திங்கள், 30 ஆகஸ்ட், 2010

சுதந்திரம் படும் பாடு




மருத்துவமனையில் இருக்கும் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஊருக்கு போக பேருந்துக்காக நின்று கொண்டிருந்த ராகவனிடம் "தம்பி... இந்தப் பஸ்ஸூ திண்டிவனம் போகுமா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"ஐயா... இது கரூர் போற பஸ்... திண்டிவனம் பஸ் அந்தக் கடைசியில நிக்கும்... அங்க போங்க..." என்றதும்.

"அங்கிட்டு நிக்குமா?...ம்..." என்றபடி முகத்தை துடைத்தவர், " ஆமா... நீங்க இந்த பஸ்ஸூலயா போறீங்க?" என்றார் மெதுவாக.

"இல்லைங்க... எங்க ஊருக்குப் போற பஸ் இனிமேத்தான் வரும்..."

"அப்ப எனக்கு கொஞ்சம் பஸ்ஸை காட்டி விடுறீங்களா...? உங்களுக்கு புண்ணியமாப் போகும்"

அவரைப் பார்க்க பாவமாய் இருந்தார். படிக்காத மனிதர் வேறு... சரி பஸ் வர இன்னும் எப்படி அரைமணி நேரம் ஆகும். எவ்வளவு நேரம்தான் நிக்கிறது... இப்புடி போய் அவருக்கு பஸ்ஸை காட்டிட்டு வரலாம் என்று நினைத்தவன் "சரி வாங்க ஐயா..." என்றான்.

"நல்லாயிருப்பீங்க தம்பி..." என்றபடி தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு மஞ்சள் பையை கையில் இறுக்கமா புடிச்சிக்கிட்டு அவனுடன் நடக்கலானார்.

"உங்க பேரு என்ன தம்பி"

"ராகவன்... ஆமா திண்டிவனத்துல யாரு இருக்கா?"

"எம்மக தம்பி..."

"எந்த ஊரு ஐயா உங்களுக்கு..."

"ஆறாங்கல்..."

"அங்கிருந்தா வாறீங்க... யாரையாவது கூட அழைச்சிக்கிட்டு வந்திருக்கலாமே"

"இருந்தா அழைச்சுக்கிட்டு வரலாம்... யாரும் இல்ல தம்பி... ஒரே பொட்டப்புள்ள உள்ளூருலதான் கட்டிக் கொடுத்தேன். மருமகப்பிள்ளை பொழப்புக்காக திண்டிவனம் போனாங்க... அங்கிட்டே வீடு வாங்கி குடும்பத்தையும் கூட்டிப் பொயிட்டாரு..."

"ம்..."

"நமக்காக அவங்களை இருக்கச் சொல்லமுடியுமா?"

"இப்ப மகளைப் பார்க்கப் போறீங்க... மகளுக்கு பலகாரம் எல்லாம் போகுது போல.."

"இது என் பேத்திக்குட்டிக்கு... மெட்ராஸ்ல பெரிய வேலையில இருக்கா... இப்ப லீவுல வந்திருக்கா... அவ தினமும் பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணி வந்துட்டு போ தாத்தான்னு ஒரே அடம்... அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமுன்னு போறேன்..."

"ம்..."

"கிழவி இருந்தவரைக்கும் கவலையில்லை தம்பி... அவ போய் ஆறு மாசமாச்சு... இப்ப சாப்பாட்டுக்குக் கூட கஷ்டம்தான்... மக வரச்சொல்லி சத்தம் போடுறா... அது எப்புடி தம்பி அவ மாமனார் மாமியா இன்னும் நம்ம ஊருலதான் இருக்காங்க... நம்ம மக வீடா இருந்தாலும் அவங்க மயன் வீடுல்ல... நாம போய் அங்க தங்கி அதெல்லாம் சரியா வராதுண்ணுட்டேன்... முடிஞ்ச வரைக்கும் சமைப்பேன்... உள்ளூர்லதான் தங்கச்சி மக இருக்கு. அது அப்பப்ப எதாவது ஆனம் கொண்டாந்து கொடுக்கும். கிழவி எங்கூடவே இருந்த வீடு அதுக்குள்ள படுத்து உறங்குறது ஒரு சொகந்தான் தம்பி...." சொன்னபோது அவரின் கண்கள் கலங்கியது போல் தோன்றியது.

"ஆமா செலவுக்கெல்லாம்..."

"பேத்தி பணம் அனுப்பிடுவா... அது போக நா சுதந்திர போராட்ட தியாகி தம்பி... பென்சம் பணம் வருது..."

தியாகி என்றதும் "தியாகின்னா எங்க ஊர்ல நிறையப் பேரு போராட்ட காலத்துல வேடிக்கை பார்த்துட்டு தியாகி பட்டியல்ல சேர்ந்துக்கிட்டு காசு வாங்குறாங்க... அப்படியா..."

"அட என்ன தம்பி... நேதாஜியோட படையில சேரத் தயாரா இருந்தவன் நான். புதுக்கோட்டையில நடந்த ஒரு போராட்டத்துல கலந்துக்கிட்டு அடிவாங்கி... இந்தா பாருங்க... இந்த கையை... வளஞ்சு இருக்கா... போலீசுக்காரன் அடிச்சு ஒடச்சது... நாடு சுதந்திரத்துக்காக நானும் நிறைய அடிபட்டிருக்கேன் தம்பி. இள ரத்தம் பயம் அறியாதுங்கிற கணக்கா எல்லாத்துக்கும் முன்னாடி நிப்பேன்..."

"சும்மாதான் கேட்டேன்... கோவிச்சிக்காதீங்க..."

"எதுக்கு தம்பி கோவப்படப் போறேன்... நாங்க கஷ்டப்பட்டு வாங்கின சுதந்திரம் இப்ப மிட்டாய்க்காக ஏத்துற கொடியோட முடிஞ்சிடுது... எந்த டிவிக்காரந்தம்பி சுதந்திரத்திரத்துக்காக போராடுனவங்கிட்ட பேட்டி எடுக்க வாரான். எதாவது ஒரு நடிகனோ நடிகையோ சுதந்திரத்தைப் பத்தி பேசிறதைதானே போடுறான்... அவங்களைச் சொல்லி குத்தமில்ல தம்பி... நீங்களும் அதைத்தானே விரும்புறீங்க..."

அவர் சொன்னது சரியென்பதால் ராகவனால் மறுத்துப் பேசமுடியவில்லை. அமைதியாக நடந்தான்.

"இலவச டீவின்னாங்க.... நா போயி நின்னா நீயெல்லாம் டிவி பாத்து என்ன பண்ணப்போறேன்னு பஞ்சாயத்துப் போர்டுல ஒருத்தன் சொல்றான். கூப்பன் கடைக்குப் போன ரெண்டு கிலோ சீனி கொடுத்துட்டு எல்லாத்துலயும் வாங்கினதா எழுதிக்கிறான். என்னப்பா நான் சீனி மட்டும்தானே வாங்கினேன்னு கேட்டா... பேசாம போ இல்லைன்னா பூச்சிபுடிச்ச பருப்பும் கட்டிச் சோப்பும் கொடுத்துடுவேன்னு மிரட்டுறான்.... தேர்தலப்ப ஓட்டுக் கேக்க வர்றவங்கிட்ட நம்ம குறையை சொல்ல நினைச்சா இளவட்டமெல்லாம் இளிச்சுக்கிட்டு பணத்தை வாங்கிகிட்டு ஓட்டுப் போட்டுடுறீங்க... அப்புறம் எப்படி"

இதுவரை சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தவருக்குள் எரிமலையாய் எண்ணங்கள் இருப்பதைப் பார்த்து வியந்து போனான் ராகவன்.

"எத்தனை இழப்புகள்... எல்லாம் எதற்கு சுதந்திர காத்தை சுவாசிக்க... இப்ப முடியுதா... அன்னைக்கு வெள்ளைக்காரங்கிட்ட போராடி இன்னைக்கு கொள்ளைக்காரங்கிட்ட கொடுத்திட்டோம்... அவனுக குடும்பம் தழைக்க எத்தனை குடும்பத்தை அழிக்கிறாங்க... இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலை தம்பி..."

"ஆமாய்யா... நீங்க சொல்றது உண்மைதான்... இப்ப நாடு போற போக்கைப் பார்த்தால் பேசாம வெள்ளக்காரங்கிட்டயே இருந்திருக்கலாம் போலன்னுதான் தோணுது..."

"ம்... நாம இப்படியாகுமுன்னு நினைக்கலையே... இனி யாராலயும் அரசியல்வாதிங்க கையில சிக்கி இருக்கிற நாட்டை காப்பாத்த முடியாது... உன்னைப் போல பசங்க எதாவது செஞ்சாத்தான் உண்டு... அது நடக்குற காரியமா சொல்லு தம்பி"

"...."

"இதுக்கு உனக்கே பதில் தெரியலை... சரி வழி காட்ட வந்த புள்ளைகிட்ட நா எதெதோ பேசிக்கிட்டு... "

"இல்ல ஐயா உண்மையதானே சொன்னீங்க... சாதாரண கிராமத்து ஆளா பார்த்த உங்ககிட்ட இப்படி ஒரு முகத்தை நான் எதிர் பார்க்கவே இல்லை.... இந்த பஸ் திண்டிவனம் போகும் ஐயா... ஏறிக்குங்க..."

"சரி... தம்பி ரொம்ப நன்றிப்பா" என்றபடி பேருந்தில் ஏறியவர், எதோ யோசனையா இறங்கினார்.

"என்னாச்சுய்யா..."

"தம்பி பஸ்ல போகும்போது தண்ணி தவிச்சா குடிக்க தண்ணி வாங்கனும்... பஸ் கிளம்ப இன்னம் நேரம் இருக்கான்னு கேட்டு சொல்லிட்டு நீங்க போங்க, நான் போய் வாங்கிக்கிறேன்."

"நீங்க மேல ஏறுங்க நான் வாங்கிக்கிட்டு வாரேன்..." என்றபடி கண்டக்டரிடம் பஸ் இப்ப கிளம்பிடாதேன்னு கேட்டுக்கிட்டு தண்ணியும் பிஸ்கட்டும் வாங்கி வந்து கொடுத்தான்.

"எவ்வளவு தம்பி..."

"இருக்கட்டும் ஐயா... என்ன லெட்ச ரூபாயா செலவழிச்சுப்புட்டேன்."

"இல்ல தம்பி இந்தாங்க... வச்சிக்கங்க" என்றபடி சுருட்டி வைத்திருந்த பணத்தை அவனிடம் நீட்ட, அதிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு மீதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வாரேன்யா என்றதும்...

"தம்பி போன் இருந்தா இந்த நம்பருல கூப்பிட்டு எம்மக கிட்ட சொல்லிட்டிங்கன்னா பஸ்ஸை விட்டு இறங்கிறப்ப பேரன் வந்து கூட்டிப்பான்" என்றதும்

அந்த நம்பருக்கு போன் செய்து அவரையே பேச சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்று மீண்டும் அவன் நின்ற இடத்துக்கு போய் பஸ்ஸூக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அப்போது ஒரு இருவது பேர் அடங்கிய இளைஞர் கும்பல் கையில் பேனருடன் பேருந்து நிலையத்துக்குள் வந்து, "அமெரிக்க அரசே எங்களிடம் வாலாட்டாதே..."ன்னு கூச்சல் போட ஆரம்பிக்க...

'நம்ம பெற்ற சுதந்திரம் இங்க சில சர்வாதிகாரிகள் மத்தியில் சிக்கிக் கிடக்கு அதை விட்டுட்டு இங்க இருந்து இவங்க கத்துறது பக்கத்து ஊருக்காரனுக்கே கேக்காது, இதுல மாவட்டம்... மாநிலம்... நாடு... மொழி... கடந்து அமெரிக்காவுக்கு கேக்கப் போகுதாம்... எல்லாத்துக்கும் சுதந்திரம் இருக்கு இங்க' என்று நினைத்தவன், 'இளைஞர்கள் எதாவது செஞ்சா நாட்டை காப்பாத்தலாம்' என்று பெரியவர் சொன்னதை நினைத்து சிரித்துக் கொண்டான்.

-'பரிவை' சே.குமார்

சனி, 28 ஆகஸ்ட், 2010

வாழ்க்கை வாழ்வதற்கே..!


எதோ வாழ்ந்தோம்... மறைந்தோம்... என்றில்லாமல் வரும் சந்ததியினர் இப்படி ஒருத்தர் இருந்தார் என்று சொல்லும்படியாக வாழ்ந்து மறைவதே பிறவியின் பேராகும்.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் போராடி வாழ்ந்து பார்க்க வேண்டும் அதை விடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதென்பது வடிகட்டிய கோழைத்தனம். கை, கால் ஊனமானவர்களெல்லாம் மன தைரியத்துடன் வாழ்ந்து காட்டும் போது குறையின்றி பிறந்த பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள்தனமானது. ஊனம் என்று இகழாமல் அவர்களின் தைரியத்தையும் பக்குவப்பட்ட மனதையும் பார்த்து வாழ கத்துக்கொள்ள வேண்டும்.

எனது மைத்துனன் (மனைவியின் தம்பி) இறந்தது இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகிறது. வீட்டிற்கு ஒரே பையனான அவர் காதலுக்காக கயிரை நாடினார். யாருக்காக உயிரை மாய்த்துக் கொண்டாரோ அவள் குடும்பம் குழந்தை என்று நம் கண்முன்னே சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவரை இழந்து இன்று வரை சந்தோஷம் இழந்து வாடுவது பெற்றவர்கள் மட்டுமே.

அவள் இல்லை என்றால் என்ன... தான் படித்த படிப்பு இருக்கு அதை வைத்து அவளுக்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் இன்று எதாவது ஒரு கம்பெனியில் பொறியாளராக இருந்திருப்பார்.

எனக்குத் தெரிந்த குடும்பத்தில் தனது தங்கை வேற்று சாதிக்காரனுடன் பழகியதை கண்டித்த சகோதரன், அவள் திருந்துவாள் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் ஒருநாள் அந்தப் பையனும் தன் தங்கையும் ஒன்றாக இருந்ததை பார்த்து விட்டான். தங்கையை எதுவும் செய்யவில்லை அதற்கு மாறாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டான். அந்தத் தங்கை அந்த இளைஞனை கட்டாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக் கொண்டு சந்தோஷ வாழ்க்கை நடத்துகிறார்.

அண்ணனின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் அவனது வாழ்க்கை முடிந்திருக்காது. தங்கைகாக நாம ஏன் சாக வேண்டும் என்று சிந்தித்திருந்தால் அவனும் இன்று குடும்பம் குழந்தை என வாழ்ந்திருப்பான்.

இன்னொருவர் இவரது கதை சற்று வித்தியாசமானது... சகோதரர்கள், சகோதரி என பெருங்குடும்பத்தில் பிறந்த இவருக்கு படிக்கும் காலத்தில் படிப்பு வரவில்லை. வீட்டில் சாணி பொறுக்கவும் மாடு மேய்க்கவும் தன் காலத்தை ஓட்டியவர், திடீரென விஸ்வரூபம் எடுத்தார். எப்படி தெரியுமா? டுட்டோரியலில் சேர்ந்து 10, 12 முடித்தார். பின்னர் பி.ஏ. தொலைதூரக் கல்வியில் படித்தார். வீட்டில் எதோ பிரச்சினை சாவது என முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் கொண்டார்.

படிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்ற இளைஞர் சாதரண பிரச்சினைக்காக உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்றால் இந்நேரம் தனது படிப்புக்கு ஏற்ற ஏதாவது வேலையில் இருந்து கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்திருப்பார்.

இன்றைய உலகில் இளைஞர்களும் இளைஞர்களும் காதலுக்கும் பரிட்சை தோல்விக்கும் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இவள் இல்லை என்றால் இன்னொருவள், இவன் இல்லை என்றால் மற்றொருவன், மார்ச் போனால் அக்டோபர் அதுவும் போனால் மறுபடியும் மார்ச் என்று வாழப் பழகிவிட்டால் எதற்கு உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த தோழர்கள் தோழியர் இருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் விழுந்து விழுந்து காதலித்துவிட்டு படிப்பு முடிந்ததும் இருவரும் சந்தோஷமாக பிரிந்து குடும்பம் குழந்தைகள் என்றான பின்னரும் எங்காவது சந்திக்க நேர்ந்தால் மனசுக்குள் காதலை மறைத்துக் கொண்டு 'ஏய்... நல்லாயிருக்கியா...?' என்று கேட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லாக் காதலும் தோற்பதில்லை... எல்லாக் காதலும் ஜெயிப்பதில்லை... ஜெயித்தவகளில் சிலர் சந்தோஷ வானில் பறந்தாலும் பலர் ஈகோ என்ற வளையத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை பார்த்துள்ளோம். காதல் காலத்தின் கோலம் வாழ்க்கை காலத்தின் தவம்... காதல் இல்லாத மனசு இருக்குமா என்றால் சந்தேகமே, இருப்பினும் காதலுக்காக உயிரை விடுவது கோழைத்தனம்.
                              
                               "வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்..."  என்றான் கவி.

தற்கொலை எண்ணங்களை தவிடு பொடியாக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். உங்கள் முடிவு மற்றவர்களுக்கு இன்பத்தை தராவிட்டாலும் துன்பத்தை விதைக்காமல் இருக்கட்டும்.

இந்த பதிவு மனசின் ஆதங்கம்தான். எனது மைத்துனரின் இழப்பு எங்களுக்கு ஒரு பேரிழப்பு. அதை யாரும் திருப்பித்தர முடியாது... அவரே திரும்பி எங்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்தாலும் நடக்குமா... இப்ப எங்களின் குழந்தைகள்தான் அவரின் பெற்றோருக்கு சந்தோஷத்தை கொடுக்கின்றன. இருப்பினும் அவர்களின் மனவலி குறையுமா?

எனவே தற்கொலை எண்ணத்தை தவிடுபொடியாக்கி வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை சுகமாகும்... உங்களை இகழ்ந்தவர் உங்கள் வாழ்வு கண்டு மனசுக்குள் வருந்தும் காலம் வராமல் போகாது.

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கிராமத்து நினைவுகள் : களிமண்


எங்கள் கிராமத்து ஊரணிகளின் கரையில் கிடைக்கும் களிமண் (அதாங்க நம்ம பள்ளிக்கூட வாத்தியார் திட்டும்போது சொல்வாரே அதே களிமண்தான்) எங்கள் சிறுவயது விளையாட்டில் அதிகம் பங்காற்றியிருக்கிறது.

பள்ளிக்காலத்தில் ஊரணியில் தண்ணீர் நிறைந்திருக்கும் காலத்தில் விடுமுறை தினத்தில் பின்புறம் இரண்டு பக்கமும் வட்டமாக கிழிந்த டவுசரை அரணாக் கொடியில் சிறையிட்டுவிட்டு களிமண்ணை தோண்டி எடுத்து வந்து அதில் மாட்டு வண்டி, மாடு, குழாய் ரேடியா, தேர், பாத்திரம் பண்டம், அடுப்பு என மனதில் தோன்றும் எல்லா வடிவங்களும் செய்து அதை பாலீஷ் செய்ய அதிகம் பயன்பட்டது எச்சில்தான்.

அதன்பிறகு அவற்றை வெயிலில் காயவைத்து விளையாட பயன்படுத்துவோம். அதில் போட்டி வேறு. குழாய் ரேடியோ வீட்டின் முன் இருக்கும் மரத்தில் கட்டி அவரவர் மனதில் பட்ட பாடலை காட்டுக் கத்தாய் கத்துவோம்.

நம்ம மச்சான் இதுல ரொம்ப தீவிரமா இறங்கிடுவாரு... குழாய் ரேடியோவை வீட்டின் அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் ஏறி உயரத்தில் கட்டி அதற்கு அவன் அம்மாவின் கண்டாங்கிச் சேலையை கிழித்து வயர்போல் கட்டி இரவு ஏழு மணிக்கு 'நானும் உந்தன் உறவை...' என்று கத்த... இல்லையில்லை பாட ஆரம்பித்தாரென்றால் இரவு 11 மணி வரை ஒரே அலறல்தான். அவனோட அம்மா எதாவது சொன்னால் அதன் பிறகு அவர் பேசவே முடியாது. யாராவது கேட்டால் 'ஒ வீட்லயா பாடுறேன்... ஒ வேலையப்பாரு'ன்னு நல்ல சுத்த தமிழ் வார்த்தைகளால பேச கேட்டவர் நரகலை மிதித்தவர் போல முகத்தை வைத்துக் கொண்டு சென்று விடுவார். காலையில் எத்தனை மணிக்கு எந்திரிக்கிறாரோ அப்பவே 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா'வோடு பாட்டு ஆரம்பிக்கும் அவருக்கு போரடித்தால் வேற விளையாட்டுக்குச் செல்வார்.

இந்த முறை ஊருக்குச் செல்லும் போது திருவிழாவிற்கு வந்திருந்த எல்லாரும் இது குறித்து பேசி சிரித்தபோது 'ஆமாண்டா இன்னும் குழா ரேடியோ கட்டி விளையாடனும் போல இருக்கு'ன்னு அவன் சொன்னப்ப 'ஐயோ மறுபடியும் பாட்டா' என்று எல்லோரும் சொல்லிச் சிரித்தோம்.

இன்னொரு பங்காளி கொஞ்சம் வித்தியாசமானவர், அவருக்கு படப்பாடல்களில் எல்லாம் நம்பிக்கையில்லை. பங்குனியில் தொடங்கி ஆடி மாசம் வரை நடக்கும் திருவிழாக்களில் நடத்தப்படும் நாடகங்களை பார்த்து அது மாதிரி களிமண் குழாய் ரேடியோவெல்லாம் கட்டி பசங்களை வைத்து நாடகம் நடத்துவார். 'மேயாத மான்...' என்று அவர் வள்ளி திருமணம் நடத்தும் அழகே தனி. அவர் ஏற்ற இறக்கத்துடன் பாட ஆரம்பித்த உடன் அவங்க அம்மா 'தம்பி ஆரம்பிச்சிட்டியா... சும்மா இருக்க மாட்டியேன்னு' திட்ட ஆரம்பிப்பாங்க. அவருக்கு அதெல்லாம் கவலை இல்லை, மேயாத மானை விரட்டுவதிலே குறியாய் இருப்பார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கோயில் கட்டி தேர்த்திருவிழா நடக்கும். களிமண்ணில் கட்டிய கோவிலில் இருந்து தேர் கிளப்பி வாய் தாளங்களுடன், மச்சானின் பாட்டுடன் பங்காளியின் வள்ளி திருமணத்துடன் நடக்கும் தேர்த்திருவிழா கடைசியில் கோவில் வந்து நிறைவுறுவதற்குள் வாய்த்தகாராறு கையில் இறங்கி அடிதடியில் களிமண் தேர் உடைந்து நகக்கீரல்களுடன் விளையாட்டு வினையான கோபத்தில் பிரிந்து செல்வோம்.

நகக்கீரல்கள் காயும் முன் அடுத்த நாளோ அடுத்த விடுமுறை தினத்திலோ மீண்டும் களிமண் பொம்மைகளுடன் அடுத்த திருவிழாவுக்கு தயாராகிவிடுவோம்.

இப்ப அனைவரும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்தாலும் சந்திக்கும் தருணங்களில் அந்த சந்தோஷ பருவம் மனசுக்குள் மலரத்தான் செய்கிறது.

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மனசின் பக்கம்... II

நண்பர்களே... கடந்த ஒருவார காலமாக வலைச்சர ஆசிரியனாய் இருந்ததால் உங்களது பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியாத நிலையிலும் எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு மிக்க நன்றி.

மாற்றுத் திறனாளி, இறைவனின் குழந்தை பதிவுலக நண்பர் அந்தோணி முத்து அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக வலைச்சரம் சீனா ஐயாவின் பதிவு பார்த்தேன். அன்னார் பூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்தேன். ஆனால் இறைவன் அவரது கஷ்டங்களைக் கண்டு அவரைக் கூட்டிக் கொண்டு போய்விட்டான் போலும். ஆம் நேற்று இரவு நண்பர் டோண்டு வின்  தளத்தில் அவரது மறைவு குறித்து படித்தேன். மனசு வலிக்கிறது மக்களே... அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

*****


உமா சங்கர்... நேர்மையின் உருவம். லஞ்சம் வாங்கி வாழ்க்கை நடத்தும் அதிகாரிகள் மத்தியில் கடந்த 27 வருடமாக நேர்மையான அதிகாரியாக வாழ்ந்து வரும் இவரை போலிச்சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக அரசு பதவி நீககம் செய்துள்ளது. பதவியில் சேர்ந்த போதோ அல்லது சில வருடங்களிலோ அவரது ஏமாற்று வேலையை கண்டுபிடித்திருக்கலாம். அப்படி கண்டுபிடிக்காத அரசாங்கம் அவசரம் அவசரமாக இப்ப முடிவெடுக்க காரணம் அவர் ஆளும் குடும்பத்தை ஆட்டம் காணச் செய்துவிடுவாரோ என்ற பயம்தான்.

நேர்மையான அதிகாரி என்ற முறையில் எல்லாரும் அவருக்கு ஆதரவளிப்போம். இதில் எனக்கு வருத்தமளித்த விபரம் அவர் இன்ன சாதிக்காரர் என்பதால்தான் இந்த நிலை என்று பதிவெழுதுவதுதான். இது ஏற்றுக் கொள்ள முடியாது. திறமைசாலியான நேர்மையான அதிகாரி எங்கிருந்து வந்திருந்தாலும் அவருக்கு ஆதரவளிப்போம். இங்கு எதற்கு சாதி?

எனக்குத் தெரிந்த சம்பவம் ஒன்று... தேவகோட்டையில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இணை ஆட்சியராய் இருந்த திரு.ராகேஷ் குமார் யாதவ் அகற்ற உத்தரவிட்டதுடன் மட்டுமில்லாமல் தானே நின்று அந்தப்பணியை நடத்தினார். அவருக்கு எதிராக கிளம்பிய அரசியல் முதலைகள் அவருக்கு உடனடி மாறுதல் வாங்கினர். இவ்வளவுக்கும் ராகேஷ் குமார் அவர்கள் வட நாட்டில் இருந்து வந்தவர், தனது பெயரில் சாதியை ஒட்டிக் கொண்டவர்தான் இருந்தும் தேவகோட்டையில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளும் மனிதாபிமானமுள்ள மக்களும் போராடினர். ஜெயித்தது என்னவோ அரசியல்தான் என்றாலும் வாழ்ந்தது மனிதாபிமானம்தான். எனவே உமாசங்கர் அவர்களை பொதுவான மனிதராக பாருங்கள். தயவு செய்து அவரை சாதி என்ற வட்டத்துக்குள் இழுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

*****


நண்பர் வெறும்பய  அவர்கள் ஒரு முக்கியமான, நெஞ்சை வருடும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அது... பூஜா என்ற பூந்தளிரை கயவன் ஒருவன் கடத்தி வந்து கேரள பேருந்து நிலையங்களில் பிச்சையெடுக்க வைத்துள்ளான். அம்மா பசிக்குது... காசு போடுங்க என்று மழலையில் அழைத்து பிச்சையெடுத்த சிறுமியை மீட்டதுடன் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த பிச்சைக்காரனையும் கைது செய்து விசாரித்துள்ளார்கள். என்ன கொடுமை பாருங்கள் அவனும் வாய் பேச முடியாத ஊமை. அந்த பிஞ்சுதான் நாகலுப்பி என்ற ஊரில் பிறந்ததாகவும் அப்பா ராஜூ, அம்மா முன்னிதேவி என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இது போன்றதொரு இடத்தை யாருமே கேள்விப்பட்டதில்லையாம். இப்ப அந்தத்தளிர் திருவேந்திரத்தில் இருக்கும் நிர்மலா சிசுபவன் என்ற மையத்தில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளாள்.

குஞ்சைப் பிரிந்த கோழி, கன்றைப் பிரிந்த மாடு, குட்டியைப் பிரிந்த ஆடு இன்னும் பல ஐந்தறிவு ஜீவங்களின் பிரிவுத்துயரை நாம் பார்த்து வருந்தியிருக்கிறோம். ஒரு தாயின் பிரிவையும் சேயின் பிரிவையும் எத்தனை சினிமாக்களில் பார்த்து வருந்தியிருக்கிறோம். சினிமா என்பது மாயையாக இருந்தாலும் உண்மையில் அந்தத் தாய் மற்றும் சேயின் வலி எப்படியிருக்கும் என்பதை நாம் அறிவோம்.

அந்தக் குழந்தை பற்றிய விவரம் யாருக்காவது தெரிந்திருந்தால் தயவு செய்து நிர்மலா சிசுபவனுக்கு 0471 - 2307434 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். இந்தப் பதிவை படிப்பதுடன் மட்டுமல்லாது உங்கள் வலைப்பூவிலும் உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விரைவில் தாயும் சேயும் இணைந்து 'ஆராரோ... ஆரிரரோ...' பாட இறைவனை பிரார்த்திப்போம்.

*****

கடைசியாக நம்ம தலைவர் (அதாங்க நம்ம வாரிசு விஷால்) இப்பதான் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்காரு நிறைய சேட்டைகளுடன்... இப்பல்லாம் அவருக்கு மூடு வந்தா அம்மாகிட்ட செல்போனை எடுத்து கொடுத்து 'அம்மா... அப்பா..' என்று போன் செய்யச் சொல்கிறாராம். எனக்கு அடித்துக் கொடுத்ததும் "அப்பாபாபா..." என்று ஒரு அழுத்தமான வார்த்தைப் பிரயோகம். அதன் பின் அவர் 'பாப்பா...ஆஆஆ லீலீ' - அதாவது பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சு என்று சொல்கிறார் . நான் தம்பி என்றதும் 'ந்னா' - அதாவது என்ன என்று கேட்கிறார். பின் 'ஆ... லூலூ... காகக்க்ககக்க்க.... மீஜகக்ரியக்க' என்ற சைன மொழிகள். அவர்கள் அம்மா நித்யா சொல்லு என்றதும் 'நித்தா' என்றழைக்கிறார். பேர் சொல்லத்தானே பிள்ளை... அம்மா... இப்ப நித்தா ஆயாச்சு. எல்லாம் முடிந்து கடைசியில் செல்போனுக்கு முத்தம். (அப்பாவுக்கு முத்தமாம்). மனசுக்கு சந்தோஷமான நொடிகள் இது.

கொசுறு: தம்பியிடம் நான் பேசினால் மூத்த செல்லத்துக்கு மூக்கில் மேல் கோபம். அவர்தான் பேச வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர்களின் சண்டையும் சில நேரம் சந்தோஷிக்க வைக்கிறது பல நேரம் சிந்திக்க வைக்கிறது.

நன்றி நண்பர்களே... மீண்டும் அடுத்த மனசின் பக்கத்தில் சந்திக்கலாம்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் உதவி : நண்பர்களின் வலைப்பூக்கள்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மாட்டின் குரல்


கொசுக்கடிக்கு காலைத்
தூக்கியபோது
தவறுதலாய்
பாத்திரத்தில் பட்டு
பால் கொட்டிவிட்டது...

கோனாரு கோபப்பட்டு
விளாசிய விளாசலுக்கு
கொசுக்கடி பெரிதில்லைதான்..!

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிறுபூக்கள் - II



மனதைக் கவர்ந்தது
வானவில்...
மழலைச் சிரிப்பைக்
காணும் வரை..!

****

சொந்த வீடு சுகமே...
சந்தோஷமாய் ஊஞ்சலாடியது
தூக்கணாங்குருவி..!

****

கோவிலில் அன்னதானம்
குருக்கள் வீட்டில்
கொதித்தது அரிசி..!

****

கல்லூரிச் சாலை...
இரு மருங்கிலும் மரங்களாய்
மாணாக்கர்கள்..!

****

மக்கும் குப்பையாக நான்
மக்காத குப்பையாய்
உன் நினைவுகள்...!

-'பரிவை' சே.குமார்

வலைச்சர வாரத்தில்...

நான்காம் நாள் கட்டுரையான சிறுகதை சிற்பிகள் படிக்க...

ஐந்தாம் நாள் கட்டுரையான விளைச்சல்கள் படிக்க...

புதன், 18 ஆகஸ்ட், 2010

மகனுக்கு...



மூலக்கடை முனியசாமி
'மூதேவி' என்கிறார்...!

பட்டறை பழனிசாமி
'முண்டச்சி' என்கிறார்..!

சலூன் சாம்பசிவம்
'சனியனே' என்கிறார்..!

பால்க்கடை பரந்தாமன்
'எருமை' என்கிறார்..!

காபிக்கடை கந்தசாமி
'பரதேசி' என்கிறார்..!

நகைக்கடை சேட்டு
'நாயே' என்கிறார்..!

பூக்கடை புகழேந்தி
மட்டும் என்னை
'தாயி' என்கிறார்..!

அவருக்கும் உன்னைப்போல
ஒரு மகன் இருப்பான் போல..!

-'பரிவை' சே.குமார்.

வலைச்சரத்தில் எனது மூன்றாம் நாள் பகிர்வான கவி(தை) ஊர்வலம் படிக்க இங்கே சொடுக்கவும்.

*போட்டோ தந்த கூகுள் தேடுபொறிக்கு நன்றி

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தேகத் தீண்டல்




நெருக்கத்தில் நாம்...
தீண்டல்களின் தீயில்
தகித்துக் கொண்டிருக்கும்
மனங்கள்..!

உன் விரல் கோலத்தால்
உடம்புக்குள் மின்சாரம்...!

தீண்டும் இடங்கள்
தவிர்த்து தீண்டா
இடங்களில் தவிப்பு..!

உலரும் நாவால்
வருடப்பட்டது
உலர்ந்த உதடு..!

உன் நகக் கீறல்களில்
வியர்வை துளிகள் புகுந்து
எரிகின்ற தேகத்திற்கு
எண்ணெய் வார்க்கின்றது..!

இயங்கிக் கொண்டிருக்கும்
உடல்களால் இயக்கம்
மறந்தது இதயம்..!

அறியாப் பருவத்துக்குப் பின்
ஆடைகளின்றி நாம்..!

கூடிக்கலந்த சந்தோசம்
முகத்தில் மட்டுமல்ல
மனதிலும்..!

எழ முயன்றபோது
மீண்டும் என்கிறாய்...
மறுத்தாலும் உன் மடியில்..!

-'பரிவை' சே.குமார்

வலைச்சரத்தில் எனது "தித்திக்கும் தமிழ்" என்ற கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும். 

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

வலைச்சர ஆசிரியனாய்...




வணக்கம் நண்பர்களே...

இன்று முதல் (16/08/2010) வரும் ஞாயிறு (22/08/2010) வரை வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஆற்றும்படி திரு.சீனா ஐயாவிடம் இருந்து அழைப்பு. வலைப்பூவிற்குள் இறங்கி ஒரு வயது குழந்தையான எனக்கு இந்த அழைப்பு சொல்லவொன்னா சந்தோஷத்தைக் கொடுத்தது. அழைப்புக்கு தலைவணங்கி நாளை முதல் வலைச்சரத்தில் வலம் வர இருக்கிறேன். என் நட்புக்கள் அனைவரும் வலைச்சரத்தை வாசிக்க வாருங்கள்.

இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா என்னிடம் மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தாலும் என் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டார். ஆம் இன்று காரைக்குடி சென்ற ஐயாவும் அம்மாவும் எனது இல்லத்தை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து என் மனைவி, மகள், மகன் ஆகியோரை பார்த்து வந்துள்ளார்கள். என் இல்லத்தாருக்கும் மிகுந்த சந்தோஷம். மதுரை வந்ததும் ஐயா எனக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பி சந்தோஷப்பட்டார். அதற்கும் ஐயாவுக்கு நன்றிகள்.

இது மனசில் எனக்கு 50வது பதிவு. எனது 50வது பதிவை வலைச்சர ஆசிரியனாய் இருக்கப் போகிறேன் என்ற பகிர்வாக இடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இதுவரை கிறுக்கல்களில் 110 நெடுங்கவிதைகளில் 65 சிறுகதைகளில் 20 மற்றும் மனசில் 50 என மொத்தமாக பார்த்தால் எனக்கு இது 255வது பதிவு. இதற்கெல்லாம் காரணம் உங்கள் அன்பும் நட்பும்தான் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நன்றி நண்பர்களே... உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடரட்டும்.

வலை நட்பை வாழ் நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

வலைச்சரத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

என்னைப் பற்றி நானே


சுதந்திர தின வாழ்த்துக்கள்.

'பதிவுலகத்தில் நான்' என்ற தொடர் பதிவில் களம் இறங்க வேண்டும் என்று என் அன்புத்தோழி கயல் அவர்கள் அழைத்திருந்தார். எனக்கும் தொடர்பதிவுக்கும் ரொம்பத்தூரங்க. நான் இதில் கலந்துக்க விரும்புவதில்லை. எல்லாரும் சொன்னதன் கலவையைத்தான் நாமும் சொல்லமுடியும். இருந்தாலும் அழைப்பை நிராகரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதனால் மனதில் உள்ளதை மனங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி கயல்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சே.குமார்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அதே... அதேதான் நம்ம உண்மையான பேருங்க (விட்டா பிறப்புச் சான்று கேட்பாங்க போல)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

இது ஒண்ணும் தங்கமலை ரகசியமில்லைங்க. சில வலைப்பூக்களைப் பார்த்தப்போ நாமளும் எழுதலாமேன்னு தோணுச்சு. அப்ப நம்ம நண்பர் மோகனன் வலைப்பூ ஆரம்பித்திருந்தார். அவரிடம் சில விளக்கங்கள் கேட்டு என்ன வந்தாலும் பரவாயில்லை என்று கிறுக்கல்கள் என்ற வலைப்பூ ஆரம்பித்து கிறுக்க ஆரம்பித்தாச்சு.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா அப்படின்னா என்னங்க..? கொஞ்சம் சொல்லுங்களேன். நாம எழுதுறது எல்லாமே நமக்கு பிரமாதமானதுதான். மனசுக்குள்ள அடைகாத்து அதை எழுத்தில் பார்க்கிற சந்தோஷமே பெருசுங்க... இதுல பிரபலம் அப்படிங்கிறதுல எல்லாம் நம்பிக்கையில்லைங்க.

தமிழ் மணம், தமிழிஷ், உலவு எல்லாத்துலயும் இணைச்சாச்சு. நம்ம எழுதுறதை நாலு பேர் படிச்சுட்டு அவங்க மனசுல தோன்றதை எழுதுறப்ப கிடைக்கிற சந்தோஷத்தைவிட பிரபலம் பெருசாங்க... ப்ளீஸ் யாரவது சொல்லுங்களேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒரு சில பகிர்வுகளில் சொந்த விசயங்களை பகிர்ந்திருக்கலாம். ஆனால் சொந்த விசயங்களை பகிர மட்டுமே வலைப்பூ என்ற ஒன்று தேவையில்லை. மனதில் எழுவதை எழுதுவதற்கே வலைப்பூ என்பது என் எண்ணம். (உண்மைதானேங்க)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிக்கலாமா...? அப்படின்னா ஏங்க பாலைவன பூமியில வந்து கிடக்கிறோம். ஊருல உக்காந்து கம்ப்யூட்டர் பொட்டியில எழுதியே சம்பாரிச்சிருப்போமே. சம்பாரிக்கிற வழிய யாராவது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க... ப்ளீஸ். வேலைக்குப் பொயிட்டு வந்துட்டு மன சந்தோஷத்துக்காக மட்டுமே என் எழுத்துக்களை வலைப்பூவில் தொடுக்கிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நாலில் இருந்து ஒண்ணாச்சு. எல்லாமே தமிழ்தாங்க... மத்தமொழியிலயா... ஹி..ஹி... ஆர்வக்கோளாறுல ஹைக்கூ கவிதைக்கு கிறுக்கல்கள் (100க்கு மேல கிறுக்கியாச்சு), கவிதைக்கு நெடுங்கவிதைகள் (65), சிறுகதைகள் (20), மனசு என நான் கு வலையை மேய்ச்சுப் பார்த்து வேலைப்பளுவின் காரணமாக மனசுக்கு எல்லாத்தையும் மாற்றியாச்சு. எப்ப மீண்டும் ஒண்ணு எப்ப நான்காகும் என்பது தெரியவில்லை.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமைப்பட என்னங்க இருக்கு. திறமையிருக்கவன் திண்ணையில இருக்கான்... இல்லாதவன் தரையில இருக்கான். எனக்கு நல்லா கவிதை எழுதுற, கதை எழுதுற எல்லாரையும் மிகவும் பிடிக்கும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

//உன்னை அறிந்தவனாய் நான்.......
..என்னை அறியாதவளாய் நீ.......
எனக்குள் மட்டும் இதயக் குடைச்சலாய்.........அருமையான வரிகள்.

சில ஞாபங்கள் தீ மூட்டும் சில ஞாபங்கள் தாலாட்டும்.
பாராட்டுக்கள்//

மேலே உள்ள வரிகள் நிலாமதி அவர்கள் அளித்த பின்னூட்டம். இதுதான் எனது எழுத்துக்களை ஊக்குவித்த முதல் விதை. நன்றி நிலா.

அதன்பின்னர் ஒரு நாள் நாடோடி இலக்கியன் அவர்களின் வலையில்...

//சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! //

மேலே உள்ள வரிகளை நொறுக்குத்தீனி என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அதுதான் என்னை இன்னும் எழுதத்தூண்டிய இரண்டாம் விதை. நன்றி இலக்கியன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னங்க அது கடைசியா... நான் எழுதுனது போதுமுன்னு நினைக்கிறீங்களா..? ஏம்பா அவ்வளவு சோதிக்கிறேனா?.. . நான் ஒன்றும் பிரபலமில்லை... என்னைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை.

இப்ப எல்லாரும் நல்லா எழுதுறாங்க. அவங்கவங்க திறமைமேல் நம்பிக்கை வச்சு எழுதினா எல்லாரும் நல்ல இடத்தை அடையலாம் (பிரபலமாகலாமுன்னு நான் சொல்லமாட்டேன். பிரபலத்தில் நம்பிக்கை இல்லை)

அப்புறம், தனி மனித தாக்குதல், அடுத்தவர் எழுதியதை காப்பி செய்வது, மத சம்பந்தமான இடுகைகளால் மற்றவர் மனதை புண்படுத்துவது போன்ற அநாகரீக செயல்களை தவிர்த்து எழுதினால் நான் முன்பு எனது பதிவு ஒன்றில் சொன்னது போல் வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்லலாம்.

குறிப்பிட்ட நபரை பதிவை தொடருங்கள் என்று சொல்ல முடியவில்லை. காரணம் எனக்குத் தெரிந்து எல்லோரும் எழுதியாச்சு. இதுவரை எழுதாத நண்பர்கள் தொடருங்கள்.

நன்றி. வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஆராதனா



துரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அறந்தாங்கி செல்லும் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து 'ஸ்... அப்பா' என்று மூச்சுவிட்டபடி வெளியில் பார்வையை செலுத்தியவனின் பார்வை பூக்கடையில் நின்ற அந்தப் பெண்ணின் மீது நிலைத்தது.

'ஆராதனா மாதிரி இருக்கு' மனசு சொல்ல...

'அவ தானா..?' தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.

'பார்த்து பல வருஷமாச்சு... அவதானா...? இல்ல வேற யாருமா...?' சந்தேகம் சட்டென்று எட்டிப்பார்த்தது.

மனசுக்குள் குழப்பம் குடி கொண்டது. ஆனால் பார்வை மட்டும் அவளிடமே நிலைத்திருந்தது.

சற்றே அவள் அவன் பக்கம் பார்த்து திரும்ப, சந்தேகம் கரைந்தது. அவள்தான் ... அவளேதான்... என்றவன் வேகமாக எழ, அருகில் இருந்தவன் 'என்ன சார்... வெளிய போறீங்களா..? இடத்தைப் பார்த்துக்கவா...? என்க 'வேண்டாம்... அடுத்த பஸ்ல வாரேன்...' என்றவன் கீழே இறங்க, 'கஷ்டப்பட்டு இடம் பிடிச்சிட்டு இறங்கிப் போறதப்பாரு...' என்றவனின் குரல் காற்றில் கரைந்தது.

அவள் முன் சென்றவன், 'ஆராதனா' என்று அழைக்க, திடுக்கிட்டு திரும்பியவள் புருவம் உயர்த்தினாள்.

"நீ... நீங்க ஆராதனாதானே...?"

"ஆமா... நீங்க...?"

"நான் மதன்...."

"........"

"அறந்தாங்கியில பக்கத்து பக்கத்து வீட்ல குடியிருந்தோமே..."

புரிந்தவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. "மதன்... சாரி சட்டுனு ஞாபகத்துல வரலை... எப்படியிருக்கீங்க... அப்பா, அம்மா, தங்கச்சி... அவ பேருகூட... ம்... மகாலெட்சுமி... எல்லாரும் நல்லாயிருக்காங்களா...?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க... தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி இப்ப சிங்கப்பூர்ல செட்டிலாயிட்டா... நான் மதுரையில இண்டியன் பாங்குல இருக்கேன்... ஆமா... நீங்க...?"

"ம்... அது என்ன மரியாதை... பேரை சொல்லி கூப்பிடுங்க... நான் உங்களைவிட சின்னவதான்..."

"ம்..."

"அப்பா, அம்மா தேனியில இருக்காங்க... நான் ராஜபாளையம்..."

"அர்ஜெண்டா போறியா..?"

"இல்லை... அவரோட தங்கச்சி இங்க இருக்கா... அதான் வந்து பார்த்துட்டு போறேன்..."

"அப்படியா... காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா..?"

"ம்... பேசலாம்..." என்றதும் இருவரும் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி மதுரை மீனாட்சி ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தனர்.

எதிர் எதிரே அமர்ந்ததும் "என்ன வேணும்...?" என்றவனிடம் "எனக்கு காபி மட்டும் போதும் டிராவல் பண்ணும்போது நான் எதுவும் சாப்பிடுறதில்லை." என்றாள்.

"ஆளே அடையாளம் தெரியலை மதன். பதினைந்து பதினாறு வருஷத்துல எத்தனை மாற்றம்..?"

"ஆமா ... நீ மட்டும் என்னவாம்... குண்டாயிட்டே... "

"அதுக்கு என்ன பண்றதாம்... கல்யாணம் ஆயிட்டாலே உடம்பு ஏறிடுது... உன் குடும்ப வாழ்க்கை எப்படி..?"

"ம் நல்லா போகுது... அன்பான மனைவி, நான் செய்யிறது நல்லதுன்னா தட்டிக் கொடுக்கிறதும் தப்புன்னா தட்டிக் கேக்கிறதுமாக ரொம்ப நல்லவ... அறிவான, அன்பான குழந்தைங்க... ஆமா அங்க எப்படி...?"

"எனக்கென்ன ரொம்ப நல்லா இருக்கேன்... நான் தான் உலகமுன்னு இருக்கிற கணவன், எனக்கு உலகமான குழந்தைகள்... ராஜபாளையத்துல லேடீஸ் காலேஸ்ல புரபஸரா இருக்கேன்."

"அப்புறம்... கடந்து போன வாழ்க்கையெல்லாம் நினைக்கிறதுண்டா..?"

"கண்டிப்பா... எத்தனை சந்தோஷங்கள்... எத்தனை துயரங்கள்... எல்லாம் நினைச்சுப் பார்ப்பேன்... பல எண்ணங்கள் வெளிய சொல்லாமல் மனசுக்குள்ளே மக்கிப் போய்விட்டன... சில நேரம் அது தலை தூக்கும்போது ஒரு சிலதை நினைக்கிறப்போ சிரிப்பு வரும்... ஒரு சிலதை மிஸ் பண்ணிட்டோமோன்னு வருத்தமா இருக்கும்... அப்பல்லாம் தாங்காம அழுதுகூட இருக்கேன்... என்ன செய்ய... காலம் சுகங்களையும் துக்கங்களையும் மாறி மாறித்தானே தருகிறது..." சொன்னபோது ஏனோ அவளது கண்கள் கலங்கியதை அவன் கவனிக்கத் தவறவில்லை.

"ஆமா... நீ நினைக்கிறதுண்டா..."

"ம்... இப்பவும் மொட்டை மாடிக்குப் போன நீயும் மாகாவும் என்னிடம் சண்டை போட்டு பின் சமாதானம் ஆகும் அந்த விடுமுறை நாட்கள் எனக்குள்ளே மலர்ந்து மறையும். நீ சொன்ன மாதிரி சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லாமலே நெஞ்சுக்குள் சேமித்து வைத்தவைகளை அடிக்கடி அசைபோடுவேன். அப்பல்லாம் சே... திராணியற்று விட்டு விட்டோமே என்று என்மேலே கோபம் வரும் இருந்தாலும் சில சந்தோஷங்களை நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்வேன்." என்றவன் ஏனோ பார்வையை தாழ்த்திக் கொண்டான்.

காபி குடிக்கும் வரை இருவரும் பேசவில்லை. வெளியில் வந்ததும் " ஆமா... பசங்க என்ன பண்றாங்க...?" என்றான்.

"மூத்தவ எய்த் படிக்கிறா... சின்னவன் சிக்ஸ்த்... உன் பசங்க..."

"பொண்ணு பிப்த்... பையன் செகண்ட்..."

"சரி... நீ இப்ப கதை, கவிதை எல்லாம் எழுதுறியா..?"

"எப்பவாவது தோணினா எழுதுவேன்... முன்னமாதிரி தினமும் எழுதுறதில்லை... அது ஒரு காலம்... இப்ப வேலைப் பளுவில எங்கே சிந்திக்க முடியுது..?"

"தினமும் வேண்டாம்... வாரத்துல ஒரு நாளாவது எழுதலாமே... என் உன்னோட திறமையை நீயே அழிச்சிக்கிறே... அப்ப நானும் மகாவும் என்ன சொன்னாலும் நீ கேப்பே... இப்பதான் சொல்லுறதுக்குன்னு ஒருத்தி இருக்கா... அப்புறம் எம் பேச்சை கேட்கவா போறே..."

"சே... அப்படியெல்லாம் இல்லை... எனக்காக இல்லாட்டியும் நீ சொன்னதுக்காகவாவது இனி எழுதப் பார்க்கிறேன்.."

"சரி... மகா பேசுனா ரொம்ப கேட்டேன்னு சொல்லு... என்னோட போன் நம்பரை மொபைல்ல ஏத்திக்க... ஒரு நாள் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வா.." என்றபடி நம்பரை சொன்னாள்.

"சரி... நான் மிஸ்டு கால் கொடுக்கிறேன்... என் நம்பரை சேவ் பண்ணிக்க..." என்றபடி அவளது நம்பருக்கு டயல் செய்தான்.

"அப்புறம்... உன்னை இத்தனை வருஷம் கழிச்சு பார்த்தது ரொம்ப சந்தோஷம் மதன்... எனக்கு..." எதோ சொல்ல நினைத்தவளை செல்போன் அழைக்க,

"என்னம்மா.... அம்மா பஸ்ஸ்டாண்டல இருக்கேன்.."

"..."

"வந்துருவேன்..."

"...."

"அப்பா எங்க?"

"...."

"சரி மதன் என்ன பண்றான்...?. சேட்டை பண்றாரா அவரு..." அவள் பேசிக் கொண்டே போக, மதனுக்கு அதிர்ச்சி. 'ஒருவேளை மனசுக்குள்ள மக்கிக் போன எண்ணத்துல நானும் இருந்திருப்பேனோ...?' அவனது எண்ணத்தை "சரி மதன் பார்க்கலாம்" என்ற அவளின் குரல் கரைத்தது.

அவள் பேருந்தில் ஏறி அமர்ந்து அவனுக்கு சைகை காட்ட, அறந்தாங்கி பேருந்தை நோக்கி சென்றவனின் செல்போன் அழைக்க, எதிர்முனையில் அவனது மகளின் குரல் கேட்டு "ஆராதனா... என்னம்மா?" என்றான்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ : கூகிள் தேடுபொறி

சனி, 7 ஆகஸ்ட், 2010

சிறு பூக்கள் - I


பூமிக்கு நிழலாய் நான்
எனக்கு நிழலாய் யார்?
கேள்வியுடன் மரம்..!
***
பணத்தால் பூஜை
சிரித்தது விக்கிரகம்...
மனசுக்குள் புழுக்கமாய்
ஏழை பூசாரி...!
***
அனைத்தும் குஞ்சுகள்
நம்பிக்கையோடு
அடைகாத்தது கோழி..!
***
உன் புன்னகையை
ஒரு முறை பூக்கவிடு...
பலமுறை எழுதுகிறேன்
கவிதை..!
***
அழகாய் பூத்திருந்தன
கோயில் படிக்கட்டுகளில்
காதல் ஜோடிகள்..!

-'பரிவை' சே.குமார்

புதன், 4 ஆகஸ்ட், 2010

மனசின் பக்கம் - I

நேற்றிரவு எங்கள் அறையில் சாப்பிட அமரும்போது சன் மியூசிக்கில் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவின் பேச்சும் அவர் சொல்லும் கவிதைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் தினம் பார்க்கும் நிகழ்ச்சியானது.


ராசிபுரத்தில் இருந்து ஒரு பெண் பேசினார். அப்போது அவர் தனது கணவருக்கு 25ஆம் தேதி பிறந்தநாள் என்றும் அவருக்காக நல்ல பாடலாக போடுங்கள் என்று சொன்னார். அதற்கு அவர்கள் போட்ட பாடல்...

'நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா...'

பாடலைக் கேட்டதும் எல்லாரும் சிரித்ததில் புரையேறி... நாங்களே ரொம்ப கஷ்டப்பட்டோம் என்றால் கேட்ட கணவர் நிலை...?

அடுத்து ஒரு பெண்மணி அதே போல் தனது கணவருக்காக பாடல் கேட்க போடப்பட்ட பாடலோ...

'சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே...'

நாம் கேட்க நினைக்கும் பல நல்ல பழைய பாடல்களை ஒளிபரப்புகிறார்கள் சந்தோஷமே. ஆனால் பாடல் கேட்பவர்கள் அவர்களாக படத்தின் பெயரை சொல்லும்பட்சத்தில் அதே பாடலை போடலாம். ஆனால் எதாவது பாட்டுப்போடுங்கள் என்று சொன்னால் அதற்கு தகுந்தாற் போல் பாடல் போட்டால் நல்லாயிருக்கும். 

 நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.

-----------------------

ம்ம ஊரில் வளர்ந்த மரங்களை வெட்ட நாம் மலைப்பதும் இல்லை... வருந்துவதும் இல்லை. கட்டில் செய்யவும்... கதவுகள் செய்யவும் பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்களை வெட்ட நாம் தயங்குவதில்லை. ஆனால் இங்கு இருக்கும் அரபிகள் பேரீச்சம் பழ மரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவதில்லை. அது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அந்த மரங்களை வேறுடன் பிடிங்கி எங்கு தேவையோ அங்கு நட்டு அதன் இலைகளை ஒன்று சேர்த்து சாக்கால் கட்டி வைத்து தண்ணீர் விட்டு வைக்கிறார்கள். அது மீண்டும் துளிர்த்ததும் சாக்கை எடுத்து விடுகிறார்கள். மரமும் தழைத்து வளரும்.

நாம் மரங்களை வேறுடன் பிடிங்கி வைப்பது என்பது சாத்தியமில்லைதான் பட்ட மரங்களை துளிர்க்க வைக்க முடியாது. நம்மால் முடிந்த மரக் கன்றுகளை நட்டு நீர் விட்டு வந்தால் கண்டிப்பாக நல்ல மரங்களை நம் சந்ததிக்கு விட்டுச் செல்லலாமே.

மரம் வளர்ப்போம்... அதனுடன் சேர்த்து மனிதமும் வளர்ப்போம்.

---------------------

திவு திருட்டு என்றும் திருடவில்லை தவறுதலாக ஆகிவிட்டது என்றும் நம் நட்புக்குள் நேற்று கலவரமாகியிருந்தது.

நடந்துவிட்டது அது சரி தவறென்று பட்டி மன்றம் நடத்துவதைவிட சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டால் இந்தப் பிரச்சினை முற்றுப் பெறும்.


இந்த சிறு புள்ளி வளர்ந்து காட்டுத்தீயாக மாறமல் இருக்க நமக்குள் ஒத்துமை வேண்டும். எனவே அடுத்தவர் பதிவை எதாவது ஒரு காரணத்துக்காக எடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்தால் நட்பு வளரும்.

வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

இனி அடிக்கடி அல்ல மனசில் தோன்றும்போது மனசின் பக்கம் தொடரும். (அடிக்கடி உங்களை கஷ்டப்பட வைக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்)

-பரிவை சே.குமார்.

படங்களுக்கு நன்றி  : Google.com

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

கனாக் கண்டேன்...


மதம் இல்லா உலகில்
மனிதம் வாழ்வதாக..!

சாதியில்லா உலகில்
சமத்துவம் வாழ்வதாக..!

வன்முறையில்லா உலகில்
அஹிம்சை வாழ்வதாக..!

தீவிரவாதம் இல்லா உலகில்
தியாகம் வாழ்வதாக..!

கனாக் கலைக்கப்பட்டது...

காலைப் பேப்பரில்
நேற்றைய வன்முறை
நிகழ்வுகள் போட்டோவுடன்
புன்னகைத்தது...!

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

மனசு முழுதும் வாழ்த்து..!




நண்பா...


உறவுகள் எல்லாம் ஒரு புள்ளியில் நிற்க
நீ மட்டும் நெஞ்சுக்குள் அழியாத கோலமாய்..!


ரத்த சொந்தம் ரகசியங்கள் காக்கா...
என் இரகசியங்கள் உன் இதயம் சுமப்பவன் நீ..!


எத்தனை முறை எனக்காக நீயும்
உனக்காக நானும் வாழ்ந்திருப்போம்...
கணக்கிடமுடியாத கணக்கு இது..!


ஒளிவு மறைவில்லா நமக்குள்
எப்படி  ஒளிந்தது நட்பு..?


விரிசல்கள் புரையோடினாலும்
நாளில் பலமுறை
வந்து செல்கிறாய் எனக்குள்...
நானும் வாழ்வேன் உனக்குள்..!


நமக்குள்தானே பிரிவு
நட்புக்குள் இல்லையே...



என் இதய நட்புக்களுக்கும்... முகமறியாவிட்டாலும் மனம் அறிந்த நட்புகளுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.