சனி, 2 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-11)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7         


‘நீ பேசினியா?’ என வேலாயுதம் கோபமாகக் கேட்கவும் “இ...இல்லப்பா... நா... எப்படி அவங்கிட்ட பேசுவேன்...” என வேகமாகச் சொன்னான் சரவணன்.

“ம்... அந்த சனியனுக்கிட்ட யாரும் ஒட்டும் வச்சிக்கக் கூடாது... உறவும் வச்சிக்கக் கூடாது. ஆமா சொல்லிப்புட்டேன்... இப்ப உங்கக்காவுக்குத்தான் அந்த நாயி மேல பாசம் பொத்துக்கிட்டு வருது... மாப்ள கூட அப்படித்தான் இருக்காரு...  நீயாவது நம்ம சாதி சனத்துமேல இருக்க நம்பிக்கை குறையாம வச்சிக்க...”

“ம்... “

“இந்தாங்க மாமா காபி...” என அவருக்கும் சரவணனுக்கும் காபியை நீட்டினாள் சாரதா.

“இப்ப எதுக்குத்தா காபியெல்லாம்... சாப்புடப்போற நேரத்துல...” என்றபடி அவர் வாங்க, “சாப்பிட லேட் ஆகும் மாமா... உங்களுக்குத்தான் காபி எப்பக் கொடுத்தாலும் குடிப்பீங்களே அப்புறம் என்ன.... சுகர் போதுமான்னு பாத்துக்கங்க....” என்றாள்.

“ம்... எல்லாம் செரியா இருக்கு...” என்றபடி அவர் காபியை உறிஞ்ச, சரவணனைப் பார்த்து நக்கலாகச் சிரித்து ‘சொல்லவா?’ என்று கண் ஜாடை காட்டினாள்.

‘போடி... நீ வேற...” என கண்களாலேயே அவனும் சொல்ல சிரித்தபடி நகர்ந்தாள்.

“ஆமா... அந்த சாதி கெட்ட நாயி உங்கிட்ட பேச வந்துச்சா...?” எனக் கேட்டார் காபியை கையில் வைத்தபடி.

“இல்லப்பா.... எதித்தாப்ல வந்தான்.... நான் விலகிப் பொயிட்டேன்... பின்னாலயே அ... அவன் பொண்டாட்டி...  ரெண்டு பிள்ளைக... நல்ல செவப்பா இருக்குக.... பொண்ணு அப்படியே நம்ம அம்மா மாதிரி இருக்குப்பா...”

“இவ்வளவு நெருக்கமா பாத்திருக்கே.... ஆனா பேசலையா...?” சந்தேகத்தோடு கேட்டார்.

“அப்பா நான் உங்க பிள்ளை... ஒருத்தரை வேண்டான்னு ஒதுக்கிட்டா அவங்க பக்கமே திரும்பமாட்டேன். எதுத்தாப்ல வந்தாக... பாத்தேன்... அம்புட்டுத்தான்... பிள்ளைகளுக்கு நம்ம உறவே தெரியாது... அதுக பாட்டுக்க கடந்து போச்சுக...”

“ம்... அவதான் முக்கியம்ன்னு நம்மளை தூக்கி எறிஞ்சிட்டுப் போன நாயி அது... அதைப்பத்தி நமக்கெதுக்கு...” என்றபடி காபியை உறிஞ்சினார். சரவணனும் எதுவும் பேசாமல் காபியைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“ஏப்பா... புள்ளக நம்ம சாதி புள்ளைகளாட்டம் இருக்குகளா?” என்றார் தலையை நிமிர்த்தாமல்.

அவரா கேட்கிறார் என்ற சந்தேகத்தில் “அப்பா....” என்றான் சரவணன்.

“இல்லப்பா... புள்ளக நம்மாளுக மாதிரி இருக்குகளான்னு கேட்டேன்...”

“அதான் சொன்னேனே மூத்தது அப்படியே அம்மா மாதிரி இருக்கு.... பய நம்ம சாயல் இல்ல... ஆனா ரெண்டும் தொட்டா ஒட்டிக்கிற சிவப்பு.. கோவைப் பழமாட்டம்...”

“ம்... “ என்றவர் வேறு ஒன்றும் பேசவில்லை.

ரவு படுத்திருக்கும் போது “என்ன சார்... ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் பேசினீங்க...” என்றாள் சாரதா.

ஆமா உண்மையைத்தானே சொன்னேன்...” என்றான்.

“உங்கப்பா ஹால்ல படுத்திருக்கார்.... எதுவும் கேட்காது... உங்கண்ணனோட நீங்க பேசலை... பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சலை.... அதான் வந்த உடனே எங்கிட்ட சொல்லிச் சொல்லி கொன்னு எடுத்தீங்களே... இப்ப எதுக்கு மறைக்கிறீங்க...” சிரித்தாள்.

“நீ சும்மா இரு... அவருக்குக் கேட்டா அப்புறம் நம்மளையும் ஒதுக்கிருவாரு... பாரு அக்கா சப்போர்ட் பண்ணுதுன்னு அது மேல கோபத்துல இருக்கார்... நல்லவேளைக்கு அண்ணனுக்குப் பின்னாலயே அண்ணின்னு சொல்லப் பொயிட்டேன் டப்புன்னு அவன் பொண்டாட்டின்னு மாத்திட்டேன்... “

“ம்... ஏங்க அண்ணனைப் பார்த்தேன்... பேசினேன்னு சொன்னா என்ன கொல்லவா போறாரு... எம்புட்டு நாளைக்குத்தான் அவங்களை விரோதியாப் பாக்குறது...” என்றபடி அவன் போனை எடுத்து நோண்டி போட்டோக்களை எடுத்து அண்ணன் மகனை அவன் தூக்கி கொஞ்சியபடி நிற்கும் போட்டோவைக் காட்டி “மாமாக்கிட்ட உங்க பேரனைப் பாருங்கன்னு காட்டிட்டு வரவா?” என்று சிரித்தாள்.

“சும்மா இருடி வில்லங்கம் புடிச்சவளே... அண்ணனைப் பார்த்தப்போ எனக்கு பாசம்தான் கண்ணுல தெரிஞ்சது. அவன் மோசம் பண்ணிட்டான்னு எல்லாம் தோணலை... என்ன தப்புப் பண்ணினான்... அவனுக்குப் பிடிச்சது... வீட்ல கேட்டான்... இவரு சாதி, சமுதாயம்ன்னு பேசினாரு... அவன் நீங்க உங்க சாதியை பத்திரமாப் பாத்துக்கங்க... என்னை நினைக்கிறவளை சாதியைக் காட்டி விட்டுட்டு வர்ற அளவுக்கு நான் சாதியில ஊறலை... எனக்கு அந்த சாதியும் வேண்டான்னு சொல்லிட்டு பொயிட்டான்....”

“ம்...”

“பாவண்டி.... அவன் நினைப்பெல்லாம் எங்க மேலதான் இருக்கு... அப்ப எப்படி இருப்பான் தெரியுமா...? வயல் வேலை, வீட்டு வேலை எல்லாம் முக்காம முணங்காம செய்வான்... அவனை இவரு படுத்தாத பாடு இல்லை... எல்லாத்தையும் ஏத்துக்குவான்... யாரையும் எதித்துப் பேசமாட்டான்... அக்காவுக்கு எப்பவுமே என்னைவிட அவனைத்தான் பிடிக்கும்... அவனுக்கும் அக்கான்னா உயிரு... யாராச்சும் அக்காவை ஏதாச்சும் சொல்லிட்டா அம்புட்டுத்தான் அவங்க கூட கட்டி ஏறிடுவான்... இப்ப அவன் முகத்துல நினைச்ச வாழ்க்கை அமைந்த சந்தோஷம் இருந்தாலும் நாமெல்லாம் இல்லாத தனிமை தெரியுது... எப்படியாச்சும் அவனை சேத்து வைக்கணும்...”

“அவங்க வீட்ல சேத்துக்கிட்டதாச் சொன்னாங்கன்னு சொன்னீங்க...?”

“ம்... அவங்க சேத்துக்கிட்டாங்களாம்... அண்ணி, குழந்தைங்க போவாங்களாம்... இவன் இன்னும் போறதில்லையாம்... நம்மளை ஏமாத்திட்டானேன்னு அவங்க எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாங்க... ஏம்முகத்தைப் பார்த்தா இன்னும் வருத்தம் அதிகரிக்கும்ல்ல...  அப்படின்னு சொன்னான்.”

“அடேங்கப்பா... இவ்வளவு பேசியிருக்கீங்க... ஆனா அன்னைக்கு எங்கிட்டயும் இதெல்லாம் சொல்லாம மறச்சிட்டீங்க... இப்ப மாமாக்கிட்ட நான் உங்க வீட்டுப் பிள்ளைன்னு டயலாக்கெல்லாம் பேசிக்கிட்டு... ம்... நீங்க பெரிய நடிகனுங்க...” எனச் சிரித்தாள்.


ண்ணன் எப்போது இண்டர்நெட் மையம் போனாலும் முகநூலைத் திறந்ததும் ‘ஹாய்...’ என வர ஆரம்பித்தாள் சுபஸ்ரீ.  ஆரம்பத்தில் அவளுடன் கொஞ்ச நேரம் சாட் பண்ணினான். அதன் பின்னர் அவளுக்காகவே தினமும் இண்டர்நெட் மையம் போக வேண்டும் என்ற எண்ணம் எழ ஆரம்பிக்கவும், இதென்னடா வம்பாப் போச்சு... தேவையில்லாம நாம எதுக்கு இதுக்குள்ள போகணும் என் நினைத்து அங்கு செல்வதை நிறுத்தினான். 

ஒருமுறை அதன் ஓனர் கூட ‘என்ன கண்ணா... இப்பல்லாம் வர்றது இல்லை... நீ வந்த எனக்கு ஹெல்ப்பா இருக்கும்...’ என்றார். ‘இல்லண்ணே.... இப்ப ஒண்ணும் டவுன்லோட் பண்ண வேண்டிய வேலை இல்லை... அதான் வர்றதில்லை... எதாவது வேலை இருந்தா சொல்லுங்கண்ணா... வந்து செஞ்சு தாறேன்’ என்றான் சிரித்தபடி.

கல்லூரி, நண்பர்களுடன் அரட்டை என கலகலப்பாய் நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. அந்த நாட்களில் சுபஸ்ரீ குறித்தான எந்தத் தகவலையும் தெரிந்து கொள்ள நினைக்கவும் இல்லை... விரும்பவும் இல்லை. 

சில மாத நகர்வுக்குப் பின்னே பள்ளிக்கால நண்பனின் தங்கை திருமணம்... கல்லூரி நண்பர்கள் யாருக்கும் தெரியாதவன் என்பதால் கண்ணனுக்கு மட்டுமே அழைப்பு... அப்படி இருந்தும் பைக்கில் சென்று வரலாம் என்பதால் அம்பேத்காரை கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் சென்றான்.

அங்கு சுபஸ்ரீயைப் பார்ப்போம் என்று அவன் கனவில் கூட நினைக்கவிலை.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)

-‘பரிவை’ சே..குமார்.

10 கருத்துகள்:

  1. நடை மிக எளிமையாக உள்ளது. தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சாதிவெறியில் ஒதுக்கிய அப்பாவின் மகன்தான் கண்ணன் என்பதும் அவனது தம்பிதான் அப்பாவிடம் மறைப்பதும்...கண்ணனின்/சுபஸ்ரீயின் பழைய கதையும் இப்போதைய நிகழ்வுகளும் இணையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டும் சந்திக்கும் வேளையில் கொஞ்சம் வேதனைகள் வந்தாலும் சுபமாய் முடியும் என்று நினைக்கின்றோம்..பார்ப்போம் கதையாளர் குமார் எப்படி எடுத்துச் செல்லப்போகிறார் என்று அறிய தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      தங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      கதையை கண்டுபிடிச்சிட்டீங்க... இனி எப்படி மாத்துறதுன்னு யோசிக்கணுமே... :)

      நீக்கு
  4. நானும் தொடர்ந்து வருகிறேன் சுபஸ்ரீயை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணாஅ...
      நான் போய்க்கிட்டு இருக்கேன்... சரி வாங்க...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. சூப்பரா போகுது,தொடர்கிறேன் சகோ ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி