101ம் நாள் காலை திருப்பள்ளி எழுச்சியாய் மெர்சல் அரசன் பாட்டு... ஷெரின் மட்டுமே தூக்கக் கலக்கத்தில் இருப்பதாய் தெரிந்தது. மற்றவர்கள் தெளிவாக இருந்தார்கள்.
இந்த வாரம் வெளியில் இருந்து ஆட்கள் வந்து ஆடும் வாரம் என்பதால் மூணு அஞ்சாகி... இன்னைக்கு பத்துப் பேருக்கிட்ட உள்ள வந்து ஆடுனானுங்க... எல்லாருமாய் முதல் நாளே ஒத்திகை பார்த்திருப்பார்கள் போல... போட்டியாளர்களும் அவர்களை ஒத்தே ஆடினார்கள்... அங்க... இங்க... நடுவேன்னு எல்லா இடத்திலும் ஆடுனாங்க... புல்வெளியில் படுத்து உடற்பயிற்சியெல்லாம் பண்ணுனாங்க... அதுல ஒரு தாடிக்காரனுக்குப் பக்கத்துல ஷெரின் ஆட, தாடியைத் தாண்டித் தெரிந்தது ஜொள்ளும் சிரிப்பு. நீண்ட பாடலை நிறுத்தினார் பிக்பாஸ்.
அடுத்து பிக்பாஸ் இல்லத்தில் முதல் முறையாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு...
நாலு பேரும் நச்சின்னு உடையணிந்து சிக்குன்னு உக்கார்ந்திருந்தாங்க...
வேறு வேறு பத்திரிக்கை சார்ந்த எட்டுப் பேர் வந்திருந்தாங்க...
தினமலர், இண்டியன் எக்ஸ்பிரஸ்காரனெல்லாம் மொக்கைத்தனமாக் கேள்வி கேட்டாங்க... நல்ல கேள்விகளை... இதுவரை அவர்கள் ஆயிரெத்து எட்டுத்தடவை பதில் சொன்ன கேள்விகளை விடுத்து இந்த நூறு நாளில் நாம் பார்த்ததை வைத்துக் கேட்க வேண்டிய கேள்விகளை... கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறும்படியான கேள்விகளைக் கேட்கக் கூடிய ஆட்கள் எந்தப் பத்திரிக்கையிலும் இல்லையா என்ன..?
பலமுறை அவங்களே சொன்ன பதிலுக்கான கேள்விகள்... நீ திட்டமிட்டே விளையாடுகிறாயா..? வெளிய போய் எங்கே போவே..? உங்களுக்குள்ள முன்னாடி நட்பு இல்லை இப்ப நட்பாயிருக்கீங்களே அதைப்பற்றி..? நீங்க எதை இழந்தீர்கள்..? இந்த நட்பு வெளியில் போயும் தொடருமா..? இப்படியான கேள்விகள்... மொக்கைத்தனமான பதில்கள்... பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பல்லிளித்தது.
லாஸ்லியா குடும்பம் கஷ்டப்பட்ட போது அவர் சார்ந்த சமூகம் கை தூக்கி விடலையாம்.. இப்ப மட்டும் தன் காதலுக்கு எதிராய் நிற்கிறதாம். மரியநேசன்கிற மனுசன் என் அப்பாதானே... எல்லா விஷயத்துலயும் எங்கிட்ட கேட்டுத்தான் முடிவெடுப்பார்... கவின் விஷயத்துல நான் முடிவெடுத்துட்டு அவர்க்கிட்ட கேட்கப் போறேன். அம்புட்டுத்தான்... அவர் என்னை மீறியெல்லாம் ஒரு வெங்காயத்தையும் புடுங்க முடியாது... கவின்தான் என் காதலன்... கவின்தான் என் கணவன்... கவின்தான் என் நாயகன்... கவின்தான் என் அப்பனுக்கு மாப்பிள்ளை... கவின்தான் என் தங்கைகளுக்கு மாமா... இது போதுமான்னு கேட்டுச்சு.
எதையும் தொலைத்துத் தொலைக்க என்ன இருக்கு... என்னால பிக்பாஸ் தொலைத்ததுதான் அதிகம்... அபி என்னோட காதலைத் தொலைக்கப் பார்த்தா... நல்லவேளை பிக்பாஸ் அவளைத் தொறத்திட்டாரு... ரேஷ்மா என்னைய அனாதையின்னு சொன்னா... நானும் அப்பா பிரச்சினை... அம்மா பிரச்சினையின்னு சொல்லி வச்சிருந்தேன்... எங்கப்பன் வீடியோவுல பேசினாரு... எங்கம்மா நேர்ல வந்தாங்க... எனக்கு குடும்பம் இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு... ஆனா ரேஷ்மாவுக்கு மட்டும் இன்னும் தெரியலை... நான் தொலைக்க நினைப்பது அனாதைங்கிற வார்த்தையை... இங்க யாரும் அனாதையில்லை... என்றான் முகன்.
நான் எப்பவும் இப்படித்தான் ரொம்ப ஜாலியா இருப்பேன்... என்னோட இருக்கவங்களை ஜாலியா வச்சிக்கணும்ன்னு நினைப்பேன்... அதைத்தான் இங்க செஞ்சேன்... ஆனா எங்க வீட்டுல மட்டும் செய்ய மாட்டேன்... அதான் என் பொண்டாட்டி கோபப்படுவா... ஊருக்கே வடிவேலா இருக்கே ஆனா ஊட்டுக்கு மட்டும் ரகுவரனா இருக்கியேம்ப்பா... அதான் நீங்க பாத்திருப்பீங்களே... இங்க வந்தப்பக் கூட லாலா... லாலான்னு நான் அழுதபோது போலான்னு சொல்லிட்டுத்தானே போனா... பிள்ளைக்கு கொடுத்த முத்தம் தவறி எனக்கு வந்திட்டது... அதை வச்சி அவ என்னை லவ்வுறா... கவ்வுறான்னு எல்லாம் எழுதிடாதீங்க... நான் வெளையாடுறதுக்கு சாட்டர்ஜி, மோடிஜி, எடப்பாடிஜி, கமல்ஜி, விமல்ஜின்னு எதையாவது பேரா வச்சிக்கங்க.. நான் இப்படித்தான்... ஈதோசை சுடுவேன்... குப்பைமல்லித்தளை சட்னி பண்ணுவேன்... கழுவாத கையால சாப்பாடு ஊட்டுவேன்... என்றார் சாண்டி.
எனக்கும் லாஸ்லியாவுக்கும் அவ்வளவு நெருக்கமெல்லாம் இல்லை... ஏன்னா அவ நெருங்கிக் கிடந்தது கவினோட... நெருங்கிங்கிறதை விட கவிழ்ந்துன்னு சொன்னா ரைமிங்கா இருக்கும்ல்ல... நான் சேரன் சார்க்கிட்ட எல்லாம் சொல்லுவேன்... தர்ஷ்க்கிட்ட எல்லாம் கொடுப்பேன்... அதாவது திங்கிறது எல்லாம்... ஏன்னா அவன் தீனிக்கு அலையிற தேனீ... வனிதா என்னைப் பார்த்து அப்பையர் ஆண்டின்னு சொன்னப்போ அழுதன்.. அழுதன்... அங்க படுத்து அழுதன்... இங்க படுத்து அழுதன்... கக்கூஸ்ல அழுதன்... எல்லாப் பக்கமும் அழுதன்... அதேதான் தர்ஷ் போனப்போ... அழுதன்... அழுதன்... அழுதுக்கிட்டே கிடந்தன்... கவின் காசெடுத்துக்கிட்டு ஓடினப்போ லாஸ்லியாவுக்கு எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க... சொன்னோம்... ஆனா தர்ஷ் போனப்போ நான் அனாதையானேன்... ஆறுதல் சொல்ல ஒரு பக்கியும் இல்லை... அதனால நான் அழுதன்... அழுதன்... அங்க அழுதன்... இங்க அழுதன்.... என்றார் ஷெரின்.
'மச்சி ஓபன் த பாட்டில்'ன்னு அலற விட்டு சேரன், கஸ்தூரி, சாக்சி, வனிதாவை அனுப்பினார் பிக்பாஸ். வனிதாவைப் பார்த்ததும் ரெண்டு நாளா ஆடல் பாடல்ன்னு சந்தோஷமாக இருந்தானுங்க... இனி அழ வைப்பானுங்களேன்னு தோணுச்சு... வனிதாவும் புன்னகைக்குள் வெடிகுண்டை வச்சிக்கிட்டுத்தான் வந்திருக்கு... பிக்பாஸ் அங்கயே பத்தவச்சித்தான் அனுப்பியிருக்காருன்னு நல்லாவே தெரிந்தது.
எல்லாரையும் உக்கார வச்சி நீங்க அடிச்சிக்கிட்டதை எல்லாம் பாருங்கன்னு சொல்லி, படம் ஓட்டினார் பிக்பாஸ்... பார்த்துக்கிட்டு இருந்தவங்க மூஞ்சியெல்லாம் தாமரைப் பூவில் இருந்து வாழைப்பூவாய் சுருங்க.... ஆஹா அடிதடி ஆரம்பம்ன்னு பிக்பாஸ் நாற்காலியில் நல்லா நிமிர்ந்து உட்கார, நாம இப்படி அடிச்சிக்கலைன்னா இந்த பிக்பாஸே இல்லை தெரியுமோன்னோ... பேஷா கை தட்டுவேளா அதை விட்டுட்டு இப்படி எழவு விழுந்த மாதிரி உக்காந்திருக்கேளே... சவங்களா... கை தட்டுங்கோன்னு அக்கா சொல்ல, அக்கா சொல்லுக்கு மறு பேச்சேதுன்னு எல்லாப்பயலும் தட்டிப்புட்டாங்க கையை.
அட என்னடா இந்த லூசை அடிச்சாடச் சொல்லி அனுப்பினா வெளிநாட்டுக் கிரவுண்டுல வெக்கமே இல்லாம கட்டை வச்சிக்கிட்டு கால் நூற்றாண்டுக்கு நிக்கிற ரோஹித் மாதிரி இருக்கா... ஆஹா இது சரிவராது... இந்தியக் கிரவுண்டுல ஆடுற ரோஹித் மாதிரி ஆட வைக்க வேற வழி பண்ணுவோம்ன்னு வாங்கடா செயல்முறை அரங்குக்கு... பாருங்கடா அடிச்சிக்கிற போட்டாவை... இப்பப் பேசுங்கடா... ரத்த ஆறு ஓடாம வெளியே போயிருவீங்களான்னு பார்ப்போம்ன்னு பிக்பாஸ் ஆட்டையை ஆரம்பிச்சி வச்சாரு.
லாஸ்லியா, முகன், சாண்டி, ஷெரின் என எல்லாரும் கறை நல்லது என்பது போல சண்டை நல்லது... அதன் பின்னே நல்ல உறவுகள் கிடைத்ததுன்னு பாச மழை பொழிஞ்சாங்க... பாலைவனத்துல மழையா..? பாவக்காயில இனிப்பா..? என்னங்கடா அடிச்சி ஆடாம இங்கயும் டக் வக்கிறீங்க.... வனிதாவை இறக்குங்கடா... வத்திக்குச்சியாச்சும் பத்தவைக்குதான்னு பார்ப்போம்ன்னு பிக்பாஸ் புலம்ப, களமிறங்கினார் வனிதா.
வனிதா...
பிரச்சினைகளை உருவாக்கவே பிறந்தவர் போலும்...
எப்படி இவருடன் குடும்பத்தாரால் ஒத்துப் போக முடியும்..?
அதனால்தான் பெற்ற மகன் கூட பிரிந்தே இருக்கிறான்..?
தாய்மை... பெண்மை... பொறுமை... என்ற புகழ்ச்சியெல்லாம் இந்த எருமைக்கு தேவையேயில்லை போலும்.
நல்லாயிருக்க குடும்பத்தை நாசமாக்கத் தொலைக்காட்சி சீரியல்கள் தேவையில்லை.... வனிதா ஒரு பத்து நிமிடம் வந்துட்டுப் போனாப் போதும்.
ஊருக்கே உபதேசம் பண்ணுற நாட்டாமை பொண்ணு... ஊரு உலகத்துல ஒரு நல்லாயிருக்கக் கூடாதுன்னு நினைக்கிற மண்ணு...
தர்ஷன் போனதுக்கு நீதான்டி காரணம்ன்னு நெய் விளக்கு ஏத்திவச்சி அதுல மிளகாய் நாலை போட்டு வச்சிருச்சி... என்னென்ன சொல்லணுமோ அதையெல்லாம் சொல்லிட்டு வெளிய வா... வச்சிருக்கிறேன் லெவலுக்கு வந்து வெளிய வா பேசிக்குவோம்ன்னு முடிச்சி, கட்டிப் பிடிச்சி... பிரச்சனையை அவுத்து விட்டிருச்சு.
ஷெரின் எதிர்த்துப் பேச, டூ பி ஹானஸ்ட்... நான் என்ன சொல்றேன்னா... குறுக்க பேசாதே... உனக்கென்ன தெரியும்... இப்படித் தன்னோட பிரத்யேக வார்த்தைகளை உபயோகித்து உப்புச் சப்பில்லாத காரணத்தை பிரியாணி லெவலுக்கு கொண்டு வந்திருச்சு.
அடுத்துப் பேசப்போன சேரன், வனிதா பேசியது தவறென ஆரம்பிக்க... யோவ் உனக்கென்னய்யா தெரியும்... டூ பி ஹானஸ்ட்... நான் இங்க வடிச்சிப் போட்டிருக்கேன்.. அதை நீயும் தின்னிருக்கே... எனக்கு எதிராப் பேசுவியா... உன்னைப் பேச விட்டுருவேனா... அப்படின்னு எகிற, வனிதா நீ சொல்றது சரி... ஆனா அதைக் காட்டலையில்ல பின்ன என்ன வந்துச்சு... இப்பப் பேசன்னு சேரன் சொல்ல, காட்டலைன்னா நான் பார்த்தேனுல்ல... அதைப் பத்தவச்சா நீ ஏன் அணைக்கப் பார்க்கிறேன்னு எகிற, நானும் இருந்திருக்கேன் தெரியுமான்னு சேரன் கேட்க, இருந்தியா உன்னைய நான் பார்த்ததே இல்லைன்னு பட்டுன்னு சொல்லிருச்சு.
நீங்க என்ன பேசுறீங்க... எதை வேணுமின்னாலும் பேசலாமா... நீங்க சொல்றதால உண்மை பொய்யாகிடாது... பொய் உண்மையாகிடாது... புரிஞ்சிக்கங்க... இப்ப அவ இறுதிப் போட்டிக்கு வந்துட்டா... இப்பப் பேச என்ன இருக்குன்னு சாக்சி வர, உனக்கென்னடி தெரியும்... டூ பி ஹானஸ்ட்... உன் வாயை மூடு... எங்கிட்ட பேச வந்தே உன்னோட வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளத்துல ஏத்திருவேன்... டூ பி ஹானஸ்ட்... அப்பால போ சாத்தானேன்னு விரட்டிருச்சு.
கக்கூஸ்ல போயி அழுத ஷெரினை கஸ்தூரியும் சாக்சியும் சமாதானப்படுத்த, இங்க பேனைப் பெருமாளாக்கி... பெருமாளை அத்திவரதராக்கி... அத்திவரதரை அம்பானியாக்கி... அம்பானியை வனிதாவாக்குவாங்கங்கிறது தெரியாதா... அவ அப்படித்தான் பிரச்சினையை உடையா உடுத்துறவ... அடுத்தவ உடையிறதப் பார்த்து ரசிக்கிறவ... அந்தியில வானம்ன்னு சொன்னா... ஆத்துக்குள்ள பொணம்ன்னு வந்து நிக்கிறவ... விட்டுட்டு வேலையைப் பாருன்னு சொன்னாங்க கஸ்தூரி.
உள்ளே மற்ற நால்வரிடமும் தர்ஷன் போனதுக்கு அவதான் காரணம்... வெளியில பெரிய பிரச்சினை ஓடுது தெரியுமா... எடப்பாடி ஏழுநாள் துக்கம் அனுசரிக்கச் சொல்லியிருக்கார்... பன்னீரு பந்த் பண்ணினார்... எழுபது பஸ்ஸை எரிச்சிருக்காங்க... எழனூறு பஸ் கண்ணாடியை ஒடச்சிருக்காங்க... ஏழாயிரம் கடைகளை உடைச்சிட்டாங்க... மோடி நேரில் வந்து தர்ஷனுக்கு ஆறுதல் சொல்லியிருக்கார்... பாரத் ரத்னா தர்ஷனுக்கு கொடுக்கணும்ன்னு ஸ்டாலின் பரிந்துரை பண்ணியிருக்கார்... என் இனம் வஞ்சிக்கப்பட்டு விட்டதுன்னு சீமான் சீறிக்கிட்டு இருக்கார்...
எம்புட்டு பிரச்சினை தெரியுமா...? எல்லாத்துக்கும் காரணம் இவதான்... இவ விஷச்செடி... வீரியமுள்ள பாம்பு... நீங்க என்னடான்னா ஷெரினோடு அறுவரானோம்ன்னு பேசுறீங்க... இன்னும் மூணு நாள்தான் அவளை வச்சிச் செய்யுங்கடான்னு முடிஞ்சளவுக்கு சாண்டி, முகன், லாஸ்லியாவை ஏத்திவிட்டுச்சு வனிதா என்னும் சூனியக்காரி.
மறுக்கா உக்காந்து பேச, கஸ்தூரி அங்கிட்டு வர, ஏலே இது தனிப்பட்ட கூட்டம்... கொஞ்சம் எங்களுக்குள்ள தனிமையில பேச வேண்டிய பேச்சு இது... நீ வெளியே போன்னு வனிதா சொல்ல, போறேன்டி வாத்துன்னு அது போக, இவளை எதுக்கு உள்ள கூட்டியாந்தான் இந்த பிக்பாஸ் அப்படின்னு சொல்ல, உள்ள போற ரவுடியால பாதிக்கப்பட்டவங்களுக்கு வைத்தியம் பாக்கத்தான் நான் வந்திருக்கேன் வாத்துன்னு கஸ்தூரி சொல்ல... ஆமாமா இவுக பாத்துட்டாலும் அப்படின்னு வனிதாக்கா சொல்ல, எதுனாச்சும் பேசுனே உன் மண்டையைப் பேத்து வைத்தியம் பார்த்துடுவேன்... ஜாக்கிரதையின்னு கஸ்தூரி சொல்ல, வனிதாக்கா வாயை மூடிக் கொண்டார்.
எப்பவுமே எதிரியின் குரல் உயர்ந்தால் அக்கா அடங்கிரும்... உயர விடாமல் பார்த்துக்க முயற்சிக்கும்... ஒரு கட்டத்துல உயர்த்திட்டாங்கன்னா ஒன்னு சமாதானமாகும் இல்லேன்னா நானா சண்டையான்னு பேசாம உக்காந்திரும்... கஸ்தூரி கொடுத்த அடியில அக்கா அடங்கிருச்சு... கஸ்தூரி இதை உள்ளிருக்கும் போதே செய்திருக்கலாம்... அக்கா அடங்கித் தொலைஞ்சிருக்கும்..
மறுபடியும் சேரன், வனிதா செய்தது தவறென விளக்க, யோவ் உன்னைய என்ன சொன்னேன்... மகளோட போயி 'கண்ணான கண்ணே...' இல்லைன்னா 'ஆனந்தயாழை...' பாடிக்கிட்டு இருன்னுதானே சொன்னேன்... எனக்குப் புத்தி சொல்ல வர்றியா... டூ பி ஹானஸ்ட் எங்கப்பனே எங்கிட்ட பேசமுடியாம எங்காத்தா சேலைக்குப் பின்னால ஒளிஞ்சிருவாரு... எங்கண்ணன் என்னைப் பார்த்தா ஒண்ணுக்குப் போயிருவான்... நீ என்னடான்னா எதிரே நின்னு தப்புன்னு சொல்றே... இப்ப நீ போகலைன்னா மீரா விஷயத்துல நீ தப்புப் பண்ணினேன்னு ஒரு புதுக்கதையை எழுதிருவேன்னு மிரட்ட, உன்னை ஒரு பெண்ணா நினைச்சிப் பேசினது என் தப்புத்தான் என்னை மன்னிச்சிடு தாயின்னு சேரன் வேகமாக சேரன் எக்ஸ்பிரஸைப் பிடிக்கப் போய்விட்டார்.
வனிதா என்னென்ன சொல்லியிருக்கா தெரியுமா...? அதெல்லாம் அவுத்து விட்டேன்னு வையி மவளே அவ காலின்னு ஷெரின் வயித்துவலி வந்த வாங்கோழி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு நடந்துக்கிட்டு இருந்தார். ஏய் அதெல்லாம் வேண்டாம்... பொறுமைதான் முக்கியம்... நான் கொஞ்சம் பொறுத்துப் போகாததாலதான் கவினை லாஸ்லியா பொறுக்கிக்கிட்டா... அந்தப் பொறுக்கியும் என்னை போலின்னு சொல்லிட்டான்... வெற்றிதான் உனக்கு லட்சியம்... வனிதாவை தூக்கிக் கடாசிட்டு அம்பது லெட்சத்தை வாங்கப்பாருன்னு சாக்சி சொன்னாங்க.
படுக்கப் போகும் போது டூ பி ஹானஸ்ட்... இப்பவும் நீ என் பிரண்ட்.... நான் உன்னையக் கழுவிக் கழுவி ஊத்துவேன்... மூணாவது மனுசன் எதுக்கு உம்மேல நல்ல தண்ணி ஊத்தணும்... விட்டுடுவேனா... நானும் நீயும் பேசலாம்... சண்டை போடலாம்... கட்டிப் பிடிக்கலாம்... கன்னத்துல முத்தம் கொடுக்கலாம்... டூ பி ஹானஸ்ட்... நான் உன் பிரண்ட்... நீ என் பிரண்ட்... நான் உன்னைப் பிராண்டினாலும் நீ என்னைப் பிராண்டாமல் ஏத்துக்கணும்... உனக்கு நல்லது சொல்ல சேரன் யாருங்கிறேன்...? சாக்சிக்கு என்ன வந்துச்சுங்கிறேன்...? அப்படின்னு ஆரம்பித்தார்.
முதல்ல நீ படுங்கிறேன்... பிக்பாஸ் இந்த லூசைக் கூப்பிட்டுத் தொலைங்கிறேன்னு ஷெரின் சொல்லிட்டார்.
முன்னதாக எடப்பாடியும் ஸ்டாலினும் கட்டியணைத்துக் கொண்டது போல் சாக்சியும் லாஸ்லியாவும் கட்டி அணைத்துக் கொண்டு சாரி சொல்லிக் கொண்டார்கள். லாஸ்லியாவுக்காக சாக்சி பரிசுப்பொருள் கொண்டு வந்திருந்தார். இந்த வள்ளி தெய்வானை அன்புப் பரிமாற்றத்தைக் காண முருகன்... ச்சை... கவின் இல்லாமல் போய்விட்டானே.... என் செய்வேன்..
முகன் நல்ல பாடகன்... நல்லா பாட்டெழுதுவான்... மத்தவங்க மேல அளவில்லா அன்பு வைப்பான்... நட்புக்கு மரியாதை கொடுப்பான்... என எல்லாமே இருந்தாலும் சண்டையின்னு வந்துட்டா ஓரமா உக்காந்து மிக்சர் சாப்பிட ஆரம்பிச்சிடுவான். வனிதா - ஷெரின் பிரச்சினையில் எப்பவுமே சண்டையின்னா ஒதுங்கிப் போற சாண்டி, லாஸ்லியாவெல்லாம் பேசினாங்க... இவன் பேசவேயில்லை. இது தன்னோட இடத்தை யாருடைய கோபத்துக்கும் ஆளாகாமல் தக்க வைக்கும் முயற்சி... இது சரியல்ல முகன்... முறுக்கி விட்ட மீசைக்கு அழகும் அல்ல.
இவ்வளவு பிரச்சினைக்கும் இடையில் பிக்பாஸ் அடுத்த நிகழ்வுக்கு புது உடைகள் அனுப்புறார்... தினம் தினம் தீபாவளிதான் போல... அதை எடுக்கப் போன முகன், வனிதாக்கிட்ட பேசாம பிக்பாஸ்க்கிட்ட புலம்பிக்கிட்டு நிக்கிறான்... அதுவும் மத்த கேமரான்னா யாரும் பார்த்துடுவாங்கன்னு பிக்பாஸ் அனுப்பும் பொருட்கள் வைக்கப்படும் அறைக்குள் நின்னு பேசுறான்... அங்க வர்றாங்க அபி... அதெப்படி சரியாத் தேடி வந்தாங்கன்னு தெரியலை... அப்புறம் பிக்பாஸ் அந்தக் கேமராவுக்கு ஓய்வு கொடுத்துட்டு வெளியில நடக்குறதைப் பாருங்கன்னு சொல்லிட்டார்.
ஷெரின்தான் தர்ஷனை வெளியேற்றக் காரணம் என்ற வனிதாவின் வார்த்தைகள் ஷெரினுக்கு ஆதரவாகுமா..? எதிராகுமா...?ன்னு பட்டிமன்றம், நேருக்கு நேர், நீயா நானா...?, நேர்படப் பேசு என எல்லாத் தொலைக்காட்சிகளும் விவாதிக்கலாம்... வனிதா இன்றும் வாதிக்கலாம்... ஷெரின் இன்னும் வதைபடலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...
நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி