சனி, 17 ஜூன், 2023

விமர்சனம் : 2018 (மலையாளம் - 2023)

முரண்பட்ட மனிதர்கள் பலர் மழைநாளில் உதவிக்கரம் நீட்டி எப்படித் தாங்கள் எல்லாரும் கதாநாயகர்களே என்பதை நிரூபித்தார்கள் என்று சொல்லும் படம்தான் 2018.

சென்னையைப் புரட்டியெடுத்த மழையைப் போல் 2018-ல் கேரளாவை வெள்ளக்காடாக மாற்றிய மழையின் போது நிகழ்ந்தவையாகத் திரையில் காட்டப்படும் கதைகளில் கொஞ்சம் உண்மையும் இருக்கக் கூடும் என்றாலும் அந்த மழைநாட்களை நம் முன் காட்சியாய் விரிக்கும் போது வியப்பு, வருத்தம், சோகம், பதற்றம், கோபம் என எல்லாமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.

படம் பார்க்கும் போது அந்த மழைநாளில் அல்லது நாம் படம் பார்க்கும் போது வெளியில் மழை பெய்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 


ஆரம்பத்தில் அத்தனை குடும்பங்களையும் அறிமுகப்படுத்தவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அது மலையாளப் படத்துக்கே உரித்தான பொறுமையைச் சோதிப்பதாய் இருந்தாலும் அதன் பின்னான, அதாவது மழை பெய்ய ஆரம்பித்து மழை வெள்ளம் வீடுகளில் புக ஆரம்பித்தபின் படம் விறுவிறுவென நகர ஆரம்பிக்கிறது.

வெவ்வேறு வாழ்வியல் பின்னணி கொண்ட கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாய் அறிமுகமாகின்றன. கண் தெரியாத, சிறிய கடை வைத்திருக்கும் இந்திரன்ஸ், ஆர்மியில் இருந்து சில காரணத்தால் வெளியேறி, திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கும் டொவினோ தாமஸ், அவரைக் காதலிக்கும் ஆசிரியையாக தன்வி ராம், கேரள மழை வெள்ளப் பாதிப்புக்களையும் வறட்சியால் வாடும் தமிழக கிராமத்து நிலையையும் சொல்லி, தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சியின் டிஆர்பியை ஏற்ற நினைக்கும் பெண் செய்தியாளரான அனுபமா பாலமுரளி,  வெளிநாட்டில் வேலை பார்க்கும் வினீத் சீனிவாசனுக்கும் அவரது மனைவி கௌதமி நாயருக்குமான ஊடல், அவர்களை ஒன்று சேர விடக்கூடாது என நினைக்கும் மாமனாராக ஜாப்பர் இடுக்கி, வழுக்கி விழுந்து மருத்துவமனையில் இருக்கும் ஷோபனா மோகன் - வினீத் சீனிவாசனின் அம்மா - போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் பவுலி வல்சன், உள்துறை செயலாளராக மழை நாளில் வீட்டுக்கு வர முடியாமல் பணியில் சிக்கிக் கொள்ளும் குஞ்சக்கோ போபன், மீன் பிடிக்கும் தொழில் செய்யும் மீனவ மக்களுக்குத் தலைவனைப் போலிருக்கும் லால், அவருடன் மீன் பிடிக்கச் செல்லும் மூத்தமகன் நரேன், மாடலிங்கில் பிரகாசிக்க நினைக்கும் இளைய மகன் ஆசிப் அலி, போலந்தில் இருந்து சுற்றுலா வருபவர்களை மழை நாளில் காரில் வைத்துக் கொண்டு சுற்றும் டிரைவர் அஜூ வர்கீஸ், கேரளாவுக்கு வெடிகுண்டை எடுத்துச் செல்லும் தமிழனான கலையரசன், நிறைமாத கர்ப்பிணிப் பெண், வாய் பேசமுடியாத, கை, கால் உடைந்த பையன் என இன்னும் இன்னுமாய் நிறைய பேர் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் இணைக்கும் புள்ளிதான் அந்தப் பெரும் மழை... கடலுக்குள் சீறிப் பாய்ந்து மீன்களை அள்ளி வந்த படகுகள் எல்லாம் வீதிகளுக்குள் பயணித்து வீடுகளில் மாட்டிக் கொண்டவர்களை, அவர்களின் உடமைகளை என எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்து முகாம்களில் சேர்க்கும் பணியில் தீவிரமாய் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் சூழலை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் முடிவில் அத்தனை பேரையும் காப்பாற்ற முடிந்த போது ஒரு மரணம், அது கொடுக்கும் வலி நம்மை என்னவோ செய்கிறது.


கேரளா மழை வெள்ளத்தில் பலர் உதவிகளைச் செய்ய முன் வந்து மீட்புப் பணியில் இறங்கினார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து எப்படியான உதவிகள் கிடைத்தன என்பதை உலகமே அறியும். மலையாள சினிமாக்கள் தமிழனைக் கேவலப்படுத்துவதை, நம் மீதான மற்றவர்களின் பார்வையை தப்பான கோணத்தில் திருப்புவதை மிகச் சரியாகவே செய்து கொண்டு வருகின்றன என்றே சொல்லலாம். அப்படியான காட்சிகளை வைத்தே ஆக வேண்டும் என்பதை மலையாள இயக்குநர்களுக்குப் பாலபாடமாகச் சொல்லப்பட்டு விடும் போல. இதில் அப்படியான காட்சிகள் படம் பார்ப்போர் மத்தியில் பக்கத்து மாநிலத்தார் இப்படிக் குணம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்களே என்ற எண்ணத்தையே விதைத்திருக்கும்.

கேரளா பதிவு எண் கொண்ட கார் என்பதால் கண்ணாடியை உடைப்பது, நிவாரணப் பொருட்களுடன் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வெடி மருந்தை எடுத்துச் செல்வது, மலையாளியால் திருந்தும் தமிழன், தண்ணீர் இல்லாமல் வாடும் கேரள எல்லையோரக் கிராம மக்கள், வெள்ளத்தால் பக்கத்து மாநில மக்கள் பாதிப்பில் தவித்துக் கொண்டிருக்கும் போது மழை பெய்ததை ஆட்டம் பாட்டமாய் கொண்டாடுவது என மிகக் கேவலமாக நம்மைச் சித்தரித்திருக்கிறார்கள். இதை ஏன் இவர்கள் கர்நாடக ஆந்திராப் பக்கம் கொண்டு செல்வதில்லை என்றால் தமிழன் என்றால் அடிக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணம்தான் காரணம். இப்படியான காட்சிகள் வைத்ததற்காகவே நல்ல படத்தைக் கொடுத்தாய் எனப் பாராட்ட நினைத்த இயக்குநரைத் திட்டவே தோன்றுகிறது. இவர்களின் மனம் இப்படியானதுதான், இதை மாற்ற முடியும் என்று நினைத்தால் நாம் முட்டாளே. அவர்கள் நம்மைப் பற்றித் தவறாகப் பதிந்து கொண்டே வரும்போது நாம் அவர்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். பாபநாசம் குறித்து கமல் பேசியது கூட அவர்களின் மனநிலை அதுதான் என்பதை அப்பட்டமாகச் சொல்லும் விஷயம்தான். 

முல்லைப் பெரியாரைத் திறந்தால் தமிழக கிராமம் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்பதைக் காட்டி, மழை வெள்ளத்தின் போது அந்த அணையே பிரச்சினை, அது உடையும் நிலையில் இருக்கு என்றெல்லாம் சொன்னதை 2018-ல் நாம் கண்கூடாகப் பார்த்தோம். அதை இதிலும் பதிவு செய்வதுடன் திறந்தால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்படும் என்று சொல்லிக் கொண்டே திறக்கிறார்கள்.

மற்றபடி நல்லதொரு படம். பார்க்க வேண்டிய படம்.


அகில் பி. தர்மஜனுடன் இணைந்து ஜூட் ஆண்டனி ஜோசப் கதையெழுதி இயக்கியிருக்கிறார். 

ஒளிப்பதிவு அகில் ஜார்ஜ், படத்தொகுப்பு சமன் சாக்கோ சிறப்பாகவே செய்திருக்கிறார்கள் என்றாலும் மீண்டும் மீண்டும் காட்டப்படும் மழையில் மாட்டிக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் வெட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது.

பாடல்களுக்கான இசையை - நோபின் பால், வில்லியம் பிரான்ஸிஸ் - விட பின்னணி இசை - நோபின் பால் - நம்மை ஈர்க்கிறது. 

காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரடெக்சனுக்காக வேணு குன்னப்பிள்ளி, ஆன்டோ ஜோசப் மற்றும் பத்மகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இருபது கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் இருநூறு கோடிகளுக்கு மேல் வசூலித்து, மலையாளச் சினிமாவின் முந்தைய சாதனைகளை எல்லாம் உடைத்தெறிந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

-பரிவை சே.குமார்.

4 கருத்துகள்:

  1. படம் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்து போரடித்ததால் நிறுத்தி விட்டேன்.  இப்போது தமிழர்களை பற்றி எழுதி இருப்பதைப் படித்தால் பார்க்கத் தோன்றவில்லை.  மனிதர்கள் மனதில் மிருகங்கள்.  அண்டை மாநிலக்காகிறார்கள், அடுத்த ஜாதிக்காரர்கள் என்று வன்மத்தை மனதில் வளர்த்துக்கொள்ளும் வஞ்சகர் நிறைந்த உலகம்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த மாநிலத்தவர்கள் எப்போதும் கெட்டவர்கள் என்று காண்பிப்பது, கிண்டல் செய்வது என்று பல மொழிகளில் வரும் படங்களில் தொடர்கிறது. குறிப்பாக மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுசெய்வது அதிகம். நல்ல படம் என்று நீங்கள் சொன்னாலும் மேற்கூறிய காரணத்திற்காகவே பார்க்கத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  3. குமார், இந்தப் படம் பத்தி சொன்னாங்க. எனக்கும் கேரளத்துடன் பந்தம் உண்டு என்றாலும், நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் உண்மை. எனக்கும் அனுபவம் உண்டு.நாம் எப்படிக்கொண்டாடுகிறோம் அவங்களை? அரசியலில் இருந்து கலை வரை. அதனால் நான் படம் பார்க்கவில்லை. நானும் மலையாளப் படங்களின் ரசிகைதான் ஆனால் ....

    விமர்சனம் நல்லாருக்கு குமார்

    கீதா

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி