சனி, 12 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-8)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7

ண்ணனின் பேஸ்புக் ஐடியை சுபஸ்ரீ கேட்டதும் “அண்ணன் யாருக்கும் கொடுக்க மாட்டாங்க... உனக்கெதுக்கு அவங்க ஐடி... உங்காளு ஐடி இருக்குல்ல... அது போதும்...” என்றாள் அபி.

“ஏன்டி... உங்க கண்ண அண்ணனோட சொத்தையா எழுதிக் கேக்கிறோம்... கொடுக்க மாட்டேன்னு சொல்றதுக்கு... ஐடிதானே... என்ன சொன்னே உங்க அண்ணன் ஐடி இருக்கா... ஏதாவது உருப்படாத ஜோக்கை எவனாச்சும் ஷேர் பண்ணியிருந்தா இவாளும் ஷேர் பண்ணிவிடுவா... அதுல ஹா...ஹா...ன்னு வேற போட்டுவிடுவா... அது ஹா...ஹாவே இல்ல... கழுத்தறுப்பா இருக்கும்...”

“சரி விடு... கட்டிக்கப் போறவ அப்படியெல்லாம் பேசக்கூடாது... ஓகே”

“அதை விடு... இப்பத் தருவியா... மாட்டியா..?”

“இரு ஒரு நிமிஷம்...” என்றவள் “கண்ணண்ணா....” எனக் கூப்பிட, முன்னாள் சென்று கொண்டிருந்த கண்ணன் திரும்பி, “என்ன அபி..?” என்றான்.

“எங்க அம்முக்கு உங்க பேஸ்புக் ஐடி வேணுமாம்... கொடுக்கட்டுமா...?”

“அட அது எதுக்குங்க... நான் அதில் அதிகம் இருக்கிறதில்லை.... சும்மா யாராச்சும் எழுதினதை ஷேர் பண்ணுவேன்... எனக்கு அதுல உக்காந்து பொழுதைப் போக்க பிடிக்காதுங்க... அது ஒரு நேரம் கொல்லி... நம்மளை அடிமையாக்குறதுல ஆல்கஹாலைவிட கொடுமையானது... வாரத்துல ஒரு நாள் பார்ப்பேன்... அவ்வளவுதான்... நீங்கள்லாம் பிரண்டாயிட்டு தினம் ஏதாவது பதிவீங்க... வந்து லைக் போடலை, கமெண்ட் போடலைன்னு வருத்தப்படுவீங்க... அதெல்லாம் எனக்கு சரி வராதுங்க... என்னோட பிரண்ட்ஸ் கூட எனக்கு பிரண்ட் இல்லை... அபி ஒரு தடவை ரொம்ப நச்சரிச்சா... அதான் கொடுத்தேன்... சாரதி கூட என்னோட பிரண்ட் லிஸ்ட்ல இல்லை தெரியுமா...?” என்றான்.

“சரி விடுங்க... இவளுக்கு எதுக்கு கொடுக்கணுமின்னு நினைக்கிறேள்... அதுக்காக கதை விடுறேள்... எனக்கு எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்கா... நல்லா எழுதுவீங்கன்னு அபி சொன்னாளேன்னு கேட்டேன்... ஒகே... “ என்றவள் அதன் பின் அது குறித்து பேசவில்லை.

இரவு சாப்பாடு முடிந்து எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது,  சுபஸ்ரீயிடமும்  “வர்றேங்க... வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திப்போம்” என்ற கண்ணன், “என்னோட முகநூல் ஐடி ராமக்கண்ணன், இங்கிலீஸ்ல... ரெண்டு ‘K’ போடணுங்க...” என்றான்.

“அதை நான் கேக்கலைங்களே... எனக்கு எதுக்குங்க உங்க ஐடி... இந்தா இன்னைக்கு எங்க அத்தை வீட்டுக்கு வந்தேள்... பேசிண்டிருந்தோம்... அவ்வளவுதான்... இனி மறுபடியும் பார்ப்போமா தெரியாது... ஒருவேளை எங்க மேரேஜ்க்கு ஊரில் இருந்தா வருவேள்... இல்லேன்னா அதுவுமில்லை... பின்ன எதுக்கு உங்க ஐடி எனக்கு...” என்று படக்கென்று சொன்னாள்.

அவள் அப்படிச் சொன்னதும் கண்ணன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை, அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். “வயசுப் பொம்மனாட்டிகளுக்கு வேற ஆம்பளைங்க கூட வீதியில நின்னு என்னடி பேச்சு வேண்டிக்கிடக்கு” என பாட்டி திண்ணையில் இருந்து கத்த, “பாட்டி... சித்த சும்மா இரு...” என கடுப்பாய்ச் சொல்லி கண்ணன் மீது உள்ள கோபத்தை பாட்டி மீது இறக்கினாள். 

“உனக்கு ரொம்ப செல்லங் கொடுத்து கொடுக்கிறாங்கடி... இது எதுல போயி முடியப் போறதோ... பகவானுக்குத்தான் வெளிச்சம்...” பாட்டி பதிலுக்குச் சொல்ல, “நோக்கு நான் எவாளையாச்சும் கூட்டிண்டு ஓடிடுவேன்னு எண்ணமோ... அதுக்குத்தான் எனக்கு ஆம்படையான் பார்த்து வச்சிருக்காளே... அவாளோட ஓடிணாத்தான் உண்டு... பயப்படாதேள்... பசங்க கூட ரோட்டுல நின்னு பேசுறது ஒண்ணும் தெய்வக் குத்தமில்லே... இது அந்தக்காலம் மாதிரி இல்லை... புரிஞ்சுக்கோ...” என்று அவளருகில் சென்று கத்திவிட்டு வேகமாக தன் வீட்டை நோக்கி நடந்தாள்.


வாத்தியார் வாசுதேவன் தன்னை முறைத்துவிட்டுச் சென்றதும் அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வந்த பையன்கள் கிளம்பவும் வேலாயுதத்துக்கு கோபம் தலைக்கேறியது. “முத்து... நம்ம கொடிக்கம்பு, போர்டைச் சுற்றி முள்ளு வெட்டிப் போடச் சொல்லு... என்னோட சொந்தச் செலவுல சுத்தி ஒத்தக்கல்லு வச்சி கட்டித்தாறேன்... அவனுக இன்னைக்குப் போனாலும் இன்னொரு நாளைக்கு வேணுமின்னே பக்கத்துல போர்டு வைப்பானுங்க... நல்லா சிலாங்கமா எடம் போட்டு முள்ளடைச்சு வையுங்க... என்ன...”

“சரிய்யா... இந்தா இப்பவே செஞ்சுபுடுறோம்... கொக்காலி... இனி நாமளா அவனுங்களான்னு ஒரு கை பார்த்துடுவோம்...”

“ஏய் முத்து... அவனுங்கதான் வாத்தியார் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம கிளம்பிட்டானுங்களே... இனி எதுக்கு பிரச்சினைக்கு வரப்போறானுங்க... சுத்தி அடச்சி, கல்லு வைச்சிக்கட்டி நாமளே ஊருக்குள்ள பிரச்சினை பண்ணனுமா என்ன... அதான் தலைவர் வந்தாரு... கொடி ஏத்தியாச்சு... போர்டு வச்சாச்சு... பின்ன என்ன... போங்கப்பா போயி வேலையைப் பாருங்க...” என்றார் பஞ்சநாதன்.

“ஏப்பா... எப்பப் பார்த்தாலும் நீ இப்படித்தான் பேசுறே... நமக்கு நம்ம ஜாதி மேல பற்று இருக்கணும்... சும்மா எதாவது சொல்லி அவனுங்க மனசை மாத்தப் பாக்காதே... உன்னோட வேலையைப் பாரு... உனக்கும் அந்த வாத்திக்கும் ஊருக்கு உபதேசம் பண்றதே பொழப்பாப் போச்சு...” என்று கத்திய வேலாயுதம், பிரசிடெண்டைப் பார்த்து “நீங்க வாங்க.... வீட்டுல போயி காபி சாப்பிட்டுட்டு போகலாம்” என கூட்டிக் கொண்டு போனார்.

“ஏத்தா செல்வி... உங்காத்தா இன்னும் நெல்லவிக்கலையா...?” என்றபடி வீட்டிற்குள் கிடந்த சேரை எடுத்துப் போட்டு, பேனைத் தட்டிவிட்டு பிரசிடெண்ட்டையும் அவரு கூட வந்த ரெண்டு மூணு பேரையும் உட்காரச் சொன்னார்.

“இப்ப ரெண்டாவது அண்டா போட்டுக்கிட்டு இருக்கு... இன்னொரு அண்டா போடணுமின்னு சொன்னுச்சு....”

“சரி... ஐயாவுக்கு காபி போடு... நல்லா பாலு ஊத்தி நறுக்குன்னு போட்டுக் கொடு... ஆமா... மூணு அண்டா காயப்போட பக்கத்துல களம் இருக்கா...?”

“ம்... அம்புலாருவிட்டு களத்துல கேட்டிருக்கு... போடுற வெயிலுக்கு அரமணி நேரத்துல சுருளக் காஞ்சிருமில்ல...”

“ம்... மாப்ள சாப்புட வருவாரா...?”

“வரமாட்டாரு.... வேலை இருக்காம்... எங்களை வரச் சொல்லிட்டுப் போனாரு...”

“சாயந்தரம் நாங் கொண்டு போயி விடுறேன்...” என்றவர், அவர்கள் காபி குடித்துக் கிளம்பும் வரை பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் கிளம்பியதும், “சரித்தா... நா போயி உங்காத்தா நெல்லவிக்கிறதை ஒரு எட்டு பாத்துட்டு வாறேன்... நம்ம பந்தடிமனை முக்குல ஒரு பொம்பளை மீன் விப்பா... நல்ல மீனா வச்சிருப்பா... போயி வாங்கிட்டு வாறேன்... குழம்பு வச்சி சாப்பிட்டு மாப்பிள்ளைக்கும் எடுத்துக்கிட்டு போகலாம்... அவருக்கு மீனுன்னா உசிருல்ல...” என்றபடி துண்டை உதறி தோளில் போட்டார்.

அப்போது வீட்டுக்குள் இருந்த போன் அடித்தது.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)


************

பிரதிலிபி போட்டியில் இருக்கும் 'நேசம் சுமந்த வானம்பாடி' குறித்து அவரின் நினைவுகளுடன் தனிப்பகிர்வாக, அவர் அந்தக் கதைக்கு எழுதிய கருத்துடன் பகிர்ந்திருக்கிறார் அன்பின் ஐயா. துரை. செல்வராஜூ அவர்கள். ஐயாவுக்கு என் நன்றி.

அவரின் பகிர்வு பார்க்க 'இங்கு' சொடுக்குங்கள்.
-‘பரிவை’ சே..குமார்.

9 கருத்துகள்:

  1. அருமை
    தொடர்கிறேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. மணக்க மணக்க மீன் குழம்பு வைப்பதும் -
    அதை ஆசையோடு அன்பின் உறவுகளுக்குப் பரிமாறுவதும் -
    அவர்கள் சாப்பிடும் அழகில் அகமகிழ்ந்து இருப்பதும்

    நம்ம ஊர்க்காட்டு மக்களுக்கே உரித்தான குணம்!..

    எனது பதிவுக்கும் இணைப்பு வழங்கிய அன்பினுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. அருமை அண்ணா,,,
    தொடர்கிறேன் அடுத்தடுத்த பதிவுகளில்/

    பதிலளிநீக்கு
  4. கதை நன்றாக இருக்கிறது . முன் பதிவுகளை படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கதை நகர்வு நன்று தொடர்கின்றேன் நண்பரே
    தமிழ் மணம் + 1

    பதிலளிநீக்கு
  6. நன்றாகச் சென்றுகொண்டிருக்கின்றது தொடர்...தொடர்கின்றோம் குமார்...

    பதிலளிநீக்கு
  7. அதிலும் கண்ணன் சுபா பார்ட் ரொம்பப் பிடித்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. பேஸ்புக் ஐடி கேட்டால் இனி இப்படில்லாம் காரணம் சொல்லலாம் என இதை படித்து தான் தெரிந்து கொண்டேன்!கண்ணன் சுபா உரையாடல், பாட்டியிடம் சுபாவின் கோபம் அனைத்தும் ரசிக்க வைத்தது,

    வயலும் வயல் சார் சூழலும் படிக்கும் போது மனக்கண் முன் விரிகின்றது தொடர்வேன்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி