வெள்ளி, 1 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : நல்லதைச் சொல்லி வளர்ப்போம்

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், அது என்னன்னா 'பொட்டப்புள்ளய பொத்தி வளர்க்கணும். ஆம்பளப் புள்ளய அடக்கி வளக்கணும்' அப்படின்னு சொல்வாங்க. அது பத்துப் பதினைந்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சரியின்னு சொல்லலாம். ஆனா இன்னைக்கு நிலையில கிராமத்துல கூட பொம்பளைப் புள்ளைங்களை பொத்தி வளர்க்க முடியலை. காரணம் என்னன்னா இன்றைய உலகில் பெண்கள் புதுமைப் பெண்களாய் எல்லாத் துறைகளிலும் காலூன்றி வளர ஆரம்பித்து விட்டார்கள். அடுப்பெறிக்கும் பெண்ணுக்கு படிப்பெதற்குன்னு கேட்ட காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. மாட்டுச் சாணம் அள்ளி கூடையில வச்சி தலையில தூக்கிக்கிட்டுப் போயி வயல்ல கொட்டிட்டு வந்து பள்ளிக்கூடம் போன வீட்டுல பொறந்த பொண்ணு இன்னைக்கு ஸ்கூட்டியில காலேஜ் போகுது. மாடு கட்டிக்கிடக்கிற கசாலைப் பக்கமே போறதில்லை. சாணியா... ஐய்யேன்னு காத தூரம் போகுது. அதுபோக இன்னைக்கு சாணி அள்ள மாடும் இல்லை... அதை உரமாக்க விவசாயமும் இல்லைங்கிறது வேற விஷயம், இதைப் பற்றி பேசினா பதிவு விவசாயத்துக்குப் பின்னே கண்ணீரோடு பயணிக்கும்.

இன்றைக்கு பெண்கள் எல்லாத் துறைகளில் ஆண்களுக்கு நிகராக பணியாற்றுவது சந்தோஷமான விஷயம். 'பொம்பளப்புள்ளய எதுக்குங்க படிக்க வைக்கணும்... காலாகாலத்துல ஒருத்தன் கையில பிடிச்சிக் கொடுத்துட்டாப் போதும்'ன்னு சொன்னவருதான் 'ஏம்ப்பு உனக்கு சேதி தெரியுமா... எம்பேத்தி பத்தாப்புல நானூத்தி எம்பது மார்க்கு வாங்கியிருக்காளாம்'ன்னு சந்தோஷமாச் சொல்லிக்கிட்டுத் திரிகிறார். அந்த படிப்பறிவு இல்லாத மனிதருக்குள்... தன் மகளை ஒன்பதாவதுடன் நிறுத்திய அந்த மனிதருக்குள்... தன் பேத்தியின் சாதனை எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது பாருங்கள். இதுதான் காலத்தின் மாற்றம்... இந்தக் காலத்தின் மாற்றம்... இந்த வளர்ச்சி... இன்றைய பெற்றோரால் குழந்தைகளை சரியான பாதையில் பயணிக்க வைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

பெண் பிள்ளைகளுக்கு நாம் சுதந்திரம் கொடுக்கிறோம்... அந்தச் சுதந்திரம் அவர்களைப் பொறுத்தவரை எந்தளவுக்கு நன்மை பயக்கிறது என்றால் நூற்றுக்கு எண்பது சதவிகிதத்துக்கு மேல் தவறான பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வைக்கிறது. இப்பல்லாம் ரெண்டாவது மூணாவது படிக்கும் போதே செல்போனில் நோண்டவும் டேப் (TAB)பில் மணிக்கணக்கில் விழுந்து கிடக்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்களாகிய நாம்தானே. நான் ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஒருநாள் முழுவதும் அங்கு தங்கியிருந்த போது ஐந்தாவது படிக்கும் அவரின் மகனை சாப்பிடும் நேரத்தில் மட்டுமே பார்த்தேன். அதுவும் யாருடனும் பேசாமல் வேகவேகமாக சாப்பிட்டு விட்டு அறைக்குள் புகுந்து கொண்டான். என்னங்க பையனுக்கு பரிட்சை எதுவுமா? என்றபோது 'அவனோட உலகமே டேப் (TAB) தான்... அதில்தான் இருபத்தி நாலு மணி நேரமும்... நான் அவனை எதுவும் சொல்வதில்லை...' என்றார் கூலாக. அவன் டேப்பில் கிடப்பது அவருக்கு அன்றைய நிலையில் சந்தோஷம்தான்... ஆனால் வருங்காலத்தில்...? அதை யோசிக்கும் நிலையில் அவர் இல்லை. ஏன்னா இன்றைய வாழ்க்கை நிலை அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பரின் முகநூல் பகிர்வில் அவருக்கும் அவர் மகளுக்குமான உரையாடலை பகிர்ந்திருந்தார். பத்தாம் வகுப்பிற்குள் நுழையும் மகள்,  சிறு வயது முதல் பக்கத்து வீட்டில் வசிக்கும், தன்னுடன் தொடர்ந்து ஒன்றாகப் படித்து வரும் தோழனின் செயல்பாடுகள் வித்தியாசமாய் இருப்பதாகச் சொல்லி, அவனை நானும் லைக் பண்ண ஆரம்பிச்சிட்டேன் அப்பா... தப்பாப்பா என்று சொன்ன போது, அது தப்பில்லைம்மா... இந்த வயசுல வர்ற இனக்கவர்ச்சிதான் அது, நமக்கு வாழ்க்கை விரிஞ்சி கிடக்கு... நிறைய சாதிக்கணும்... வரப்போற பரிட்சையில சாதிச்சி பெரிய ஆளா வரணும்... என்றெல்லாம் எடுத்துச் சொல்லி அதற்கு அழகாய் விளக்கங்கள் கொடுத்தபோது அந்தப் பெண் 'சாரிப்பா...' என்று சொல்லியிருக்கிறாள். இப்படி எத்தனை பெற்றோர் பேசுகிறோம். எதையும் விவரமாக எடுத்துச் சொல்கிறோமா...? இல்லையே எல்லாவற்றிலும் எடுத்தோம் கவிழ்த்தோம்தான்... இது போன்ற செயல்கள்தான் பல வினுப்பிரியாக்களைக் கொடுத்து விடுகிறது. இனியாவது பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவோம். எது நல்லது... எது கெட்டது என்பதை எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்போம்.

நானும் என் மகனு(ளு)ம் நல்ல தோழர்கள்... எதையும் எங்களுக்குள் மறைத்துக் கொள்வதில்லை. சினிமா முதல் செக்ஸ் வரை எதையும் விட்டு வைப்பதில்லை எல்லாமே பேசுவோம் என்று சொல்லும் பெற்றோர்களைப் பார்த்து எனக்குச் சந்தோஷமாக இருக்கும். இன்றைய பாஸ்ட்புட் உலகில் வீட்டில் இருக்கும் நாலுபேரும் சேர்ந்து உண்டு... பேசிச் சிரித்து வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. கிராமங்களில் கூட ஒன்றாக உட்கார்ந்து எல்லாரும் பேசிச் சிரித்து சாப்பிட காலம் மலையேறி விட்டது. அப்படியிருக்க தன் பிள்ளைகள், பெண்டாட்டியுடன் பேசி சிரித்து மகிழ்ந்து வாழ கொஞ்ச நேரத்தையேனும் ஒதுக்கினால் வாழ்க்கை வசப்படும்.. நம் சந்திதியினரின் வாழ்வும் வளமாகும்... அதைச் செய்யப் பழகிக் கொள்வோம்.

எங்க வீட்டில் விஷால் பள்ளி விட்டு வரும் போது வீட்டுக்கு வரும் முன்னர் அன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி முடித்து விடுவான். என் மனைவி கூடச் சொல்வார், தொணத் தொணன்னு பேசிக்கிட்டே வருதுன்னு... ஆனா அது எவ்வளவு நல்ல பழக்கம் தெரியுமா... வாத்தியார் அடிச்சாக்கூட சொல்லிடுவான்... என்ன நடக்குதுன்னு நமக்கும் தெரியும்ல்ல... இப்பவே அவனைத் திட்டி அடக்கினால் பின்னால் வரும் காலங்களில் எதையும் சொல்ல மாட்டான்... அதனால் அவன் போக்கிலே வளரட்டும் என்று சொல்லுவேன். ஆனா எங்க பாப்பா வகுப்பறையில் என்ன நடந்துச்சுன்னு எதுவும் சொல்லாது... தம்பியைப் பார்த்து பழகிக்க என்று சொன்னாலும் இன்னும் அப்படித்தான் இருக்கு. அதனால பிள்ளைங்க எங்கு பொயிட்டு வந்தாலும் என்ன பண்ணினாய்... என்ன நடந்துச்சு... என கேட்டு வளர்த்தோமேயானால் பெரியவர்களானாலும் அவர்களின் இந்தப் பழக்கம் தொடரும் என்பது என் எண்ணம்.

வயதுக்கு வந்த பிள்ளைகள் காதல், அது இது என்று விழும் போதும் அதை மெல்ல மெல்ல அவர்களுக்கு விளக்கி அதிலிருந்து மீண்டு வரச் செய்வது பெற்றோரின் கடமை, நல்ல பையன் என்றாலோ அல்லது நல்ல பெண் என்றாலோ நாங்களே அவரின் பெற்றோரிடம் பேசி திருமணம் பண்ணி வைக்கிறோம் என்று சொல்லி அதைச் செய்து வைத்தாலோ போதும். அதை விடுத்து சாதி என்ன, மதம் என்ன என்றெல்லாம் பேசி அடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி அவர்களின் உயிரை வாங்குவதாலோ காதலித்தவர்களோடு ஓடு விடுவதாலோ என்ன லாபம்...? அதுவும் எங்கள் தென் மாவட்டங்களில் ஓடிப்போன பெண்ணையோ பையனையோ வெட்டிக் கொள்கிறார்கள். இத்தனை வருடம் வளர்த்து வெட்டிக் கொள்வதற்குப் பதில் அவர்களை வாழ வைக்கலாமே...

பெண் பிள்ளைகளைப் படிக்க வைப்போம்... வேலைக்கு போகச் செய்வோம்... அவர்களுடன் நிறையப் பேசுவோம்.. ஐடித் துறை கொடுக்கும் சலுகைகளும் சந்தோஷங்களும் அவர்களின் வாழ்க்கையில் உயிரை இழக்கும் வரை கொண்டு செல்வதை அவர்களுக்கு புரிய வைப்போம். இணைய வெளி விரிந்து கிடக்கிறது... அதில் நன்மைகள் இருந்தாலும் தீமைகள் அதிகம் இருக்கு என்பதை நாம் விரிவாக... விவரமாகச் சொல்லி வைப்போம். இனி வரும் காலங்களில் ஸ்வாதிகளையும் வினுப்பிரியாக்களையும் இழப்பதைத் தவிர்ப்போம்.

இன்னும் நிறையப் பேசலாம்... இன்னுமொரு பகிர்வில் பேசுவோம்.

மொத்தத்தில் பிள்ளைகளை கட்டுப்பாட்டோடும் கவனமாகவும் வளர்ப்போம். நிகழ்வுகளுக்குப் பின்னே வருந்துவதைவிட நிதர்சனம் இதுதான் என்பதை விளக்கி நம் சந்ததிகளை நம்மோடு... நட்போடும்... மகிழ்வோடும் வாழ வைப்போம்.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. நல்ல கருத்து. நாம் பெரும்பாலும் பேசுவதில்லை, பேச விடுவதில்லை. நாம் அப்பா அம்மா ஆனவுடன் நமக்கு கொம்பு முளைத்து விடுகிறது. தலைமுறை இடைவெளியை புரிந்து கொண்டு பேசினால் பழகினால் நாம் தான் முதல் அப்பாவும் அம்மாவும் நண்பனும் தொழியும் எதிரியும். புரிந்து கொள்ளுங்கள்.
    விஜயன்

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கட்டுரை! பிள்ளைகளுடன் பேசி நட்பு வளர்த்தால் நல்லதுதான்!

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு குமார். ஆனால் செயல்படுத்தக் கடினமான நடைமுறைகளாகி விட்டன இவை என்பது காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
  4. பிள்ளைகள் வளர வளர பெற்றோர்கள் ஒரு நண்பனை போல் பழக வேண்டும். அப்போது தான் அவர்களது பிரச்னைகளை நம்மிடம் சொல்வார்கள். அவர்களின் குழப்பத்திற்கு விடை பெற்றோர்களிடம் கிடைக்கும் தலைமுறை இடைவெளி என்பது இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள் குமார். பெற்றோரும் குழந்தைகளும் தோழமை உணர்வுடன் பழகினால் எந்தப் பிரச்சனையையும் சமாளித்து விடலாம். இந்தத் தோழமை உணர்வு என்பது எல்லா உறவுகளுக்கும் அவசியமே...

    பதிலளிநீக்கு
  6. மொத்தத்தில் பிள்ளைகளை கட்டுப்பாட்டோடும் கவனமாகவும் வளர்ப்போம். நிகழ்வுகளுக்குப் பின்னே வருந்துவதைவிட நிதர்சனம் இதுதான் என்பதை விளக்கி நம் சந்ததிகளை நம்மோடு... நட்போடும்... மகிழ்வோடும் வாழ வைப்போம்.

    உண்மையான கருத்து

    பதிலளிநீக்கு
  7. அழகிய அலசல் நண்பரே எனக்கும்கூட எனது மகனுடன் நண்பனைப்போல் பழகி வாழ ஆசைதான் ஆனால் மகனுக்கு என்னை ஏதோ பிடிக்காமல் போய் விட்டது அதே நேரம் மகளுடன் நல்லமுறையில்தான் எல்லாவகையான பேச்சுகளும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய எனது வாழ்க்கையில் சிறிதளவு பிடிப்பு இருப்பதற்கு முழுக்க, முழுக்க காரணம் எனது அன்பு மகள் மட்டுமே...

    பதிலளிநீக்கு
  8. பெற்றோர்கள் என்ன சொன்னாலும் - கேட்கக் கூடாது என்றொரு மனோபாவம் வந்து விட்டது...

    எது நடந்தாலும் - நமக்கில்லை - நமக்கென்ன!..

    - இதுதான் கண்முன்னே காண்கின்ற நாட்டு நடப்பு!..

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்துகள் சொல்லும் கட்டுரை பாராட்டுகள். பல வீடுகளில் ஆளுக்கொரு பக்கம் அலைபேசியிலும், கணினியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள் - பேசிக் கொள்வதே இல்லை என்பது தான் உண்மை.

    பதிலளிநீக்கு

  10. 'பொட்டப்புள்ளய பொத்தி வளர்க்கணும். ஆம்பளப் புள்ளய அடக்கி வளக்கணும்' அப்படின்னு சொல்வாங்க. அது சரிங்க...

    எந்தப் பிள்ளையும் பிறக்கும் போது
    நல்ல பிள்ளை தான் - அது
    நல்லவராவதும் கெட்டவராவதும் - அந்த
    அன்னை வளர்ப்பினிலே - இதை
    பாவலர் கண்ணதாசன் சொன்னாங்க


    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி