ஞாயிறு, 3 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : ஆவியும்... சாமியும்...

ன்னடா இது தலைப்புல ஆவியும் சாமியும் போட்டிருக்கானே ரெண்டுக்கும் ஆகாதே... பேய் புடிச்சா சாமி அழைச்சித்தானே விரட்டுறானுங்க... என்ன குழப்புறானேன்னு நினைக்கிறீங்களா... கொஞ்சம் ஆவி பத்தியும் கொஞ்சம் சாமி பற்றியும் பேசலாமே... அதுக்கு முன்னால சாமியே கிடையாதுங்கிறேன்... சாமியாம் ஆவியாம்ன்னு சொல்றவங்க இத்தோட வெளியாயிடலாம். ஏன்னா சாமி இருக்கா..? இல்லையா...? ஆவி இருக்கா... இல்லையா...? அப்படிங்கிற பட்டிமன்றமெல்லாம் இங்கு நடத்தலை... சாமி இருக்குன்னா இருக்கு... இல்லைன்னா இல்லை... என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை நான் சாமி கும்பிடுபவன்தான்... இதுவரை பேய்... பிசாசுக்கு பயந்தவனில்லை... அதில் நம்பிக்கையும் வைத்தவன் அல்ல... ஆனால் எங்கள் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வு அப்படி ஒன்று இருக்குமோ என்று நம்ப வைத்தது. அதை விடுங்க... வாங்க நாம கொஞ்சம் பேசலாம்.


நானெல்லாம் சின்ன வயசுல இருந்தே மாரி... கருப்பன்... முனியய்யா... அய்யனார் என்று எங்கள் ஊரில் இருக்கும் தெய்வங்களை வணங்கியே வளர்ந்தவன். இப்பவும் அந்த தெய்வங்கள் மீது மட்டுமின்றி இன்னும் சில தெய்வங்கள் மீது அதீத பற்றுக் கொண்டவன் நான். எங்கள் முனியய்யாவை நினைத்து நான் எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுபவன். எங்க முனியய்யா மீது எனக்கு மட்டுமல்ல... எங்க அப்பாவுக்கும் தீவிரப் பற்று உண்டு. கண்மாய் நிறைந்து கிடக்கும் போது அங்கு குளித்துவிட்டு கண்மாய்க் கரையில் இருக்கும் முனிஸ்வரரை விழுந்து வணங்கி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு வருவார். வீட்டில் ஏதேனும் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றால் அங்கு போய் வேண்டி திருவுலம் கேட்டு விட்டார் என்றால் மிகுந்த சந்தோஷமாய் வருவார். அந்தக் காரியமும் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.

ஆவியின்னு வச்சிக்கங்களேன்... கிராமத்தில்தானே பேய் அதிகம் பிடிக்கும். வெளிய பொகும் போது, வைக்கோல் அள்ளப் போகும் போது, தண்ணி எடுக்கப் போகும் போது என எங்காவது அதை பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள். அவர்களாக சிரிப்பார்கள்... என்னமோ பேசுவார்கள்... தலைமுடியை அள்ளிக் கட்டி விட்டாலும் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு முறைத்துப் பார்ப்பார்கள். சாமி ஆடுபவர்கள் வந்து துணூறு போட்டால்தான் அவர்களை விட்டு விலகும். சில நேரங்களில் ரொம்ப முரண்டு பிடிக்கும்.. அப்போதெல்லாம் பெரிய பூசாரிகளிடம் போவார்கள்... எங்க வீட்டில் கூட அக்காக்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. துணூறு போட்டு விரட்டி இருக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் அதிக நம்பிக்கை கிடையாது. ஒன்பதாவது படிக்கும் போதே இருட்டில் சைக்கிளில் வர ஆரம்பித்தவன்தான்.. திருமணத்திற்கு முன்னர் எல்லாம் இரவு பதினோரு மணி, பணிரெண்டு மணிக்கு கணிப்பொறி நிலையத்தில் இருந்து சைக்கிளில் வருவேன். அதிகாலை மூணு மணிக்கெல்லாம் வந்ததுண்டு. அதனாலேயே திருமணம் முடிந்ததும் நீ இருட்டு ஏமாத்துல வருவே... சொன்னாலும் கேக்கமாட்டே என தேவகோட்டையில் வீடு பார்த்து தங்கச் சொல்லி விட்டார்கள்.

இப்ப எங்க பகுதியில கொலக்குடியின்னு ஒரு ஊர்ல 'இடையன் காளி' தோன்றியிருக்கிறாள். ஏழெட்டு மாசத்துக்குள் மிகப் பிரபலமாகிவிட்டது. பெரும்பாலும் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் அருள்கிறது. எங்க சொந்தக்காரர் ஒருவரின் கனவில் வந்து நான் இந்த ஊரில் பிறந்தவள்,  ஒரு பிரிவினரால் பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டேன் என்று சொல்லி எனக்கு ஆலயம் அமைத்துக் கொடு என்று அழைத்ததின் பேரில் அவரும் இன்னும் சிலருமாய் கனவில் காட்டிய இடத்தில் தேடி, ஒரு முனியய்யா கோவிலின் அருகில் அது காட்டிய அடையாளங்கள் இருக்க, அங்கு மண்ணெடுத்து இப்போது இடையன் காளியம்மன் கோவில் வீடு கட்டி கும்பாபிஷேகம் முடித்து விட்டார்கள். யார் கனவில் வந்ததோ... அவர் மூலமாக பக்தர்களுக்கு வரம் அளிக்கிறாள். தேவகோட்டையில் இருந்து பேருந்து விடப்பட்டிருக்கிறது. நினைத்ததை நடத்திக் கொடுக்கிறாள். எல்லோரும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்... நானும் வைத்திருக்கிறேன்... சிலர் அவரிடம் குறி கேட்பது போல் கேட்கிறார்கள். 

பேய் என்பது இல்லை என்றே சொன்னாலும் ஏதோ ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது. பேய் பிடித்தவர்களின் செய்கைகள் சில நேரம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.  நாம் பார்த்துப் பழகியவர்கள் இறந்த பின்னர் இன்னொருவர் மூலம் பேசும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. மனைவி பிறந்த கிராமத்திற்குச் சென்றால் போர்டிகோவில்தான் படுப்பது வழக்கம்... நள்ளிரவில் கொலுசுச் சத்தம் நன்றாகக் கேட்கும்... நாய் குலைக்கும்... இதை நான் மட்டுமே உணர்கிறேன் என்று நினைத்தால் மனைவியும் விழித்துக் கொண்டு கொலுசு சத்தம் கேக்குதுங்க என்று சொல்வார். சரி இதெல்லாம் பிரமைதான் என்று நினைத்தாலும் இரு தினங்களுக்கு முன்னர் அறையில் பேய் குறித்து பேச்சு அடிப்பட்டபோது மச்சான் (இவனும் அந்த ஊர்தான், மனைவியின் சித்தி பையன்) கொலுசு சத்தம் கேட்பது குறித்து விரிவான தகவல்களுடன் பகிர்ந்து கொண்டான். இதை நம்பாமல் இருக்க முடியுமா சொல்லுங்க.

