எல்லாரும் எப்படியிருக்கீங்க நட்புக்களே...
ஊரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஊரின் நினைவுகளே மனசெங்கும் ஊர்ந்து கொண்டிருப்பதால் எதிலும் மனசு ஒட்டவில்லை. கடந்த முறை எல்லாம் ஒரு வாரத்தில் மீண்டும் அபுதாபி மனிதனாகி விடுவேன். ஆனால் இந்த முறை இன்னும் இன்னும் வீட்டு நினைவுகள் என்னுள்ளே துளிர் விட்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த முறை அபுதாபி வரும் எண்ணமே மனதிற்குள் எழவில்லை. கடைசி நிமிடத்தில் வேகவேகமாக சாமான்கள் பேக்கில் நிரப்பினேன். முப்பது கிலோ கொண்டு வர வேண்டிய இடத்தில் பதினோரு கிலோ மட்டுமே எடுத்துக் கொண்டு பேருந்தில் திருச்சி விமான நிலையம் வரும்போதெல்லாம் திரும்பி போய்விடலாமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கடன்களை முடித்து விட்டு விரைவில் ஊரில் போய் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த முறை ரொம்ப அதிகமாயிருச்சு... போதும் குடும்பத்தை பிரிந்த வாழ்க்கை என்ற எண்ணம் ஒவ்வொரு விடுமுறைக்குப் பின்னும் ஏற்படுவதுதானே என்று கில்லர்ஜி அண்ணன் போன்றோர் நினைக்கலாம்... இந்த முறை தெளிவான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டு வருடங்கள் கஷ்டப்படத்தான் வேண்டும். பார்க்கலாம்.. விரைவில் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபடணும்...
மனசு எதிலும் ஒட்டாத நிலையில் கணிப்பொறியில் கூட எதையும் பார்க்கும் எண்ணம் வரவில்லை... கில்லர்ஜி அண்ணாவின் இரண்டு பதிவுகளுக்கு முந்தைய பகிர்வு, செல்வராஜூ ஐயாவின் பகிர்வு என இரண்டை மட்டுமே வாசித்து கருத்திட்டேன். சில நேரம் முகப்புத்தகத்தில் அலைந்து சிலருடன் அரட்டை அடித்து கொஞ்சம் என்னைப் புதுப்பித்துக் கொண்டேன். சிறுகதைப் போட்டிக்கு பரிசாக அகல் மின்னிதழ் ஆசிரியரும் நண்பருமான சத்யா ஜி அவர்கள் அனுப்பிய இரண்டு புத்தகங்களையும் எடுத்து வந்திருந்தேன்.பெரும்பாலான நேரங்களை அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுள் தொடங்கிய இடம்' விழுங்கியது. வாசிக்க வாசிக்க ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் எழுத்து... இலங்கைத் தமிழில் நம்மை கட்டிப் போட்டு... நிஷாந் பின்னாலேயே இலங்கையில் இருந்து கனடாவுக்கு நாடு நாடாக கடந்து செல்ல வைக்கிறது. அருமையானதொரு நாவல்... கொடுத்த நண்பருக்கு நன்றி.
பாக்யா வார இதழில் 'திருமண ஒத்திகை' என்னும் தொடர்கதை எழுதும் ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்கள் 'உறியடி' படம் குறித்து எழுதியதைப் படித்து அந்தப் படத்தைப் பார்த்தேன். படிக்கும் மாணவர்கள் சதா தண்ணி... தண்ணி... என இருப்பதையும் சாதி வெறியையும் சொல்லும் படம். கடைசியில் பாடம் சொன்னாலும் மாணவர்கள் படிப்பதையும் காட்டியிருக்கலாம். ஆனாலும் படம் நல்லாத்தான் இருக்கு. அறிமுக இயக்குநருக்கு வாழ்த்துக்கள். இப்ப சரவணன் அண்ணனைப் பற்றி, அண்ணே நான் ஊருக்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் 'குமார் இந்த முறை நீங்க சென்னை வாறீங்க.. நான் அரசன், ஆவிக்கிட்ட எல்லாம் சொல்லிடுறேன்... ஒருநாள் சந்திக்கிறோம்... உங்களை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்' என்றார். சரி என்று சொன்னாலும் சூழல் என்னை எங்கும் போகவிடவில்லை... மீண்டும் அபுதாபி திரும்பும் அன்று காலை போனடித்தேன்... கிடைக்கலை... பின்னர் அடித்தேன்... பேசினார் சரியாக கேட்கலை... சென்னை விமான நிலையத்தில் வந்து பேசினால் அவர் இரயிலில் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். சொல்லியிருந்தால் இருந்து சந்தித்துவிட்டு வந்திருப்பேனே என்று புலம்பினார்... எனக்கும் வேதனையாகத்தான் இருந்தது... கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா என்று சொல்லி வைத்தேன் எப்படியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...
ஊருக்கு வந்திருக்கீங்களா..? நீங்க இங்கு வர வேண்டும்...? எப்போ வாறீங்க...? முகநூலில் வந்து விழுந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அன்பு அண்ணன் புதுக்கோட்டைக் கவிஞர் செல்வக்குமார் அவர்கள். கொஞ்சம் வேலை அடுத்த வாரம் வருகிறேன் எனச் சொல்லி போன் நம்பர் வாங்கினேன். அதன் பின்னான நிகழ்வுகள் எங்கும் செல்ல முடியாத சூழலை எனக்கு அளித்தது. செல்வா அண்ணனுடன் போனில் கூட பேசவில்லை. அங்கிருந்து இங்கு வந்தும் கூப்பிடவில்லை... ஒரு வழியாக இன்றுதான் அவரைக் கூப்பிட்டேன்... கொஞ்ச நேரமே பேசினேன். நான் வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் நம் மக்களுக்கே உரிய வாஞ்சையோடு பேசினார்... அந்தப் பாசமான பேச்சைக் கேட்டதும் இவர்களை எல்லாம் சந்திக்காமல் வந்து விட்டோமே என வருத்தம் மேலிட்டது. எப்படியும் சந்திப்போம் அண்ணா.
புத்தகம் போட வேண்டும்... அது குறித்து பேச வேண்டும் என்று கிளம்பியவன் ஊரில் ஒன்று மாற்றி ஒன்றென நிகழ்வுகள் வர, பொருளாதார சிக்கல் எழுந்த நிலையில் அது குறித்தான பேச்சை எடுக்கவேயில்லை... புத்தகம் போடுவது என்பது கனவாகிப் போகும் போல.
என்னை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக எழுதியது இது... அப்ப அப்ப எழுதுவேன்... மாற்றங்கள் வரும்வரை மனசு மெதுவாகத்தான் பயணிக்கும். நன்றி.
-'பரிவை' சே.குமார்.
மீண்டு வாங்க... மீண்டும் வாங்க.. எல்லாம் சரியாய் போயிடும் குமார்.
பதிலளிநீக்குமனசு பயணிக்கும் வேகம் உடல் பயணிக்கும் வேகத்தைவிட குறைவுதான். மாற்றங்களை உள்வாங்க நேரம் பிடிக்கும்.
பதிலளிநீக்குவழக்கம்போலவே ஒப்பனை இல்லாத மனதோடு பேசும் பதிவு.
வாழ்த்துக்கள் திரு குமார்.
விரைவில் இந்த வாழ்க்கையில் இருந்து வெளிபட எமது வாழ்த்துகள் நான் நெருங்கி விட்டேன் என்பதை அறியத்தருகிறேன்
பதிலளிநீக்குத.ம. 3
மனசை போட்டுக் குழப்பிக்காதிங்க நண்பரே! நம்பிக்கையோடு இருங்கள்! காலங்கள் நம் காலடியில் விழும் நாள் விரைவில் வரும்!
பதிலளிநீக்குஎல்லாம் சரியாகும். கவலை வேண்டாம்.
பதிலளிநீக்கு“இதுவும் கடந்து போகும்” என்ற வாக்கியம் தான் பலருக்கும் நாட்களை கடத்த உதவுகிறது.
குமார் உங்களை மறப்பதா....எப்படி மறப்போம் வலை நட்புகள் நாங்கள் எல்லோரும். நநாங்களும் வலைப்பக்கம் வரவில்லை. நேற்றுதான் வர ஆரம்பித்துள்ளோம்...பார்க்கப் போனால் மின் அஞ்சல் பெட்டியில் வந்த பதிவுகளில் மனசைக் காணவில்லையே அவரும் வலையில் வரவில்லை போலும் என்று தெரிந்ததும் நீங்கள் இங்குதான் வந்திருப்பீர்கள் என்று எண்ணிக் கொண்டோம். எல்லாம் சரியாகிவிடும் குமார். கவலை வேண்டாம். இது தற்காலிகமானதே. இதையும் கடந்து செல்வீர்கள் நீங்கள். மீண்டும் புத்துணர்வுடன் வாருங்கள். நல்ல அனுபவங்களுடன், அந்த அனுபவங்கள் தரும் கதைகளுடன் என்று....உங்கள் எல்லாம் வருத்தங்களும் விலகிடும்!
பதிலளிநீக்குகூடிய சீக்கிரம் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் குமார்.
பதிலளிநீக்குமெதுவான பயணம் நிதானமான பயணமாகவே அமையட்டும். நல்ல முடிவுகள் எடுக்க அவ்வாறான பயணங்கள் உதவியாக இருக்கும்.
பதிலளிநீக்குவிருப்பங்கள் யாவும் விரைவில் நிறைவேறட்டும்.
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.
>>> விமான நிலையம் வரும்போதெல்லாம் திரும்பி போய்விடலாமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.<<<
பதிலளிநீக்குவெளிநாட்டு வேலை என்றாலே இப்படித்தான்..
கவலைப்பட வேண்டாம்.. எல்லாம் சரியாகும்..
கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு