ஒரு சில சிறுகதைகள் வாசித்த பின்னும் நம் மனசுக்குள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். அப்படியான கதைகளை வாசிப்பது என்பது வரம்.
நான் எழுதிய பல கதைகளின் முடிவு என்னை அழவைத்தது என என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அழவைத்தால் மட்டும் போதுமா..? அந்தக் கதை ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டாமா..? உண்டு பண்ணியதான்னு எல்லாம் எப்பவும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம்.
அப்படிப் பலருக்குத் தாக்கத்தை உண்டு பண்ணிய கதைதான் வீராப்பு... இன்று கூட நண்பர்களுடன் பேசும் போது வீராப்புதான் பிரதானமாய் நின்றது. அதன் முடிவு என்ன என்பதைச் சொல்லாமல் முழுக்க முழுக்க வட்டார வழக்கோடு நகர்ந்து முடிவை நீங்களே முடிவு செய்யுங்கள் என விட்டுச் செல்லும் கதைதான் வீராப்பு...
சமீபத்தில் நான் வாசித்த எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று கதைகளைக் குறித்து எழுத வேண்டுமென ரெண்டு மூணு நாளாக மனசுக்குள் ஒரு எண்ணம்... ஏனோ எழுத முடியாமல் தள்ளிக் கொண்டே போனது. எப்படியும் எழுதி விடுவதென்ற எண்ணம் மட்டும் மனசுக்குள் வளர்ந்து கொண்டே போனது.
முதலாவதாக கனலியில் எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய 'இந்திர நீலம்' என்னும் குறுங்கதை. இக் கதையை வாசித்த பின் அதிலிருந்து அவ்வளவு எளிதாக மீண்டு வெளியில் வரமுடியவில்லை. ஒரு பெண்ணின் காமம் குறித்தான உணர்வை, வலியை, வேதனையை, நிராசையை, குற்ற உணர்ச்சியை, தோல்வியின் விசும்பலை அவ்வளவு அழகாக எழுதியிருந்தார்.
ஒரு ஆண் பெண்களைக் குறித்து எழுதினால் ஆஹா... பெண்ணாக மாறி எழுதியிருக்கிறீர்கள் எனப் போற்றும் பெண்களே, அதே ஒரு பெண் பெண்ணின் உணர்வுகளை எழுதும் போது இதெல்லாம் பிற்போக்குத்தனம்... இப்பப் பெண்கள் இப்படியா... அவர்களின் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வடிகால்களைத் தேடிக் கொள்ளும் காலத்தில் இருக்கிறார்கள்... இப்போது இப்படியான பிற்போக்குத்தனக் கதைகளின் மூலம் பெண்களை இன்னும் அடைத்து வைக்க முயலலாமா..? எனப் பதிவிடும் போது சிரிப்புத்தான் வருகிறது.
அதற்கான பின்னணி இவள் எப்படி பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு அப்பட்டமாக, உணர்வுப்பூர்வமாக எழுதலாம் என்ற பொறாமையாக் கூட இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்... ஓரு பெண்ணின் மனநிலையை பொத்தாம் பொதுவாய் பேசிவிட்டுப் போகாமல் மிக அழகாக அந்த உணர்ச்சிகளுடன் வாழ்ந்து கதையாய் வடித்திருக்கிறார்.
கதை சொல்லிப் போகும் போக்கில் சில தேவையில்லாத சுற்றல்களும் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் எழுத்தாளர் வெண்ணிலா விவரித்திருக்கும் இந்திர நீலம் கறை அல்ல காவியம் என்பதை வாசித்தால் அறிவீர்கள். ஆம் இது பெண்களுக்கான கதைதான் ஆனால் ஆண்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை.
கதையை வாசிக்க.... இந்திர நீலம்
இரண்டாவதாக தோழி ஜா.தீபா எழுதிய 'மறைமுகம்' என்னும் சிறுகதை யாவரும்.காம் பகிர்ந்து வரும் ஊரடங்கு காலக் கதையில் முதல் கதை. இறந்த குழந்தையை சுமந்து நிற்கும் காமாட்சியின் வேதனையினூடே விரிகிறது பாலகனகனைத் தேடும் காட்சிகளும்... போலீஸ் வருகையும்... அடையாளம் காட்டப் போதலும்...
இது வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுக் கொண்ட கதையை மையமாய் வைத்துப் புனையப்பட்டதுதான் என்றாலும் எத்தனை நேர்த்தியான கதை நகர்த்தல்.
இறந்து கிடப்பவனிடம் தன் வாசனை ஒன்றுமே இல்லையென சொல்லி அவனைத் தெரியாது எனச் சொன்னவள் முடிவில் தன்னோட குழந்தையைத் தேடித்தேடி அலைவார் இல்லையா பாட்டி என தைலாப் பாட்டியிடம் கேட்கும் போது கதை கடத்தும் வலி நம்முள்ளே முழுதாய் இறங்கி இம்சிக்கிறது.
வாஞ்சிநாதன்களின் மனைவிகளின் துயரை யாராவது அறிந்திருப்போமா... இந்தப் பாலகனகனுடன் ஒப்புக்கே வாழ்ந்த காமாட்சியின் துயர் மூலமாக அதைச் சொல்லிச் செல்கிறார் தீபா.
இந்தக் கதை சர்வநிச்சயமாய் ஒரு துயர் மிகுந்த வாழ்வை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது... வாசிக்க வேண்டிய கதை இது.
கதையை வாசிக்க.... மறைமுகம்
மூன்றாவதாய் தமிழினியில் திரு.மயிலன் ஜி சின்னப்பா எழுதிய 'ஆகுதி' - தற்கொலை என்பது கோழைத்தனம்... அந்த ஒரு நொடியில் எடுக்கும் முடிவு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உருக்குலைத்து போகச் செய்து விடும். ஒரு தற்கொலை கொடுத்த வலியில் இருந்து எங்கள் குடும்பம் இன்னும் மீளவே இல்லை... நாங்களாவது நகர்ந்து விட்டோம் என்று சொல்லலாம்... பெற்றவர்கள்..? அவர்கள் இன்னும் அங்கேயேதான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவும் தீயினால் தன்னை எரித்துக் கொள்ள முயன்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஒரு பெண்ணுக்கும் பயிற்சி மருத்துவரான ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பந்தம், நெருப்பு வைத்துக் கொண்டவர்கள் மட்டுமே கிடத்தப்பட்டிருக்கும் அந்த வார்டு, அதற்குள் அடிக்கும் தீய்ந்த தோலின் நாற்றம், உடம்பில் துணியில்லாது எரிந்த நிலையில் கிடப்பவர்களை திறந்திருக்கும் சன்னல்வழி எட்டிப்பார்த்துப் படம்பிடிக்கும் மனிதர்கள், அவள் எதற்காக நெருப்பு வைத்துக் கொண்டாள் எனபதை அறிய எடுக்கும் முயற்சிகள் என கதை கருகிய தோலின் நாற்றத்துடனும் தீயின் ஜ்வாலையுடனும் நகர்கிறது.
எதற்காக இத்தற்கொலை முடிவு என்பது வெளியில் தெரிந்தால்..? தெரிந்தால்தானே... யாருக்கும் தெரியவே வேண்டாமென முடிவெடுக்கும் தாய், அதன் காரணமாக அவள் செய்யும் செயல் என கதை ஒரு மருத்துவமனை வார்டுக்குள்ளே வட்டமிடுகிறது. அது பற்ற வைத்த தீ மட்டும் நம்மை எரிக்கிறது.
வாசித்து முடித்து நீண்ட நேரம் அதிலிருந்து வெளிவர முடியவில்லை...
இப்படியான கதைகள் கொடுக்கும் திருப்தியும் அழுத்தமும் ஆசுவாசமும் வேறெந்தக் கதைகளிலும் கிடைப்பதில்லை.
எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்.
கதையை வாசிக்க.... ஆகுதி
-'பரிவை' சே.குமார்.
மூன்று இணைப்புகளுக்கும் சென்று வாசிக்கிறேன் குமார்... நன்றி...
பதிலளிநீக்குமூன்று முத்தான கதைகள் - இணைப்பு தந்தமைக்கு நன்றி குமார். வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குகுமார் ஒன்று வாசித்துவிட்டேன். உங்கள் விளக்கம் அழகான விளக்கம். மற்ற இரண்டும் வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார் பகிர்ந்தமைக்கு.
கீதா
ஒன்று நீங்கள் அனுப்பியதாக வந்தது. மிக அருமை. உங்கள் விமர்சனம் தான் நானும் நினைத்தது.
பதிலளிநீக்குமற்றவையும் குறித்துக் கொண்டேன். வாசிக்கிறேன்.
துளசிதரன்
இந்திர நீலம் ...இங்கு பார்க்கவும் நேற்றை வாசித்து விட்டேன் ...
பதிலளிநீக்குஅது கொடுத்த தாக்கம் ..அடுத்த கதைகளுக்குள் மனம் செல்ல வில்லை ...
இன்னும் மனதில் அந்த கதையின் தாக்கம் உள்ளது ..ஏதோ ஒரு புள்ளியில் பல பல சிந்தனைகள் ... .....
அந்த எண்ணக்குவியலை எப்படி சொல்ல என்று புரியவில்லை ... இந்த தாக்கம் மனதில் அடிக்கடி வரும் என நினைக்கிறேன் ....
இது பெண்களுக்கான கதை ...பெண்ணின் கதை ,,,,ஆனால் உடன் வாழும் உள்ளம் புரிந்துக் கொள்ள வேண்டிய கதை ...