பிக்பாஸ் தொன்னூறு நாட்களைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 50 பதிவுகள் எழுதியிருக்கிறோம் தமிழ்டாக்ஸ் தளத்தில்... உண்மையிலேயே தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருப்பவர் தமிழ்டாக்ஸ் தளத்தின் இணையாசிரியர் சிவமணிதான்... இப்ப இருக்கும் ஏழு பேரில் ஆரிக்கே வெளியில் வாக்குகள் அதிகம் கிடைப்பதைப் பார்க்கலாம்... ஆனால் வீட்டுக்குள் எல்லாருக்குமே பிடிக்காத ஒரு மனிதர் என்றால் அது ஆரிதான்.
ஆரியை எதிர்ப்பவர்களில் பாலா எதிர்ப்பதும் அதன்பின் வெளியில் இருக்கும் ஆரி ஆர்மியால் தனக்குப் பாதிப்பு வந்து விடுமோ என்ற எண்ணத்தில் மன்னிப்புக் கேட்பதுமாய் விளையாட்டு உக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது வெளியில் ஆரி ஆர்மியால் விஷப்பாட்டில் / விஷப்பூச்சி என்று அழைக்கப்படும் ரம்யா, ஆரியை எதிர்ப்பதால் ஆரம்பத்தில் இருந்த மதிப்பு வெளியில் குறைந்து கொண்டிருக்கிறது என்பதை அம்மாவும் தம்பியும் கோடிட்டுக் காட்டிவிட்டு சென்ற நிலையில் சென்ற வாரம் போனில் பேசியவரும் நேரடியாகச் சொல்லிய போதும் ஆரி உள்ளே தவறு செய்து விட்டு மக்கள் மத்தியில் தான் யார் என்பதை வெளியில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிக் கொண்டே விளையாடும் நிலையில் தன்னை ஆரிக்காக மாற்றிக் கொண்டு இறுதிக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை மனதில் கொண்டு ஆரி எதிர்ப்பு நிலையை இன்னும் அதிகமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது... இவர்களைப் பற்றி முடிந்தால் விரிவாக எழுதலாம்.
எதிர்சேவை வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது... முதல் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது மகிழ்ச்சி என்றால் அதற்கு தஞ்சைப் பிரகாஷ் விருது கிடைத்திருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. தம்பி நௌஷாத் எதிர்சேவை குறித்துத் தனது உன் குழாய் (You tube) சேனலான 'SPICY MIXTURE' மிக அழகான விமர்சனம் கொடுத்திருக்கிறார். ரொம்ப நாளைக்கு முன்னாலேயே போட்டதுதான் என்றாலும் இப்போதுதான் பதிய நேரம் கிடைத்திருக்கிறது. முடிந்தால் அந்த ஆறு நிமிட வீடியோவைப் பாருங்கள். விருப்பம் உள்ளவர்கள் Subscribe பண்ணிக்கங்க... நல்ல வீடியோக்கள் போடும் ஒரு ஆர்வமுள்ள எழுத்தாளன்.
ஜோதிஜி அண்ணனின் எழுத்து எப்பவும் பல விபரங்களுடன் மிகப் பெரிய பதிவாக வரும்... வலைப்பதிவர்களில் அதீத தரவுகளுடன் சிறப்பான பதிவெழுதும் சிலரில் அண்ணனும் ஒருவர்... இவரின் 'JO PECHU U' என்னும் உன் குழாய் சேனலில் நல்ல நல்ல பதிவுகளாகப் பதிகிறார். ஒரு விஷயத்துக்குத் தேவையான தரவுகளுடன் அழகாகப் பேசுகிறார். வீடியோக்கள் பெரும்பாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் என்றாலும் அவர் சொல்லும் செய்திகள் கண்டிப்பாக கவனித்துக் கேட்க வேண்டிய முக்கியமானதாக இருக்கும். முடிந்தால் அங்க போய் வீடியோக்களைப் பாருங்கள்... Subscribe பண்ணுங்க.
சகோதரர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் மீண்டும் அதை ஞாபகத்தில் கொண்டு வந்து அண்ணே புத்தகமாக்குறோம்... பிடிஎப் தயாராயிடுச்சு... அனுப்புறேன்... எழுத்துப்பிழை ஒரு முறை பார்த்துடுங்க... அப்படியே ஐயாக்கிட்ட ஒரு வாழ்த்துரை வாங்கிருங்க என்றார். எழுத்துப்பிழை திருத்திக் கொண்டே, கொஞ்சம் சின்னச் சின்னதாய் மாற்றம்... குறிப்பாய் 'ஏலா' என்று வரும் வார்த்தையை அதிகமில்லாமல் சில இடங்களில் மட்டும் வருவதாய் வைத்து மாற்றினேன்.
ஐயாவிடம் வாங்க வேண்டும் என்றால் நான் ஊரில் இருந்தால் தினமும் வீட்டுக்குப் போய் தொந்தரவு பண்ணி வாங்கிவிடலாம்... இப்போது அவர் தினமும் ஏதாவது ஒரு வேலை, ஒரு நிகழ்ச்சி என அலைந்து கொண்டிருக்கும் நிலையில் எப்படி வாங்குவது என்ற யோசனை... அப்போதுதான் ஐயாவிடம் சொல்லி, வாங்க முடியாமல் போனால் இந்த நாவலைப் புத்தகமாக்கினாலும் ஒரு மகிழ்வு இருக்காது என்ற யோசனையுடன் மேகலாவிடம் சொல்லி, தசரதன் எனக்கு அனுப்பிய பிடிஎப்பை அனுப்பிக் கொடுத்தேன்.
அந்தச் சமயத்தில் ஐயாவுக்கு உடல் நலம் வேறு சரியில்லை... இருந்த போதும் மேகலா அதைப் பிரிண்ட் போட்டுக் கையில் கொடுத்து மறு வாசிப்புச் செய்ய வைத்து, ஐயாவிடம் எழுதி வாங்கி, அவர் எழுதியதையே போட்டோ எடுத்து முகநூலில் அனுப்பி வைத்தார். ஆறு பக்கங்கள் எழுதியிருந்தார்... டைப் பண்ணியபோது இரண்டு பக்கங்கள் வந்தது. உண்மையில் பெரும் மகிழ்ச்சி எனக்கு... அவர் திட்டவும் செய்யலாம்... அணைத்துக் கொள்ளவும் செய்யலாம் அதற்கான உரிமை அவரிடம் என்று தேவி பவனத்துக்குள் அந்த வீட்டுக்குள் மாணவனாய் (அதன்பின் மகனானேன்) நுழைந்தேனோ அப்போதிருந்து இருக்கிறது. சின்னதாய் ஒரு கொட்டுக் கொட்டிவிட்டு அதீதமாய் அணைத்துக் கொண்டிருக்கிறார் எழுத்தில்... இதில் மேகலைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஆம் வேரும் விழுதுகளும் விரைவில் புத்தகமாகும் ஐயாவின் வாழ்த்துரையுடன்.
ரொம்ப நாளாச்சு படம் பார்த்து, மதியம் நண்பர் ஒருவர் சொன்னார் என்பதால் நானி, பூமிகா, சாய்பல்லவி நடித்த 'மிடில் கிளாஸ் ஆம்பள' என்னும் தெலுங்குப் படம் பார்த்தேன். புதிய படம் இல்லை... 2017-ல் வந்த படம். அண்ணியின் வரவால் தனக்கும் அண்ணனுக்குமான உறவு பாதிக்கப்பட்டுவிட்டது என எண்ணும் கொழுந்தன், அண்ணி அவனை வீட்டு வேலைக்காரன் போல் வைத்திருப்பதாய் நினைத்து அவளுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறான்.
தன்னை அவள் தனது பிள்ளையாய் பார்க்கிறாள் என்று தெரிய வரும்போது வில்லனின் வருகை... அதன்பின் மோதல்... வில்லனுக்கும் அவனுக்கும் ஒரு போட்டி... அதற்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சாய்பல்லவியுடன் ஒரு பக்கம் காதல் என படம் விறுவிறுவென நகர்கிறது. பொறுமையைச் சோதிக்கும் படமெல்லாம் இல்லை... ரன் படம் போல் விறுவிறுப்பாக நகரும் படம்தான்... விரும்பம் இருப்பின் பார்க்கலாம்... உன் குழாயில் இருப்பதாகச் சொன்னார்... நான் TAMIL GUN -ல் பார்த்தேன். நல்ல படமும் கூட.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வாசிக்கலாமென அலுவலகம் செல்லும் போது பேருந்தில் 'காவல் கோட்டம்' வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. 900 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. முதல் நூறு பக்கம் முடித்திருக்கிறேன். மாவீரன் விஸ்வநாதனின் பின்னே நகர்ந்து கொண்டிருக்கிறேன்... ஆரம்பத்தில் பேசும் வரலாற்றில் பெயர்கள் எல்லாம் புதிதாய் இருந்தது குழப்பமாய் இருந்தது. இப்போது கதையோடு ஒன்றிப் பயணிக்க முடிகிறது. சேர, சோழ, பாண்டியர்களின் கதைகளை மட்டுமே வாசித்த நிலையில் கிருஷ்ணதேவராயரின் அரசவைக்குள் செல்வதும் வித்தியாசமாய் இருக்கிறது.
அண்ணே போன வருடம் ஒரு நாவல் எழுதினீர்கள்... சிறுகதைகள் எழுதுவதைக் குறைத்து விட்டீர்கள்... பிக்பாஸ் எழுதுகிறேன் என எல்லாத்தையும் மொத்தமா ஏரக்கட்டிட்டீங்க... அடுத்து எதாவது எழுதுங்க எனச் சகோதரர் ராஜாராம் புதுவருடம் பிறக்கும் முன்னரே போன் பேசும்போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்... புது வருடத்தில் அடுத்த நாவலை ஆரம்பித்து வைத்திருக்கிறேன்.. ஒரு கோவில் - இரு கிராமம் இதைவைத்து நகர்த்தலாம் என்ற எண்ணம்... கொண்டு சென்று கும்பாவிஷேகம் செய்கிறோமா அல்லது மொட்டைக் கோபுரமாக நிறுத்தி விடுகிறோமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்... அதிலிருந்து கொஞ்சமாய் நீங்க வாசிக்க...
கோவில் கட்டுவோம்ன்னு சொன்னது இராமசாமித் தேவருன்னாலும் அதிகமாப் பணம் போட்டது நம்ம ராசகோபாலு இருக்கானுல்ல அவனோட அப்பனுக்கு முப்பாட்டனாம்... எல்லாம் பர்மாச் சம்பாத்தியம்... கல்கோவிலாவே கட்டியிருக்காங்க... நம்மாளுக அதிகமாப் பணம் போட்டதால மொத மரியாதை நம்ம ஊருக்குத்தான்னு இருந்துச்சு... அது காலப்போக்குல அவுக கை ஓங்கினப்போ எங்களுக்குத்தான் மொத மரியாதைன்னு நின்னப்போ நம்மூரு காசிப்பயலோட அப்பனுக்கு ஐயா கருப்பையா, பெரும்போக்கான ஆளு... பின்னாடிக் கொரச்சிக்கிட்டு வந்த நாயை கையில இருந்த அரிவாளால வெட்டி வீசினவருன்னு சொல்லுவாங்க... அந்தாளுதான் எங்க மரியாதைய விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிச் சண்டை போட்டிருக்காரு... அத்தோட கோயிலு... திருவிழா எல்லாமே போச்சு.
செதம்பரம் செட்டியாருதான் கோயிலைக் கட்டிக் கொடுத்தாருன்னும் சொல்லுவாங்க... ஆனா யாரு கட்டுனான்னு தெரியல... நம்மூரு காவல் தெய்வம் கருப்பன் ஊருக்கு வெளியே இருக்கது நியாயம்... அய்யனாரை எதுக்கு அங்க போயி வச்சாங்கன்னு தெரியல.... இருந்தாலும் பெரும்பாலான அய்யனாரு கோவில் கம்மாக்கரையிலதானே இருக்கு... அதுனால கூட இருக்கலாம்... இப்ப அப்ப ரெண்டு ஊருக்கும் இடையில விவசாயம் அது இதுன்னு எப்பவும் ஒரு தொடர்பு இருந்திருக்கும் அதனால அங்க கட்டியிருப்பாங்க.
பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி...
-'பரிவை' சே.குமார்.
அண்ணன் ஜோதிஜி உட்பட குறிப்பிட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
பதிலளிநீக்குநல்ல குறிப்புகள். வாழ்த்துகள் குமார்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
பதிலளிநீக்குபெருமையாக நினைவுகூறப்பட்டுள்ள விதம் அருமை.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள். உன் குழாய் - தமிழ்! ஹாஹா... யூவே பழகிவிட்டது - உன் குழாய் வித்தியாசமாகத் தெரிகிறது குமார்.
பதிலளிநீக்குஉங்களுடைய ஆக்கங்கள் புத்தகமாக வெளிவர வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் நூல்கள்.