கடந்த வெள்ளியன்று அமீரக எழுத்தாளர் மற்றும் வாசிப்பாளர்கள் குழுமத்தின் 'கானல்' காணொளி நிகழ்வாக திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுடன் 'எதுவும் கடந்து போகும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்வின் நாயகரைப் பற்றிச் சிறிய அறிமுகத்தைக் கானல் குழும ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஆசிப் அவர்கள் சொல்லி ஆரம்பித்து வைக்க, எழுத்துப் போராளி என்பதைவிட தமிழில் உதித்திருக்கும் நம்பிக்கை இயக்குநர் ராஜுமுருகன் பேச ஆரம்பித்தார்.
ராஜுமுருகன் மீதான சகோதரப் பாசத்தினாலும் அமீரக எழுத்தாளர் குழுமத்தின் மீது வைத்திருக்கும் அதே சகோதரப் பாசத்தினாலும் திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி அவர்களும் நிகழ்வில் இணைந்திருந்தார். அதேபோல் திரு. ரமேஷ் வைத்யா அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார். இவர்கள் இருவரையும் இப்பவே சொல்லக் காரணம் இருக்கு... அது பின்னால் வரும்.
யுகபாரதிக்கு வணக்கம் சொல்லிய ராஜுமுருகன் அவர்கள், யுகபாரதியைச் சந்தித்தது குறித்துச் சொல்லும் போது ஈழத்து எழுத்தாளர் எஸ்போ, தனது வாழ்க்கை வரலாற்றைத் தவம் என்ற பெயரில் எழுதியதாகவும் அதற்கும் யுகபாரதி அவர்கள் உதவியாக இருந்ததாகவும் அப்போதுதான் தனக்கு அவர் பழக்கம் என்றும் கூறினார்.
மனித குலத்தில் ஞாயத்துக்கு இரண்டு பக்கம் ஆனால் தர்மத்துக்கு ஒரே பக்கம்தான்... இதுவும் கடந்து போதும் என்பதைத்தான் நாம் எதுவும் கடந்து போகும் எனப் பொதுவாய் பேசப்போகிறோம். வருத்தங்களைச் சொல்பவர்களை பார்த்தால் நமக்கு ஒத்துவராதென ஒதுங்கி வந்துவிடுவேன் என்றவர், தற்கால அரசியல் குறித்துப் பேசினார். அப்போது கண்ணதாசனின் 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்னும் பாடலை நினைவு கூர்ந்தார். மேலும் 'மனிதாபிமானம் என்பது அழுவதல்ல... போராடுவது' என்ற மாக்சிம் கார்க்கியின் வரிகளை மேற்கோள் காட்டினார். 'மனித ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்னும் ஜி.நாகராஜனின் வரிகளையும் சொன்னார்.
கோரோனா குறித்துப் பேசும் போது கோரோனா இங்கிலாந்துப் பிரதமருக்கும் வரும்... இங்கிருக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் வரும் என்றார்.
அவரின் சொந்த ஊர் குடவாசலுக்கு அருகில் இருக்கும் அபிவிருத்தீஸ்வரம் என்றும் தற்போது அங்கிருந்துதான் காணொலியில் பேசுவதாகவும் சொன்னார். திரைப்பட பாடலாசியர் காமு. ஷெரிப் பிறந்த ஊரும் அதுதான் என்றார். மேலும் மத நல்லிணக்கம், திராவிட இயக்கம் இடது சாரி இயக்கம் பற்றிப் பேசும்போது பாட்டுக்கு நாகூர் ஹனிபா என்றால் பேச்சுக்கு நன்னிலம் நடராஜன் எனச் சொன்னார்.
'த டிபார்ச்சர்' என்னும் ஜப்பானியப் படமே தன்னை பாதித்த படம் என்று சொன்னார். அந்தப் படத்தின் கதை குறித்து விரிவாகப் பேசினார். அயல்நாட்டு சினிமா விருது பெற்ற இந்தப் படத்தின் நாயகன் செல்லோ இசைக்கலைஞன், அவன் அப்பா வேறொருத்தியுடன் சென்றுவிட, அம்மாவே இவனை கஷ்டப்பட்டு வளர்க்கிறாள். அவனால் வாழ்வில் ஜெயிக்க முடியாத சூழலில், திருமணமும் ஆகிவிட, அம்மாவும் அவனும் என்ற வாழ்க்கையில் இப்போது மூன்றாவதாய் மனைவியும்... வேலை தேடி நகரத்துக்குப் போகிறான்... அங்கு கிடைப்பதோ இறந்த உடலை அலங்கரித்து அனுப்பும் டிபார்ச்சர் வேலை... அவன் சார்ந்த சமூகத்தில் சிறுவயதில் அப்பா ஒரு கூழாங்கல்லை பிள்ளைக்கும் அதேபோல் பிள்ளை அப்பாவுக்கும் கொடுப்பதும் அதைப் பத்திரமாக வைத்திருப்பதும் வழக்கம் என்பதால் அவனிடம் அப்பாவின் கூழாங்கல் இருக்கிறது. இதுவரை கதை நன்றாகப் பயணித்தது... அதன் பின் இணையம் இழுத்துக் கொள்ள, அவன் கதையைச் சொல்லி முடித்திருந்தார்.
பேசியது போதும் கேள்வி பதிலாய்ப் பேசலாமே என அவரே தன் உரையை முடித்துக் கொண்டார்.
ராஜுமுருகனுடனான உறவு பற்றி ரமேஷ் வைத்யா பேசினார். அப்போது சோகமான நிகழ்வென்றாலும் அதையும் நகைச்சுவையோடு அணுகுபவர் முருகன் என்றார்.
ரமேஷ் வைத்யாவுடனான பழக்கம் பற்றிச் சொன்ன ராஜுமுருகன் ஆனந்த விகடனில் கா.சீ.சிவக்குமார், அருண், நான் என மூவரும் ஒரே சமயத்தில் சேர்ந்தோம். அப்போது அங்கிருந்த ரமேஷ் அண்ணன் என்னிடம் கலாப்பிரியா கவிதை தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றதும் எங்கே இரு கவிதை சொல்லு என்றார். நானும் பாண்டியாட்டத்தில் என்னும் கவிதையைச் சொன்னேன். உடனே தன் வட்டத்துக்குள் என்னை இணைத்துக் கொண்டார் என்றார் சிரிப்புடன். மேலும் கலாப்பிரியா கவிதையெல்லாம் சொல்றானே இவன் பெரிய ஆளாத்தான் இருப்பான்னு முடிவு பண்ணி பெரியாளா வருவான்னு நினைச்சேன்... இப்ப பெரிய ஆளாயிட்டாலும் இன்னும் அதே அன்போடும் மரியாதையோடும் இருப்பவர் ராஜுமுருகன் என்றார் வைத்யா.
முதல் கேள்வியை ஆசிப் அவர்களே கேட்டுத் தொடங்கி வைத்தார். அவரின் கேள்வியாக ஜிப்ஸி படத்தில் பெண்கள் தொழுவதாய்க் காட்டும் காட்சி பற்றியதாய் இருந்தது. அதில் தவறிருப்பதாகவும் எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து எடுத்த தாங்கள் இதில் கோட்டை விட்டது ஏனோ என்று கேட்டார்.
தான் எடுக்கும் படங்களில் அந்தந்தப் பகுதி மக்களையே நடிக்க வைப்பதாகவும் படம் முழுவதும் நாகூரிலேயே எடுக்கப்பட்டதாகவும் அந்தக் காட்சி எடுக்கும் போது உள்ளூர் ஆசாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் எடுத்ததாகவும் சொன்னார் ராஜுமுருகன். உடனே ஆசிப் அவர்கள் அப்படியானால் அந்த ஆள் என்னைப் போல் தொழுகை முறை சரியாக தெரியாத ஆளாக இருப்பான் போல எனச் ஜோக்கடிக்க, அவரோ அப்படித்தான் இருக்கவேண்டும் எனச் சீரியஸாகவே சொன்னார்.
மேலும் வகிதாவின் அப்பாவாக லால் ஜோஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்..? இங்கு அப்படியான நடிகர்கள் இல்லையா என தன் 'மலையாளக் கரையோர'ப் பாசத்தையும் ஆசிப் அண்ணன் கேள்வியாக்கினார்.
ஒரு முஸ்லீம் மனிதருக்கு உரிய முகம் அவரிடமே இருந்தது என்பதால் அவரைத் தேர்ந்தெடுத்தேன் என்றதும் அப்படித்தான் ஜோக்கர் படத்திலும் பவா செல்லத்துரை நடிக்க வைக்கப்பட்டாரா என ஆசிப் அண்ணன் கேட்க, ஆமாம் என்றார் இயக்குநர்.
அடுத்து கத்தாரில் இருந்து ஷாஜி, விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிப் படமெடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் என்று சொல்லி தன் நண்பன் ஜிப்ஸியில் நாயகியின் அப்பா பாத்திரம் மிகைப்படுத்தப்பட்டதா எனக் கேட்கச் சொன்னதாகவும், தன் கேள்வியாக ஜிப்ஸியில் தற்கால அரசியல் பேசியதால் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் என்ன என்றும் கேட்டார்.
முதல் கேள்விக்கு பதிலாய் அந்தப் பாத்திரம் எந்த விதத்தில் மிகைப் படுத்தப்பட்டிருந்தது என்பதைச் சொல்லுங்கள் என்றதும் அது நண்பன் கேட்கச் சொன்னது... எனது கேள்விக்கு வாருங்கள் என இல்லாத நண்பனை விரட்டிவிட்டார்.
தற்கால அரசியல் பேசும் போது படத்திற்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது எல்லாருக்கும் தெரியும்... அந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாமே தயாரிப்பாளர் பார்த்துக் கொண்டார். குஜராத் கலவரம், அசோக் மொர்ஜி பற்றியெல்லாம் விரிவாகப் பேச வேண்டிருந்தாலும் எதிர்க்கொள்ள வேண்டிய சவால்கள், வியாபார ரீதியிலான பாதிப்புகள் என எல்லாவற்றையும் மனதில் வைத்துதான் படம் எடுக்க வேண்டியிருந்தது என்றார்.
செண்டிமென்டல் எழுத்து, எமோஷனல் கலந்து எழுத்து பற்றி பேசி எழுத்தாளனாய் இருந்து இயக்குநராக உயர்ந்த நீங்கள் இயல்பான நகைச்சுவையை ஏன் துறந்தீர்கள் எனக் கேட்டார் சுரேஷ். அதற்கு என்னோட எழுத்துக்குள் எப்பவும் நகைச்சுவை இழையோடத்தான் செய்யும்... எதையும் துறப்பதில்லை... அந்த இடத்தில் என்ன நிகழ்ந்ததோ அதுதான் எழுத்தாகும்... எழுத்துக்காக எதையும் வலிந்து திணிப்பதில்லை என்றார் ராஜுமுருகன்.
அடுத்த கேள்வியாக ஜோக்கர் படம் வந்து நாலு மாதத்தில் ஹிந்தியில் டாய்லட் என்னும் படம் வந்தது... இரண்டுமே பேசிய கதை ஒன்றுதான்... அதை காப்பி என்பதாய்ப் பார்க்கிறீர்களா என சுரேஷே கேட்க, இரண்டும் ஒரே விஷயத்தைப் பேசினாலும் தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் டாய்லெட் பிரச்சினை மிகப்பெரியதாகும். அதை அந்த இயக்குநர் யோசித்திருக்கலாம்... அதைக் காப்பி என்று சொல்லமாட்டேன். படம் வெளிவந்ததும் அங்கிருந்து கூட பலர் அது காப்பிதான் என்பதாய் என்னிடம் பேசினார்கள். தயாரிப்புத் தரப்பு வழக்கெல்லாம் தொடுத்தார்கள். எனக்கு அங்கு படம் இயக்கும் வாய்ப்பு கூட வந்தது என்றார்.
வட்டியும் முதலுமில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்று சொன்னார் லதா. அது வாராவாரம் ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசிய அருமையான தொடர்... கிட்டத்தட்ட 80 வாரம் என்று நினைக்கிறேன். அதில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருவது இயல்புதானே, இதற்காக லதா எதற்கு அவ்வளவு பேசினார் என்பது புரியவில்லை... இடையில் காசியில் பார்த்த டிரைவர் நான் ராஜுமுருகனுக்கு வண்டி ஓட்டினேன்.... இங்குதான் சூட்டிங் எடுத்தார்கள் என்று சொன்னதாகவும் சொன்னார். மேலும் பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் இருக்கா..?, நீங்க குறிப்பிட்ட வட்டத்தைவிட்டு எப்போது வெளியில் வந்து படமெடுப்பீர்கள்..? என்ற கேள்வியை முன் வைத்தார்.
இப்போது பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் நிறையவே இருக்கு என்ற ராஜுமுருகன் பிரியாதம்பி, சுதா கோங்க்ரா பற்றியெல்லாம் சொன்னார். வட்டத்துக்கு பதில் சொல்லும் போது வட்டங்கிறதெல்லாம் இல்லை எனக்கு அரசியல் பிடிக்கும் என்றார்.
அடுத்து தெரிசை சிவா குக்கூ பாட்டைப் பற்றிச் சிலாகித்து யுகபாரதியைப் பாராட்டி அந்தப் பாடல் எடுக்கப்பட விதம் குறித்து வியந்து முதல் படைப்பில் இருந்த அழகியல், அது பேசிய அரசியல் அடுத்தடுத்த படங்களான ஜோக்கர், ஜிப்ஸியில் இல்லையே... வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கிறதே... இதே நிலை நாலாவது படத்திலும் இருக்குமா...? அது மிகப்பெரிய அரசியல் படமாக இருக்குமா..? எனக் கேள்விகளை அடுக்கினார்.
இதற்குப் பதிலளிக்கும் போது சமகால அரசியலைப் பேச வேண்டும் என்று நினைப்பவன் நான்... அதைத்தான் என் படங்களிலும் கொண்டு வருகிறேன்... அது வலிந்து திணிப்பதாக எனக்குத் தெரிவதில்லை என்றாலும் அடுத்த படத்தை வியாபார ரீதியாக அணுகும் விதத்தில் எடுப்பேன் என்றார். இந்தப் பதிலில் வியாபார ரீதியாக ஜிப்ஸி கொடுத்த அடியின் கவனம் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.
அடுத்து சாருமதி கேள்வி கேட்டார். அவருக்கான பதிலைச் சொல்லும் முன் இணையத்தில் தொழில் நுட்பப் பிரச்சினை... ராஜுமுருகன் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டார். அப்போது சரவணவேல் துபையில் 5ஜி இல்லை... அதான் எங்க ஊருக்கு இணையாக உங்கள் தொழில்நுட்பம் இல்லை என்பதாய் ஜோக்கடித்திருந்தார். கிராமத்தில் இருக்கிறேன் என்றவர் அவ்வளவு பேசியதே பெரிய விஷயம்தான். எங்க ஊருக்குப் போனா இந்த இடத்தில் நின்றால்தான் பேச முடியும் என செல்போனைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டுதான் இருப்பார்கள்.
போன ராஜுமுருகன் வருவாரா... மாட்டாரா... என்ற யோசனையின் போதே ஆசிப் அவர்கள், சமயோகிதமாக யுகபாரதி அவர்களைப் பேசச் சொன்னார்.
குக்கூ படத்தின் பாடல்கள் எழுதியதைப் பற்றி பேசினார். அப்போது ராஜபார்வை படத்தில் கண்ணதாசன் எழுதிய 'அழகே... அழகே... தேவதை' என்ற பாடல் குறித்துப் பேசினார். ராஜுமுருகன் திறமைசாலி என்றவர் ஆகாசத்த நான் பார்க்கல என்று எழுதியிருந்த பாடலில் ஒரு வார்த்தையை மட்டும்தான் மாற்றினான்... அந்தப் பாடலின் அர்த்தமே அவ்வளவு அழகா மாறிடுச்சு என்றவர், ஏன் பார்க்கலை... பார்க்கலைன்னு எழுதணும்... பார்க்கிறேன்னு மாத்திருண்ணே என்று மட்டும்தான் சொன்னான் என்பதையும் சொன்னார்.
இடையில் பேசிய ரமேஷ் வைத்யா, ஆனந்த விகடனில் வேலை பார்த்த அனுபவம், ராஜுமுருகனின் முதல் ஆட்டோ பயண அனுபவம்... அதைப் பற்றி நிகழ்ந்த நகைச்சுவை உரையாடல் என பெரும் சிரிப்போடு பேசினார். மேலும் மலையாள மங்களத்தில் 950 பேரை மேய்த்த வேலையைப் பற்றியும் சொன்னார். அப்போது அ.முத்துலிங்கம் 'என்னுடைய மேலதிகாரி எப்போதுமே ஏப்பத்தை அடக்கியபடியே இருப்பார்' என்று எழுதியிருப்பார் என்பதையும் சொல்லி. புன்னகை வெடித்தால் சிரிப்பாகும் என்றும் சொல்லி நான் பேசுறது கேக்கலைன்னு நினைக்கிறேன் போதும் என முடித்துக் கொண்டார்.
அடுத்து மாடசாமி என்பவர் நா.முத்துக்குமார் பற்றி குறிப்பு வரைக என்றார்... ஆசிரியர் வேலை பார்ப்பார் போல... அதுல என்னய்யா குறிப்பு வரைய இருக்கு என்று யுகபாரதி யோசிக்க, ஆட்டோக்காரர் ஏதாச்சும் பாத்துப் போட்டுக் கொடுங்க சார் என்று சொல்வது போல பத்து மார்க்குக்குச் சொல்லாட்டியும் ரெண்டு மார்க்குக்காவது சொல்லுங்களேன் என்றார் கெஞ்சலாய்... கொஞ்சம் கொஞ்சலாய்... சரி பாவம் கொணட்டுறாரே எனக் கவிஞரும் முகத்தில் தோன்றிய சங்கட்டத்தை மறைத்துக் கொண்டு சந்தோஷமாய் முத்துக்குமாருடனான உறவைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
ஊரில் இருந்து சரவணன் என்பவருடன் சென்னைக்கு வந்ததில் ஆரம்பித்து, வைரமுத்துவின் ட்ரஸ்ட்புரம் வீட்டுக்கு எதிரே இருந்த வேலுமணி டீக்கடையில் முத்துக்குமாருடன் பழக்கமானது வரை சொல்லி, அடுத்தவனின் எழுத்தைப் பாராட்டும் பாங்கு முத்துக்குமாரிடம் அதிகம் உண்டு. அதை அவனிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் முத்தாய்ப்பாய் முத்துவைப் பற்றி.
மேலும் டேய் எங்கிட்ட அஞ்சு ரூபா இருக்கு... நாம ரெண்டு பேர் டீக்குடிக்க சரியா இருக்கும்... ஆனா எனக்கு ஒரு சிகரெட் வேண்டும்... அதுனால ஒரு டீ வாங்கி ரெண்டு பேரும் குடிப்போம் என்று சொல்லும் திறந்த மனதுக்காரன் அவன் என்றார் யுகபாரதி. சமீபத்தில் பவாசெல்லத்துரை கூட முத்துக்குமார் பற்றிப் பேசியிருக்கும் வீடியோவில் இதே போன்றோரு விசயத்தைச் சொல்லியிருப்பார் அவன் பாசக்காரன் என்ற பதத்துடன். வறுமை என்றாலும் அதை வாழ்ந்து பழகிக் கொண்டவன் அவன் என்றும் சொல்லியிருப்பார்.
முத்துக்குமாருக்கு முதல் தேசிய விருது கிடைத்த போது திருவண்ணாமலையில் இருந்து அவர் வந்து கொண்டிருந்ததாகவும் அப்போது யுகபாரதி போன் செய்து தேசிய விருது என்றதும் எனக்குத் தெரியும்டா உனக்குக் கிடைக்கும் என மகிழ்வாய்ச் சொன்னதாகவும் உனக்குத்தான்டா கிடைச்சிருக்கு என்றதும் ஓ அப்படியா எனக் கடந்து போனதாகவும் இரண்டாம் முறை தேசிய விருது கிடைத்த போதும் திருவண்ணாமலையில் இருந்து வந்து கொண்டிருந்தவரை தொலைபேசியில் அழைத்ததும் எனக்குத் தெரியும்டா இந்த முறை நீதான்னு என மகிழ்வாய் ஆரம்பித்ததாகவும் இந்த முறையும் நீதான்டா என்றதும் அப்படியா என்றவர், நான் வேணும்ன்னா ஒரு வருசம் பாட்டெழுதாம இருக்கேன்... நீ வாங்கிக்கடா என்றாராம். அந்தக் குணம் எத்தனை பேருக்கு வரும்.
நீங்க பேசுற அரசியலுக்கு உங்களுக்கு விருதெல்லாம் கிடைக்காது என இடைப்புகுந்து நகைச்சுவையால் அழுத்தமான இடத்தைக் கடக்க வைத்தார் ஆசிப் அண்ணன்.
அவன் அப்படியே பொயிட்டான்... அவனைப் பற்றி பேசினால் நான் அழுதாலும் அழுதுருவேன் என்பதைப் போல நெகிழ்வோடு இந்தப் பேச்சு இத்தோடு போதும் என முடித்துக் கொண்டார். கவிஞர் மட்டுமல்ல... நமக்குமே அந்த உன்னதக் கலைஞனைப் பற்றிய நினைவில் வருத்தமே மிஞ்சியது. ஆனந்த யாழ் மனசுக்குள் அறுக்க ஆரம்பித்தது... அதை அப்படியே நகர்ந்து சென்றதே அப்போதைக்கு ஆசுவாசமானது.
பின்பாட்டு எழுதியதன் பின்புலம் என்ன என்று நெருடா கேட்க, நல்ல கேள்விதான்... ஆனாலும் அதை பலமுறை சொல்லிட்டேனே என்றவர் பாட்டே எழுதிக் கொண்டிருக்காமல் வித்தியாசமாய் எழுதலாமே என எழுதியதுதான் பின்பாட்டு என்று ஆரம்பித்தவர், ஏ.வி.எம்.செட்டியாருக்கு இசை அமைத்த சுதர்சன் மாஸ்டர் மவுண்ட் ரோட்டில் இருக்கும் இப்ராகிம் அன் சன்ஸ் கேசட் கடையில் இந்திப் பாட்டை வாங்கி, அதிலிருக்கும் பாட்டைக் கேட்டு தமிழ் படத்துகான டியூனைப் போடுவார் என்றும் அவர் போடும் டியூன் ஏவிஎம் செட்டியாருக்குப் பிடித்துப் போகும் என்றும் சொன்னவர், 'கண்களின் வார்த்தைகள் புரியாதா... காத்திருப்பேன் என்று தெரியாதா...' என்ற பிரபலமான பாடலும் அதில் ஒன்று என்றார்.
அடுத்து குமரன் கைக்கு ஏவிஎம் போனதும் சுதர்சன் மாஸ்டர் இசையைக் காப்பி செய்வது பிடிக்காமல் அவர்களுக்குள் பிரச்சினை எழ, அந்தச் சமயத்தில் அவருடைய குழுவில் இருந்த செங்கல்வராயன் என்பவர் போட்ட டியூன்தான் கமல் முதலில் பாடிய காலையும் நீயே மாலையும் நீயே பாடல் என்ற தகவலையும் செங்கல்வராயன் நிறையப் பாடலுக்கு டியூன் போட்டிருந்தாலும் அதெல்லாம் அந்தப் படங்களின் இசையமைப்பாளர்களுக்கே சொந்தமானது என்றும் அவரை ஒரு இசையமைப்பாளராக ஆக்க வேண்டும் என குமரன் அவரைத் தேடிச் சென்றபோது அவர் இறந்த செய்திதான் கிடைத்தது என்றும் சொன்னார். இந்த விசயம் ஏவிஎம் குமரன் எழுதிய செல்லுலாய்ட் சித்திரம் என்னும் நூலில் இருக்கிறது என்பதையும் சொன்னார்.
மேலும் ஒரு படத்தில் பல கவிஞர்களைப் பாட்டெழுத வைப்பதும், ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பாட்டுக்கான சூழலைச் சொல்வதையும், இயக்குநர்கள் கவிஞர்களிடம் எப்படிப் பிரித்தாளும் தன்மையைக் கடைபிடிப்பார்கள் என்பதையும் அதை உடைக்க முத்துக்குமார் முயற்சித்ததையும் சொன்னார்.
ஒருமுறை கண்ணதாசனிடம் ஒரு இயக்குநர் பாடல் கேட்டு சூழலைச் சொல்லி, மருதகாசி எழுதிய ஒரு பாடலைச் சொல்லி அதே போல் கொடுங்கள் என்று சொன்னதாகவும், உடனே கவிஞர் வாங்க எல்டாம்ஸ் ரோடு வரைக்கும் பொயிட்டு வருவோம் என்று சொல்லிக் காரில் அழைத்துச் சென்றதாகவும், இயக்குநரும் அங்கு எதுக்கு... ஒருவேளை காரில் போகும்போதே பாட்டுக்கான சரணத்தைச் சொல்வார் போலன்னு போக... கார் வளைந்து நெளிந்து போய் ஒரு முட்டுச் சந்தில் நின்றதாகவும்... இங்கே எதற்கு என இயக்குநர் கேட்க... இறங்குங்க... அதோ அதுதான் மருதகாசி வீடு எனக் காட்டிச் சென்றதாகவும்... கவிஞர்களுக்குள் எப்போதும் போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை என்றும் சொன்னார்.
ஒரு படத்துக்குப் பாட்டெழுத அறிவுமதி அண்ணனைக் கூப்பிட்டால் எல்லாச் சூழலையும் கேட்டு இதை முத்துக்குமார் எழுதினால் நல்லாயிருக்கும்... இதை யுவபாரதியும்... இதை தாமரையும் எழுதினால் நல்லாயிருக்கும் எனச் சொல்லி தான் எந்தப் பாடலையும் எழுதாமல் பல கவிஞர்களை வாழ வைத்தவர் அறிவுமதி அண்ணன் என்றார்... அந்த மனசு யாருக்குமே வராதுல்ல... அறிவுமதி அவர்களைப் பற்றி பழனிபாரதியும் பல இடங்களில் பேசியிருக்கிறார். அறிவுமதி புதியவர்களுக்கு அடைக்கல மதியாகவும் இருப்பார் என்பது அறிந்ததே.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசிவரை ராஜுமுருகன் இணைய முடியாமல் போனாலும் ஆசிப் அண்ணன் சமயோகிதமாக தன் நண்பரைப் பேச வைத்து நிகழ்வைச் சிறப்பாக்கினார்... மொத்தத்தில் 'இனி நான் இங்கிட்டு வரவே கூடாதுய்யா...' எனச் சிரிப்போடு சொல்லி முடித்த யுகபாரதி நாயகனாய் நின்று நிகழ்வை அருமையாய்... நெகிழ்வாய்... மகிழ்வாய்... சிறப்பாய் முடித்தார்.
மொத்தத்தில் ராஜுமுருகனுடன் ஆரம்பித்தி யுகபாரதியில் முடிந்ததில் தலைப்பும் பொருத்தமாகிப் போனது... ஆம் இணையப் பிரச்சினை என்றாலும் அதையும் கடந்து இன்ப நிகழ்வாக மாற்றியாகி விட்டதல்லவா...
கேள்வி கேட்பவர்கள் நல்ல கேள்விகளாய்க் கேட்பதே சிறப்பு... குறிப்பு வரையச் சொல்லுதல் எல்லாம் தேவையில்லாத ஆணிதான்... கேட்டவர்களே நான் நான் என இடைப்புகுதலும் சிறப்பு இல்லை... கேள்விகள் கேட்க நிறையப் பேர் வரிசையில் இருப்பதை உணர வேண்டும்... கேள்வி கேட்கிறேன் எனத் தலையைச் சொறிதல் கூட தேவையில்லாத ஆணிதான்... அதற்கு என்னைப் போல் பார்வையாளனாய் இருத்தல் நலம். அடுத்த நிகழ்வுகளில் கேள்வி கேட்பதை ஒழுங்குபடுத்தினால் நல்லது என்பதைவிட ஒழுங்குபடுத்துதல் கட்டாயம் என்பதே சரி.
மொத்தத்தில் சிறப்பானதொரு மாலை.
-'பரிவை' சே.குமார்.
கமெண்ட் போட்டு வைத்துக் கொள்கிறேன். அவசியம் படிக்கவேண்டிய பகுதி.
பதிலளிநீக்குபின்னர்தான் படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குபலவற்றை அலசி உள்ளார்கள் என்று புரிகிறது...
பதிலளிநீக்குசிறப்பு தம்பி
பதிலளிநீக்குஅருமை.......
பதிலளிநீக்குஇணையக் கலந்துரையாடலை ஒரு வரி விடாமல் எழுத்தாக்கியுள்ளீர்கள். சிறந்த முயற்சி! யுகபாரதியின் வாரத்தைகள் அவரின் மிகவும் பாராட்டத்தக்க பாசிட்டிவ் மன நிலையை வெளிப்படுத்துகின்றன!
பதிலளிநீக்குசிறப்பான பதிவு. ஒரு சிறு ஆலோசனை, இதை ஒரு உரையாடல் போலவே அமைத்திருந்தால் நேரில் கலந்து கொண்ட உணர்வு வந்திருக்கும்.
பதிலளிநீக்குபல செய்திகள், சுவாரசியமான கலந்துரையாடல். வரிவிடாமல் வாசித்துமுடித்ததும் என் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள் இருவர்.
பதிலளிநீக்குஒருவர் கவிஞர் நா.முத்துக்குமார் மற்றோருவர், அபிபுல்லா சாலை ஆலமரம் , கவிக்குயில்களின் நந்தவனம் அன்புமிகு.கவிஞர் அறிவுமதி.
தொகுத்து வழங்கியமை சிறப்பு, வாழ்த்துக்கள்.
ராஜு முருகனின் வட்டியும் முதலும் படித்து ரசித்திருந்த காரணத்தால் இதைத் தவற விடக்கூடாது என்று நினைத்திருந்தேன். வந்து படித்து விட்டேன். சுவாரஸ்யம்தான். நன்றி.
பதிலளிநீக்குகமல் முதலில் பாடிய பாடல் 'காலையும் நீயே மாலையும் நீயே' இல்லை, 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே!'