79ம் நாள் காலை...
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி...
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி...
ஒய்யாரி... ஏ அசந்து புடி...
சிங்காரி... நீ அழுத்தி பிடி...
கொடியேத்தி... தூக்கி பிடி...
இனி ரூட்டை கொஞ்சம் மாத்து...
என்ற பாடலுடன் விடிந்தது.
முகினுடன் லாஸ்லியாவும் ஷெரினும் ஆடினார்கள். எப்பவும் பேண்ட்டுக்குள் கைவிட்டு சிறியதாய் ஒரு நடனம் ஆடும் ஷெரின் சூப்பரான ஒரு ஆட்டத்தைப் போட்டார்.
எப்பவும் போல் அவெஞ்சர்ஸ் குழு சிகப்புக் கதவுக்கிட்ட இருந்து காபி குடிச்சிக்கிட்டு கதையாளந்துக்கிட்டு இருந்தாங்க... காபியைக் குடிச்சாச்சில்ல எல்லாரும் வா... வேலை கிடக்கு என தலைவியாய் லாஸ்லியா பேச, கவின் கேலி செய்யும் விதமாக சிம்பு குரலில் அதென்ன ஆத்தா நீ தலைவியானதும் வேலை கிடக்கு வெட்டி கிடக்குன்னு பேசுறே... போன வாரமெல்லாம் போட்டது போட்டபடி கிடக்க நீ இங்கனதானே குந்திக்கின்னு இருந்தேன்னு சொன்னதும் அம்மணிக்கு பொசுக்குன்னு கோபம் வந்திருச்சு.... ஆனா லாஸ்க்கு வரும் முன்னால லாஸ்ஸோட பேஸ் (BASE)க்கு கோபம் வந்திருச்சு.
சாண்டிக்கிட்ட என்னண்ணே நீயி... எப்பப் பார்த்தாலும் அவளைக் கேலி பண்ணிக்கிட்டே இருக்கே... தம்பி பொண்டாட்டின்னு ஒரு தராதரம் வேண்டாம்ன்னு கன்னம் சிவக்கக் (அதான் தாடியை எடுத்துட்டானுல்ல) கேட்டான். என்னடா இது அவ கூட பொறுத்துப் போவா போல இவனுல்ல விறகடுப்புல வேகுற சோறு மாதிரிக் கொதிக்கிறான்னு எந்திரிச்சிப் போய் லாஸ்லியாக்கிட்ட சும்மாதான் கேலி பண்ணினேன் என மன்னிப்புக் கேட்டார் சாண்டி. லாஸ்லியா அதெல்லாம் எதுக்கு மாமா... விட்டுட்டு வீட்டைக் கூட்டுங்கன்னு சொல்ல, நீ இப்படிச் சொல்றே... அங்க ஒருத்தன் உன்னையத் திட்டிட்டேன்னு ஏழரையைக் கூட்டிக்கிட்டு இருக்கான்னு சொல்லிட்டுப் விளக்குமாற்றை எடுத்துக் கூட்ட ஆரம்பித்தார்.
அடுத்த காட்சியில் தர்ஷன், கவின், சாண்டி அதே சிகப்புக் கதவுக்கிட்ட உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கவின் சிவந்த கன்னத்தை இன்னும் சிவப்பாக்கி, 'லாஸை லாஸ் பண்ண வைக்கமா விடாது போல... இப்ப அண்ணன்னு இங்கு நிக்கிறதா... பொண்டாட்டின்னு அங்கிட்டு நிக்கிறதான்னே தெரியலையே.... எல்லாரையும் பொலம்ப விடுற என்னையவே புலம்ப விட்டுட்டியேடா சாண்டி'ன்னு வாய்க்குள் முணங்க, 'என்னடா அவன் முணங்குறான்... என்னையத் திட்டுறானாக்கும். அண்ணே... அண்ணன்னு சொல்லிட்டு இப்ப நாயி பேயின்னு திட்டுறானாக்கும்.. அதான் ஸ்கூல் டாஸ்க்லயே டேய் சாண்டி, டேய் சாண்டின்னு கூப்பிட்டு மகிழ்ந்தானே பின்ன என்ன..?' என தர்ஷனிடம் சிரித்தபடி கேட்டார் சாண்டி.
'பின்னே என்னண்ணே.... எப்பவும் அவளைக் கலாய்க்கிறே... இப்பத்தான் அவளை ஒரு வழியா உள்ளே வெளியேன்னு பேசிக்கீசி... புரிஞ்சும் புரியாமலும் இருக்க மனநிலைக்கு மாத்தி, என்னைய உத்தம புத்திரன் ஊருக்கெல்லாம் இந்திரன்னு நினைக்க வச்சிருக்கேன்... சேரப்பாவும் இல்லை... இதுதான் சரியான சமையம்ன்னு அந்த நாலெழுத்து வார்த்தையை நாக்கில் வர வைக்க நாயா முயற்சிச்சிக்கிட்டு இருக்கேன்... இப்பப் போயி அவளக் கேலி பண்ணி என்னோட பிளானைக் காலி பண்ணிட்டியே... சின்னதா நீ செய்யிற விஷயம்தான் பின்னால வனிதா மாதிரி பெரிசா வந்து நிக்கிது... அதைப் புரிஞ்சிக்க... சும்மா எல்லார்க்கிட்டயும் வெட்டுற தக்காளிய எங்கிட்டயும் வெட்டாதே.... எதுக்குச் சொல்றேன்னு புரியுதா' அப்படின்னு புலம்பித் தள்ளிட்டான்.
சரி.. காதல் நண்பனையும் துரோகியாக்கும்... அண்ணனையும் பங்காளி ஆக்கும்... அப்பனையும் பகையாளி ஆக்கும்... சாண்டியண்ணன்தான் என்னோட உசிருன்னு சொன்னவன் இப்ப போடா மசுருன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டான். இனி யோசிச்சி தண்ணி குடிக்கணும்டோய் தர்ஷா... பேபி சாண்டியா திரிஞ்சா வாயில பீடிங்க் பாட்டிலைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவான்டோய் அப்படின்னு சாண்டி கொஞ்சம் அலர்ட் ஆன மாதிரித் தெரிஞ்சது.
இந்த வாரம் நீங்க எல்லாரும் நான் சொல்றபடிதான் ஆடப் போறீங்க... நில்லுன்னா நிக்கணும்... நடன்னா நடக்கணும்... அப்படின்னு சொல்லி, 'ப்ரீஸ்-ரிலீஸ்' டாஸ்க் பற்றிய விபரத்தை அனுப்பி வைக்க, கவின் வாசிக்க ஆரம்பித்த போதே ஒரே சந்தோஷம்... மகிழ்ச்சி... ஆரவாரம்ன்னு பாய்ஸ் அணி பல்லாக்குழி ஆட, வனிதாவுக்கு விபரம் புரியாம பரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி உக்காந்திருந்தார். அப்புறம் விவரமா வாசிச்சதும் ஓ இதுவா என்பது போல் அமர்ந்திருந்தார்.
அறிவிப்பு வாசித்து மகிழ்ந்திருந்த தருணத்தில் பிக்பாஸ் எல்லாரும் ப்ரீஸ்ன்னு சொல்லிட்டாரு... அவங்கவங்க என்ன பண்ணினாங்களோ அப்படியே நின்னாங்க... வனிதா.... சும்மா சொல்லக் கூடாது... அவ்வளவு அழகா நின்னாங்க... முகத்தில் ஒரு குறும்புப் புன்னகையுடன்... இதைப் பார்த்த சேரன் கூட அழகா நிக்கிறேன்னு தரச் சான்றிதழை ரகசிய அறையில் இருந்து கொடுத்தார்.
சாண்டி ரீலீஸ் என்றதும் பயபுள்ள எல்லாரையும் வச்சிச் செஞ்சிருச்சு... பிக்பாஸ்க்கு சாண்டி கூட விளையாடுறதுன்னா இருட்டுக்கடை அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும் போல, முதல்ல ஆட விட்டு எல்லாரையும் ரிலீஸ் பண்ணி, சாண்டியை ப்ரீஸ் பண்ணிட்டார். சும்மா ஆளாளுக்கு வச்சிச் செஞ்சிட்டாங்க. வனிதா மட்டும் தாயம்மா நானேன்னு அடுப்படியில போய் நின்னுட்டார்.
