செவ்வாய், 20 ஜூன், 2023

கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - பகுதி : 1

ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா.

தனது வேலைப்பளுவுக்கு இடையே தனக்குப் பிடித்த வேலையையும் செய்ய வேண்டுமென சென்ற ஆண்டு ஜூன்-18 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி பதிப்பகம் தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடியது. இந்த ஓராண்டில் பனிரெண்டு புத்தகங்களைப் பதிப்பித்து, பதிப்புத்துறையில் தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருப்பதுடன் உலகின் எந்த மூலையில் இருந்து புத்தகங்கள் வேண்டுமெனக் கேட்டாலும் குறைந்த கூரியர் / தபால் கட்டணத்தில் புத்தகங்களை அனுப்பியும் இணையத்தளத்தில் சிறப்பான கட்டுரைகள், பேட்டிகள் எனத் தொடர்ந்து கொடுத்தும் ஆலமரம் போல் தனது விழுதுகளை விரித்துப் பயணிக்க ஆரம்பித்திருப்பது சிறப்பு. இந்த ஓராண்டில் பனிரெண்டு புத்தகமென்னும் எண்ணிக்கை வரும் ஆண்டில் இரண்டு மடங்கிற்கு மேல் போகும் என்ற நம்பிக்கை விழாவுக்கு வந்திருந்த, பாலாஜி அண்ணனின் கடின உழைப்பை அறிந்த, அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். வெற்றிப் பயணம் இன்னும் சிறப்பாக இருக்க
வாழ்த்துகள்.


நேற்றைய விழா நம்ம வீட்டு விழா என்பதால் விழா நிகழ இருந்த ப்ரோ ஆக்டிவ் எக்ஸல் அலுவலகத்துக்கு நாங்கள் மதியமே போய்விட்டோம். அபுதாபியில் இருந்து ஷார்ஜாவை நோக்கி எப்பவும் போல் பல விசயங்களைப் பேசியபடி எங்கள் பயணம் அமைந்தது. இந்த முறை எங்கள் மூவருடன் - நான், ராஜாராம், பால்கரசு - தம்பி வாசுதேவனும் இணைந்து கொண்டார். மதியம் பாலாஜி அண்ணனுடன் கராச்சி தர்பாரில் சுவையான சாப்பாடு.
மாலை ஐந்தே கால் மணிக்கு விழா ஆரம்பித்தபோது அந்த சிறிய அரங்கம் நிறைந்திருந்தது. விழா நிகழ்வை 'ஏக் கஹானி' குறும்பட நாயகி ஆர்.ஜே. அஞ்சனா - நிவேதிதா - தொகுத்து வழங்கினார். இவரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை எப்பவும் போல் மிகச் சிறப்பாகக் கொண்டு சென்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கேலக்ஸியின் முதலாமாண்டு வெற்றி விழா தொடங்கியது. (எல்லாரும் பாடுவோம் என்று சொல்லி தொகுப்பாளர் தொடங்காமல் நிற்க, மற்றவர்களும் சற்றே தாமதித்து எல்லாருமாய் பாடி முடித்தோம்)
முதலில் இந்த ஓராண்டில் கேலக்ஸியின் வளர்ச்சியைப் பற்றிய காணொளி எழுத்தாளர் ஜெஸிலாவின் கணீர்க்குரலில் அழகான படங்களுடன் திரையிடப்பட்டது.
அருமையான
, சிறப்பான தொகுப்பு. அதில் பிரபாவதியின் பெயர் இணைக்கப்படாமல் இருக்க, அதற்கான காரணத்தைச் சொல்லி அவருக்கும் நன்றி கூறினார் பாலாஜி அண்ணன்.
சமீப காலமாய் தொடக்க ஆட்டக்காரராய் இறங்கும் 'கரும்புனல்' ஆசிரியர் சுரேஷ்பாபு, நான் இரண்டாவதாய் இறங்குகிறேன் 'அமீரகத் தி.மு.க.' பிலால் அலியார் அடித்து ஆடட்டும் என்று சொல்ல, அண்ணன் பிலால் அவர்கள் களமிறங்கி, தனக்கும் பாலாஜி பாஸ்கரனுக்குமான உறவு 1997-ல் மேலூரில் தொடங்கியதில் இருந்து இன்றுவரை சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் நெருக்கமாய்த் தொடர்வதையும், சில நேரங்களில் பேசாமல் இருந்தால் 'இது ரெண்டுக்கும் வேற வேலை இல்லை' என அவர்களின் இணையர்கள் நல்ல புரிதலைக் கொண்டிருந்ததையும் சொல்லி, பாலாஜி அண்ணனின் இந்த ஒரு வருட உழைப்பையும், அவர் முதலாமாண்டு தொடக்க விழாவினை அமீரகத்தில் நடத்தும்போது அவருக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளையும் அதை எதிர்கொண்ட விதங்களையும் சொல்லி, இதை முதலாமாண்டு நிறைவு விழா என்று சொல்லாதீர்கள்... இது வெற்றி விழா என்று சொல்லி, அரபி மொழி பெயர்ப்பில் வெளியான ஆத்திசூடி, பாரதி கவிதைகள் இரண்டும் கேலக்ஸியின் மைல்கல் பதிப்புக்கள் என்று சொன்னார். மேலும் கேலக்ஸியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவிலும் நான் கலந்து கொள்வேன் என்பதுடன் கேலக்ஸியின் வளர்ச்சிக்கு என்னாலான உதவிகளை இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து செய்வேன் என்று சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார்.


அடுத்ததாய் பேச வந்த சுரேஷ் அண்ணன், புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களின் நிலையைச் சொல்லி, பாலாஜி அண்ணனின் உழைப்பை பற்றி சொன்னதுடன் புதிய எழுத்தாளர்களுக்கு - அதுவும் தன்னைப் போல புதிய எழுத்தாளர்கள் என்று வேறு சொன்னதெல்லாம் அதிகம்ண்ணே - வாய்ப்புக் கொடுத்ததைப் பாராட்டினார். மேலும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்களிடம் கதைகளைக் கொடுத்துவிட்டு விரட்டிக் கொண்டு திரிவதைப் போலில்லாமல் நம்மை அவர் விரட்டிக் கேட்டு எல்லாற்றையும் வாங்கிக் கொள்வார். இதை இப்படி மாற்றணும், இந்த இடத்தில் இன்ன கலர் வந்தா நல்லாயிருக்கும், இந்த எழுத்தை இப்படி ஆக்கலாமே என்றெல்லாம் எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் ஏற்றுக் கொண்டார்.
கரும்புனலின் இரண்டாம் பதிப்பை கொண்டு வருவது என முடிவு செய்ததும் அதை மட்டும் கொடுத்தால் சரியாக இருக்காது என்பதாலேயே என்னிடம் இருந்த சிறுகதைகளை 'ALT + 2' ஆக கொண்டு வந்தோம். அடுத்ததாய் நல்ல ஒரு நாவலைக் கொண்டு வரணும், அதையும் கேலக்ஸியில் தான் கொண்டு வருவேன் என்று சொன்னார். மேலும் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா இதை இப்படி மாத்தணும், இங்க காற்புள்ளி வரணும், எழுத்து பெரிசா இருக்கணும் என ஆயிரம் நொட்டை சொல்லும் எழுத்தாளனுடன் வாழ்தல் கடினம்... அதை என் மனைவியிடம் கேட்டால் ஒருவேளை சொல்லக் கூடும். எழுத்தை விடுத்து பதிப்பாளராகவே ஆகியிருக்கும் பாலாஜிக்கு
வாழ்த்துகள்
என முடித்தார்.
இந்த ஓராண்டில் கேலக்ஸியில் புத்தகம் போட்ட அமீரக எழுத்தாளர்களான பிரபாவதிக்கு ஜெசிலாவும், சிவமணிக்கு இராஜாராமும், சிவசங்கரிக்கு ரமாமலரும், முஹைதீன்பாட்ஷாவுக்கு ஷேக் சுலைமானும், சுரேஷ்பாபுக்கு பிர்தோஷ் பாஷாவும் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்கள். தனது பயணத்தில் தொடர்ந்து வருவதுடன், எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பவரும், 'நலம் வாழ' என்னும் கட்டுரையை கேலக்ஸி இணையதளத்தில் எழுதியவருமான எழுத்தாளர் ஜெஸிலாவுக்கு தேவதர்ஷினி பாலாஜி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.
வெகுநேரமாக பூங்கொத்தைக் கொடுப்பதற்காகக் காத்திருந்த பிரசன்னா அவர்கள் பாலாஜி அண்ணனிடம் பூங்கொத்தைக் கொடுத்து தனது மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
இதன் பிறகு 'வாத்தியார்' புத்தக வெளியீட்டுக்கு மேடை தயாராக, அறிமுக உரை ஆற்ற வந்த ராஜாராம், இரவு பகல் பாராமல் பாலாஜி அண்ணன் உழைப்பதைப் பற்றிச் சொல்லிவிட்டு, நான் எழுதும் கதைகளை பிரசவித்த உடன் படிப்பதையும், வாத்தியார் கதைகளையும் அப்படி வாசித்து தான் சொன்ன நிறை, குறைகளை ஏற்று எழுத்தாளர் தனது கதைகளில் மாற்றம் செய்து கொண்டதைச் சொல்லி, இவரின் கதைகளில் வாழ்வியல், நாம் மறந்த பொருட்கள், திருவிழாக்கள் என எல்லாவற்றையும் நாம் வாசிக்க முடியும் என்று சொன்னார். இந்தக் கதைகள் நல்ல வாத்தியார் கையில் கிடைக்க, அவர் முஸாபாவில் ஒரு டீக்கடையில் அமர்ந்து கையில் குச்சியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பக்கமாய் திருத்தியதையும் சில இடங்களில் இந்த வார்த்தை வேண்டாம் என்று சொன்னதையும் சில இடங்களில் இது சிறப்புய்யா என ஹார்ட்டின் கொடுத்ததையும் சொல்லி, வாத்தியார் சரியான வாத்தியாரிடம்தான் போய் சேர்ந்திருக்கிறார். முதல் புத்தகமான எதிர்சேவை வரும் முன் பல இடங்களுக்குப் போய் வந்ததையும், அப்போது தனக்கு 130 கதைகள் அனுப்பியதாகவும் அதிலிருந்தே 12 கதைகளை எதிர்சேவைக்குத் தேர்வு செய்ததாகவும் - தசரதனிடம் கொடுத்தது 32 கதைகள் - சொன்னார். முதல் புத்தகத்துக்கு தசரதன் வைத்த தலைப்பும் அட்டைப் படமும் அண்ணனுக்கு மனதுக்குப் பிடித்ததாய் அமைந்தது. அதைத் தொடர்ந்து வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள் என வந்து இதோ ஐந்தாவது புத்தகமாய் வாத்தியார் வந்திருக்கிறது என்றார்.


நூலைப் பற்றிப் பேச வந்த எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள், கிடுகு, குறிச்சி, அணத்தல் போன்ற வார்த்தைகள் எனக்கெல்லாம் தெரியாதவை, மேலும் வட்டார வழக்கில் இருப்பதால் என்னால் அர்த்தம் புரிந்து வாசிப்பது சிரமமாக இருந்தது என்றும் ஒரு கதாபாத்திரத்தை எல்லாக் கதைகளிலும் கொண்டு வருவது கடினம்தான் என்றாலும் எல்லாக் கதைகளிலும் வாத்தியாரைக் கொண்டு வரணும் என்பதால் சில கதைகளில் வலிந்து திணித்தது போல் - குறிப்பாக இரண்டாவது கதை - இருந்தது என்றும், கதைகள் எல்லாம் கீழே வைக்காமல் உடனே வாசிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் வெப்சீரியல் பார்க்கிற மாதிரி இன்னைக்கு கொஞ்சம் நாளைக்குக் கொஞ்சமெனப் படிக்கிற கதைகள்தான் என்று சொன்னார். அவர் சொன்னது போல் வாத்தியாரை எங்கும் வலிந்து திணிக்கவில்லை என்றாலும் இரண்டாவது கதையில் வாத்தியாருக்கு வேலை அதிகமிருக்காது அதனால் கூட அப்படித் தோன்றியிருக்கலாம். வட்டார வழக்கு என்னும் போது அந்த வழக்குப் புரிந்தவர்களால் மட்டுமே கதையை விளங்கிக் கொள்ள முடியும் என்பது உண்மைதான், மற்றவர்களுக்குச் சில வார்த்தைகள் புதியதாய் இருப்பதால் புரிந்து கொள்வது கூட சிரமம்தான் என்றாலும் கதைகளை வாசித்தவர் அவர் ஒருவரே என்பதுடன் எப்போதும் போல் தனது மனம் திறந்த கருத்துக்களைப் பொதுவில் வைத்ததற்கும், நான் முதன் முதலில் சந்தித்த ஒரு விமர்சனக் கூட்டத்தில் 125வது பக்கத்தில் இந்த இடத்தில் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்று சொன்னவர் இப்போது வரை மாறாமல் பக்கங்களை நினைவில் வைத்துத் தவறுகளைச் சுட்டுவதற்கும் நன்றி.
மேலும் 13 ராசியில்லாத நம்பர்ன்னு சொல்வாங்க - அது சொல்றவங்களுக்குத்தானே - என்ன கணக்குல 13 கதைகள் வச்சாங்கன்னு தெரியலை. அதே மாதிரி 157 பக்கம் வருது, அதோட கூட்டுத்தொகையும் 13... என்ன கணக்குல வச்சாங்கன்னு தெரியலை, சரி விடுங்க. நித்யாகுமார் இன்னும் தொடர்ந்து எழுத
வாழ்த்துகள்
என்றார்.
புத்தகத்தை மருத்துவர் பெனடிக்ட் அவர்கள் வெளியிட மரியாதைக்குரிய அபுதாகிர் அவர்கள் பெற்றுக் கொண்டார். எழுத்தாளனாய் நானும் மேடையில் இருந்தேன். விழா முடிந்து அபுதாபி திரும்பும்போது மருத்துவர் பெனடிக்ட் அவர்கள் அபுதாபியில் இருந்து வாடகை டாக்ஸியில் பயணித்து வந்திருந்தார் என்று பிர்தோஷ் பாஷா சொன்னபோது வியப்பாக இருந்தது. அவர் பாலாஜி அண்ணன் மீது வைத்திருக்கும் நேசத்தின் மதிப்பு எப்படியானது என்பதைத் தெரிந்து கொள்ளமுடிந்தது.
இதுல இன்னொன்னு என்னன்னா மேடை ஏறுன பாதிப்பேரு நானும் மதுரைக்காரன்தான் எனக் காலரைத் தூக்கி விட்டுக்கிட்டாங்க.

நன்றி.

படங்கள் : சுபான் அண்ணாச்சி.

(தொடரும்)
-பரிவை சே.குமார்.

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி