திங்கள், 10 ஜனவரி, 2022

பிக்பாஸ் சீசன் - 5 : தாமரைச்செல்வி

தாமரைச்செல்வி-

பிக்பாஸ் சீசன்-5-ல் கலந்து கொண்டவர்களில் கிராமத்து முகமாகச் சிலர் இருந்தாலும் எதார்த்தமான மண்வாசனையுடன் இருவர் மட்டுமே - தாமரைச்செல்வி, சின்னப்பொண்ணு - இருந்தாலும் சின்னப்பொண்ணு மீடியா வெளிச்சம் பெற்றவர் என்பதால் தாமரைச்செல்வியே வெகுளித்தனமாய் தனித்து நின்றார்.

'நான் பிக்பாஸ் பார்ப்பதேயில்லை', 'எனக்கு வெளியே பெரியரசிகர் கூட்டம் இருக்கு', 'நான் நிகழ்ச்சி தொகுப்பாளினி', 'என்னய மேடை ஏத்தமாட்டாங்க... நானே சுயம்புவாய் நின்று ஜெயித்தேன்', 'நான் இந்திய அளவில் சிறந்தவள்' என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்த போது 'எனக்கு எதுவும் தெரியாதுங்க சார்...' என்று சொல்லிக் கொண்டே நூறு நாட்களை நெருங்கி வந்து வெளியேறியிருக்கிறார் தாமரைச்செல்வி. வாழ்த்துகள்.

ஆரம்பத்திலிருந்தே எல்லாருக்கும் நல்ல சாப்பாட்டைச் சமைத்துப் போட்டிருக்கிறார் என்பதை எல்லாருமே சொல்லியிருக்கிறார்கள். இத்தனை பேருக்கு மனதார சமைத்துப் போடுவது என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடும் பாக்கியமல்ல. சென்ற சீசன்களில் எல்லாம் சமையல் தெரியாமல் அடித்துக் கொண்டு நின்றதைப் பார்த்திருக்கிறோம், வீணாவுல கொட்டியதையும் பார்த்திருக்கிறோம். இந்த முறை யார் சமையல் அணியாக இருந்தாலும் தனக்கு வேறு வேலை இருந்தாலும் சமையலிலும் தன்னை இணைத்துக் கொண்ட தாமரை பாராட்டுக்குரியவர்.

தாமரை எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதை வைத்தே அவரை ஒதுக்கியவர்களில் முதன்மையானவர் சின்னப்பொண்ணு. இவரால் இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் நிற்கமுடியவில்லை என்ற போதிலும் தாமரையை மட்டும் தட்டுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை, எங்கே தாமரைக்குப் பெயர் கிடைத்துவிடுமோ, அது மலர்ந்துவிடுமோ என்ற பொறாமை குணமாகவே அது தெரிந்தது. இந்தக் குணம் அண்ணாச்சியிடமும் இருந்தது என்பதே உண்மை.

எனக்குத் தெரியாது ஆனா தெரிஞ்சிக்கிறேன் எனச் சொல்லி ஒவ்வொரு விளையாட்டையும் சிரத்தையோடு விளையாண்டு, அதில் இறுதிவரை போராடி, சிலவற்றில் வெற்றியும் பெற்ற தாமரையின் போராட்டகுணம் போற்றுதலுக்குரியது. 

ப்ரியங்காவுடன் தாமரைக்கு இணக்கமான உறவு இருந்தது என்றாலும் நிரூப்பைப் போல போட்டிக்காக கத்தாமல், மற்றவர்களைப் போல ப்ரியங்கா விஷயத்தில் நாம் எதுவும் சொல்லக் கூடாது, அவர் விஜய் டிவியில் முக்கியமானவர், அவரைப் பகைத்துக் கொள்வதைவிட இணக்கமாய் இருந்தால் அவரின் ரசிகர்கள் நமக்கும் ஆதரவாய் இருப்பார்கள், வெளியில் போனாலும் ப்ரியங்காவால் எதுவும் காரியம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் தவறென்றால் அவரிடமும் மல்லுக்கட்டத் தயாராய் இருந்தார். தள்ளு முள்ளுவில் தாமரை ஒருமுறை தள்ளியதும் ப்ரியங்கா பலமுறை தள்ளினார் என்றாலும் எல்லாருமே தாமரை மீதே குற்றம் சுமத்தியதை நாம் பார்த்தோம்தானே.

தாமரைக்கும் பாவனிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு சுருதியின் மோசடிக்குத் துணை போனதால் உடைந்தது. அதன் பின் பாவனிக்குப் பாயாசம் கொடுக்காமல் விட்டதுவரை பாஷாவுக்கும் அந்தோணிக்குமான சண்டையாய், விக்ரம் வேதா மோதலாய் தொடர்ந்தது. சமீபமாய்... அதாவது கடந்த மூன்று வாரமாய் மீண்டும் நெருக்கமானார்கள். பணப்பெட்டி வந்தபோது கூட தாமரைக்காக இதை நான் எடுத்துப் போகிறேன் என பாவனி சொன்னது உண்மையிலேயே அவர்களின் நட்பின் அடையாளம். இந்தச் சம்பவமே எத்தனை பிரிச்சினை வந்தாலும் நட்பிற்கு தாழ்பாள் போடமுடியாது எனபதைக் காட்டியது.

பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிய சிபி கூட, எடுக்கும் முன் அக்கா உனக்குத்தான் தேவை நீ எடுத்துக்க என்று சொன்னது சிபியின் உயர்ந்த குணத்தைக் காட்டினாலும் தாமரை மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையே காட்டியது. எல்லார் மனதிலும் மலர்ந்துதான் தாமரை வெளியேறியிருக்கிறார்.

ராஜூ மீது ஆரம்பத்தில் வைத்திருந்த நேசத்தைப் பின்னர் குறைத்துக் கொண்டார். அதற்குக் காரணம் ப்ரியங்காவின் பிடிக்குள் போனபின் ராஜூவின் பார்வை சற்றே வித்தியாசப்பட்டதுதான். எது சரி, எது தவறென சரியாக அடிக்கும் ராஜூ, ப்ரியங்கா தவறே பண்ணினாலும் சுட்டிக்காட்ட யோசித்தார். அதற்கு காரணம் மேலே சொன்ன ப்ரியங்கா + விஜய் டிவிதான். இதனாலயே எப்பவும் அதிக நெருக்கம் அக்சரா மீதிருந்தாலும் வருணையும் நெருக்கமாக்கிக் கொண்டார். வருண் எல்லாரிடமும் நேசம் வைத்திருந்தாலும் தாமரை மீது இன்னும் அதிகமான பாசம் வைத்திருந்தார். 'வருணே' என தாமரை அழைப்பதை பெரிதும் விரும்பினார். வெளியேறும் போது கூட தனக்காக - தங்களுக்காக அழுத தாமரையை இருவரும் சமாதானம் செய்ததைவிட மற்றவர்களிடம் அவ ரொம்ப நல்லவ பத்தரமாப் பாத்துக்கங்க என்று சொல்லிச் சென்றார்கள். இதைவிட தாமரைக்கு வேறென்ன வேண்டும்..?

பனிரெண்டு லட்சம் எனப் பணப்பெட்டி காட்டியபோதும் எனக்கு நிறையக் கடனிருக்கு என்பது உண்மைதான்... இப்ப இங்க இருந்ததுக்கு விஜய் டிவி கொடுக்கிற பணத்துல கடனைக் கொஞ்சம் அடச்சிருவேன். மத்ததுக்கு உழைச்சிக்குவேன்னு சொல்லி பணத்தை எடுக்காமல் நின்ற இடத்தில், கோடி ரூபாய் கொடுத்தாலும் எனக்கு இந்தப் பணம் வேண்டாம், கடைசிவரை இங்க இருந்தாப் போதும் என்ற எண்ணமெல்லாம் எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. வறுமை நிலையில் இருப்பவருக்கு பணத்தின் மீது ஆசையில்லாது இருந்தது மிகப்பெரிய விஷயம்.அது தாமரையிடம் இருந்தது சிறப்பு.

இவருக்காக இவர் என விஜய் டிவி பிக்பாஸில் பலரைக் காவு வாங்கித்தான் சிலரை மேடையேற்றும், அப்படிச் செய்திருந்தால் தாமரையும் மேடையேறி இருப்பார். இதே வேறு யாராவது வெளியேறக்கூடும் என்றிருந்தால் செய்திருக்கக் கூடும், தாமரை இருந்தது போதுமென நினைத்திருக்கலாம். கமலுக்கு கூட தாமரை போவதில் உடன்பாடில்லை என்பதை அவர் திரும்பத் திரும்பச் சொன்னதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றாலும் எல்லாமே முன்முடிவுதான் எனும் போது தாமரை வெளியானதில் வருத்தத்துக்கு இடமில்லை எனலாம்.

நாடகத்துறை மக்களுக்காக நானிருந்தேன் என்று சொல்லும் தாமரைக்கு இனி மீடியாக்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கும், வருண் சொன்னதைப் போல் அவர்களது நிறுவனத் தயாரிப்பில் சில படங்களில் நடிக்க வாய்ப்புக்கூட கிடைக்கும். விஜய் தொலைக்காட்சி நாடகங்களில் கூட தலைகாட்டலாம். இதெல்லாம் தாமரையின் வளர்ச்சிக்கானதாய் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் நாடகத்துறையின் இனி வாய்ப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. 

சூப்பர் சிங்கரில் வந்த முத்துசிற்பி, விஜய் டிவியில் பாடுவதற்கு முன்னர் மேடைகளில் பாடியவர்தான், சிறப்பான நாரதராக, வேலனாக நடித்துத் தன்னை முன்னிறுத்தி இருந்தவர், விஜய் டிவியில் தலைகாட்டியபின் சூப்பர் சிங்கர் முத்துச்சிற்பியானபோது மேடைகளில் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைந்து போனது என்பதே உண்மை. அதே போல்தான் நாடகங்களில் தன் நடனத்தால் கலக்கிய தாமரை இனி பிக்பாஸ் தாமரையாகும் போது நாடக வாய்ப்புக்கள் அதிகம் கிடைப்பதில் சந்தேகமே. தனக்கு இங்கு கிடைத்த நற்பெயருடன் வருண் போன்றோர் காட்டும் ஆதரவில் பற்றிப் படர்ந்து தனக்கான வாழ்வை அவர் சிறப்பாக அமைத்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பிக்பாஸில் வந்தார் என்பதாய் அவர் கதை முடிந்துவிடும்.

நேற்று வருணிடம் பேசும்போது ஜெயிச்சிட்டு வாறேன் என்றவர், வெளியேற்றப்பட்டபோது ரொம்பவே மனம் கலங்கி இருந்தார். என் அம்மாவுக்குக்கூட நான் முத்தம் கொடுத்ததில்லை, இவளுக்கு நான் கொடுப்பேனென ராஜூ சொல்லி, முத்தம் கொடுத்தபோது ரொம்பவே கலங்கினார். எல்லாருமே கலங்கினார்கள். போகும் போது 'நீதான்டா என்னோட மூத்த மகன்' என ராஜூவின் தலை முடியை கலைத்துச் சொன்னது, நீ என்னை விட்டுத் தூரம் போனாலும் நான் உன் பின்னே அன்னையாய் வருவேன் என்பதாய் இருந்தது. நெகிழ்ச்சியான விஷயம் அது.

தன்னைப் பற்றிய தொகுப்பு படமாய் காட்டப்பட்டபோது அவர் முகத்தில் காட்டிய பரவச உணர்ச்சிகள் சொல்லாமல் சொல்லின. 'என்னய நான் இதுவரைக்கும் டிவியில பாத்ததில்லை சார்' என்று கண் கலங்க அவர் சொன்னபோது அவரின் வெள்ளந்தி மனம் எல்லாரையும் கவர்ந்தது. வெற்றி தோல்வி பெரிதல்ல மக்களின் மனதை வென்றவர்களில் முதலில் நிற்பவர் தாமரைதான்.

தாமரை தமிழகத்தில் மலராது என்று சொல்லிக் கொண்டிருப்போர் மத்தியில் இந்தத் தாமரை மலர்ந்தே தீர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

வெல்வாய் தாமரை.

-'பரிவை' சே,குமார்.

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி