மின்தூக்கி
எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் எழுத்தில் வெளிநாட்டு வாழ்க்கையையும் அதனுடே படிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசியிருக்கும் நாவல் இது.
தனது முன்னுரையில் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும் கதை இது என்று சொல்லியிருக்கிறார், ஆமாம் அன்றைய காலகட்ட வெளிநாட்டு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
1983-ல் வெளிநாட்டுக்கு வரும் ஒருவன் 1992 வரையான காலகட்டத்தில் அடையும் வளர்ச்சியையும், பட்டப்படிப்பு இல்லாத காரணத்தால் ஏற்படும் இழப்பையும் அதன் காரணமாக அவன் எடுக்கும் முடிவையும் பற்றிச் சொல்லும் கதைதான் இது.
நாவலை 1983 - 87 காலகட்டம் மற்றும் 1988 - 92 காலகட்டம் என இரு பகுதியாக எழுதியிருக்கிறார். முதல் பகுதியில் மும்பையில் இருந்து ஜித்தா வந்து வேலை பார்ப்பதையும் அப்போதைய சௌதியையும் காட்சிப்படுத்தியிருப்பவர், இரண்டாவது பகுதியில் துபையையும் நாயகனின் வளர்ச்சியையும் காட்சிப்படுத்தி, சென்னைக்குக் கிளம்பி செல்வதுடன் முடித்திருக்கிறார்.
1990-களில் எங்கள் பகுதியில் வீட்டுக்கு ஒருவரோ இருவரோ சிங்கப்பூரில் இருப்பார்கள். அப்படித்தான் வேறு சில மாவட்டங்களில் வீட்டுக்கு ஒருவர் துபையில் இருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரன் வெளிநாடு போய் விட்டால் அவனிடம் எப்படியாவது அங்கொரு வேலை பார்த்துக் கூட்டிக்கப்பா எனச் சொல்வார்கள். அதையே வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு மறைமுக சீதனமாக கொடுத்த காலமும் உண்டு - அதாவது வெளிநாட்டு வேலை - என்பதை நாவலின் ஊடே சொல்லியிருக்கிறார்.
அப்போது அரபு நாடுகளுக்குச் - துபை / குவைத் / சௌதி - செல்ல ஏஜெண்டுகளிடம் பணம் கட்டி மும்பை சென்று, அங்கிருந்துதான் போகவேண்டும் என்று சொல்வார்கள், அப்படி முப்பது வருடங்களுக்கு முன் இங்கு இளைஞனாய் வந்து இன்றும் வாழ்வைத் தொலைத்து விட்டு - குடும்பத்துடன் இருப்பவர்கள் தவிர்த்து - இயந்திர வாழ்க்கை வாழும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது ஊரில் இருந்து பார்க்கும் போது தங்கக்காசுகளை அள்ளிக் கொடுக்கும் யானையைப் போல் தெரியும், இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் அது வாழ்வைத் தொலைக்கும் பாலை என்பதும் எல்லாமே கானல் நீர் கனவுதான் என்பதும்... வருடத்தில் ஒரு மாதம் குடும்பத்துடன் கழித்து - அதுவும் கூட கட்டிட வேலை என்றால் இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் வாய்க்கும் - மற்ற மாதங்களில் எல்லாம் வண்டியில் பூட்டிய மாடாய் ஓடி, பத்துக்குப் பத்து அறைக்குள் கழிக்கும் வாழ்க்கையில் என்ன சுகத்தைத் துய்த்துவிட முடியும்..?
மின்தூக்கியில் நாயகன் ஆரிப் பாஷா, குடும்பச் சூழலால் டிப்ளமோ படித்ததுடன் வெளிநாட்டுக்குப் பயணமாகிறான். ஆரம்பத்தில் மும்பையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போது அப்போது இங்கு வந்தவர்கள் எல்லாருமே இப்படி அலைக்கழிக்கப்பட்டுத்தானே வந்து சேர்ந்திருப்பார்கள் என்று தோன்றியது. சேரனின் வெற்றிக்கொடி கட்டு படம் மனதில் வந்து போனது.
ஒரு வழியாக மும்பையில் இருந்து ஜித்தாவுக்குப் போய் சேர்ந்து மின்தூக்கித் துறையில் வேலை செய்கிறான் பாஷா. அவன் தங்கியிருக்கும் இடத்தில், பயணிக்கும் வண்டியில் என எல்லா இடத்திலும் ராஜாவும் அவனுடன் பயணிக்கிறார். அன்றைய சூழலில் மட்டுமில்லை இன்றைய சூழலிலும் வெளிநாட்டு வாழ்க்கையில் அதிகமாய் எல்லோருடனும் வாழ்வது இளையராசாதான் என்றால் மிகையில்லை. அத்தனை அலுப்பையும் கவலைகளையும் அவரின் பாடல்கள் அடித்துத் துவைத்து அடுத்தநாள் காலையில் சுறுசுறுப்பாய் எழவைக்கும் என்பது அனுபவ உண்மை.
அன்றைய வெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேச இப்போது போன்ற வசதிகள் இல்லாத சூழலில் வரிசையில் நின்று நாலு வார்த்தை பேசுதல், தங்கியிருக்கும் இடத்தில் புதிய படங்களின் சிடிக்களை வாங்கி வந்து பார்த்தல், விடுமுறை தினங்களில் போட்டோக்களை எடுத்து அதை பிரிண்ட் போட்டு லெட்டரில் வைத்து அனுப்புதல், கடிதங்களில் கதாநாயகிகள் குறித்து எழுதிக் கொள்ளுதல். ஆங்கிலத்தில் பேசத் திணறுதல் - இப்போதும் பலரின் நிலமை இதுதான் - என நம்மை அந்தக் காலகட்டத்துக்கே கொண்டு போகிறது மின்தூக்கி.
வெளிநாட்டுக்குப் போவதென்பது போகிறவனின் சந்தோசத்துக்காகவா என்றால் நூற்றுக்கு தொன்னூறு சதவிகிதம் இல்லை என்பதுதான் உண்மை. எல்லாப் பயணமும் குடும்பத்தின் சந்தோசத்துக்காகத்தான் அரங்கேறுகிறது. அப்படி வந்த பாஷா, டிப்ளமோதான் கெத்து என இருந்த பாஷா, வேலையின் முன்னேற்றத்துக்கு பட்டப்படிப்பு இல்லாததே காரணம் என உணர்ந்து படிப்பு குறித்தும் யோசிக்க ஆரம்பிக்கிறான். அவனின் தேவை பணம் என்பதாய் இருக்கும் பட்சத்தில் படிப்பு குறித்த யோசனையைச் சற்றே தள்ளி வைத்து அல்ஷரிக்கா என்னும் கம்பெனியில் கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைக்க 1988-ல் துபைக்கு வருகிறான்.
இங்கும் கம்பெனியில் நற்பெயர், வெளி வட்டாரத் தொடர்புகள், மேலாளருக்குப் பிடித்தவனாய் கம்பெனி கொடுத்த தனி வீட்டில் வசதியாய் இருக்கிறான். கம்பெனி பதவி உயர்வில் உனக்கு பட்டப்படிப்பு இல்லை எனச் சொல்லி முட்டுக்கட்டை போட்டுவிட, எல்லா வேலையும் என்னால் பார்க்க முடியும் என்றபோது படிப்புக்கான சான்றிதழ் இருந்தால்தான் மேலே போக முடியுமா..? என்ற கோபம் அவனுள் எழ, நிர்வாகம் அடுத்த முறை உனக்குச் செய்யலாம் என்பதாய் ஜால்ஜாப்புச் சொல்ல, படிப்பு முக்கியம் என வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கு போகிறான்.
துபை இன்னும் சில வருடங்களில் அதீத வளர்ச்சி பெறும் அப்போது நீ உனக்கான உயரத்தை அடைவாய்.. அதுவரை இங்கிரு எனச் சொல்லும் அவனுக்குத் தெரிந்த அண்ணனிடம் தேவையான பணம் சேர்த்துட்டேன்... இப்ப எனக்குத் தங்கச்சி கல்யாணம், என்னோட படிப்பு, அப்புறம் திருமணம் இதுதான் முக்கியம் எனச் சொல்லி விட்டு கிளம்புகிறான்.
தேவையான அளவு சேர்த்துட்டேன் எனச் சொல்லிக் கிளம்பும் பாஷாவைப் போல் சிலர் இன்றும் இருக்கலாம், பலரை இந்தநாடு தேவைக்கு மேல் கடனைக் கொடுத்துப் பிடித்துத்தான் வைத்திருக்கிறது... எத்தனையோ பேர் வயதாகியும் வாங்கிய கடன்களைக் கட்டி முடிக்கவில்லை என வேலை பார்ப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு பிரச்சினை முடிய, அடுத்தது ஆரம்பித்து விட்டதென குப்பூஸும் டீயுமாய் பேருந்துக்கு காத்திருக்கும் கட்டிடத் தொழிலாளிகளை இப்போதும் எப்போதும் பார்க்கலாம்.
வெளிநாட்டு வாழ்க்கை இதுதான் என்பதை பாஷாவின் கதை வழி சொல்லியிருக்கிறார். 38 வருடங்களுக்கு முன் வெளிநாடு வந்தவர்கள் அனுபவித்த வாழ்க்கையை நமக்குக் காட்டியிருக்கும் ஆசிரியர், மின்தூக்கி துறை குறித்த விபரங்களை நிறைவாகத் தருகிறார். அவர் அத்துறை சார்ந்தவர் என்பதால் விரிவாஅன் விபரங்களைச் சொல்ல ஏதுவாய் இருந்திருக்கிறது எனலாம்.
ஒருவனுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் நல்ல பேர் பலரின் வயிற்றுக்குள் புகைச்சலைக் கொடுப்பதையும், வேலையை விடப்போகிறேன் எனச் சொல்லும் போது சம்பள உயர்வுக்கான நாடகம் இது என்ற கேலியையும் அன்று மட்டுமில்லை இன்றும் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் காணலாம். அதேபோல் போலிச் சான்றிதழ்கள், போலி நியமன ஆணை என எல்லாமே இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை கொடுத்த வேலையை மட்டுமின்றி மற்றதையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பவனை நிர்வாகத்துக்கு ரொம்பப் பிடித்துப் போய் எல்லா வேலையையும் தலையில் கட்டினாலும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயத்தில் மட்டும் விதிமுறைகளின்படிதான் நடப்பார்கள். வேலையை விட்டுப் போனால் மீண்டும் இங்கு சேர முடியாது என்பது பல கம்பெனிகள் சொல்வதுதான். அப்படியும் பாஷா பயமுறுத்தப்பட்டாலும் கொண்ட கொள்கையில் இருந்து அவன் மாறாமல் இருப்பதுடன் கம்பெனி விதிமுறைப்படி பட்டச் சான்றிதழ் இல்லாததால் பதவி உயர்வு கிடைக்காது ஆனாலும் அடுத்தமுறை உனக்காகப் பேசலாம் என மேலதிகாரிகள் சொன்னதைவேலையை விட்டுவிட்டால் மீண்டும் சேர முடியாது என்ற போது திருப்பிச் சொல்லி, அடுத்த வருடம் எனக்காக விதிமுறையை மாற்றும் போது நான் திரும்பி வரும்போது விதிமுறையை மாற்ற முடியாதா எனக் கேட்பது நக்கல் என்றாலும் சிறப்பான நெத்தியடி.
வெளிநாட்டு வாழ்க்கையின் சுக துக்கங்களையும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களையும் மின்தூக்கிகளைப் பற்றிய விபரணைகளையும் விரிவாகப் பேசும் நாவலில் பாஷாவின் கதை அத்தனை அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை. குடும்பக் கஷ்டம், மேற்படிப்பு இதுதான் பிரதானமாக நிற்கிறதே ஒழிய ஃபெரோஸ், இஸ்மாயில், அண்ணன் தவிர அவன் கடந்து வரும் மனிதர்கள் யாரும் நினைவில் நிற்கவில்லை.
இறுதியில் எக்ஸ்போ -2020க்காக ஆசிரியர் துபை வந்தபோது பாஷாவை அதே அல்ஷரிக்கா கம்பெனியின் நிர்வாக இயக்குநராய் பார்த்தேன் என்று முடித்திருப்பது அவன் நினைத்ததைச் சாதித்து விட்டான் என நினைக்க வைத்தாலும் தமிழ் சினிமாவையே நினைவு படுத்தியதால் அந்தப் பாரா இல்லாதிருந்தால் பட்டம் பெற்று சாதித்திருப்பானா, மாட்டான என்ற கேள்வியும் ஒவ்வொருவருக்குள்ளும் கிடைக்கும் அதற்கான விடையும் கதையை இன்னும் சிறப்பாக்கி இருக்கும் என்பது என் எண்ணம்.
ஆரம்பத்தில் இருந்தே அன்றைய வெளிநாட்டு வாழ்க்கையினைச் சொல்லும் கதை வேறு ஒரு அழுத்தத்தையும் கொடுக்காமல் நகர்வதால் இரண்டாம் பாகத்தின் பாதியில் அயற்சியைக் கொடுப்பதாய் எனக்குத் தோன்றியது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை அல்லவா..? ஒருவேளை உங்களுக்கு மின்தூக்கி அயற்சி நீக்கி விறுவிறுப்பாய் இருக்கக்கூடும், வெளிநாட்டு வாழ்வின் வலியை உங்களுக்குள் இறக்கி வருத்தத்தைப் பதிவு செய்யக் கூடும்.
கானல் மற்றும் தமிழ்கலை வெளியீடாக வந்த இந்த நாவல் 2021- ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னர் 2019-ல் அமேசானில் வெளியிடப்பட்டது என்று நினைக்கிறேன்.
இந்த நாவலை,
சமர்பணம் செய்திருக்கிறார் ஆசிரியர். சிறப்பு.
திரு. அபுல் கலாம் ஆசாத்தின் உடல் வடித்தான் என்னும் நாவல் ஜீரோ டிகிரி நாவல் போட்டி-2021-ல் வெற்றி பெற்று, புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதில் உடல் பயிற்சி பற்றி பேசியிருப்பதாக கேள்விப்பட்டேன். வாசிக்க வேண்டும்.
மின்தூக்கியை வாசிக்கும் போது 30 வருடங்களுக்கு முன்பான வெளிநாட்டு வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தும். வாசித்துப் பாருங்கள் புதிய அனுபவம் கிடைக்கும்.
--------------------------------------
மின்தூக்கி
அபுல் கலாம் ஆசாத்
கானல் மற்றும் தமிழ் அலை
பக்கம் : 160
விலை : 175/-
--------------------------------------
நல்லதொரு அறிமுகம்.
பதிலளிநீக்குஅனுபவம் பெற்ற விமர்சனம்... மற்றவர்களுக்கு வெறும் வாசிப்பு மட்டுமே... அருமை குமார்...
பதிலளிநீக்குசிறப்பானதொரு நூல் அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநிறைகளையும் குறைகளையும் சாந்தமாக கூறிய சிறப்பான விமர்சனம்!
பதிலளிநீக்கு