருந்தியன்னா என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிருக்கும்... அப்ப நீ கோழையா இருந்துட்டே... ஒன்னய பேசச் சொன்ன அவளும் கோழையா இருந்திருக்கா... இனி இதுல தேவையில்லாத முடிவு எதுக்கு... நீங்க ரெண்டு பேரும் சேரணுமின்னு விதியில்ல... விட்டுட்டு வேலைய பாரு...." என்று சொல்ல...

"நா இல்லன்னா அவ செத்துருவாடா..."

"அட... ரெண்டு நாள் அழுவா... அப்புறம் நமக்கு விதிச்சது இதுதான்னு மனசை தேத்திப்பா... படிச்ச பொண்ணு தற்கொலைக்கெல்லாம் போகமாட்டா... அவகிட்ட பேசி நிலமையை சொல்லி புரிய வை."

ஜாஸ்மினுக்கு போன் பண்ணிய போது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்... நீண்ட நேர அமைதிக்குப் பின் உடம்ப பாத்துக்க என்று சொல்லி வைத்தாள். அதன்பின் இருவருக்குமான தொடர்பு நின்று இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

நினைவின் முடிவில் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

"என்ன தம்பி... உடம்பு சுகமில்லையா?" ஆறுதலாய் கேட்டார் பெரியவர்.

"இல்லங்க..."

"அப்ப ஊர்ல பெரியவங்களுக்கு எதுவுமா?"

"அப்படியெல்லாம் இல்லங்க..."

"என்ன பழகுன புள்ளைக்கு கல்யாணமா?" வெடுக்கென்று கேட்டார்.

என்னிடமிருந்து பதில் இல்லை என்றதும்... "ஓடி ஓடி பழகிட்டு பிரியிறது ரொம்ப கஷ்டம் தம்பி.... பொல்லாத மதமும், சாதியும் இருக்கிறவரைக்கும் இந்த காதல் செத்துக்கிட்டுத்தான் இருக்கும் தம்பி... இதையும் எதுக்கணுமின்னா கை நிறைய பணமிருக்கனும் . ஆனா அது இல்லாததாலே எத்தனையோ காதலர்கள் மனசை தொலச்சிட்டு இன்னும் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்காங்க... இந்த காதலால நான் இழந்தது நிறைய தம்பி... " அவர் கண்கள் கலங்கின.

"ம்... ஒரே பையன்... எல்லாத்தையும் வித்து இன்சீனியருக்கு படிக்க வச்சேன்... அப்பன் நம்மளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறானே... நல்லா படிச்சி இழந்த சொத்த மீட்டு அப்பன் ஆத்தாளை நல்லா வச்சுக்கணுமுன்னு சொன்ன மனசுக்குள்ள கூடப் படிச்ச பொண்ணு குடி வந்திட்டா... ஆனா பொல்லாத மதமும் சாதியும் அவங்களுக்கு எதிராயிடுச்சி... அந்தப் புள்ள பணக்காரப்புள்ள... நாங்க அவங்களைப் பாத்த துண்ட இடுப்புல எடுத்துக் கட்டி நிக்கிற சாதி... எப்படி ஒத்துப்போகும்... அவளுக்கு கல்யாணம் நடந்தப்போ எங்க வீட்ல கருமாதி நடந்துச்சி... ஒத்தப் புள்ளைக்காக நிலம் நீச்சி இழந்து கடைசியா..." கலங்கினார்.

"விடுங்க பெரியவரே... போன உங்க பையன் திரும்ப வரவா போறான்... அழுகாதீங்க..."

"திரும்ப வந்தாலும் அந்த நாயை நானே அடிச்சுக் கொல்லுவேன் தம்பி... இருபத்தைஞ்சு வருசம் சீராட்டி வளத்து படிக்க வச்சா... ரெண்டு மூணு வருஷம் பழகினவளுக்காக செத்துப் போயிடுச்சு அயோக்கிய நாயி... அந்தப் பொண்ணு குழந்தை குட்டிகளோட நல்லாயிருக்கா....என்ன செய்ய... காதல் போச்சின்னு வேற முடிவ எடுத்திடாதீங்க... தாடியும் கீடியுமா பாத்த எம்பையனை பாத்தது மாதிரியே இருக்கு...ம்... சாக ரெண்டு நாளைக்கு முன்னாடி பரதேசி மாதிரி நின்னான்..."

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்ல பெரியவரே... வேலை அதிகம் திடீர்ன்னு பாட்டிக்கு உடம்பு சுகமில்லை... அதான் ஊருக்கு போறேன்..." ஒரு பொய்யை சொல்லி வச்சேன் 'அம்மாகூட சொன்னாள் ஜாஸ்மினுக்கு குழந்தை பிறந்திருப்பதாக அவள் மறந்து வாழ்கிறாளோ இல்லை மறத்து வாழ்கிறாளோ... கணவன் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டாள். நாம ஏன் இன்னும் அவளை நினைவில் வச்சிக்கிட்டு வாடனும்... பஸ்ஸை விட்டு இறங்கியதும் ஷேவ் பண்ணிக்கிட்டுதான் போகணும்' என்று நினைத்துக் கொண்ட அதே வேளை பெரியவர் மனசுக்குள்..

' அதான் கண்ணை மூடிக்கிட்டு சாசுமினு... சாசுமினுன்னு சொன்னியாக்கும்... எப்பவோ செத்த காதலுக்காக இன்னும் செத்துக்கிட்டிருக்கேன்னு உன்னோட கோலம் காட்டுதே... எனக்காவது மகனாவது...சும்மா போட்டு விட்டேன்... இனி நீ காதலை மறந்துட்டு சந்தோஷமா இருப்பேல்ல' என்று நினைத்திருக்கலாம் என்பதை அவரது புன்னகை சொன்னது.

*************
இன்று இந்த பூமிக்கு வந்த நாள். எப்பவும் போல் இதுவும் கடந்து போகும் நாள்தான்... இருந்தும் காலையில் பள்ளிககுச் செல்லும் முன் எனக்காக காத்திருந்து ஸ்கைப்பில் முதல் வாழ்த்துச் சொன்ன என் மகள், என் மனைவி, இன்னும் சரியாக பேச ஆரம்பிக்காததால் கையை ஆட்டி வாழ்த்திய என் மகன் எல்லாருடைய வாழ்த்துக்களாலும் நிரம்பிய இந்த நாளை, பதிவுகள் எழுதுவதை குறைத்திருந்த போதிலும் இந்த நாளில் எப்போவோ எழுதிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

**************
-'பரிவை' சே.குமார்.
Thanks.... Photo From Google.

புதன், 2 மார்ச், 2011

ரெங்கநாயகி



மதுரை மாட்டுத்தாவணி ஏரியாவில் ரெங்கநாயகியைத் தெரியாதவர்களே கிடையாது. அந்தளவுக்கு அவ பிரபலமாகக் காரணம் மீனா மெஸ்தான். அந்தக் கடைக்கு அவதான் ஓனர். நல்ல சாப்பாடு... நியாயமான விலை என்ற பெயரை வாங்கி வைத்திருந்தாள்.

ரெங்கநாயகி மதுரைக்குப் பக்கத்துல ஒரு விவசாயக் குடும்பத்துல பிறந்தவ. வைகை ஓடுற பாதையில இருந்தாலும் வறண்ட வைகையை மறந்து வானம் பாத்து விவசாயம் செய்யிற குடும்பம்தான் அவ பிறந்த குடும்பம். எட்டாவது படிக்கும் போது பெரிய மனுசியாயிட்டா. அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அவ அப்பன் அனுப்பலை. பக்கத்து வீட்டு சுந்தரியக்கா வாங்குற ராணிப் புத்தகத்தை எழுத்துக் கூட்டாமயும் இங்கிலீஸ் எழுத்துன்னா எழுத்துக் கூட்டியும் படிக்கத் தெரியும்.

வீட்ல இருந்ததால விவசாய காலத்துல வயல் வேலை எல்லாத்தையும் சலிக்காம செய்வா. ஆம்பளைகளுக்குப் போட்டியா நாத்துப் பறிச்சு... அவங்களைவிட ஒரு குப்பம் அதிகமா கணக்குக் காட்டுவா. நாத்து நடுறது, களை எடுக்கிறது, கட்டு அடிக்கிறது என எல்லா வேலையும் அத்துபடி... அவ்வளவு ஏன்..? அவ சொளகு வீசுனான்னா பாத்துக்கிட்டே இருக்கலாம் அந்தளவுக்கு அவ கை விளையாடும்.

தூரத்து சொந்தத்துல வந்த முருகனுக்கு அவளை கட்டிக் கொடுத்தாங்க. முருகன் மதுரையில கோனார் மெஸ்க்குப் பக்கத்துல மீனா மெஸ்ன்னு ஒண்ணு வச்சிருந்தான். மெஸ் வச்சிருக்கான்னு பேருதான்... ஒரு நாளைக்கு பத்து சாப்பாடு விக்கிறதே பெரிசு. கோனார் மெஸ்ல கூடுற கூட்டத்தை வேடிக்கை பாக்கிறது மட்டுமே இவனோட வாடிக்கை.

சொந்த தொழில் வச்சிருக்கான் என்ற நம்பிக்கையில் கட்டிக் கொடுத்து விட்டார்கள். மதுரைக்கு வந்தவ புருஷனோட கடைக்குப் போனப்போதான் தெரிஞ்சது அவன் ஈ ஓட்டிக்கிட்டுத்தான் இருக்கான்னு. அப்புறம் அவளும் பஜ்ஜி, பனியாரம்... அது இதுன்னு போட்டுப்பாத்தா ஏதோ கொஞ்சம் பரவாயில்லாம ஓடுச்சு. மனைவி வந்த நேரம் கடை பிக்கபாயிடுச்சுன்னு அவனுக்கு மனசுக்குள்ள சந்தோஷம்.

அவங்க சந்தோஷத்துக்கு சாட்சியா பிரபாகரனும் பிரபாவதியும் பிறந்தாங்க. கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷ்ங்கிற மாடு பூட்டிய வண்டியில பயணம் செய்ததால அவங்களுக்குள்ள சண்டை சச்சரவு வரலை. ஆனா திடீர்ன்னு முருகனுக்கு காச்சல் வந்திருச்சு. அவளும் எல்லா ஆஸ்பத்திரியிலயும் காட்டியும் சரியா வரலை.

மீனாட்சி அம்மன் கோவிலு, பாண்டியையா கோவிலு, அழகர் கோவிலுன்னு எல்லா இடத்துக்கும் போயி புலம்பிட்டு வந்தா... ரெண்டு நாள் நல்லா இருப்பான்... மூணாவது நாள் காச்சல்ல படுத்துடுவான். மாயம் மந்திரமெல்லாம் பாத்துப்பாத்தா... ஒருநா காலையில ரொம்ப நேரமா எந்திரிக்காம தூங்குறானேன்னு எழுப்பிப் பாத்தா... அப்பதான் தெரிஞ்சது அவன் இனி எழும்பவே மாட்டான்னு..

ஆச்சு... அவன் காரியமெல்லாம் முடிஞ்சு ஒரு மாதத்துக்கு மேல... அவ அப்பன் ஆத்தா இங்க இருக்க வேண்டாம், கடையை கொடுத்துட்டு நம்ம ஊருக்கே வந்துடுன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலை. அவளே கடைய பாக்க ஆரம்பிச்சா. அவ புருஷன் இருக்கிறப்போ அக்கா, அக்கான்னு சொன்னவனெல்லாம் இப்போ வேற மாதிரி பாக்க ஆரம்பிச்சான். அவ தலையெழுத்தை நினைச்சுக்கிட்டு புள்ளைங்க எதிர்காலத்துக்காக எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு கடைய நடத்தினா.

அப்பத்தான் நடராசு ஒரு யோசனை சொன்னான். நடராசு... அவ புருஷனோட உயிர் நண்பன். காரைக்குடிக்காரன்... மதுரையில வேலைக்கு வந்தவன். இப்ப புதுமண்டபத்துப் பக்கம் பாத்திரக் கடை வச்சிருக்கான். பிறவியிலயே ஊனமாப் பிறந்தவன். ஆனா மனசுல ஊனம் கிடையாது. சூதுவாது தெரியாதவன். எல்லாப் பயலும் பச்சோந்தியா இருந்தாலும் இவன் மட்டும் எப்பவும் போல அவளுக்கு உதவுவான்.

நம்ம மாட்டுத்தாவணியில ஒரு கடை வருது. அதை எடுத்துப் பாத்தியன்னா வருமானத்துக்கு வழியிருக்கும். இந்தக் கடைய கட்டிக்கிட்டு வாரது வயித்துப் பொழப்புக்கு மட்டுமே போதுமின்னு இருந்தா நாளைக்கு புள்ளைங்க பெரிசாகும் போது என்ன பண்ணுவே. இதக் கொடுத்துட்டு அந்தக் கடைய எடுத்து நடத்தலாம் என்ன நான் சொல்றது என்று அவளிடம் கேட்டபோது அவனது யோசனை சரியென்றே அவளுக்குப்பட்டது.

அதன்பிறகு மீனா மெஸ்ஸை வந்த விலைக்கு கொடுத்துவிட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில மீனா மெஸ்ஸை ஆரம்பித்தாள். அவளுக்கு எல்லாவிதத்திலும் நடராசுதான் உதவினான். ஆரம்பத்தில் அவ்வளவாக கூட்டம் வரவில்லை. அவளுக்கு நல்ல கைப்பக்குவம் உண்டு. எனவே அவளே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்த்தாள்.

யாராவது குழந்தைக்கு இட்லி வாங்கினால் சட்னி, சாம்பார் கொடுக்க மறுப்போர் மத்தியில் ஒரு இட்லி என்றாலும் குழந்தைகளுக்கு என்றால் உரப்பில்லாமல் மோந்து வைத்திருக்கும் சாம்பாரைக் கொடுப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது சாப்பாட்டின் ருசி எல்லாக் கடைகளிலும் பரவி ரெங்கநாயகி அக்கா மெஸ்ல சாப்பிடலாம் வாடா என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறாள் என்றால் அதற்காக அவள் சிந்திய வேர்வை அதிகம்.

ஒரு நா மத்தியானம் கடைக்கு வந்த போலீஸ்காரர் சிக்கன் வாங்கி சாப்பிட்டுட்டு பேசாம போனாரு. சார்... சாப்பிட்டதுக்கு காசு கொடுங்க என்றாளே பார்க்கலாம் அவருக்கு வந்துச்சு கோவம் எதோ கேட்கக்கூடாததை கேட்டுட்ட மாதிரி... யாருக்கிட்டே காசு கேக்கிறே... நான் யாரு தெரியுமா? கடையை காலி பண்ண வச்சிடுவேன்னுன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.

என்ன சார் வண்டியிழுக்கிறவனெல்லாம் சாப்பிட்டா காசு குடுக்கிறான் நீயி கவர்மெண்ட்ல வெல பாக்கிறே கொடுக்காம போன என்ன சார் அர்த்தம். கோழி விக்கிற வெலயில பிரியா கொடுக்க முடியுமா நீங்களே சொல்லுங்கன்னு அவ கேக்கவும் அவருக்கு முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பிச்சிருச்சு. அந்த நேரம் அங்க வந்த நடராசு நிலமைய புரிஞ்சு அட யார்கிட்ட காசு கேக்கிறே நீயி. அவரு நம்ம சாரு... சாருதான் இந்த கடைய நமக்காக புடிச்சு விட்டவரு... சார் எதோ தெரியாம கேட்டுடுச்சி... நீங்க போங்க... என்று நிலமையை மாற்றினான்.

அவரு போனதும் என்ன புள்ள நீயி... அந்த ஆளு தள்ளுவண்டிக்காரன் கடையிலயே பிரியாணி சாப்பிட்டுட்டு காசு கொடுக்காம போறவன். அவங்கிட்ட காசை கேட்டுக்கிட்டு... நாளைக்கு எதாவது பிரச்சினைய கிளப்பி கடைய காலி பண்ண வச்சாலும் வச்சிருவான். வந்தா தின்னுட்டுப் போகட்டும்... ஏதோ பிச்சைக்காரனுக்குப் போட்டதா நினைச்சுக்கோ என்றதும் பாவம் வெயில்ல வண்டி இழுக்கிறவனெல்லாம் காசு கொடுத்து சாப்பிடுறப்போ சம்பளம் வாங்கி கொட்டிக்கிற இவனுக்கு எதுக்கு பிரியாப் போடணும் என்றாள். இதெல்லாம் பாத்தா நாம தெருவுலதான் நிக்கணும். பேசாம வேலயப்பாரு என்றான். அதன் பிறகு அந்த போலீஸ்காரர் வந்து சாப்பிட்டாலும் அவ காசு கேட்பதில்லை. இப்ப கொஞ்ச நாளா ஆளக்காணலை. மாத்திப் பொயிட்டாரு போல... தொலஞ்சது சனியின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா.

கடையில நல்ல வருமானம் மனசு சந்தோஷத்துல இப்ப கொஞ்சம் பூசுனாப்புல ஆயிட்டா... அவ தளுக்கு மிளுக்கின்னு இருக்கிறதைப் பாத்து பக்கத்து வீட்டுக்காரிகளுக்கு பத்திக்கிட்டு வந்தது. புருஷனை இழந்தவ மாதிரியா இருக்கா... சும்மா குதிரக்கணக்கால்ல திரியிறா. அட நீ வேற அந்த நொண்டிப்பய இவளை வச்சிருக்கானாம். அவன் பாத்திரக்கடைக்கே போறதில்லையாம் எப்ப பாத்தாலும் இவ கடையேதான் கெதியின்னு கிடக்கானாம். அவனுக்கு குடும்பமெல்லாம் இல்லையா. அவனை எவ கட்டிப்பா... இன்னும் கலியாணம் ஆகலையாம்... அதான் இவ பின்னாடி சுத்துறான்... இவளும் புருசன் இல்லாம இருக்கவ... அவனை நறுக்குன்னு புடிச்சுக்கிட்டா... இப்ப இல்லயாம்... புருசன் இருந்தப்பவே ரெண்டு பேருக்கும் தொடர்பாம்... எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமின்னு யாருக்கு தெரியும். கேவலப்பட்டவ என்ன செஞ்சா நமக்கென்ன... என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் காதுக்கு வரவும் முதலில் ஆடிப் பொயிட்டா. ஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மறுக்கிறாங்க. நல்ல நண்பனா ஒரு ஆம்பள உதவக் கூடாதா?. அது ஏன் ஒரு பொண்ணுக்கு ஆணோ ஆணுக்கு பொண்ணோ உதவியா இருந்தா தப்பா பாக்கச் சொல்லுது... இது சமுதாயத்துல புரையோடிப்போன எண்ணத்துல இதுவும் ஒன்னு... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்தாச்சே என்று நினைத்த போது வருத்தமாக இருந்தது.

என்ன ரெங்கநாயகி யோசனையில இருக்கே என்றபடி எதிரில் வந்து அமர்ந்தான் நடராசு. வா ராசு... மனசு சரியில்ல... அதான். என்ன நம்மள இணைச்சுப் பேசுறதை கேட்டியாக்கும் என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். எனக்கு முன்னாலயே தெரியும் எத்தனையோ பேர் எங் காதுபடவே பேசிட்டாங்க. சூரியனைப் பாத்து நாய் கொலச்சா யாருக்கு வாய் வழிக்கும்... தரையில உக்கார்ந்து எந்திரிக்கும் போது ஒட்டியிருக்க மண்ணோடவா போறோம். தட்டித்தானே விடுறோம். அது மாதிரி இதையெல்லாம் தட்டிவிட்டுடனும். வீணா தூக்கி சுமக்கக்கூடாது. நம்ம மனசுக்குள்ள குப்பையில்லையே... குப்பையெல்லாம் பக்கத்துலதானே இருக்கு... நாம ஒதுங்கிப் போவோம் என்று அவன் சொல்லும் போது அவனது உயர்ந்த குணம் அவளுக்குத் தெரிந்தது.

சில நாட்களுக்குப் பிறகு இருவரும் திருமங்கலம் பொயிட்டு திரும்பும் போது ராசு நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியேன்னு ஆரம்பிச்சா. என்ன சொல்லு தப்பா நினைக்கிற மாதிரி கேக்கமாட்டேன்னு தெரியும் என்றான். இல்ல நீயும் கலியாணம் பண்ணாம இருக்க. நானும் கணவனை இழந்துட்டு நிக்கிறேன். ஏன் நாம கலியாணம் பண்ணிக்ககூடாது என்று அவள் கேட்கவும் அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஊரு பேசினதை உண்மையாக்க நினைக்கிறியா?ன்னு கேட்டான். அப்படியில்ல பக்கத்து மனுசங்க பேசினதுக்கு பின்னாலதான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோணிச்சு. தப்பா இருந்தா மன்னிச்சுக்க... ஊருக்காக இல்ல நமக்காகத்தான்... நானும் பிள்ளைங்களோட கஷ்டப்படுறேன். நீயும் தனி மரமாத்தான் நிக்கிறாய்... நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கலாமே என்றவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் பதில் சொல்லாமல் யோசிப்பது அவனது முகத்தில் தெரிந்தது. அவனது யோசனையும் சரியெனப்பட்டது. இத்தனை நாள் பலனை எதிர்பாக்காம உதவுனவனை... ஊர் தப்பா பேசியதைக் கூட சாதரணமாக எடுத்துக் கொண்டவனிடம் இப்படி கேட்டிருக்கக் கூடாதோ என்று நினைத்து தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

இருவரின் மௌனமும் நேரத்தை தின்று கொண்டிருந்தன. இன்னும் நீடித்தால் நேரத்தை திங்கும் மௌனம் நம்மையும் சேர்த்து திங்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயத்தில் சரி விடு ராசு... இத இங்கயே விட்டுடலாம் என்றாள் மெதுவாக.

ரங்கநாயகி உன்னோட எண்ணஞ்சரிதான். ஊரு வாய அடைக்க இதுதான் வழியா இருக்கணுமின்னு இல்ல... ஆனா இதுவும் வழிதான்... நமக்கு நாம உதவியா இருக்க எத்தனையோ வழி இருந்தாலும் இது அந்நியோன்யமான உறவோட வாற வழி. ஆனா என்னால உடனே ஒத்துக்க முடியலை. எம்மனசு இன்னும் அந்தப் பக்குவத்துல உங்கிட்ட பழகலை. பாக்கலாம் எனக்குள்ள நீ வாரப்ப கட்டிக்கலாம். அது நாளைக்கா கூட இருக்கலாம் இல்ல நாலு மாசமோ... நாலு வருசமோ ஆகலாம். ஆனா அதுவரைக்கும் எப்பவும் போல உனக்கு நான் உதவியா இருப்பேன் என்றவனை எதுவும் சொல்லாமல் ஏறிட்டவளின் கரங்களை பற்றிக் கொண்டான். அதில் காதல் இருந்ததா... நட்பு இருந்ததா... என்பதை அறிய முடியாமல் அவளின் கண்கள் நீருக்குள் நீந்திக் கொண்டிருந்தன.

-'பரிவை' சே.குமார்.
Photo from Google