எஸ்.பி.பி...
இந்த மூன்றெழுத்து நம் தலைமுறையை இசைக்குள் கட்டிப் போட்டது என்றால் மிகையில்லை. பாடல்களுக்குள் பல சங்கதிகளைப் புகுத்தி நம்மை அதற்குள் ஈர்த்த குரலின் முகவரி. இது இன்னும் பல தலைமுறைகளைக் கட்டிப் போடப்போகிற மந்திரம் இந்த எழுத்து.
சின்ன வயது முதலே சினிமாப் பாடல்கள் மீது அதீத காதல்... அப்போதெல்லாம் வீட்டில் மின்சார விளக்கு கூட இல்லை... அரிக்கேன் விளக்குத்தான்... வீட்டில் பேட்டரியில் இயங்கும் நேஷனல் ரேடியோதான் இருந்தது... இலங்கை வானொலியிலும் திருச்சி, விவிதபாரதி என எதில் பாடல் ஒலித்தாலும் அதைச் சத்தமாக வைத்துக் கேட்பதே பிடிக்கும்.
என்னைப் பொறுத்தவரை படிப்பதோ, எழுதுவதோ எதுவென்றாலும் பாட்டு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். அது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சின்ன வயதில் இருந்தே இளையராஜாவின் இசை மீது காதல்... அந்த இசையும் எஸ்.பி.பியின் குரலும் எப்போதும் மனசுக்குள் வசீகரமாய் இருந்து கொண்டேயிருக்கும். கல்லூரியில் படிக்கும் போது எவ்வளவு 90 கேசட்டுகள் பதிவு செய்து வைத்திருந்தேன்... அதிலும் பழைய பாடல்களே நிறைய இருக்கும்.
இளையராஜா இசை பிடித்துப் போகக் காரணம் பேருந்து வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து உறுமி, நையாண்டி, தப்பு, மேளம், நாதஸ்வரம், கொம்பு எனத் திருவிழாக்களில் கேட்டு வளர்ந்ததால் அந்த இசை மீது தனிப்பட்ட காதல் ஏற்பட்டிருக்கலாம். அந்த இசை கொடுத்த காதலால் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் எனப் பாடகர்கள் மீதும் காதல் வந்திருக்கலாம்... ஆனாலும் ஏனோ மற்றவர்களை விட எஸ்.பி.பியே இதயத்துக்குள் இயக்கமாய் நின்று கொண்டார்.
இளையராஜாவால் ஒன்றும் எஸ்.பி.பி. பெரியாளாகவில்லை... இசையில்லாமல் அவர் பாடியிருந்தாலும் நாங்க அவரை ரசிப்போமெனச் சொல்வதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்... எம்.எஸ்.வி.தான் எஸ்.பி.பி.யின் இந்த வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் என்பது உண்மைதான்... இதை எஸ்.பி.பியே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். நாமெல்லாம் எம்.எஸ்.வியைக் கேட்டு வளரவில்லை... பிறந்ததில் இருந்தே ராஜாவின் பாடல்கள்தான்... நம்மைப் பொறுத்தவரை ராஜாவும் எஸ்.பி.பியும் தனித்தனியில்லை... எஸ்.பி.பி இந்த உயரத்தை அடைய ராஜாவும்... ராஜாவுக்கான ராஜாங்கம் அமைய எஸ்.பி.பியும் முக்கியக் காரணிகள்தான் என்பதை இருவருமே மறுக்கவும் மறக்கவும் முடியாது.
ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் குரலைப் போலவே பாடுதல் என்பது எஸ்.பி.பியின் கூடுதல் சிறப்பு. அதுதான் அவரைத் தனித்துவமாய்க் காட்டியது. எத்தனை உயரம் போனாலும் அடுத்தவரை மதிக்கும் குணமும், மற்றவர் மீதான மரியாதையும் அவரிடத்தில் இருந்ததாலேயே இத்தனை சிறப்புக்களையும் அவர் அடைந்தார் என்று சொல்லலாம். உடலில் சோர்வு கண்டாலும் இறுதிவரை குரலில் மட்டுமே சோர்வைக் காணாத குதூகலக் குரல் என்பது அவருக்கு ஒரு வரப்பிரசாதம்... அதுவே 42000 பாடல்களுக்கு மேல் பாட வைத்திருக்கிறது. இப்போதெல்லாம் சில பாடல்கள் பாடி முடித்தவுடன் ஆளோ அல்லது குரலோ காணாமல் போய்விடுகிறது.
இளையராஜா என்ற ஒரு இசையமைப்பாளர் மட்டுமே அவருக்கான பாடல்களைக் கொடுக்கவில்லை எத்தனையோ இசையமைப்பாளர்கள் கொடுத்திருக்கிறார்கள்... எவ்வளவோ நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தாலும் நாம் ரசிக்கும் 80,90களின் பாடல்களில் பெரும்பாலும் ராஜாவின் இசைதான். அது ஒன்றால்தான் நாம் ராஜாவையும் எஸ்.பி.பியையும் பிரித்துப் பார்க்க மறுக்கிறோம்.
எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் என்றால் 'உனக்கென்ன மேலே நின்றாய்...'தான். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். இது மட்டுமில்லை இன்னும் நிறையப் பாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன... விரல் விட்டு எண்ணிச் சொல்ல முடியாத கணக்கு அவை.
நேற்று முதல் அவரின் பாடல்கள், பேட்டிகள் என்று பார்த்து, கேட்டாலும் ஏனோ மனது ஒரு நிலையில் இல்லை... அதிக நேரம் கேட்கவும் முடியவில்லை... குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல மனசு தவிக்கிறது.
இன்றைய அவரின் இறுதி யாத்திரையை தந்தி டிவியில் பார்த்த போது அவர்கள் பகிர்ந்து கொண்ட பாடல்கள் எல்லாமே கண்ணீரை வரவைத்துவிட்டது. அதுவும் 'போகுதே.... போகுதே...' பாடலும் 'அன்பைச் சுமந்து சுமந்து...' பாடலும் ஒலிபரப்பான போது என்ன சொல்வதென்றே தெரியாத நிலை... ஒரு கலைஞனாய் என்பதைவிட மனிதனாய் அவர் நம் மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை.
எத்தனை பாடகர்கள் வந்த போது எஸ்.பி.பி. பாடல் என்றால் அது பிடித்த படமோ பிடிக்காத படமோ பாடலை மீண்டும் மீண்டும் கேட்கச் சொல்லும்... அதுதான் அந்தக் குரலின் வசீகரம். இனி பாடல்களாய் மட்டுமே நம்மை வாழ்நாளெல்லாம் வசீகரித்துக் கொண்டிருக்கும்.
அலுவலக நேரத்தில் பெரும்பாலும் மனநிலைக்குத் தக்கவாறு பாடல்கள் கேட்டுக் கொண்டுதான் வேலை பார்ப்பேன். பெரும்பாலும் ராஜா இசையில் இராமராஜன், கார்த்திக், முரளி, பிரபு எனவும் எஸ்.பி.பி. மனோ, ஜெயச்சந்திரன், சுரேந்தர் ஹரிகரன், சுவர்ணலதா, சித்ரா, ஜானகி, சுசிலா, சைலஜா, ஜென்சி எனவும் பாடல்களைக் கேட்பதுண்டு. அதேபோல் தேவா பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு.
ஒருநாள் தேவா, எஸ்.பி.பி கலெக்சன் ஒன்று கிடைக்க, அதைக் கேட்டது முதல் தினமும் அதுதான்... பல பாடல்கள் ராஜாவின் பாடல்கள் என்று நினைத்தவை... அற்புதமான கலெக்சன்... ரசித்துக் கேட்டுக் கொண்டு வேலை செய்யும் போது வேலையின் கடினமும் தெரிவதில்லை... நேரம் போவதும் தெரிவதில்லை... அத்தனை சுகமான பாடல்கள்... இனி அந்தப் பாடல்களைக் கேட்கும் போது என்னை அறியாமல் அழுதுவிடுவேன் என்றே தோன்றுகிறது. சில நாட்களுக்கு அந்தப் பாடல்கள் பக்கம் போகாமல் இருப்பதே நல்லது.
எந்த இசையமைப்பாளருக்கும் குறை வைக்காத ஒரு பாடகன்... தன்னளவில் ஒவ்வொரு பாடலுக்கும் மரியாதை கொடுத்து பெருமை சேர்த்த கலைஞன். பாடலைத் தெலுங்கில் எழுதி வைத்துப் படித்தாலும் மேடைகளில் தமிழில் பேசி, தன்னை இந்த உயரத்துக்கு அழைத்துச் சென்ற மொழிக்கு மரியாதை கொடுத்த மனிதன். ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியில் பேச ஆரம்பித்தாலும் சிறிது நேரத்தில் தமிழுக்கு மாறிவிடுவதைக் காணலாம். அதுதான் அவரின் குணம். இன்றைக்கு தமிழை மென்று கொன்று பாட்டுப் பாடும் எத்தனையோ மாற்று மொழிப் பாடகர்கள் இருக்கிறார்கள் ஆனால் எஸ்.பி.பி தமிழைப் புரிந்து எப்படிப் பாடவேண்டுமென தனக்குள் சரி பார்த்து 'ழ', 'ள', 'ல' உச்சரிப்பில் தவறே செய்யாமல் பாடியவர். அவரைப் பார்த்துப் பாட வந்தோம் என்பவர்கள் எல்லாம் மொழியின் மீதான அவரின் காதலையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய அவரின் இறுதி யாத்திரையைக் காணும் போது எவ்வளவு பெரிய மனிதனுக்கும் இதுதான் நிரந்தரம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. வைக்கோல் வைத்த பாடை, பாடையில் அவரின் உடலைச் சேர்த்துக் கட்டிய கயிறு, குழிக்குள் இறக்கும் போது சரிவர தூக்காமல் அவரைச் சாய்க்கத் தெரிந்த அவசரக் குடுக்கை மனிதர்கள் என இந்த வாழ்க்கையின் இறுதி இப்படித்தான் என்பதைச் சுட்டிக் காட்டியது. அங்கும் தன் இருப்பைக் காட்டுகிறேன் என ஒரு மனிதர் பண்ணிய கூத்தையெல்லாம் காணும் போது நாம் இன்னும் திருந்த வேண்டும் என்றே தோன்றியது.
ஊடக நண்பர்கள் ஏன் இப்படி அலைகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை... அது ஒரு துக்க வீடு... துக்க நிகழ்வு... அங்கு அழும் பெண்களை எல்லாம் வீடியோ எடுத்து லைவ் போடுவதென்பதெல்லாம் கேவலத்தின் உச்சம். ஆம் நண்பர்களே இது போன்ற நிகழ்வு உங்கள் வீடுகளில் ஏற்படாதா..? அப்போதும் இப்படித்தான் வீடியோ எடுத்துக் கொண்டு திரிவீர்களா..? கொஞ்சமாவது சிந்தித்தீர்களா..? மனதை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வருவீர்களோ...? துக்கத்துக்கு வந்தவர்களிடம் தேவையில்லாத கேள்விகள்...? ஒரு இறப்பின் பின்னே இத்தனை தூரம் ஓடி ஓடி, ஊதாச் சட்டை தள்ளி நில்லு, அங்க ஏறி எடுடா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரியும் நீங்கள் மக்களுக்கான பிரச்சினைகளை சட்டை செய்யாமல் நகர்ந்து போவதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள். விஜய் செருப்பை எடுத்துக் கொடுத்தார் என்பதை பெரிய செய்தியாகப் போடும் நீங்கள் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் நகர்வது ஏனோ...? மீடியா தர்மம் என்பது சினிமாவுக்குள்ளும் சின்னத் திரைக்குள்ளுமே முடிந்து விட்டதா...? இனி பிக்பாஸ் வந்தால் நூறு நாட்களுக்கு உங்களுக்கு ரம்யா பாண்டியன்கள் மட்டுமே தெரிவார்கள், கொரோனாவும் தெரியாது... கொள்ளைகளும் தெரியாது இல்லையா..?
துக்கத்துக்கு வருபவர்களிடம் கேட்கும் கேள்விகள் எல்லாம் இவர்கள் மனிதர்கள்தானா...? இவர்களுக்கு மனமெல்லாம் மரத்துப் போய்விட்டதா..? என்றே எண்ணத் தோன்றியது. குழிக்குள் வைக்கப்பட்ட பின் அந்த முகத்தின் மீது மண்ணள்ளிப் போடுவதைக் குழிக்குள் கேமராவை நீட்டி எடுத்து ஒளிபரப்பி டி.ஆர்.பியை ஏத்தி என்ன செய்யப் போகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை துக்கமோ, சந்தோஷமோ உங்களுக்கான சாப்பாடு கிடைத்தால் போதும்... அழும் மனங்கள் அழட்டுமே... நாம் அள்ளிச் செல்வோம் என்ற மனநிலையை எப்போது மாற்றப் போகிறீர்கள்...? மாறுங்கள் நண்பர்களே... உங்கள் செயல்கள் கேவலத்தின் உச்சம் என்பதை உணருங்கள்... ஒரு காலத்தில் மீடியாவுக்கு இருந்த பெயரை நீங்கள் துவம்சம் செய்து திவசமும் செய்து விட்டீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஜோதிஜி அண்ணன் எழுதியிருந்ததைப் போல் ஒரு ஐந்து வருடம் முன்னரே தன் பண்ணை வீட்டில் போய் ஓய்வெடுத்திருந்தால் அவர் இன்னும் சில காலங்கள் இருந்திருப்பார்... எழுபத்து நான்கு வயதிலும் உழைக்க வேண்டிய நிலையில்தான் அவர் இருந்திருக்கிறார் என்பதே கொடுமைதான்... அதைவிடக் கொடுமை இந்த அம்பது நாட்களில் அவர் பாடிச் சம்பாதித்ததையெல்லாம் மருத்துவமனைக்குக் கொடுத்தது. இத்தனை செலவு செய்தும் அவர் இன்று உயிருடன் இல்லாத நிலையை நினைத்து வருத்தமே மேலிடுகிறது. உடல் சோர்வைப் பெரிதாகக் கொள்ளாமல் மனதளவில் தனக்குள் ஏற்பட்ட வேதனைகளைச் சுமந்து சுமந்தே இன்று இறந்தும் போயிருக்கிறார்.
கொரோனா வந்ததும் தனிமைப்படுத்தி ராஜாவுடன் பேச விட்டிருந்தாலே குணமாகியிருப்பாரே என ஒரு நண்பர் எழுதியிருந்தார். உண்மைதான்... உற்ற நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசியிருந்தால் கொரோனாவைத் தூக்கி வீசி வெளிவந்திருப்பார்... சமீபத்தில் கங்கை அமரனுடன் ஜூம் கலந்துரையாடலில் அவர் அடித்த லூட்டியைப் பார்க்கும் போது அந்த மனிதர்களுடன் அப்படிப் பேச வைத்திருந்தாலே அவர் பிழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது என்றாலும் விதியின் பலனை மாற்றவா முடியும்..? தொண்டையில் ஓட்டை போட்டு, அம்பது நாட்கள் படுக்கையில் கிடந்தி அந்த மனிதரை படாதபாடு படவைத்தே அனுப்பியிருக்கிறோமே... வேதனை.
எஸ்.பி.பி. என்னும் சகாப்தம் இன்று நிம்மதியாய் உறங்குகிறது.... உலகெங்கும் இருக்கும் அவரின் ரசிகர்கள் அவரின் நினைவுகளோடு உறக்கமின்றித் தவிக்கிறார்கள்... இந்தத் தவிப்புக்கெல்லாம் அவரின் பாடல்களே மருந்தாகும்.... ஆம் இனி அந்தக் குரல் நம்மோடு எப்பவும் பயணித்துக் கொண்டேயிருக்கும். அவரின் பல பாடல்கள் இன்று அவரின் இறுதி யாத்திரைக்குப் பொருத்தமாய் அமைந்து விட்டன.
நேற்று எழுத நினைத்து ஆரம்பித்து ஏனோ மனநிலை எழுதும் நிலையில் இல்லாமல் அழித்து விட்டுப் படுத்தால் உறக்கமேயில்லை... காலையில் எழுத நினைத்தபோது அவரின் இறுதியாத்திரையைப் பார்த்தபின் மனம் வரவில்லை. மாலை எழுதலாம் என நினைத்து அப்போது மனசு இடம் கொடுக்கலை. அதன்பின் பூபதி அண்ணன் சில நாட்கள் முன்னரே இந்த வாரம் சந்திக்க வேண்டுமெனச் சொன்னதால் அவருடன் வெளியில் போய் காபி சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்த பின்னேதான் மனசு எழுத்தின் பக்கம் திரும்பியது.
அமைதியாய் ஓய்வெடுங்கள் எஸ்.பி.பி சார்...
-'பரிவை' சே.குமார்.
தன் குரலால் என்றென்றும் வாழ்வார்
பதிலளிநீக்குபாலு அவர்களுக்கு மரணம் இல்லை...
பதிலளிநீக்குஎன்றும் நம்முடன் வாழ்வார்...
மாட்டுக்காரன் மாட்டுக்காக அழுதபோது வியாபாரி மட்டும் தோலுக்காக அழுதான் - என்று எங்கள் பக்கத்தில் சொல்வழக்கு..
பதிலளிநீக்குஅது இன்றைய ஊடகங்களுக்கு மிகவும் பொருந்தும்...
நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குஊடகங்களின் செயல் - கேவலம்! இவர்களை என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை.
அவரது ஆன்மா நற்கதியடையட்டும்.
நான் தொலைக்காட்சிப் பக்கமே போகவில்லை. பார்க்கும் மனவுறுதி இல்லை. ஜீரணிக்கவே முடியாத இழப்பு.
பதிலளிநீக்குஎன்றும் நம்முடன் அவர் வாழ்வார்.
பதிலளிநீக்குஏன் தான் இப்படி நிகழுகிறதோ நம் நாட்டில்.
பதிலளிநீக்குஊரார் விஷயத்தில் இத்தனை கோரமுகம் காட்ட வேண்டுமா.
செய்தியாளர் துரத்தி மரணத்தைச் சந்தித்தவர்களையும் நமக்குத் தெரியும்.
இறந்தவரின் மானம் மரியாதையைக் காற்றில்
பறக்க விடும் இந்த
மனிதர்களை என்ன சொல்வது.
நான் அவர் பாடல்களைத்தான் ரசிக்கிறேன்.
நம்மால் வேறென்ன செய்ய முடியும் அந்த
அற்புத மனிதருக்கு. மிக நன்றி குமார்.
பாடலே மருந்தாக இருக்கும் போது, அவரின் பாடல் வந்தாலே விவரிக்க முடியாத ஒரு தவிப்பு...
பதிலளிநீக்கு