கொரோனாவின் வருடமான 2020-ன் ஆரம்பத்தில் ஊருக்கு வரும்போது இங்கு மிகப்பெரிய பிரச்சினை... அதிலிருந்து வெளிவந்து அதன் பின் ஊருக்கு வந்தபின் உடல் நிலையின் காரணமாக தேவகோட்டைக்கும் மதுரைக்கும் அலைந்ததுதான் மிச்சமாய் இருந்தது.
மீண்டும் இங்கு வந்து பத்து நாளில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக வீட்டில் இருந்து வேலை என்றாகி பாதி சம்பளத்தில் வந்து நின்று அது இன்று வரை தொடர்கிறது. இத்துடன் பணப்பிரச்சினை என்பது பெரும் பூதமாய் நின்று சிரிக்க ஆரம்பித்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது.
விடுமுறை நாட்களிலும் வேலை வாங்கினாலும் சம்பளத்தை மட்டும் இன்னும் பழையபடி கொடுக்கும் மனநிலையில் கம்பெனி இல்லை... கேட்டால் இப்போது புராஜெக்ட்டே இல்லை... உங்களை ஊருக்கு அனுப்பக் கூடாதென்பதால்தான் இந்தப் புராஜெக்ட்டை அடிமாட்டு விலைக்கு எடுத்திருக்கிறோம் என்று பெரும்கதை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்... தினமும் மோதினாலும் முடிவில் வேலை நேரத்தையும் தாண்டி வேலை பார்த்து வீடு வர இரவு எட்டு, ஒன்பது மணி ஆகிவிடுகிறது. இது இன்னும் தொடர்கதை ஆகிறது.
வேலை, பிரச்சினைகள் எனச் சுழன்றடித்த 2020 எழுத்தில் எனக்கென ஒரு பக்கத்தை அழகாய் எழுதி வைத்தது என்பதை மகிழ்வுடன் சொல்லலாம்.
ஆம் வருட ஆரம்பத்தில் பல வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்திருந்த புத்தகம் கொண்டு வரும் ஆசை நண்பர்களின் முயற்சியால் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் வடிவில் மலர்ந்தது. இதில் இன்னொரு மகிழ்வென்பது அதன் தலைப்பும் புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பும்தான்... எங்கள் குல தெய்வமான அழகர் வைகையில் இறங்க வரும்போது நடக்கும் முக்கிய நிகழ்வான எதிர்சேவை புத்தகத்தின் தலைப்பாகவும்... அழகர் ஆற்றில் இறங்குதல், அழகர் கோவில் கோபுரம் என அட்டைப்படமும்... மனசுக்கு மகிழ்வாய்...
அதேபோல் எழுத்தாளர் சுப்ரஜா கொண்டு வந்த டிஜிட்டல் பொங்கல் மலரின் எனது கதையும் வெளியானது. பல போட்டிகளில் சிறுகதைகள் பரிசுகளைப் பெற்றன.. நிறைய கதைகளை போட்டிகளுக்காகவே எழுதினேன் என்றும் சொல்லலாம்.
யாவரும்.காம், வாசகசாலை போன்ற பிரபல இணைய இதழ்களில் கதை வெளியாவது என்பது கனவு அந்தக் கனவு நனவானது. அதுவும் இரண்டிலும் வெளியான கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது,
மின்கைத்தடி, சஹானா , கதிர்ஸ், சிறுகதைகள்.காம், மகாகவி, தேன் சிட்டு, முத்துக்கமலம், அகல், காற்றுவெளி போன்ற இதழ்களில் கதைகள் தொடர்ந்து வெளியாகின.
மகாகவி, புத்தகம் பேசுது போன்றவற்றில் நூல் விமர்சனம் வெளிவந்தது.
யாவரும்.காம் க.நா.சு. சிறுகதைப் போட்டியில் எனது கதையும் பரிசுக்குரிய பத்துக் கதைகளில் ஒன்றாய்த் தேர்வானது.
கலக்கல் ட்ரீம்ஸ் தளத்தில் சிறுகதைகள் எழுதும் வாய்ப்புக் கொடுத்த தசரதன், முதல் முதலில் ஒரு நாவலை இணையத்தில் எழுதும் வாய்ப்பையும் கொடுத்தார். ஆம் சில உண்மை நிகழ்வுகளை வைத்து எழுதிய கறுப்பி நாவலுக்குத் தளம் அமைத்துக் கொடுத்தார். கறுப்பிக்கு நல்லதொரு வரவேற்புக் கிடைத்தது.
சஹானா இணைய இதழ் நடத்திய தீபாவளிப் போட்டியில் மூன்றாவது பரிசாக ஷீல்டு வீடு வந்து சேர, பரிசுக் கூப்பனும் சென்ற வாரத்தில் வந்து சேர்ந்தது.
பாரத் ரைட்டர்ஸ் என்னும் தளத்தில் மூன்று கதைகள் பகிரப்பட்டன... அதற்குக் கிடைத்த வருமானம் இன்னும் சில நாட்களில் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும் எனச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.
எங்கள் அமீரக எழுத்தாளர்கள் குழுமத்தின் கானல் இணையவழிக் கூட்டங்களுக்குப் பின் அது குறித்து எழுதுவது வழக்கம்... அப்படி எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் பேசியதை எழுதிய போது, அதை வாசித்து விட்டு அவர் ஊரில் இருந்து கூப்பிட்டுப் பேசியது மனசுக்கு மகிழ்வைக் கொடுத்தது.
சகோதரர் நந்தகுமார் ஜூம் கூட்டத்தின் மூலம் எதிர்சேவைக்கு ஒரு அறிமுக நிகழ்வை ஏற்படுத்தினார். அதில் தங்கை சுடர்விழி மிகச் சிறப்பாக புத்தகம் குறித்துப் பேசினார்.
கணேஷ்பாலா அண்ணன் வைத்த படத்துக்குக் கதை எழுதும் போட்டியில் மூன்றாவது பரிசு கிடைத்தது.
எதிர்சேவை குறித்து எழுத்தாளர்கள் கோபி சரபோஜி , ஆர்.வி. சரவணன், சகோதரர்கள் ராஜாராம், பால்கரசு, தங்கை சுடர்விழி, திரு.விசாகன் மற்றும் பலர் எழுதியிருந்தார்கள்.
சகோதரர் நௌஷத்கான் தனது யூடிப் சானலில் எதிர்சேவைக்கு விமர்சனம் செய்திருந்தார்.
ஊரில் சகோதரி பாரதி நெருடாவின் அம்மா எதிர்சேவையை வாசித்து என்னுடன் பேசிய தருணங்கள், ராஜாராமின் மகள் புத்தகத்தை வாசித்து அனுப்பிய போட்டோ என எல்லாமே மனசுக்கு நிறைவாய் இருந்தது.
ஊரில் இருந்து வந்த பின் தனிமையைப் போக்கும் விதமாக வேரும் விழுதுகளைப் போல் ஒரு நாவல், கிட்டத்தட்ட 350 பக்கங்களில் எழுதி முடித்தேன்.
இந்த முறை பிக்பாஸ் எழுத மகாகவியின் தமிழ்டாக்ஸ் என்னும் இணையத்தளத்தில் சகோதரர் சிவமணி எனக்கு வாய்ப்பளித்து, தொடர்ந்து எழுதவும் வைத்துக் கொண்டிருக்கிறார்.
எழுத்தாளர் கரன்கார்க்கி அவர்களின் கறுப்பர் நகரம் குறித்து எழுதியதால் அவருடன் ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவரின் வெளிவர இருக்கும் நாவலான 'சட்டைக்காரி'யை அவரின் பேனா பிரசவித்த சூட்டோடு படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதெல்லாம் நினைத்துப் பார்க்காத ஒன்று... எழுத்தே என்னை அங்கு கொண்டு நிறுத்தியது எனலாம்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாய் தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் வளரும் படைப்பாளர் விருதை எனது 'எதிர்சேவை' சிறுகதை தொகுப்பு பெற்றிருக்கிறது.
வேரும் விழுதுகளும் நாவல் புத்தகமாகும் முயற்சியில் நான் யாருடைய எழுத்துடன் அது வெளிவர வேண்டுமென நினைத்தேனோ அவர் இன்று எழுதி அனுப்பியிருப்பது இந்த வருடத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சியாய்...
வாழ்க்கையின் பக்கம் வச்சிச் செஞ்சிருந்தாலும் எழுத்தின் பக்கம் ஏற்றத்தையே கொடுத்திருக்கிறது கடந்து சென்ற 2020.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2021) வாழ்த்துகள்.
-'பரிவை' சே.குமார்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாராட்டுகள்! எழுத்துத் துறையில் மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபிரச்சனைகள் தீர்ந்து வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டுமாக! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
வேலைக் கஷ்டங்கள் இந்த வருடம் விரைவில் தீர பிரார்த்தனைகள். எழுத்துலகின் வெற்றிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த ஆண்டில் அனைத்து துயரங்களும் தீரட்டும்...
பதிலளிநீக்குஎழுத்தில் சிகரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குஉங்கள் படைப்புகள் சில படித்திருக்கிறேன், அனைத்தையும் அல்ல. ஆமாம், இப்போ வேலைப்பளு பன்மடங்காகி இருக்கின்றது. புத்தாண்டு நலமே தரட்டும்.
இன்னும் பல பல சிறப்பான படைப்புகள் படைத்திட எனது வாழ்த்துக்களும் ...
பதிலளிநீக்கு2020-ஆம் ஆண்டின் மகிழ்வான, சாதனையான தருணங்களை அருமையாக விளக்கினீர்கள்!
பதிலளிநீக்குஎனக்கும் மகிழ்ச்சி!!!
எழுத்துரு ஃபாண்ட் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது! அருமை!!!