இந்த ப்ரீஸ்-ரிலிஸ் டாஸ்க்குன்னதும் முடிவாயிருச்சு... சரி இனி இந்த வாரம் பூராம் பிழியப் பிழிய மெகா சீரியல் எல்லாத்தையும் ஒண்ணா ஒரே இடத்துல காட்டுவானுங்க... பிக்பாஸ் வீட்டுக்குள்ள கண்ணீர்க் காவிரி கரை புரண்டு ஓடும்... ஏதோ மொக்கை போட்டாலும் கொஞ்சம் பாக்குற மாதிரியாச்சும் இருந்துச்சு... இந்த வாரம் அதுவும் இல்லைன்னு முடிவாயிருச்சு. முதல்ல என்ன சீரியலோன்னு திக் திக் நெஞ்சோடதான் பார்க்க வேண்டியிருந்தது.
"ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து ..."
பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, எல்லாரும் ப்ரீஸாகி நிக்கிறாங்க... சாண்டிக்கு லாலாதான் வரும்ன்னு மனசுக்குள்ள தோணுச்சு போல ஆவலாய் காத்திருந்தார். ஒரு அம்மா ப்ரஷ்ஷா வந்தார்.
முகனோட அம்மாவாம் ப்ரீஸாவது மண்ணாவதுன்னு ஓடி அம்மாவை கட்டியணைத்துக் கதறி, முத்தம் கொடுத்துப் பெற்று ஆத்தா... ஆத்தான்னு கத்திக்கிட்டு இருந்தான். பிக்பாஸ் சொல்றதுக்கு முன்னாலயே எல்லாரும் ரிலீஸ் ஆகி வந்துட்டாங்க... அப்புறம் அம்மா, மகன் புராணம். மகனுக்கு அறிவுரை அப்படின்னு இருக்க, பிக்பாஸோட பேசுற அறைக்குள்ள இருந்து முகனின் தங்கை வந்தார். தங்கையைப் பார்த்ததும் அம்மாவை அத்துவிட்டுட்டு ஓடிட்டான் முகன்.
அப்புறம் அம்மா, தங்கையுடன் அளவளாவல்... சாண்டி ஸ்கூல் பையனாக நடித்துக் காட்டினார். வனிதா அம்மா காலைத் தொட்டு வணங்கினார். விளையாட்டை நல்லா விளையாடு... யாருக்கும் விட்டுக் கொடுக்காதேன்னு அறிவுரைகள். முகன் அம்மாவைத் தூக்கிய போது எங்கே போட்டு உடைச்சிருவானோன்னு தோணுச்சு... அவங்க ஜெயச்சித்ரா மாதிரி இருக்காங்க.. இவன் தூக்கிட்டு நடக்கிறான். தங்கச்சி ஸ்ரேயா மாதிரி இருந்ததால தூக்கி தோள்ல வச்சிக்கிட்டான்.
இந்த மாதிரி உணர்ச்சிகரமான நேரங்களில் முகனின் நடவடிக்கைகள் அதிக பயத்தைத்தான் கொடுக்கின்றன. மனச்சிதைவு ஏற்பட்டவன் என்பதைச் சொல்லியிருக்கிறார் என்றாலும் நேற்று அம்மாவிடம் பேசும் போது தங்கையிடம் கொஞ்சும் போதெல்லாம் அது நன்றாகத் தெரிந்தது. லாஸ் உன்னைய மாதிரியே இருக்கான்னு சொல்வேன்தானே என முகன் சொன்னபோது நானா இவங்க மாதிரியான்னு முகனின் தங்கை கேட்டதில் ஏதோ பொருள் பொதிந்திருந்தது.
கிளம்பும் போது எனக்கு எல்லாமே இவன்தான் எனச் சொன்னதும் அங்க என்னையச் சொன்னே என மகள் கேலி செய்தது செம... மலேசியா... மலேசியான்னு சொன்னானுங்க.... தங்கச்சி சுந்தரத் தெலுங்கில் பேசுது.... அப்ப இங்க இருந்து போன தெலுங்கு பேசுற தமிழ் ஆட்கள் போல. அவங்க போக இவங்களை ப்ரீஸ்ன்னு சொன்னா, எல்லாம் ரிலீசாகி நிக்கிதுக.
சென்ற முறை எல்லாம் ப்ரீஸ் ரொம்பக் கடுமையாகக் கடை பிடிக்கப்பட்டது... இந்த முறை எந்தச் சட்ட திட்டமும் சரிவர கடைபிடிக்கப்படவில்லை. பிக்பாஸ் எதுவும் சொல்லலை என்றாலும் இந்த வார லக்சூரி பட்ஜெட்ல மொத்தமாக் கை வைப்பாருன்னு நினைக்கிறேன். அம்மா போன பின்னும் முகன் ஆராரிராரோவுக்குள் சுற்றிக் கொண்டிருந்தான்.
இந்த அம்மா-மகன் பாசப் பிணைப்பைப் பார்த்து சேரன் கண்ணீர் விட்டார். ரொம்ப இலகுன மனசு போல பொசுக்குன்னு கண்ணீர் விட்டுடுறார்... நமக்கும் அப்படித்தான் வந்துருது... அப்ப நாமளும்... இலகின... சரி... சரி... பிக்பாஸ் வீட்டுக்குள்ள போயிருவோம்.
கவின் லாஸ்லியாவை லவ்வைச் சொல்லச் சொல்லி படுத்தியெடுப்பதைப் பார்த்து சேரன் சொன்னதை எப்படியும் கவின் பார்வைக்குக் கொண்டு போக வேண்டும் என முடிவெடுத்த பிக்பாஸ், யோவ் சேரா... தின்னுட்டு தின்னுட்டு ஜாலியாவா படம் பார்த்துக்கிட்டு இருக்கே... இரு உன்னைய தெருவுல இழுத்து விடுறேன்னு மூணு கேள்வி, மூணு பேருக்கு கேட்டு எழுதி கொடுய்யா... அவங்களை வச்சிச் செய்யலாம் எனச் சொல்லி சேரனை வச்சிச் செய்ய வழி பண்ணிட்டார். பாவம் வெட்டப் போறது தெரியாம கோவில் வாசலுல்ல ஊத்துற மஞ்சத் தண்ணிக்கு சந்தோஷமாப் தலையாட்டுற ஆடு மாதிரி கேள்வியை கேட்டுட்டார்.
போட்டியாளர்கள் அமர்ந்திருக்க பிளாஸ்மா டிவி முன்னால நின்னு தர்ஷன் அதை வாசிச்சார். ஆஹா இந்தாளு வீட்டுக்குப் போயும் இந்தச் சனியனைப் பார்த்துக்கிட்டு இருக்கானான்னு ஒவ்வொருத்தர் முகமும் கேட்காமல் கேட்டுச்சு.
முதல் கேள்வி லாஸ்லியாவுக்கு....
அப்பன் பொயிட்டானேன்னு வருந்தினதைத் தவிர என்னை நினைத்துப் பார்த்தாயா... உன் நினைவில் நானிருக்க என் நினைவு உனக்குள் இருக்கா..? (பாசத்தை பால்ச் சட்டிக்குள்ள போட்டு அனுப்பியிருந்தார்).
லாஸ்லியாவோ அம்புட்டுப் பாசத்தை உங்க மேல வச்சிருக்கேன்... ஆவரஞ்செடியாட்டம் அன்பால பூத்திருக்கேன்... கால் பிடிச்சி விட்டீங்க... காத்திருந்து சோறு போட்டீங்க.... தறுதலைச் சிறுக்கி.... நாந்தேன்... கம்புளிப்பூச்சி ஒண்ண கழுத்தோட ஒட்டிக்கிட்டு காலால எத்திப்புட்டேன்... காமிரா முன்னால நடிக்கிறியான்னு கேட்டுப்புட்டேன்... இப்ப காலும் நடக்கலை... கையும் பிடிக்கலை... கண்ணும் தூங்கலைன்னு ஒரு பாடு அழுது முடித்தார்.
அடுத்த கேள்வி கவினுக்கு...
தம்பி கவினு வெளிய போய் பாத்துக்கலாம்ன்னு சொன்னீங்க... நானும் படிச்சிப்படிச்சிச் சொல்லிட்டு வந்தேன்... இப்ப அந்தப் புள்ளைய நாலெழுத்தைச் சொல்லுன்னு கார்த்திகை மாசத்து நாயி மாதிரி தொரத்திக்கிட்டே இருக்கீங்க... இதை விட்டுட்டு வேலையைப் பார்ப்பீங்களா இல்லையா..?
கவினோ எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்... இப்ப இங்க... அவளுக்குப் புரியும்... நான் வெளியே... அது எனக்குப் புரியும்.. மூணெழுத்து நாலெழுத்து முக்காலும் புரியாது... வேலெடுத்து எறியாம வேலையைப் பாக்கலாமே... வெளியில நாலு உள்ள நாலு... லாஸ்தான் என் ஆளு... நீ கேக்க வேண்டாம் கேள்வி... நானிருக்கேன் அவளுக்கு... நீ எதுக்கு இடையிலன்னு சொல்லிட்டு வந்துட்டான்.
கவினிடம் சேரன் இந்தக் கேள்வியை முன் வைத்திருக்க வேண்டியதில்லை... அப்பாவாய்த்தான் நினைக்கிறார் லாஸ்லியா... அப்பா என்று அவர் சொல்லவில்லை... நம்ம எல்கை எதுவோ அங்கு நிற்பதே மரியாதை... தன் மரியாதையை தானே கெடுத்துக் கொள்வதாய்த்தான் தெரிகிறது. மரியாதை இல்லாத இடத்தில் மனிதனாய் இருப்பதால் என்ன லாபம்..?
அடுத்த கேள்வி வனிதாவுக்கு...
அன்புத் தங்கைக்கு இப்ப ரெண்டு நாளா நீ அமைதியா இருக்கே... இது நல்லாத்தானே இருக்கு... இப்படியே விளையாண்டிய நல்லாயிருக்கும்... தொடர்வாயா..?
அடங்கொய்யால நானே நாமினேசன்ல இருக்கேன்னு அடக்கி வாசிக்கிறேன்... நீ எல்லாருக்கும் அடங்கிப் போன்னு சொல்றே... இந்த விளையாட்டு இப்பத்தான் புரிஞ்சி விளையாட ஆரம்பிச்சிருக்கேன்.. இனிமே பாருங்க... என்னோட விளையாட்டைன்னு சொன்னார்.
கேள்வி பதில் முடிந்ததும் சேரன் அடுத்த நாளே எப்படி நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்... அப்ப அவரு ரகசிய அறையில் இருக்கார்ன்னு தோணுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டானுங்க... கவினைக் காப்பாற்றலாம் என்றோ... சேரனுக்கும் கவினுக்கும் இடையில் இருக்கும் பனிப்போரை இந்திய பாகிஸ்தான் பிரச்சினை அளவுக்கு மாற்றலாம் என்றோ பிக்பாஸ் கணக்குப் போட்டு அவசரப்புத்தியால லாஸூ உங்கப்பன் குதிருக்குள்ளதான் இருக்கான்னு சொல்லாமச் சொல்லிட்டாரு.... அதனாலயே இன்னைக்கு சேரனை மறுபடியும் வீட்டுக்குள்ள தள்ளுறாங்க போல.
சேரனின் கேள்வி கவினுக்கு செமக் கடுப்பைக் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. சாண்டியிடம் 'இப்பத்தான் நான் ஒரு மாதிரி பேசி வச்சிருக்கேன்... வெளியில போயி உக்காந்துக்கிட்டு எதையாவது பேசிவிட்டா என்ன அர்த்தம்ன்னு புலம்ப, நாம கொண்டாடலாம்ன்னு சொன்னியான்னு சாண்டி கேக்க, வேறென்ன எழவுக்கு அந்த நாலெழுத்தைச் சொல்லச் சொல்றேன்... அதைச் சொல்லிட்டா அப்புறம் கொண்டாட்டம்தானே... இதுல என்ன தப்புங்கிறேன்'னு சொல்லிக்கிட்டு இருந்தான்.
அடுத்து லாஸ்லியாக்கிட்ட 'உள்ள நீ... வெளிய நான்... அகம் நீ... புறம் நான்... வெளிய போயி என்ன சொல்ல.... உள்ள இருந்து என்னைக் கொல்ல... நாலெழுத்துப் படிச்சதில்லை... நாலெழுத்தைச் சொன்னா நான் வெளிய இருக்க நாலெழுத்தை தள்ளிட்டு உள்ள இருக்க நாலெழுத்தோட நாலெழுத்தை நானெடுத்து பூத்தொடுத்து புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம்... வெளிய போனமா... நல்லதைக் கெட்டதைத் தின்னமான்னு இல்லாம... நாம் என்ன பண்றோம்ன்னு வேவு பாக்குறானாக்கும் உனக்கப்பன்னு சொல்ற சேரப்பன்... அவனோட சேராதப்பான்னா நீ சேருவேம்ப்பான்னு சொல்றே... இப்ப எனக்கு அவன் சேராத அப்பனாயிட்டான்...'ன்னு என்ன சொல்றான்னு யாருக்கும் புரியாம எதுவோ சொல்லிக்கிட்டு இருந்தான்... லாஸ்லியாவுக்கு புரிந்த மாதிரி தலையாட்டினார்.
மேலும் முன்னாடி பேசின கதையை... அதாவது உங்கப்பன் எங்கப்பன்... உங்காத்தா எங்காத்தா... உங்கொப்பத்தா எங்கொப்பத்தா... உங்க நட்பு எங்க நட்பு... உங்க நாயி எங்க நாயி... உங்க ஊரு எங்க ஊரு... இதெல்லாம் கேட்டா பதில் சொல்லலாம்... பிக்பாஸ் வீட்டுல வந்து அப்பன்னு சொல்லிக்கிட்டு இரு சுப்பன் கூவுறதுக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்... அந்தாளு யாரு... சொந்தாளு மாதிரி கேள்வி கேட்கன்னு புலம்ப ஆரம்பித்தான். லாஸ்லியா அதான் வெளிய போயி பாத்துக்கலாம்ன்னு சொல்லிக்கிட்டிருந்தார்.
இதையெல்லாம் பார்த்த சேரன் மறுபடியும் முதல்ல இருந்தா, அந்தப் புள்ளைக்குப் பைத்தியம் புடிக்கப் போகுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தார். வேண்டாத வேலை உங்களுக்கு எதுக்கு சேரன் சார்.. பிரச்சினையை தூக்கி பொடறியில ஏன் போட்டுக்கிறீங்க... எந்த நாயோ எங்கிட்டோ தொலையட்டும்ன்னு விட்டுட்டுப் போங்க சார்... அதான் உங்க வயசுக்கும் உடம்புக்கும் நல்லது.
இன்னைக்கு லாஸ்லியா அப்பா வச்சிச் செய்யிறாரு போல... இவனுக ப்ரோமால்லாம் நல்லாத்தான் காட்டுவானுங்க... முழுதும் பார்த்தா முத்துன முறுங்கக்காய் மாதிரித்தான் இருக்கும். இன்னைக்கு எப்படியிருக்குன்னு பார்ப்போம்.
டிஸ்கி : வேலைக்கு இடையே அவசரமாய் டைப்பியது.... பிழை திருத்தமெல்லாம் செய்ய நேரமில்லை... பிழைகள் எவ்வளவு இருக்கோ அவ்வளவு குறைச்சிக்கிட்டு கருத்துக்களைச் சொல்லுங்க... நன்றி.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
இந்த வாரம் முழுதும் சேரன் தனியறையில் இருப்பார் என்று எதிர்ப்பார்த்தேன்...
பதிலளிநீக்குஆமாம் அண்ணா... அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்...
நீக்குபிக்பாஸ் சொதப்பியதாலும் லாஸ்லியா குடும்பம் வந்ததாலும் ரெண்டு நாளில் வெளியே கொண்டு வந்துட்டாங்க.