நாங்கள் தனியாக இருந்த சமயம், பாப்பா வயிற்றில் இருந்த போது மனைவிக்கு வாந்தி வந்தால் மயங்கி விடுவார்... வெளியில் அமர்ந்துதான் சாப்பிடுவோம்... அப்படியே வாந்தி எடுத்து மயங்கிவிடுவார். பின்னர் அவரை பெட்டில் கொண்டு வந்து படுக்க வைத்தால் சில நேரம் சீக்கிரம் எழுந்து விடுவார். சில நேரங்களில் எழ மாட்டார். அப்போதெல்லாம் சற்றே தள்ளியிருந்த அக்கா வீட்டுக்குப் போய் அழைத்து வந்து ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் கொண்டு செல்வோம். இப்படித்தான் ஒரு முறை அவருக்கு மயக்கம் வந்தது பின்னர் அவரின் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. இரவெல்லாம் என்னென்னமோ சொல்லிப்  புலம்புவார். சரி எங்கோ பயந்திருக்கிறார் துணூறு வாங்கிப் போடலாம் என நினைத்தபடி நண்பனின் வீட்டுக்குச் சென்றேன். அவன் சாமியாடி... சரி அவனிடமே துணூறு போடச் சொல்லலாம் என விவரத்தைச் சொன்னதும் அதெல்லாம் வேண்டான்டா.... அதெல்லாம் சும்மா இருக்கும் என்று மறுத்தான்... உடனே தங்கைதான், அண்ணன் கூப்பிடுறாங்கள்ல போயி பாத்துட்டு வாங்கன்னு சொன்னுச்சு. அவனும் வந்தான்... உட்கார்ந்திருந்தான்... ரெண்டு பேரிடமும் பேசினான்... தண்ணி வாங்கிக் குடித்தான்... பேசாமல் எழுந்து சென்று விட்டான். பின்னாலேயே போன நான் துணூறு போடாமல் போறேன்னு கேட்டதும். அதெல்லாம் வேண்டாம் என்று கிளம்பிவிட்டான்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவனுக்கு போன் அடித்தால் தங்கைதான் எடுத்தார். எங்கேம்மா அவன் என்றதும் இந்தாத்தாண்ணே இருக்காக... விழுந்து எந்திரிச்சி வந்திருக்காக என்றார். என்னது விழுந்துட்டானா எங்கேன்னு கேட்க, நம்ம வீட்டுக்கு வந்துட்டு வரும்போது முனியய்யா கோவிலுக்கிட்ட யாரோ தூக்கி எறிஞ்ச மாதிரி இருந்துச்சாம்... விழுந்து எந்திரிச்சி வந்திருக்கார் என்றவர், அவனிடம் போனைக் கொடுக்க, என்னடா ஆச்சி என்றதும் அடப்போடா... தங்கச்சிக்கு துணூறு போடலாம்ன்னு வந்தா நான் உள்ள வர்றேன்... உங்க பின்னாடி உங்க ஊரு முனியய்யா நிக்கிறாரு... அந்த இடத்துல நான் எப்படி துணூறு போட முடியும். உங்களை எதுவும் ஒண்ணும் செய்ய முடியாது. அதையே நினைச்சிக்கிட்டு வந்தேன்... தூக்கி வீசிருச்சு.. என்றான். இது என் வாழ்வில் நிகழ்ந்தது... இதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்.


நாய் குலைப்பது... கொலுசு சப்தம் கேட்பது... ஆந்தை அலறுவது... பேச்சுக் குரல்கள் கேட்பது என்பதெல்லாம் கிராமங்களில் அதிகம் இருக்கும். நகரங்களில் வீட்டிற்கு முன்னேதான் பிணம் தூக்கிச் செல்வார்கள். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அரிது என்றாலும் சில செய்திகளும் சில நிகழ்வுகளும் பேய்கள் இருப்பதை உறுதி செய்கின்றன.  எங்க பழைய வீட்டில் (இப்போது இடித்தாச்சு) குடுகுடுப்பைக்காரன் படியேறி மேலே வரமுடியாது. எங்கள் பதினெட்டாம் படிக்கருப்பனும், எங்க வீட்டுத் தெய்வமான பெண் தெய்வமும் அவனை படியேற விடுவதில்லை. அடுத்த நாள் காலையில் அவன் இதைச் சொல்லி யாசகம் வாங்கிச் செல்வான். வீடு காக்கும் பெண் தெய்வங்கள் கிராமங்களில் எல்லாருடைய வீட்டிலும் இருக்கும். அதற்கு படையல் போட்டுக் கும்பிடுவார்கள். மிகவும் சக்தி வாய்ந்த பெண் தெய்வங்கள் அவை.

அட ஏன்ய்யா ஆவியும் கிடையாது... சாமியும் கிடையாது என்பவர்களுக்கு இதெல்லாம் அனுபவம்தான்... ஒருவேளை மன பிரம்மையாகக் கூட இருக்கலாம் இருந்தாலும் எனக்கு பேய் பிசாசின் மீது அதீத நம்பிக்கை இல்லை என்றாலும் எங்க ஊர் முனியய்யா மீது ஒரு பற்றுதல்... எங்களுக்கான எந்தத் தொடங்கலிலும் அவரோட ஆசியுடன்தான் செய்கிறோம். ஆம் நான் சாமி கும்பிடுபவன்தான்.
-'பரிவை' சே.குமார்.



14 கருத்துகள்:

  1. ஆவியும் சாமியும் நம் நம்பிக்கைதானே,,,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க விமலன் அண்ணா...
      நம்பிக்கைதான்... ஆனால் சில நேரங்களில் நம்பத்தானே வைக்கிறது.

      நீக்கு
  2. வித்தியாசமான அனுபவங்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
      இன்னும் நிறைய இருக்கு.. ஒரு சில விஷயங்களை பொதுவில் வைக்க முடியாது. நான் பார்த்து வியந்த ஒரு நிகழ்வு இருக்கிறது.

      நீக்கு
  3. நல்ல அலசல் நண்பரே இது கிராமத்திற்கும், நகரத்திற்க்கும் வேறுபடுவது உண்மையே.... இன்னும் சொன்னால் நாட்டுக்கு நாடும் வேறுபடுகின்றது
    இந்த நாட்டில் அந்த நினைவுகளே வருவதில்லையே காரணமென்ன...

    எல்லாம் நாம் வளர்ந்த வாழ்க்கை முறையோடு பிண்ணி பிணைந்து விட்டதே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      இங்கும் இருப்பதாகத்தானே சொல்கிறார்கள்...
      என்னவோ... நாம் வளர்ந்த முறை என்றாலும் சில விஷயங்கள் நம்பிக்கை கொள்ளவே வைக்கின்றன.

      நீக்கு
  4. இதுபோல எத்தனையோ சொல்லலாம்..
    அடுத்தவர்கள் சொன்ன கதையல்ல!... சொந்த வாழ்வில் நிகழ்ந்தவை..

    ஒரு மாதத்திற்கு முன் - உடன் வேலை செய்பவர்..
    கர்நாடகாவைச் சேர்ந்தவர்..தனது பிரச்னையைச் சொல்லிக் கேட்டார்..

    அங்கே வீட்டின் அமைப்பு அடையாளம் அருகிலுள்ள தர்கா என அனைத்து விவரங்களையும் சொன்னேன்.. சில பரிகாரங்களையும் சொன்னேன்...
    இன்னும் அவருக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை...

    இவற்றை எழுதலாம் எனில் எத்தனையோ நூறு பக்கங்களைக் கடந்து செல்லும்.. ஆனாலும் - உபாசனா மூர்த்தி உத்தரவு வழங்கினால் மட்டுமே இயலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      ஆஹா... நமக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்...
      எனக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் சில நாட்களுக்கு முன்னரே கனவில் காட்டி விடுகிறது.
      இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு... பேய் என்றாலே அதெல்லாம் இல்லை என்று சிரிக்கும் என்னையே அதிர வைத்த எங்கள் இல்லச் சம்பவம் எல்லாம் இருக்கு... அதையெல்லாம் பொது வெளியில் வைக்க முடியாது... அதனால் எழுதவில்லை.

      நீக்கு
  5. வித்தியாசமான அனுபவங்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      உண்மைதான்.. அனுபவங்கள் வித்தியாசமானவை.

      நீக்கு
  6. குமார் மிகவும் வித்தியாசமான அனுபவங்களாக இருக்கின்றது. ஊரில் பலரும் இப்படிச் சொல்லுவதுண்டுதான் நாங்கள் இருவருமே கிராமத்த்வர்கள்தானே. ஆனால் எங்களுக்கு அனுபவம் இல்லை.

    இதை வைத்தே நீங்கள் அமானுஷ்ய கதைகள் எழுதலாம் குமார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசி சார்...
      அமானுஷ்ய கதைகளா... ஒண்ணுமே எழுத வரலை... இதுல அமானுஷ்யமா... ஆத்தாடி...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. அனுபவம் பேசியதை, எழுத்தில் வடித்து வீட்டிர்கள் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி